Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

53 ஆவது படைப்பிரிவுக்கு ஏற்படும் இழப்பு தரைப்படைக்கு ஏற்பட

Featured Replies

53 ஆவது படைப்பிரிவுக்கு ஏற்படும் இழப்பு

சிங்களத் தரைப்படைக்கு ஏற்படும் பின்னடைவு

-வேலவன்-

சிங்கப்பூர் பாதுகாப்பு நிறுவனத்தின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத நிகழ்ச்சித்திட்டத்தின் தலைவர் கலாநிதி றொகான் குணரத்னவை 'ஐலண்ட்" நாளிதழ் 2003 இறுதியில் செவ்விகண்டது. அதில் அவர் வலுவான ஓர் இராணுவக்கட்டமைப்பு, வலுவான ஒரு புலனாய்வுச் சமூகம் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப முடியுமானால் இலங்கை எதிர்காலத்தில் ஒரு ஐக்கியப்பட்ட நாடாக இருக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா அரசு கொமாண்டோ தாக்குதல்கள் மற்றும் விசேட நடவடிக்கைகள் ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்பட்ட உயர்தர திறன் வாய்ந்த போர் வீரர்களை உருவாக்க முதலீடு செய்யவேண்டும் என அவர் ஆலோசனை கூறியிருந்தார்.

சிறிலங்கா இராணுவத்தைப் பொறுத்தவரை கடந்த சுமார் 25 வருட காலப்பகுதியில் இவ்வாறான உயர்திறன் வாய்ந்த படையினரைக்கட்டியெழுப்ப பல்வேறு மறுசீரமைப்புகளையும் பெரும் செலவீடுகளையும் மேற்கொள்ளத் தவறவில்லை. ஆனால் யுத்த களத்தில் எவ்வாறு அதன் பயன்பாடு இருந்தது என்பது குறித்துக் கேள்வியெழுந்த காரணத்தினாலேயே 2003 இல் இவ்வாறான ஓர் ஆலோசனையைக் கலாநிதி றொகான் குணரத்ன முன்வைக்கவேண்டியவராக இருந்தார்.

1994 ஆம் ஆண்டு சிறிலங்காவின் சனாதிபதியாகப் பதவியேற்ற சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் போரை நடத்துவதற்குப் புதிய மூலோபாயம் ஒன்றை வகுத்துக் கொண்டது. இதன் அடிப்படையில் பெருமெடுப்பிலான விரைவான, தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் மூலம் விடுதலைப் புலிகளை அழித்து தமிழ் மக்களின் போராட்டத்தை வெற்றி கொள்ளத்திட்டமிட்டது.

முதலில் போராட்டத்தின் தலை என அது கருதிய யாழ்ப்பாணத்தை கைப்பற்றினால் போராட்டத்தை வலுவிழக்கச் செய்துவிட முடியும் எனத்திட்டமிட்டு இதற்கென இராணுவத்தில் மறுசீரமைப்பைச் செய்தது.

இம் மறுசீரமைப்பின் கீழ் 51 ஆவது 52 ஆவது 53 ஆவது படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டன. பின்னர் கிளிநொச்சி மீதான 'சத்ஜெய" நடவடிக்கைக்கு 54 ஆவது படைப்பிரிவும் 1997 பெப்ரவரியில் வவுனியா - மன்னார் வீதிக்கான 'எடிபல" நடவடிக்கைக்கு 55 ஆவது டிவிசனும் கண்டி-யாழ். ஏ-9 சாலையைத் திறப்பதற்கான ஜெயசிக்குறு நடவடிக்கையின்போது 56 ஆவது டிவிசனும் அமைக்கப்பட்டன.

ஆனால் இப்படைப்பிரிவுகளில் 53 ஆவது டிவிசனே வலிமை மிக்கதும் வலிந்த தாக்குதலை எப்பகுதியிலும் மேற்கொள்ளக்கூடியதுமான வகையில் பயிற்சி பெற்ற இராணுவத்தினரைக் கொண்டு அமைக்கப்பட்டது.

இந்தவகையில் 53 ஆவது படைப்பிரிவை 'ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் பேர் கொண்ட சிறிலங்கா இராணுவத்தின் போரிடும் கூர்முனை" என இராணுவ ஆய்வாளர் தராகி விமர்சித்திருந்தார். இப் பிரிவு 8,000 படையினரைக் கொண்டிருந்தது.

1980-83 ஆம் ஆண்டு காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட கொமாண்டோப் படையணி, 1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விசேட படைகள் (எஸ்.எஃப்), வான் நகர்வுத் தாக்குதல் படையணி என்பனவற்றை உள்ளடக்கியதாக 53 ஆவது டிவிசன் உருவாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் விசேட படைப்பிரிவுக்கு ஏனைய படைப்பிரிவுகளிலிருந்து ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் புதியவர்களும் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இவர்களுக்கு கொமாண்டோப் பயிற்சி, விசேட வேவு, பரசூட் மூலம் இறங்குதல், சுழியோடுதல், உயர்ந்த கட்டடங்களிலிருந்து வேகமாகக் கயிறு மூலம் இறங்குதல், கடற்படை, விமானப்படையுடன் இணைந்த பயிற்சி என்பன ஒன்பது மாத காலங்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பயிற்சிக் கல்லூரிகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இவர்களிலே திறமையாகச் செயற்படுவோருக்கு உள்ளுரிலும் பசுபிக் பிராந்தியத்தின் தளங்களிலும், அமெரிக்க கிரீன் பரேட்டினால் கூடுதல் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இவர்களுக்குப் பயிற்சி வழங்க ஒருவருக்கு நான்கு இலட்சம் ரூபாவுக்கு மேல் செலவாகியிருந்ததாக அப்போது மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விசேட படைப்பிரிவின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாது இந்தப் படைப்பிரிவை உள்ளடக்கியதான 53 ஆவது டிவிசனின் முதலாவது கட்டளைத் தளபதியாகவும் இருந்தவர் ஓய்வு பெறும் போது இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா ஆவார்.

இவ் 53 ஆவது படைப்பிரிவு 1995 ஒக்ரோபர் முதலாம் திகதி யாழ். குடாநாட்டில் ஆரம்பிக்கப்பட்ட 'இடிமுழக்கம்" இராணுவ நடவடிக்கை முதல் 2001 ஏப்பிரலில் தோல்வியைத் தழுவிக்கொண்ட 'தீச்சுவாலை நடவடிக்கை" வரை அநேகமாக அனைத்து வலிந்த தாக்குதல்களிலும் பங்கேற்றிருக்கின்றது.

யாழ். மீதான 'சூரியக்கதிர்" நடவடிக்கையின் போது முன்னகர்ந்த 51 ஆவது 52 ஆவது டிவிசன்கள் பக்கவாட்டுத் தாக்குதலுக்குள்ளாகாது இந்த அணி நகர்ந்தது.

18-07-1996 முல்லைத்தீவுப் படைத்தளம் மீதான புலிகளின் ஓயாத அலைகள்-01 தாக்குதலின் போது அளம்பிலில் 53 ஆவது படையணியின் 1 எஸ்.எஃப் எனும் படைப்பிரிவினர் தரையிறக்கப்பட்டனர். இதன்போது புலிகளின் தாக்குதலால் சிதறடிக்கப்பட்டு ஆயுதங்களை மணலுக்குள் புதைத்து விட்டு இப் படைப்பிரிவு தப்பியோடியது.

பின்னர் கிளிநொச்சியை ஆக்கிரமிக்க மேற்கொள்ளப்பட்ட சத்ஜெய - 1, 2, 3 நடவடிக்கைகளிலும், மன்னார்-வவுனியா வீதிக்கான 'எடிபல" விலும் இப் படைப்பிரிவு பங்குபற்றியது.

சந்திரிகா அரசாங்கத்தின் மிக நீண்டகால படை நடவடிக்கையான 13-05-1997 இல் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிக்குறுவின் ஆரம்பத்தில் புலிகளின் கடும் தாக்குதலுக்குள்ளாகலாம் எனக் கருதப்பட்ட ஏ-9 வீதியின் கிழக்குப் புறத்தில் 53 ஆவது டிவிசன் பயன்படுத்தப்பட்டது.

1997 ஒக்ரோபரில் கரிப்பட்டமுறிப்பு நோக்கி முன்னேறிய 53 ஆவது டிவிசன் மீது புலிகள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் 500 இற்கும் மேற்பட்ட படையினரைப் பலி கொடுத்ததுடன் அதன் கட்டளை அதிகாரியாக அப்போதிருந்த பிரிக்கேடியர் வசந்த பெரேராவின் பிரத்தியேக வாகனம் உட்பட 15 கோடி ரூபா பெறுமதியான ஆயுத தளபாடங்களைப் பறிகொடுத்திருந்தது.

10-12-1997 இல் மன்னகுளத்தில் புலிகளின் நிலைகளை அழிக்கவென 53 ஆவது டிவிசன் முன்னேறியது. அதில் விசேட படைப்பிரிவின் லெப். கேணல் தர அதிகாரி உட்பட நூற்றுக் கணக்கான படையினர் பலியாகியதுடன் கொமாண்டோப் படையின் முதலாவது பிரிவின் கட்டளை அதிகாரி உட்டபட நூறுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜெயசிக்குறு நடவடிக்கையின் போது முக்கிய பாத்திரம் வகித்த 53 ஆவது டிவிசனின் அனைத்துப் பிரிவுகளும், களமிறக்கப்பட்டதுடன் இதன்போது பல இழப்புக்களையும் சந்தித்தது.

இதனைவிட ஒட்டுசுட்டான் நோக்கிய 'ரிவிபல" மன்னார் நோக்கிய 'ரணகேஷ்" நடவடிக்கை என்பனவற்றிலும் அம்பகாமம் நோக்கிய 'வாட்டர் ஷெட்" நடவடிக்கையிலும் இவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

புலிகளின் ஆனையிறவுத் தளம் மீதான ஓயாத அலைகள்-03 நடவடிக்கையின் போது 53 ஆவது டிவிசனின் அமெரிக்கப் பயிற்சி பெற்ற கொமாண்டோக்கள் வான்வழித் தரை நகர்வுப் படையினர் உட்பட 1,500 பேர் தாளையடி, செம்பியன்பற்று முகாம்களில் நிலை கொண்டிருந்தனர். 26-03-2000 அன்றான புலிகளின் தரையிறக்க நடவடிக்கைக்குப் பின்னான தாக்குதலின் போது அம் முகாம்களை விட்டுப் படையினர் தப்பியோடினர்.

பின்னர் கண்டி வீதியைப் பளைக்கு அப்பால் ஊடறுத்து நின்றிருந்த விடுதலைப் புலிகள் மீதான 'வலிச்சக்கர" நடவடிக்கையில் 53 ஆவது படையணி சந்தித்த இழப்பையடுத்து அதன் பொதுக்கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஹெட்டி ஆராய்ச்சி இவ்வாறு 53 ஆவது படைப்பிரிவை ஈடுபடுத்துவது அதன் அழிவுக்கே வழி வகுக்கும் எனத் தெரிவித்தார். அதனால் அவர் மாற்றப்பட்டார்.

முகமாலைப் பகுதியில் ஏப்ரல் 2001 இல் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட 'தீச்சுவாலை" எனும் வலிந்த தாக்குதல் 53 ஆவது படைப்பிரிவுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியிருந்தது.

காலத்துக்குக் காலம் ஏனைய படைப் பிரிவுகளிலிருந்து சிறந்த படையினரை இணைத்து வலுப்படுத்தப்பட்டு வரும் 53 ஆவது படையணி நான்கரை ஆண்டுகால சமாதான கால ஓய்வு வழங்கிய மறுசீரமைப்பின் பின்னர் மாவிலாற்றிலும், மூதூரிலும், கிளாலி, முகமாலைப் பகுதிகளிலும் வலிந்த தாக்குதலுக்கெனக் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

மாவிலாற்று அணைக்கட்டைத் தாமே திறந்து விட்டதாக அரசியல்வாதிகள் தம்பட்டமடித்தாலும் இராணுவத் தரப்புச் செய்திகள் களநிலை அவ்வாறு இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.

கிளாலியிலும், முகமாலையிலும், களமிறங்கிய இப் படைப் பிரிவு பலத்த இழப்புக்களைச் சந்தித்த பின் களத்திலிருந்து விலகியிருக்கின்றது.

கனமான எறிகணை மழை மத்தியிலும் கடுமையான தாக்குதல் மத்தியிலும் அப் படைப்பிரிவை இறக்கி இழப்பைச் சந்திக்க அதன் தளபதிகள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை. ஏனெனில் 53 ஆவது டிவிசன் சந்திக்கும் இழப்பு என்பது சிறிலங்காவின் தரைப்படையை அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பது இராணுவ ஆய்வாளர்களின் கருத்தாகும்.

எனவே றொகான் குணரத்ன கூறியது போன்று குறைந்த எண்ணிக்கையில் வலிமையான படையைக் கட்டியெழுப்ப சிங்கள ஆட்சியாளர்கள் பெரும் முதலீட்டைச் செய்திருக்கலாம். ஆனால் அப்படைப்பிரிவுக்கு ஏற்படும் இழப்பு சிறிலங்காத் தரைப் படைக்கு பெரும் பின்னடைவையும் பேரழிவையுமே ஏற்படுத்தும்.

நன்றி: ஈழநாதம் 23.08.06

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.