Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் முகத்தில் கரிபூசலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பரிலிருந்து

'உரலுக்கு ஒருபக்கம் இடி தவிலுக்கோ இரண்டுபக்கமும் அடி' என்பார்கள்.  நமது வட மாகாண் முதலமைச்சருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.  ஒரு பக்கம் சிங்களப் பேரினவாதிகள் அவரது நடவடிக்கைகளை கண்கொத்திப் பாம்புகள் போல அவதானித்துச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்மீது விஷத்தை உமிழந்து எப்பாடுபட்டாவது வடமாகாணசபையைச் சீரழித்துவிட வேண்டுமென்று கங்கணம்கட்டி நிற்கிறார்கள்.  மறுபுறமோ அவரது அணிக்குள்ளும் அதற்கு வெளியிலுமுள்ள அவரது எதிரிகள் எப்போது அவர் தமிழ்த் தேசியவாதத்துடன் முரண்படுவார்  தூக்கிச் சாப்பிடுவதற்கு, என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.  இந்த இரண்டு இக்கட்டான சூழ்நிலைகளுக்கும் மத்தியில் தமிழரின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து அதேவேளை  பேரினவாதச் சிங்களவர்களின் கொடிய விஷமத்தனங்களுக்கும் ஈடுகொடுத்து மாகாணசபையை வழிநடத்திச் செல்ல வேண்டிய பெரும் சுமை அவரின்மேல் சுமத்தப்பட்டிருக்கிறது.  'கரணம் தப்பினால் மரணம்' என்பது போலத்தான் வடமாகாண சபைக்கும் முதலமைச்சரின் அரசியல் ஆளுமைக்கும் விதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பொது நலவாய நாடுகளின் தலைவர்கள் மகாநாட்டிற்கு யாழ் முதலமைச்சர் போகக்கூடாதென்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இது அவரது சுயசிந்தனையின் அடிப்படையிலான தீர்மானங்களையெடுக்கும் தலைமைத்துவப் பண்புகளுக்கு மிகப்பெரிய சவாலாகவே தோன்றுகின்றது.  இதற்கிடையில் இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைத் தமிழர்களின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே மாகாநாட்டில் இந்தியா தனது பங்களிப்பைச் செய்யுமென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

இந்தியாவை மகாநாட்டில் பங்குபற்றவிடாமல் தடுக்கும் பொறுப்பை இலங்கையின் உள்ள10ர் மாகாணசபையொன்று தன்கையிலெடுப்பதும் அதனைச் சாதித்து முடிப்பதும் இலங்கைக்கு மிகப்பெரிய அவமானத்தையும் இழப்புகளையும் தரும் விடயங்களாகும்.  கொழும்புடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தித் தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பெற்றுத்தரவேண்டிய முதலமைச்சரின் பாரிய பொறுப்புகளுக்கு இந்த மகாநாட்டு விவகாரம் பெரிய தடங்கல்களை உருவாக்ககூடிய சூழ்நிலையே ஏற்பட்டு வருகிறது.  கொழும்பு மகாநாடு பிசுபிசுத்துப் போகும்போது அதற்கான பொறுப்பு தமிழர்களினதும், வடமாகாண சபையினதும்,  குறிப்பாக அதன் முதலமைச்சரினதும் தலையிலேயே விழ வாய்ப்பிருப்பதால் எதிர்காலத்தில் கசப்புணர்வுகள் அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது போய்விடும்.  ஆனால் அதேவேளை எமது தொப்பூழ்க் கொடி உறவுகளான தமிழக மக்களின் முகத்தில் கரியைப் பூசுவது போல, தமிழக சட்டசபையின் ஏகோபித்த தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டை இலங்கைத் தமிழர்கள் எடுத்து மகாநாட்டில் இந்தியப் பங்களிப்பை ஆதரிப்பதும் சரியான வழிபோலத் தோன்றவில்லை.

இந்தியப் பிரதமர் வருவாரா? என்ற கேள்விக்கு 'அவர் வருவார் ஆனா வரமாட்டார்' என்ற தமிழ் சினிமாக்களில் வரும் காமடி டயலாக் போன்ற பதிலே தற்போதைக்குக் கிடைக்கக் கூடியதாயிருக்கிறது.  தமிழகத்தின் ஆறுகோடி மக்களின் உணர்வுகளுக்கெதிராகச் செயற்படமுடியாமல் இந்தியா என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறது.  இந்தியப் பிரதமரே மகாநாட்டைப் பகிஷ்கரிப்பதா வேண்டாமா என்ற திரிசங்கு நிலையிலிருக்கிறார்.  அப்படியிருக்கையில், உலகின் ஏழுகோடித் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காது மகாநாட்டிற்கு ஆதரவைக் கொடுத்துப் பங்கேற்கவும் வேண்டிய கட்டாயநிலை வடக்கின் முதல்வருக்கும் இல்லை. இலங்கையரசு அவரை அந்த அளவுக்கு எதிர்பார்க்கவும் முடியாது. 'சுட்ட மண்ணும் களிமண்ணும் ஒட்டாது' என்பார்கள்.  அந்தநிலைதான் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

சுதந்திரமடைந்ததிலிருந்து இன்றுவரை தாங்கள் ஓர் சுயாதிபத்தியம் கொண்ட நாட்டின் தலைவர்கள் என்ற மமதையில் சிங்களப் பேரினவாதிகள் அனைவரும் இந்திய மத்திய அரசோடு தங்கள் தொடர்புகளைப் பேணிக்கொண்டு தமிழகத்தின் ஆறுகோடித் தமிழர்களையும் அவர்களது தலைவர்களையும் மதிக்காது செயற்பட்டிருக்கிறார்கள். தற்போதும் செயற்படுகிறார்கள். இது, இலங்கையிலுள்ள இந்திய வம்சா வழியினரையும், இலங்கைத் தமிழர்களையும் அவமதிக்கும் செயலாகவே காணப்படுகின்றது.  அறிஞர் அண்ணா மறைந்தபோது அவருக்காகக் கொண்டுவரப்பட்ட இரங்கல் தீர்மானத்தைக்கூட சிங்களப் பெரும்மையைக் கொண்ட பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அண்ணாவோ, கலைஞர் கருணாநிதியோ ஈழத்தை எட்டிப்பார்க்கவில்லை.  எம்ஜிஆர் தமிழகத்தின் தலைவரான பிறகு இலங்கையரசால் வரவேற்கப்படவேயில்லை.  நடிகராயிருந்த போதுதான் அவர் அங்கு சென்றிருக்கிறார்.  தற்போதைய தலைவி அம்மா ஜெயலலிதாவிற்கும் இதே நிலைதான்.  மேலும், தமிழகத்தில் இந்தியத் தேசிய காங்கிரஸ் இன்று வரை தாக்குப் பிடித்து நிற்பதற்குக் காலாயிருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவர், தனக்குக் கிடைக்க விருந்த இந்தியாவின் பிரதமர் பதவியைக் கூடத் தனது அறிவுநிலை அதற்குப் பேதாதென்று ஒதுக்கியவர்.  'கிங்மேக்கர்' என இந்திய அரசியலில் மதிப்புடன் அழைக்கப்பட்டவர். அவருட்பட,  பக்தவத்சலம், சத்தியமூர்த்தி போன்ற  மத்திய அரசில் செல்வாக்குப் பெற்றிருந்த தமிழ்த் தலைவர்களுக்கும் அவர்கள் தமிழர்களென்ற காரணத்தால் உரிய கௌரவத்தைச் சிங்களம் வழங்கியதாகத் தெரியவில்லை. அவர்கள் யாரும் இலங்கைக்குத் அரசவிருந்தினர்களாக வந்து போனதாகவோ இலங்கையால் வரவேற்கப்பட்டதாகவோ தகவலில்லை.  

சிங்களப் பேரினவாதிகளுக்கு தமிழகத்தின் மீதிருந்த காழ்ப்புணர்வு அவர்களைத் தமிழர் தலைவர்களை மதித்து நட்புப் பூணும் அளவுக்குக் கொண்டு செல்லவில்லை. தமிழகத்தில் திராவிட இயக்கமும் பின்னர் திமுக போன்ற தேசியக் கட்சிகளும் வலுப்பெற்று வேரூன்றியதும் இலங்கையின் சிங்களப் பேரினவாதிகளுக்குத் தமிழகத் தலைவர்களைப் புறந்தள்ள ஓர் வாய்ப்பைக் கொடுத்துவிட்டது. தமிழகத்தில் எழுந்த இந்தி எதிர்ப்பு அலையினால் வெறுப்படைந்த இலங்கையின் சிங்களம் மட்டும் கோட்பாட்டாளர்கள் தமிழக திமுக தலைவர்களை அடியோடு வெறுத்துத் தமது எதிரிகளாகவே பாவித்தார்கள். இலங்கையில் வளர்ச்சியடைய முனைந்த திமுகவை தடைசெய்து தங்கள் காழ்ப்புணர்வை அவர்கள் மேலும் வெளிப்படுத்தினார்கள். இதனால் ஒரு சுமுகமான உறவுநிலை கொழும்புக்கும் சென்னைக்குமிடையில் உருவாகக்கூடிய வாய்ப்புகள் அடியோடு அருகிப்போய் விட்டன. கன்னடர்களுக்கும், தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும் உருவாகாத இந்தக் காழ்ப்புணர்வு சிங்களவர்களுக்கு மட்டும் உருவானதற்கு ஒரே காரணம் பாக்குநீரிணைதான். இலங்கை மட்டும் இந்தியத் தீபகற்பத்தின் நிலப்பரப்பிற்குள் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.  
 
ஆனால் துரித கதியில் நடைபெற்றுவிட்ட உலகமயமாக்கல் தற்போது இந்த எல்லைகளையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டது. இன்று சிங்களப் பேரினவாதிகளுக்கு, அவர்கள் நெடுங்காலமாகத் தமிழர் தலைவர்கள்மீது காட்டிவந்த காழ்ப்புணர்விற்கான அறுவடை கிடைக்க ஆரம்பித்துவிட்டது.  

இந்தியாவின் அபிவிருத்தியில் பெரும்பங்கினை ஆற்றிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் அப்போதைக்கப்போது ஆட்சிக்கட்டிலிலேறும் மக்கள் பிரதிநிதிகள் ஓர் வளர்ச்சியடைந்த மாநிலத்தின் தலைவர்களாகப் பரிணமித்திருக்கிறார்கள்.  இனி அவர்களுக்கு தமக்கு எட்டும் தூரத்திலுள்ள இலங்கை போன்றவோர் அபிவிருத்தி குன்றிய நாட்டின் வரவேற்பையோ, மதிப்பையோ, மரியாதையையோ எதிர்பார்த்து நிற்கவேண்டிய கட்டாயம் இருக்கப் போவதில்லை.  தங்களை மதிக்காத இலங்கையை இந்திய மத்திய அரசு தனது பிராந்திய நலன்களுக்காக மரியாதையுடன் நடத்த முற்பட்டாலும் அந்த நட்புறவைக் குழப்பியடிக்க மாநிலத் தலைவர்கள் தயங்கப் போவதில்லை.

வளர்ச்சியடைந்து வரும் அரசியல் ஜனநாயகப் பண்புகளில் மத்திய அரசு மாநில அரசு என்ற ஏற்றத் தாழ்வுகள் அடிபட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன.  மாநிலம் இன்றைய ஜனநாயக வளர்ச்சியில் மத்தியின் பிரித்துப் பார்க்க முடியாத பங்காகிவிட்டது.  குறிப்பாக, அதிகரித்த மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களின் தலைவர்கள் மத்திய தலைவர்களுக்குச் சமமான தகுதிகளுடன் மதிக்கப்பட வேண்டியவர்கள். யாரும் யாருக்கும் குறைந்தவர்களல்ல.  இதனைச் சிங்களப் பேரினவாதிகள் அந்தக்காலத்திலேயே உணரத் தவறிவிட்டதால் இந்திய மத்திய அரசே தங்களுக்கு முக்கியம் என்ற ரீதியில் சிந்தித்து தமிழர் தலைவர்களை அலட்சியம் செய்து கொண்டே வந்திருக்கிறார்கள்.  இன்று, புரையோடிப் போய்விட்ட புண்ணைப்போல இலகுவில் ஆற்ற முடியாததாக  தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்குமிடையேயான கீறல் விழுந்துவிட்டது.  இந்தக் கீறலாலும் இலங்கைப் பேரினவாதிகளின் அவமதிப்புகளாலும் நொந்து போயிருக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் எமக்கு நேர்ந்த அவலங்களையும் எமக்குக் கிடைக்க வேண்டிய அரசியல் உரிமைகளையும் கருத்திற்கொண்டு ஏகமனதாக இந்திய அரசு மகாநாட்டைப் புறக்கணிக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்கள்.  அதற்கு எதிரான நிலைப்பாட்டை ஈழத்தமிழர்களாகிய நாம் எடுப்பது சரியா? என்பதே இன்றுள்ள முக்கிய கேள்வியாயிருக்கிறது.

'அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்டது' போல, எம்மை மதித்து எமக்காக இந்திய மத்திய அரசுடனேயே மோதிக் கொண்டிருக்கும் எமது தமிழ்நாட்டுத் தொப்பூழ்க் கொடி உறவுகளை நாம் அலட்சியப் படுத்த முடியாது.

இந்தப் பத்தியில் இதற்கு முன்னரான அத்தியாயங்களில் கள்வனுக்கு விதானை வேலை கொடுத்தால் அவன் திருந்த இடமுண்டு என்ற அணுகுமுறையில், இலங்கையில் நடைபெறப் போகும் காமன்வெல்த் உச்சி மாநாட்டை ஆதரித்து எழுதப்பட்டது.  ஆனால் தற்போதைய நிமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது அந்தக் கருத்துச் சரியானதாகப் படவில்லை.  தமிழகம் எமக்காகத் தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறது.  நாம் தாய்த் தமிழகத்தின் முகத்தில் கரிபூச முடியாது.  மகாநாட்டைப் புறக்கணித்து எமது தாய்த் தமிழகத்துடனான உறவுகளை மேம்படுத்தி பாக்கு நீரிணையின் இரு புறங்களிலுமுள்ள தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுப்பதே இன்று எமக்கு முன்னுள்ள பணியாகும்;.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.