Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா ??

Featured Replies

  • தொடங்கியவர்

புத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்!

 

dscn0365.jpg?w=450

 

தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப் பட்டனவாகத் தெரிகின்றன.

சாத்தன்’, அல்லது ‘சாத்தனார்’ என்னும் பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. ‘சாஸ்தா’ என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது ‘அமரகோசம்’, ‘நாமலிங்கானுசாசனம்’ முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, ‘சாஸ்தா’ என்னும் சொல்லின் திரிபாகிய ‘சாத்தன்’ என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டுவந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது. பௌத்த நூலாகிய ‘மணிமேகலை’யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் ‘சாத்தனார்’ என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. கோவலன் என்னும் ‘சிலப்பதிகார’க் கதைத் தலைவனுடைய தந்தை ‘மாசாத்துவன்’ என்னும் பௌத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் பௌத்த பிக்ஷ¨வாகித் துறவுபூண்டான் என்பதும் ஈண்டு நோக்கற்பாலன. மற்றும், ‘பெருந்தலைச் சாத்தனார்’, ‘மோசி சாத்தனார்’, ‘வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்’, ‘ஒக்கூர்மா சாத்தனார்’, ‘கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார்’ முதலான சங்ககாலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த ‘சாத்தன்’ என்னும் பெயரைக்கொண்டு கருதலாகும்.


கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோவில்களுக்குச் ‘சாஸ்தாவு குடி’ என்றும், ‘சாஸ்தா வேஸ்வரம்’ என்றும், ‘சாஸ்தாவு கள’ என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்றும், இவை யாவும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்த மதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுகின்றது இதனை உறுதிப்படுத்துகின்றது. இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு. இவற்றிற்குச் ‘சாத்தன் காவுகள்’ என்று பெயர். (காவு = கா = தோட்டம், அல்லது பூஞ்சோலை என்பது பொருள்) பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது. இவற்றிற்கு ‘ஆராமம்’ (பூங்தோட்டம்) என்று பெயர் வழங்கிவந்தன. மலையாள நாட்டிலுள்ள சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக்கோயில்களாக இருந்து, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை என்பது ஆராய்ச்சிவல்லோர் கருத்து. சாத்தனாருக்கு ‘ஐயப்பன்’ என்னும் பெயரும் மலையாள தேசத்தில் வழங்கிவருகின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. ‘சாஸ்தா’, அல்லது ‘சாத்தன்’ என்னும் வட சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் ‘ஐயன்’, அல்லது ‘ஐயனார்’ என்பது. ‘ஐயன்’ என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். பௌத்தமதம் அழிந்த பின்னர், அம்மதக்கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டனர். அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.

‘ பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே ‘
என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.

பிற்காலத்தில், ‘சாத்தனார்,’ ‘ஐயனார்’, ‘அரிஹரபுத்திர்’ என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாகச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர். ‘சாத்தன்,’ அல்லது ‘சாஸ்தா’ என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும் கருத்துப் பற்றி என்க. சிலப்பதிகாரம், கனாத்திற முரைத்த காதையில், ‘பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு’ எனவரும் அடியில், ‘பாசண்டச் சாத்தன்’ என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு : “பாசண்டம் தொண்ணூற்றாறு வகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை. இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாதலின், மகாசாத்திர’னென்பது அவனுக்குப் பெயராயிற்று.” இவர் கூறும் உரைக்கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர். இதனை வற்புறுத்தியே, ‘சூடாமணி நிகண்டும்,’

‘ அண்ணலே மாயாதேவிசுதன் அகளங்க மூர்த்தி
நண்ணியகலைகட் கெல்லாம்நாதன் முக்குற்ற மில்லோன் ‘

என்று கூறுகின்றது. ‘அருங்கலை நாயகன்’ என்று திவாகரம் கூறுகின்றது.

நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், ‘ஸ்வஸ்தி ஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்’ என்று எழுதியிருப்பது காண்க. புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் ‘சாஸ்தா’, அல்லது ‘மகா சாஸ்தா’ என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும். ‘லலிதாவிஸ்தார’ என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பலகலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர். இன்னுமொரு கண் கூடான சான்று யாதெனில், காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் இருந்த புத்தர் உருவச் சிலைக்குச் ‘சாஸ்தா’ என்னும் பெயர் உள்ளதுதான். (படம் 6 காண்க.) இச்சாஸ்தாவைப்பற்றிக் ‘காமாட்சிலீலாப் பிரபாவம்’ என்னும் காமாக்ஷ¤ விலாசத்தில், ‘காமக்கோட்டப் பிரபாவத்தில்’, ‘தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து (முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம்’ காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது. * ‘சாஸ்தா’ என்பவரும் ‘புத்தர்’ என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம். இன்னும் சில ஆதாரங்கள் உண்டு. அவை விரிவஞ்சி விடப்பட்டன.

‘சாஸ்தா’ என்னும் புத்தருடைய கோயில்களை ‘ஐயனார் கோயில்கள்’ என்றும், ‘சாதவாகனன் கோயில்கள்’ என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச் செய்துவிட்டது போலவே, ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாகத் தெரிகின்றது. சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர். தென்னாட்டில், ‘தலைவெட்டி முனீஸ்வரன்’ கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம்போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது. இப்பொழுது காணப்படும் ‘தருமராஜா கோயில்கள்’ என்பனவும் பண்டொருகாலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது. ‘தருமன்,’ அல்லது ‘தருமராசன்’ என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று, பிங்கல நிகண்டில் ‘தருமன்’ என்றும், திவாகரத்திலும் நாமலிங்கானுசாசனத்திலும் ‘தர்மராஜன்’ என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும். இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்தக் கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமாராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன. தருமராஜா கோயில்களில், பௌத்தர் போற்றும் ‘போதி’ என்னும் அரச மரங்கள் இன்றைக்கும் காணப்படுவதே, தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் ‘தருமராஜா’, அல்லது ‘தருமதாகூர்’ என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம். எனவே, தமிழ் நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக்கால்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும் என்று கருதப்படும்.   

இவ்வாறே, தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப் பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது. ‘தருமராஜா’ என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, ‘தாராதேவி’ என்னும் பௌத்த அம்மன் கோயில், தருமராஜாவின் மனைவியாகிய திரௌபதையின் கோயிலாக்கப்பட்டதுபோலும். சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் ‘வரதராசர் கோயில்’, ‘திருவரங்கர் கோயில்’, ‘வேங்கடேசர் கோயில்’ முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் ‘கபாலீஸ்வரர் கோயில்’, ‘தியாகராசர் கோயில்’, ‘சொக்கலிங்கர் கோயில்’ முதலான வெவ்வேறு பெயர்களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக்காலத்தில், பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் ‘தருமராசா கோயில்’, ‘சாத்தனார் கோயில்’, ‘முனீஸ்வரர் கோயில்’ என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டுவந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது, அவை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமத்த் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராம தேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகின்றது.

* காஞ்சிக் காமாட்சி அம்மன் கோயில் உட் பிராகாரத்தில் இருந்த இந்த ‘சாஸ்தா’ என்னும் புத்தர் உருவச்சிலை இப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் இருக்கின்றது.

(தொடரும்)

  • Replies 50
  • Views 14.5k
  • Created
  • Last Reply

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.