Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முயன்றால் உங்களால் முடியும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.

உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.

பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்.

வீட்டில் உள்ள நம் (இரு பால்) குழந்தைகள், இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் உளமாற விரும்புகிறோம் – ஏன்? அதிகமாகவே ஆசைப்படுகிறோம். பிள்ளைகள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துக் கிடக்கும் பேராற்றலை வெளியேக் கொண்டு வருவது தான் ஆசிரியர்கள் பெற்றோர்களின் முக்கிய பணியாகும். பங்காகும்.

பிள்ளைகள் தவறு செய்யும் போது கூட உடனே கடும் மொழியில் பெற்றோர்கள் வசை மாறி பொழிவதை விட, தவறுகளைச் சுட்டிக் காட்டி, நல்ல அறிவுரைகள் சொல்லி, அவர்களின் நல்ல செயல்களை நன்றாக பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். “மொட்டு பூவாக மலர்வதைப் போல இயல்பாக அந்த பாராட்டு இருத்தல் வேண்டும்”.

”அடடா! இன்று உன் கையெழுத்து, நீ வாங்கி வந்த மதிப்பெண், வரைந்த ஓவியம், உடுத்திய உடை – இப்படி எல்லாமே அருமையாக இருக்கிறதே” – என்று பாராட்டிக் கொண்டே இருங்கள். அப்போது அந்த பிஞ்சு உள்ளத்தில் தன்னைப் பற்றிய நம்பிக்கை இன்னும் இதை விடச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் சாதனை எண்ணமும் ஆழமாக வேரூன்றும். “இனிய சொல் இரும்பு கதவைக் கூட திறந்து விடும்”. அது போல நம்முடைய முதல் பாராட்டு நாளை நம் பிள்ளைகளை இந்த சமுதாயமே பாராட்டும் படி அமைக்கும். எனவே பாராட்டை வீட்டிலிருந்தே தொடங்குங்கள் அதை தொடருங்கள்...

ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒர் அற்புத ஆற்றல் ஓசையில்லாமல் மனதில் மறைந்திருக்கிறது. அதை உரிய முறையில் வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்களின் தலையாய கடமை. மாணவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ்ந்துக் காட்டும் திறமையை முதுகில் தட்டிக் கொடுத்து மேலோங்கச் செய்வது அவர்களின் அறப்பணி மட்டுமல்ல அரும்பணியும் கூட.

உன்னதமான ஆசிரியர்கள் உள்ளத்தில் ஒளிப் பாய்ச்சுவார். பள்ளி பாடங்களைச் சொல்லிவிட்டு மட்டும் செல்பவராக இருந்து விடக் கூடாது. கற்பித்த பாடம், சொல்லிய கருத்து மாணவர்களிடம் சென்றடைந்ததா? என்பதை ஆசிரியர்கள் கவனிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் வகுப்பறைகள் வெறும் “கண்ணுக்கு விருந்தாக செவிக்கு உணவாக மட்டுமே காட்சி தரும். இறுதித் தேர்வு எனும் இரைப்பையை அது ஆட்சி செய்யாமல் போய்விடும்”. ஆசிரிய பெருதகைகள் மாணவர்களின் அறியாமை இருளை அகற்றும் வெளிச்ச தீபங்கள். இளைஞர்களை இலட்சிய பாதையில் நடைபயில செய்யும் எழுச்சி தீபங்கள்.

“முகம் - வீட்டு முகவரியை காட்டும், செயல்கள் - வாழ்க்கைக்கு முகவரி காட்டும்”. ஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.

உழைப்பால் வெற்றியை உருவாக்கு.
முயற்சியை அதற்கு எருவாக்கு.
வாழ்க்கை ஒரு கணிதம்...

“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”. சிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.

நல்லனவற்றைக் கூட்டிக் கொள் --------> +
தீயவற்றைக் கழித்துக் கொள் ----------> -
அறிவைப் பெருக்கிக் கொள் -----------> x
நேரத்தை வகுத்துக் கொள் ------------> /
வெற்றி, தோல்வியை சமமாக கொள் --> =

வெற்றியை எவ்வாறு சாதனையாக்குவது? தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “எட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.

கண்கள் தூக்கத்திற்கு சொந்தமானவை
கனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை...

“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற எனதருமை இளைஞர்களே! நம் நாட்டில் சுமார் இருபது கோடி இளைஞர்கள் இருக்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கனவு தொழிற்சாலைகள். இந்த கனவுகளுக்கெல்லாம் காரணம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களே! உங்கள் மீது கடலளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த கலாமின் நம்பிக்கைக்கு ஒரு சலாம் சொல்லுங்கள்.

வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...

• ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.
• ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
• ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.
• ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.
• ஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.
• ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
• ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
• ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.
• ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.

தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = ஐ. எ. எஸ். , ஐ. பி. எஸ். எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும். சாதிப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.

என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?
இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?

சாதனையின் ஊற்றுக்கண் - இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே! “இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.
                            
துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.

தீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும். “படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு...

http://chakkarakatti.blogspot.co.uk/2013/12/blog-post_23.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.