Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக? நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக? நிலாந்தன்:-

29 டிசம்பர் 2013

iranai_madu_CI.jpg

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சில இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் இரணைமடுத் தண்ணீர் உங்களுக்கு வேண்டுமா? இல்லையா? என்று கேட்கப்பட்டது. இது நடந்து சில நாட்களுக்குப் பின் ஒரு மூத்த பிரஜை என்னிடம் கேட்டார், ''யாழ்ப்பாணத்தில் யார் இரணைமடு நீரைக் கேட்டது' எங்களைக் கேட்காமலே முடிவுகளை எடுத்துவிட்டு இப்பொழுது ஏன் கணக்கெடுப்பு நடாத்தப்படுகின்றது? யாழ்ப்பாணத்திற்கு நீர் தேவைதான். ஆனால், அது இரணைமடு நீராகத்தான் இருக்கவேண்டும் என்று யார் கேட்டது? என்று...

இதையே தான் மறுவளமாக கிளிநொச்சி விவசாயிகளும் கேட்கிறார்கள். ''எங்களைக் கேட்காமல் ஏன் முடிவெடுக்க முயல்கின்றார்கள்' என்று.

இரணைமடுதான் இலங்கையின் முதலாவது திட்டமிடப்பட்ட நீர்ப்பாசனத்திட்டமாகும். 1920களில் உருவாக்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் ''யாழ்ப்பாணத்திற்கான உணவுப் பாதுகாப்பு' என்பதாகவே இருந்தது. இப்படியாக ஒற்றை நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் பல நோக்குடையதாக மாற்றப்பட்டபோது தங்களை ஏன் போதிளயவு கலந்தாலோசிக்கவில்லை என்று விவசாயிகள் கேட்கிறார்கள்.

திட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து 94 ஆண்டுகளாகிவிட்டன. இந்த 94 ஆண்டுக் காலத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய குடித்தொகைப் பெருக்கத்தின் அடிப்படையில்தான் எந்த முடிவும் எடுக்கப்படவேண்டும் என்றுமவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

குளக்கட்டை உயர்த்தி குளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலம் பெறப்படும் மேலதிக நீரானது மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுவதற்குப் பதிலாக குளத்தை ஏற்கனவே நம்பியிருக்கும் ஒரு மக்கள் திரளின் குடித் தொகைப் பெருக்கத்திற்கேற்ப அதிகரித்த தேவைகளை ஈடுசெய்வதற்கே பயன்படுத்தப்பட வேண்;டும் என்றுமவர்கள் கூறிவருகிறார்கள்.

வான் பாயாத காலங்களில் வரும் வரட்சியைக் கருத்தில் எடுத்துத் திட்டம் வரையப்படவில்லை என்றுமவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் வான் பாய்ந்து கொண்டிருந்த குளத்தின் நீர்மட்டம் இந்த ஆண்டு இக்கட்டுரை எழுதப்படும் டிசம்பர் 27ஆம் திகதியன்று ஏறக்குறைய 12 அடிக்கு கிழிறங்கிவிட்டதாகவும், குளத்திற்கு மழை வேண்டி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் கோயிலில் விவசாயிகள் பொங்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகையதொரு பின்னணியில் சுமார் 94ஆண்டு வயதுடைய இரணைமடுக் குளத்தின் நீர் தொடர்பாக கடந்த சில மாதங்களாக கேட்கப்பட்டுவரும் கேள்விகள் அவற்றுக்கான பதில்கள் மற்றும் சந்தேகங்கள், அச்சங்கள் ஊகங்கள் என்வற்றின் தொகுப்பாக இன்று இக்கட்டுரை வருகின்றது.

முதலாவது கேள்வி: ஏற்கனவே, முன்சொன்ன மூத்த பிரஜை கேட்டதுதான். யாழ்ப்பாணத்தில் யார் இரணைமடு நீரைக் கேட்டது?

இக்கேள்விக்கு மேற்படி மூத்த பிரஜையே ஓரு பதிலும் சொன்னார். வடகிழக்கில் 2009 மே க்குப் பி;ன்னரான நவதாராளவாத பொருளாதார அலையின் எழுச்சி காரணமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் சேவைத்துறை வளர்ச்சிகளையொட்டி, அதிகரிக்கக்கூடிய குடிநீருக்கான தேவையை ஈடுசெய்யவா இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது? என்று.  

ஆனால், இத்திட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் வேறுவிதமாகக் கூறுகிறார்கள். யாழ்ப்பாணத்துக்கான நீர்த் தேவை பற்றிய உரையாடல்கள் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக இடம்பெற்று வருவதாகவும், நிலத்தடி நீர் மாசாவது பற்றி எச்சரிக்கைகள் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருவதாகவும், எனவே, இது ஒரு புதிய  பிரச்சினையல்ல என்பதோடு, இரணைமடு நீர்த் திட்டமானது 2009 மேக்கு முன்பே, அதாவது 2005இலேயெ முன்மொழியப்பட்ட ஒரு திட்டம் தான் என்றுமவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்தப் பதில்களின் மீதும் கேள்விகள் உண்டு. யாழ்ப்பாணத்துக்கான நீர் விநியோகத்தைப் பொறுத்த வரை சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் உட்பட அநேகரால் விதந்துரைக்கப்பட்ட திட்டம் எந்திரி ஆறுமுகத்தின் திட்டமாகும். ஒப்பீட்டளவில் இரணைமடுத் திட்டத்தை விடவும் செலவு குறைந்த திட்டம் அதுவென்று தற்பொழுது சிட்னியில் வசிக்கும் ஆறுமுகத்தின் மகன் எழுதிய கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குளத்திலிருந்து வெளிச் செல்லும் நீர் விநியோகக் குளாய்களுக்காக கிட்டத்தட்ட ஆறு மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் ஆறுமுகம் திட்டத்தில் இது இல்லை என்றும் அறுமுகத்தின் மகன் கூறுகிறார். இது தொடர்பில் தான் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் எழுதியுள்ளார். எனவே, செலவு குறைந்ததும், நீடித்து நிலைத்திருக்கக் கூடிய விளைவுகளைத் தரவல்லதுமாகிய ஒரு  திட்டத்தை எடுக்காமல், செலவு கூடிய ஒரு திட்டத்தை ஏன் எடுக்க வேண்டும் என்பது இரண்டாவது கேள்வி.

அடுத்த கேள்வி: ஒரு விவாதத்துக்காக இரணைமடு நீர் யாழ்;ப்பாணத்துக்கு வருகிறது என்று வைத்துக் கொண்டால், வரட்சியான காலங்களில் நீருக்கு எங்கே போவது? என்பது. விவசாயிகள் தரும் தகவல்களின்படி, இரணைமடுக்குளம் சராசரியாக 7ஆண்டுகளுக்கு ஒரு முறை வற்றுகிறது என்று கூறப்படுகிறது. இவ் ஏழு ஆண்டுச் சுழற்சிக்குள் சராசரியாக இரண்டு ஆண்டுகள் அது வான் பாய்கிறது. மூன்று ஆண்டுகள் வான்பாயாவிட்டாலும் அடியொட்ட வற்றாது சுமாராக நீ;ர் நிறைந்து காணப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஆயின் ஏழாண்டுகளிற்கு ஒரு முறை அல்லது இரு முறை வரக்கூடிய வரட்சியின்போது நீருக்கு எங்கே போவது? மேற்படி நீரிற்குப் பழக்கப்பட்ட மக்களிற்கு வேறெங்கிருந்து நீரைப் பெற்றுக் கொடுப்பது?

இக்கேள்விகளிற்கு விடை தேடிச் சென்றால், இத்திட்டத்தின் பின்னாலிருக்கக்கூடிய சூதான உள்நோக்கங்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று சில தரப்பு அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதன்படி வற்றான காலங்களில் யாழ்ப்பாணத்துக்கான நீர் விநியோகம் என்ற கவர்ச்சியான மனிதாபிமான இலக்கை முன்வைத்துக் கொண்டு மாவலி ஆற்றின் நீரை இரணைமடுவுக்குக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள். அப்படி மாவலி ஆற்றுடன் இரணைமடு இணைக்கப்பட்டால் அது மாகாண சபையிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும் என்றுமவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். ஏனெனில், மாவலி அதிகார சபை எனப்படுவது மத்திய அரசின் கீழ் வருகிறது. மாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டிற்குள் வடக்கின் மிகப்பெரிய குளமும், மாகாண சபைகளிடம் உள்ள குளங்களில் பெரியதுமாகிய இரணைமடு வருமாயிருந்தால், வடக்கை ஊடுருவிக்கொண்டு மாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் விரிவடையும் என்றும் அது அதன் தர்க்கபூர்வ விளைவாக புதிய குடியேற்றங்களை உருவாக்குவதில் போய்முடியக்கூடும் என்றுமவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள், இது ஒரு ஊக நிலைப்பட்ட அச்சம் என்று. இரணைமடுவைச் சாட்டிக்கொண்டு மாவலி ஆற்றை வன்னிப் பெருநிலத்திற்குள் கொண்டு வரவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லையென்றும், இப்பொழுது அரசாங்கம் நினைத்தால் வேறு ஏதும் ஒரு திட்டத்தை முன்வைத்து அதைச் சுலபமாகச் செய்து முடிக்கலாம் என்றும்.

ஆனால், திட்டத்தை எதிர்ப்பவர்கள் மேற்படி பதிலால் திருப்திப்படுவதாக இல்லை. அவர்கள் கூறுகிறார்கள், யாழ்;ப்பாணத்துக்கான நீர் என்பது ஒரு கவர்ச்சியான மனிதாபிமானக் காரணம் என்று. இப்படி ஒரு மனிதாபிமானக் காரணத்தைக் கூறிக்கொண்டு மாவலி ஆற்றை வடக்கிற்குள் கொண்டுவரும்போது அனைத்துலக சமூகம் அதை ஒரு விவகாரமாக எடுக்காது என்று.

இனி நாலாவது கேள்வி, இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள் இது விடுதலைப்புலிகள் இயக்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டம் என்று. அதிலும் குறிப்பாக, சமாதானம் சோதனைக்குள்ளாகத் தொடங்கிய ஒரு பின்னணியிற்தான் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று. ஆயின் விடுதலைப்புலிகள் இயக்கம் மேற்படி திட்டத்தை ஏன் ஏற்றுக்கொண்டது? அப்படி அத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள முன்பு இது தொடர்பாக விவசாயிகளுடன் இப்போது நடப்பது போன்ற உரையாடல்கள், வாதப்பிரதி வாதங்கள் ஏன் அப்பொழுது நடக்கவில்லை?

இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் காலத்தில் குறிப்பாகச் சமாதான முன்னெடுப்புக்களின்போது ''சிரான்;' அமைப்பின் பணிப்பாளராக இருந்த ம. செல்வின், புதினப் பலகை இணையத் தளத்திற்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மேற்படி திட்டத்தை ஆதரிக்கும் அக்கட்டுரையில் அவர் விவசாயிகளின் சம்மதம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், விவசாயிகள் இதை மறுக்கிறார்கள். தங்களுடன் போதியளவு கலந்தாலோசிக்கப்படாமலேயே   திட்டம் முன் நகர்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இது தொடர்பில் கிளிநொச்சியில் கச்சேரி மட்டத்தில் நடந்த விவசாயிகளுக்கான சந்திப்புகளின்போது தாம் எதிர்ப்புக் காட்டியதாகவும் ஆனால், தமது எதிர்ப்பையும் மீறித் திட்டம் செயற்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பில் விடுதலைப்புலிகளின் காலத்திலும் போதியளவு வெளிப்படைத் தன்மை பேணப்படவில்லை. இப்பொழுதும் இல்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.  புலிகள் இயக்கம் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டபோது சமாதானம் சோதனைக்குள்ளாகத் தொடங்கிவிட்டது. எனவே, திட்டம் இடையில் நிறுத்தப்படும் என்ற ஊகங்களின் மத்தியிற்தான் புலிகள் இயக்கம் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

மேலும் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு குளம் தொடர்பில் தாமே இறுதி முடிவு எடுக்கப்போவதால் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய எந்தவொரு நிலைமையையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்றும் அந்த இயக்கம் நம்பியதா? சமாதானம் முறிக்கப்பட்டு திட்டம் இடை நிறுத்தப்படுமாயிருந்தால் அது வரையிலுமாவது திட்டத்தால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பெறுவது என்றும் அவர்கள் சிந்தித்ததாக எடுத்துக்கொள்ளலாமா?

ஆனால், திட்டத்தை ஆதரிப்பவர்கள் கேட்கிறார்கள் புலிகளின் காலத்தில் காட்டப்படாத அளவுக்கு எதிர்ப்பு இப்பொழுது மட்டும் ஏன் காட்டப்படுகிறது? என்று. இது ஐந்தாவதுகேள்வி?

இக்கேள்வியைக் கேட்பவர்கள் மேலும் ஒரு கேள்வியையும் கேட்கிறார்கள். புலிகளின் காலத்தில் ஒப்பீட்டளவில் அமைதியாகக் காணப்பட்ட விவசாயிகளை இப்பொழுது யாரும் அரசியல் வாதிகள் பின்னிருந்து தூண்டுகிறார்களா? என்பதே அது.

கட்சிக்குள் தமது பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த முற்படும் அரசியல்வாதிகள் பிரதேசவாதத்தைத் தூண்டவல்ல உணர்ச்சிகரமான இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்திருக்கிறார்களா? என்றுமவர்கள் கேட்கிறார்கள்.

இரணைமடுக் குளம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இக்குளம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இதற்கான நீர் வவுனியா மாவட்டத்திலிருந்து அதாவது கனகராயன் ஆற்றின் மூலம் கிடைக்கிறது. ஆனால், அந்த நீரை கிளிநொச்சி மாவட்டம் பயன்படுத்துகிறது. எனவே, இரணைமடுக்குளம் எனப்படுவது மூன்று மாவட்டங்களுக்குச் சொந்தமானது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மூன்று மாவட்டங்களிற்குச் சொந்தமான ஒரு குளத்தை மற்றொரு மாவட்டத்திற்கும் பகிர்ந்தளிப்பதை எப்படி ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் எதிர்க்க முடியும் என்றுமவர்கள் கேட்கிறார்கள்.

இக்கேள்விகள் ஆழமாக ஆராயப்படவேண்டியவை. இனம் கடந்து மொழி கடந்து, பிரதேச, தேசிய எல்லைகளைக் கடந்து முழு மானுட குலத்துக்குமான ஒரு பெரும் பரப்பினுள் வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை.

பேரியற்கைக்கு ஒரு இனமோ அல்லது பிரதேசமோ மட்டும் சொந்தம் கொண்டாடமுடியாது என்பது ஒரு கோட்பாட்டு விளக்கம்தான். ஆனால், பேரியற்கையை எப்பொழுதும் அரசியல் எல்லைகள் கட்;டுப்படுத்துகின்றன என்பதே சமூக அரசியல் பொருளாதார யதார்த்தமாகும். ஒரு நாட்டில் உற்பத்தியாகும் ஆறு பெரும்போது வேறொரு நாட்டில் அழிவுகளை ஏற்படுத்துகிறது. எங்கேயோ மலைச் சிகரங்களில் உருகும் பனிப் படிவங்கள் எங்கேயோ பட்டினங்களையும், கிராமங்களையும் அடித்துச் சென்று விடுகின்றன. எங்கேயோ கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் தூண்டப்படும் ஆழிப்பேரலைகள் எங்கேயோ கடலோரக் கிராமங்களையும் பட்டினங்களையும் அள்ளிச் சென்றுவிடுகின்றன.

எனவே, பேரியற்கையின் அழிவுகளுக்கும், தேசிய எல்லைகள் இல்லை. ஆக்கத்திற்கும் தேசிய எல்லைகள் இல்லை. ஆனால் இது ஒரு தூய கோட்பாடு தான். நடைமுறையில் பேரியற்கையை நுகரும் மனிதர்களின் நோக்கு நிலையின் பாற்பட்டு அதற்கு அரசியல் எல்லைகள் வகுக்கப்பட்டு விடுகின்றன.

பேரியற்கையின் ஏதோ ஒரு அம்சத்தை அது கடலோ, நதியோ, குளமோ எதுவானாலும் அதைத் தொடக்கத்திலிருந்து தலைமுறை தலைமுறையாகத் தொடர்ச்சியாக நுகர்ந்துவரும் ஒரு மக்கள் கூட்டம் அதற்குச் சொந்தம் கொண்டாடுவதே உலக வழமையாகக் காணப்படுகிறது. இந்தியாவில் நதி நீர் பங்கீடு தொடர்பான எல்லாச் சர்ச்சைகளும் இதன் பாற்பட்டவைதான்.

எனவே, பேரியற்கையின் எதோ ஒரு பகுதியை தொடர்ச்சியாக நுகர்ந்துவரும் ஒரு மக்கள் கூட்டத்தின் கவலைகளையும் கோபத்தையும் அச்சத்தையும் புறக்கணித்துவிட்டு முடிவுகளை எடுக்க முடியாத ஒரு அரசியல் யதார்த்தமே உலகம் முழுவதும் காணப்படுகிறது.

இதில் உள்ளுர் அரசியல் எந்தளவுக்குப் பிரதி பலிக்கிறது என்பதைப் பொறுத்து பிரச்சினையின் தீவிரம் அதிகரிக்கிறது. இப்படிப் பார்த்தால் இரணைமடு நீர்ப் பிரச்சினை எனப்படுவது வெறும் நீர்ப் பிரச்சினையல்ல. அது ஒரு அரசியல் பிரச்சினைதான். ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினை இப்பொழுது இதில் அதிகம் பிரதிபலிக்கிறது என்பதும் ஒரு பகுதி உண்மைதான். அதாவது, இங்கு அரசியல் வாதிகள் பிரச்சினையை உருவாக்கவில்லை. ஏற்கனவே, இருந்த ஒரு பிரச்சினையை அவர்கள் கையாள முற்படுகிறார்கள் என்பதே சரி.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வந்த சோதனையே இது. கட்சித் தலைமையானது தனது கிளிநொச்சி மாவட்டப் பிரதிநிதிகளைக் கையாள்வதில் ஏற்பட்ட தோல்வியையும் இந்தப் பிரச்சினை பிரதிபலிக்கிறது என்று கூறலாம். இரணைமடுக்குளத்தை நுகரும் விவசாயியைப் பொறுத்தவரை அது வெறும் நீர் மட்டும் அல்ல. அது ஒரு உயிர்த் தண்ணீர். அது சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையும் அதிகம் உணர்ச்சிகரமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ஓர் உணர்ச்சிகரமான பி;ன்னணியில் பிரதேசப் பற்றை பிரதேச வாதமாக மாற்றுவது இலகுவானதாகிவிடும்.

பிரதேசப் பற்று வேறு. பிரதேச வாதம் வேறு. பிரதேசப் பற்றெனப்படுவது ஒருவர் தனது பிரதேசத்தின் மீது கொள்ளும் பேரன்பாகும். ஆனால், பிரதேச வாதமெனப்படுவது ஒருவர் தனது பிரதேசத்தின் மீது கொள்ளும் பேரன்பானது ஏனைய பிரதேசங்களின் மீதான வெறுப்பாக மாற்றமடைந்த ஒரு நிலையாகும். அதாவது பிரதேசப்பற்று ஒரு விரிவு. பிரதேசவாதம் ஒரு குறுக்கம். பிரதேசப்பற்று இருக்கத்தான் வேண்டும். அது ஆக்கபூர்வமானது. ஒரு பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்க சக்தி அது. பிரதேசப் பற்று அதன் முழு மலர்வின் போது தேசப்பற்றாகிறது. எனவே, பிரதேசப் பற்றெனப்படுவது தேசியத் தன்மை மிக்கது. அது பல்வகைமைகளை ஏற்றுக்கொள்வது. ஆனால், பிரதேசவாதம் குருட்டுத்தனமானது.அது பல்வகைமைகளை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, தேசியத் தன்மைக்கு எதிரானது. பிரதேசப் பற்று வெளிவிரிவது பிரதேசவாதம் உட் சுருங்குவது. அது எல்லா விதத்திலும் ஒரு குறுக்கம் தான்.

எனவே, இரணைமடு தொடர்பில் பிரதேசப் பற்றானது பிரதேச வாதமாக குறுகிவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அப்பகுதி அரசியல் வாதிகளுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும், விவசாயிகள், கல்விமான்கள், அறிவுஜீவிகள், படைப்பாளிகள்,  ஊடகக்காரார்கள் எல்லாருக்கும் உரியது.

கிளிநொச்சி ஒரு குடியேற்றவாசிகளின் மாவட்டம். யாழ்ப்பாணத்;திலிருந்தும், மலையகத்திலிருந்தும் நாட்டின் பிற பாகங்களிலிருந்தும் குடியேறியவர்களால் கட்டியெழுப்பட்ட ஒரு சமூகம் அது. அங்கிருந்து கொண்டு பிரதேச வாதம் கதைப்பது என்பது ஒன்றில்  முந்திவந்த யாழ்ப்பாணத்தவர்கள் பிந்தி வந்த யாழ்ப்பாணத்தவர்களை பகைப்பதைப் போன்றது அல்லது கிளிநொச்சிக்கு வந்த யாழ்ப்பாணத்தவர்கள் கிளிநொச்சிக்கு வராத யாழ்ப்பாணத்தவர்களைப் பகைப்பதைப் போன்றது. இது தன்னைத் தானே தின்னும் ஒரு தொற்று நோய்.

கூட்டமைப்பின் உயர்பீடம் இதில் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது இங்கு முக்கியமானது. ஏனெனில், பிரதேச வாதத்திற்குத் தலைமை தாங்கும் எவரும் சுலபமாக உடனடி வெற்றிகளைப் பெற்றுவிடக்கூடிய உணர்ச்சிகரமான ஒரு சூழல் அது. அப்படியொரு நிலை வந்தால் இதில் முதற் பலியாகப் போவது கூட்டமைப்பின் ஐக்கியம்தான். இறுதிப் பலியாகப் போவது தமிழ்த் தேசியத்தின் அடித்தளம்தான். இதில் முதலும் கடைசியுமாக வெற்றி பெறப்போவது இரண்டு மாவட்டங்களையும் மோதவிட்டுப் பார்க்க முற்படும் தரப்புகள்தான்.

எனவே, அதன் இறுதி விளைவைக் கருதிக் கூறின், இரணைமடு நீர்ப்பிரச்சினை எனப்படுவது கூட்டமைப்புக்கு வந்திருக்கும் சோதனை மட்டுமல்ல. வயதால் மிக இளைய வடமாகாண சபைக்கு வந்திருக்கும் சோதனை மட்டுமல்ல, தமிழ்த் தேசிய உருவாக்கத்துக்கு வந்திருக்கும் சோதனையும் தான்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100972/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.