Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு மீதான சர்வதேச அழுத்தங்களைப் புரிந்து கொள்ளுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மீதான சர்வதேச அழுத்தங்களைப் புரிந்து கொள்ளுதல்

பிரம்மஞானி

தமிழ் தேசிய சக்திகளின் கவனத்திற்கு: தெளிவான அவதானிப்பே திடமான செயலுக்கான அடித்தளத்தை வழங்கும்

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஈழத் தமிழர் அரசியல் என்பது முற்றிலும் குழப்பகரமான நிலைக்குச் சென்றுவிட்டது. இன்றுவரை அந்த நிலைமையில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இது தவிர்க்கமுடியாத ஒன்றும் கூட. ஏனெனில், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியென்பது தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில் சாதாரணமான ஒரு விடயம் இல்லை. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி ஒரு மூன்று தசாப்தகால அரசியல் அறுவடையை வெறும் சாம்பல் மேடாக்கிவிட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் பலரால் மீண்டெழ முடியாமல்தான் இருக்கிறது. சிலருக்கு அது ஒருபோதுமே முடியாமலும் போகலாம். இந்த அடிப்படையில் பார்த்தால், அரசாங்கத்தின் யுத்த வெற்றிக்கு பின்னர், தமிழர் அரசியலானது ஒரு 'கோமா' நிலைக்கு சென்றுவிட்டது எனலாம். இதனை ஓர் உதாரணத்திற்கு ஊடாக விளங்கிக்கொள்வதானால், ஒரு நெடிய தென்னை மரத்தில் ஏறிக் கொண்டிருந்த மரமேறி, கிட்டத்தட்ட அதன் உச்சியை தொட்டுவிட முடியுமென்று நம்பிக்கொண்டிருந்த வேளையில், திடீரென வீழ்ந்து 'கோமா' நிலைக்கு சென்றுவிடும் ஒரு துரதிஸ்டத்துடன் தமிழர் அரசியலை ஒப்பிடலாம். இதனை தெளிவாக விளங்கிக் கொண்டால்தான் இன்றைய குழப்பகரமான அரசியல் சூழலை நாம் புரிந்துகொள்ள முடியும்.

 

எனவே இன்றைய சூழலை விளங்கிக்கொள்வதற்கு முதலில் தேவையானது, உணர்ச்சிவசப்படாமல், நிலைமைகளை துல்லியமாக அவதானிப்பதற்கான திடசித்தமாகும். ஆனால் நம்மில் அனேகரிடம் வேகம் இருக்குமளவிற்கு விவேகம் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் மேற்கின் ஜனநாயக மரபுக்குள் வாழும் வாய்ப்பை பெற்றிருந்தும்கூட, அதனை உள்வாக்கிச் சிந்திக்கப் பழகும் பண்பில் நாம் இன்னும் அதிகம் வளர வேண்டியவர்களாகவே இருக்கிறோம். எனவே தமிழ் தேசிய அரசியலை முன்நோக்கி நகர்த்த வேண்டுமாயின், முதலில் அதனை ஓர் அடிப்படைவாதமாக சுருக்கும் தவறிலிருந்து நாம் வெளிவர வேண்டும்.

 

முதலில் நாம் ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். நம்மைச் சுற்றி பல்வேறு சக்திகள், வேறுபட்ட நலன்களுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வேறுபட்ட நலன்களை இலக்காகக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் சக்திகள்தான், இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்துவருகின்ற அதேவேளை, இலங்கை அரசுடன் உறவிலும் இருக்கின்றன. இதனை சர்வதேச உறவுநிலையில் (International Relations) விளங்கிக் கொள்வதாயின், எந்தவொரு நாட்டினையும் முழுமையாக இழந்துவிடக் கூடாது என்பதன் அடிப்படையில்தான் குறித்த நாடுகளுடனான முரண்பாடுகள் கையாளப்படுகின்றன. எனவே சர்வதேச உறவுகள் என்பது பலம்பொருந்திய நாடுகளின் நலன் என்னும் அச்சாணியில் சுழலும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த அடிப்படையில், 'சர்வதேச உறவு' என்பது, அதன் உண்மையான அர்த்தத்தில், 'சர்வதேச நலன்' என்பதுதான்.

 

எனவே இந்தப் பின்புலத்தில் யுத்தத்திற்கு பின்னரான இலங்கை நிலைமைகளை அவதானிப்போமாயின், சர்வதேச நலனுக்கும், யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் போக்கிற்கும் இடையில் ஓர் இடைவெளி காணப்படுகிறது. இந்த இடைவெளிதான் மறுபுறமாக இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தமாகவும் நீளுகின்றது. அதே இடைவெளியில்தான் தமிழர் பிரச்சனையும் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. இடைவெளி நீண்டுகொண்டு செல்லுமாயின், தமிழர் பிரச்சனையின் மீதான அவதானமும் வளர்ந்து கொண்டே செல்லும். ஆனால், அந்த இடைவெளி சுருங்கிச் செல்லுமாயின், தமிழர் பிரச்சனையின் மீதான கவனமும் சுருங்கிச் செல்லும். இறுதியில் தமிழர் பிரச்சனை கவனிப்பாரற்ற நிலைக்குச் சென்றுவிடும். இந்த இடைவெளி சுருங்கிச் செல்வதும், அதிகரித்துச் செல்வதும் தமிழர் கையில் இல்லை. அது ஆளும் மகிந்த அரசாங்கத்தின் கடும்போக்குவாத நிலைப்பாடுகளிலேயே தங்கியிருக்கிறது. இந்த இடத்தில் நாம் பதில் தேட வேண்டிய சில கேள்விகள் இருக்கின்றன - இலங்கையின் கடும்போக்குவாத முகம் என்பது முற்றிலும் உலகு தழுவிய ஜனநாயக நெறிமுறைக்கு மாறானதாக இருக்கிறதா அல்லது, அதனை அனுசரித்துக் கொண்டு ஒரு கட்சி மேலாதிக்கத்தை பேணிக்கொள்வதாக இருக்கிறதா? அவ்வாறு ஜனநாயக நெறிமுறைகளை அனுசரித்துக் கொண்டு, ஒரு கட்சி மேலாதிக்கத்தை பேணிக்கொள்ள மகிந்த அரசாங்கம் முற்படுமாயின், அதனால் பாதிக்கப்படப் போகின்றவர்கள் யார்? அவ்வாறான ஒரு கட்சி மேலாதிக்கத்தை ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஊடாக பேணிக்கொள்ள முடியும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

முதலாவது கேள்விக்கான விடையைப் பார்ப்போம் - உலகு தழுவிய ஜனநாயக நெறிமுறை என்பது, தேர்தல் மூலம் மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதாகும். அந்த வகையில் இலங்கை ஒரு வலுவான தேர்தல் ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட, வடக்கு மாகாணசபை தேர்தலை பிற்போட்டுக் கொண்டிருந்தமையானது, அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அந்த விடயமும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இந்தப் பின்னணியில், அரசாங்கம், ஒருகட்சி மேலாதிக்கத்துடன் ஆட்சியை கொண்டுசெல்லக் கூடிய சூழல் இருக்கின்றதா? இருக்கிறது என்பதே எனது அவதானம். இன்றைய சூழலில், மகிந்த ராஜபக்சவிற்கு சவால்விடுக்கக்கூடிய, கவர்ச்சிமிக்க தலைவர்கள் எவரும் தெற்கில் இல்லை. ஓர் ஆளுமைமிக்க தலைவர் தோன்றும்போதுதான், அவரைச் சுற்றி ஒரு கூட்டணி உருவாகுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அந்த வகையில் நோக்கினால், தொடர்ந்தும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வலுவாக இருப்பதற்கான சூழலே தெற்கில் வெளித்தெரிகிறது.

 

இப்போது, இரண்டாவது கேள்விக்கான பதிலை பார்ப்போம் - அவ்வாறு தொடர்ந்தும் மகிந்த தலைமையிலான ஒரு கட்சி மேலாதிக்கம் நிலவுமாயின், இலங்கை ஒரு கிழக்காசிய முகத்தை தெற்காசியாவில் காண்பிக்கும் நாடாக மாறக்கூடிய ஏதுநிலை காணப்படுகிறது. ஏற்கனவே கிழக்காசிய நாடுகளான கம்போடியா, மியன்மார், தாய்லாந்து போன்ற நாடுகளில் இவ்வாறானதொரு தன்மை காணப்படுகிறது. உதாரணமாக கம்போடியாவின் தற்போதைய பிரதமர் குன் சென் (Hun Sen) ஆசியாவில் அதிக காலம் பிரதமராக இருக்கின்றார். மேலும் அவர் சர்வாதிகார தன்மையுடையவராக விமர்சிக்கப்பட்டும் வருகின்றார். அவர் மீது அவ்வாறான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, அவரது ஆட்சியின் கீழ் இருக்கும் கம்போடியாவுடன் அமெரிக்கா நெருக்கமான உறவுகளையே பேணிவருகிறது. ஆனால் தேர்தல் ஜனநாயகத்தின் ஊடாகவே அவர் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க முடிகிறது என்பதை இந்த இடத்தில் நாம் குறித்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதனை ஒரு விடயமாக மேற்குலகு கருதவில்லை.

 

எனவே ஒரு கட்சியின் மேலாதிக்கம் நீடிப்பது, குறிப்பிட்ட ஆட்சியாளரின் குடும்ப உறுப்பினர்கள் முக்கிய பொறுப்புக்களில் இருப்பது, இதுவெல்லாம் அமெரிக்காவிற்கோ, அல்லது மேற்குலகிற்கோ ஒரு பிரச்சனைக்குரிய விடயங்களல்ல. இவ்வாறான கிழக்காசிய நாடுகள் அமெரிக்காவுடன் இராஜதந்திர தொடர்புகளை பேணிக்கொண்ட போதிலும் கூட, சீனாவுடன் அதிக நெருக்கத்தைக் கொண்டிருக்கின்றன. பொதுவாக கிழக்காசிய ஜனநாயகத்தில் ஒரு சீனத் தன்மையே தூக்கலாக தெரிகிறது. அந்த சீனத்தன்மையை அங்கீகரித்துக் கொண்டே, மேற்குலகும் இவ்வாறான நாடுகளுடன் தொடர்புகளை பேணி வருகின்றது. இங்கு நான் மேலே குறிப்பிட்ட, நாடுகளை இழந்துவிடக் கூடாது என்னும், இராஜதந்திர அணுகுமுறையே பின்பற்றப்பட்டு வருவதை நாம் காணலாம்.

 

எனவே இலங்கை அவ்வாறானதொரு கிழக்காசிய ஜனநாயக முறையை நோக்கி திரும்புமாயின், அது மேற்குலகிற்கு ஒரு பிரச்சனைக்குரிய விடயமாக இருக்கப்போவதுமில்லை. ஆனால், இலங்கையில் ஒரு சீனத்தனம் மேலோங்குவதால் உடனடியாக பாதிக்கப்படப்போகும் நாடு எதுவாக இருக்கும் என்பதைத்தான் நாம் கருத்தில் எடுக்க வேண்டும். இதுதான் தமிழ் தேசியர்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய இடம்.

 

இலங்கை கிழக்காசிய ஜனநாயக முறைமையை நோக்கிச் செல்லும்போது, அது தெற்காசிய அரசியலில் ஒரு புதிய போக்காக அமையும். அதாவது தெற்காசிய எல்லைக்குள், கிழக்காசிய முகத்தை இலங்கை காண்பிக்க முயலுமாயின், இலங்கை ஒப்பீட்டளவில் சீன முகத்தையே பிரதிபலிக்கும். இது இந்தியாவிற்கு நெருக்கடிகளை தோற்றுவிக்கும். அதாவது தெற்காசியாவின் சக்தியான இந்தியாவின் செல்வாக்கிலிருந்து அதன் உடனடி அயல்நாடான இலங்கை விலகிச் செல்வதானது, ஒரு புதுவிதமான அரசியல் அலையை தெற்காசியாவில் தோற்றுவிக்கக்கூடும். எனவே இலங்கை ஒரு கிழக்காசிய முகத்தை எடுப்பதை இந்தியாவால் தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில்தான், இந்தியா கொழும்பின் குரல்வளையைப் பிடிப்பதற்கான ஒரு கருவியாக தமிழர் பிரச்சனையை கையில் எடுக்கும். ஆகவே இன்று இலங்கையின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் சர்வதேச அழுத்தத்திற்கு, இந்தியா பச்சைக்கொடி காட்டிவருவதை நாம் இந்த பின்புலத்தில் வைத்தே விளங்கிக் கொள்ள முயலவேண்டும். ஆழமாகப் பார்த்தால், அமெரிக்க அழுத்தம் என்பதே, கொழும்பை சீனத்தனத்திலிருந்து விலகச் செய்வதற்கான ஒரு கொடுக்கிப் பிடியன்றி வேறில்லை. இவ்வாறான அழுத்தங்கள் இலங்கையை தண்டிக்கும் நோக்கம் கொண்டவையல்ல. மாறாக இந்தியாவை நோக்கித் தள்ளுவதற்கான அழுத்தங்களே அவை.

 

கொழும்பு கடும்போக்கை கடைப்பிடிக்கும்வரைதான் இவ்வாறான நிலைமையும் நீடிக்கும். எனவே தமிழ் தேசிய சக்திகள் என்போர், இவ்வாறான விடயங்கள் அனைத்தையும் துல்லியமாக அவதானிக்க வேண்டும். ஆனால் இந்த விடயங்கள் குறித்த துல்லியமான அவதானம் கொழும்பின் ஆளும் பிரிவிடம் உண்டு. கொழும்பின் ஆளும் பிரிவு இதன் பல்பரிமாணத் தன்மையில் மிகுந்த தேர்ச்சியைக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சர்வதேச அழுத்தங்களால் கொழும்பு பலவீனப்பட்டிருப்பதாக நாங்கள் நினைப்போமாயின், அடிப்படையிலேயே நாம் தவறு செய்பவர்களாகவே இருப்போம். சர்வதேச அழுத்தங்கள் தமிழர் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதில் கொழும்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது. தற்போதைய அழுத்தங்களின் பின்புலத்தில் இந்தியா ஒரு திரைமறைவு சக்தியாக இருப்பதை கொழும்பு நன்கு அறியும். இந்தியாவை வளைத்துப் போடும், ஒரு தந்திரோபாயமாகவே கிழக்காசிய முகத்தை காண்பித்து வருகிறது.

 

இதற்கு அமையவே கொழும்பு தனது அண்மைக்கால இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் தேர்தல் வெற்றியில் கொழும்பு தனது பார்வையைப் பதித்திருக்கிறது. இந்தியாவில் நரேந்திர மோடி அலையொன்று ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்ற நிலையில், கொழும்பு அதனை இலக்கு வைத்திருக்கிறது என்பது எனது கணிப்பு. மோடி வெற்றிபெறுவாராக இருப்பின், அவர் தேசிய பாதுகாப்பு விடயங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கான வாய்ப்பே அதிகம் தெரிகிறது. மோடி தேசிய பாதுகாப்பு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பாராயின், ஓர் உடனடி அயல்நாடென்னும் வகையில், இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை பேணிக் கொள்வதற்கே இந்தியா முன்னுரிமையளிக்கும்.

 

மோடி வெற்றிபெறும் சூழலில், இலங்கையுடனான உறவை புதுப்பித்துக் கொள்ளும் ஒரு ஏற்பாடு இருப்பதாகவே நான் சந்தேகிக்கிறேன். ஏற்கனவே சுப்பிரமணிய சுவாமி இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கில் பங்குகொண்டு உரையாற்றியமை, சிவசேனையின் தலைவர் உதய் தாக்ரே இரகசியமாக இலங்கை வந்து சென்றிருப்பது, இவையெல்லாம் கொழும்பின் புதிய காய்நகர்த்தல்களின் விளைவுகள் என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமீபகாலமாக நடபெற்றுவருகின்ற ஒவ்வொரு விடயங்களையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

 

ஆனால், தமிழ் தேசிய அரசியல் சூழலில், தேவையில்லாத உரையாடல்களே அதிகம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை குறித்து எந்தவொரு கரிசனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லை. வடக்கு மாகாணசபையை அடிப்படையாகக் கொண்டு, இராஜதந்திரப் போர் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக கூறிவரும் கூட்டமைப்பிடம் அதற்கான எந்தவொரு உட்தயாரிப்பும் இல்லை. ஆகக் குறைந்தது இந்தியா குறித்தும், இந்தியாவில் ஏற்படப் போகும் மாற்றங்கள் ஈழ அரசியலில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்பது பற்றியும் ஓர் அடிப்படையான புரிதல்கூட கூட்டமைப்பிடம் இல்லை. புலம்பெயர் சூழலில் உள்ளவர்களுக்கு வாய்ப்புக்கள் இருந்தபோதும், இது குறித்த அவதானமோ, தேடலோ அவர்கள் மத்தியிலும் இல்லை. இந்த நிலைமை தொடருமாயின், தமிழ்த் தேசிய அரசியல் தொடர்ந்தும் ஒரு 'கோமா' நிலையில்தான் இருக்கவேண்டி வரும். இறுதியில் அதனை கொழும்பு அடக்கம் செய்துவைக்கும் நிலைதான் ஏற்படும். எனவே தமிழ் தேசிய சக்திகள், முதலில் ஒரு வீட்டு வேலைக்கு தயாராக வேண்டும். தாராளவாத பின்புலம் கொண்ட புலமையாளர்கள் குழு ஒன்றை அடையாளம் காணவேண்டும். அவர்கள் பணியாற்றுவதற்கான நிதிப்பின்புலத்தை தயார் செய்ய வேண்டும். இக்குழுவினர் இந்திய தேர்தல் நிலைமைகளை துல்லியமாக மதிப்பிட்டு, காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆகியவற்றின் வெற்றிவாய்ப்புக்களை மதிப்பிட வேண்டும். இரண்டு தரப்பினருடனும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்களை மதிப்பிட்டு, அதற்கு ஏற்ப தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

தமிழர் அரசியல் சக்திகளிடம் இருக்கும் பிறிதொரு பிரச்சனை, அனைத்து விடயங்களையும் கறுப்பு வெள்ளையாக நோக்கி ஆட்களை வடிகட்டுவது. இது அடிப்படையிலேயே தவறான ஒன்று. அனைத்து தரப்பினருடனும், வேறுபட்ட முகங்களுக்கு ஊடாக தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமே திடீரென்று ஏற்படும் அரசியல் மாற்றங்களை சமாளித்து முன்னகர முடியும். சில விடயங்கள் தொடர்பில், சிந்தனையை கிளறிவிடுவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். கொழும்பின் அணிசாரா ராஜதந்திரம் குறித்து அடுத்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம். அதுவரை இதனை அடிப்படையாகக் கொண்டு ஓர் உரையாடல் இடம்பெற வேண்டும் என்பதே எனது கரிசனை.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=7&contentid=d08daa43-56d2-4d4b-ac1a-45af2061a884

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.