Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா? 

[Tuesday, 2014-02-18 23:49:01]
tamil-learn-seithy-200.jpg

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்து, வளர்ந்து, மறைந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலமொழி கோலோச்சியது. அதற்கு அடுத்ததாக சமற்கிருதம் போற்றப்பட்டது. தமிழ் ஆதீனங்களிலும் தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. பாரதியார் ஆங்கிலம், சமற்கிருதம் உடபட பல மொழிகள் படித்தவர். ஆனால் பாரதியாரது காதல் தமிழ்மொழி மீதுதான் இருந்தது. அதனை அவர் பல பாடல்களில் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

  

நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்

வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே

என்று பிறந்தனள் என்றறியாத இயல்பினள்

எனத் தமிழை ஏற்றிப் போற்றிப் பாடிய பாரதியாருக்கு உள்ளுர ஓர் அச்சம் இருந்தது. எதிர்காலத்தில் தமிழ் மெல்லச் சாகும் மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்ற அச்சம் அவரிடம் இருந்தது.

அதனைத் தமிழ்த் தாய் சொல்வது போல் பாரதியார் பாடியிருக்கிறார்.

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச 

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே - அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை - அவை

சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை

என்ற கருத்து பாரதியார் காலத்தில் உரம் பெற்றிருந்தது. இன்றும் அப்படியான கருத்து ஆங்கிலம் கற்ற பல தமிழ் அறிவாளிகள், கல்விமான்கள் இடையே உள்ளது.

இன்று உலகில் வாழுகின்ற 600 கோடி மக்கள் மொத்தம் 6,000 மொழிகளைப் பேசுகின்றார்கள் எனக் கூறப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 6,000 மொழிகளிலே வெறுமனே 600 மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்குமாம். எஞ்சிய 5,400 மொழிகளும் அழிந்து விடும் என்று மொழியியலாளர்கள் எதிர்கூறுகிறார்கள். மேலும் இன்றைக்குப் பேசப்படுகின்ற 6,000 மொழிகளில் 3,000 மொழிகளை 1,000 க்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய 1,500 மொழிகளை 100 பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். அய்ந்நூறு மொழிகளை வெறும் 10 துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களை சமூகவியலாளர்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள்.

(அ) பிற மொழி ஊடுருவல் மற்றும் அதன் ஆதிக்கம்.

(ஆ) வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக உருவாவது. எடுத்துக்காட்டு மலையாள மொழி.

(இ) தாய்மொழிக்குப் பதில் வேற்றுமொழி கற்கை மொழியாக, முதல்மொழியாக மாறிவிடுவது.

(ஈ) இளந்தலைமுறையினருக்குத் தாய் மொழியைக் கற்கவும் பேசவும் ஆர்வம் அல்லது வாய்ப்பு அற்றுப் போவது.

(உ) அரசு இல்லாதது. இருந்தாலும் அதன் ஆதரவு அற்றுப் போவது.

தமிழ்நரட்டில் தமிழ் கற்கை மொழியாக இல்லை

தமிழ்நாட்டில் தமிழ் மொழி உயிரோடு இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் அங்கு தமிழை ஏழு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பேசுகிறார்கள். சிறிது காலத்துக்கு முன்னர் அய்க்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாடு அவையின் அறிக்கை ஒன்றில் 100 ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாகத் தமிழும் இருகப்போவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் 100 ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. இருந்தும் இன்றைய போக்கு நீடித்தால் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மொழி அழிவதற்கு உண்டான அத்தனை காரணிகளும் இப்போது தமிழுக்கு இருக்கின்றன. குறிப்பாகத் தமிழ் நாட்டில் தமிழ் கற்கைமொழித் தகைமையை இழந்து பள்ளிக்கூடங்களில் தனி ஒரு பாடமாக மட்டும் முடக்கப்பட்டு விட்டது.

திரைப்படத்துறை உள்ளிட்ட தமிழ்நாட்டு ஊடகங்களில் ஆங்கிலக் கலப்பு மிகுதியாகக் காணப்படுகிறது. உரையாடல்கள் பெரும்பாலும் தமிங்கிலத்தில் இடம்பெறுகின்றன. குறிப்பாக திரைப்பட நடிக, நடிகர்கள் உரையாடும் போது வாயில் தமிழே வரமாட்டேன் என்கிறது. இதற்குத் திரைப்படத் துறையில் பிறமொழி பேசுவோரது மேலாண்மை இருப்பது ஒரு காரணம்.

கோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக இல்லை. இசையில் தெலுங்குமொழியின் ஆதிக்கம். வழக்காடு மன்றங்களில் தமிழ்மொழிப் பயன்பாடு முற்றாக இல்லை. வீட்டுத் திருமணங்களில் தமிழ் இல்லை. ஏன் பிறக்கும் குழந்தைகளின் பெயர்களில் கூடத் தமிழ் இல்லை. தங்களை தமிழ் உணர்வாளர்கள் எனக் கூறிக் கொள்ளும் தமிழர்கள் கூடத் தமது பிள்ளைகளுக்கு பொருள் விளங்காத வேற்று மொழிப் பெயர்களையே சூட்டி மகிழ்கிறார்கள்.

ஈழத்தில் தமிழ்மொழி

தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக தமிழ்மொழி அதிகமாகப் பேசப்படும் நாடு ஈழம் ஆகும். மொத்தம் 2.2 கோடி மக்களில் 25 விழுக்காடு மக்கள் (முஸ்லிம்கள் உட்பட) தமிழ் பேசுகிறார்கள். தமிழ் அரச மொழியாக ஒப்புக்கு மட்டும் இருந்தாலும் கற்கை மொழி தாய்மொழி தமிழாக இருக்கிறது. மழலைப் பள்ளி தொடக்கம் பல்கலைக் கழகம் வரை தமிழில் படிக்கலாம். அண்மைக்காலத்தில் பல்கலைகங்களில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் ஆங்கிலம் கற்கை மொழியாக மாற்றப்பட்டுள்ளது.

மலைநாட்டில் 5 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அங்கே தமிழ் கற்கை மொழி என்றாலும் தமிழ்ப் பள்ளிகள் இல்லாத போது பிள்ளைகள் சிங்களப் பாடசாலைகளில் படிக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது. இதனால் காலப் போக்கில் அவர்கள் சிங்களவர்களாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. மலை நாட்டுத் தமிழர் தங்கள் தாய்மொழியை இழக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை இனத்தோடு திருமண உறவுகள் செய்து கொள்வதால் இனக் கலப்பு இடம் பெற்று வருகிறது. இளம்தலைமுஐற சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதால் அவர்கள் படிப்படியாகக் கரைந்து வருகிறார்கள்.

வட - கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் இப்போது சிங்கள மொழி மூலம் படிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் தமிழ்மொழி பேசுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிடும் அபாயம் இருக்கிறது.

மொழிமாறியதால் இனம் மாறிய தமிழர்கள்

சென்ற நூற்றாண்டில் கத்தோலிக்க பாடசாலைகளில் கற்கைமொழியைத் தமிழில் இருந்து சிங்களத்துக்கு மாற்றியதால் கம்பகா மாவட்டத்தில் உள்ள நீர்கொழும்பு, புத்தளம் பகுதிகளில் வாழ்ந்த கத்தோலிக்கத் தமிழ்ப் பரதவர்கள் இன்று சிங்களவர்களாக மாறிவிட்டார்கள். இவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்னர் jதமிழ்நாட்டின் கரையோரப் பட்டினங்களான கீழக்கரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்து போர்த்துக்கேயரால் கொண்டு செல்லபட்டவர்கள். அவர்களது மொழிமாற்றம் இனமாற்றத்தில் முடிந்து விட்டது.

இந்த இன மாற்றத்தை உருவாக்கியவர் கத்தோலிக்க ஆயர் எட்மன்ட் பீரீஸ் ஆவர். இவர் டிசெம்பர் 27, 1897 இல் சிலாபம் என்ற ஊரில் பிறந்தவர். மும்மொழி வல்லுநர். இளவயதில் தனது பாட்டனிடம் சிங்களம் மற்றும் தமிழ் இலக்கியம் படித்தவர். 1924 இல் பாதிரியராக ஞானதீட்சை பெற்ற இவர் 1940 இல் ஆயர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இப்படிப் பதவி உயர்த்தப்பட்ட முதல் சிங்களவர் பீரீஸ் ஆவர். இவர் தனது உத்தியோக சின்னமாகச் சிங்கம் பதிக்கப்பட்ட சிலுவையை வைத்திருந்தார். இரண்டாவது வத்திக்கன் அவை (1962-65) தாய்மொழியில் தேவாலய வழிபாட்டை அனுமதித்ததை அடுத்து ஆயர் பீரீஸ் திருப்பலி பூசை, தோத்திரங்கள் ஆகியவற்றை இலத்தீன் மொழியில் இருந்து சிங்களத்துக்கு மாற்றிவிட்டார்.

இந்தக் காலப் பகுதியில் மன்னார் மாவட்டம் யாழ்ப்பாண மறை மாவட்டத்தில் இருந்தது. இல்லையேல் மன்னாரில் வாழ்ந்த தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களத்தைப் படித்து சிங்களவர்களாக மாறியிருப்பார்கள். இதில் ஒரு வியப்பு என்னவென்றால் இங்கு தமிழ் இந்துக்கள் சிறுபான்மையராக இருந்தும் அவர்கள் தங்கள் இன அடையாளத்தை இழக்காமல் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள்.

19 ஆம் நூற்றாண்டில் கூலிகளாகப் புலம்பெயர்ந்த தமிழ்நாட்டுத் தமிழர்கள்

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர் பிடித்து ஆண்ட நாடுகளில் தேயிலை, கோப்பி, இரப்பர், கரும்புச் செய்கைகளில் ஈடுபட்டார்கள். அதற்குக் கூலியாட்கள் தேவைப்பட்டனர். என்ன காரணத்தாலோ அவர்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள்தான் பேரளவு கண்ணில் பட்டார்கள். அவர்களை இலட்சக் கணக்கில் காலனி நாடுகளுக்கு ‘ஒப்பந்தக் கூலிகளாக’ (indentured labour) அழைத்துச் சென்று குடியேற்றினார்கள். கங்காணிகள் மூலம் துறைமுகங்களுக்குக் கொண்டு வரப்பட்டு, ‘உடல் நோயோ மன நோயோ இல்லை’ என்று சான்றிதழ் அளிக்கப்பட்டு, ஒப்பந்தத்தில் கைநாட்டு/கையெழுத்து வாங்கப்பட்டு, கழுத்தில் எண் எழுதிய வட்டத் தகரம் கட்டப்பட்டு, கப்பலில் கால் நடைகள் போல் ஏற்றப்பட்டார்கள். போகுமிடம் பற்றியோ வேலை பற்றியோ ஒன்றையுமே அந்த மக்கள் தெரிந்திருக்கவில்லை.

இந்த தமிழச் சாதி எங்கெல்லாம் கொண்டு போகப்பட்டு எப்படியெல்லாம் தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வதை பட்டார்கள் என்பதை பாரதியார் மனம் நொந்து பாடியிருக்கிறார்.

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்

மிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள

பற்பல தீவினும் பரவி யிவ்வெளி்ய

தமிழச் சாதி, தடியுதை யுண்டும் 

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்

வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்

பிணிகளாற் சாதலும் ..............................

இலங்கைத் தீவுக்கு 1823 ஆம் ஆண்டு ஆளுநர் எட்வேட் பார்ன்ஸ் அவர்களுக்குச் சொந்தமான கன்னொருவ தோட்டத்தில் (பேரதேனியா) இருந்துதான் மலைநாட்டுத் தமிழர்களுடைய வரலாறு தொடங்குகிறது. இவர்கள் தகரத்தால் வேய்ந்த 'லைன்' என்ற சிறு கொட்டில்கள் கொண்ட தொகுதிகளில் குடியிருத்தப் பட்டார்கள். தொடர்ந்து நடந்த புலப்பெயர்வால் 1921 இல் அவர்களது எண்ணிக்கை 692,000 ஆக உயர்ந்தது. 1946 இல் இந்த எண்ணிக்கை 7,33,700 (விழுக்காடு 11.02) ஆக மேலும் உயர்ந்தது. ஆனால் 1948 இல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா அவர்களால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டம் அவர்களது குடியுரிமையைப் பறித்தது. 1949 இல் தேர்தல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் அவர்களது வாக்குரிமையையும் பறித்தது. பின்னர் டிசெம்பர் 03, 1964 இல் எழுதப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி - பண்டாரநாயக்க உடன்படிக்கையின் 525,000 தமிழகத் தமிழர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். இதனால் 2011 இல் மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 8,42,323 (4.16) ஆக வீழ்ச்சி அடைந்தது. விளைவு மலைநாட்டுத் தமிழர்களது நாடாளுமன்ற பிரதிநித்துவம் குறைந்து விட்டது.

இலங்கைத் தீவுக்க, தமிழ்நாட்டு சமூக ஏணியின் அடிமட்டத்தில் இருந்த தமிழர்களே புலம் பெயர்ந்தார்கள். அவர்களது வாழ்க்கை முறை கடந்த 200 ஆண்டுகளில் பெரிய மாற்றத்தைப் பெறவில்லை. உலகில் படுமோசமாகத் சுரண்டப்படும் தொழிலாளர்கள் என்ற 'பட்டம்' இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில், இதே பாணியில் வேறு நாடுகளுக்குத் தமிழர்கள் கூலிகளாகப் புலம் பெயர்ந்தார்கள். மொரிசியஸ், பிஜீ, றியூனியன், தென் ஆபிரிக்கா, மடகஸ்கர், மலேசியா, சிங்கப்பூர், கரிபியன் தீவுகள், சீசெல்ஸ் போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள். இவர்கள் இன்று தங்கள் தாய்மொழியை முற்றாக மறந்துவிட்டார்கள். அவர்களது சமய எச்சங்களே அவர்களைத் தமிழர்கள் என அடையாளப் படுத்துகிறது.

மொரிசியஸ் தீவில் 115,000 தமிழர்கள் (6.1) வாழ்கிறார்கள். ஆனால் வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 0.6 விழுக்காடு மட்டுமே. இவர்கள் 1727 க்குப் பிறகு குடியேறியவர்கள். தமிழைப் பேரளவு மறந்து விட்டாலும் 125 கோயில்களைக் கட்டி வழிபாடு செய்கிறார்கள். தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம், தீபாவளி, மகா சிவராதிரி கொண்டாடுகிறார்கள். திருவள்ளுவர், பாரதி போன்றோருக்கு விழா எடுக்கிறார்கள். இருநூறு தமிழ்மொழி தொடக்கப்பள்ளிகளில் அதேயளவு ஆசிரியர்கள் தமிழைக் கற்றுக் கொடுக்கிறார்கள். இதனால் இவர்களிடம் தங்கள் தலைமுறை பற்றிய ஒருவித பெருமிதம் காணப்படுகிறது. ஆனால் கிறித்தவ தமிழர்கள் மொலாட்டோ மற்றும் கிரியோலி இனத்தவர்களோடு இரண்டறக் கலந்து தங்கள் இன அடையாளத்தை இழந்து விட்டார்கள்.

ரீயூனியன் தீவில் 30 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். வணிகம், தொழில், அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் செல்வாக்கு உடையவர்களாக காணப் படுகிறார்கள். மொரிசியஸ் தமிழர்களைப் போலவே ரீயூனியன் தமிழர்களும் 1848 இல் புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் இருந்து ஒப்பந்தக் கூலிகளாக அங்கு புலம் பெயர்ந்தவர்கள். கிரியோலி மொழியே பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. தமிழர்களில் 95 விழுக்காட்டினர் தமிழ் பேசத் தெரியாதவர்கள். இவர்கள் அய்ந்து ஆறு தலைமுறைக்குள் தங்கள் மொழியை இழந்துவிட்டார்கள். மொரிசியஸ் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை ரீயூனியன் தமிழர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அண்மையில் இங்கு 3 உயர்நிலைப் பள்ளிகளிலும் ஒரு கல்லூரியிலும் தமிழ் விருப்ப பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.

றீயூனியனுக்கு போனவர்களே அங்கிருந்து சீசெல்ஸ் தீவுக்கு இடம்பெயர்ந்தார்கள். இன்று சுமார் 115,000 பேர் அங்கு வாழ்கிறார்கள். இந்து பாரம்பரியத்தை கைவிடாது ஓரளவு வசதியாக வாழ்கிறார்கள்.

இடம்போதாத காரணத்தால் ஏனைய நாடுகள் பற்றி எழுதுவதை தவிர்த்துக் கொள்கிறேன்.

20 ஆம் நூற்றாண்டில் இடம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி தொடக்கம் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து கூலிகளாக வெளிநாடுகளுக்கு ஆங்கிலேயரால் அழைத்துச் செல்லப்பட்டதைப் பார்த்தோம். நூற்றிஅய்ம்பது ஆண்டுகள் கழித்து மேலும் ஒரு தொகையினர் ஈழத்தில் இருந்து வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இவர்கள் கூலிகளாக அல்லாமல் பிறந்த நாட்டில் பெரும்பான்மை இனத்தால் மொழி, சமய அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை காரணம் காட்டி அரசியல் அடைக்கலம் கேட்டு ஏதிலிகளாகச் சென்றார்கள். இவர்களில் மெத்தப் படித்தவர்களும் இருந்தார்கள், அதிகம் படியாதவர்களும் இருந்தார்கள். இந்தப் புலப்பெயர்வு 1983 இல் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தை அடுத்து இடம்பெற்றது. 1983 - 2003 இடைப்பட்ட காலத்தில் 12 இலட்சம் தமிழர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள்.

தமிழ்நாட்டுக்கு மட்டும் 1,25,000 பேர் ஏதிலிகளாக ஈழத்தில் இருந்து 1983, 1990, 2006 கால கட்டங்களில் இடம்பெயர்ந்தார்கள். இவர்களில் 90,000 பேர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 117 க்கு மேற்பட்ட ஏதிலி முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் போதுமான அடிப்படை வசதிகளின்றி கூலிவேலை செய்து பிழைக்கிறார்கள். ஏனையோர் முகாம்களுக்கு வெளியே வாழ்கிறார்கள். அகவை 25 க்கு உட்பட்ட பலர் சொந்த மண்ணின் வாசனை அறியாதவர்கள்.

1983 க்கு முன்னரும் ஒரு சிறு தொகை தொழில்சார் வல்லுநர்கள் (மருத்துவர்கள், கணக்காளர்கள், பொறியியலாளர்கள்) இங்கிலாந்துக்கு தொழில் வாய்ப்புத் தேடிப் புலம் பெயர்ந்தார்கள்.

இப்படிப் புலம் பெயர்ந்தவர்கள் அய்ரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் குடியேறினார்கள். கனடாவில் மட்டும் இன்று 3,50,000 பேர் வாழ்கிறார்கள். இது கனடாவின் மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு. இவர்களில் 90 விழுக்காடு கனடிய குடியுரிமை பெற்றவர்கள். இங்கு ஏதிலிகளாக வந்து நிரந்தர வதிவிட குடிமக்களாக ஏற்றுக் கொண்ட பின்னர் இவர்களுக்குத் தங்களது குடும்ப உறுப்பினர்களை வரைவழைக்கும் உரிமை வழங்கப்படுகிறது.

கனடா ஒரு குடியேற்ற நாடு. ஆங்கிலேயர்கள் மற்றும் பிரஞ்சு மக்கள் இரண்டாவது தேசிய இனங்களாக (Second Nations) அடையாளப் படுத்தப்படுகிறார்கள். பூர்வீக குடிமக்கள் (Metis, Inuit) முதலாவது தேசிய இனமாக விளங்குகிறார்கள். இந்த இரண்டிலும் சேராதவர்கள் வெளிப்படையான சிறுபான்மையினர் (visible minorities) என அழைக்கப்படுகிறார்கள். யாராக இருந்தாலும் எல்லாக் குடிமக்களுக்கும் ஒத்த உரிமைகள் அரசியல் யாப்பிலேயே வழங்கப்பட்டுள்ளன. அதனை யாரும் மீறமுடியாது. மீறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும். குற்றம் செய்தவர் ஓர் அமைச்சராக இருந்தாலும் தப்ப முடியாது.

கனடா ஒரு கூட்டாச்சி (Confederal) நாடு. பரப்பளவில் இரண்டாவது பெரிய (9.9 மில்லியன் ச.கிமீ) நாடு. கனடா 10 மாநிலங்கள் 3 பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தலைநகர் ஒட்டாவா. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித் தனி நாடாளுமன்றங்கள் உண்டு. ஆட்சி மொழிகள் ஆங்கிலம் மற்றம் பிரஞ்சு. கனடாவின் மக்கள் தொகை 34.4 மில்லியன் (2011) ஆகும். பல்லின பண்பாடு (Multiculturism) அரசின் முக்கிய கோட்பாடாக இருக்கிறது. வெளிப்படையான சிறுபான்மையர் தங்கள் மொழி, பண்பாடு, சமயம் போன்றவற்றை பேணிக் காப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த வசதி அண்டை நாடான அமெரிக்காவில் இல்லை. தனியொருவர் வருமானம் 43,270 அமெரிக்க வெள்ளி (உலக வங்கி 2010). ஆங்கில நாளேடுகள் 5, பிரஞ்சு 2. மைய நீரோட்ட த் தொலைக்காட்சிகள் 6, வானொலிகள் 3 ஆகியன இயங்குகின்றன.

ஒன்பதாவது இடத்தில் தமிழ்

தமிழர்களில் பெரும்பான்மையினர் ரொறன்ரோ (ஒன்ரேறியோ மாநிலத்தின் தலைநகர்) பெரும்பாகத்தில் (Greater Toronto Area) வாழ்கிறார்கள். மக்கள் தொகை 5.5 மில்லியன். இவர்களில் பாதிப் பேர் குடிவரவாளர்கள். பெரும்பான்மை (12 விழுக்காடு) தெற்காசியர்கள். அடுத்து சீனர்கள் (11 விழுக்காடு). இங்கே 170 மொழிகள் பேசப்படுகிறது. முதல் இடத்தில் இத்தாலி. இரண்டாம் இடத்தில் சீனம். ஒன்பதாவது இடத்தில் (2006) தமிழ் இருக்கிறது!

பேரளவு தமிழர்கள் ஏதிலிகளாக வந்தாலும் குடியுரிமை கிடைத்த பின்னர் அந்த எண்ணத்தை கைகழுவி விட்டார்கள். பாதிக்கு மேல் சொந்த வீடுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் வணிகம், மருத்துவம், அரசபணி, கைத்தொழில், உணவகம் மற்றும் பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இருந்தும் பெரும்பான்மையினர் தொழிற்சாலைகளிலே நேரக் கூலிக்கு வேலை செய்கிறார்கள். தமிழர்கள் அரசியலையும் விட்டு வைக்கவில்லை. நீண்ட விடுதலைப் போராட்டம் காரணமாக தமிழ் சமூகம் ஏனைய சமூகங்களை விடக் கூடுதலாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலில் தீவிர ஈடுபாடு காணப்படுகிறது. அதன் காரணமாக மத்திய நாடாளுமன்றத்துக்குத் தமிழ் பெண்மணி ஒருவர் (2011) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மார்க்கம் நகரசபையில் ஒருவர் உறுப்பினராக இருக்கிறார்.

புதிதாக கனடாவுக்குப் புலம்பெயர்ந்த சமூகங்களில் தமிழ் சமூகத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சி அசுர வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரண்டாம் தலைமுறையினர் பல்கலைக்க கழகங்களில் படித்து மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர் ஆகப் பட்டம் பெற்று ஆயிரக்கணக்கில் வெளியேறுகிறார்கள்.

தெருவுக்கு ஒரு கோயில்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றுதான் அவ்வையார் சொன்னார். ஆனால் இங்கு தெருவுக்கு ஒரு கோயில் இருக்கிறது. இரண்டு கோயில்கள் மட்டும் திராவிட சிற்ப முறையில் ஆகமவிதிப்படிக் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 100 க்கும் அதிகமான கோயில்கள் காணப்படுகின்றன. ஊர் இரண்டாவது போல கோயில்களும் இரண்டு மூன்றாகப் பிரிகின்றன.

பத்துக்கும் மேற்பட்ட இலவச வார ஏடுகள் தமிழில் வெளிவருகின்றன. திங்கள் ஒருமுறை ஒரு ஏடு வெளிவருகிறது. ஆங்கிலத்தில் இரண்டு மாத இதழ்கள். மூன்று தொலைக்காட்சிகள். ஜெயா, விஜயா, கலைஞர் உட்பட நான்கு 24 மணித்தியால தொலைக்காட்சிகள், ஏழு 24 மணித்தியால வானொலிகள் இயங்குகின்றன.

மூன்றில் ஒரு பங்கினரே தமிழ் படிக்கிறார்கள்

எல்லாம் சரி, தமிழ்மொழி வாழுகிறதா? இல்லை மெல்லச் சாகிறதா?

இங்கு அண்ணளவாக 55,000 தமிழ் மாணவர்கள் உயர் பள்ளிகளில் படிக்கிறார்கள். இவர்களில் 16,631 மாணவர்களே - அதாவது மூன்றில் ஒரு பங்கு மாணவர்களே - பள்ளிக் கூடங்களுக்கு வெளியே நடாத்தப்படும் தமிழ் வகுப்புகளில் சேர்ந்து படிக்கிறார்கள்.

கனடாவில் அரசுக் கல்விச் சபைகள், கத்தோலிக்கக் கல்விச் சபைகள், தனியார் பொதுப் பள்ளிக் கூடங்கள் சிவனியக் கோவில்கள், தொண்டு அமைப்புகள், தனியார் அமைப்புகள் ஆகியன தமிழ் மொழியைக் கற்பித்து வருகின்றன.

தொரன்ரோ மாவட்டக் கல்விச் சபை, யோர்க் கோட்டக் கல்விச் சபை, பீல் கல்விச் சபை, ஓட்டாவா மற்றும் கால்டன் கல்விச் சபை, மேல் கனடாக் கல்விச் சபை, மொன்றியல் கல்விச் சபை ஆகிய அரசுக் கல்விச் சபைகள், இளம் மழலை முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரைத் தமிழ்மொழியைக் கற்பிக்கின்றன. இவை, தமிழை ஒரு தொடர்பாடல் மொழியாகவே கற்பிக்க விழைகின்றன.

தொரன்ரோ மாவட்டக் கல்விச் சபையானது, இளம் மழலையர் முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவருக்குத் தமிழ்மொழி கற்பிக்கும் பொருட்டாகத் தமிழ்ப் பயிற்சி நூல்களை ஆக்கியுள்ளது. பிற கல்விச் சபைகளிடம் பாட நூல்களோ பயிற்சி நூல்களோ இல்லை. இக்கல்விச் சபைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தத்தம் விருப்பத்திற்கமையப் பாடங்களை ஆக்கிக் கற்பிக்கின்றனர். மேலும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரைத் தமிழ்மொழி கற்பிக்கத் ரொறன்ரோ மாவட்டக் கல்விச் சபை உட்பட எந்தக் கல்விச் சபையிடமும் பாடநூலோ பயிற்சி நூலோ இல்லை. முற்கூறிய அரசுக் கல்விச் சபைகளது பன்னாட்டு மொழிக் கற்கைத் திட்ட அலுவலர்கள் வழங்கிய புள்ளி விவரப்படி 2009 - 2010 கல்வி ஆண்டில் மொத்தமாக 8,867 மாணவர்கள் அரசுக் கல்விச் சபைகளில் தமிழ் மொழியைக் கற்கின்றனர்.

தனியார் தமிழ்க் கல்லூரிகள்

கனடா தமிழ்க் கலை தொழில் நுட்பக்கல்லூரி, அறிவகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (கனடா வளாகம்) டெல்ரா தமிழ்க் கல்லூரி ஆகியவை பள்ளிக் கூடங்கள் நடத்துகின்றன. இந்தப் பள்ளிக் கூடங்களில்:

(அ) தமிழ்மொழி - பாலர் வகுப்பு முதல் (OAC) தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கப்படுகிறது.

(ஆ) தமிழ்மொழி திறமைச் சித்திக்காக பல்கலைக் கழக புதுமுக வகுப்புகளுக்குக் கற்பிக்கப்படுகிறது.

( இ) மனோன்மணியம் சுந்தரனார் தமிழ்ப் பல்கலைக் கழகம் (கனடா வளாகம்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இரண்டிலும் தமிழ் இயல் இளங்கலைப் (BA) தமிழ் பட்டப் படிப்பு கற்பிக்கப்படுகிறது.

(ஈ) வாய்ப்பாடு, தண்ணுமை, புல்லாங்குழல், வீணை, நடனம், வயலின், பியானோ (keyboard) போன்ற நுண்கலைகள் கற்பிக்கப் படுகின்றன.

(உ) கணினி, தையல் வகுப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இந்த தனியார் பள்ளிக்கூடங்கள் நீங்கலாக தனி ஆசிரியர்களால் ஏறத்தாழ அய்பதற்கும் அதிகமான நுண்கலை வகுப்புகள், முக்கியமாக நடன வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

கனடா பல்லின பண்பாட்டை ஊக்குவிக்கிற நாடு எனப் பார்த்தோம். ஒன்ரோறியோ மாகாணத்தில் இரண்டாம் நிலைப் பள்ளிக் கல்வித் திட்டத்தில் 9 ஆம், 10 ஆம், 11 ஆம், 12 ஆம் வகுப்புகளில் படிப்பிக்கப்படும் பாடங்களில் ஒன்றாகத் தமிழ் மொழியும் அங்கீகரிக்கப்பட்ட பாடமாக (credit subject) கற்க ஒன்ரோறியோ அரசு வாய்ப்பளித்துள்ளது.

ஒன்ரோறியோ மாகாண அரசின் கல்வி அமைச்சு தமிழ் படிப்பிப்பதற்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. கற்போர் தொகை மிக மிகக் குறைவாக இருப்பதால் தமிழ்மொழி பள்ளிக்கூட நேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பல்கலைக் கழகங்களிலோ அல்லது கல்லூரிகளிலோ உயர்கல்வியைப் பெறுவதற்கு 30 பாடங்களில் திறமை சித்திகள் தேவைப்படுகின்றன. இந்த 30 திறமைச் சித்திகளில் 1 - 4 வரையிலான திறமைச் சித்திகளைத் தமிழ்மொழிப் பாடத்தில் பெற்றுக் கொள்வது தமிழ் மாணவர்களுக்கு எளிதான காரியம். அப்படிச் செய்யும் போது மாணவர்கள் தமிழ்மொழி அறிவும் மொழி ஆளுமையும் பெறுவதோடு இன உணர்வும் பண்பாட்டு விழுமியங்களை விளங்கிக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை பெரும்பாலான பெற்றோர்கள் பயன்படுத்துகிறார்கள் இல்லை.

தமிழ் சோறு போடுமா?

பெற்றோர்களிடம் 'தமிழ் சோறு போடுமா?' என்ற மனப்பான்மை போலவே குடிகொண்டுள்ளது. இந்த மனப்பான்மை தமிழ் நாட்டிலும் உண்டு. இதனால் நடனம், இசை, தண்ணுமை, வீணை, தற்காப்புக் கலை, கின்னரம், நீச்சல் முதலிய வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு நேரம் ஒதுக்கும் பெற்றோர்கள் கிழமையில் ஒரு நாள் நடக்கும் தமிழ்வகுப்புக்கு நேரம் ஒதுக்க முயல்வதில்லை.

இங்கு வாழும் ஏனைய இனத்தவர், குறிப்பாக சீனர், இத்தாலியர், பஞ்சாபிகள், குஜராத்திகள் நான்கு தலைமுறை கழித்தும் தாய்மொழியை மறவாது அந்த மொழியில்தான் பேசுகிறார்கள். தமிழர்களைப் போலவே கென்யா, தன்சேனியா, உகண்டா போன்ற நாடுகளுக்கு குடியேறிப் பின்னர் கனடா வந்த குஜயராத்திகள் நாலு, அய்ந்து தலைமுறைக்குப் பின்னரும் தங்கள் தாய்மொழியை மறவாது பேசுகிறார்கள். சீனர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். வீட்டில் சீனமொழியை விட வேறு மொழி பேச மாட்டார்கள். கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி எங்கள்குடி என்று மார் தட்டும் தமிழர்கள்தான் தங்கள் தாய்மொழியைப் புறந்தள்ளுகிறார்கள்.

மொத்தத்தில் தமிழில் எழுதவோ பேசவோ ஆற்றல் இல்லாத இளைய தலைமுறை வளர்ந்து வருகிறது. இதனால் தமிழ் மெல்லச் செத்து வருகிறது. நுண்கலை ஆசிரியர்கள் நுண்கலைகளை ஆங்கிலத்தில் படிப்பிக்கிறார்கள்.

ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆடல் கலைக்குப் புகழ் தேடப் பிறந்த மாதவிப் பெண்மயிலாள் தனது 12 ஆவது அகவையில் அரங்கேறிய போது அரங்கில் தண்ணுமை முதல்வன், ஆடலோடு இசைந்து பாடக்கூடிய இசை ஆசிரியன், தூய, இனிய சொற்களால் பாடல் இயற்றும் நாவன்மையும் நல்ல நூலறிவும் மிக்க இயற் தமிழ்ப் புலவர் இருந்தனர். இந்தக் காலத்தில் இயற் தமிழ் புலவனை எங்கு தேடினும் காணோம்!

19 ஆம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த தமிழர்கள் கல்வி அற்றவராக இருந்தார்கள். வறியவர்களாக இருந்தார்கள். போக்கு வரத்து, தொடர்பு சாதனங்கள் இப்போது இருப்பது போல் அவர்கள் காலத்தில் இல்லை. எனவே அவர்கள் தங்கள் தாய்மொழியை விரைவாக இழந்துவிட்டனர்.

ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பேரளவு கல்வி கற்றவர்கள். பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள். வீட்டில் தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, கணினி எல்லாம் இருக்கின்றன. இந்தக் காலத்தில் தமிழ்மொழியைக் கணினி மூலம் கற்கும் வசதி கூட உண்டு. இருந்தும் தமிழ்மொழி மெல்ல செத்து வருகிறது.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் மொரேசியஸ், றீயூனியன், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆசிரியர்களையும் பாட நூல்களையும் அனுப்பிப் பிள்ளைகள் தமிழ் கற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அந்த முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன.

இங்கு வாழும் யூதர்கள், பிரஞ்சுக்காரர்கள் தங்கள் பிள்ளைகளை கோடை காலத்தில் முறையே இஸ்ரேல், பிரஞ்சு நாட்டுக்கு ஹீப்புரூ, பிரஞ்சு மொழி, பண்பாட்டைப் படிக்க அனுப்புகிறார்கள். இந்த வசதிகள், வாய்ப்புக்கள் தமிழ் மாணவர்களுக்கு இல்லை.

ஒரு மொழி வளர வேண்டும் என்றால் அதற்கு அரச ஆதரவு இருக்க வேண்டும். தமிழக அரசு புலம்பெயர் தமிழர்களது மொழி, பண்பாட்டை மேம்படுத்த தனி அமைச்சு ஒன்றை உருவாக்க வேண்டும். மாணவர்கள் தமிழகத்துக்கு வந்து தமிழைப் படித்து தேர்ச்சி பெற வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். முன்னரைப் போல் தமிழ் ஆசிரியர்களையும் பாட நூல்களையும் தமிழர்கள் வாழும் அமெரிக்கா, கனடா, அய்ரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்.

இவற்றை நாம் செய்யா விட்டால் பாரதியார் அச்சப்பட்டது போல மேற்குலக நாடுகளில் தமிழ்மொழி மெல்லச் செத்துவிடும். (இந்தக் கட்டுரை சென்னையில் சனவரி 28 பெப்ரவரி 2 வரை நடந்த சங்கமம் 4 மாநாட்டில் படிக்கப்பட்டது)

நக்கீரன் தங்கவேலு

(தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா)

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifArticle.php?newsID=103959&category=Article&language=tamil

உலகமயமாக்கலின், இணையத்தின் சக்தியால் கனடா தமிழர் அவுஸ்திரேலியா தமிழருடன் திண்ணையில் இரவு என்ன சாப்பாடு என்று தமிழை வளர்க்கிறார்கள்.

உண்மையாக கடந்த பத்து வருடத்தில் தமிழ் புத்துயிர் பெற்று வளர்கிறது.

உலகின் முதன் மொழி அழியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.