Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியப் போராட்டமும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியப் போராட்டமும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பும் - நிர்மானுசன் பாலசுந்தரம்

01 நவம்பர் 2013

 

Diaspora_CI.jpg

அறிமுகம்

கருத்தியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் புலம்பெயர் தமிழர்களும், அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் தமிழக அரசியலும் சிக்குண்டாலும், தமிழர் தேச அரசியலில் அவர்களது பங்களிப்பு மிக முக்கியமானது.

அத்தகைய சூழலில், ஈழத்தமிழர் நலனை முன்னிறுத்திய புலம்பெயர் மற்றும் தமிழக அரசியல் செயற்பாடுகளை பலவீனப்படுத்துமாற் போல் சில கருத்துக்களை வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தேர்தலை அண்மித்த காலப்பகுதியில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கள், முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசு 2009 ல் நடாத்திய இனஅழிப்புப் போருக்குப் (Genocidal war) பின்னர், தமிழர் உரிமைப் போராட்டத்தில் இரட்டிப்பு வகிபாகத்தை வழங்க வேண்டிய, புலம்பெயர் தமிழர்களையும், உந்துசக்தியாக செயற்பட வேண்டிய தமிழகத்தையும் ஆழந்த கரிசனைக்குள்ளாக்கியதோடு அவர்களது உளவுரணையும் ஆட்டக்காண செய்ய முற்பட்டது.

அதேவேளை, அதிர்ச்சியளிக்கும் வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்களும் செயற்பாடுகளும், சிறீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தெரிந்தோ தெரியாமலோ வலுப்படுத்துவதாகவே உள்ளது. ஏனெனில், முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதை பிரதான இலக்காகக் கொண்டு செயற்பட்ட சிறீலங்கா அரசு, முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் பலவீனப்படுத்த வேண்டிய அல்லது சிதைக்க வேண்டிய பிரதான குறிக்கோளாக தமிழ்த் தேசியத்திற்காக அர்ப்பணிப்போடு செயற்படும் புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புக்கள், கட்டமைப்புக்கள் மற்றும் சுயாதீனமான செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து தனது உபாயங்களை வகுத்து செயற்படுகிறது. ஆதலால், புலம்பெயர் தமிழர்களின் உளவுரணை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை யார் முன்னெடுத்தாலும், அது சிறீலங்கா அரசின் நாசகார நகர்வுகளுக்கு துணை போவதாகவே அமையும் பேராபத்துள்ளதை தமிழர்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதியும் மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.  

ஏனெனில், ஓட்டுமொத்தத்தில், தமிழ்த் தேசியத்தினை பாதுகாக்க முற்படும் எந்த சக்திகளையும் அழிப்பதே சிறீலங்கா அரசின் பிரதான குறிக்கோள்களில் ஒன்று. முழு இலங்கைத் தீவும் சிங்கள பௌத்தர்களுக்கே உரித்துடையது என்ற மகாவம்ச மாயை தமிழர் தேசத்தை அழிக்கும் நோக்கத்திற்கான அடிப்படைக் காரணியாகவுள்ளது.

தமிழர் தாயகம் சிறீலங்கா அரசால் திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டு, தமிழர் தேசம் கட்டமைப்பு சார் இனஅழிப்பை (Structural Genocide) எதிர்நோக்கியுள்ள இத்தருணத்தில், தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்தும் பொறிகளுக்குள் சிக்காமல், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு ஆற்றக்கூடிய பணிகள் தொடர்பாக முன்னரை விடவும் அதிக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதை சிந்தனையில் கொண்டு நகர்கிறது இந்தக் கட்டுரை.  

புலம்பெயர் ஈழத் தமிழர்கள் என்பவர்கள் யார்?

இலங்கைத் தீவின் வடகிழக்கு பகுதியை தமது மரபுவழித் தாயகமாகக் கொண்டு, தற்போது இலங்கதை; தீவுக்கு வெளியே வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களையே புலம்பெயர் ஈழத் தமிழர்கள் என்கிறோம். இவர்களிலும் வௌ;வேறு தரப்பினர் உள்ளனர். அவையாவன,

1.    'ஈழப்போர் I' ஆரம்பிக்க முன்னர் இலங்கைத் தீவை விட்டு வெளியேறியவர்கள். இவர்களில் குறைந்த பட்சம் இருபிரிவினர் உள்ளனர். ஓரு தரப்பினர், ஆயுத மோதல் தொடங்குவதற்கு முன்னரே சிறீலங்கா அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து நாட்டை விட்டுவெளியேறியவர்கள். இவர்களில் கணிசமானவர்கள் அரச உத்தியோகத்தர்களாகவும் இருந்தவர்கள். மற்றைய தரப்பு பொருளாதார காரணங்களுக்காக வெளியேறியவர்கள். இவர்கள், ஏற்கனவே வசதிபடைத்தவர்களாக இருந்தவர்கள். இத்தருணத்தில் சிங்கள மட்டும் சட்டத்தின் பாரபட்சத்தாலும் மற்றும் தரப்படுத்தல் சட்மூலம் போன்ற பாரபட்ச நடவடிக்கைகளாலும் அதிருப்தியடைந்து இலங்கைத் தீவை விட்டு வெளியேறியவர்கள் தற்போதும் தமிழர் உரிமைப் போராட்டத்தில் உணர்வோடு கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இல்லாவிட்டாலும், இவர்களின் பங்களிப்பு வரலாற்றுப் பதிவாகும்.

2.    'ஈழப்போர் I'  ஆரம்பித்த பின்னர் இலங்கதை; தீவை விட்டு வெளியேறி உலகின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக தமிழகம், மலேசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வசித்து வருபவர்கள். இவர்களே, தமிழ்த் தேசியத்தினை பலப்படுத்தும் புலம்பெயர் அமைப்புகள் கட்டமைப்புகளை நிறுவி வினைத்திறன் மிக்க செயற்பாட்டு வழிவகுத்த பிரதான தரப்பினர் ஆவர். அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தேவையான நிதிவளங்களையும் இதர உதவிகளையும் முள்ளிவாய்க்கால் வரை வழங்கி வந்தவர்கள். இந்த தரப்புக்குள் 'ஈழப்போர் III' வரை வருகை தந்தவர்களையும் உள்ளடக்க முடியும். இந்த தரப்பினருக்குள்ளே இருந்த சிலரின் மதிநுட்ப குறைந்த மற்றும் பொறுப்பற்ற தன்மையால், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒட்மொத்த கட்டமைப்பு – அமைப்புகள் மீதும் தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

3.    வன்னியில் இடம்பெற்ற, குறிப்பாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சிறீலங்கா அரசின் இனஅழிப்பு போருக்கு முன்னரும் பின்னருமாக, காலத்திற்கு ஏற்ற பணிகளுக்காகவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் வெளியேறியவர்கள். இவர்களில் கணிசாமானவர்கள் இனஅழிப்பின் சாட்சிகளாகவும் இனஅழிப்பால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.

தமிழ்த் தேசியப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்களின் வகிபாகம்

சர்வதேச ஆய்வாளர்களின் படி தமிழிழ விடுதலைப் புலிகளுக்கான பிரதான நிதி வழங்குனர்களாக புலம்பெயர் தமிழர்களே விளங்கினர். பல நாடுகள் மீது கட்டுப்பாடுகளை விதித்து அழுத்தங்களை பிரயோகித்த போதும், எந்தவொரு நாட்டினதும் ஆதரவில்லாமல் சுமார் நான்கு தசாப்த காலம் ஒரு இயக்கத்தை வினைத்திறனுடன் வழிநடத்தியமைக்கு புலம்பெயர் வழங்கிய நிதி உதிவிகள் பேருதவி புரிந்தது. மறுபுறத்தில், இது புலம்பெயர் அமைப்புகள் மீதும் சர்வதேச அழுத்தங்கள் உருவாகுவதற்கு வழிவகுத்தது.

முள்ளிவாய்க்கால்  இனஅழிப்புக்கு பின்னர் சிறீலங்கா அரசுக்கு பிரதான சாவாலக புலம் பெயர் தமிழர்களே விளங்கினார்கள். அதனை, பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளும் சரிவர எடைபோட்டிருந்தார்கள். அதற்கமைய, புலம்பெயர் தமிழர்களை பல்வேறு பிரிவுகளாக துண்டாடி பிரித்தாளும் உத்தியை சிறீலங்கா அரசு கைக்கொண்டது. சிறீலங்கா அரசின் பொறிக்குள், தோல்வி மனப்பான்மையால் பீடிக்கப்பட்ட தமிழர்களும், சுயலாப நோக்கங்கொண்ட அமைப்புகளும், தனிநபர்களும் சில ஊடகவியலாளர்களும் துன்பகரமான முறையில் சிக்கிக்கொண்டார்கள்.

ஆயினும், தமக்கிடையே நிலவும் அபிப்பிராய வேறுபாடுகளுக்கு மத்தியிலும், தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட தரப்புகள் சிறீலங்கா அரசின் நாசகாரத் திட்டங்களுக்குள் சிக்கவில்லை. இருந்தபோதிலும், துன்பகரமான முறையில் சிறீலங்கா அரசின் பொறிக்குள் சிக்கிக்கொண்ட தமிழர்களில் சிலர், புலம்பெயர் தமிழர்களின் பலத்தை சிதைக்கும் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு துணை போய்க்கொண்டிருக்கும் அவலம் தொடர்கிறது. இத்தகையவர்கள் ஊடாக, உத்திகள்(Tactics) உபாயங்கள் (Strategies)  மற்றும் அணுகுமுறைகளில் (Approach) வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதும், இலக்கில்( Goal) உறுதியாக உள்ள தமிழ்த் தேசிய சக்திகளிடையே வேறுபாடுகளையும் பகைமையையும் வளர்க்கும் பொறிமுறைகளை சிறீலங்கா அரசு மிக நுணுக்கமாக வகுத்து செயற்படுத்தி வருகிறது.

ஆகவே, சிறீலங்கா அரசாங்கத்தின் நாசகாரத்திட்டத்தை அடையாளம் கண்டு, அதனை முறியடிக்கும் விதமாக செயற்பட வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். சிறீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முறியடிப்பதும், தமிழர் தேசத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னேடுப்பதுமே தமிழர் தேசத்தின் நலனை பூர்த்தி செய்யும் முக்கிய திறவுகோல். ஆதலால்,  காலத்தின் கட்டாயத்திற்கு அமைய பொறுப்புணர்வுடன் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் செயற்பட வேண்டும்.

தாயக உறவுகள், தமிழக உறவுகளையும் புலம்பெயர் தமிழர்களையும் தமது அவலங்களை களைந்து உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் பிரதான சக்திகளாக பார்க்கின்றனர். இதனை, வடமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு, வடகிழக்கு தமிழ் சிவில் சமூகம் வெளியிட்ட அறிகை வெளிப்படுத்தி நிற்கிறது. அவர்களுடைய அறிக்கை, 'தமிழகமும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இன்று ஈழத்தமிழர்களின் பலமாக இருப்பவர்கள். எம்மீது உண்மையான கரிசனை உள்ளவர்களும் இவர்களுள் உள்ளார்கள்;. இன்று எமது இருப்புக்கு சிறிய அளவிலேனும் கிடைக்கின்ற பாதுகாப்புக்கு காரணமான உலகினது பார்வையை எம்மீது திருப்பி வைத்திருப்பவர்கள் இவர்கள். நாங்கள் விரும்பியும் பேச முடியாது மௌனிகளாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் போது எமது அபிலாiஷகளைப் பேசுபவர்கள் அவர்கள். அவர்களுக்கு உரிய நன்றிகளுடனும் கௌரவத்துடனும் அவர்களையும் இணைத்துக்கொண்டு எமது அரசியலைப் பலப்படுத்தக்கூடிய வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டியது த. தே. கூட்டமைப்பின் முக்கியமான பணியாகும். மாறாக இந்த உறவை பலவீனப்படுத்தக் கூடாது. இதன் மூலமே அவர்களது உண்மையான கரிசனைக்கும் எமது உரிமைக் கோரிக்கைகளுக்கும் எம்மால் வலுச்சேர்க்க முடியும் என்று நாம் நம்புகின்றோம்' என நேசக்கரத்தையும் நம்பிக்கைiயும் நீட்டி நீள்கிறது.

அதேவேளை, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, முப்பது வருட கால தியாகங்கள் வீண்போகக்கூடாது என்ற கரிசனையோடு தேர்தலில் போட்டியிட்டு அபரிதமான வெற்றியை ஈட்டியவர் இனஅழிப்பின் வாழும் சாட்சியாக உள்ள திருமதி.அனந்தி சசிதரன். தனது வெற்றிக்குப் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், 'நிலம்பெயர்ந்து-புலம்பெயர்ந்து தாயக நினைவுடன், தமிழ் உணர்வுடன், வாழும் எமது உறவுகள் காலமுணர்ந்து காட்டிய பேராதரவை எப்படிச் சொல்வது...?' ஏனக்குறிப்பிட்ட விடயம் புலம்பெயர் தமிழர்களுக்குள்ள பொறுப்பை மெலும் கோடிட்டுக் காட்டுகிறது.

இத் தருணத்தில், புலம்பெயர் தமிழர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை ஆராய்வோம்.

புலம்பெயர் தமிழர்கள் ஆற்ற வேண்டிய பணி

புலம்பெயர் தமிழர்கள் தமிழர் தாயகத்தையும், சர்வதேச சமூகத்தையும், பூகோள அரசியலையும் மையப்படுத்தி தமது செயற்திட்டங்களுக்கான பொறிமுறைகளை வகுத்து செயற்பட வேண்டும். அத்துடன், புலம்பெயர் தமிழர்களுக்கு முன்னால், உடனடி-குறுங்கால, மத்திமகால மற்றும் நீண்டகாலப் பணிகள் காத்திருக்கின்றன. குறுங்கால மத்திமகால பணிகளை ஆற்றுகின்ற போதும், அவற்றை நீண்டகால பணியுடன் தொடர்புபடுத்தி மேற்கொள்ளவது அவசியம்.

உடனடி-குறுங்கால பணிகள்

தமிழர் தாயகத்தில் நேரடியாக இனஅழிப்பை சந்தித்த பின்னர், தற்போது கட்டமைப்பு சார் இனஅழிப்புக்கு முகம் கொடுத்து நிற்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அவர்களின் அவலங்களை களையும் முகமாக, மனிதாபிமான பணிகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும். தாயகத்திலுள்ள மக்களின் சமூக, பொருளாதார அடிக்கட்டுமானங்கள் பலப்படுத்தப்படுத்தப்பட வேண்டும். பலமான சமூகத்தாலேயே உறுதியான தேசத்தை கட்டியெழுப்ப முடியும். அத்துடன், இளைய சந்ததியினரின் கல்வி-அறிவியல் வளர்தெடுக்கப்பட வேண்டும். தேசப் பற்றோடு தொழில்நுட்ப நுட்பரீதியில் அவர்கள் வளர்ச்சியடைவது, புலத்துக்கும் களத்துக்குமான பிணைப்பை பலப்படுத்துவதோடு தமிழ் மக்களின் சுதந்திரமான கௌரவாமான நிம்மதியான வாழ்வுக்கான பயணத்தை வலுப்படுத்தும்.

தமிழ் மக்களின்  கட்டுமானங்களை வளர்த்தெடுப்பதோ அல்லது தமிழர்கள் வலுப்வூட்டப்படுவதையோ சிங்கள தேசம் அனுமதிக்கப்போவதில்லை. ஆயினும், அதனையும் முறியடித்து முன்னகரக் கூடிய தந்திரோபபங்கள் வகுக்கப்பட வேண்டும்.

அத்துடன், அரசியல் கைதிகளாகவும் போர்க்கைதிகளாகவும் சதடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிப்பதற்கு, சர்வதேச அளவில் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்.

இவற்றிற்கு சமாந்தரமாக, தமிழர் தேசத்தின் மீது சிறீலங்கா அரசு (Sri Lankan State)  மேற்கொண்ட இனஅழிப்பின் பரிமாணங்கள் தொடர்பான விழிப்புணர்வை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதோடு,  தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டது இனஅழிப்பு (Genocide) என்பதை சர்வதேச தரப்புகள் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான நடவடிக்கைகளை நிதானமாகவும் துல்லியமாகவும் செயற்படுத்த வேண்டும்.   

மத்திம காலப் பணிகள்

தமிழர் தாயகத்தின் வலுவூட்டலுக்கு அவசியத் தேவையான கட்டமைப்புகள், தாயகத்தில் தமிழகத்தில் மற்றும் புலம்பெயர் தேசங்களில் உருவாக்குதல். அல்லது தற்போதுள்ளவற்றில் ஆக்கபூர்வமான மறுசீரமைப்பினை ( Constructive Reform) மேற்கொள்ளல்  வரலாற்றுத் தேவையாகும்.  குறித்த அமைப்புகளினதும், குறுங்கால செயற்திட்டங்கள் தொடர்பாக மதீப்பீடு செய்து தேவையான மறுசீரமைப்பினை மேற்கொள்ளல் வேண்டும்.

சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்போ அல்லது அதன் கீழான நகர்வுகளோ தமிழ் மக்களுக்கு நீதியையோ நியாயமான தீர்வையோ பெற்றுத் தராது என்பதை சர்வதேச சமுகம் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் நிறுவுதல்.

தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சக்திகளுடனான உறவை வலுப்படுத்தல். அதேவேளை, உண்மையாக விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய சக்திகளை இனம்கண்டு அவர்களின் வளர்ச்சிக்கும் துணையாக இருப்பதோடு, தமிழர் தேசம் தொடர்பாக அவர்கள் அனைவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தில் சந்திக்கும் பொறிமுறையை உருவாக்குதல். அதேவேளை, பூமிப்பந்தெங்கும் பரந்து வாழும் தமிழர்களையும், தமிழை அடியாகக் கொண்டவர்களையும் உறுதியான அடித்தளத்துடன் ஒன்றிணைத்தல். இந்த அடித்தளம் என்பது தனிநர்களில் தங்கியிருபதாகவோ அல்லது தனிநபர்களை முன்னிலைப்படுத்துவதாவோ இன்றி, தமிழ்த் தேசியப் போராட்டத்தின் மூலவேரை மையப்படுத்தி, இறுதி இலக்கை அடைவதற்காக பூகோள அரசியலை மிகத் துல்லியமாக கணித்து, அதற்கமைய பொறிமுறைகளை வகுத்து ஒன்றிணைக்க வேண்டும்.

புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர் தமது பிள்ளைகளை சர்வதேச உறவு (International Relations) , ராஜதந்திரம் (Diplomacy) , மனித உரிமை (Human Rights) , சர்வதேச சட்டங்கள் (International Law) , இதழியல் (Journalism), சமாதானம் மற்றும் மோதுகை (Peace and Conflict) , தகவல் தொழில்நுட்பம் (Informationa Technology) பொருளியல் (Economics) போன்ற கற்கை நெறிகளை பயில்வதற்கு உற்சாகப்படுத்துவதோடு, குறித்த கற்கை நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கு உந்துசக்தியாகவும் இருக்க வேண்டும்.

அதேவேளை, தாயகத்திலுள்ள இளைய சமுதாயத்துக்கும், புலம்பெயர் இளைய சமுதாயத்துக்குமிடையில் உறுதியான அறிவியல், அரசியல், பொருளாதார நலனை முதன்மைபடுத்திய உறவுப் பாலம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அறிவினை பகிர்வது (Knowledge sharing) ஒரு தேசத்தின மறுமலர்ச்சிக்கு அவசியமானது.  

புலம்பெயர் அமைப்புகள் கட்டமைப்புகள்  மற்றும் சுயாதீனமான தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் சர்வதேச சமூகத்தின் முக்கிய அங்கங்களான செல்வாக்கு மிக்க நாடுகள், சர்வதேச ரீதியிலான மனித உரிமை அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் அமைப்புகள், விடுதலைக்காக போராடும் தேசங்கள், மக்கள் இயங்கங்கள், ஓருமைப்பாட்டு இயக்கங்கள் ( Solidarity Movements) குறித்த நாட்டு மற்றும் சர்வதேசரீதியிலான ஊடகங்கள் போன்றவற்றுடனான தமது கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பாக மீள் மதிப்பீடு செய்து, தமது உறவுகளை ஆக்கபூர்வமான முறையில் மறுசீரமைத்து நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

அதேவேளை, குறிப்பிட்ட தரப்புகளுடன் ஏன், என்னத்திற்காக உறவினை பேணுகிறோம், வலையமைப்புகளை கட்டியமைக்கிறோம்  என்பது தொடர்பாக அரசியல் தெளிவின் அடிப்படையிலான தமிழர் தேசத்தின் நலனை மையப்படுத்திய நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும். அதற்கமையவே செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பப்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே, உத்திகள் உபாயங்கள் மற்றும் அணுகுமுறைகள் திட்டமிடப்படவேண்டும்.

நீண்டகால இலக்கு

தமிழ் மக்கள் தமது தாயகத்தில் நிம்மதியாக சுதந்திரமாக கௌரவமாக வாழக்கூடிய மிகப் பொருத்தமான சூழலை உருவாக்குதல். அதற்கமைய சமூகக் கட்டமைப்புகளும் தேசத்தை கட்டியெழுப்பும் (Nation Building) பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நிறைவாக, எதிர்வரும் சொற்கணைகளுக்கு முகம்கொடுத்து, நல்நோக்கம் கொண்ட விமர்சனங்களை கருத்தில் கொண்டு, தாயத்தில் வாழும் உறவுகளின் அவலங்களை நீக்கி அவர்களுக்கான சிறப்பான எதிர்காலத்தை அமைப்பதற்கு வழிகோலும் இலட்சியப் பயணம் எத்தடைவரினும் தகர்த்தபடி முன்னகர வேண்டியது காலத்தின் கட்டாயம் வரலாற்றுத் தேவை. இந்த பொறுப்பை உரிய முறையில் செயற்படுத்த வேண்டியது புலம்பெயர் தமிழர்களின் தார்மீகக் கடமை.  

நிர்மானுசன் பாலசுந்தரம்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98198/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.