Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிஸ்டர் ராகுல்காந்தி.. ஆந்திராவுக்கு ஒரு நீதி..? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மிஸ்டர் ராகுல்காந்தி.. ஆந்திராவுக்கு ஒரு நீதி..? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா..?
23-02-2014
 
அன்பிற்கும், பண்பிற்கும் உரிய திரு.ராகுல்காந்தி அவர்களுக்கு..
 
Rahul-Gandhi.jpg
 
 
இந்திய துணைக் கண்டத்தில் ஒடுக்கப்பட்ட இனமான தமிழினத்தில் பிறந்திருக்கும் ஒரு சாதாரணமான குடியானவன் எழுதிக் கொள்வது..
 
முதலில் உங்களது தந்தையின் இறப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.. அவர் மரணமடையும்போது இது போன்ற அரசியல் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு எனக்கு இல்லாததால், அப்போது சொல்ல முடியாத இரங்கலை இப்போது உங்களது குடும்பத்தினருக்குச் சமர்ப்பிக்கிறேன்..! 
 
உங்களது தந்தை கொல்லப்பட்ட சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்குமான தூக்குத் தண்டனையை சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இதற்கு அந்நீதிமன்றம் சொன்ன காரணம், சம்பந்தப்பட்டவர்களின் கருணை மனுவை பரிசீலிக்க ஜனாதிபதி மாளிகை அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதுதான்.. கொஞ்ச நஞ்சமல்ல.. 11 வருடங்கள். 
 
உச்சநீதிமன்றம் இவர்களை குற்றவாளி அல்ல என்று சொல்லி இவர்களது தண்டனையைக் குறைக்கவில்லை. இவர்கள் செய்த குற்றங்கள் பற்றி உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதாட முற்படும்போது, “அந்த நோக்கில் நாங்கள் இந்த வழக்கை விசாரிக்க முடியாது..” என்று எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிட்டது சுப்ரீம் கோர்ட். இதனை தாங்கள் கவனிக்க வேண்டும். 
 
இந்திய குடியரசுத் தலைவரும், அவருக்கு இது போன்ற விஷயங்களில் ஆலோசனை கூறும் தகுதியுடைய இந்தியாவின் உள்துறை அமைச்சகமும் செய்த கால தாமதம் மட்டுமே இதற்குக் காரணமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் அதே தீர்ப்பில் “இவர்களின் விடுதலை பற்றி தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம். இது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433-ஏ-ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது..”  என்றும் தெளிவாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இதன்படி தமிழக முதலமைச்சர் மறுநாள் காலையில் தனது அமைச்சரவையைக் கூட்டி  சுப்ரீம் கோர்ட் அளித்திருக்கும் தீர்ப்பின்படியும், அனுமதியின்படியும் சம்பந்தப்பட்ட 3 ஆயுள் தண்டனை கைதிகளையும் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க முடிவெடுத்துள்ளார். ஆனாலும் இந்த வழக்கு மத்திய அரசின் சி.பி.ஐ.யினால் விசாரிக்கப்பட்டதாலும், காலாவதியான தடா சட்டத்தின் கீழ் பதிவான வழக்கு என்பதாலும் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 435-ன்படி மத்திய அரசின் ஆலோசனையுடன் இவர்களை விடுவிக்க முடிவு செய்து, அதனை சட்டமன்றத்தில் ஒரு அறிக்கையாகவும் தாக்கல் செய்துள்ளார்.
 
இதைக் கேட்டு வழக்கம்போல உங்களது கட்சியினர் பொங்கியெழுந்து எதிர்க்குரல் கொடுத்த போதிலும், இறந்து போனவரின் மகன் என்கிற முறையில் மட்டுமே உங்களது கருத்து எதிர்பார்க்கப்பட்டது. அதில் நீங்கள் சொல்லியிருப்பது இதுதான்..
 
“தமிழக அரசு தவறான முடிவை எடுத்துள்ளது.. கொலை கைதிகள் விடுதலை செய்யப்படுவது எனக்கு துயரம் அளிப்பதாக உள்ளது. இந்த நாட்டில் பிரதமராக இருந்த ஒருவருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், சாமானிய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்? இது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  மரண தண்டனையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த தண்டனையை நிறைவேற்றுவதால் எனது தந்தை திரும்ப வந்துவிடப்போவது இல்லை. ஆனால் இது எனது தந்தை அல்லது எனது குடும்பம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இது, இந்த தேசத்தின் பிரச்சினை...” என்று கூறியுள்ளீர்கள்.
 
ஒரு பாதிக்கப்பட்ட மகனாக உங்களது இந்தக் கருத்தில் பொதிந்திருக்கும் உங்களது துயரத்தை எங்களால் உணர முடிகிறது. அதே சமயம் “கொலை கைதிகள்”, “பிரதமராக இருந்தவருக்கே..” “சாமான்ய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?”, “இது இந்த தேசத்தின் பிரச்சினை..” என்றெல்லாம் அரசியல் வார்த்தைகளை குவித்து அளித்திருக்கும் உங்களது அறிக்கையைப் பற்றித்தான் எனது கவலையெல்லாம்..!
 
 
“19.11.1997 அன்று காலை 11.50 மணி. ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ராமாநாயுடுவின் சினி ஸ்டூடியோவில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தன கார்களின் அணிவகுப்பு. அதில் நடுநாயகமாக வந்த காரில் நடிகர் மோகன்பாபுவுடன், அனந்தப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பரிதலா ரவியும் இருந்தார்.
 
parithala+ravi.jpg
 
 
தான் தயாரித்த தனது தந்தை ஸ்ரீராமுலுவின் வாழ்க்கை சரித திரைப்படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டுவிட்டு, அதில் தனது தந்தையாக நடிக்க ஒப்பந்தமாயிருக்கும் மோகன்பாபுவுடன் பேசியபடியே ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் ரவி. ரவியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து ஸ்டூடியோவில் இருந்து 25 அடி தூரத்தில் ஒரு பழைய பியட் கார் நின்று கொண்டிருந்தது.. எமனாக நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் அது வெடிக்கப்படும் சூழலில் தயாராய் இருந்தது. 
 
எல்லாம் சரியாக இருந்திருந்தால் பரிதலா ரவியுடன் அன்றைக்கு நடிகர் மோகன்பாபுவும் சேர்ந்தே இறந்து போயிருப்பார். ஆனால் எங்கும், எதிலும் முந்திக் கொள்ளும் மன நிலையை உடைய பத்திரிகையாளர்கள் செய்த ஒரு சின்ன செயலால்தான் அன்றைக்கு பரிதலா ரவி லேசான காயங்களோடு தப்பித்துக் கொண்டார்.
 
ரவியின் வாகனத்திற்கு பின்னால் வந்து கொண்டிருந்த தெலுங்கு E டிவியின் செய்தியாளர்கள் குழு வந்த வாகனம் திடீரென்று ரவியின் வாகனத்தை முந்திக் கொண்டு முன்னால் சென்றது.. இந்த பத்து செகண்ட்டுகள் வித்தியாசத்தில் ரிமோட் கண்ட்ரோல் அழுத்தப்பட பியட் கார் வெடித்த வெடிப்பில் E டிவியின் கார் சுக்கு நூறானது.. அதில் இருந்த 6 செய்தியாளர்களும் இறந்து போனார்கள். அந்த இடத்தில் இருந்த அப்பாவி மக்களையும் சேர்த்து மொத்தம் 26 பேர் மரணம். 32 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். மோகன்பாபுவும், பரிதலா ரவியும் சிறிதளவு காயங்களுடன் தப்பித்தது கடவுள் புண்ணியம்தான்.
 
 
ஆந்திராவே பதைபதைத்தது.. இப்போதும் அனந்தப்பூர் மாவட்ட போலீஸ் மட்டும் இது சூரியின் வேலையாகத்தான் இருக்கும் என்று உடனுக்குடன் போலீஸ் தலைமையகத்துக்கு செய்தி அனுப்பியதுடன் சூரியுடன் கடைசியாக அனந்தப்பூரில் தென்பட்ட, தர்மாவரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்லரு வாசுதேவ ரெட்டி என்ற 20 வயது வாலிபனைப் பற்றிய துப்பையும் வழக்கை விசாரிக்க ஆரம்பித்த சி.ஐ.டி. போலீஸார் வசம் சேர்ப்பித்தனர்.
 
இங்கேயிருந்து நூல் பிடித்த போலீஸின் தேடுதல் வேட்டையில் ஜூனால கூத்தப்பள்ளி, குண்டிமடி ராமுலு, பானுகோடா கிஷ்டப்பா, பெருகு வெங்கடேச்சலூ  பி.லஷ்மண ரெட்டி, கொண்டா ரெட்டி,   என்று எல்லாவிதமான ரெட்டிகளும் சிக்கிக் கொண்டார்கள். போலீஸின் தேடுதல் வேட்டையில் சூரியின் மனைவி பானுமதி போலீஸில் பிடிபட்டார். அவரை வைத்து போனில் மிரட்டியதையடுத்து, கர்நாடகாவில் சித்ரதுர்கா என்னுமிடத்தில் பதுங்கியிருந்த சூரி நாராயண ரெட்டி அதே ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி பெங்களூரில் யஷ்வந்த்புரம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
 
suri.jpg
 
 
இந்த வழக்கில் மொத்தம் 21 பேர் குற்றம்சாட்டப்பட்டு அதில் 14 பேர் மட்டுமே பிடிபட்டார்கள். மீதியிருக்கும் 7 பேர் இன்றுவரையிலும் தேடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதில் சூரிய நாராயண ரெட்டிதான் முதல் குற்றவாளி.
 
குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேர்களில் 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், மீதி 8 பேரை விடுவித்தது. ஏ-1 குற்றவாளியான சூரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது செஷன்ஸ் நீதிமன்றம். இதனை எதிர்த்து சூரி அப்பீல் செய்தபோது, ஆந்திர உயர்நீதிமன்றம் “சூரிய நாராயண ரெட்டி இனிமேல் தன் வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருக்க வேண்டும்” என்று மாற்றித் தீர்ப்பளித்து ஆந்திராவையே பரபரப்பாக்கியது.
 
இந்த நிலையில் சிறையில் ரவியைப் போட்டுத் தள்ளாமல் தூக்கம் வராமல் சூரி அல்லாடிக் கொண்டிருந்திருக்கிறார். சிறையில் தனக்குக் கிடைத்த புதிய நண்பரான ஜூலகண்டி சீனிவாச ரெட்டியுடன் கலந்தாலோசித்து தனது இறுதி திட்டத்தை வகுத்திருக்கிறார்.
 
இந்த நேரத்தில்தான் அல்வா மாதிரியான மேட்டர் ஒன்று சூரிக்குக் கிடைத்திருக்கிறது. ஜில்லா பரிஷத் தேர்தல்கள் பற்றிய கலந்துரையாடலுக்காக பரிதலா ரவி அனந்தப்பூர் கட்சி அலுவலகத்திற்கு வரப் போகும் செய்திதான் அது.  அன்றைக்கு ரவியைப் போட்டுத் தள்ளுவதுதான் இப்போதைக்கு சிறந்த வழி. கட்சியின் தொண்டனாக அவரை அப்போதுதான் நெருங்க முடியும். இதைவிட்டால் நமக்கு வேறு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து அன்றைக்குத்தான் முகூர்த்தத்தைக் குறித்துக் கொடுத்திருக்கிறார் சூரி.
 
ஜூலகண்டா சீனிவாச ரெட்டி தன்னுடன் நாராயண ரெட்டி, ரெகமய்யா என்று ஒரு டீமையே இணைத்துக் கொண்டு ஜனவரி 23, 2005-ல் அனந்தப்பூர் கிளம்பினார்.. அங்கே ஏற்கெனவே அவர்களுக்காகக் காத்திருந்த ராம்மோகன் ரெட்டி என்ற வங்கி ஊழியரின் இல்லத்தில் தங்கியிருந்தார்கள். தாமோதர் ரெட்டி, நாராயண ரெட்டி, ஓபி ரெட்டி, வடே சீனா, ரங்க நாயகலு, கொண்டா என்ற கூட்டணி பெரிதாகியது.
 
2005, ஜனவரி 24, மதியம் 1 மணிக்கு தனது மனைவி சுனிதாவுடன் கட்சி அலுவலகத்திற்கு வந்தார் ரவி. மனைவி ஒரு பக்கம் போய் பெண் உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருக்க.. தனது கட்சியின் பிரமுகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் ரவி. இந்த நேரத்தில்தான் சூரியின் ஆட்கள் அங்கே வந்திருக்கிறார்கள். உள்ளே சிலர் நுழைய, சிலர் வெளியில் நின்றிருக்கிறார்கள். அங்கே யாரையும் சோதிக்க வசதியில்லை என்பது இந்தக் கொலையாளிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.
 
கட்சியினரிடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போவதற்காக நடந்து   வந்திருக்கிறார்.  அந்த நேரத்தில்தான் ஜூலகண்டா சீனிவாச ரெட்டி அவரைச் சுட்டிருக்கிறார். அருகில் இருந்த நாராயண ரெட்டியின் துப்பாக்கிக் குண்டும் இணைந்து கொள்ள ரவியின் உடலை குண்டுகள் துளைத்திருக்கின்றன என்று போலீஸ் கூறுகிறது.  ஆனால் உண்மையில் முதல் குண்டு சூரியின் துப்பாக்கியில் இருந்துதான் வந்திருக்கிறது என்று ரவியின் ஆதரவாளர்கள் இப்பவும் நம்புகிறார்கள். சூரி, அரசுத் தரப்பின் உதவியுடன் சிறையில் இருந்து இரண்டு நாட்கள் கேஷுவல் லீவில் புறப்பட்டு வந்து இந்தக் கொலையைச் செய்துவிட்டு மீண்டும் ஜெயிலுக்கே போய் பதுங்கிவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்கள் ரவியின் குடும்பத்தினர். ஆனால் இதனை வழக்கம்போல மறுத்த காங்கிரஸ் அரசு.
 
அந்த நேரத்தில் சுட்டவர்கள் எப்படித் தப்பித்தார்கள் என்பதை ஊகிக்க முடியவில்லை என்றாலும் தொண்டர்கள் பலரும் சிதறி ஓடியிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் தப்பிக்கவும் முடிந்திருக்கிறது என்கிறது சி.பி.ஐ. ஆனால் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால்தான் பாதுகாவலர்களும் தங்களது ஏ.கே.47 துப்பாக்கியைக் கீழே போட்டார்கள் என்பதை சி.பி.ஐ.யின் விசாரணையில் கொலையாளிகள் தெரிவித்துள்ளார்கள்.
 
இந்தக் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ., கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது சிறையில் இருந்த சூரிதான் என்று கண்டறிந்தது. சூரியை முதல் குற்றவாளியாக அறிவித்தது. இதற்குப் பின் சி.பி.ஐ.க்கு வேலையே வைக்காமல் குற்றவாளிகள் அனைவரும் தினத்துக்கு ஒருவராக அவர்களாகவே நேரில் வந்து சரண்டைந்திருக்கிறார்கள். வழக்கு இப்போதும் அனந்தப்பூர் மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.....................”
 
இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதற்கு மேல் நடந்ததை படியுங்கள் ராகுல்..!
 
................2009 அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆயுள் தண்டனை பெற்று பத்தாண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையை அனுபவித்த 940 சிறைக் கைதிகளை விடுதலை செய்யும்படி அப்போதைய ஆந்திர மாநில அரசு, அப்போதைய கவர்னரிடம் பரிந்துரை செய்தது. அந்தப் பட்டியலில் சூரி மட்டுமன்றி ஜூப்லிஹில்ஸ் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தண்டனை பெற்ற அத்தனை பேருமே இருந்தார்கள். 
 
பாதிக்கப்பட்ட பரிதலா ரவியின் கட்சியான தெலுங்கு தேசக் கட்சி இதனை கடுமையாக எதிர்த்தது. ஆனாலும் பலனில்லை. அப்போது உங்களது காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின் முதலமைச்சர் சொன்னது.. “இவர்கள் செய்த குற்றத்திற்கு இத்தனை நாள் தண்டனை அனுபவித்ததே போதுமானது. சட்டத்தை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்..." என்பதுதான்.. 
 
ஆனால் சூரியால் அந்த அக்டோபர் 2-ம் தேதியன்று சிறையில் இருந்து வெளியில் வர முடியவில்லை. காரணம் பரிதலா ரவியின் படுகொலை தொடர்பாக அவர் மீதிருந்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததுதான்... 2009, டிசம்பர் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பரிதலா ரவி கொலை வழக்கிலும் முறைப்படி ஜாமீன் பெற்றுதான் சூரி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.............”
 
படித்தீர்களா ராகுல்..? ஒரு பியட் காரில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கும் அளவுக்கான வெடிகுண்டுகளை பொருத்தி, அதனை அருகிலேயே இருந்து ஆன் செய்து வெடிக்க வைத்து 26 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்திருக்கிறார் இந்த மட்டலச்செருவு சூரியநாராயண ரெட்டி என்னும் சூரி. ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சியின் பெரும் புள்ளி. பரம்பரை காங்கிரஸ்காரர்.
 
இந்த வழக்கின் ஏ-1 எனப்படும் முதல் குற்றவாளியே இவர்தான்.. இவருக்கு கீழ் கோர்ட்டில் கிடைத்த ஆயுள்தண்டனையை எதிர்த்து, இவர் தொடுத்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம், “இப்படிப்பட்ட கொடூர மனம் கொண்ட மனிதர், தன் வாழ்நாள் முழுவதையும் சிறையில்தான் கழிக்க வேண்டும்...” என்று கடுமையான தீர்ப்பை வழங்கியது..
 
ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்த உங்களது காங்கிரஸ் தொண்டர் சூரி அப்போதும் சும்மாயில்லை. சிறைக்குள்ளே இருந்தபடியே ஸ்கெட்ச் போட்டு ஜூபிலி ஹில்ஸ் குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய தனது எதிரியான தெலுங்கு தேசக் கட்சியின் அனந்தப்பூர் மாவட்ட தலைவரும், சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பரிதலாரவியை 2005-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி, அனந்தப்பூர் நகரத்தில் தனது ஆட்களை வைத்து படுகொலை செய்துள்ளார்.
 
இந்த வழக்கிலும் ஏ-1 அதாவது முதல் குற்றவாளி உங்களது அதி தீவிர காங்கிரஸ் தொண்டரான அதே சூரிதான்.. இப்படி இவர் மீது வழக்கைப் பதிவு செய்து இவரை சிறையிலேயே கைது செய்து விசாரித்து சிறையில் இருந்தபடியே இவர்தான் பரிதலா ரவியைப் படுகொலையைச் செய்தவர் என்று கண்டுபிடித்தது யார் தெரியுமா..? 
 
மத்திய புலனாய்வுத் துறை. 
 
அப்போது அந்தத் துறையை ஆட்சி செய்து கொண்டிருந்தது யார் தெரியுமா..? உங்களது காங்கிரஸ் கட்சியின் மவுன குருவான இப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குதான்..! 
 
நன்றாக யோசித்துப் பாருங்கள்.. நன்கு திட்டமிட்ட ஒரு படுகொலை.. முன் விரோதம் காரணமாக.. அரசியல் பகை காரணமாக நடக்கிறது. இதற்கான வெடி மருந்துகள் ஆந்திரா-கர்நாடக எல்லையோரத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதனை பெற்று வந்தது முதல் குற்றவாளி சூரிதான். அவருடைய காரில்தான் வெடிமருந்தை வாங்கி வந்திருக்கிறார்கள்.. அவர்தான் மற்றவர்களுக்கு பணம் கொடுத்து வாடகைக் கொலையாளியாக பயன்படுத்தியிருக்கிறார். இப்படித்தான் அந்த ஜூப்லி ஹில்ஸ் படுகொலையின் குற்றப்பத்திரிகையில் ஆந்திர மாநில சி.ஐ.டி. போலீஸ் கூறியிருந்தது. இதனால்தான் அந்தக் கொலையாளியான சூரி, ஆயுள் முழுவதும் வெளியில் வரவே கூடாது என்று கூறியது உயர்நீதிமன்றம்.
 
இத்தனைக்கு பிறகும், சிறையில் இருந்தபடியே இன்னொரு படுகொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து, அதனையும் நிறைவேற்றியிருக்கிறார் என்றால் இந்த சூரி எவ்வளவு பெரிய கிரிமினல் குற்றவாளியாக, கொடூர குற்றவாளியாக இருந்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.
 
பரிதலா ரவியின் படுகொலையினால் ஆந்திராவில் ஏற்பட்ட வன்முறையினால் சுமார் 200 கோடிக்கும் மேலான பொருட்கள் சேதமாகி, இழப்பு ஏற்பட்டதாக அரசியல் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் நடந்த பெரிய கலவரங்களில் இரண்டாவது இதுதானாம்.. உங்களது கட்சித் தொண்டரின் கொலைச் செயலால் எத்தனை, எத்தனை இழப்புகள் ஆந்திராவில்..? 
 
ஆனால் உங்களது காங்கிரஸ் கட்சி அரசு என்ன செய்தது..? இன்னொரு படுகொலை வழக்கில் இவர்தான் முதல் குற்றவாளி. அந்த வழக்கில் சூரிக்கு இன்னமும் ஜாமீன் கிடைக்கவில்லை என்று தெரிந்திருந்தும், அரசு ஆணைப்படி உடனேயே விடுவித்தாலும் அவரால் வெளியில் வர முடியாது என்று தெரிந்திருந்தும்.... அவரை மன்னித்து விடுவிப்பதாக அறிவித்தால், இது எவ்வளவு பெரிய மனிதாபிமான செயல்..?
 
“தமிழக அரசு தவறான முடிவை எடுத்துள்ளது.. கொலை கைதிகள் விடுதலை செய்யப்படுவது எனக்கு துயரம் அளிப்பதாக உள்ளது. இந்த நாட்டில் பிரதமராக இருந்த ஒருவருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், சாமானிய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்? இது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  மரண தண்டனையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த தண்டனையை நிறைவேற்றுவதால் எனது தந்தை திரும்ப வந்துவிடப்போவது இல்லை. ஆனால் இது எனது தந்தை அல்லது எனது குடும்பம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இது இந்த தேசத்தின் பிரச்சினை...” என்று கூறியுள்ளீர்களே ராகுல்ஜி...!?
 
அப்படியெனில் ஜூப்லிஹில்ஸில் 26 அப்பாவிகளை சூரி படுகொலை செய்தது மிகப் பெரிய குற்றமில்லையா..? 
 
முன்னாள் அமைச்சரை.. அப்போதைய சட்டமன்ற உறுப்பினரை சிறையில் இருந்தபடியே படுகொலை செய்தது மிகப் பெரிய குற்றமில்லையா..? 
 
இந்த இரண்டு வழக்கிலும் முதல் குற்றவாளியாக இருந்தவரை, கருணை உள்ளத்தோடு, தாய்மை மனதோடு 10 ஆண்டுகள் சிறையில் இருந்தது போதும் என்று நினைத்து வீட்டுக்கு அனுப்பிய, உங்களது கட்சியின் இந்த நடவடிக்கை சரிதானா..? 
 
உங்களது தந்தை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இப்போது ஆயுள்தண்டனை கைதியாக்கப்பட்டிருக்கும் 3 பேரும் நேரடி குற்றவாளிகள் அல்ல.. வெறும் சதிக்கு உடந்தையாக இருந்ததாக மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். அதிலும் பேரறிவாளனின் மீதிருக்கும் குற்றச்சாட்டை முறைப்படி தான் பதிவு செய்யவில்லை என்று வழக்கை விசாரித்த அதிகாரியே இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படி சந்தர்ப்பவசத்தால் இந்த வழக்கில் சிக்கிக் கொண்ட அப்பாவிகள்தான் இவர்கள்..!
 
nalini-murugan-arivu-santhan.jpg
 
 
நளினி ஏ-9-வது குற்றவாளி.
 
முருகன் ஏ-11-வது குற்றவாளி.
 
ராபர்ட் பயாஸ் - ஏ-17-வது குற்றவாளி.
 
ஜெயக்குமார் - ஏ-18-வது குற்றவாளி.
 
ரவி என்னும் ரவிச்சந்திரன் - ஏ-24-வது குற்றவாளி.
 
அறிவு என்னும் பேரறிவாளன் - ஏ-26-வது குற்றவாளி.
 
திருச்சி சாந்தன் - ஏ-36-வது குற்றவாளி.
 
இந்தப் பட்டியலைப் பாருங்கள்.. உங்களுடைய தந்தை கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முதல் எட்டு பேரும் இப்போது உயிருடன் இல்லை.. ஆனால் இந்தக் கொலை வழக்கில் சந்தர்ப்பவசத்தால் உடந்தையாக இருந்து தொலைந்த ஒரே காரணத்திற்காக இவர்களெல்லாம் சதிக்கு உடந்தை என்ற அளவிலேயே தண்டனை பெற வேண்டியவர்கள்..
 
உங்களது தந்தையின் கொலை வழக்கில் இவர்களது பங்களிப்பு உண்மையா இல்லையா என்பது குறித்து விரிவாகப் பேசினால், இந்தப் பதிவின் தன்மையும், நோக்கமும் மாறிவிடும் என்பதால் தற்போது இவர்களது விடுதலையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். இவர்களும் இதற்கு உடந்தை என்றே நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதற்கான தண்டனை தூக்கா..? 16 பேர் படுகொலையான சம்பவத்தில் உடந்தையாக இருந்தவர்களுக்கு தூக்கு.. 26 பேர் படுகொலை சம்பவத்தில் முதல் குற்றவாளிக்கே ஆயுள் தண்டனைதான். அதுவும் 10 வருடங்கள் மட்டும்தான். இது போன்ற விசித்திரங்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும் ராகுல்ஜி.
 
இவர்களைத் தூக்கில் போடுவதாலோ... அல்லது ஆயுள்வரைக்கும் சிறையில் வைப்பதாலோதான் நாட்டில் அமைதி திரும்பும் என்றால்.. உங்களுடைய கட்சியின் முதல்வர் ஒரு படு பயங்கர குற்றவாளியையும், அவர்தம் கூட்டத்தினரையும் கட்சிக்காரர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக விடுவித்தாரே அந்த வழக்கை என்னவென்று சொல்வீர்கள்..?
 
காங்கிரஸ்காரர்கள் குண்டு வைத்தால் அது நாட்டுக்கு நல்லது.. தெரியாமல் உதவி செய்து ஒரு பயங்கரத்தில் சிக்கிய அப்பாவிகள் சிறைக்கு வெளியில் இருந்தால் அது தேசத்திற்கே விரோதமா..? என்னவொரு வித்தியாசமான கொள்கையுடன் இருக்கிறீர்கள் மிஸ்டர் ராகுல்..? 
 
ஒரு படுபயங்கரமான, முதல் குற்றவாளியான ஆயுள் தண்டனை கைதிக்கு 10 ஆண்டுகளே போதுமென்று சொல்லும் உங்களது காங்கிரஸ் கட்சி, இந்த வழக்கில் சதிக்கு உடந்தையாய் இருந்தாய் குற்றஞ்சாட்டப்பட்டு 23 ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்ட இந்த ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலைக்கு  மட்டும் எதிர்க்குரல் கொடுப்பது ஏன்..? 
 
மாநிலத்திற்கு மாநிலம் உங்களது கட்சியின் கொள்கைகள் மாறுமா..? அல்லது இந்திய தேசியம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என்கிற வார்த்தைக்கு இதுவும் ஒரு உதாரணமா..?  
 
தமிழகத்தை வஞ்சிப்பதாக நினைத்துக் கொண்டு, தமிழர்களுக்கெதிராக உங்களது காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவினர் மேற்கொண்டுள்ள தனி மனித விரோத மனப்பான்மை எந்தவகையிலும் நியாயமல்ல. உண்மையில் அவர்கள் என்றென்றும் நன்றியுணர்வுடன்தான் இருந்தாக வேண்டும். ஏனெனில் உங்களது தந்தை இங்கே வந்தது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு. அழைத்தது உங்களது கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர்கள்தான். ஆனால் உங்களது தந்தையின் சாவின்போது  உங்கள் கட்சியின் தமிழ் மாநில தலைவர்கள் யாருமே அவரது அருகில் இல்லை என்பதையும் கொஞ்சம் நினைவில் வையுங்கள் ராகுல்ஜி..!
 
நேரு, இந்திரா, ராஜீவ் என்ற உங்களது குடும்பத்தின் மூத்தவர்கள் மீது தமிழக மக்கள் எத்தனை பாசத்துடனும், நேசத்துடனும் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.  காங்கிரஸ் கட்சி ஒரு தீண்டத்தகாத கட்சியாக தமிழகத்தில் இருக்கும் பொதுவான மக்களும் நினைக்கும்வகையில்தான் உங்களது இந்த ஈழ எதிர்ப்பு கருத்துக்களும், செயல்பாடுகளும் இருக்கின்றன.  காங்கிரஸ் கட்சியை அடியோடு அழிப்பதுதான் உங்களது பணி என்றால் அதனைத் தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ளலாம். அதற்கு முன்பாக ஆந்திராவில் நீங்கள் ரிலீஸ் செய்த அந்த படுபயங்கர கொலையாளி சூரி கடைசியில் எப்படி கொல்லப்பட்டார் என்பதை தெலுங்கானா அல்லது சீமந்திரா பகுதி காங்கிரஸ்காரர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
 
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தமிழக அரசின் விடுவிப்பு முடிவு சரிதான் என்றாலும் வழிதான் தவறு என்று மட்டுமே கூறியிருக்கிறது. அந்த வழியை தமிழக முதல்வர் தனது பதிலில் விரைவில் கூறிவிடுவார். வழக்கு மீண்டும் தூக்கு ரத்து என்ற தீர்ப்பை மறுசீராய்வை நோக்கிப் போக வாய்ப்பே இல்லை.. ஆனால் 432, 433-ஏ ஆகிய பிரிவுகளினால் இவர்களை விடுவிப்பதா..? அல்லது பிரிவு 435-ஐ பயன்படுத்தி விடுவிப்பதா என்கிற சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்படிதான் நடக்கப் போகிறது..!
 
ஆனால் ஒன்று மிஸ்டர் ராகுல்காந்தி.. இந்த இரண்டில் எது நடந்தாலும் அது ஒரு காங்கிரஸ்காரரின் கையொப்பத்துடன்தான் நடைபெறப் போகிறது. அது யார் தெரியுமா..? தமிழக கவர்னராக இருக்கும் திரு.ரோசையாதான்.. தன்னிடம் வரவிருக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு அவர் அரசியல் சட்டப்படி கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அப்படியே மறுக்க மனம் வந்தாலும், அவருடைய மனசாட்சிப்படி அதில் கையெழுத்திட்டுத்தான் ஆக வேண்டும்..! 
 
ஏன் தெரியுமா..?
 
2009-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியன்று அந்த பயங்கர குற்றவாளியான சூரியை விடுதலை செய்யும்படி ஆணையிட்ட ஆந்திர மாநில அமைச்சரவைக்குத் தலைமை வகித்த முதலமைச்சர், இதே ரோசையாதான்.. அப்போது ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்காக ஒரு முறைகேட்டை செய்தார். இன்றைக்கு தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் இந்த நல்ல விஷயத்தைச் செய்யப் போகிறார்..! 
 
காலம்தான் எத்தனை விசித்திரமானது பாருங்கள் மிஸ்டர் ராகுல்..! யார், யாருக்கு எங்கே முடிச்சுப் போடும் என்று யாருக்குமே தெரியாது..! இப்போதும் முடிந்தால் திரு.ரோசையாவிடம் இது பற்றி விசாரித்து நல்ல முடிவை எடுங்கள்..!  
 
நன்றி..
 
என்றும் அன்புடன்
 
சரவணன் என்னும் உண்மைத்தமிழன்

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனைப்புக்கு கந்தப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.