Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அங்கீகாரம் என்பதும் ஒருவகை அரசியல்தான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அங்கீகாரம் என்பதும் ஒருவகை அரசியல்தான்!

தயாளன்

'எவன் எழுதுகிறான் என்பதுதான் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றதே தவிர, என்ன எழுதுகிறான் என்பதை எவருமே கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இது வியாபார உலகம். ஆகவே இது பற்றி எல்லாம் நாம் விசனிப்பதில் அர்த்தமில்லை'

இது அண்மையில் அமரரான கவிஞர் வாலியின் கருத்து. 'நானும் இந்த நூற்றாண்டும்' என்ற தலைப்பில் வெளிவந்த அவரது நூலிலேயே அவர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இதற்கு உதாரணமாக 1963இல் நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறார் அவர். அத்தியாயம்: பரதநாட்டியப் பதம் - இந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட 'சீமா' என்ற திரைப்படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார், அப்போது பிரபல்யமாக இருந்த 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் உரிமையாளர் லேனா செட்டியார். இப்படத்தின் இயக்குனர் ப.நீலகண்டன், இசையமைப்பாளர் சுப்பையா நாயுடு, கதாநாயகன் எம்.ஜி.ஆர். இப்படத்தில் மூன்று கதாநாயகிகள். அக்காலத்தில் 'திருவாங்கூர் சகோதரிகள்' எனக் குறிப்பிடப்பட்ட பிரபல நாட்டியத் தாரகைகளான லலிதா, பத்மினி, ராகினி ஆகியோரே இக்கதாநாயகியர்.

எம்.ஜி.ஆரை வைத்து திரு லேனா செட்டியர் தயாரித்த 'மதுரைவீரன்' படத்தில் திருவிளையாடல் நிகழ்ச்சிகளை விபரிக்கும் நாட்டியப் பாடல் இடம்பெற்றது. இப்படமும், பாடலும் பெருவெற்றி பெற்றன. அதேபோல் 'ராஜாதேசிங்கு' படத்தில் தசாவதாரம் நாட்டியப் பாடல் இடம்பெற்றது. இதைப்போல் இப்படத்திலும் ஒரு நாட்டியப் பாடல் இடம்பெற வேண்டும் என லேனா செட்டியர் விரும்பினார். இதற்கென இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவையும், பாடலாசிரியராக நியமிக்கப்பட்டிருந்த திரு. வாலியையும் ஈடுபடுத்தினார். இந்த நாட்டியப் பாடலுக்கான நடன அமைப்பை அந்நாளில் மிகப் பிரபலமாக விளங்கிய பிரபல நடனமேதை வழுவூர் ராமையா பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு படமாக்க ஏற்பாடு செய்திருந்தார்.

ஒருநாள் இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இப்படத்துக்கான பாடலை எழுதி இசையமைத்துக் கொண்டிருக்கையில் நடன ஆசிரியர் அங்கு வந்தார். இசையமைப்பின் இடையே குறுக்கிட்ட அவர், 'இந்த நாட்டியத்துக்கான பதம் எல்லாவற்றையும் எழுத வாலி லாயக்கில்லை. மற்றப் பாட்டெல்லாம் அவரு ஜமாய்ச்சிடுவாரு. இதை எழுத அனுபவம் வேணும். நாம முத்துத்தாண்டவர் பாட்டையோ, மாரிமுத்தாப் பிள்ளை பாட்டையோ போட்டுக்கலாம்' என்றார்.

இதைக்கேட்ட வாலியின் முகத்தில் கோபம் படரலாயிற்று. இதைக் கவனித்துக் கொண்டிருந்த இசையமைப்பாளர், நடக்கக் கூடாது எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் வாலியின் காதோடு காதாக ஒரு விசயத்தைக் கூறினார். உடனே அமைதியானார் வாலி.

நடன ஆசிரியரிடமும், அவருடன் கூடவே வந்திருந்த இயக்குனரிடமும், 'சரி... நீங்க சொன்ன மாதிரியே பழைய பாடலை நீங்க பயன்படுத்திக்குங்க. நான் எழுதல. இதை எழுத எனக்கு திறமை பத்தாதின்னு நீங்க சொன்னதிலையும் எனக்கு ஒன்றும் வருத்தமில்லே' என்று கூறிவிட்டு புறப்பட்டார்.

அதன்பின் 'வதனகுதூகலம்' ராகத்தில் ஒரு நாட்டியப் பாடலுக்கான இசையை அமைத்திருந்தார் திரு.சுப்பையா நாயுடு. திருமதி. எம்.எல்.வசந்தகுமாரி அந்தப் பாடலை பாடியிருந்தார்.

பல்லவி: 'வருவானோ தோழி - அந்த

வெயில் அனல் மாரி

பெய்கின்ற நாழி

வருவானோ தோழி - அவன்

வருவானோ தோழி' - பல்லவி -

அனுபல்லவி: 'ஒரு மான் கரமேந்தும்

பெருமான் - கண்ணில்

இரு மான் தனையேந்தும்

இளமான் எனைத்தேடி வருவானோ' - பல்லவி -

சரணம்: 'திருவாருர் காரன் - புலித்

தோலாடை மேலணிந்த மூலாதாரன்

எருதூரும் ஈசன்! - விழி

எரியூட்டித் திரிபுரத்தை எரித்த சபேசன்

திருமேனி மருவாமல்

நெருப்பாற்றில் தோய்ந்தேன்

ரதம்

வரும் வீதி விழி வைத்து

ஒரு பாதி தேய்ந்தேன்'

என அப்பாடல் அமைந்திருந்தது.

ஓரிரு மாதங்களின் பின்னர் எம்.ஜி.ஆர் நடிக்கின்ற வேறொரு படத்துக்கான பாடலை எழுதுவதற்காக அதே கம்பனிக்கு வாலி சென்றிருந்தார். அப்போது அந்த நாட்டியப் பாடலை ஒலிநாடாவில் இவருக்குப் போட்டுக் காண்பித்தார் திரு. லேனா செட்டியார். பாட்டு முடிந்ததும், 'வாலி எப்படியிருக்கு பாட்டு..? இது ஒரு பழம் பாடல். நம்ம சுப்பையா அண்ணர் தான் ஏதோ ஒரு பழைய புஸ்தகத்திலேயிருந்து தேடிப் பிடிக்சுக் கொணாந்தாரு. நம்ம நடன ஆசிரியர் கேட்டுட்டு அசந்து போயிட்டாரு. அன்னிக்கு அவரு உங்களப் பத்தி சொன்னதையெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க... உங்களால இப்படி எழுத முடியுமான்னு அவருக்கு ஒரு சந்தேகம். நானும் அவரு இஷ்டப்படியே ஒரு பழைய பாட்டை புடிச்சுக் கொண்டாரச் சொல்லி சுப்பையா அண்ணன் கிட்டே சொன்னேன். எப்படியோ பாட்டு நல்லா வந்திருச்சு. நீங்க என்ன சொல்றீங்க...?' எனக் கேட்டார் செட்டியார். பதிலுக்கு புன்னகைத்துவிட்டு மௌனமாக இருந்தார் வாலி. தொடர்ந்தும் விடாமல் அவரது அபிப்பிராயத்தைக் கேட்டார் செட்டியார்.

உடனே அங்கிருந்த இசையமைப்பாளர் சுப்பையா நாயுடு, 'பாட்டை எப்படிங்க வாலி நல்லாயில்லேன்னு சொல்லுவாரு...? பாட்டே அவரு எழுதினது தானே... நான் தான் பழைய பாட்டுன்னு சொல்லி நம்ம டான்சு மாஸ்டரை நம்ப வெச்சேன்' என்று உண்மையைப் போட்டுடைத்தார்.

'அடப்பாவி...! அற்புதமா எழுதியிருக்கியேய்யா' என்று ஆச்சரியப்பட்ட செட்டியார், தொலைபேசியில் இயக்குனர் ப.நீலகண்டனுக்கும் விடயத்தை தெரிவித்தார். இதுநாள் வரையில் எவருக்குமே இந்த விடயத்தை வெளியிடாமல் ரகசியம் காத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

000

எப்படியோ எதிர்நீச்சல் போட்டு எழுத்துலகில் அங்கீகாரம் பெற்றால், அதன் பின்னர் எதை எழுதினாலும் கண்ணை மூடிக்கொண்டு உலகம் அங்கீகரிக்கும். திரையுலகில் கண்ணதாசன் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் - சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் - இலங்கையில் 'தம்பி கொழும்பில்' என்றொரு நாடகம் வெற்றி நடைபோட்டது. அந்நாடகத்தில் அதன் இயக்குனரும், பிரதான கதாபாத்திரத்தில் நடித்தவருமான திரு. குமார் தனபால், கண்ணதாசனிட்ட பாட்டெழுதச் சொல்லிப் போய்க் கேட்க, 'எனக்கு நேரமில்லை' எண்டு பதில் எழுதினால் கூட விஸ்வநாதன் அதுக்கு இசையமைச்சுப் போடுவார் என்று கூறுவார். 'அதெப்படி....?' என்று கேட்க, 'எனக்கு நேரமில்லை... நேரமில்லை...' என்று பலமாதிரி ஏற்ற இறக்கங்களுடன் பாடி ஆடிக்காட்டுவார் திரு.குமார் தனபால்.

இவர் நகைச்சுவையாக குறிப்பிட்டதை நிரூபிக்கும் வகையில் கவியரசரின் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றது. ஒரு கவியரங்குக்கு சென்றிருந்தார் அவர். அவருக்குப் பக்கத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் இருந்தார். அந்த மாணவர் வாசிக்கவிருந்த கவிதையை வாங்கிப் படித்தபோது ஒரு குசும்பு வேலை செய்யத் தீர்மானித்தார் கவியரசர். 'எனது கவிதைகளை நீ படி. உனது கவிதைகளை நான் படிக்கிறேன்' என அந்த மாணவரிடம் கூறினார் அவர்.

கவியரசரின் நாவால் தனது கவிதைகள் வெளிவரப் போகின்றனவே என்று நினைக்க அந்த மாணவனுக்கு புல்லரித்தது. இந்த ஏற்பாட்டின் பிரகாரம் கவியரசரின் கவிதைகளை தன்னுடைய கவிதைகள் போன்று வாசித்தார் அந்த மாணவன். ரசிகர்களிடம் அதற்கு பெரிதாக வரவேற்பு இருக்கவில்லை. பின்னர் கவியரசர் வாசித்த அந்த மாணவனின் கவிதைகள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டன. கரகோஷம் ஓங்கி ஒலித்த போதெல்லாம் அந்த மாணவனைப் பார்த்து புன்முறுவல் செய்தார் கவியரசர்.

கவியரசரால் எழுதப்பட்டதாக நம்பப்பட்ட கவிதைகளுக்கு கிடைத்த வரவேற்பு, உண்மையில் அவர் எழுதிய கவிதைகளுக்கு கிடைக்கவில்லை. நிகழ்ச்சி முடிவடைவதற்கிடையில் இவ்விடயத்தை கவியரசரே போட்டுடைத்து விட்டார். பலரும் தம் செய்கைக்காக நெகிழ்ந்தனர்.

000

ஒருவனின் எழுத்துகளுக்கு இலகுவில் அங்கீகாரம் கிடைத்து விடுவதில்லை. அங்கீகாரம் கிடைக்கும் வரை எப்படியான அற்புதமான படைப்புகளும் சாதாரணமானதாகவே கணிக்கப்படுகின்றன. இதில் எதிர்நீச்சல் போட்டு அவர் தலையெடுத்து விட்டால், பின்பு அவர் கசக்கி எறியும் காகிதங்களுக்கு உள்ளும் உலகம் அர்த்தம் தேடத் தொடங்கிவிடும். ஆக அங்கீகாரம் என்பதும் ஒருவகை அரசியல் தான்!

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=5&contentid=046e7ed3-4ff7-49f6-9dbd-394f722c914f

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.. பொதுவில் எல்லாத் துறைகளிலுமே இத்தகைய படிமானங்களைத் தாண்டித்தான் வரவேண்டி உள்ளது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.