Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி வணக்கம் - சயந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி வணக்கம் - சயந்தன்



நான் பார்த்த கணத்தில், வளவன் தன் காலின் கீழே, பச்சைநிற ஈரலிப்பான முதுகில் கருமை நிறப் புள்ளிகளைக் கொண்ட தவளையின் மீது, கையில் ஏந்தியிருந்த உடைந்த கொங்கிறீட் கல்லை நசுக் என்று போட்டான். புளிச் என்ற சத்தம் கேட்டது போலிருந்தது. நான் ஒருவித அசூசையான உணர்வில் ஆட்பட்டு கண்களை மூடி பற்களைக் கடித்தேன். வளவனுக்கு ஆறு வயதும் முழுதாக நிரம்பியிருக்கவில்லை. அவன் எனக்கு மருமகன் முறை, அக்காவின் மகன். பற்றிப்பிடித்திருந்த கை தளர்ந்தால் எந்நேரமும் இடுப்பில் வழியத் தயாராயிருந்த ஒரு தொளதொளத்த காற்சட்டையை மட்டும் அணிந்திருந்தான். உருண்டையான முகத்தில், அலட்சியமான பெரிய கண்களோடு காலையிலிருந்து அவன் வளவு முழுவதும் திரிகிறான். நான் அவனுக்குப் பின்னாலேயே அலைகின்றேன்.

வளவனை நேரிற் கண்டு ஒருநாள் பூரணமாயிருந்த்து. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நேற்றுக் காலையில் ஊருக்கு வந்திருந்தேன். கொழும்பு விமானநிலையத்திலிருந்து நேராகவே அக்காவீட்டுக்குப் பயணம். நீண்ட பயணங்களில் நினைவுப் பெருவெளிகளில் மனதை நுழைத்துச் சுகிப்பது அலாதியானது. நினைவுகள் சமயங்களில் பனியெனக் கவியவும் பலநேரம் தீயெனச் சுடரவும் செய்யும். அந்நாளில், இலங்கையை விட்டு வெளியேறிய காலத்தில் நான், அம்மா, பெரியம்மா, பெரியப்பா, எல்லோரும் முல்லைத்தீவில் இருந்தோம். அக்காவும் அங்கேதான் பகலைத் தின்னும் அடர் கானகத்தில் உருமறைந்த முகாமொன்றில் இருந்திருக்க வேண்டும்.

“இவனை வள்ளத்தில் இந்தியாவிற்குக் கொண்டுபோகப் போகின்றேன். இனியும் இந்த மண்ணில் வைத்திருக்க என்னிடம் மனத் தைரியம் இல்லை” என்ற அம்மா இராமேஸ்வரத்திலிருந்து 45 மைல் தொலைவிலிருந்த மன்னாரின் கடலோரக் கிராமம் ஒன்றிற்கு என்னையும் இழுத்துக்கொண்டு புறப்பட்டபோது, பெரியம்மாவும், பெரியப்பாவும் என்னை ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினார்கள். பெரியப்பாவின் விரலின் தொடுகை என்னில் துண்டித்த கணத்தில், யாருமற்ற வனாந்தர வெட்டையொன்றில் நான் தனித்து நுழைவதைப் போல் உணர்ந்தேன். என் சிறுவயது ஞாபகங்கள் அனேகம் அவர்களைச் சுற்றியே குவிந்திருந்தன. பெரியப்பாவிற்கு ஆண்பிள்ளைகள் இல்லை. பெருநாட்களில் அவர் என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார். பாலன் பிறக்கிற எல்லா நடுசிகளிலும் நான் அவர்களின் வீட்டிலேயே தோத்திரம் சொன்னேன். பெரியப்பா, பெரியம்மா, அக்கா, நான் எல்லோரும் வரிசையாக முழந்தாளிட்டு “மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார்.. மாடுகள் அடையும் தொழுவத்திலே மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே.’ என்று ஒருமித்த இசையில் பாடுவோம். அக்காவின் கணீரென்ற குரல் மற்றெல்லோரையும் மேவி ஒலிக்கும்.

பெரியப்பாதான் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுத்தந்தார். அவர்தான் வாசிகசாலையில் எடுத்துவந்து புத்தகங்களை அறிமுகம் செய்தார். அவரிடம்தான் என் முதற் கவிதையைக் காட்டினேன்.

“எங்களோடு நீங்களும் இந்தியாவிற்கு வாருங்கள்” என்று பெரியப்பாவையும் பெரியம்மாவையும் கேட்கமுடியாத காலமாயிருந்த்து. அக்கா இயக்கத்தில் இருந்தாள். மகளை விட்டு ஓர் அங்குலம் கூட அவர்கள் நகர்வதாக இல்லை. “அவள் திரும்பி வருவாள்.. ஏசப்பா என் மகளை அழைத்து வருவார்” என்று பெரியம்மா தினமும் மன்றாடித்தொழுதாள். கண்ணீர் வழிய மண்டியிட்டு அவள் ஜெபிப்பாள். “விண்ணகத் தந்தையே, உமது தொழுவத்திலிருந்து வழிதவறிச் சென்ற உம் பிள்ளையை, மீண்டும் உம்மிடம் அழைத்துக் கொள்வீராக என்று, உம்மை மன்றாடுகின்றேன்..”

அக்கா இயக்கத்தில் சென்று சேர்ந்தது ஓர் ஆச்சரியமான தருணம்தான். என்னை விடவும் அவள் இரண்டு வயது மூத்தவள். இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு சனிக்கிழமை காலை, திருப்பலிக்குக் கூடியிருந்த யாகப்பர் தேவாலயத்தின் கூரையில் விழுந்த விமானக்குண்டுவீச்சில் அகப்படும்வரை கரியால் மெழுகிய இருட்டைத்தவிர்த்து அவள் வேறெதற்கும் பயந்தவள் இல்லை. அன்றைய சம்பவத்தில், வேரோடு சரிந்த சுவரொன்றின் இடிபாடுகளுக்கிடையில் அவள் நசுங்கியிருந்தாள். உடல்நோவும், சிதறிய கொங்கிறீட் கற்கள் குத்திய சிராய்ப்புக் காயங்களும்தான். ஆனால் கண்ணுக்கு முன்னால் குருதி பிசிறியடிக்க இறுதி மூச்சைத் தொலைத்த உயிர்களும், எஞ்சிய தேவாலயச் சுவர்களில் எதிரொலித்த மரணக் கூச்சலும் அவளைப் பித்துப்பிடித்தது போலாக்கின. சிதறிக்கிடந்த மனித இறைச்சிக் குவியல்களில் புழுதியைக் குழைத்து அப்பிய உடலோடு கால்களைப் புதைத்து நடந்து வந்தபோது, அவளுக்கு வலிப்பு வருவது போல உடல் வெடுக் வெடுக்கென உதறத்தொடங்கியது. மூர்ச்சையானாள்.

அன்றிலிருந்து சின்னதொரு வெடிச்சத்தமும் அவளைக் கலவரப்படுத்தியது. தூரத்தில் கேட்கும் வெடியொலிகளை பொதுவாக நாங்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அவள் அப்படியல்ல, அந்நேரங்களில் தண்ணீரில் பலவந்தமாக அமிழ்த்தப்பட்டதைப்போல, முகம் வெளிற கண்களில் பீதி உறையத்தொடங்கும். யாருடனும் பேச மாட்டாள். தனித்திருப்பாள். அவளின் அறையில் ஒரு கனதியான தேக்குமர மேசை இருந்தது. பழைய காலத்து மேசை. சீமெந்துத் தரையில் அதனைத் தேய்த்து இழுத்தால், பூம்ம்ம்… என்றொரு சத்தம் வரும். அது ஓரளவுக்குக் கிபிர் விமானம் ஆகாயத்தைக் கிழிக்கும் ஓசையை ஒத்திருக்கும். அக்கா பகலில் நித்திரை கொள்ளும் நேரம் பார்த்து பகிடியாக மேசையை இழுத்துவிட்டு ஓடியிருக்கிறேன். அவள் துடிக்கப்பதைக்க எழுந்து சுதாகரித்து “சனியனே” என்று திட்டித் துரத்துவாள்.

 


e.jpg

 

நன்றாக நினைவிருக்கிறது. முல்லைத்தீவிற்கு இடம்பெயர்ந்து குடிசைகளை அமைத்துக்கொண்டு இரண்டொரு மாதங்கள் ஆகியிருந்தன. ஷெல் சத்தங்களோ துப்பாக்கி வேட்டுக்களோ இப்பொழுது கேட்பதில்லை. ஆயினும் ட வடிவப் பதுங்குகுழிகளை முற்றத்தில் எட்டித்தொடும் தூரத்தில் வெட்டியிருந்தோம். அக்கா சற்று இயல்படைந்திருந்தாள். உயர்தரப் பரீட்சைக்காக அவள் கல்லூரியொன்றில் இணைந்திருந்தாள். அது சற்றுத் தொலைவிலிருந்தது. சிவப்பு நிற லுமாலா சைக்கிள் ஒன்றை பெரியப்பா அவளுக்கு வாங்கிக் கொடுத்தார். ஒருநாள் காலை, அவள் வீட்டிலிருந்து புறப்பட்டு ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும். இரண்டு கிபிர் விமானங்கள் சமாந்தரமாகப் பாயும் கூரிய ஈட்டிகளைப்போல வானில் நுழைந்தன. உயிரைப் பிராண்டி வழித்தெடுக்கின்ற இரைச்சல்.. பதுங்கு குழிக்குள் ஓடினோம். “ஐயோ, மகள் தெருவில் தனிய..” பெரியம்மா அடிக்கடி குழிக்குள்ளிருந்து தலையை உயர்த்திப் பதைத்தாள். கிபிர் நேராக காதிற்குள் நுழைந்து மூளையின் மென் சவ்வுகளைத் சீவியெறிவதைப்போல, இரைச்சல் ஆர்முடுகியது. சட்டென்று, கண்ணாடி மாளிகையொன்று நொருங்கி விழுவதைப்போல பொல பொல எனச்சத்தம் கேட்டது. “போட்டுவிட்டான்.. போட்டுவிட்டான்” ஒரு தவளையைப்போல, பதுங்கு குழியில் படுத்திருந்து கத்தினேன். காற்று ‘பூம்..’ என்று அதிர்ந்து அடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக இடிமுழக்கம் தணிவதைப்போல கிபிரின் இரைச்சல் நகர்ந்து மெதுவானபோது நானும் பெரியம்மாவும், தெருவுக்கு விரைந்தோம். அக்கா மூச்சிரைக்க ஓடிவந்தாள். “எங்கே விழுந்ததென்று தெரியவில்லை, இயக்கத்தின் வாகனத்தில் காயப்பட்ட சனங்களை ஏற்றிக்கொண்டு இந்த வழியால்தான் போகிறார்கள். கண்கொண்டு பார்க்க முடியாது. வாகனம் முழுவதும் இரத்தமும் ஓலமும்..” என்றாள்.

“அக்கா சைக்கிள் எங்கேயடி” என்று நான் கேட்டேன். அவள் நடுங்கும் குரலில், “சிவப்பு நிறத்தைக் கண்டால், குண்டு வீசுவான். அதனால் வீதியோரம் எறிந்துவிட்டு ஓடிவந்துவிட்டேன்” என்றாள். நான் சிரிப்பை அடக்கப் பிரயத்தனப்பட்டு தோல்வியுற்றேன். “நல்ல வேளை வெள்ளைச் சட்டையோடு போனாய்” என்றேன். அக்கா முகத்தைப் பொத்திக்கொண்டு ஓடினாள். சுவரில் சாய்ந்து அழத்தொடங்கினாள்.

அக்கா இயக்கத்தில் இணைந்ததை எவராலும் நம்பமுடியவில்லை. அவள் கடைசிவரை அதே பயந்த சுபாவத்தோடுதான் இருந்தாள். எந்தவொரு கணத்தில் அப்படியொரு முடிவை எடுத்தாள் என்பது பெரும் புதிராயிருந்தது. ஏன் போகின்றேன் என்று ஒரு கடிதமும் எழுதி வைக்கவில்லை. கல்லூரியால் மூன்று மணிக்கெல்லாம் வந்துவிடுபவள் வராதபோது பெரியம்மா அந்தரிக்கத் தொடங்கினாள். பெரியப்பா விசாரிக்கச் சென்றார். இருள் மூடத்தொடங்கியபோது அவர் சைக்கிளை மரத்தில் சாய்த்துவிட்டு ஒரு பிணம்போல வந்து குந்தினார். ஒரு குழந்தைப்பிள்ளையைப் போல அவர் அழத்தொடங்கியபோது எனக்குப் புரிந்திருந்தது. அன்றைக்கு அக்காவின் கல்லூரியிலிருந்து 13 பேர் இயக்கத்திற் சென்று சேர்ந்தார்கள். அடுத்தநாள் முழுவதும் நானும் பெரியம்மாவும் அருகில் உள்ள முகாம்களில் சென்று விசாரித்தோம். கடைசியாக ஓரிடத்தில் அவளது சிவப்பு நிற லுமாலா சைக்கிளைத் தந்தார்கள். பெரியம்மா அந்த முகாமின் வாசலை விட்டு அகலமாட்டேன் என்று தரையில் கால்களைப் பரவி உட்கார்ந்து கதறத்தொடங்கினாள். “அவளை ஒருதடவை என் கண்ணில் காட்டுங்கள் என் ஐயாக்களே” என்று புரண்டழுதாள். அந்தக் கணத்தில் அக்காவை மனதிற்குள் திட்டித்தீர்த்தேன்.

“அவள் பயந்த குழந்தை. வீட்டைத் தவிர வேறெங்கும் தங்கி நிற்க மாட்டாள், எப்படியும் வந்துவிடுவாள்..” என்று மூன்று வருடங்களாகப் பெரியம்மா சொல்லிக்கொண்டிருந்தாள். அவளது மன்றாட்டங்களும் வேண்டுதல்களும் அக்காவின் வருகைக்காயிருந்தன. அப்படியொருநாள் அக்கா வந்தாள்.

வாசலில் மோட்டார் சைக்கிளொன்றின் உறுமல் தணிந்து ஓய்ந்ததை நான் கேட்டேன். அதில் உட்கார்ந்து கால்களால் நிலத்தில் உந்தி உருட்டியபடி அக்கா உள்ளே வந்தாள். அவளின் பின்னால் இன்னொரு தோழி அமர்ந்திருந்தாள். இருவரும் சீருடையில் இருந்தார்கள். அக்கா தலைமுடியை தோளுக்கு மேலே கத்தரித்திருந்தாள். அது அவளுக்குப் புதியதொரு தோற்றத்தைத் தந்திருந்தது. கழுத்தில் தொங்கிய கறுப்புக் கயிறை சீருடையின் இடது பொக்கற்றில் நுழைத்திருந்தாள்.

“என் பிள்ளை வந்துவிட்டாள்” தளதளத்த குரலோடு பெரியம்மா ஓடிச்சென்று அக்காவை கட்டித் தழுவினாள். அவளது அணைப்பிற்குள் உடலை ஒடுக்கி நின்று கையிற் கட்டியிருந்த கறுப்பு நிற மணிக்கூட்டில் அக்கா நேரத்தைப் பார்த்தாள்.

“வேறொரு அலுவலாக இந்தப்பக்கம் வந்தோம். வந்த இடத்தில் இங்கேயும் வந்தேன்.”

“பின்னேரம், அப்பா வந்துவிடுவார். இரவு தங்கிவிட்டு விடியப் போகிறாயா” பெரியம்மா கெஞ்சுவதைப்போலக் கேட்டாள்.

அக்கா பதிலொன்றும் சொல்லாமல் சிரித்தாள். தானே குசினிக்குள் சென்று எலுமிச்சைச் சாறு கரைத்து நிறையச் சீனிபோட்டு எடுத்துவந்து தோழிக்கும் கொடுத்தாள். ஒரு மிடறு குடித்துவிட்டு என்னைப்பார்த்து “என்னடா செய்கிறாய்” என்றாள். “இருக்கின்றேன்..” என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு நான் அமைதியானேன்.

பெரியம்மா அக்காவின் நெற்றியை வாஞ்சையோடு தடவினாள். “உனக்குப் பயமாயில்லையா மகள்” என்று கேட்டாள். பக்கத்திலிருந்த தோழி ஓங்கிச் சிரிக்கத்தொடங்கினாள். தொண்டையில் புரக்கேறி எலுமிச்சைச் சாறு மூக்காற் சிந்தியது. இப்பொழுது பெரியம்மா அத்தோழியின் தலையில் மெதுவாகத்தட்டி ஆசுவாசப்படுத்தினாள். “அதை ஏன் கேட்கிறீர்கள், இருட்டென்றால், நாலு பேர் உங்கள் மகளுக்கு அருகிலேயே நிற்கவேண்டும்.”

“சும்மா இரடி” என்று அக்கா சொன்னாள். “இன்னொரு நாளைக்கு வருகின்றேன் அம்மா” என்று சென்று மோட்டார் சைக்கிளை உதைத்தாள். அதுவொரு சிவப்பு நிற ஹொண்டா சி.டி 90 ரக வண்டி. இரண்டு தரம் அதன் அக்சிலேற்றரை முறுக்கினாள். பிறகு காற்றில் பறந்து போனாள். பெரியம்மா கணமும் தாமதியாது ஓடிச்சென்று மண்டியிட்டாள். “பரலோகத் தந்தையே, உம் பிள்ளைக்கு நீரே உறுதுணையாயும், பக்கபலமாயும் அருகிருந்து காத்துக்கொள்வீராக என்று உம்மை மன்றாடுகின்றேன்..”

எனக்கு ஆச்சரியமாயிருந்தது. எப்பொழுதும், ஏதாவது பகிடிவிட்டும், சமயங்களில் அவளைக் கோபமூட்டியும் சீண்டுகிறவன் அன்றைக்கு அக்கா நின்ற வரைக்கும் வார்த்தைகளைத் தொலைத்து ஒரு மூலையில் ஒடுங்கியிருந்தேன். வாடி, போடி என உரையாடும் நெருக்கத்திலிருந்தவள் திடீரென்று தொலைவிற் சென்றது போலிருந்தது. ஏதேனும் குற்ற உணர்வினால் அப்படியிருக்கலாம் என்று யோசித்தேன். அன்றைக்குப் பிறகு அக்காவைக் கண்டதில்லை.

நான் இந்தியாவில் நல்லதொரு ஏஜென்டைப் பிடித்தேன். சென்று சேர்ந்த பிறகே காசு தருவேன் என்ற ஒப்பந்தத்தில், லண்டனிற்கு வெறும் நான்கே நாட்களில் போய்ச்சேர்ந்தேன். அந்நாட்களில், பத்து மாதங்களுக்கும் மேலாகப் பயணித்தவர்களும் உண்டு. சீக்கிரம் உழைத்துத் தா என்ற ஒப்பந்தத்தில் ஏஜென்டுக்கான பணத்தை சுவிஸிலிருந்தும் பிரான்ஸிலிருந்தும் மாமன்கள் இறைத்திருந்தார்கள். அகதித்தஞ்சம், வழக்கு, விசா, வேலையென்று காலங்கள் ஓடித்தீர்ந்தன. பெரியப்பாவை பாம்பு தீண்டி இறந்த செய்தி பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு வந்தபோது இரண்டாவது வேலையின் (அதையொரு பெற்றோல் ஸ்ரேஷனில் செய்தேன்.) இரவுநேர ஷிப்டிற்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். பெரியப்பாவை என்றாவது நேரிற் காணுவேன் என்றுதான் நம்பியிருந்தேன்.

அக்கா திருமணம் செய்துகொண்டாள் எனக் கிடைத்த கடிதத்தில்தான், அவள் யுத்தமுனையொன்றில் காலில் காயமாகியிருந்தாள் என்றும், பின்னர் மருத்துவப் போராளியாகப் பணியாற்றினாள் என்றும், அக்காலங்களில் சக போராளி ஒருவனைக் காதலித்திருந்தாள் என்றும் எழுதப்பட்டிருந்தது. ஒரு சட்டகத்திற்குள் அடக்க முடியாதவாறு அவளின் வாழ்வு திருப்பங்களோடு நகர்கின்றது என்று ஆச்சரியப்பட்டேன். அவளைப்பற்றி அறிய நேர்ந்த போதெல்லாம், திடீர் திடீரென்று காட்சிகள் மாறுவதைப்போல, வெவ்வேறு பாத்திரங்களை அவள் ஏற்றிருந்தாள். கடைசியாக வளவனுக்கு அம்மா ஆகியிருந்தாள். அப்பொழுதுதான் யுத்தம் ஆட்டு மந்தையொன்றைச் சாய்த்துச் செல்வதுபோல சனங்களைக் கடற்கரை ஒன்றை நோக்கி விரட்டத்தொடங்கியிருந்தது.

அக்காவைப் பற்றியோ பெரியம்மாவைப் பற்றியோ அதன்பிறகு ஒரு தகவலும் இல்லை. எல்லாச் செய்திகளும் இரத்தத்தில் தோய்ந்திருந்தன. இணையத்தில் குருதி வழிகிற பிஞ்சு உடல்களைக் கண்ட போதெல்லாம் இன்னமும் முகம் தெரியாத வளவன் நினைவாகவே இருந்தது. அவனைப் பற்றிய கற்பனைச் சித்திரமொன்றை எனக்குள் வரைந்திருந்தேன். பெரியப்பாவைப்போல, அடர்த்தியான இமைகள், கூரான மூக்கு, சற்றே ஒடுங்கிய எப்பொழுதும் சிரிக்கிற முகம்…

ஓர் இராட்சத மிருகம் தன் அகன்ற நாவால் நிலத்தை வழித்துச் சுருட்டித் தின்று செரித்ததுபோல, ஒருநாள் எல்லாம் ஓய்ந்தது. புகை அடங்கிய வெளியில் வளவனை இடுப்பில் சுமந்தபடி அக்கா வெளிப்பட்டாள். அத்தான் சரணடைந்தார். அன்றைக்கு பெரியம்மாவின் 18வது நினைவு நாள்.

0 0 0
என்னைக் கண்டமாத்திரத்தில் மெல்லிய கேவல் ஒலியில், புறங்கைகளால் அக்கா கண்ணீரைத் தேய்த்தாள். கண்ணீரைத் தடுக்க முடியாதவளாய், முகத்தை பொத்தி அழத்தொடங்கினாள். அப்பொழுது அவள் சிறு சத்தத்திற்கும் அச்சப்படும் பழைய அக்காவாகத் தோன்றினாள். அவளைச் சீருடையோடு கண்டது, பனிப்புகார் மூடிப்பரவிய ஒரு காலை நேரத்துக் கனவு போலிருந்தது. தலையைக் குனிந்து நின்றேன். அக்காவின் சட்டையின் பின்னால் ஒளிந்துகொண்டு என்னைப் பார்ப்பதும், தலையை உள்ளிழுப்பதுமாக வளவன் நின்றான். அவனைத் தூக்கி முத்தமிட்டேன். அவன் அதை விரும்பாதவனாக கன்னங்களை அழுத்தித் துடைத்தான்.

“உனக்கு அவரைத் தெரியாது என்ன..” என்று இரவு அக்கா கேட்டாள். “உன் அத்தான் ஷெல் பக்டரியொன்றுக்குப் பொறுப்பாயிருந்தவர். சொந்த இடம் சம்பூர் திருகோணமலை. ஒருதடவை, பக்டரியில் தவறுதலாக வெடித்தபோது, முகத்திலும் நெஞ்சிலும் பயங்கரக் காயங்கள் ஏற்பட்டன. அப்பொழுது சிகிச்சைக்கு வந்த இடத்தில்தான் பழக்கம்.” அவள் அத்தானின் புகைப்படமொன்றைக் காட்டுவாள் என்று எதிர்பார்த்தேன். அவள் வளவன் பிறந்தபோது எடுத்த ஒரு சில படங்களைக் காட்டினாள். அவற்றில், அத்தான் இல்லை. பிறகு அவளாகவே “அவருடைய ஒரு படமும் என்னிடம் இல்லை. இருந்ததெல்லாம் சீருடையோடு எடுத்த படங்கள். ராணுவக்கட்டுப்பாட்டுக்குள் போகும்போது, கிழித்து எறிந்துவிட்டுத்தான் போனேன்.” என்றாள். நான் பெருமூச்செறிந்தேன். “ம்” கொட்டிக் கேட்கிற கதைகளா இவை.. ?

“உன் அத்தான் இறுதிக்காலத்தில் எங்களோடு இருக்கவில்லை. ஷெல் பக்டரிகள் இயங்காமற் போன பிறகு துயிலுமில்லங்களுக்கான பொறுப்பில் நின்றார். அவையும் ஓரிடமென்று நிலைத்து இருக்கவில்லைத்தானே. கிடைக்கிற சிறு சிறு துண்டு நிலங்களில் எல்லாம், குழிகளைவெட்டி உடல்களை இறக்கி மூடினார்கள். அவர் என்றைக்காவது பயன்படுமென்று போராளிகளின் பெயர் விபரங்கள், புதைத்த இடங்கள் என எல்லாத் தரவுகளையும் ஆவணப்படுத்தினார். அகப்படுகிற காகித அட்டைகளில், பெயரையும், திகதியையும் எழுதி புதைத்த இடங்களில் நட்டார். அவரைச் சந்திக்கச் சென்ற எல்லாச் சமயங்களிலும் வளவனையும் இடுப்பில் சுமந்தே சென்றேன். அவனைத் தனியே விட்டு ஓர் அங்குலம் கூட நகரவில்லை. எப்பொழுது போனாலும், ஒரு தொகை உடல்கள் அடக்கம் செய்வதற்காக வரிசையாக வளர்த்தப்பட்டிருந்தன. அருகிலே, பெற்றவர்கள் கதறி அழுதார்கள். யாரும் அழாத உடல்களும் கிடந்தன. அழுவதற்கும் ஆட்கள் இல்லாத காலமொன்று வருமென்று நினைத்திருப்போமோ.. இறுதி வணக்க நிகழ்வுகள் இரண்டொரு நிமிடத்திற்குள் முடிந்தன. குழிகளை மூடிக்கொண்டேயிருந்தார்கள். அதை விஞ்சிய வேகத்தில் உடல்கள் வந்துகொண்டேயிருந்தன. ஒருநாள் உன் அத்தான் சொன்னார். காகித அட்டைகளில் வீரச்சாவு என்று எழுதும்போது எனக்குக் கை நடுங்குகிறது. முன்னரென்றால் இந்தக் குழிகளின் முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தோம். இப்பொழுது கூனிக்குறுகி நிற்கின்றேன். ”

அக்கா நிறுத்தினாள். தூக்கத்தில் உடலை அசைத்த வளவனை திரும்பிப் பார்த்தாள். தீனமான பார்வையாயிருந்த்து. ஒருவேளை அவளின் நினைவுகளைக் கிளறி, துயரை அதிகரிக்கின்றேனோ என்று தோன்றியது.

“இவனை நினைக்கும் பொழுதுதான் மனதை ஆற்ற முடியவில்லை. என்னை விடு. இரத்தமும் சதையுமே எனக்கு வாழ்க்கையாயிருந்தது. உச்சச் சண்டை நடக்கிற நாட்களில், மருத்துவப் போராளிகள் இரத்தத்தில் குளித்துத்தான் நிற்போம். வலி பொறுக்கமுடியாத முனகல்களும், வெறிகொண்டது மாதிரியான ஆவேசக் குரல்களும் பழகியிருந்தன. இரண்டு கைகளும் இரண்டு கால்களும் துண்டாகி, மயக்கம் தெளிந்தபோது, “அக்கா எனக்குச் சயனைட் குப்பியைத் தாருங்கள். சாகப்போகின்றேன்” என்று கெஞ்சிய பிள்ளையொருத்திக்கு மனதைக் கல்லாக்கிக்கொண்டு சிதைவை வெட்டி அகற்றியிருக்கின்றேன். வளவனுக்கு, அப்படியல்ல. அவன் குழந்தை. அவனைச் சுற்றி நிறையச் சாவுகள் நடந்தன. சிதறிய மூளை, பிய்ந்த கால்கள், வயிற்றைப் பிளந்து கொட்டிய குடல், இறைச்சிக் குவியல் மாதிரிக் கிடந்த உடம்பு, எல்லாவற்றையும் அவன் கண்ணால் கண்டான். ஆரம்பத்தில் அவனது கண்களை நான் சட்டென்று பொத்துவேன். வேண்டாம், வளவன்.. நீங்கள் இதையெல்லாம் பார்க்கக் கூடாது என்று வேறெங்காவது கொண்டு போவேன். நாளாக நாளாக, நானும் எத்தனைக்கென்று கண்களைப் பொத்துவது. உன் அத்தானைத் தேடிப்போன நேரமெல்லாம், திமிறிக்கொண்டு அந்த நிலமெல்லாம் ஓடித்திரிவான். நான்கு வயதில் நடந்ததெல்லாம் அச்சொட்டாக நினைவு வைத்திருப்பானா என்று தெரியவில்லை. ஆனால் டொக்டர் அதற்குச் சாத்தியமிருக்கின்றது என்றுதான் சொல்லியிருக்கிறார்”

நான் நிமிர்ந்து “டொக்டரிடம் ஏன்…” என்று இழுத்தேன். உள்ளுக்குள் கலவரமாயிருந்தது.

“இவன் வளவில் பூச்சி, பூரான், தவளை, ஓணான் ஒன்றையும் விட்டுவைப்பதில்லை. மண்டை விறைத்தவன் போல, பின்னாலேயே சென்று, கல்லைத் தூக்கிப்போட்டோ, தடியால் அடித்தோ கொன்று விடுகிறான். ஓணான் முட்டைகளைக் குத்தி உடைக்கின்றான், குருவிக் கூடுகளை கலைக்கின்றான்… இதென்ன குரூரம் என்று தெரியவில்லை. தவளையைக் கொன்று புதைத்து பத்துப் பதினைந்து நாட்களில் எலும்புகளைக் கிளறி எடுக்கின்றான். கோபத்தில், இரண்டு தட்டுத் தட்டினால் இன்னுமின்னும் முரட்டுக் குணமாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அவன் முகத்தைப்பார். நம்ப முடிகிறதா.. அடிக்கவும் முடிவதில்லை..” அக்காவில் கண்ணீர் திரண்டது. நான் வளவனுக்கு அருகாகச் சென்று அமர்ந்தேன். அவனின் முதுகைத் தடவிவிட்டேன். அவனின் முகம், முன்னர் செய்திகளில் பார்த்த குழந்தைகளை நினைவுபடுத்திற்று.

“இன்னும் கொஞ்சம் நாட்களில் அப்பாவைப்பற்றிக் கேட்பான். இப்பொழுதும் யோசிக்கக்கூடும்” என்றாள் அக்கா.

அத்தானைப் பற்றி, என்னிடம் ஒரு முன்தீர்மானம் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாட்களையும் நம்பிக்கை என்ற இழையில், பற்றிப் பிடித்திருப்பவளிடம் என் வார்த்தைகளை நான் சொல்ல முடியாது. கண்ணால் கண்டிராத, ஒரு கற்பனை மனிதராக அத்தான் என் மனதில் படிந்திருந்தார். அதனாலேயோ என்னவோ, மனதில் அதிக உளைச்சலின்றி இருந்தது.

“என்ன நடந்திருக்கும் என்பதை எனக்கும் ஊகிக்க முடிகிறதுதான்” என்றாள் அக்கா. “அவரை மீட்டுக்கொண்டு வருவதல்ல… முதலில் வளவனுக்குச் சொல்வதற்கு ஒரு பதில் வேண்டும். இரண்டாவது புருசனைப்பற்றி அக்கறையில்லாமல் இருக்கிறாள் என்ற இந்தச் சனங்களுக்குச் சொல்ல ஒரு பதில் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் இத்தனை அலைச்சலும், மனுக்களும், ஆர்ப்பாட்டங்களும். ஓரளவிற்கு எல்லாச் செய்திகளுக்கும் தயாராகத்தான் இருக்கின்றேன். அவரும் தயாராகித்தான் இருந்தார். கடைசி நாளில், அதிகாலையிலேயே அவர் எங்களிடம் வந்துவிட்டார். இன்றைக்கு நாங்கள் இறந்தால் வரலாற்றில் காணாமற் போனவர்கள் ஆவோம். ஒருவேளை பிழைத்துக்கொண்டால் வரலாற்றில் தூக்கி எறியப்பட்டவர்கள் ஆவோம் என்றார். ஓடி ஓடித்தான் தூரத்தைக் கடந்தோம். சற்று வெளிச்சம் பரவியபிறகு வீதியோரத்தில் திறந்த பதுங்குகுழி ஒன்றில், இருபது முப்பது உடல்கள் குவிக்கப்பட்டிருந்ததை நான் கண்டேன். அத்தனை பேரும் போராளிகள். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம். துர்நாற்றமிருந்தது. உன் அத்தான் அப்படியே நிலத்தில் முழந்தாளில் விழுந்தார். மனம் பிறழ்ந்தவர் போல கைகளால் மண்ணை விராண்டினார். விரித்த உள்ளங்கைகளில் மண்ணை ஏந்தி “ஓ….” என்று அலறினார். எனக்குத் தெரியும். நெஞ்சுத் தசைகள் உரிந்து காயப்பட்ட நேரத்தில் கூட அழாமற் கிடந்தவர் அவர். இப்பொழுது பொங்கிப்பொங்கி அழுதார். அவரை இழுத்தேன். வேர் விட்டது போல நகரவேயில்லை. குனிந்து காதுகளில் “வளவனுக்காக..” என்று கெஞ்சினேன். அப்பொழுதுதான் மெதுவாக எழுந்து ஒரு நடைப்பிணம்போல நடந்தார். ராணுவத்தினர் மிகச்சாதாரணமாக அவரை ஒரு போராளியென்று அடையாளம் கண்டார்கள். இவரும் அதிகம் தர்க்கப்படவில்லை. என் அருகாக வந்து “நீ போராளி என்பதைச் சொல்லத்தேவையில்லை. யாராவது காட்டிக்கொடுக்கும் வரை நீயாகச் சொல்ல வேண்டாம்… வளவனுக்காக..” என்றுவிட்டு நடந்தார். அவர்கள் எல்லோரையும் ஒரு பஸ்ஸில் ஏற்றினார்கள். பஸ் புறப்பட முன்பாகவும், எந்த உணர்ச்சியுமற்ற முகத்தோடு உள்ளிருந்து கை காட்டினார். நான் பஸ் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். ”

நுளம்புகள் இரைந்தன. ஒன்றிரண்டு என்னில் கடித்தன. அக்கா எழுந்து சென்று பட்டுச் சேலையொன்றை எடுத்துவந்து வளவன் மேலே போர்த்தாள். “கொசு வலை இருக்கிறது. இவன் அதன் உள்ளே படுக்க மாட்டான். என்னாலேயே முடிவதில்லை. ஏதோ பதுங்கு குழிக்குள் அடைந்து கிடப்பதபோல ஒரு அமுக்கம் மாதிரி மூச்சு முட்டுகிறது”

“வளவன் என்னோடு படுக்கட்டும்” என்றேன். “அவன் கையாற் காலால் உதைவான். கவனம்” என்றாள் அக்கா. “ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் அதிகாரி ஒருவர் நாளை ரவுணுக்கு வருகிறார். மனுக் கொடுக்க வேண்டும். காலையிலேயே போய்விடுவேன். அவனைப் பார்த்துக்கொள்.”

அக்கா நாங்கள் விழித்துக்கொள்ள முன்னரே புறப்பட்டிருந்தாள்.

0 0 0

வளவன் இப்பொழுது நிலத்தில் குந்தியிருந்தான். கொங்கிறீட் கல்லை நகர்த்தி, நசுங்கிக்கிடந்த, தவளையை அவன் வெறித்துக்கொண்டிருந்தான். எழுந்து சென்று அவனை அழைத்து வரலாமா என்று நினைத்தேன். ஆனால், பிதுங்கிக்கிடக்கும் தவளையை கற்பனையில் நினைத்தபோது வயிற்றைப் புரட்டியது.

“வளவன், நீங்கள் நல்ல பிள்ளையல்லவா, இங்காலே வாங்கோ” என்று அழைத்தேன். அவன் என்னை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. காற்சட்டை இடுப்பிலிருந்து நழுவ நழுவ அதை இழுத்துப்பிடித்தபடி ஓடிப்போய், பெரிய பூவசரம் இலையொன்றைப் பறித்துவந்தான். தவளையின் உடலை சுள்ளித்தடிகளால் நகர்த்தி இலையில் ஏற்றினான். மறுபடியும் ஓடிச்சென்று, வேலியோரமாக வீசப்பட்டிருந்த பழைய சிரட்டையை எடுத்துவந்து மண்ணை வறுகிக் கிண்டினான். தவளையை இலையோடு அச்சிறுகுழிக்குள் இறக்கியவன் கன்னத்தில் கையை ஊன்றி அதையே பார்த்துக்கொண்டிருந்தான். எனக்குள் பதற்றம் நுரைக்கத்தொடங்கியது. வளவன் கண்களிலிருந்து இருசொட்டுக் கண்ணீர் மண்ணில் இறங்கியதை நான் கண்டேன். என் உடல் நடுங்கித் தணிந்தது. வெடுக் என்று ஓடிப்போய், அவனை அள்ளித் தூக்கி மார்பில் சாய்த்தேன். “வளவன் அச்சாப்பிள்ளையல்லவா, நாங்கள் மணலில் வீடு கட்டி விளையாடுவோமா” என்று அவனின் நெற்றியை வருடியபடி கேட்டேன். காலால் மண்ணை நிறைத்துக் குழியை மூடினேன். அப்பொழுதும் தவளையைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.

வளவன் என் அணைப்பினின்றும் திமிறினான். கால்களால் உதைந்தான். மார்பைக் கைகளால் உந்தித் தள்ளினான். “என்னை இறக்கி விடுங்கள். நான் இறுதி வணக்கம் செய்யப்போகின்றேன்” என்று அழத்தொடங்கினான்.

என் குரல் உடைந்து அந்த நிலமெங்கும் வழியத்தொடங்கியது.

(அம்ருதா ஜனவரி இதழில் வெளியானது)
ஓவியம்: Yulanie Jayasena

 

http://sayanthan.com/index.php/2014/01/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த எழுத.............?? :(  :(

நன்றி  பதிவுக்கு.........

  • 2 weeks later...

வார்த்தையில்லை வாசித்த பின்பு! :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.