Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் களத்திலிருந்து மனோவை அகற்றச் சதி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் களத்திலிருந்து மனோவை அகற்றச் சதி?
 

255_content_p1_1.jpg

கொழும்பில் இ.தொ.கா.வை போட்டியிட வைத்து  அரசாங்கம் ஒரு கணக்கு போடுகிறது என்ற தகவல் இப்போது கசிந்துள்ளது. பிரபல மலையக கட்சியின் தலைமையை எதிர்காலத்தில் ஏற்பதற்காக  காத்திருக்கும் ஒரு இளம் ஊவா மாகாண அரசியல்வாதி, இந்தத் தகவலை வாய்த்தவறி கசிய வைத்துள்ளார். அந்தக் கணக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்கு.

ஒன்று  இலங்கையில் தமிழர்களை ஈழத்தமிழர், இந்தியத் தமிழர் என்று திட்டவட்டமாக பிரிப்பது. இரண்டு, இந்த இரு பிரிவு தமிழர்களையும் ஒன்று சேர்க்கும் மையப்புள்ளியாக திகழும் மனோ கணேசனை அரசியல் சமன்பாட்டில் இருந்து அகற்றுவது. 

இன்றைய அதிகாரப்பூர்வ சனத்தொகை கணக்கெடுப்பில் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் என்று இரண்டு பிரிவுகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் இந்த அடையாளங்களை சாதாரண தமிழ் பொதுசனம் கவனத்தில் எடுப்பதில்லை. 

 கடைசியாக  2011 ஆம் வருடம் நடைபெற்ற சனத்தொகை கணக்கெடுப்பில் இலங்கைத் தமிழர் 22 இலட்சமும்  இந்தியத் தமிழர் 8 இலட்சமும் இந்நாட்டில் வாழ்வதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.  

தென்னிலங்கை நகரப் பகுதிகளில் வாழும் மலையக அல்லது இந்திய வம்சாவளித் தமிழர்களில் பெருந்தொகையானோர் தம்மை "இலங்கைத் தமிழர்' என்று கடந்த சனத்தொகை கணக்கெடுப்பின் போது அடையாளப்படுத்திக் கொண்டனர். உண்மையில் இலங்கையில் இன்று மொத்த தமிழர் சனத்தொகையான முப்பது இலட்சத்தில் இந்த இரண்டு பிரிவு தமிழர்களும் சரிசமமாகவே வாழ்கின்றனர். 

 இந்நிலையில் இந்திய வம்சாவளித் தமிழர் என்று திட்டவட்டமாக பிரித்துவிட்டால், அது அரசாங்கத்தின் விருப்புக்கு ஏற்றதாக அமைந்துவிடும். அரசியல் ரீதியாக ஆறுமுகன் தொண்டமானின் இ.தொ.கா.வை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிகராக வளர்த்தெடுப்பது அரசின் எதிர்பார்ப்பு. ஏற்கனவே இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா என்று சிறிய மற்றும் நடுத்தர வெற்றிகளை பெற்ற இ.தொ.கா. கொழும்பிலும் காலடி தடம் பதித்து விட்டால், அது வடகிழக்கில் கூட்டமைப்பு, தென்னிலங்கையில் இ.தொ.கா. என்ற அடையாளத்தை உலக மட்டத்தில் ஏற்படுத்தி விடும் என்பது கணக்கு.

 அடுத்தக் கட்டமாக கிளிநொச்சி, முல்லை, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் வாழும் மலையக பூர்வீகத்தை கொண்ட மக்கள் மத்தியிலும் ஆறுமுகன் தொண்டமானின் "இந்தியத் தமிழர்' என்ற கோஷம் முன்னெடுக்கப்பட்டு  அந்த மாவட்டங்களிலும் இ.தொ.கா.வை  போட்டியிட செய்ய அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும். 

2004 இல் பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு 22 உறுப்பினர்களை பெற்றிருந்தது. இந்த தொகை 2010 இல், 14 ஆக குறைந்துவிட்டது. வடக்கில் தமிழர் நாட்டை விட்டு தொடர்ச்சியாக வெளியேறுவதால், வடக்கு மாவட்டங்களில் தெரிவு செய்யப்படக்கூடிய எம்.பி.க்களின் தொகை படிப்படியாக குறைந்துவருகிறது.

2010 ஐ விட, எதிர்வரும் அடுத்த தேர்தலின் இந்தத் தொகை இன்னமும் குறையும் சாத்தியம் இருக்கின்றது. இதன்மூலம் ஒரு சிறிய ஒரு கட்சியாக  கூட்டமைப்பை உருமாற்றவும்  மறுபுறம் அதற்கு சமமான ஒரு கட்சியாக இ.தொ.கா.வை வளர்க்கவும் அரசு திட்டம்  போடுகிறது.

 தமிழர் மத்தியில் பிரதேசவாதத்தை கிளப்பி விடும் போக்குக்கு இன்று பெரும் முட்டுக்கட்டையாக இருப்பவர், மனோ கணேசன். இந்த நாட்டில் இலங்கை தமிழர்கள் என்றும்,  இந்தியத் தமிழர்கள் என்றும் அதிகாரப்பூர்வமாக அறியப்பட்ட இரு தரப்பு தமிழர் மத்தியிலும் அங்கீகாரமும்,  ஆதரவு அலையையும் கொண்ட ஒரே தமிழ் அரசியல் கட்சித் தலைவர் மனோ கணேசன்.

இதனால் தான் மனோ கணேசனை எப்பாடுபட்டாவது அரசியல் சமன்பாட்டில் இருந்து அகற்றிவிடவேண்டும் என அரசின் பங்காளிக் கட்சிகள் களம் இறக்கப்பட்டுள்ளன. அதுபோல் போதை வஸ்து குற்றச்சாட்டுகளை சந்தித்துள்ள ஒரு குழுவும்  சுயேச்சைக் குழுவாக களமிறக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளையின்படி,  கொழும்பின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு இலவசப் பொருட்களை வழங்கும் பிரசாரம் கோடிக்கணக்கான நிதியை அள்ளி  வீசி செய்யப்படுகிறது.  

  

 கொழும்பில் மனோவை தோற்கடித்து ஆசனம் பெற இப்போதைக்கு சாத்தியம் இல்லை. ஆனாலும் எங்களால் முடிந்தவரை மனோவின் வாக்குகளை சிதறடித்து அரசாங்கத்துக்கு காட்டுவது எங்கள் நோக்கம் என்று அந்த ஊவா மாகாண அரசியல்வாதி மேலும் கூறியுள்ளார். 

 வெற்றிலைச் சின்னம் இங்கே தமிழர் மத்தியில் எடுபடாது என்பதால், இ.தொ.கா.வின் சேவல் சின்னம் பயன்படுத்தப்படுகிறது.  கொழும்பில் இருக்கின்ற ஒரு சில இந்திய வம்சாவளி தமிழ் தொழிலதிபர்கள் இ.தொ.கா.வை கொழும்பில் காலூன்ற செய்து அரசை மகிழ்ச்சிப்படுத்த முயல்கிறார்கள். தமிழ் தேசிய கட்சிகளை பலவீனப்படுத்தும் இந்த திட்டத்துக்கு இந்திய அரசும் உளவு துறையும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும் ஆசீர்வாதம் வழங்கியுள்ளனவா என்பது பற்றி இன்னமும் தெளிவில்லை. 

 கொழும்பின் முன்னணி தொழிலதிபரின் ஏற்பாட்டில் நடைபெற்ற தனிப்பட்ட விருந்துபசாரத்தில் அழைப்பின் பேரில் கலந்துகொண்ட மனோ கணேசன், அங்கு வந்திருந்த ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்த கருத்துகளால் எரிச்சலடைந்து இடைநடுவில் எழுந்து வந்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. தமிழர்களை பிரதேச ரீதியாக பிரித்தாளும் நோக்கிலும்  இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவங்களை நியாயப்படுத்தியும் அங்கு நிதானம் இழந்து தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தம்மை கடுமையாக ஆத்திரமடைய செய்துள்ளதாக மனோ கணேசன்,  தன் ஊடக நண்பர் ஒருவருக்கு கூறியுள்ளார்.

"அரசியல் நாகரிகம் கருதி தனிப்பட்ட நிகழ்வுகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைக் கூட சந்தித்து முகமன் விசாரித்து அரசியல் கூட கதைக்கலாம். ஆனால், இவர்களுடன் தனிப்பட்ட அரசியல் நாகரீகமும் கூட சரிவராது'என்று மனோ கணேசன்  சொல்லியுள்ளார்.  இந்தப் பின்னணியில் மேல்மாகாண அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. 

255_content_p1_2.jpg ஜனநாயக மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசாரம் மூன்று வாரங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டது. கடந்த வாரங்களில் ஏற்கனவே இந்த பத்தியில் குறிப்பிட்டதை போல்,  கொழும்பில் வாழும் எல்லா தரப்பு தமிழர்களின் மத்தியிலும்,  இக்கட்சியின் தலைவருக்கு இருக்கின்ற ஜனரஞ்சகம்,  இக்கட்சிக்கு இருக்கின்ற மிகப்பெரும் பலம். இந்த நட்சத்திர பலத்திற்கு பலம் சேர்ப்பது போல் மக்கள் மத்தியில் பெயர் அறியப்பட்ட இன்னும் பல குட்டி நட்சத்திரங்கள்  ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் குமரகுருபரன், ராஜேந்திரன், மாநகர சபை உறுப்பினர்கள் குருசாமி, குகவரதன், வேலணை வேணியன், பாஸ்கரா, லோரன்ஸ் பெர்னாண்டோ ஆகியோர்  கொழும்பு சமூகத்தில் வெவ்வேறு தளங்களில் அறியப்பட்டவர்கள். இதைவிட இளைஞர் அணி வேட்பாளர்களும் முதன்முறையாக மகளிர் அணி வேட்பாளர்களும் களத்தில் தீவிரமாக உள்ளதாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். தேர்தல் பணிகளில் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலு குமார் தலைவருக்கு துணை இருப்பதை செய்தி படங்களில் பார்க்க முடிகிறது.  

 தனித்து 43 பேர் போட்டியிடுவதால், இக்கட்சியின் வேட்பாளர்களின் இடையில் பலத்த பரஸ்பர போட்டி நிலவுவதை உணரக் கூடியதாக இருக்கிறது. அடுத்த கட்சி வேட்பாளர்களை விட தங்கள் சொந்த கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் பற்றித்தான் இக்கட்சியின்  வேட்பாளர்கள் ஊடகங்களிடம் அடிக்கடி கருத்து கேட்டு தெரிந்து கொள்கிறார்கள் என பிரபல தமிழ் ஊடக முக்கியஸ்தர் ஒருவர் சிரித்தபடி தெரிவித்தார். 

 இ.தொ.கா.வின் இராதாகிருஷ்ணனும் செல்லசாமியின் மகனான திருக்கேஸ் என்பவரும் தமது கட்சித் தலைமையின் நோக்கங்கள் பற்றி எதுவும் அறியாமல் ஊடகங்களில் அறிக்கை எழுதி அனுப்பி கொண்டுள்ளார்கள். கட்சி தலைமையின்  தன்னிச்சையான நடவடிக்கைகள்,  இராதாகிருஷ்ணனை தனிமைப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளன. வேட்புமனு ஏற்புகளும் நிராகரிப்புகளும் அறிவிக்கப்பட்ட கடைசி தினமான 6 ஆம் திகதி,  ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட அனைத்து கட்சி ஆதரவாளர்களும் தத்தம் கட்சி வேட்பாளர்களை சூழ்ந்துகொண்டு அவர்களை வரவேற்று கோஷம் எழுப்பி பெரும் ஊர்வலங்களை நடத்தினார்கள். அந்தவேளையில் இராதாகிருஸ்ணன் தனி மனிதனாக கொழும்பு மாவட்ட செயலகத்தில் இருந்து வெளியேறி நடைபயணம் போனதை தமிழ் ஊடகவியலாளர்கள் பார்த்து  ஆச்சரியமும் அனுதாபமும்  அடைந்தார்கள்.      

 

 கொழும்பு மாவட்ட எம்.பி. பிரபா கணேசனின் தேர்தல் பிரசாரம்  ஒரு சில ஊடக அறிக்கைகளுடனும், செட்டியார் தெருவில் நடந்து சென்றதுடன் நிற்கிறது. கொழும்பில் வாக்கு கோரும் உரிமை தமக்கு மட்டுமே இருப்பதாக பிரபா செட்டியார் தெருவில் கூறியதை ஊடகங்கள் அறிவித்தன. தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு சொந்தமாய் ஒரு காலத்தில் இருந்த மயில் சின்னத்தின் இன்றைய சொந்தக்காரர், அமைச்சர் ரிசாத் பதியுதீன். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற அவரது கட்சியின் பெயர், சமீபத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

 ரிசாத் பதியுதீனின் சார்பில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், இந்த அணியின் சார்பாக வேட்பு மனு அறிவிப்பு நடைபெற்ற இறுதி தினத்தில் கொழும்பு மாவட்ட செயலகத்துக்கு தனது கட்சி செயலாளர் ஹமீது டன் வந்திருந்ததை ஊடகவியலாளர்கள் பார்த்தனர். பாயிஸ், இதற்கு முன்னர் "துவா' என்ற கட்சியில் போட்டியிட்டு மாகாணசபைக்குச் சென்றவர்.  இந்த அணியில் முதன்மை வேட்பாளர் தான் என அவர் தன்னை கொழும்பு மாவட்ட செயலகத்தில் முதன்மை படுத்திக்கொண்டார். இந்த அணியில் போட்டியிட பிரபா எடுத்த முடிவு சரியானதா என்பது விவாதத்திற்கு உரியது.     

"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...' என்ற பாட்டுபாடி ஐக்கிய தேசியக் கட்சி திரிகிறது. இந்த கட்சியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களின் பாடு படு திண்டாட்டமாக போய்விட்டுள்ளது. ராம், கொஸ்தா, பழனியாண்டி, விஷ்னுகாந்தன் என்று நான்கு தமிழர்களை ஐ.தே.க. களம் இறக்கியுள்ளது.  இவர்களில்  சி. வை. ராம், தெரிவு செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கொஸ்தா, கொழும்பு மேயர் முசாமிலின் வெற்றிடத்துக்கு கடைசி வருடத்தில் நியமிக்கப்பட்டவர். பழனியாண்டி முன்னணி புறக்கோட்டை வர்த்தகரான இவரை ரவி கருணாநாயக்க மடக்கி பிடித்து பட்டியலில் சேர்த்ததாக சொல்லப்படுகிறது.  இவர் சி. வை.ராமை ஓரம் கட்டுவார் என்பது ரவி கருணாநாயக்கவின் கணக்கு. 

 ஒரு காலத்தில் யானை சின்னத்தில் கழுதையை நிறுத்தினாலும் கொழும்பு தமிழ் வாக்காளர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பார்கள் என்ற நிலைமை இருந்தது. இப்போது கூட்டிலிருந்து மனோ கணேசன் வெளியேறியதுடன் நிலைமை வெகுவாக மாறிவிட்டது. இன்றைய கொழும்பு தேர்தல் கள நிலவரங்கள் ஐ.தே.க. தமிழ் வேட்பாளர்களை பயமுறுத்துகின்றன. இந்த பின்னணியில் பெருந்தொகை பணம் செலவு செய்து தேர்தல் போட்டியில் கலந்துகொள்வது பயனுள்ளதா என இவர்களில் சிலர் சிந்திப்பதாக தெரிகிறது.    

 இந்நிலையில் ஐ.தே.க. வட்டாரத்தில் இருந்து வரும் செய்திகள் அரசாங்கத்தை உற்சாகமூட்டுகின்றன. ஐ.தே.க. தலைமையினர் தங்கள் கட்சியை வளர்ப்பதை விட அரசாங்கத்தை காப்பாற்றவே முன்னுரிமை தருகிறார்கள் என சராசரி ஐ.தே.க. ஆதரவாளர்கள் முடிவுக்கு வந்துவிட்டதை போல் தெரிகிறது. கொழும்பில் எல்லா வேட்பாளர் நியமன குழப்பங்களுக்கும் பிரதான காரணமான ரவி கருணாநாயக்க  தேர்தல் நியமனக் திகதி முடிவடையும் கடைசி தினத்தில் கட்சியின்  வேட்பாளர் நியமன குழுவில் இருந்து இராஜினாமா செய்தது மிகப்பெரும் கோமாளித்தனம்.

இதை சஜித் பிரேமதாச பகிரங்கமாக கூறியுள்ளார். இந்த மாகாண சபைத் தேர்தல்களில் தேர்தலில் ஐ.தே.க. படுதோல்வியடையும் சாத்தியம், கட்சியில் உள்ள சஜித் அணியினால் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே பொறுமையின் விளிம்பில் இருக்கும் நாடளாவிய ஐ.தே.க. ஆதரவாளர்களை "இவசுவா எதி (பொறுத்தது போதும்)' என எல்லை தாண்ட செய்யும் என சஜித் பிரேமதாச நினைக்கிறார். இதன்மூலம் ரணில், கரு, ரவி குழு ஓரம் கட்டப்பட்டு கட்சியை சஜித் பிரேமதாச பொறுப்பேற்கும் நிலைமை உருவாக்கும் என்பது இவர்கள் கணக்கு.       

இந்தப் பின்னணியில் மிகவும் அவமானப்பட்டுவிட்ட கொழும்பு மாவட்ட ஐ.தே.க. பிரமுகர் கொழும்பு மாநகர மேயர் முசம்மில் ஆவார் . அவரது மனைவி ஒரு தகுதிவாய்ந்த பெண்மணி. ஒரு ஆதரவாளர் கூட்டத்தை பல வருடங்களாக கடுமையாக உழைத்து, அவர் உருவாக்கி வைத்திருந்தார். ஆனால், அவருக்கு வேட்பாளர் நியமனம் வழங்க ரவி கருணாநாயக்க இடம் கொடுக்கவில்லை.

இதனால் முசாம்மில் மனமுடைந்துபோயுள்ளார். மரத்தில் இருந்து விழுந்தவனை,  மாடு முட்டியது போல், "முசாம்மில் அரசு பக்கம் தாவ போகிறார்' என்ற கதையை ரவி கட்சிக்குள் பரப்பி வருகிறார். இது முசம்மிலை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது. ரவி, மனோ கணேசனை பகைத்துக் கொண்டதால் தமிழர் மத்தியில் எதிர்ப்பை சந்த்தித்துள்ளார். இன்று முசம்மிலை அவமானப்படுத்தியது மூலம் கொழும்பு முஸ்லிம் மக்களின் அதிருப்தியையும் சந்தித்துள்ளார். 

 கடந்த காலங்களில் கட்சிக்குள் முசம்மில், ரணிலுக்கு ஆதரவாக சஜித் பிரேமதாசவுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வந்தவர். அதுமட்டும் அல்ல, ரணில் சார்பாக மனோ கணேசனிடம் தூது சென்று இந்த மாகாண சபைத் தேர்தலில்  தனித்து செல்லாமல் ஐ.தே.க.வுடன் கூட்டாக யானை சின்னத்தில் போட்டியிடுங்கள் என பேச்சுவார்த்தை நடத்தியவர் முசாம்மில்.  ரவியுடன் அரசியல் செய்வது கஷ்டம் என மனோ சொல்லி அப்போது முசம்மிலை அனுப்பி வைத்துவிட்டார்.

இப்போது மனோ சொன்னது சரியானது என்று முசம்மிலுக்கு சொந்த அனுபவமே ஏற்பட்டுவிட்டது. இன்று முசம்மிலை ரணில் கைவிட்டு விட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக சஜித் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.    

   

இந்த கொழும்பு மாவட்ட மேல் மாகாண சபைத் தேர்தலில் ஒரு சிறு குழப்பம் தெரிகிறது. வழமைபோல் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தப்பட்டதுதான். கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் திடீரென விக்கிரமபாகுவின் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் தேர்தல் நியமன நிகழ்வுகளில் பகிரங்கமாக கலந்து கொண்டார். பின்னர் ஒரு ஊடக மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார். இதை தமிழ் ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை.

விக்கிரமபாகு தனித்து போட்டியிடும் நிலையில் கூட்டமைப்பு மனோவின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்கும் என்ற எண்ணப்பாடு தோன்றியுள்ள பின்னணியில் சிவாஜிலிங்கம் இவ்விதம் செயற்பட்டுள்ளார். அவர் ரெலோ இயக்கத்தின் சார்பில் தங்களுக்கு ஆதரவு அளிக்கிறார் என விக்கிரமபாகு ஊடகவியலாளருக்கு கூறியுள்ளார்.  இது எந்த அளவு சரியான செய்தி என்பதை செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட ரெலோ தலைமை இன்னமும் தெளிவுபடுத்தவில்லை. 

 சிவாஜிலிங்கம் கடந்த காலங்களிலும் கட்சியை மீறி நடந்துகொண்டுள்ளார். எனவே இது சகஜம் என்றாலும் இன்று மகிந்த அரசாங்கம் தனது பங்காளிக் கட்சிகளை வைத்து  ஜனநாயக மக்கள் முன்னணியை பலவீனப்படுத்த முயலும் இந்த வேளையில் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் சிவாஜிலிங்கத்தின் போக்கு சரியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. விக்கிரமபாகு இன்றளவும் மனோவின் கட்சியின் சார்பான தெஹிவளை மாநகர சபை உறுப்பினர். இந்தத் தேர்தலில் அவரது கட்சி ஜனநாயக மக்கள் முன்னணியுடன் கூட்டு சேரவில்லை.  

வடமாகாண சபைத்  தேர்தலின் போது விக்கிரமபாகுவின் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டு சேர விரும்பி கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அக்கோரிக்கையை கூட்டமைப்பு தலைமை நிராகரித்துவிட்டது. அதன்பிறகு நவசமசமாஜக் கட்சி, வடக்கு மாவட்டங்களில் கூட்டமைப்பிற்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. அதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணி, கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததுடன் அக்கட்சியின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் கூட்டமைப்பின் பிரசாரங்களிலும் கலந்து கொண்டனர்.

ஜனநாயக மக்கள் முன்னணி, கூட்டமைப்புக்கு ஆதரவை அதிகாரபூர்வமாக அறிவித்து  யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சிவாஜிலிங்கமும் ரெலோ சார்பில் கலந்துகொண்டார். எது எப்படி இருந்தாலும் மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தங்களது அதிகாரபூர்வமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு ரெலோ தலைமைக்கும், கூட்டமைப்பு தலைமைக்கும் இருக்கின்றது. 

- See more at: http://www.thinakkural.lk/article.php?article/enelxzrqea4028a09e75c5c88311kydew6a7bf6582d2b4d75aad615fdhm0#sthash.o2ymbt4C.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.