Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூனியக்காரியின் தங்கச்சி (சிறுகதைகள்)அ. முத்துலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் புதன் கிழமை என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று ஒருவரும் சாகவில்லை.  ஏறக்குறைய ஆறுமாதத்தில் ஆக அதிர்ஷ்டம் கூடிய நாள் அதுதான். வழக்கமாக நாளுக்கு ஒன்று, இரண்டு, ஐந்து, பத்துப்பேர் என செத்துக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் தீர்மானித்தேன். எப்படியாவது நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று.’ அகதி ஒரு நாற்காலியில் கைப்பிடிகளில் முட்டாமல் நடுவே ஒடுங்கி உட்கார்ந்திருந்தான். அமண்டா ஒரு சோபாவில் காலை நீட்டியபடி அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

ரொறொன்ரோவின் லொப்லோஸ் சுப்பர்மார்க்கெட்டுக்கு முன்னே அவனை அமண்டா சந்தித்தாள். அவனுக்கு 25 வயது இருக்கும். ஒரு விளம்பரத் துண்டை அவளிடம் நீட்டினான். அசிரத்தையாக அதைப் படித்தபோது அதில் இப்படி எழுதியிருந்தது. ’நான் ஓர் அகதி. உங்கள் வீட்டு பராமரிப்பு வேலை, தோட்ட வேலை, கார்ப்பாதை பழுதுபார்க்கும் வேலை சகலதையும் மலிவு விலைக்கு என்னால் செய்யமுடியும்.’ அமண்டா வீட்டில் திருத்த வேலைகள் நிறைய இருந்தன. அகதியிடம் வீட்டு முகவரியை கொடுத்து அடுத்தநாள் வரச்சொன்னாள். சுவர்களுக்கு வர்ணம் பூசவேண்டும். குறித்த நேரத்துக்கு அவன் வந்தான். அவன் கையிலே வேலைக்கான உபகரணங்களும் வாயிலே வினோதமான கதைகளும் இருந்தன. அவளுக்கு அவனை பிடித்துக் கொண்டது.  

 

பல நாட்கள் அகதி அமண்டா வீட்டில் வேலை செய்தான். தனக்குள் பேசிக்கொண்டு அடிக்கடி சிரிப்பான். அவன் சிரிக்கும்போது கண்கள் மறைந்துவிடும். கார் பாதையை செப்பனிட்டான். தோட்ட வேலை செய்தான். ஒருநாள் அமண்டா புத்தக அலமாரி வேண்டும் என்றாள். அந்த வீட்டில் புத்தக அலமாரிகள் பல இருந்தாலும் எல்லாமே நிறைந்துவிட்டதால் புத்தகங்கள் நிலத்திலே குவிந்து கிடந்தன. அவள் நிறையப் படித்தாள். அலுவலகமே போவதில்லை. மீதிநேரம் கணினியில் தட்டச்சு செய்தாள். மரங்கொத்திகள்  கொத்துவதுபோல 102 விசைகளில் அவள் விரல்கள் வேகமாக ஓடின. இடைக்கிடை அவன் வேலை செய்வதைப் பார்வையிட்டாள். அளவெடுத்து பலகைகள் வாங்கி செய்த அலமாரி அவளுக்கு  பிடித்துக்கொண்டது. இப்படி வாரத்தில் மூன்று நாலு நாட்கள் அகதி தொடர்ந்து வேலை செய்தான்.

 

ஒரு நாள் அகதி ‘மாம், ஓர் உதவி செய்யமுடியுமா?’ என்று கேட்டான். அவளுக்கு ஆச்சரியமாகவிருந்தது. அவன் கேள்வி கேட்பதில்லை; பதில் கூறித்தான் பழக்கம். ’என்ன?’ என்றாள். அவனுக்கு ஒரு கடன் அட்டை தேவை. வங்கி அவனுடைய விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. அவள் உத்திரவாதம் கொடுத்தால் அவனுக்கு கடன் அட்டை கிடைக்கக்கூடும். அமண்டா அவனுடன் சென்று வங்கி மனேஜரை சந்தித்து வைப்பு நிதியாக 500 டொலர் அவன் பெயரில் கட்டினாள். வங்கி கடன் அட்டை கொடுத்தபோது அவன் அடைந்த மகிழ்ச்சியை வர்ணிக்க முடியாது. ‘மாம், இந்த நாளை நாம் கொண்டாடவேண்டும். ஒரு கோப்பி என்னுடன் சாப்பிட முடியுமா?’ என்றான். அவளும் சம்மதித்தாள். கோப்பிக் காசை கடன் அட்டைமூலம் தீர்த்தான். அவன் முகத்தில் தோன்றிய பெருமை அவளை அதிசயிக்க வைத்தது.

 

‘நீ எப்படி அகதியாக இங்கே வந்து சேர்ந்தாய்?’ என்று அமண்டா கேட்டாள். ‘என் நாட்டில் பல வருடங்களாகப் போர் நடக்கிறது. நான் ஆறு வருடங்கள் போரில் சண்டை பிடித்தேன். நாளுக்கு குறைந்தது ஒரு சாவு நிச்சயம். ஒரு கட்டத்தில் துணிந்து கள்ள பாஸ்போர்ட் எடுத்து நல்ல எதிர்காலம் தேடி கனடாவுக்கு வந்தேன். என் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. இப்போ வழக்கறிஞர் அப்பீல் செய்திருக்கிறார்.’

 

அமண்டா அவன் முகத்தை புது பிரமிப்புடன் பார்த்தாள். அதில் திருத்துவதற்கு ஒன்றுமே இல்லை. அத்தனை லட்சணமாக இருந்தது. அவள் பார்வையை தாங்கமுடியாமல் அவன் மெள்ளச் சிரித்து தலை குனிந்தான். ஒட்டவெட்டிய தலை மயிர். கைகளை அசைக்கும்போது தானாகவே உருண்டு திரளும் புஜங்கள். ஒடுங்கிய வயிறு. அவன் அணிந்திருந்த ஜீன்சும், வர்ணம் உதிர்ந்த ரீசேர்ட்டும் உடலுடன் உச்சமாகப் பொருந்தியிருந்தன. அவன் ஒரு போர்வீரன்தான் என்பதில் அவளுக்கு ஒருவித சந்தேகமும் இல்லை.

 

’நீங்கள் யார், மாம்?’

‘சூனியக்காரியின் தங்கச்சி.’

‘வேடிக்கை வேண்டாம், மாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கம்புயூட்டர் முன்னே எப்பவும் உட்கார்ந்திருக்கிறீர்களே. அதுதான் உங்கள் வேலையா?’

‘நான் ஒருபதிப்பகத்தில் வேலை செய்கிறேன். அவர்களுக்கு எழுத்தாளர்கள் அனுப்பும் அச்சுப் பிரதிகளை படித்து அபிப்பிராயம் சொல்வது என் வேலை. நான் நல்லது என்று சொன்னால் மட்டுமே அவர்கள் பிரசுரிப்பார்கள். மீதி நிராகரிக்கப்படும்.’

’அப்படியா? உங்கள் வேலை சுவாரஸ்யமானதுதான். நல்ல நல்ல நாவல்களை இலவசமாகப் படிக்கலாம். அதற்கு சம்பளம் தருவார்கள். இதுவல்லவோ வேலை.’ என்றான்

‘அப்படிச் சொல்லமுடியாது. சில நாவல்களை படிக்க முடியாது. அவ்வளவு மோசமாயிருக்கும். படித்து முடிப்பது எனக்கு பெரிய தண்டனை. ஆனால் இந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்களே அவர்கள் எல்லோருமே தாங்கள் பெரிய படைப்பைச் செய்துவிட்டதாகவே நினைக்கிறார்கள்.’

‘சமீபத்தில் ஏதாவது நல்ல நாவல் படித்தீர்களா, மாம்?’

’நேற்று ஒரு நாவல் வந்தது. அதைப் படித்தபோது உன்னை நினைத்தேன். ஓர் அகதியை பற்றிய கதை அது.’

‘அப்படியா? சொல்லமுடியுமா, மாம்.’

 

‘லாட்வியா நாட்டிலிருந்து ஓர் அகதி அமெரிக்காவுக்கு வருகிறான். அவனுக்கு ஒரு தொழிலும் தெரியாது. எந்த வேலைக்கு போனாலும் அவனால் இரண்டு நாட்களுக்கு மேல்தாக்குப்பிடிக்க முடியாது. ரோட்டு வேலை. சமையல் உதவி வேலை. பெரிய பெரிய அங்காடிகளில் பெட்டிகள் அடுக்கும் வேலை. ஒன்றுமே சரிவரவில்லை. மாதத்தில் பத்து நாட்கள் வேலை செய்து ஒருவாறு பிழைத்துக் கொள்கிறான். ஒருநாள் பெரிய பெட்டி ஒன்றை முதலாளி ஒரு செல்வந்தர் வீட்டுக்கு சென்று கொடுத்துவரச் சொல்கிறார். அப்போது இரவு மணி 12 ஆகிவிடுகிறது. ஆனால் அவர் இப்போதே அதைக் கொடுக்கவேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார்.

 

அவன் பெட்டியுடன் அந்த வீட்டுக்கு போகிறான். செல்வந்தர் மிகப் பெரிய மாளிகை ஒன்றில் தனியாக வசிக்கிறார். மெல்லிய வெளிச்சத்தில் ஒரு கிளாசில் பொன்னிற வைன் அருந்திக்கொண்டிருந்தார். பெட்டியை வாங்கினாரே ஒழிய திறந்து பார்க்கவில்லை. அதி உற்சாகமாக இருக்கிறார். ஒரு கிளாஸ் வைன் குடிக்கும்படி கேட்கிறார். இவன் சம்மதித்து உட்காருகிறான். ஒரு மிடறு பருகிவிட்டு ‘ஆ, அமரோனே ரிப்பஸ்ஸா’ என்று வைனின் பெயரை சொல்கிறான். செல்வந்தர் ஆச்சரியப்படுகிறார். உனக்கு வைனைப்பற்றி தெரியுமா என்கிறார். ஏதோ கொஞ்சம் தெரியும் என்று பதில் சொல்கிறான்.  செல்வந்தர் தன் வீட்டின் குளிர் கிடங்குக்குள் போய் இன்னொரு விலையுயர்ந்த வைனைக் கொண்டு வருகிறார். அதில் ஒரு வாய் குடித்து சிறிது யோசித்துவிட்டு ‘போர்டியோ, சவல் ப்ளாங் – 1998’ என்கிறான். செல்வந்தரால் நம்பமுடியவில்லை. ஆனந்தத்தில் அவனை அப்படியே கட்டிக்கொள்கிறார். அன்றே அவனுக்கு அவருடைய தொழிற்சாலையில் வேலை கிடைக்கிறது.

 

அவன் வேலையில் படிப்படியாக உயர்ந்து ஒருநாள் முதலாளியின் கம்பனியில் பங்குதாரர் ஆகிறான். அத்துடன் நிற்காமல் முதலாளியின் மனைவியை அவருக்கு தெரியாமல் காதலித்து மணமுடிக்கிறான். அத்துடன் கதை முடிகிறது. வாழ்நாள் முழுக்க அவனுடைய துரோகம் அவனை வாட்டுகிறது. அவனால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. திருப்பி திருப்பி அவனை சுற்றி ஒரு கேள்வி எழும்.  அந்த நடு இரவு செல்வந்தரை அவன் சந்தித்திருக்காவிட்டால் அவன் வாழ்க்கை என்னவாகியிருக்கும்? அவனால் விடையை கண்டு பிடிக்க முடியவில்லை.

 

’துயரமான கதை’ என்றான் அகதி. அவள் சொன்னாள். ’துயரமானது அல்ல. துரோகமான கதை. எல்லோருடைய வாழ்விலும் ஒரு துரோகமாவது இருக்கும். துரோகம் செய்தவன் மறக்கவேண்டும். செய்யப்பட்டவன் மன்னிக்கவேண்டும்.’

அகதி தயங்கியபடி கேட்டான். ’மாம், உங்கள் வாழ்க்கையில் ஏதாவது துரோகம் இருக்கிறதா? நீங்கள் ஏன் மணமுடிக்கவில்லை?’

‘நானும் மணம் முடித்தவள்தான். என் கணவர் முதல் மனைவியை விலக்கிவிட்டு என்னை மணமுடித்தார். பத்து வருடம் ஒன்றாக வாழ்ந்தோம். கூடப் பிறந்த என் அக்கா ஒருநாள் என்னைப் பார்க்க வந்தாள். சில நாட்கள்தான். என் கணவர் என்னை விட்டுவிட்டு அவளை இழுத்துக்கொண்டு போனார். இப்பொழுது அவர்கள் மணம் செய்துகொண்டு விட்டார்கள். திருமணம் நல்ல விசயம்தான். ஆனால் அதுவே பழக்கமாகக் கூடாது.’

அவன் பதில் சொல்லவில்லை. அதற்கு அவள் பதில் பேசவில்லை. அவனும் பதில் சொல்லவில்லை. அவளும் பதில் பேசவில்லை.

 

சமையல் அறையில் மார்பிள் கற்கள் பதிக்கவேண்டும் என அவள் திட்டமிட்டாள். உண்மையில் அது அவசியமாக இருக்கவில்லை. செய்தால் அழகாயிருக்கும் என நினைத்தாள். அத்துடன் அவனுக்கு ஏதாவது வேலை கொடுத்தால்தானே அவனால் வீட்டுக்கு வரமுடியும். வீட்டில் இருந்த எல்லா வேலையும் முடிந்துவிட்டது. அவன் பக்கத்தில் இருந்து பழகிவிட்டது. அவனைப் பார்க்கவேண்டும் போல தோன்றியது. ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவனிடம் கைபேசி இல்லை. அவள் அழைக்க முடியாது. அவனாகக் கூப்பிட்டால்தான் உண்டு. ஒவ்வொரு நிமிடமும் அவனிடமிருந்து வரும் தொலைபேசிக்காகக் காத்திருந்தாள்.

 

கடைசியில் அவனுடைய தொலைபேசி வந்தபோது அவளுக்கு அடக்க முடியாத கோபம் அவன்மேல் இருந்தது. ’உடனே வா, வேலை இருக்கிறது’ என்றாள். ’என்ன வேலை, மாம்?’ ’சமையலறையில் மார்பிள் கல் பதிக்கவேண்டும்.’ ’எனக்கு அந்த வேலை தெரியாது, மாம்.’ ’எனக்கும் தெரியாது, உடனே வா’ என்றாள். அவன் வந்து அவளைப் பார்த்து திடுக்கிட்டான். ஒரு விருந்துக்கு போவதுபோல அலங்காரம் செய்திருந்தாள். நட்சத்திரம்போல கண்கள் மின்னின. முகத்துக்கு ஒப்பனை செய்து உதட்டுக்குச் சாயம் பூசி, தலைமுடியை செப்பனிட்டு பார்க்க கவர்ச்சிகரமாகத் தெரிந்தாள். அவனைக் கண்டதும் பெரிதாகச் சிரித்து ’ஆ வந்துவிட்டாயா? நான் மார்பிள் கல் பதிப்பதை பார்த்திருக்கிறேன். இதில் ஒன்றும் பெரிய நுட்பம் கிடையாது. நான் உதவி செய்கிறேன்’ என்றாள். அவளைப் பார்த்த பிரமிப்பில் இருந்து அவன் விடுபட முயன்று கொண்டிருந்தான்.

 

அமண்டா ஒவ்வொரு கல்லாக எடுத்துக் கொடுத்தாள். அவளுடைய வழுவழுப்பான முழங்காலில் உட்கார்ந்திருந்தாள். அவள் சொல்லிக்கொடுத்தபடி அவன் பதித்துக்கொண்டே வந்தான். இடது கையால் வாங்கி இடது கையால் பதித்தான். ’நீ இடது கைக்காரனா?’ என்றாள். தலையாட்டினான். அவன் ஏதாவது தவறு செய்தால் அவன் முதுகிலே செல்லமாகத் தட்டினாள். அவனுக்கு அது பிடித்திருந்தது. ஒன்றிரண்டு தவறுகளை வேண்டுமென்றே செய்தான். நடுப்பகுதிக்கு வந்தபோது அழகான பூ வேலைப்பாடு செய்த கல்லைத் தந்தாள். அவன் பதித்துவிட்டு நிமிர்ந்து நின்று தன்னுடைய வேலையின் அழகை இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் தலையை சரித்துப் பார்த்தான். அவள் ஆனந்தத்தில் பூரித்தாள். ’நீ நல்ல வேலைக்காரன்’ என்று சொல்லி கன்னத்திலே முத்தம் ஒன்று கொடுத்தாள். அன்று வேலை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

 

படுக்கையறையில் அவளுக்கு இன்னொரு ஆச்சரியம் கிடைத்தது. அவன் தோள்மூட்டில் அதன் உறுதியான அழகை கெடுப்பது போல ஒரு பெரிய காயத்தை மோசமாக தைத்த வடு. ’அது என்ன வடு?’ என்றாள். ’போரின்போது எதிரியின் குண்டு தோள்மூட்டை துளைத்துப் போனது. அது ஆழத்தில் இன்னமும் கிடக்கிறது. மருத்துவர் அதை எடுப்பது ஆபத்தானது, அங்கேயே இருக்கட்டும் என்று சொன்னார். அப்படியே அங்கே தங்கிவிட்டது.’ அமண்டா வடுவில் முத்தமிட்டாள். அன்றிரவு அவனை அங்கேயே தங்கிவிடும்படி வேண்டினாள். ’இல்லை, மாம். நான் உங்கள் வேலைக்காரன்’ என்றான். ’மாம், என்று சொல்லாதே. அமண்டா என்று கூப்பிடு.’ ’சரி மாம்’ என்றான். அவள் தலையை பின்னே சரித்து சிகரெட் புகையை ஊதுவதுபோல அவன் கழுத்து பள்ளத்தில் ஊதினாள். அவன் கூச்சத்தில் நெளிந்தான்.

 

அகதி பகலில் வந்தான்; சில நாட்கள் இரவில் வந்து தன் நாட்டுச் சமையலை செய்தான். பின்னர் இருவரும் சாப்பிட்டார்கள். அடிக்கடி சிரித்தபடி இருப்பவன் அன்று  சிரிக்கவே இல்லை. ஏதோ துக்கமாக இருந்தான். அவள் என்னவென்று கேட்க அவன் மழுப்பினான். அமண்டா விடவில்லை. அவன் சொன்னான். ‘கனடாவின் ஜூன் 2012 புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. அது அகதிகளுக்கு எதிரானது. ஒரு வழக்கு அப்பீலில் இருக்கும்போதே அரசாங்கம் சம்பந்தப்பட்ட அகதியை நாடு கடத்தலாம். வழக்கறிஞர் எனக்கு அச்சமூட்டுகிறார்.’ அவள் சொன்னாள். ‘கனடாவின் சட்டங்கள் ஆமை வேகத்தில் நகரும். உன்னுடைய இலக்கம் வரமுன்னர் நீ கனடாவின் குடிமகனாகிவிடுவாய்.’ முழு வாயை திறந்து நம்பிக்கையாக  ’அப்படியா?’ என்றான். அவன் மகிழ்ச்சியில் சிரித்தபோது கண்கள் மறைந்துவிட்டன.  அவளும் சிரித்தாள். மறுபடியும் அவன் சிரித்தான். அங்கே ஏதோ சிரிப்பு போட்டி நடைபெறுவதுபோல இருவரும் மாறி மாறி சிரித்தார்கள்.

 

அவளுடைய ஐந்து சிநேகிதிகள் இரவு விருந்துக்கு வந்திருந்தார்கள். அமண்டா அடிக்கடி விருந்து கொடுக்கும் பெண் அல்ல. ஆனால் அன்று அவள் மனம் மிதந்தபடி இருந்தது. தன் மகிழ்ச்சியை சிநேகிதிகளுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என நினைத்தாள். அன்று காலையிலிருந்து சமையலறையில் அவதானமாகச் சமைத்தாள். அன்றைய உணவில் மீன் கறி இருந்தது. அவளுடைய அகதிக் காதலன் சொல்லிக்கொடுத்த மாதிரியே செய்தாள். முதன்முதலாக கறியில் பழப்புளி பாவித்திருந்தாள். அப்படி ஒன்று இருப்பதே அவளுக்குத் தெரியாது. ருசி பார்த்தபோது அற்புதமான சுவையாக இருந்தது. மேசையில்  ஆறு பிளேட்டுகளையும், நாப்கின்களையும் அலங்காரமாக வைத்தாள். பின்னர் கத்தி கரண்டிகளையும் ஒழுங்காக அடுக்கினாள். மேசையில் மின்னூட்டத்தில் கிடந்த செல்பேசியை எடுத்துப் பார்த்தபோது நாலு குரல் அஞ்சல்கள் கிடந்தன. ‘இன்றுதான் நாள் என்று வழக்கறிஞர் கூறுகிறார். உங்கள் குரலை கடைசித் தடவையாக கேட்கலாம் என ஆசையாகவிருந்தது. அதுகூட நிறைவேறவில்லை. தபால் பெட்டியை பாருங்கள். போய் வருகிறேன்’ அவன் குரல் கேவியது போலபட்டது.

 

அவள் தபால்பெட்டியை திறந்து பார்த்தாள். ஒரு கடித உறையில் 500 டொலரும் ஒரு துண்டுக் கடிதமும் இருந்தன. தப்பான ஆங்கிலத்தில் இப்படி எழுதியிருந்தான். ‘இன்றைக்கு என்னை அவர்கள் கைது செய்ய வரக்கூடும். ஏழுமணி விமானத்தில் என்னை நாடு கடத்துவார்கள். நீங்கள் கொடுத்த 500 டொலரை திருப்பியிருக்கிறேன். என் நாட்டில் எனக்கு என்ன நடக்குமோ தெரியாது. என்னை அவர்கள் சிறையில் அடைக்கலாம். சித்திரவதை செய்யலாம். ராணுவத்தை விட்டுவிட்டு கள்ளமாகத் தப்பி ஓடிய துரோகி என்றே பட்டம் சூட்டுவார்கள். எங்கே இருந்தாலும் நான் வாழ்நாளின் மீதி ஒவ்வொரு நிமிடத்தையும் உங்கள் நினைவாகவே கழிப்பேன்.

பிரியமான,

அர்ஜுன ரணதுங்க.

 

அந்தப் பெயரை உதடுகளை அசைத்து வாய்க்குள் சொல்லிப் பார்த்தாள். ஸ்ரீலங்கா நாட்டின் புகழ்பெற்ற இடதுகை கிரிக்கெட் விளையாட்டுக்காரர் ஒருவரின்  ஞாபகமாக சூட்டிய பெயர் அது. அப்படி அவன் சொல்லியிருந்தான். கைப்பையை மறந்து வைத்துவிட்டதுபோல தலையை இங்கும் அங்கும் அசைத்து எதையோ தேடினாள். சுற்றியிருந்த காற்றை நெஞ்சு ஏற்கவில்லை. தற்செயலாக அவள் உருவம் யன்னல் கண்ணாடியில் மங்கலாகத் தெரிந்தது. முகமும் கழுத்தும் ஒரு நிறம், மீதி உடல் வேறு நிறம்.  மூச்சு ஒன்றை ஒன்று தள்ளிக்கொண்டு வேகமாக வெளியேறியது. விருந்தை நிறுத்திவிடலாம் என தீர்மானித்து  கைநடுக்கம் நிற்கும்வரைக்கும் அசையாது நின்றாள். ஆனால் விருந்தாளிகள் ஒவ்வொருவராக வரத் துவங்கிவிட்டார்கள்.

 

விருந்து முடிந்தது. கத்தியையும் கரண்டியையும் கடிகார முள் 8.20 காட்டுவதுபோல வைத்தாள். சிநேகிதிகள் மீன் கறியை புகழ்ந்தார்கள். எப்படிச் செய்தாய் என்று கேள்வி கேட்டுத் துளைத்தார்கள்.  சமையல் குறிப்பை மின்னஞ்சல் மூலம் அவர்களுக்கு அனுப்புவதாக வாக்களித்தாள். பழப்புளி எங்கே வாங்குவது என்று கேட்டார்கள். அதற்கும் பதில் சொன்னாள். தன்னுடைய அகதிக் காதலன் பற்றி சிநேகிதிகளிடம் அப்போது சொல்லவேண்டும் என நினைத்தாள். அந்த தருணம் தவறிப் போனது.

 

சமையலறைக்குள் வந்த சிநேகிதிகள் அவள் புதிதாகச் செய்த பளிங்குத் தரையைப் பார்த்து பிரமித்து நின்றார்கள். ’ஆஹா’ என்று நம்பமுடியாமல் வியந்தார்கள். நடுவிலே பூப்போட்ட பளிங்கு கல் மிக நேர்த்தியாக இருப்பதாகவும் அழகை உச்சத்துக்கு எடுத்துச் செல்வதாகவும் உண்மையாகவே பாராட்டினார்கள். அப்பொழுது அவனைப் பற்றி சொல்லலாம் என நினைத்தாள். அந்த தருணமும் தாண்டிப் போனது.

 

இரவு உடை மாற்றி படுக்கைக்கு தயாரானபோது மறுபடியும் அவன் நினைவு வந்தது. விலங்கு மாட்டி ஒரு கொலைகாரனைப்போல நடத்திக்கொண்டு போய் இரண்டு ஆயுதம் தாங்கிய கனடா எல்லைக்காவல் படைவீரர்கள் அவனை விமானத்தில் ஏற்றியிருப்பார்கள். அவன் இடது கையால் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்தது நினைவில் ஓடியது. சுத்தியலை இடது கையால் பிடித்து அடித்தான். இடது கையால் மீன் வெட்டினான். அவன் சொன்னான் ’நான் சம்பளத்துக்காக அரச படையில் சேர்ந்து போர் புரிந்தேன். என் எதிராளி ஓர் இலட்சியத்துக்காக போராடினான். அவனுக்கு உயிர் ஒரு பொருட்டில்லை. நானோ  கேவலமாக இன்னொரு நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறேன்.’

 

நெடுநேரமாக அமண்டாவுக்கு தூக்கம் வரவில்லை. அவனுடன் விமானத்தில் அவளும் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் பறந்தாள். பின்னர் உரத்துச் சொன்னாள். ‘ஓ, என் சிநேகிதிகளே! நான்  உண்மையான சூனியக்காரியின் தங்கச்சி. எனக்கு ஓர் அகதியை தெரியும். என் வீட்டு சமையலறைக் கற்களை இடது கையால் பதித்தவன். மீன் குழம்பு சமையலுக்கு சொந்தக்காரன். என் ரகஸ்யக் காதலன். ஓர் இனத்தின்  விடிவுக்காக போராடிய எதிரியின் துப்பாக்கிக் குண்டை தோள்மூட்டில் என்றென்றைக்கும் காவியபடி திரிபவன்.’

 

பின்னர் அவள் நிம்மதியாகப் படுத்து தூங்கினாள். 

ENDhttp://amuttu.net/viewArticle/getArticle/295

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.