Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதியுயர் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளில் ஒருவாரகால மோதல்

Featured Replies

அதியுயர் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளில் ஒருவாரகால மோதல்

-ஜெயராஜ்-

jeyaraj20060824lc3.jpg

தென்னாசியாவில் அதியுயர் பாதுகாப்பு முன்னரங்க நிலை எனக் கொள்ளத்தக்க பகுதியில் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரையிலான ஒருவார காலப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற மோதல்களில் இதுபோன்று ஒழுங்கமைக்கப்பட்டதும், பலப்படுத்தப்பட்டதுமான முன்னரங்கப்பகுதியில் மோதல்கள் இடம்பெற்றதி;ல்லை எனக்கூறின் மிகையாகாது.

சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பல முன்னரங்க நிலைகளில் கடும் சமர்கள் இடம்பெற்றதுண்டு இதில் 1998 இல் கிளிநொச்சி மற்றும் ஒட்டுசுட்டான் முன் அரங்கிலும் (ஓயாத அலைகள் - 03) 1999 இல் பரந்தனிலும் 2,000 ஆம் ஆண்டில் தாளையடியிலும் இத்தகைய மோதல்கள் இடம்பெற்றதுண்டு.

ஆனால் அத்தகைய முன்னரங்க நிலைகள் அன்று பெரும் பலம் பொருந்திய முன்னரங்க நிலைகளாகவே கருதப்பட்டன. எடுத்துக் காட்டாக அன்றைய பரந்தன் முன்னரங்க நிலை இலங்கையிலேயே அதிக பலம் பொருந்திய முன்னரங்க நிலையாக இருந்ததென இராணுவ ஆய்வாளர் டி.சிவராம் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்றே தாளையடி முன்னரங்க நிலைகள் விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ள முடியாதவை என அமெரிக்க இராணுவ விற்பன்னர்கள் தெரிவித்ததாகவும் டி.சிவராம் அவர்களினாலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அம் முன்னணி நிலைகள் விடுதலைப் புலிகளால் அன்று வெற்றி கொள்ளப்பட்டிருந்தன.

ஆனால் தற்பொழுதுள்ள வட போர்க்கள முன்னரங்க நிலையை ஒப்பிடும் போது பல்வேறு வகையிலும் அது பலம் பொருந்தியதாக உள்ளது என்பது நிராகரிக்கப்பட முடியாத தொன்றே. அத்தோடு, இம் முன்னரங்க நிலைகளே இன்று சிறிலங்கா இராணுவத்தினதும் சிங்கள அரசினதும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் களமுனையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இம் முன்னரங்க நிலைகள் பெரும் திட்டமிடலின் அடிப்படையிலும் வெளிநாட்டு இராணுவ நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டுள்ளன எனக் கூறின் மிகையாகாது. அண்மையில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்திருந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இவை யாவற்றையும் கருத்திற்கொள்வதாகவே தற்பொழுது கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான வடகளமுனை முன்னரங்க நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இம்முன்னரங்க நிலைகள் முன்னைய முன்னரங்க நிலைகளைவிடப் பல வகையில் பலம் பொருந்தியவையாகவும் ஒழுங்கமைக்கப்பட்டவையாகவும் உள்ளன.

இதனால், வடபோர்முனை முன்னரங்க நிலையானது பல வகைகளில் உயர்தரப் பாதுகாப்பைக் கொண்டதாகவும் அதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டதுமானதாகவும் உள்ளன. முதலில் இக் களமுனையின் அடிப்படை அம்சங்கள் பற்றிக் குறிப்பிடுதல் அவசியமானதாகின்றது.

கிளாலியிலிருந்து நாகர்கோவில் வரையிலான சுமார் 12 கிலோ மீற்றர் நீளமான முன்னரங்க நிலையை இக்களமுனை கொண்டுள்ளது. இதற்குள் சுமார் மூன்று கிலோ மீற்றர் தொண்டமனாற்றுக் கடல் நீரேரியும் அதனை யொட்டியதான சதுப்பு நிலத்தன்மை கொண்டதுமான பகுதியும் அடங்குகின்றது.

இதேசமயம் இம் முன்னரங்க நிலையானது சிறிய பரட்டைக்காடுகளையும் மணற்திட்டுக்களையும் கொண்டதான தரைப்பகுதிகளையும் ஒரு பகுதியில் கண்டல் காட்டையும் கொண்டுள்ளது. இவ் இயற்கைத் தாவரம் தவிர்ந்ததாக தென்னை இப்பிரதேசத்தில் குறிப்பாக தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் காணப்படும் பயிராகவுள்ளது.

இதனைத் தவிர தென்மராட்சியின் தெற்குப் பக்கமாக யாழ். கடல் நீரேரியும் நாகர்கோவிலின் கிழக்கு, வடக்கு கிழக்குப் புறமாக வங்காள விரிகுடாவும் உள்ளன. ஒப்பீட்டு ரீதியில் பார்க்கையில் தரைவழியில் விடுதலைப் புலிகள் இதுவரை எதிர்கொண்ட முன்னரங்க நிலைகளை விட இம் முன்னரங்க நிலைகள் ஒடுங்கியதானதாகவும் பலம் மிக்கதாகவும் இருந்தது எனின் மிகையில்லை.

சுமார் 12 கிலோ மீற்றர் நீளம் கொண்ட முன்னரங்க நிலைகளில் கடல் நீரேரியும் சதுப்பு நிலமுமாக மூன்று கிலோமீற்றர் தூரம் போக மிகுதி சுமார் ஒன்பது கிலோ மீற்றர் வரையிலான முன்னரங்க நிலையானது மிக உயர் பாதுகாப்புக் கொண்டதொன்றாக உருவாக்கப்பட்டிருந்தது.

கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான முன்னரங்க நிலைகளில் கிளாலி, நாகர்கோவில் ஆகிய இரு இடங்களும் இரு பெரிய படைத்தளங்களாகும். சுமார் 2ஒ2 கிலோமீற்றர் அகலம் கொண்டவையாக இவை உருவாக்கம் பெற்றிருந்தன. இதில் நாகர்கோவில் படைத்தளமானது தொண்டமனாற்று கடல் நீரேரிக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடைப்பட்டதான வடமராட்சி கிழக்குப் பகுதியில் நாகர்கோவில் பகுதியை மையமாகக் கொண்டு வடமராட்சி கிழக்கின் குறுக்காக அமைக்கப்பட்டிருந்தது.

இந்த வகையில் 12 கிலோ மீற்றர் முன்னரங்க நிலைகளில் நான்கு கிலோ மீற்றர் பெரும் படைத்தளங்களின் முன்னரங்க நிலைகளையும் மூன்று கிலோ மீற்றர் கடல் நீரேரியின் முன்னரங்க நிலைகளையும் போக மிகுதி ஐந்து கிலோமீற்றர் நீளம் வரையிலான பகுதியே முன்னரங்க நிலைகளாக அமைக்கப் பெற்றிருந்தது.

இதேசமயம் இம் முன்னரங்கப்பகுதிக்கு பின்புறமாக உயர் பாதுகாப்பு வலயம் என்ற ரீதியில் சுமார் நான்கு கிலோமீற்றர் தொலைவிற்கு முழுமையாக இராணுவம் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதாவது மக்கள் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இராணுவத்தினரின் பாதுகாப்பிற்கானதும், விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலுக்குமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த வகையில் ஒடுங்கியதும் அதேவேளை பரந்ததுமான பின்புலத்தைக் கொண்டதுமாக உருவாக்கப்பட்ட முன்னரங்க நிலைகளில் நன்கு திட்டமிட்ட ரீதியில் பாதுகாப்பைக் கொண்டதான பாதுகாப்பு அரண்கள் மற்றும் காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்ததோடு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று வரிசையில் முன்னணி நிலைகள் அமைக்;கப்பட்டுள்ளதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்காவலரண்கள் சிறிலங்கா இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளின் படி மட்டுமல்ல, கடந்த காலத்தில் போர் முனையில் கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் மற்றும் அமெ ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு இராணுவ நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் இவை அமைக்கப்பட்டவையாகும்.

இக்காவலரண்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கென அமெரிக்க, இந்திய, ரஷ்ய படைத்துறை அதிகாரிகள் இங்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தமை ஏற்கனவே அறியப்பட்ட தகவலாகும். இந்நாட்டு அதிகாரிகளை விட வேறு நாட்டு அதிகாரிகளும் இரகசியப் பயணங்களை மேற்கொண்டும் இருத்தல் கூடும்.

இத்தகைய முன்னரங்க நிலைகளில் இருந்து ஒடுங்கியதான தரைப்பகுதிகளை நோக்கியும் கடல் பகுதி நோக்கியதுமான கனரக ஆயுத தளவாடங்கள் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக டாங்கிகள் இதில் முக்கியமான பங்காற்றுபவையாக இருந்தன.

அதிலும் குறிப்பாக கிளாலி கரையோரத்தில் இருந்து தனங்கிளப்பு வரையிலான கரையோரப்பகுதியிலும் நாகர்கோவிலில் இருந்து வடக்கு நோக்கிப் பல கிலோ மீற்றர் கரையோரத்திலும் நீண்டதூரம் சுடக்கூடிய வகையில் டாங்கி போன்ற ஆயுத தளவாடங்கள் கடற்பரப்பை நோக்கியதாக நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

வேறுவிதமாகக் கூறுவதானால், முன்னைய மோதல்களின் போதான இராணுவத்தினரின் முன்னரங்க நிலைகள் நீண்டதாகவோ அன்றி புலிகள் பக்கவாட்டில் அந்நிலைகளைச் சென்றடையத்தக்கதாகவோ இருந்ததெனலாம். ஆனால், கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான முன்னரங்க நிலைகள் பக்கவாட்டில் செல்வதற்கான வாய்ப்புக்கள் குறைந்ததாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இத்தகைய உச்சப்பாதுகாப்புக் கொண்ட முன்னரங்க நிலைகளில் சிறிலங்கா இராணுவத்தின் போரிடும் வலுக்கொண்ட 52, 53, 55, ஆம் டிவிசன் துருப்புக்கள் நிறுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாகச் சிறிலங்கா படைப்பிரிவுகளில் போரிடும் உச்ச வலுக்கொண்டதான 53 ஆவது டிவிசன் துருப்புக்களில் விசேட அணி (எஸ்.எஃப்) களம் இறக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே திருமலை மாவிலாற்று மோதலை அடுத்து அங்கு அழைக்கப்பட்டிருந்த இப்படைப்பிரிவினர் யாழ். குடாநாட்டில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து உலங்கு வானூர்தி மூலம் அழைக்கப்பட்டு களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனா.; அதாவது சிறிலங்கா இராணுவத்தின் உச்சபாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்டதாகவும் உச்ச வலுக்கொண்டதுமாக வடபோர்க் களமுனை உருவாக்கப்பட்டிருந்தது.

வேறு வகையில் கூறுவதானால் நான்கரை ஆண்டுகால சமாதான காலத்தில் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போருக்கான தயார்ப்படுத்தல் என்பவற்றுடன் கூடியதாக வடபோர்க் களமுனை தயார்ப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே சிறிலங்கா அரசு புலிகள் மீதான வலிந்து தாக்குதலை மேற்கொண்டது.

இத்தகையதொரு நிலையில் சுமார் ஒருவார காலம் நீடித்த இம் மோதலில் சிறிலங்கா படைத்தரப்பின் மதிப்பீடுகளை மீறியதாக அதன் சிறப்புப் படையணியான 53 ஆம் டிவிசன் எஸ்.எஃப் படிப்படியான இழப்புக்களைச் சந்திக்க வேண்டியதான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டதெனலாம்.

இந்நெருக்கடிகாரணமாகவே களமுனையில் இருந்து 53 ஆவது டிவிசன் துருப்புக்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

சிறிலங்கா இராணுவத்தரப்பையும் அரச தரப்பையும் பொறுத்து வடகளமுனையில் இத்தகையதொரு இழப்பு ஏற்பட்டமையானது அதிர்ச்சிக்குரியதொன்றாகவே உள்ளது. ஏனெனில் சிறிலங்கா அரசினதும் இராணுவத் தலைமையினதும் எதிர் பார்க்கைக்கு மாறானதாக இக்களமுனைத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கு இரண்டு விடயங்கள் காரணமாகும்.

1. சிறிலங்காவின் விசேட படையணியான 53 ஆவது டிவிசன் பலத்த சேதத்திற்கு உள்ளானமை.

2. வடகளமுனை முன்னரங்க நிலைகளை ஊடறுத்து விடுதலைப் புலிகள் படையணியினர் சில காவல் நிலைகளைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளமையும் ஆகும்.

53 ஆவது டிவிசன் படையணியானது சேதத்திற்கு உள்ளாகின்றமை என்பது சிறிலங்கா இராணுவத்தின் போரிடும் ஆற்றலை வெகுவாகப் பாதிக்கத்தக்கது. இப்படைப் பிரிவானது தெரிவு செய்யப்பட்ட துருப்புக்களையும், சிறப்புப் பயிற்சி பெற்ற துருப்புக்களையும் கொண்டதாகும்.

ஆனையிறவிலும் இப்படையணி விடுதலைப் புலிகளிடம் அடிவாங்கியபோது - தாளையடியில் - இப்படைப்பிரிவினர் குழப்பத்திற்கு உள்ளாகினர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

அடுத்ததாக, முன்னரங்க நிலைகளில் ஒரு சிறு பகுதியைத்தானும் இழந்தமையானது இராணுவத்தின் எதிர்பார்ப்பிற்கு மாறான வகையில் விடுதலைப் புலிகள் செயற்பட்டுள்ளதையும் முன்னரங்க காவல் நிலைகள் பற்றிப் புலிகள் அறிந்துகொள்ள வாய்ப்பைக் கொடுத்துள்ளமையும் இராணுவத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகவே கொள்ளப்படுகின்றது.

இந்த வகையில் சிறிலங்கா அரசினதும் இராணுவத் தலைமையினதும் எதிர்பார்ப்பிற்கு மாறான வகையில் முகமாலை முன்னரங்க நிலைகளில் ஒருவார கால மோதல்கள் இடம்பெற்று தற்பொழுது ஓரளவு ஓய்வில் உள்ளது எனின் தவறாகமாட்டாது.

நன்றி: ஈழநாதம் 23.08

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.