Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் அரசியல், வடக்கின் அரசியலாக சுருங்கிச் செல்கிறதா? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியல், வடக்கின் அரசியலாக சுருங்கிச் செல்கிறதா? - யதீந்திரா

இப்படியொரு கட்டுரை எழுதுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தபோது, நீண்ட காலத்திற்கு முன்னர் காலம்சென்ற இராணுவ ஆய்வாளரும் நண்பருமான, டி.சிவராம் (தராக்கி) எழுதிய கட்டுரை ஒன்றே நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டுரை, விடுதலைப்புலிகளின் 'முதலில் யாழ்ப்பாணம்' என்னும் கொள்கை (The LTTE's 'Jaffna First' policy) என்னும் தலைப்பில் வெளிவந்திருந்தது. மேற்படி கட்டுரை, 'புலிகளின் ஆதரவாளர்' என்னும் முத்திரையற்ற காலத்தில் சிவராமால் எழுதப்பட்ட ஒன்றாகும். அது முற்றிலும் இராணுவ தந்திரோபாயத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட ஒன்று. ஆனால் இக்கட்டுரை வடக்கு மாகாணசபை கூட்டமைப்பால் வெற்றிகொள்ளப்பட்ட பின்புலத்தில் நிகழ்ந்து வரும் சில விடயங்கள் மீதான அவதானமாக அமைகிறது.
 
கடந்த அறுபது வருட கால தமிழர் அரசியலை எடுத்து நோக்கினால், அது ஏதோவொரு வகையில் வடக்கை முதன்மைப்படுத்திய ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. அதாவது தமிழர் அரசியலுக்கான பிள்ளையார் சுழியை போடும் ஓர் இடமாக எப்போதும் வடக்கே இருந்திருக்கிறது. ஆனால் அவ்வாறு பிள்ளையார் சுழியிட்டவர்களிடம், தங்களது தீர்மானங்கள் கிழக்கு தமிழர்கள் மீது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடுமென்னும் தூரநோக்கிருந்ததா என்பது சந்தேகமே. ஈழத் தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில் இது ஓர் அரசியல் ஒழுங்காகவே (Political order) ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழர் விடுதலை அரசியலின் சிற்பிகள் என்போர் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததும், அவர்களது சிந்தனைகளுக்கு ஏற்பவே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டமையுமே மேற்படி நிலைமைக்கு காரணமாகும். இந்தக் காலத்தில் கிழக்கின் அரசியல் தலைவர்கள் என்போர், வடக்கின் அரசியல் சிற்பிகள் என்போரால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை வழிமொழிபவர்களாக இருந்திருக்கின்றனரேயன்றி, ஒரு போதுமே அதனை தீர்மானிப்பவர்களாக இருந்ததில்லை. இது, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தொடங்கி வே.பிரபாகரன் வரையான கால நீட்சியரசியலின் எழுதா விதியாகும். இந்தப் பின்னணியில் பார்த்தால் தமிழர் அரசியலில், கிழக்கு எப்போதும் ஒரு துணைப்பாத்திரத்தையே வகித்து வந்திருக்கிறது. அன்றைய சூழலில் இது ஒரு பாரதூரமான விடயமாக எவராலும் நோக்கப்பட்டிருக்கவுமில்லை. வடக்கை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் அரசியல் என்பது அதன் இறுதி அர்த்தத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களது நலனை வெற்றி கொள்வதற்கானதாகும் என்னும் புரிதலே அன்று மேலோங்கியிருந்தது.

ஆனால் யுத்தத்திற்கு பின்னரான சூழலில் நிகழ்ந்துவரும் விடயங்களை முன்னிறுத்தி இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்வது? வடக்கு மாகாணசபையை கூட்டமைப்பு பெருவாரியான ஆசனங்களுடன் கைப்பற்றியதைத் தொடர்ந்து, தமிழர் பிரச்சனை வடக்கின் பிரச்சனையாக மட்டுமே அணுகப்படுகின்ற, அல்லது நோக்கப்படக் கூடிய ஒரு போக்கை அவதானிக்க முடிகிறது. இதற்கான காரணங்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். இன்று, முன்னிலைப்படுத்தப்படும் அனேக விடயங்கள் வடக்கை மையப்படுத்தியதாக இருப்பதும், இத்தகையதொரு பின்புலத்தில் வடக்கு மாகாணசபை கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருப்பதும், இந்த பின்னணியில் இலங்கை பிரச்சனையில் கரிசனை செலுத்தி வரும் அனைத்து சர்வதேச தரப்பினரும் வடக்கை முன்னிலைப்படுத்தியே தங்கள் அபிப்பிராயங்களை தெரிவித்து வருவது, ஆகியவற்றை குறிப்பிடலாம்.

சமீபத்தில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனின் யாழ் விஜயமும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுடான சந்திப்பும் வடக்கு மாகாணசபைக்கு கூடுதல் முக்கியத்துவத்தை வழங்கியிருந்தது. இதற்கு பின்னால் பிறிதொரு காரணமும் மறைந்திருக்கிறது. இன்று சர்வதேச ராஜதந்திர சமூகத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வரும், புலம்பெயர் உயர் குழாம் (Elite Diaspora) அனைத்தும் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவே இருக்கின்றனர். கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வலுவான தமிழ் புலம்பெயர் சமூகம் மேற்கில் இல்லை. மேற்கில் மட்டுமல்ல அது இலங்கைக்குள் கூட இருப்பதாக சொல்லிவிட முடியாது. இதுவும் மேற்படி ராஜதந்திரிகள் தமிழர் பிரச்சனையை, வடக்கை மையப்படுத்திய ஒன்றாக பார்க்க விளைவதற்கான காரணமாகும். இலங்கையின் தமிழர்கள் என்றால், அவர்கள் மத்தியில் யாழ்ப்பாணமே நினைவுக்கு வரும். அந்தளவிற்கு புலம்பெயர் தமிழ் லொபி (Tamil lobby) என்பது முற்றிலுமாக யாழ் புலம்பெயர் தரப்பினரின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஒன்றாகவே இருந்துவருகிறது. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக இலங்கையிலிருந்து வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாக இருந்ததும், பொருளாதார ரீதியாக வலுவான ஒரு வெளிநாட்டு தமிழ் சமூகமாக அவர்கள் தங்களை வலுப்படுத்திக் கொண்டதுமே இதற்கான காரணங்களாகும்.

விடுதலைப் புலிகள் கள அரசியலின் ஏகப்பிரதிநிதிகளாக இருந்த காலத்தில், மேற்படி யாழ்ப்பாண புலம்பெயர் தமிழ் சமூகமே, ஈழத் தமிழர் அரசியலின் மேற்கு பிரதிநிதிகளாக தொழிற்பட்டனர். ஆனால் அவர்களை கையாளும் சாவி புலிகளின் வசமே இருந்தது. ஆனால் புலிகளின் அழிவிற்கு பின்னர், ஒரு குறிப்பிட்ட புலம்பெயர் யாழ் உயர் குழாம் (பொருளாதார மற்றும் மேற்கு ராஜதந்திரிகளுடன் உரையாடக் கூடிய ஆற்றலின் அடிப்படையிலேயே, இங்கு உயர் குழாம் என்னும் அர்த்தப்படுத்தல் எடுத்தாளப்படுகிறது) ஈழத் தமிழர் அரசியலின் மேற்குலக பிரதிநிதிகளாக, தங்களை உருமாற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்பை பெற்றனர். உண்மையில் புலிகள் அரசியலில் கோலோச்சிய காலத்தில், மேற்படி புலம்பெயர் தரப்பினரை, ஓர் உயர் குழாம் என்னும் நிலையில் அவர்கள் கருத்தில் கொண்டிருக்கவில்லை என்றே சொல்லலாம். புலிகளின் அர்த்தத்தில் புலிகளே உயர் குழாம். அன்றைய சூழலில், புலிகளென்னும காந்தசக்தியால் கவரப்பட்டு இயங்கும் ஒரு தரப்பினராகவே மேற்படி புலம்பெயர் தரப்பினரின் ஊசலாட்டம் அமைந்திருந்தது. புலிகள் அதற்குரிய பலத்தை களத்தில் கொண்டிருந்தனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் புலம்பெயர் தரப்பை ஒரு கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.

ஆரம்பத்தில் கூட்டமைப்பின் குறிப்பாக, சம்பந்தனின் அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்து அதிருப்திகளை வெளியிட்ட மேற்படி புலம்பெயர் தரப்பினர், சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்தல் ஜனநாயக முறைமையின் கீழ், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்றிருக்கும் ஓர் அரசியல் கூட்டு என்னும் வகையில், அதனை அதிகம் புறம்தள்ளிக் கொண்டு, மேற்கின் பரப்பில் தமிழர் பிரச்சனையை முதன்மைப்படுத்த முடியாது என்பதை விளங்கிக் கொண்டு, தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். ஆனால் ஈழத் தமிழர் அரசியலில் மேற்படி புலம்பெயர் தரப்பினர் கூட்டமைப்பால் தவிர்த்துச் செல்ல முடியாத இடத்தை பெறுவதில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதற்கு குறித்த தரப்பினரின் பொருளாதார பலமும், மேற்கின் பரப்பில் தமிழ் லொபி என்பது முற்றிலும் அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதுமே முக்கிய காரணங்களாகும். இந்த பின்னணியை முன்னிறுத்தியே, மேற்கு ராஜதந்திரிகளின் கரிசனை வடக்கின் பக்கமாக சாய்ந்து செல்வதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும்.

 

இந்த இடத்தில் பிறிதொரு விடயத்தையும் அவதானிக்க வேண்டியிருக்கிறது. வடக்கு மாகாணசபையை கூட்டமைப்பு கைப்பற்றிய பின்னர், இலங்கையில் வடக்கு மாகாணசபை என்பது தனித்து தெரிவதான ஒரு தோற்றப்பாடும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இலங்கை பிரச்சனையில் அக்கறை செலுத்திவரும் சர்வதேச சக்திகள், கொழும்பிற்கு ஒரு எச்சரிக்கை குறிப்பை கொடுக்க முற்படுகின்றனரா? இலங்கையின் வேறு எந்தவொரு மாகாணசபை முதலமைச்சருக்கும் கொடுக்கப்படாதவொரு முக்கியத்துவம் விக்னேஸ்வரனுக்கு கொடுக்கப்படுகிறது. அரசாங்கத்தை பொறுத்தவரையில் இது மகிழ்ச்சியுடன் நோக்கக் கூடியதொரு விடயமல்ல. காலப்போக்கில் கொழும்பிற்கு மாற்றான ஓர் அதிகார மையமென்னும் அங்கீகாரம், உத்தியோகபூர்வமற்ற வகையில் வடக்கு மாகாணசபைக்கு கிடைக்கலாம். வளப்பங்கீடு ரீதியாகவும், அதிகாரங்களில் தலையிடு செய்யும் இயலாற்றலிலும் அரசாங்கத்தின் கை ஓங்கிக் காணப்பட்டாலும், சர்வதேச ராஜதந்திர தொடர்புகளை மட்டுப்படுத்துவதில் அரசாங்கம் பெரிய தலையீடுகள் எதனையும் செய்ய முடியாதவொரு நிலைமையே காணப்படுகிறது. இதன் மூலம் வடக்கு மாகாணசபையை கொழும்பிற்கு நெருக்கடிகளை கொடுக்கக் கூடியதொரு கருவியாக, சர்வதேச சக்திகளால் பயன்படுத்தப்படக் கூடிய ஏதுநிலை இல்லையென்று எழுந்தமானமாக கூறிவிடவும் முடியாது. இந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும், வடக்கு எதிர்காலத்தில் முதன்மைப்படுத்தப்படக் கூடிய நிலைமையே அதிகம் காணப்படுகிறது.

 

இவ்வாறு வடக்கு மட்டுமே முதன்மைப்படுத்தக்கூடிய புறச் சூழலில், கிழக்கிற்கு என்ன நடக்கலாம்? இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், வடக்கு மாகாணசபை தேர்தலின் பின்னர், கூட்டமைப்பின் தலைவர்கள் வடக்கிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், கிழக்கை புறக்கணிக்கும் போக்கொன்று காணப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றார். எனவே இந்த கட்டுரை பொருத்தமானதொரு சூழலிலேயே எழுதப்படுகிறது.

 

நான் இங்கு தொடுத்திருக்கும் கேள்விக்கான பதில், வடக்கு அதிகமாக முதன்மைப்படுத்தப்படும் நிலைமை தொடரும்போது, கிழக்கிற்கான அரசியல் முக்கியத்துவம் தமிழர் அரசியலில் படிப்படியாக குறைவடைந்து செல்லும் என்பதாகும். தமிழர் உரிமைசார் அரசியல் கருக்கொண்ட காலத்திலிருந்து, தமிழர் அரசியலுக்கான நிலப்பரப்பு என்பது வடக்கு-கிழக்கு இணைந்த ஒன்றாகவே பேசப்பட்டு வந்திருக்கிறது. இந்த பின்புலத்தில்தான் 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம், தற்காலிக வடக்கு-கிழக்கு இணைப்பிற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில்தான் முதலாவது மாகாணசபையும் உருவாக்கப்பட்டது. ஒருவேளை அந்த மாகாணசபையை அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுக்கக் கூடிய புறநிலைமைகளை ஏற்படுத்தியிருந்தால், வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது காலப்போக்கில் நிரந்தரமான ஒன்றாகியிருக்கும். ஆனால் 1988இன் மாகாணசபை என்பது முளையில் வாடிய பயிரானதால், வடக்கு-கிழக்கு இணைந்த ஓர் அரசியல் தீர்வு என்பதும் கூட, முளையில் வாடிப்போன பயிரானது. இன்றைய சூழலில், வடக்கு-கிழக்கு இணைந்த அரசியல் தீர்வு என்பது மேடைகளில் பேசுவது போன்று இலகுவான ஒன்றல்ல. கொழும்பின் அதிகாரத்தில் எந்த அரசாங்கம் இருந்தாலும், 'இணைந்த மாகாணம்' என்னும் அரசியல் கோரிக்கைக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையிலும் அன்றைய சூழலில் காண்பித்த அக்கறையை வெளிப்படுத்தக் கூடியதொரு புறச் சூழல் இன்றில்லை.

 

ஆனால் இலங்கையின் வெற்றிகரமான அரசாங்கங்களை பொறுத்தவரையில் வடக்கு மாகாணத்தை விட, அவர்கள் கிழக்கின் மீதே அதிக கவனத்தை செலுத்தி வந்திருக்கின்றனர். தமது அரசியல் நிகழ்ச்சி நிரலில் கிழக்கிற்கே அதிக முக்கியத்துவத்தை வழங்கி வந்திருக்கின்றனர். அந்த அடிப்படையில்தான் கிழக்கில் தமிழர்கள் அல்லாத ஏனைய குறிப்பாக சிங்கள மக்களின் சனத்தொகை பரம்பலில் கொழும்பு கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டது. ஆழ்ந்து நோக்கினால் கொழும்பின் மேற்படி அணுகுமுறை சிங்கள மக்களை குடியேற்றுவதுடன் தொடர்புபட்ட ஒன்றல்ல. மாறாக, அது ஓர் அரசியல் தந்திரோபாய நடவடிக்கையாகவே அணுகப்பட்டது. ஆனால் கிழக்கின் தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் இருப்பிற்காகவும், எதிர்காலத்திற்குமாகவும், தூரநோக்கிலான திட்டங்கள் எதனையும் தமிழ் தலைமைகள் வைத்திருந்ததாக கூற முடியாது.

 

இங்கு கவனிக்க வேண்டிய விடயம், வடக்கு மட்டுமே அதிகம் முன்னிலைப்படுத்தப்படும் சூழலில், இணைந்த மாகாணம் என்னும் நோக்கில் ஓர் அரசியல் தீர்வு சாத்தியப்படாமல் போகுமிடத்து கிழக்குவாழ் தமிழ் மக்கள் அதிக பாதிப்புக்குள்ளாக நேரிடும்.

 

ஆனால், இன்றைய சூழலில் கிழக்கு என்னும் அடிப்படையில் குரல்கள் மேற்கிளம்பாமல் இருப்பதற்கு, கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் இருப்பதுதான் ஒரேயொரு காரணமாகும். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன் - கடந்த அறுபது வருடகால தமிழர் விடுதலை அரசியலின் சிற்பிகள் என்போர் அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாக இருந்ததும், அவர்களது சிந்தனைகளுக்கு ஏற்பவே அனைத்து முடிவுகளும் எடுக்கபட்டதாகவும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இரா.சம்பந்தனின் வருகை இதில் ஒரு முக்கிய உடைவாகும். தமிழர் அரசியல் வரலாற்றில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரது சிந்தனையில் ஈழத் தமிழர் அரசியல் தீர்மானிக்கப்படுவதானது இதுவே முதல் தடவையாகும். இந்த ஒரேயோரு காரணம்தான், வடக்கு முதன்மைப்படுத்தப்படும் போது, அதற்குள் கிழக்கும் உள்ளடங்கியே இருக்கிறது என்னும் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில், கிழக்கின் வலுவான அடையாளமாக நிலைபெறக்கூடிய தலைவர்கள் எவரும் கூட்டமைப்பில் இல்லை. அத்தகையதொரு சூழலில் இணைந்த வடக்கு கிழக்கு என்னும் கோரிக்கை கிழக்கிலிருந்து வலுவாக ஒலிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே சமீபகால அரசியல் முன்னெடுப்புகளில் காணப்படும் இடைவெளிகள் குறித்து, கூட்டமைப்பின் தலைமை கவனம்செலுத்த வேண்டியது அவசியமாகும். அதனை தொட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=b5e00000-c714-4d03-815f-1c2b324f8ed3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.