Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய ஆட்சி மாற்றம் தமிழர் பிரச்சனையில் தாக்கங்களை ஏற்படுத்துமா? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆட்சி மாற்றம் தமிழர் பிரச்சனையில் தாக்கங்களை ஏற்படுத்துமா?
யதீந்திரா

சமீபத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.ஜே.பி தலைவர்களை சந்தித்து பேசியிருந்தார். அதன் மறுதினமே அவரது சந்திப்பிற்கு பதிலளிப்பது போன்று, இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசமும் பி.ஜே.பியின் சில முக்கியஸ்தர்களை சந்தித்து பேசியிருந்தார். அடுத்த ஆண்டு, இடம்பெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலில், இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி அதிக ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடிய சாதக நிலைமையும் காணப்படுவதாக நம்பப்படுகிறது. ஆனால், ஒருவேளை நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு கிளம்பினால், மோடி அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அத்வானி அப்பொறுப்பிற்கு நியமிக்கப்படலாம் என்றும் ஒரு கருத்துண்டு.<
 
இத்தகைய புற நிலைமைகளை கருத்தில்கொண்டே, சம்பந்தன் தமிழ் நாட்டின் பி.ஜே.பி தலைவர்களை சந்தித்து இலங்கை நிலைமைகளை தெளிவுபடுத்தியிருக்கின்றார். சம்பந்தன் பி.ஜே.பி தலைவர்களை சந்தித்துப் பேசியதற்கு பின்னால் பிறிதொரு இராஜதந்திர காரணமும் உண்டு. சமீபகாலமாக பி.ஜே.பியின் தலைவர்களுடன் நெருங்கிய உறவுகளை பேணும் ஒரு வேலைத்திட்டத்தை கொழும்பு மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்படுமாயின், ஆளும் காங்கிரஸ் இலங்கை தொடர்பில் கடைப்பிடித்துவரும் கொள்கைசார் நிலைப்பாட்டில் சடுதியான மாற்றம் ஏற்படலாம் அல்லது இந்தியாவின் தற்போதைய அணுகுமுறையில் ஒரு தளர்வு ஏற்படும் என்பதே கொழும்பின் கணிப்பாக இருக்கிறது. கொழும்பின் இத்தகைய அணுகுமுறையின் மீதான, ஒரு எதிர் இராஜதந்திர நடவடிக்கையாகவே (Counter diplomacy) சம்பந்தன் தமிழ்நாட்டின் பி.ஜே.பி தலைவர்களை சந்தித்திருக்கின்றார்.

கொழும்பு ஏன் பி.ஜே.பியுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிக்கொள்ள விளைகிறது? ஒருவேளை எதிர்பார்ப்பது போன்று, இந்தியாவில் பி.ஜே.பி தலைமையிலான ஓர் ஆட்சி அமையுமாக இருப்பின், அது இலங்கை அரசியலில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தலாம்? புலிகளை அழித்தொழிப்பதற்கான கொழும்பின் நடவடிக்கைகளுக்கு, பாரபட்சமில்லாமல் இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் அக்கறை செலுத்திவரும் சகல நாடுகளுமே பச்சைக் கொடி காட்டியிருந்தன. இதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு முக்கியமான பங்குண்டு. சீனா கொழும்பின் யுத்த வெற்றிக்கு ஆயுத உதவிகளை போதியளவு வழங்கியிருந்த போதும், இலங்கையின் உள்நாட்டு அரசியலில் எந்தவிதமான அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. இதற்கு சீனா கைக்கொண்டு வரும் வெளிவிவகாரக் கொள்கையே காரணமாகும். சீனாவின் உறவு எப்போதும் அரசுகளுடன் மட்டுமே மட்டுப்பட்ட ஒன்றாக இருப்பதால், குறிப்பிட்ட நாடுகளின் கட்சிகளுடன் சீனா எந்தவிதமான கொள்கைசார் உறவுகளையும் பேணிக் கொள்வதில்லை. எனவே இந்தப் பின்புலத்தில் நோக்கினால், விடுதலைப் புலிகளின் அழிவு, இந்தியாவின் மேற்பார்வையில்தான் இடம்பெற்று முடிந்தது. அதனைத் தடுக்கக்கூடிய ஆற்றல் இந்தியாவிற்கு இருந்தபோதிலும், விடுதலைப் புலிகள் தொடர்பிலான கடந்தகால கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் இந்தியா புலிகளின் அழிவை மறைமுகமாக ஆதரித்திருந்தது.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழிக்க முடியுமென்று நம்பிய ஒரேயொரு நபராகக் கருதப்படும், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, யுத்தத்தின் போக்கில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒரேயொரு நாடு இந்தியா என்பதில் தாம் தெளிவாக இருந்ததாகவும், அதன் காரணமாகவே மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்து, யுத்தத்தின் போக்கை உடனுக்குடன் இந்தியாவிற்கு தெரிவித்துக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இது தொடர்பான தகவல்கள் சிங்கள பத்திரிகையாளர் சந்திரப் பெரும எழுதிய 'கோத்தாவின் யுத்தம்' என்னும் நூலில் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. இங்கு கவனிக்கவேண்டிய ஒரு சுவாரசியமான விடயம் உண்டு. விடுதலைப் புலிகள் மேற்குலக அனுசணையுடனான பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட போது, இந்தியாவின் மத்தியில் பி.ஜே.பி ஆட்சியிலிருந்தது.

ஆனால், புலிகள் பேச்சுவார்த்தை அரசியல் என்பது தங்களை சிக்கவைப்பதற்கான ஒரு தந்திரோபாயம் என்று கூறி, அதிலிருந்து விலகிச்செல்ல எத்தனித்துக் கொண்டிருந்த காலத்தில், இந்தியாவின் மத்தியில் காங்கிரஸ் இருந்து கொண்டிருந்தது. இந்தக் காலத்திலேயே, விடுதலைப் புலிகளுக்கும் மகிந்த அரசாங்கத்திற்கும் இடையிலான யுத்தம் மூண்டது. காங்கிரஸ் இந்தியாவைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போக்கில் அக்கறையற்று இருக்க முடியாதவொரு நிர்ப்பந்தம் இருந்தது. ஏனெனில் அப்போது காங்கிரஸ் தலைவியாக கணவனை இழந்த சோனியா காந்தி இருந்து கொண்டிருந்தார். அவர் தனது கணவனை இழக்கக் காரணமானவர்களுக்கு எதிராகவே கொழும்பு யுத்தத்தை புதுப்பித்துக் கொண்டிருந்தது.

எனவே, இத்தகையதொரு பின்புலத்தில், புலிகளை பூண்டோடு அழித்தொழிக்கும் பிராந்திய ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது கொழும்பைப் பொறுத்தவரையில் மிகவும் இலகுவான ஒன்றாகவே இருந்தது. இந்தக் காலத்தில் நிலவிய இந்திய-அமெரிக்க மூலோபாய ஒத்துழைப்பும் கொழும்பிற்கு முற்றிலும் சாதகமான ஒன்றாகவே இருந்தது. இறுதியில் புலிகளுக்கு எதிரான வரலாற்று வெற்றி கொழும்பின் வசமானது. அது கொழும்பிற்கு மட்டுமல்ல, காங்கிரஸ் இந்தியாவிற்குமான வெற்றியாக இருந்தது. புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது, இந்தியாவின் மத்தியில் பி.ஜே.பி இருந்திருந்தால், ஒருவேளை தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்பு புலிகளுக்கு கிடைத்திருக்கலாம். கொழும்பு விரும்பியவாறு யுத்தத்தை நிறைவுசெய்ய முடியாது போயிருக்கலாம். ஆனால் புலிகள் எந்தவகையிலும் நெருங்க முடியாதவாறு, இந்தியா காங்கிரஸ் வசமிருந்தது. இது இறுதியில், மகிந்த அரசாங்கத்தின் அதிஸ்டமாகவும், புலிகளின் துரதிஸ்டவசமாகவும் அமைந்துவிட்டது.

ஆனால், யுத்த காலத்தில் நிலவியது போன்றதொரு நெருக்கம், யுத்தத்திற்கு பின்னரான இலங்கைக்கும், காங்கிரஸ் இந்தியாவிற்கும் இடையில் காணப்படவில்லை. ஏன்? யுத்த காலத்தில் காங்கிரஸ் இந்தியா கொழும்பின் விருப்பங்களுக்கு இசைவாக நடந்து கொண்ட போதும், பெருமளவு ஆயுத உதவிகளை வழங்கியிருக்கவில்லை. இந்தியாவின் உள்ளுக்குள் குறிப்பாக, தமிழ்நாட்டின் வாக்காளர்களை கருத்தில் கொண்டு, ஆயுத தளபாடங்களை வழங்குவதில் இந்தியா சற்று பின்நிற்க வேண்டியிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சீனா, அதிகளவான ஆயுத தளபாட உதவிகளை இலங்கைக்கு வழங்கியது. சீனாவின் மேற்படி யுத்த கால உதவி என்பது, யுத்தத்திற்கு பின்னரான இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவின் பாலமாகியது. இந்த இடத்திலிருந்தே யுத்தத்திற்கு முழுமையான ஆதரவளித்து நின்ற காங்கிரஸ் இந்தியாவிற்கும், கொழும்பிற்கும் இடையில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. யுத்தத்தில் கொழும்பு அபார வெற்றியை தன்வசப்படுத்தியிருந்த போதும், அந்த வெற்றியை சர்வதேசத்தின் முன், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த வெற்றியாக காண்பிக்க முடியாதவொரு நிலைமை தோன்றிது.

எந்த நாடுகள் புலிகளை அழித்தொழிப்பதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைத்தனவோ, அதே நாடுகளே, சர்வதேச மனித உரிமை மற்றும் மனித நேய சட்ட விதிகளை மீறிவிட்டதாக, இலங்கையின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. சனல்-4 ஆவணப் படங்கள் சர்வதேச வெகுசன வெளியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. கொழும்பைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் எதிர்பாராத நெருக்கடி. இந்த பின்புலத்திலேயே, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து வெற்றிபெற்றது. அமெரிக்கா அதனை கொண்டு வந்தது என்பதை காட்டிலும், இந்தியா அதனை ஆதரித்தது என்பதே கொழும்பிற்கு பேரதிர்ச்சியை கொடுத்திருந்தது. இந்தியாவின் மேற்படி நடவடிக்கை மேலும் இந்திய-இலங்கை உறவில் ஒரு நெருக்கடியை தோற்றுவித்தது. இங்கு இந்திய - இலங்கை உறவு என்பதை, காங்கிரஸ் இந்தியாவிற்கும் - ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைமையிலான இலங்கைக்கும் இடையிலான நெருக்கடியென்று விளங்கிக் கொள்வதே சரியானது.

இவ்வாறானதொரு சூழலில்தான், கொழும்பு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தல் வெற்றியை குறிவைத்திருக்கின்றது. இந்தியாவின் ஆளும் காங்கிரசின் செல்வாக்கு சரிந்து செல்வதாக ஒரு கணிப்பு தெரிவிக்கின்றது. இந்தப் பின்னணியில் பிரதான எதிர்க்கட்சியான பி.ஜே.பி அதிக ஆசனங்களை கைப்பற்றக் கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை துல்லியமாக மதிப்பிடும் கொழும்பின் ஆளும் பிரிவினர், அண்மைக்காலமாக பி.ஜே.பியின் உயர் மட்டத்தினருடன் உரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பீட்டளவில், இலங்கை விடயத்தில் காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும், பி.ஜே.பி குறைவான ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாகவே நம்பப்படுகிறது. எனவே பி.ஜே.பி மத்தியில் இருக்குமாயின், 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துதல் மற்றும் தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் பி.ஜே.பி பெரியளவு ஆர்வம் காண்பிக்க மாட்டாது என்பதே கொழும்பின் கணிப்பாக இருக்கின்றது.

இவ்வாறானதொரு கணிப்பை முன்னிறுத்தியே கொழும்பு பி.ஜே.பியுடன் நெருங்கிச் செல்கிறது. கொழும்பின் தந்திரோபாயத்தை துல்லியமாக மதிப்பிட்டே, சம்பந்தனும் பி.ஜே.பி தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கின்றார். சம்பந்தனின் மேற்படி சந்திப்பு ஆளும் காங்கிரஸ் தரப்பிற்கு கோபத்தை ஏற்படுத்துமா? இப்படியொரு கேள்வி எழுவது இயல்பு. ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவிற்கு ஒரு காத்திரமான பங்குண்டு. ஆனால், அதனை இந்தியாவின் கட்சி அரசியலுக்குள் முடக்கவேண்டிய அவசியம் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. எனவே, இந்தப் பின்னணியில், இந்தியாவிலுள்ள சகல கட்சிகளின் தலைவர்களுடனும் கூட்டமைப்பு பேச வேண்டியதும், உறவுகளை பேண வேண்டியதும் அவசியமான ஒன்றாகும்.

அந்தவகையில் சம்பந்தனின் மேற்படி காய்நகர்த்தல் காலப் பொருத்தம் கருதிய ஒன்றாகவே இருக்கிறது. அரசாங்கத்திற்கு இருக்கும் இராஜதந்திர வாய்ப்புக்கள் கூட்டமைப்பிற்கு இல்லாவிட்டாலும் கூட, முடிந்தவரை கொழும்பின் இராஜதந்திர நகர்வுகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலாவது, கூட்டமைப்பு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. விக்னேஸ்வரன் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் பதவியேற்பின் போது ஆற்றிய உரையில், நரேந்திர மோடியின் வாசகங்களை மேற்கோள் காட்டி பேசியதும், தற்போது சம்பந்தன் தமிழ் நாட்டின் பி.ஜே.பி தலைவர்களை சந்தித்து பேசியிருப்பதும், ஓர் அழுத்த வகை இராஜதந்திரமாகவே நோக்கப்பட வேண்டும். இவ்வகையான அணுகுமுறை கொழும்பின் நடவடிக்கைகளை தடுமாற்றத்திற்குள்ளாக்கும். மேலும், கொழும்பை புதிதாக யோசிக்குமாறு நிர்ப்பந்திக்கும் அரசியல் அணுகுமுறைகளாகவே இப்பத்தி கணிக்கின்றது.


http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=b00c9316-52e1-4272-8770-2aede3acabd1

தமிழ் மக்களின் அழிவில் இன்பம் காண விழையும் இந்திய அதிகாரவர்க்கத்தின் பிடி இருக்கும் வரை ஆட்சி மாற்றம் ஒன்றும் ஈழத்தமிழர் பிரச்சனையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை என்பது சாதாரண சராசரி அரசியல் அறிவு கொண்ட சாமான்ய  மக்களுக்கே வெள்ளிடை மலையாக தெரியும் நிலையில் இதை  ஒரு பெரிய விடயம் என்று  ஆராய புறப்பட்ட்டுவிட்டார் இந்த எல்லாம் தெரிந்த மேதை என தன்னை தானே நினைத்துக்கொள்ளும் ஜதீந்திரா. தமிழ் மக்களின் இக்கட்டான இன்றைய நிலையை வைத்து தமிழ் மக்களை பிளாக் மெயில் பண்ணும் இந்த ஜதீந்திரா போன்ற ஆய்வாளர்கள் தமிழ்மக்களிற்கு கிடைத்த சாபங்களில் ஒன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.