Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருதி தோய்ந்த கைகளைச் சுத்தப்படுத்தும் மகிந்த!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருதி தோய்ந்த கைகளைச் சுத்தப்படுத்தும் மகிந்த!

யுஹான் சண்முகரட்ணம் (தமிழில் ரூபன் சிவராஜா)

 

 

நோர்வேயின் Klassekampen (The Class Struggle)நாளிதழில் கடந்த வாரம் (09.11.13) வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். கட்டுரையை எழுதிய யுஹான் சண்முகரட்ணம் Klassekampen நாளிதழின் வெளிநாட்டுவிவகாரங்களுக்கான பொறுப்பாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான போர்மீறல் குற்றச்சாட்டுகள் சிறிலங்கா அரசதலைவரை நோக்கி முன்வைக்கப்படுகின்ற நிலையிலும் பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தினை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையேற்கவுள்ளார். பிரித்தானிய இளவரசர் சார்ஸ், பிரித்தானியாவின் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் ஆகியோர் உட்பட்ட முக்கிய பிரமுகர்கள் கொழும்பில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

50 உலக நாடுகள் அங்கத்துவம் கொண்டிருக்கும் பொதுநலவாய அமைப்புகளின் கட்டமைப்பு உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கட்தொகையைப் பிரதிபலிக்கின்றது. ஐ.நா நிபுணர் குழுவின் தரவுகளின் படி, 2009 ஆம் ஆண்டு, 40000 பொது மக்களின் உயிர்கள் பலியிடப்பட்டு, மனிதத்தன்மை அற்ற முறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை ராஜபக்சவின் படைகள் அழித்தன. அவ்வாறு நிகழ்ந்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே பொதுநலவாய நாடுகளின் தலைமையை ராஜபக்ச கையேற்கும் நிலை வந்துள்ளது. அதேவேளை போர் முடிவில் 250 000 மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்கப்பட்டுமிருந்தனர்.

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் சார்ந்த எதிர்ப்பைப் பதிவு செய்யும் முகமாக கனடிய தலைமை அமைச்சர் Stephen Harper பொதுநலவாய நாடுகளின் மாநாட்டினைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். பிரித்தானிய தலைமை அமைச்சர் David Cameron அதில் பங்கேற்பதையிட்டு உள்ளூரில் (பிரித்தானியாவில்) எதிர்ப்புகள் கிளம்பின. இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்ற பெருந்தொகை தமிழர்களின் எதிர்ப்பினால் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இராஜதந்திர வெற்றி

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவது சிறிலங்காவிற்கு முக்கியமான இலக்கு என்று Klassekampenஇற்கு தெரிவிக்கின்றார் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பின் இணைப்பாளர் பாசனா அபயவர்த்தனா. அத்தோடு கொழும்பு நிர்வாகத்திற்கு இது ஒரு இராஜதந்திர வெற்றி என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

 

சிறிலங்கா அரசாங்கம் போரை நடாத்திய விதம் மற்றும் தமிழர்களை நடாத்தும் விதம் தொடர்பாக கொழும்பு ஆட்சியாளர்கள் மீது அனைத்துலகத்தின் குறிப்பிடத்தக்க அழுத்தம் கடந்த ஆண்டுகளில் அதிகரித்து வந்துள்ளது. ஆட்சியாளர்கள் போர்க்குற்றங்கள் சார்ந்த சுயாதீனமான விசாரணையை விரும்பவுமில்லை என்பதோடு தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளையும் கருத்தில் எடுக்கவில்லை என்கிறார் ஜேர்மன் நாட்டில் அரசியல் அடைக்கலம் கோரி வசித்துவரும் அபயவர்த்தனா.

 

அவர் மேலும் கூறுகையில்,

 

பொதுநலவாய உச்சி மாநாட்டை கொழும்பில் நடாத்துவதன் மூலம் சிறிலங்கா மீது வேறொரு வகையான வெளிச்சம் படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதோடு, இத்தகையை அழுத்தங்களிலிருந்து வெளிவரும் நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. உலகின் மதிப்பிற்குரிய அரச தலைவர்களோடு அருகருகே கைகோர்த்து நிற்பதற்கான வாய்ப்பு, அவர்கள் மீதான கறையைக் கழுவுகின்ற வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புலிகளுடனான 26 ஆண்டுகாலப் போரில் முழுமையான வெற்றி பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா அரசாங்கத்தினால் மிக மோசமான போர்மீறல்கள் நிகழ்த்தப்பட்டதை கண்ணால் கண்ட நேரடிச் சாட்சியங்கள், காணொளிப் பதிவுகள் மற்றும் செய்மதிப் படங்கள் போன்ற போர் வலையத்திலிருந்து வெளிவந்துள்ள சாட்சியங்கள் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்துகின்றன.

 

பொதுமக்கள் செறிவாகவிருந்த பகுதிகள் கனரக எறிகணைகளால் தாக்கப்பட்டன. மருத்துவமனைகள் இலக்கு வைக்கப்பட்டன. நிர்வாணப்படுத்தப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் தம்மால் கொல்லப்பட்டவர்களை இராணுவத்தினரே ஒளிப்படம் எடுத்துள்ளனர். போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துவந்துள்ள அரசாங்கம் தமது படையினர் 'பொதுமக்கள் இழப்பு ஒன்றுகூட நிகழக்கூடாது' என்ற பாதையில் உறுதியாகச் செயற்பட்டதாக சொல்லி வந்துள்ளது.

 

தமிழ் மக்களுக்கான தன்னாட்சியைக் கோரிய தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் எந்த வழிமுறைகளையும் தவிர்த்து விடவில்லை. 30 வரையான நாடுகளில் புலிகள் இயக்கம் பயங்கரவாதப் பட்டியலில் இடப்பட்டிருந்தனர். குறிப்பிடத்தக்க பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னாலும் புலிகள் இருந்துள்ளனர். சிறார்களைப் படையில் சேர்த்தனர். இறுதிப்போரின் போது வெளியேற முயன்ற மக்களையும் சுட்டனர்

 

 

இருண்மைச் சித்திரம்

 

ஐ.நா அமைப்பு, மனித உரிமை அமைப்புகள், இராஜதந்திர வட்டாரங்கள் போருக்குப் பின்னான சிறிலங்காவின் மனித உரிமை நிலைமைகள் பற்றிய இருண்மையான சித்திரத்தையே கொண்டுள்ளன. போரின் இறுதிக்கட்டத்திற்கு முன்னரே 5676 காணாமற்போன சம்பவங்கள் தொடர்பாக அறிக்கைகள் பதிவாகியிருந்தன. இறுதியாண்டுகளில் கொழும்பு ஆட்சிபீடத்தை விமர்சித்த பலர் பதிவிலக்கம் அகற்றப்பட்ட வெள்ளை வான்களில் (white van) கடத்தப்பட்டு, திரும்பி வராத சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

 

International Crisis Group (ICG) இன் தரவுகளின் படி 150 000 சிறிலங்காப் படையினர் இன்னமும் வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ளனர். 93 000 மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். மக்களின் குடியிருப்பு நிலங்களை படையினர் அபகரித்துள்ளமையால் 26 000 பேர் தமது வாழ்நிலங்களை இழந்த நிலையில் உள்ளனர்.

 

போரின் முடிவிற்குப் பின்னர் அனைத்துலக ராடர்கள் இலங்கைத்தீவிலிருந்து அதிக தூரம் விலகிவிட்டன. இலங்கை ஒரு போருக்குப் பின்னான காலநிலைக்குள் வந்திருப்பதாகப் பலர் கூறுகின்றனர். ஆனால் தமிழர்களைப் பொறுத்தமட்டில் அரசியல் போர் தொடர்கின்றது.

 

இராணுவமயப்படுத்தல், சிங்களமயப்படுத்தல் வடக்கில் தொடர்கின்றது. நாளாந்தம் கடத்தப்பட்டு காணாமற்போதல், அச்சுறுத்தல், பாலியல் வன்முறை என்பன பல பத்து ஆண்டுகளாக தொடர்கின்றது. தெற்கில் அரசாங்கத்தை எதிர்க்கத் துணிந்தவர்கள் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டுகின்றார் சிங்களவரான ஊடகவியலாளர் அபயவர்த்தனா.

 

இராஜதந்திர சுத்தப்படுத்தல்

 

ஜனாதிபதி ராஜபக்சவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் (ஒருவர் பாதுகாப்பு அமைச்சர், மற்றவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், இன்னொருவர் நாடாளுமன்ற சபாநாயகர்) பொதுநலவாய உச்சி மாநாடு என்பது, அவர்களது ஆட்சிக்கு மறுவாழ்வழிக்கும் நீண்ட இராஜதந்திரப் பரப்புரைக்குப் பின்னரான சாதனையாக அமைந்துள்ளது.

 

மேற்கின் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கோசத்தைத் புலிகளுக்கெதிரான தமது தீவிர நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அத்தோடு வெளி விமர்சனங்களை ஏகாதிபத்திய தலையீடுகள் எனக் குற்றஞ்சாட்டியவாறு தட்டிக் கழித்தனர்.

 

நோர்வே இராஜதந்திரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளால் சிறிலங்கா விவகாரம் பற்றி எழுதியுள்ள பல அறிக்கைகள் மற்றும் குறிப்புகள் 'Klassekampen' நாளிதழுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. போருக்குப் பின்னான நிலைமைகளிலிருந்து அடுத்த வாரத்தின் பொதுநலவாய உச்சி மாநாடு வரையான விவகாரங்களில் அனைத்துலக சமூகத்தின் சதுரங்க ஆட்டம் சார்ந்த ஒரு உட்பார்வையை அந்த அறிக்கைகளிலிருந்து பெறமுடிகிறது. இந்தியா சீனா மற்றும் அமெரிக்கா போன்ற செல்வாக்கு நிறைந்த சக்திகளின் வெவ்வேறு வகிபாகம் தொடர்பான அவதானிப்பைப் பெற முடிகின்றது.

 

'பாக்கு நீரிணையின் கடினமான காலநிலை' என்ற தலைப்பில் 2012 நவம்பரில் கொழும்பிலுள்ள நோர்வே தூதகம் எழுதியுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவு ஒரு முறுகல் நிலைக்குள் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தமை இந்த முறுகலுக்குரிய காரணியாகும்.

 

கடந்த மார்ச் மாதம் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட அத்தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தமையை இலங்கை இன்னும் மன்னிக்கவில்லை. தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன்வைப்பதில் சிறிலங்கா அக்கறை காட்டாதிருப்பதே இந்தியாவின் பெரும் விசனத்திற்குரிய விவகாரமாகும் என அந்த அறிக்கை கூறுகின்றது.

 

மேலும் அந்தக்குறிப்பில்,

 

இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையிலான பகையுணர்வை சிறிலங்கா சரியாகக் கையாள்வதன் ஊடாக சீனாவுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்கின்றது. சீனாவையும் இந்தியாவையம் சரியான சமசிலையில் ராஜபக்ச கையாண்டு வருகின்றார். ஆனபோதும் இறுதிக் காலங்களில் சீனாவின் பக்கம் சிறிலங்கா அதிகம் சாய்ந்துள்ளது. இலங்கைத் தீவில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு இந்தியாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலையில் சிறிலங்காவிற்கு அதிக நிதிவளம் வழங்கும் நாடு சீனாவாகும். பாரிய உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சீனாவிடம் கடன் பெற்று முன்னெடுக்கப்படுகின்றன. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற பல மூலோபாய முதலீடுகள் இதில் உள்ளடங்குகின்றன.

 

ஜெனீவா இழுபறி

 

2013 இன் ஆரம்பத்தில் சிறிலங்கா விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அமெரிக்காவினால் வடிவமைக்கப்பட்ட சிறிலங்கா மீதான தீர்மானம் ஜனவரி மாதம் அமெரிக்காவினால் நோர்வேக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தீர்மானத்தை முன்வைக்கும் நாடுகளில் ஒன்றாக நோர்வேயையும் இணைத்துக்கொள்ள அமெரிக்கா பெரிதும் விரும்பியது.

 

கடந்த ஆண்டு தீர்மானம் முன்வைக்கப்பட்ட போது, அதனை எதிர்த்துப் பரப்புரை செய்வதற்கு கனதியான குழுவினை சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவிற்கு அனுப்பியிருந்தது. இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறிலங்காவின் ஊடக அமைச்சரினால் தேசத் துரோகிகளாக தூற்றப்பட்டதோடு, அவர்களை நோக்கி உயிர் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. கொழும்பிற்கான நோர்வே தூதரக அதிகாரிகள் அன்றைய நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் Espen Barth Eide அவர்களுக்கு பெப்ரவரி 2012 இல் எழுதிய அறிக்கையில் இவ்வாறு பதிவாகியுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின்னர், அத்தீர்மான வரைபு அமெரிக்காவினால் முழுமைப்படுத்தப்பட்டு முன்வைக்கப்படும் வரை அதனை வெளியில் பரவ விடாது பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு ஜெனீவாவிலிருந்த நோர்வே குழுவிடமிருந்து மற்றுமோர் குறிப்பு வந்துள்ளது. முந்தைய ஆண்டின் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட பல வலியுறுத்தல்கள் புதிய தீர்மானத்தில் மீள உள்ளடக்கப்பட்டிருந்தது. சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும், அனைத்து இலங்கையர்களுக்குமான நீதி, சமத்துவம், நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், உரிமைகள் சார்ந்த கடப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அந்தத் தீர்மான வரைபில் இருந்ததாக நோர்வே வெளியுறவு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில்; உரிய நகர்வுகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்பதோடு பொதுவான ஜனநாயகப் போக்கு தவறான பாதையில் செல்வதாக பல நாடுகள் கருதுவதாகவும் அந்தக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேற்குலகின் கூட்டுப்பொறுப்பு

 

சிறிலங்காவின் எதிர்மறையான போக்கு தொடர்பான மேற்குலக நாடுகளின் விசர்சனம் வரவேற்கத்தக்கது என்பதைச் சுட்டிக்காட்டும் பாசனா அபயவர்த்தனா, இந்த நிலைமைக்கான கூட்டுப்பொறுப்பு மேற்குலகிற்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்.

 

போரின் போது சிறிலங்காவிற்கான முதன்மை ஆயுதம் வழங்கும் நாடாக சீனா இருந்தது என்பது உண்மை. ஆனால் மேற்குலக நாடுகளுக்கும் பெரும் பங்குண்டு. சீனா மற்றும் ரஸ்யாவின் உதவியின்றி சிறிலங்காவின் இராணுவ இயந்திரம் இத்தகு நவீன மயப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதேவேளை சிறிலங்காவின் இராணுவ உயர் மட்டத்தினருக்கு பிரித்தானியாவின் Sandhurst இராணுவ பயிற்சிக் கல்லூரி மற்றும் அமெரிக்காவின் Fort Bragg ஆகியனவற்றில் பயிற்சி பெற்றுள்ளனர் என்கிறார் அபயவர்த்தன.

 

அவர் மேலும் கூறுகையில்.

 

கிளர்ச்சி அடக்கும் மூலோபாயத்தினை சீனாவிடமிருந்தோ ரஸ்சியாவிடமிருந்தோ சிறிலங்கா கற்றுக்கொள்ளவில்லை. மேற்கிடமிருந்தே கற்றுக்கொண்டது. அத்தோடு மேற்கு நாடுகளுடனான புலனாய்வுக் கூட்டுச்செயற்பாடு, மேற்கு நாடுகள் விடுதலைப் புலிகளைத் தடைசெய்தமை போன்றன இறுதிக்கட்டப் போர் சிறிலங்கா அரசாங்கத்திற்குச் சாதகமாக அமையக்கூடிய வாய்ப்புகளை வழங்கியுள்ள காரணிகளாகும்.

 

மீறல்கள் நடைபெற்றமை தொடர்பாக மேற்குலக நாடுகள் நன்றாக அறிந்து வைத்திருந்தன என்பதை வீக்கிலீக்ஸ் ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் கூட்டாளியான இந்தியா சிறிலங்காப் படைகளுக்குரிய புலனாய்வுத் தகவல்களை வழங்கியுள்ளது. தமிழ்ப் பிரதேசங்களில் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடாத்திய கிபீர்-வானூர்திகள் இஸ்ரேலினால் வழங்கப்பட்டவை.

 

பகையாளிகளின் அனைத்துலகக்கூட்டு ஒன்று இலங்கைத் தீவினைச் சுற்று வலையம் அமைத்துக் கொண்டது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல், ஈரான் ஆகிய அனைத்துத் தரப்புகளும் வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில், தமக்குள்ளேயான பகைமுரண்களுக்கு அப்பால் சிறிலங்காவிற்கு உதவின. எதிர் முனையில் தமிழர்கள் தனித்து நின்று தமக்கு எதிராக வந்த அனைத்தையும் தாங்கிக் கொண்டனர் என விளக்குகிறார் அபயவர்த்தன.

 

நோர்வே ஆதரவுடன் 2002இற்குப் பின் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் கைகள் ஓங்குவதை உறுதிப்படுத்தியதில் அமெரிக்காவிற்கு முக்கிய பங்குண்டு. வோசிங்டனில் உதவிவழங்கும் நாடுகளின் மாநாட்டினை 2003இல் நடாத்தும் முடிவினை அமெரிக்கா எடுத்தது. மாநாட்டில் தமிழ்த்தரப்பின் பங்குபற்றலுக்கான கதவு இம்முடிவினால் மூடப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறினர்.

 

சிறிலங்காவின் படைபலத்தினை அதிகரிப்பதற்குரிய தனது நிபுணத்துவ வளத்தினை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் உக்கிரமான போர் நடைபெற்றுக்கொண்டிருந்த 2007 மார்ச் காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கத்துடன் படைத்துறை உடன்படிக்கை ஒன்றில் அமெரிக்கா கைச்சாத்திட்டது.

 

இவை அனைத்தும் அரசாங்கத்தின் தன்னம்பிக்கையை மேலும் பலப்படுத்தின. எனவே 2006 முதல் 2009 வரை நாமெல்லம் சாட்சிகளாகியுள்ள கொடும் போரானது நடைமுறை அர்த்தத்தில் மேற்சொன்ன முண்டுகொடுத்தல்களின் விளைவே ஆகும். ஆனபோதும் நடந்தேறிய நிகழ்வுகளில் மேற்குலகின் கூட்டுச்செயற்பாடுகள் வசதியாக அடக்கி வாசிக்கப்பட்டும் கண்டுகொள்ளப்படாமலும் போயுள்ளமை வருந்தத்தக்கது.

 

கொழும்பை மையப்படுத்திய அதிகாரம்

 

இந்த ஆண்டு ஜீலையில் டெல்லியிலுள்ள நோர்வே தூதரகம் அனுப்பிய அறிக்கையில், 'சிறிலங்காவின் அரசியல் போக்கின் நகர்வையிட்டு இந்தியா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது, 13வது திருத்தச்சட்டதை மாற்றுவதோ இல்லாமற் செய்வதோ பாரதூரமானது' எனக் குறிப்பிட்டுள்ளது. 13வது திருத்தம் மீதான மாற்றமென்பது, தற்போது குவிமையப் பேசுபொருளாகவுள்ள காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மட்டும் உள்ளடக்கியதல்ல. நடைமுறையில் அனைத்து அரசியல் உரிமை, அதிகாரங்களையும் பாதிக்கக்கூடியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த விவகாரம் இந்தியாவின் மத்தியில் மட்டுமல்ல, ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் கொழும்பு மீதான நம்பிக்கையை பெரியளவில் இழக்கச் செய்துள்ளது. சுயாட்சி வழங்கப்பட வேண்டும், 13வது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென அரசாங்கம் (இந்திய) தெளிவான செய்தியை வழங்கியுள்ளது.

 

இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டமையை இந்தியா வரவேற்கின்ற போதும், அரசாங்கம் ஒரு கையால் கொடுப்பது போல் கொடுத்து மறுகையால் எடுக்கும் கைங்கரிய உத்தியைப் பயன்படுத்துவதாக இந்தியா விசனப்படுவதாக இந்திய ராஜதந்திரி குறிப்பிட்டார்.

 

மாகாண சபைகளின் சுயாட்சி அதிகாரங்களைப் பலவீனப்படுத்துவதோடு, அவற்றின் சிவில் மற்றும் பொருளாதார நிர்வாகத்தில் படையினரின் அதிகாரத் தலையீடுகளை அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

 

வடக்கு கிழக்கில் பாரியளவிலான நிலங்கள் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மக்களின் நிலங்கள் விடுதி அமைப்பு, மற்றும் கோல்ப் மைதானங்களாக மாற்றப்பட்டுள்ளன. சிறிலங்காவின் இன்றைய பெரிய படைப்பிரிவினைப் பேணுவதற்குரிய செலவுகள் அதிகமென்ற அடிப்படையில் இராணுவத்திற்குரிய செலவின் ஒரு பகுதியை இத்தகையை வருமானங்கள் மூலம் இராணுவமே சுயமாக ஈட்டிக்கொள்கின்றதாக தென்படுகின்றது என அந்தக் குறிப்பில் பதிவாகியிருக்கிறது.

 

இந்தியாவின் தெளிவான செய்தி, அதிகாரத்தை மத்தியில் மையப்படுத்துகின்ற சிறிலங்காவின் திட்டத்தைத் தடுக்கவில்லை. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்குப் பின்னர் நிலைமைகள் சீராகும் வாய்ப்புள்ளதாக இந்தியா நம்புகின்றது என இந்தியாவிலுள்ள நோர்வே தூதரகம் நோர்வே வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

உள்ளடக்கமற்ற நல்லிணக்கம்

 

மிகக் கொடூரமான மீறல்கள் நடைபெற்றுள்ளன என்பது அனைவரும் அறிந்த உண்மை. முன்னைய தடவைகளுக்கு மாறாக இம்முறை சிறிலங்கா அரச தரப்பு காணொளி வடிவிலான ஆதாரங்களுடன் பிடிபட்டுள்ளது என்கிறார் அபயவர்த்தன.

 

போர்க்குறற்ம் தொடர்பான விசாரணைக் கோரிக்கை, நல்லிணக்கத்திற்கு தடையாகின்றது என அரசாங்கம் சொல்லி வருகின்றது.

 

நீதியற்ற நல்லிணக்கம் வெற்றுச் சொல்லுக்குச் சமம். வீதிகளை அமைப்பதும் கிணறுகளை வெட்டுவதும் நல்லிணக்கம் அல்ல. உண்மையான நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக, குறைந்த பட்சம் தமிழர்கள் வரலாற்று ரீதியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதன் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். இதனை அங்கீகரிப்பதும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதுமே உண்மையான நல்லிணக்கத்திற்கான அடிப்படையாகும். ஏனைய அனைத்தும் வெற்று வார்த்தைகளே என்று கோடிட்டுக் காட்டுகின்றார் அபயவர்த்தன.

 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=e40f9eff-8929-475d-b633-20548f13c4ff

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.