Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் வளைகுடாவில் சீனா: இந்தியவின் இறமைக்கான சவால்!!

Featured Replies

மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணிக்காக சீனாவையும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்திருப்பதன் மூலம் இந்தியாவின் இறைமைக்கு சிறிலங்காவால் பாரிய நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேசத்தில் 2 ப்ளொக்குகளில் இந்தியாவும் சீனாவும் எண்ணெய் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று சிறிலங்கா அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தின் இரு பெரும் போட்டி வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உள்ளன.

இராஜதந்திர களத்தில் மோதுநர்களாக உள்ள இந்த இரு வல்லரசுகளும் தங்களது ஆளுமையையும் வலுவையும் வெளிக்காட்டுவதற்கான வியூகங்களை தொடர்ச்சியாக கையாண்டு வருகின்றன.

இப்படியான நிலையில் மன்னார் வளைகுடாவில் சீனாவை சிறிலங்கா இறக்கிவிட்டிருப்பது என்பது இந்தியாவின் இறைமைக்கு சிறிலங்காவால் விடுக்கப்பட்டிருக்கிற பாரிய அச்சுறுத்தல்தான்.

மன்னாரும் எண்ணெய் அகழாய்வும்

மன்னார் வளைகுடாவை அண்மித்திருப்பது "காவேரி பேசின்" எனப்படுகிற பாரிய எண்ணெய்படுகையாகும். காவேரி படுகையானது தமிழ்நாட்டில் 65 விழுக்காடு அமைந்துள்ளது. அதன் தொடர்ச்சியானது தெற்கே மன்னார் பிரதேசத்தில் இலங்கைப் பகுதியில் 35 விழுக்காடு உள்ளது.

தமிழ்நாட்டின் காவேரிப் படுகையில் எண்ணெய் வளமிருப்பதாகவும் அதனை ரஸ்யா உறுதி செய்துள்ளதாகவும் கடந்த 1956 ஆம் ஆண்டு யூன் 12ஆம் நாளன்று இந்திய அமைச்சர் கே.டி.மாலவியா பெங்களுரில் அறிவித்தார். அதன் பின்னர் இந்தியாவின் பிரதான எண்ணெய் படுகைகளில் ஒன்றாக காவேரிப்படுகை உருவெடுத்தது.

சிறிலங்காவும் மன்னாரில் 1960-கள் தொடக்கம் தொடர்ச்சியாக எண்ணெய் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது.

1970-களில் ரஸ்யாவால் பேசாலை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட எண்ணெய் அகழாய்வுப் பணியின் முடிவில் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

1980-களின் மத்தியில் கனேடிய நிறுவனம் நடத்திய அகழாய்வின் போது எண்ணெய் வளம் குறித்த சாதகமான ஆய்வறிக்கை வெளியானது. அதன் பின்னர் தொடர்ச்சியான இனக்கலவரம், யுத்த காலங்களுக்குப் பின்னர் 2002 ஆம் ஆண்டு பெட்கான் என்ற சுவீடன் அமைப்பு எண்ணெய் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு 2003 ஆம் ஆண்டு சனவரியில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தது.

உலக நாடுகளின் பல்வேறு எண்ணெய் வள ஆய்வுகளை நடத்தி வரும் நோர்வேயும் இதே காலகட்டப் பகுதியில் மன்னாரிலும் அம்பந்தோட்டையிலும் ஆய்வு நடத்தி எண்ணெய் வளம் குறித்த அறிக்கையை வெளியிட்டன. (அகழாய்வு பணி தனக்கும் கிடைக்கும் என்று நோர்வே காத்திருக்கிறது)

மன்னார் எண்ணெய் படுகையானது மொத்தம் 6 ப்ளொக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் தலா இரு ப்ளொக்குகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2003 ஆம் ஆண்டு எண்ணெய் அகழாய்வுப் பணியில் தனியாரை ஈடுபடுத்துவதற்கான மசோதா சிறிலங்கா நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தற்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எண்ணெய் அகழ்வு மேற்கொள்ள சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

ஆனால் இப்போது ஒப்பந்தங்கள் எதுவும் கோரப்படாமலேயே இந்தியா மற்றும் சீனாவுக்கு கையளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதானது சிறிலங்காவில் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.

இந்தியாவும் சீனாவும்

இந்தியாவுக்கு எதிரி நாடாக கருதப்படுகிற பாகிஸ்தானை தன் நட்பு சக்தியாக சீனா தக்க வைத்துள்ளது. இமயமலை பிரதேசத்தில் தனது ஆதிக்கத்தை பாகிஸ்தானூடாக வலுப்படுத்தி இந்தியாவுக்கு எப்போதும் ஒரு அச்சுறுத்தல் பிரதேசமாக காஸ்மீரத்தின ஒரு பகுதியில் சீனா நிற்கிறது.

திபெத் ஒட்டிய எல்லையோரப் பிரதேசங்களில் தனது இராணுவக் குவிப்பை சீனா தொடர்ச்சியாக செய்து வருகிற நிலையில் "நட்பு" ரீதியாக நாதுல்ல கணவாயை இந்தியா திறந்துவிட்டு இந்தியாவுக்குள் சீனா நுழைவதற்கான பாதையை சீதமனாகக் கொடுத்துள்ளார்கள் போல்.

வங்கதேசத்தின் சிட்டகாங்கில் பாரிய கடற்படைத் தளத்தை சீனா அமைத்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் பர்மாவில் தன் இராணுவத் தளங்களை சீனா அமைத்திருக்கிறது.

இந்தியாவுக்கு கீழே மாலைதீவில் தன் இராணுவ நிலையை சீனா உறுதி செய்து நிற்கிறது.

ஈரானிய எல்லையோரம் பாகிஸ்தானில் உள்ள கத்வார் துறைமுகத்தை பெருந்தொகையில் உருவாக்கி அரபிக் கடல் பகுதியிலும் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலை சீனா ஏற்படுத்தி உள்ளது.

இப்படியான ஒரு முற்றுகைப் பின்னலில் இந்தியாவை சுற்றி சீனா நிற்கிறது.

இந்தியாவின் பாரிய சந்தையாகக் கருதப்படுகிற தென்னிந்தியாவை இலக்கு வைத்துத்தான் ஏற்கனவே சிறிலங்காவில் சீனா முதலீடு செய்து வருகிறது.

தமிழீழ மூத்த அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு தெரிவித்திருந்தது போல், தென்னிந்திய சந்தையினூடாக சீனாவுக்கு கிடைக்கப் போகும் இலாபத்தை கணக்கிடுகையில் சிறிலங்காவில் சீனா செய்யும் செலவானது ஒரு "முதலீடு"தான்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் தென்னிந்தியாவை எளிதில் அவதானிக்கக் கூடிய- இந்தியப் பாதுகாப்புத்துறையின் மையமாக விளங்கக் கூடிய தென்னிந்தியாவை அவதானிக்கக் கூடிய- ஊடுருவக்கூடிய வாய்ப்புள்ள மன்னாரில்தான் சீனாவை சிறிலங்கா அனுமதித்திருக்கிறது.

இந்தியாவும் சிறிலங்காவும்

இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்களும் இந்திய பிரதேசத்தில் வாழுகிற தமிழர்களும் தொப்புள்கொடி இரத்த உறவுகள். வரலாற்றுக் காலங்களில் தமிழர் இராச்சியங்களும் சிங்களவர் இராச்சியங்களும் வெவ்வேறாக இருந்தமையால் தமிழ்நாட்டுடனான தமிழீழ இராச்சியங்களின் உறவானது நல்லுறவாக இருந்தது.

ஆனால் இங்கிலாந்து நாட்டவரின் காலனி ஆதிக்க முடிவின் கீழ் நிறைவேற்றப்பட்ட அரச அதிகார மாற்றத்தில் சிங்களவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் தமிழர்கள் வாழ வேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டது.

இந்தியாவிலும் தமிழ் மன்னர்களால் நிர்வகிக்கப்பட்ட பிரதேசங்களும், ஆங்கிலேயர் உள்ளிட்ட அன்னியர் வருகையால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியப் பகுதியாக்கப்பட்டது.

இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இருதரப்புக்கும் எந்தவித நல்லுறவுக் காலம் என்பது எப்போதும் இருந்ததாக இல்லை.

இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி லெப். கேணல் தாக்குர் குல்தீப் எஸ்.லுத்ரா தனது கட்டுரை ஒன்றில் இந்தியாவுக்கு எதிரான சில சிறிலங்காவின் நடவடிக்கைகளை இப்படிப் பட்டியலிடுகிறார்....

- 1977 ஆம் ஆண்டுக்கும் 1983 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்க பாகிஸ்தானிடமிருந்தும் இஸ்ரேலிடமிருந்தும் சிறிலங்கா ஆயுதக் கொள்வனவு செய்தது

- சிறிலங்காவின் மேற்குக் கடலோரப் பகுதியான சிலாபத்தில் வொய்ஸ் ஒப் ஆப் அமெரிக்கா ஒளிபரப்புக்கான வசதிகளை ஏற்பாடு செய்துகொடுத்தது. அது பெயரளவிலான ஒளிபரப்பு. ஆனால் இலத்திரனியல் உளவுப் பணிகளுக்காக அமைக்கப்பட்டது

- திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் கிடங்குகளை சீரமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு சிறிலங்கா ஒப்புதல் அளித்தது. இதற்காக இந்தியாவின் ஒப்பந்த கோரலானது சிறப்பாக இருந்தபோதும் அமெரிக்க நிறுவனத்தை அனுமதித்தது.

- இந்தியத் தலைவர்களை சிறிலங்கா தலைவர்கள் இழிவுபடுத்தும் செயலையும் செய்தனர். உதாரணமாக பிரேமதாசவை நரசிம்மராவ் சந்திக்கச் சென்றபோது தேவையின்றி காக்க வைத்திருந்தனர் என்று பட்டியலிடுகிறார்.

மேலும்

1947-48 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் நடுநிலைமை வகிப்பதாகக் கூறிவிட்டு அப்போதைய சிறிலங்கா அரச தலைவர் சேர்.ஜொன் கொத்தலாவல, பாகிஸ்தானை ஆதரித்தார்.

இதே "நடுநிலை" நிலைப்பாடுதான் 1962 ஆம் ஆண்டு இந்திய-சீன யுத்தத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவினால் உருவாக்கப்பட்ட வங்கதேசத்தை 1972 ஆம் ஆண்டு வரை சிறிலங்கா அங்கீகரிக்க மறுத்தே வந்தது.

அண்டை நாடான இந்தியாவுக்கு எதிரி நாடுகளாக- யுத்த களத்திலே மோதிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனேயே நல்லுறவு கொண்ட நாடாக சிறிலங்கா தொடர்ச்சியாக இன்னமும் இருந்து வருகிறது.

தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியாவிடமிருந்து தமக்கு இராணுவ உதவி கிடைக்கவில்லை என்றதும் சிறிலங்காவில் உள்ள இந்திய நிறுவனங்களை வெளியேற்ற முயற்சிப்பதும், இந்தியாவை சீண்டும் வகையில் பாகிஸ்தானுக்கு இராணுவ தளம் அமைக்க உதவுவதுமான செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவது என்பது சிங்களத்தின் வரலாற்றுப் புத்திதான்.

சிறிலங்காவும் சீனாவும்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்குமான நல்லுறவானது 1952 ஆம் ஆண்டு அரிசி மற்றும் ரப்பர் வர்த்தகத்தினூடாகத் தொடங்குகிறது.

1957 ஆம் ஆண்டுகளில் இரு நாடுகள் என்கிற அடிப்படையிலான இராஜதந்திர உறவாக வளரத் தொடங்கியது இது.

1961 ஆம் ஆண்டு திருமதி பண்டாரநாயக்க சீனா பயணம் மேற்கொண்டார். 1964 ஆம் ஆண்டு அப்போதைய சீனாவின் அரச தலைவர் சிறிலங்காவுக்கு நல்லுறவுப் பயணம் மேற்கொண்டார்.

1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தமிழகம் அதிர்ந்தது. தமிழ்நாடு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். முழுமையாகவே தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தார். தமிழீழத்தின் மூலை முடுக்கெல்லாம் பேரெழுச்சியும் கொந்தளிப்புமாக இருந்தது. சிறிலங்கா அரசாங்கம் மீது சீற்றத்துடன் இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் அப்போது ஏற்பட்ட சூழ்நிலைக்கு அமைவாக தமிழர் போராட்டத்தை ஆதரித்து நின்றது.

தமிழீழத்தின் ஆயுதப் போராட்டத்துக்கு ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்தது. சிங்களம் நடுங்கிப் போனது. அப்போதைய அரச தலைவர் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜயவர்த்தன வெளிநாடுகளின் உதவி கோரி ஓடிப்போனார். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, தென்கொரியா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என ஒட்டுமொத்த தென்கிழக்காசிய நாடுகளிடம் முட்டிப் பார்த்தார். இதில் சீனாதான் ஆதரவாக நின்றது.

ஜே.ஆர். அத்துடன் நிற்கவில்லை.

தனது வெளிவிவகார அமைச்சராக ஏ.சி.எஸ். ஹமீதை அமெரிக்காவின் இராணுவ உதவி கோரி அனுப்பினார். மலேசியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டார். இதற்கும் அப்பால் 1984 ஆம் ஆண்டு யூன் 14 ஆம் நாளன்று ஜே.ஆர். ஜயவர்த்தனவே சீனா, ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு நேரடியாகச் சென்று பேச்சுக்களை நடத்தினார். சீனாவின் அரச தலைவராக இருந்த லி சியான் நன்னிடம் புலம்பித் தள்ளினார். சீனாவின் பிரதமராக இருந்த ஜயோ ஜிங் யங்கிடமும் பேசினார்.

இந்தியாவுடன் மல்லுக்கு நின்ற சீனா இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறிலங்காவை ஆதரித்து நின்றது.

சீனாவுக்கான கதவுகளை அகலத்திறந்து வைப்பதாகக் கூறி கடற்படைக்கான இராணுவ உதவிகள் வேண்டும் என்றும் கேட்டார். சீனாவின் சக்திவாய்ந்த நபராக இருந்த கம்யூனிச இராணுவத்தின் தலைவர் டெங்க் ஜியாபோங்கையும் ஜயவர்த்தனா சந்தித்துப் பேசினார்.

ஜயவர்த்தன மற்றும் அவரது சகோதரரின் பயணத்திற்குப் பின்னர்தான் சிறிலங்காவுக்கான தனது ஆயுத உதவியை பெருந்தொகையாக சீனம் வழங்கியது. சீனா குழுவினரும் 1984 ஆம் ஆண்டு யூலையில் கொழும்பு வந்தது. அப்போது தேசிய பாதுகாப்பு அமைச்சராக லலித் அத்துலத் முதலியும் 1985 ஆம் ஆண்டு யூலை சீனா சென்றார்.

1984, 1990 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளின் இருதரப்பு பயணங்களினூடாக சீனாவும் சிறிலங்கா உறவில் மிக நெருக்கமான உறவு வளர்ந்து மிகப் பாரிய ஆயுத உறவாக விரிவடைந்தது.

2001 ஆம் ஆண்டில் சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டு மதிப்பானது 13 மில்லியன் அமெரிக்க டொலராகவும் உயர்ந்தது.

மன்னார் பிரதேசத்தில் சேதுக்கால்வாய் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் கொழும்பு துறைமுகத்தின் வர்த்தகத்துக்கு பேரிழப்பு ஏற்படும் என்ற நிலையில் சேதுக்கால்வாய் திட்டத்துக்குப் போட்டியாக அம்பந்தோட்டை துறைமுகத்தை சீரமைத்துக் கொண்டிருக்கிறது சீனா என்கிற வகையில் சீனாவும் சிறிலங்காவும் பின்னிப் பிணைந்து நிற்கின்றன.

ஆம். சீனாதான் இப்போது சிறிலங்காவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலன்.

(பாகிஸ்தான், சிறிலங்கா இடையேயான உறவு நிலை குறித்த புதினத்தின் செய்திகளையும் இந்தப் பின்னணியில் படிப்பாளர்கள் உள்வாங்கிக் கொள்ளவும்)

இந்தியா செய்ய வேண்டியது என்ன?

இந்தியா ஒரு நாடாக உருவாக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் பிரதேச பாதுகாப்பு நலன் கருதி நேபாளம், சிக்கிம், பூட்டான், மாலைதீவு நாடுகளின் வெளியுறவுக் கொள்கையை மறைமுகமாக தன் வசமே இந்தியா இன்றளவும் வைத்திருக்கிறது. சிறிலங்காவைப் பொறுத்தவரையில் எச்சரிக்கை மனோநிலையில் விட்டு வைத்திருந்தது.

வங்கதேசத்தின் போரின்போது பாகிஸ்தானுக்கு சிறிலங்கா பகிரங்கமாக உதவி செய்து தனது "துணிச்சலை' வெளிப்படுத்திக் கொண்டது.

1980 ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின் தொடக்க உரையில், "கடந்த காலத்தில் இந்து சமுத்திரமானது ஆங்கிலக்காரர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்தது. இன்று இப்பிராந்தியம் ஓர் அபாயகரமான கொந்தளிப்பாகக் காட்சியளிக்கிறது. இந்து சமுத்திரத்தில் கட்டு மீறியளவு அதிகரித்து வருகின்ற தீவிர இராணுவ மயமாக்கத்தின் வேகமானது 5,600 கிலோ மீற்றர் நீளமான இந்தியாவின் கடற்கரையோர எல்லைப்புறப் பாதுகாப்பை மிகப் பலவீனமாதாக ஆக்கியுள்ளது. எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அந்நிய நாடுகளின் இராணுவத் தளங்கள் இப்பிராந்தியத்தில் அமைந்திருப்பதையும் இப்பிராந்தியத்தில் அந்நிய யுத்தக் கப்பல்கள் பவனி வருவதையும் நியாயப்படுத்தக் கூடிய எந்த ஒரு கோட்பாட்டினையும் எம்மால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?" என்று கேள்வி எழுப்பியவர் இந்திரா காந்தி அம்மையார்.

இந்திரா காலத்தில் 1981 ஆம் ஆண்டு இந்திய வெளிவிவகார அமைச்சின் ஆண்டு அறிக்கையில், உலகப் பதற்ற நிலையின் மையம் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது இந்து சமுத்திரத்தில் கட்டுமீறி நிர்மாணிக்கப்படுகின்ற இராணுவ, கடற்படைத் தளங்களும் புதிய அணிச்சேர்வுக்கான தேடல்களும் மேற்காசியாவில் உள்ள பொதுவான பதற்ற நிலைமையும் பாகிஸ்தான் உட்பட இந்நாடுகளுக்கு விநியோகப்படும் நவீன ரக ஆயுதங்களும் இதனை ஊர்ஜிதப்படுத்துகின்றன. இத்தகைய வளர்ச்சிப் போக்குகள் இந்தியாவின் பாதுகாப்பை பெரிதும் பாதுகாப்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் அமைந்துள்ளன என்று எச்சரித்தது.

அதேபோல் 1980-1981 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையிலும் கூட, "டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள இராணுவத் தளம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதுடன் இப்பிராந்தியத்தின் அரசியல் நிலைப்பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது" என்று அமெரிக்காவை அச்சுறுத்தியது.

திருகோணமலை துறைமுகத்தில் இருந்த எண்ணெய் குதங்கள் (கிடங்குகளை) சீர்படுத்தும் பணியூடாகவும் வொய்ஸ் ஓஃப் அமெரிக்கா வானொலித் தளம் அமைப்பதற்கும் அமெரிக்காவுக்கு சிறிலங்கா சமிக்ஞை கொடுத்த போதும் அதிரடியாக பகிரங்கமாக இந்திரா அம்மையார் நிலைப்பாடு மேற்கொண்டார்.

இந்திராவின் கடுமையான நிலைப்பாட்டினால் திக்கித் திணறிப் போன சிறிலங்கா அமெரிக்காவிடமும் சரணாகதி அடையத் தவறவில்லை. அப்போதைய அமெரிக்க அரச தலைவர் றீகனுடன் பேச்சுக்கள் நடத்தினார் ஜயவர்த்தன. அமெரிக்காவிடம் இந்தியாவை காட்டிக் கொடுத்து இராணுவ உதவி கோரினார். அமெரிக்காவுக்கு வானொலி ஒளிபரப்புத் தளம் என்று சொல்லப்படுகிற உளவுத்தளம் அமைக்க திருகோணமலையில் 250 ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி தந்துவிட்டு வந்தார் ஜயவர்த்தன.

திருகோணமலையில் அமெரிக்காவின் தளம் அமைக்கப்படுகிற செய்தி அறிந்த இந்திரா அம்மையார், இந்திய நாடாளுமன்றத்திலேயே கடுமையாக சிறிலங்கா எச்சரித்தார். வேறு வழியின்றி சிறிலங்காவும் அமெரிக்காவும் வாலைச் சுருட்டிப் படுத்துக் கொண்டன.

இந்திராவைத் தொடர்ந்து அவரது மகன் ராஜீவ் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலும் இது இன்னமும் வலுவடைந்து ஒப்பந்த அளவிற்கும் சென்றது.

திருகோணமலை துறைமுகத்தில் இந்தியாவின் அனுமதியின்றி எந்த ஒரு நாட்டையும் அனுமதிக்கக் கூடாது என்று இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலேயே இடம்பெற்றது.

ஆனால் இந்திரா காந்தியைப் போல் இந்திய அரச கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. இந்திரா காலத்தில் இலங்கைப் பிரச்சனையில் தூதுவராக செயற்பட்ட ஜி.பார்த்தசாரதி மாற்றப்பட்டு அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு குழப்பகரமான நபரான ரொமேஷ் பண்டாரி நியமிக்கப்பட்டார்.

எந்த அமெரிக்காவை எந்த இந்திரா எதிர்த்து முழக்கமிட்டு வந்தாரோ அந்த இந்திராவின் மகன் ராஜீவ் அமெரிக்காவின் நாடாளுமன்றத்திலேயே சிறப்பிக்கப்பட்டு குளிரூட்டப்பட்டார்.

சிறிலங்காவோ சும்மாவும் இருக்கவில்லை. ராஜீவ் வலுவற்றவர் என்பதை உணர்ந்து கொண்ட சிறிலங்கா அரசாங்கமும், ராஜீவை பலவீனப்படுத்திய இந்திய கொள்கை வகுப்பாளர் குழுவும் கரம் கோர்க்க தடுமாற்றமுள்ள பிரதமராக ராஜீவ் மாற்றப்பட்டார்.

அதன் பின்னர் அரசியலின் போக்குகள் மாறிவிட்டன.

இலங்கை இனப்பிரச்சனையில் தமிழ்நாட்டின் எழுச்சியை மனதில் கொண்டு அரசியல் ரீதியாக காய்கள் நகர்த்தப்பட்டு- அதற்கு அமைவாக ஒட்டுமொத்த இந்திய அரச கட்டமைப்பும் இயங்கி வந்த முன்னைய முதிர்வு நிலைமை மாறி கொள்கை வகுப்பாளர்களின் கோட்பாடே இந்திய அரசின் கோட்பாடாக ஏறக்குறைய 15 ஆண்டு காலத்துக்கும் அதிகமாக உருவெடுத்து இறுக்கமடைந்து நிற்கிறது.

இந்த இறுக்கமான நிலைப்பாடு என்பது இந்தியாவை எதிர்த்து- இந்தியாவின் எதிரி சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டிருக்கிற சிறிலங்காவுக்குச் சார்பானதாக இருக்கிறது என்பதுதான் வேடிக்கை.

ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்காக எதிரி நாடுகளான பாகிஸ்தானும் இந்தியாவும் போட்டி நாடான சீனாவும் ஒருங்கிணைந்து சிறிலங்காவுக்கு ஆயுதங்களை வழங்குகின்றன.

சிறிலங்கா-சீனா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா தொடர்பில் இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி லெப். கேணல் தாக்குர் குல்தீப் எஸ். லுத்ரா எழுதிய மற்றொரு கட்டுரையில் இடம்பெற்றுள்ள விடயங்களை இந்த விடயத்துக்குச் சுட்டிக்காட்டுவது சரியாக இருக்கும் என கருதுகிறோம்.

அவர் கள எதிர்கூறல்கள் என்ற அடிப்படையில் முன்வைக்கிறார்....

- சர்வதேச அளவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்படும் போது சிறிலங்காவனது அமெரிக்காவின் பக்கம் நிற்குமாக இருந்தால் இந்த பிரதேசம் பாரிய போர்க்களமாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக தனது டிகோ கார்சியா, சிறிலங்காவின் கொழும்பு, திருகோணமலை மற்றும் சிங்கப்பூர் தளங்களிலிருந்து அமெரிக்கா இயங்கும். அந்த நிலையில் சிறிலங்கா- அமெரிக்கக் கூட்டை எதிர்ப்பதில் பிரதான பங்கேற்பாளர்களாக ஈழத் தமிழர்கள்தான் இருப்பார்கள்

- ஆசிய பிராந்திய அளவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்படும் நிலையில் சிறிலங்காவானது சீனாவின் பக்கம் நிற்கும் போது பாகிஸ்தானும் அந்த அணியில் இணைந்து முக்கூட்டு உருவாகும். அப்போது இந்தியாவின் கப்பற்படையை அந்த அணி வீழ்த்தும் சாத்தியம் உள்ளது. அந்த அணிக்கு எதிராக மூன்றுக்கும் மேற்பட்ட களமுனைகளை இந்தியா உருவாக்க வேண்டியதிருக்கும்.

- பிரதேச அளவில் சிறிலங்காவும் பாகிஸ்தானும் இணைந்து நிற்பதானது இந்தியாவுக்கு சிக்கலானதாக இருக்கும். அந்த நிலைமையில் இலங்கையில் உள்ள தமிழர்களை இந்தியா ஆதரிக்க வேண்டும். சிறிலங்காவோடு சீனா இணையாமல் திருகோணமலை துறைமுகத்தை இந்தியா காப்பாற்ற வேண்டியதிருக்கும் என்கிறார் அவர்.

ஈழத் தமிழர்களை ஆதரித்து இந்திரா அம்மையார் நின்ற நிலைப்பாடு மிகச் சரியானது என்பதையும் ஈழத் தமிழர்கள்தான் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதையும் ஒரு "கோட்பாடாக" அன்று இந்திரா புரிந்து கொண்டார்.

தமிழ்நாட்டில் தற்போதும் எழுந்திருக்கிற 1980-களின் எழுச்சியானது இந்திய கூட்டரசு அரசியலில் ஒருவித தாக்கத்தை உருவாக்கியிருக்கிறதுதான்.

ஆனால் இறுக்கமடைந்து நிற்கும் ஒரு வினோதமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்களோ குழப்பவாதத்திலும் இந்திய இறைமைக்கு எதிராகவுமே செயற்பட்டு வருகின்றனர்.

இப்போதும் தமிழீழத்தை இந்தியாவின் "றோ" முற்றுகையிட்டு குழப்பகரமான வேலைகளைச் செய்து வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சக்திகள் இருப்பதான தோற்றத்தை உருவாக்குவதற்காக இப்பவும் இந்தியாவின் "றோ" வானது, ஈ.என்.டி.எல்.எஃப். போன்ற குழுக்களுக்கு ஆட்சேர்க்கும் பணியில் தமிழ்நாட்டில் ஈடுபட்டு வருகிறது.

தன்னால் எந்த வகையான குழப்பங்களை எல்லாம் ஈழத் தமிழ் மண்ணில் உருவாக்க முடியுமோ அப்படியான செயற்பாடுகள் அனைத்தையும் "றோ" அதிகரித்துள்ளது.

ஆனால் இலங்கை இனப்பிரச்சனையில் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடானது வினோதமானது மட்டுமல்ல- இந்தியாவின் இறைமைக்கே விரோதமானதுதான் என்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் எந்த சிறிலங்காவுக்கு ராடார்களை அள்ளிக் கொடுக்க அறிவுறுத்தினார்களோ அந்த சிறிலங்காவேதான் இந்தியாவின் மன்னார் பிரதேசத்திலேயே போட்டி நாடான சீனாவை அகழ்வுப் பணிக்கு அனுமதித்திருக்கிறது.

இந்திய இறைமைக் காப்பாளர்களாக இருக்க வேண்டிய "றோ" போன்ற கொள்கை வகுப்புக் கோட்பாட்டாளர்கள் ஆயுத சந்தையில் இறைமையை கூவி விற்கும் கேடாளர்களாக் மாறியிருக்கிறார்கள்.

சிறிலங்கா விடயத்தில் முன்னைய இந்திய பிரதமர் "இந்திரா"வின் நிலைப்பாட்டை- இந்தியா மேற்கொள்வதுதான் தனது இறைமைக்கு விடுக்கப்பட்டிருக்கிற சவாலை முறியடிப்பதாக இருக்கும் என்கிற வரலாற்று ரீதியான கோட்பாட்டை "மன்னார்- சீனா" உள்நுழைவு இனியேனும் புரியவைக்கட்டும்.

புதினம்.கொம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.