Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுவர் விடுதலை தாமதம் அரசியல் தலையீடு காரணமா???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுவர் விடுதலை தாமதம் அரசியல் தலையீடு காரணமா???

 

10272188_529677730474589_980342342_o.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

APR 27 அரசியல் அழுத்தத்தில் நசுங்கும் நீதி! சதாசிவம் அமர்வின் தவறான தீர்ப்பு ! - கி.வெங்கட்ராமன் நீதித் துறையின் தற்சார்புத் தன்மையே கேள்விக்குள்ளாகி இருக்கிறது. ஏழுதமிழர் விடுதலை தொடர்பாக தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையில் அமைந்த உச்ச நீதிமன்ற அமர்வு 25.4.2014 அன்று அளித்துள்ள தீர்ப்பு இக் கேள்வியை மக்கள் மனதில் எழுப்புகிறது. ஒரு வழக்கில் அரசமைப்புச் சட்டம் சார்ந்தோ, பல்வேறு சாதாரண சட்டப் பிரிவுகள் குறித்தோ அடிப்படையான கேள்வி எழுமானால் அவ்வழக்கை அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பி வைப்பது இயல்பாக நிகழக் கூடியது தான். ஆனால், ஏழுதமிழர் விடுதலை தொடர்பான வழக்கை அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்புவது என்று முடிவு எடுக்கப்பட்டதில் நிகழ்ந்த காலதாமதம் தான் தமிழர்களிடையே ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. இராசீவ்காந்தி கொலைவழக்கில் 22 ஆண்டுகளையும் தாண்டி சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதாக கடந்த 2014 பிப்ரவரி 19 அன்று தமிழக முதலமைச்சர் செயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். தமிழக அரசின் இம் முடிவை எதிர்த்து இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அவசர அவரசரமாக அணுகியது. உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஏழுதமிழர் விடுதலை ஆணைக்கு 20.2.2014 அன்று இடைக்காலத் தடை விதித்தது. இந்திய அரசின் எதிர்ப்பு வழக்கில் இருதரப்பு விவாதங்களும் முடிந்து கடந்த மார்ச் 27,2014 அன்று நாள் குறிப்பிடப்படாமல் தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏறத்தாழ ஒருமாதக் காலம் ஆகிவிட்ட சூழலில் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 18.04.2014 அன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த தலைமை நீதிபதி சதாசிவம் செய்தியாளர்களிடம் கூறிய கருத்தும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்று கோடி காட்டுவதாகவே இருந்தது. அதனால்தான் தி.மு.க தலைவர் கருணாநிதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு முடிவதற்கு முன்னால் ஏழுதமிழர் விடுதலைக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துவிட்டால் எங்கே அது செயலலிதாவுக்கு கூடுதல் வாக்கு வாங்கித் தந்துவிடுமோ என்ற பதைப்பு அவருக்கு. யார் செத்தாலும் வாழ்ந்தாலும் கவலை இல்லை தமது பதவி அரசியலுக்கு எந்த இடையூறும் வந்து விடக் கூடாது என்று கருதியதால் நீதிபதி சதாசிவம் கருத்துக்கு கடும் கண்டனத்தை கருணாநிதி தெரிவித்தார். கருணாநிதியின் கண்டனம் உள்ளிட்ட அரசியல் அழுத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் உள்ளாகிவிட்டதோ என ஐயப்பட அடிப்படைகள் உள்ளன. அரசமைப்பு சட்ட ஆயத்திற்கு அனுப்புவதுதான் முடிவு என்றால் அதனை முன்னமேயே தெரிவித்திருக்க முடியும். இவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. தலைமை நீதிபதி சதாசிவம் 26.4.2014 அன்று ஓய்வுபெறுகிறார். அதற்கு முன்பே தீர்ப்பு வெளியாகும் என்று அவர் கூறியதே இறுதித் தீர்ப்பு வரும் என்ற பொருளில் தான் புரிந்துகொள்ளப்பட்டது. இறுதித் தீர்ப்பு வழங்குவதாக இருந்து அரசியல் அழுத்தங்கள் காரணமாக கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டு பிரச்சினையை தன் கையிலிருந்து நீதிபதி சதாசிவம் அமர்வு தள்ளிவிட்டுவிட்டதோ என்ற ஐயம் இந்த காலதாமதத்தினால் எழுகிறது. இது நீதிமன்றத்தின் தற்சார்புத் தன்மை குறித்த அவ நம்பிக்கையையே ஏற்படுத்தும். அரசமைப்புச் சட்ட ஆயத்தின் விசாரணைக்கு ஏழு சட்டக் கேள்விகளை இவ்வழக்கு தொடர்பாக பி.சதாசிவம், ரஞ்சன் கோகோஸ், ஏ.விரமணா ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்வைத்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 53 -வுடன் இணைந்த பிரிவு 43 -ன் கீழ் வாழ்நாள் தண்டனை என்பது சிறையாளியின் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருப்பதை குறிக்கிறதா? வாழ்நாள் தண்டனையை அனுபவித்து வரும் சிறையாளி அத் தண்டனையை ரத்து செய்யுமாறு கோர உரிமை உண்டா? சில குறிப்பிட்ட வழக்குகளில் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்க சிறப்புப் பிரிவை உருவாக்க முடியுமா? வாழ்நாள் தண்டனை என்பது 14 ஆண்டுகளுக்கும் மேற்பட்டதா? மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்த பிறகு அவர்களுடைய சிறைவாசத்தை இரத்து செய்ய முடியுமா? ‘தொடர்புடைய அரசாங்கம்’ என்ற வகையில் சிறையாளியின் விடுதலையை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தீர்மானிக்க வேண்டியது மத்திய அரசா? மாநில அரசா? இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 432 (7) மாநில அரசின் அதிகாரத்தை விலக்கி வைத்து மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறதா? அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் விடுதலையை தீர்மானிக்க வேண்டியது மத்திய அரசா? மாநில அரசா? ஒருவழக்கில் இரண்டு ‘தொடர்புடைய அரசாங்கங்கள்’ இருக்க முடியுமா? மாநில அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தானாகவே முன்வந்து விடுதலையை அறிவிக்க முடியுமா? குற்றவியல் சட்டத்தில் ’ஆலோசனை’ என்று கூறப்பட்டுள்ளதன் பொருள் ‘ ஒப்புதல்’ என்று எடுத்துக் கொள்ளமுடியுமா? மேற்கண்ட ஏழு கேள்விகள் அரசமைப்புச் சட்ட ஆயத்தின் ஆய்வுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இக் கேள்விகளை உற்று நோக்கினால் இவ்வழக்கில் இந்திய அரசும் இவ்வழக்கில் இணைந்துகொண்ட வாதிகளான அமெரிக்கை நாராயணன் போன்றவர்களும் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்தும் அப்படியே ஏற்கப்பட்டு அரசமைப்புச் சட்ட ஆயத்தின் முன்னால் வைக்கப்படுகிறது என்பது தெளிவாகும். இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட எந்தக் கருத்தும் ஏற்கப்படவில்லை என்பதும் புரியும். இக்கேள்விகளில் ஏழாவது கேள்வியான ‘ஆலோசனை’ என்பது ‘ஒப்புதலை’ குறிக்குமா? என்ற கேள்வியைத் தவிர மற்றவையெல்லாம் ஒன்று இதற்கு முன்னர் இருந்த அரசமைப்பு ஆயத்தால் தெளிவுபடுத்தப்பட்டவை. அல்லது சட்டங்களிலேயே குழப்பமில்லாமல் தெளிவாக இருப்பவை ஆகும். தேவை இல்லாமல் பல்வேறு கேள்விகளை எழுப்பி சிக்கல் பெரிதாக்கப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டம் பிரிவு 435 -ன் படி ஆலோசனை என்பது ஒப்புதலை குறிக்குமா இல்லையா என்பது குறித்து ஏற்கெனவே விவாதிக்கப்பட்டிருக்கிற பல தீர்ப்புரைகளை வைத்து சதாசிவம் அமர்வே முடிவு கூறியிருக்க முடியும். மாறாக மத்திய அரசுத் தரப்பு எழுப்பிய அத்துணை வினாக்களையும் அப்படியே ஏற்று அரசமைப்புச் சட்ட ஆயத்தின் ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பிவிட்டது. முன் வைக்கப்பட்ட கேள்விகளில் 2,3,4,5,7 ஆகியவை ஒரே கேள்வியின் வெவ்வேறு வடிவங்கள் ஆகும். ஆனால் இவை வெவ்வேறு மனுதாரர்களால் வெவ்வேறு வடிவத்தில் முன்வைக்கப்பட்டதால் அப்படி அப்படியே ஏற்கப்பட்டு தனித் தனி கேள்விகள் போல் ஆய்வுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுவே இத் தீர்ப்பு அவரச அவசரமான இறுதி நேர முடிவு என்பதற்கு சான்றாக விளங்குகின்றது. இப்பட்டியலில் 1 ஆம் எண்ணுள்ள கேள்வி தொகுப்புக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயங்கள் முடிவு சொல்லிவிட்டன. இவை புதிய கேள்விகள் அல்ல. விடையளிக்கப்பட்ட பழைய கேள்விகளே ஆகும். 1961 ஆண்டிலேயே கோபால் கோட்சே – எதிர் - மகாராஷ்ட்டிரா மாநில அரசு ( 1961 ,3 SCR,440) வழக்கில் வாழ்நாள் சிறைபற்றிய வரையறுப்பும் தண்டனை குறைப்பு குறித்த அரசாங்கத்தின் அதிகாரம் பற்றியும், அந்த அதிகாரம் எத்தனை ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு செயலுக்கு வரும் என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டுவிட்டன. காந்தியார் கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேயின் வழக்கு இது. இத் தீர்ப்பு அரசமைப்புச் சட்ட ஆயத்தின் தீர்ப்பாகும். இவ்வழக்கில் 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு தனது வாழ்நாள் தண்டனை முடிவுக்கு வந்துவிட்டதாக கோபால் கோட்சே வாதாடினார். இவ்வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 53 -வுடன் இணைந்த பிரிவு 43ன் கீழ் வாழ்நாள் சிறை என்பது அச்சிறையாளியின் மீதியுளள் வாழ்நாள் முழுவதையும் குறிக்கும் என்று வரையறுத்தது. அதே நேரம் தொடர்புடைய அரசாங்கத்தின் தண்டனை குறைப்பு அதிகாரம் தற்சார்பானது என்று விளக்கம் அளித்தது. குற்றவியல் சட்டம் 432 ன் படி ( அன்றைய 407 ன் படி ) தொடர்புடைய அரசாங்கம் எந்த நேரத்திலும் அந்த வாழ்நாள் சிறையாளிக்கு தண்டனை குறைப்பு வழங்கி விடுதலை செய்யலாம் என்று கூறியது. அதன் அடிப்படையிலேயே காந்தி கொலை வழக்கின் வாழ்நாள் சிறையாளியான கோபால் கோட்சேயை மராட்டிய மாநில அரசு அவரது சிறைவாசம் 15 ஆண்டுகள் முடிந்த நிலையிலேயே 1964-ல் விடுதலை செய்தது. கோபால் கோட்சே தானும் தனது சகோதரர் வினாயக் ராம் கோட்சேயும் இணைந்து காந்தியை கொன்றதை மறுக்கவும் இல்லை. அதற்காக வருந்தவும் இல்லை. அவரது வாக்குமூலத்தை “ நான் ஏன் காந்தியை கொன்றேன்” என்றத் தலைப்பில் நூலாகவே வெளியிட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தொடரந்து மதவெறி நடவடிக்கைகளில் இறங்கினார். கலவரங்களைத் தூண்டினார். அதன் காரணமாக 1965 -லேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (DIR) ஓராண்டு சிறையில் அடைக்கப்படார். இது வாழ்நாள் சிறையாளிகளை தண்டனை குறைப்பு வழங்கி விடுதலை செய்வது குறித்து பெரும் விவாதப் புயலைக் கிளப்பியது. இந்தப் பின்னணியில் இந்திய குற்றவியல் சட்டத்தில் 433 (A) என்றப் பிரிவு சேர்க்கப்பட்டது. ஒரு கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று வாழ்நாள் தண்டனையாக தண்டனை குறைப்பு பெற்றவர்கள் அல்லது மரண தண்டனைக்கு பதிலாக வாழ்நாள் சிறைதண்டனை பெற்றவர்கள் 14 ஆண்டுகள் கழிக்கும் முன்பாக விடுதலை கேட்டு மாநில அரசுக்கோ மத்திய அரசுக்கோ விண்ணப்பிக்க முடியாது என்பதே 434 (A) விதிக்கும் நிபந்தனை ஆகும். இச் சட்டத்திருத்தம் வந்ததற்குப் பிறகு பச்சன் சிங் வழக்கில் 433 (A) குறித்த விவாதம் எழுந்தது. அதில் தண்டனை குறைப்பை எப்படி கணக்கிடுவது என்று விவாதிக்கப்பட்டது. ஏனெனில், கோபால் கோட்சேக்கு விடுதலை வழங்கும் போது அவரது சிறை நடத்தைக்காக அவ்வப்போது வழங்கப்பட்ட தண்டனைக் குறைப்பு காலம் மொத்தம் 6 ஆண்டுகள் வந்தது. வாழ்நாள் சிறை என்பதற்கு 20 ஆண்டுகள் என்ற வரையறுப்பை வைத்துக் கொண்டு 6 ஆண்டுகள் கழிவு வழங்கி மராட்டிய மாநில அரசு கோபால் கோட்சேக்கு விடுதலை வழங்கியது. இந்தக் கணக்கீடு பச்சன் சிங் வழக்கில் ஒரு சிக்கலாக விவாதிக்கப்பட்டது ஏனெனில் கோபால் கோட்சே - எதிர் - மராட்டிய மாநில அரசு வழக்கில் வாழ்நாள் சிறை என்பதற்கு சிறையாளியின் வாழ்நாள் முழுவதும் என்ற வரையறுப்பு வழங்கப்பட்டது. அதே நேரம் அரசின் தண்டனை குறைப்பு பற்றியும் பேசப்பட்டது. பச்சன் சிங் தீர்ப்புக்கு பிறகு 433 (A) குறித்து வெவ்வேறு வழக்குகளில் வெவ்வேறு முடிவுகள் நீதிமன்றத் தீர்ப்புகளில் வந்தன. இச் சூழலில் மாரூராம் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட ஆயம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. மாரூராம் வழக்கில் அரசமைப்புச் சட்ட ஆயம் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குறித்த அரசமைப்புச் சட்டத்தின் கூறு 72 குறித்தும் 161 குறித்தும் தண்டனை குறைப்பு குறித்த குற்றவியல் சட்டப் பிரிவு 432 குறித்தும் 433 (A) விதிக்கும் வரம்பு குறித்தும், வாழ்நாள் தண்டனை குறித்தும் மிக விரிவாக பல கோணங்களில் ஆய்வு செய்தது. பல வினாக்களுக்கு விடையளித்ததால் உச்ச நீதிமன்ற வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த தீர்ப்புகளில் ஒன்றாக அது அமைந்தது. இத் தீர்ப்பும் வாழ்நாள் சிறைத்தண்டனை என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 53 -வுடன் இணைந்த பிரிவு 43ன் கீழ் சிறையாளியின் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதையும் குறிக்கும் என்று கூறியது. அதே நேரம் 433 (A) -ன் வரம்புக்குட்பட்டு தொடர்புடைய அரசு 432ன் கீழ் தண்டனை குறைப்பு அளிப்பதை நீதிமன்ற அதிகாரத்தில் தலையிட்டதாகக் கொள்ள முடியாது எனக் கூறியது. பிரிவு 432 ன் படி ஒரு வாழ்நாள் சிறையாளிக்கு தண்டனை குறைப்பு வழங்கும் போது ஓர் கணக்கீட்டுக்காக உச்ச பட்ச சிறைக்காலத்தை 20 ஆண்டுகள் என கொள்ளலாம் என்று கூறியது. அதாவது கோபால் கோட்சேக்கு மராட்டிய மாநில அரசு செய்த கணக்கீட்டு முறையை மாரூராம் தீர்ப்பு அங்கீகரித்தது. அதுமட்டுமின்றி 433(A) என்ற நிபந்தனையைத் தவிர வேறு எந்த வகையிலும் கட்டற்ற அதிகாரமே 432 மற்றும் 433 -ன் கீழ் அரசுக்கு வழங்குகிறது என்றும் தெளிவுபடுத்தியது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 53 பிரிவு 43 குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவுகள் 432, 433(A) ஆகியவை ஒன்றன் மீது இன்னொன்று எவ்வாறு ஊடாடிச் செயல்படும் என்பதை பல கோணங்களில் ஆய்வு செய்து மாரூராம் வழக்கில் அரசமைப்புச் சட்ட ஆயம் தீர்ப்புரைத்த பிறகு மீண்டும் அதே பிரச்சினையை சதாசிவம் அமர்வு இன்னொரு அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பியிருப்பது முற்றிலும் தேவையற்றது. பிரிவு 432க்கு விளக்கம் அளித்த மாரூராம் தீர்ப்பு இது ஏற்கெனவே வழங்கப்பட்ட தண்டனை குறைப்புக்கு வழங்கப்பட்ட மேலான கூடுதல் கழிவுதான் (Additional remission ) என்று கூறிவிட்டப் பிறகு மரண தண்டனை வாழ் நாள் சிறைத்தண்டனையாக உச்ச நீதிமன்றத்தால் குறைக்கப்பட்ட பிறகு 432-ன் படி விடுதலை வழங்கலாமா என்ற கேள்வி தேவை அற்றது. குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432 (7) தண்டனை குறைப்பு வழங்க அதிகாரம் உள்ள தொடர்புடைய அரசாங்கம் (appropriate government ) பற்றி வரையறுக்கிறது. இதில் 432 (7)(a) மற்றும் 432 (7)(b) ஆகிய இரண்டு உட் பிரிவுகள் உள்ளன. 432 (7)(a) ‘ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரத்திற்க்கு உட்பட்ட சட்டங்களின் படி தண்டிக்ப்பட்டவர்களின் தண்டனை குறைப்பு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு என்று கூறுகிறது பிற எல்லா வழக்குகளிலும் மாநில அரசுகளின் தண்டனை குறைப்பு அதிகாரமே செல்லுபடியாகும் என்று 432 (7)(a) வரையறுக்கிறது. இதில் குழப்பமே இல்லை. இரண்டும் இரண்டு வெவ்வேறு தளங்களில் செயல்படுபவை என்பதை இச் சட்டப் பிரிவுகளே தெளிவாகக் குறிக்கின்றன. இச்சட்டப் பிரிவுகளை படிக்கிற யாருக்கும் மாநில அரசின் அதிகாரத்தின் மீது மத்திய அரசாங்கத்தின் மேலாதிக்கம் எழ வாய்ப்புண்டு என்றக் கருத்து ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இராசீவ் காந்திக் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தடா சட்டம் நீக்கப்பட்டபிறகு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 ன்படி மரண தண்டனையும் வாழ் நாள் தண்டனையும் வழங்கப்பட்ட பிறகு தொடர்புடைய அரசாங்கம் எது என்றக் கேள்வி எழும்புவதற்கு வாய்ப்பே இல்லை. 432 (7)(a) ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. மத்திய அரசின் விசாரணை அமைப்பான சி.பி.ஐ குறித்து பேசவில்லை. இராசீவ்காந்தி கொலைவழக்கில் தொடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சட்டம் வெடிபொருள் சட்டம், தந்திச் சட்டம், ஆயுதச் சட்டம் ஆகியவற்றுக்கும் வாழ்நாள் சிறைத் தண்டனைக்கும் தொடர்பேதும் இல்லை. இச்சட்டங்கள் எதுவும் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்குபவை அல்ல. இராசீவ் காந்தி வழக்கில் இச் சட்டங்களின் கீழ் அளிக்கப்பட்ட உச்ச அளவு தண்டனையே மூன்றாண்டு சிறை தண்டனைதான். இதையெல்லாம் கடந்து 22 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார்கள். இப்போது வழக்கில் உள்ள வாழ் நாள் தண்டனைக்கும் 432 (7)(a) க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி ஒரு கேள்வியை நடுவண் அரசுத் தரப்பு எழுப்பியதால் அதனை அப்படியே அரசமைப்புச் சட்ட ஆயத்தின் ஆய்வுக்கு சதாசிவம் அமர்வு அனுப்பியிருக்கக் கூடாது. சட்டவிதிகளில் சொற்குழப்பம் இல்லாமல் தெளிவாக இருப்பனவற்றையும் மீளாய்வு செய்துகொண்டே இருப்பது தேவையற்ற காலதாமதத்தை உண்டாக்கி சிறையாளிகளின் சிறை வாழ்நாளை நியாயத்திற்க்குப் புறம்பாக நீட்டிப்பதற்கே பயன்படும். ஒரு வழக்கில் இரண்டு ‘தொடர்புடைய அரசாங்கங்கள்’ இருக்க முடியுமா என்பதோ அரசமைப்புச் சட்டப்படி விடுதலையை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா மாநில அரசுக்கு இருக்கிறதா? என்றக் கேள்வியோ முற்றிலும் தேவை அற்றவை ஆகும். 432 (7) -ஐ படித்தாலே அதில் எந்த இடத்திலும் மாநில அரசின் முடிவின் மீதி மத்திய அரசு ஆணை செலுத்த முடியும் என்றோ விடுதலை குறித்த பிரச்சினையில் மத்திய அரசின் கருத்தே மேலோங்கும் என்றோ சொல்லப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியும். மாநில அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தானாகவே முன்வந்து விடுதலையை அறிவிக்க முடியுமா என்றக் கேள்வி அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பப்பட்டிருப்பது கேலிக்கூத்தானது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432 ஐ பார்த்தாலே இது தெளிவாகும். இப் பிரிவில் 432 (1) மற்றும் 432 (2) ஆகிய உள் பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் 432 (2) தண்டனை பெற்ற சிறையாளி தண்டனை குறைப்புக் கோரி மாநில அரசுக்கு விண்ணப்பம் அளித்தால் மாநில அரசு அதன் மீது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்குகிறது. அதாவது தண்டனைக் குறைப்பு விண்ணப்பம் போடும் சிறையாளிகள் குறித்த விதி அது. ஆனால், 432 (1) முற்றிலும் வேறானது. இப்பிரிவு ‘ மாநில அரசு எப்போது வேண்டுமானாலும் (at any time) நிபந்தனையின்றியோ அல்லது நிபந்தனை விதித்தோ (without condition or upon any conditions ) தண்டனை குறைப்பு வழங்கலாம் என்று கூறுகிறது. தண்டனைக் குறைப்பில் மாநில அரசின் கட்டற்ற அதிகாரத்தை இது குறிக்கிறது. மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன் படுத்தி தாமாகவே முன் வந்து எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், விடுதலை வழங்கலாம் எனக் கூறுவது தான் 432 (1). சிறையாளியிடம் விண்ணப்பம் பெறுவதோ ஆய்வுக்குழு நியமித்து ஆய்வு செய்வதோ சட்டக் கட்டாயம் இல்லை என்பதையே 431 (1) குழப்பம் இல்லாமல் கூறுகிறது. இதையும் மேலாய்வுக்கு அனுப்பி வைத்திருப்பது கொடுமையானது. எஞ்சி இருப்பது 435 –ல் ஆலோசனை என்று கூறப்பட்டிருப்பதை ஒப்புதல் என்று பொருள் கொள்ளலாமா? என்றக் கேள்வி மட்டுமே ! நடுவண் அரசின் தரப்பில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டிருப்பதும் இந்தக் கேள்விதான். இவ்வழக்கில் தெளிவு படுத்த வேண்டிய கேள்வி ஒன்று உண்டென்றால் இது மட்டுமே ஆகும். 435 (1) மற்றும் 435 (2) ஆகியவற்றை ஒப்பிட்டு விவாதித்து சதாசிவம் அமர்வே இது குறித்து தீர்ப்புரைத்திருக்க முடியும். இதற்கொரு அரசமைப்புச் சட்ட ஆயம் தேவை இல்லை. நாம் முன்னமே எடுத்துக் காட்டியதுபோல் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், இரவிச்சந்திரன், இராபட் பயஸ், இந்த ஏழு தமிழர்களும் ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் படியான தண்டனையை குறைக்கக் கோரவில்லை. இராசீவ் காந்திக் கொலை வழக்கில் மரண தண்டனையோ , வாழ்நாள் தண்டனையோ வழங்குவதற்கு தகுதியான ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டம் தடா சட்டம் தான். இவ்வழக்கில் தடா சட்டம் செல்லாது என மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதிபடக் கூறிவிட்டது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 –ன் படிதான் இவர்களில் சிலருக்கு மரண தண்டனையும் சிலருக்கு வாழ் நாள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிறர் விடுதலை ஆனார்கள். 435 (1) 435 (2) ஆகியவற்றை ஒப்பிட்டு நோக்கினால் இங்கு எழுப்பப்படும் சிக்கலுக்கு எளிதில் விடை கிடைக்கும். 435 (2) மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனை குறைப்புப் பற்றி பேசுகிறது. மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின்படி தண்டனை வழங்கப்பட்டு அத்தண்டனைக் காலங்களைக் குறைத்து விடுதலை செய்வதாக மாநில அரசு முடிவு செய்தால் அவாறான தண்டனைக் குறைப்பில் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெறுவது (consent ) கட்டாயம் என 435 (2) கூறுகிறது. அதாவது மத்திய அரசு ஒப்புதல் வழங்காவிட்டால் மாநில அரசு விடுதலை செய்ய முடியாது என்று பொருள். ஆனால், 435 (2) இங்கு செயல்பட முடியாது. மரண தண்டனையோ வாழ்நாள் தண்டனையோ வழங்குவதற்குரிய சிறப்புச் சட்டமான தடாசட்டம் இராசீவ்காந்தி வழக்கில் தள்ளுபடியாகிவிட்டது. இந்த தடா சட்டம் தான் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டமாகும். இவ்வழக்கில் தடா நீக்கப்பட்டபிறகு, வாழ்நாள் சிறை தொடர்பாக மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வேறு எந்த சட்டமும் செயலில் இல்லை. எனவே 435 (2) -ன் படி இவர்கள் விடுதலைக்கு மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் (consent ) பெறத் தேவை எழவில்லை. 435 (1) மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பு விசாரித்திருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசுகிறது. இங்குதான் ஆலோசனை (consultation ) கோரப்படுகிறது. இராசீவ் காந்தி கொலை வழக்கை மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பான மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.ஐ) விசாரித்ததால் 435 (1) –ன் படி மத்திய அரசின் கருத்து கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. 435 1 –ல் “ மத்திய அரசுடன் கலந்தாலோசனை ” ( consultation) என்றும் 435 (2) –ல் (consent) என்றும் இரண்டு வெவேறு இடங்களில் இரண்டு வெவ்வேறு சொற்களை பயன்படுத்துகிறது. இச்சொற்கள் பொருள் வேறுபாடு அற்றவை அல்ல. தெளிவாக திட்டமிட்ட முறையில் தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு ஆனால் அதன் விசாரணை மட்டும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பால் நடத்தப்பட்டிருந்தால் அங்கு கலந்தாலோசனை ( consultation )யும் மத்திய அரசாங்கத்தின் சட்டத்திற்குட்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அங்கு மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலும் (consent) வலியுறுத்தப்படுகிறன. இச் சூழலில் கலந்தாலோசனை என்றாலும் (consultation) என்றாலும் ஒப்புதல் தான் , ஒப்புதல் (consent ) என்றாலும் ஒப்புதல் தான் என்றக் குழப்பம் எழ வாய்ப்பே இல்லை . இங்கு தண்டனை குறைப்பு குறித்து மத்திய அரசின் ஆலோசனை பெறுவது கருத்து கேட்கும் ஒரு செயல்முறையே தவிர அதற்கு கட்டுப்பட வேண்டிய சட்டக் கட்டாயம் எதுவும் இல்லை. ஆலோசனை கேட்பின் போது மத்திய அரசாங்கம் கூறும் கருத்து மாநில அரசை கட்டுப்படுத்தும் சட்டத்தகுதி உடையது அல்ல. ஏழுதமிழர் விடுதலைக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்தாலும் அந்த மறுப்பு மாநில அரசின் முடிவை கட்டுப்படுத்த வலுவற்றது என்பதே 435 (1) படி பெற வேண்டிய செய்தியாகும். இந் நிலையில் நேரடியாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது ஏழுதமிழர் விடுதலை ஆணைக்கு சதாசிவம் அமர்வு இடைக்காலத்தடை விதித்ததே தேவையற்ற ஒன்று! இப்போது அத் தடையை நிரந்தரமாக நீடித்திருப்பதும் மிகத் தவறான ஒன்றாகும். மிக எளிமையாக விடை கண்டிருக்க வேண்டிய ஒரு பிரச்சினையை அரசியல் அழுத்தம் காரணமாக பெரிதாக்கி அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பிவைத்தது சதாசிவம் அமர்வின் மிகத் தவறான தீர்ப்பாகும். உச்ச நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதில் முதன்மை பங்காற்றிய கருணாநிதி இப்போதும் மாறவில்லை. அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு இவ்வழக்கை அனுப்பியது குறித்து பல தலைவர்களும் பதற்றத்தோடு கருத்துக் கூறியபோது முரசொலியில் வழக்கம் போல கேள்வி எழுப்பி பதில் அளிக்கும் பாணியில் இது குறித்து கூறிய கருணாநிதி “ வழக்கு குறித்து கருத்து கூற விரும்பவில்லை” என்று கூறினார். அவரது துரோகம் தொடர்வதையே இது காட்டுகிறது. இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என்றக் கேள்வி எழுகிறது. மூன்று மாதத்திற்குள் அரசமைப்புச் சட்டம் ஆயம் நிறுவப்பட்டாலும் அதன் விசாரணை முடிய எவ்வளவு காலம் ஆகும் என்றோ அவ்விசாரணையின் முடிவு எப்படி அமையும் என்றோ உறுதியாகக் கூறமுடியாது. இந்நிலையில் ஏழுதமிழர் விடுதலையில் உறுதியான அடுத்தக் கட்ட நடவடிக்கையில் தமிழக அரசு இறங்க வேண்டும். இவ்வாறான சூழல் எழுந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அது வருமாறு: “ ஒருவேளை உச்ச நீதிமன்றம், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி ஏழுதமிழர் விடுதலைக்கு ஆணையிட தாமதம் செய்தாலோ, தடுமாறினாலோ, தமிழக அரசு அதற்காக தயங்க வேண்டியதில்லை. இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 161 -ன் படி இவர்களின் விடுதலைக்கு உறுதியான ஆணையிட வேண்டும். எக்காரணம் கொண்டும் ஏழு தமிழர் விடுதலை முடிவிலிருந்து பின் வாங்க்க் கூடாது” என்று வலியுறுத்தியிருந்தோம் ( ஏழுதமிழர் விடுதலை சட்டப்படி சரியே – கி.வெங்கட்ராமன் , தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் , மார்ச் 1-16 இதழ்) அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 –ன் கீழ் தண்டனை குறைப்பு வழங்கி விடுதலை அளிப்பது குறித்த செய்தியை மாரூ ராம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயம் விவாதிக்கிறது. நாம் ஏற்கனெவே குறிப்பிட்டது போல் குற்றவியல் நடைமுறை சட்ட விதி 433 (A) பிறப்பிக்கப்பட்ட பிறகு உருவான சூழலில் மாரூ ராம் வழக்கில் அரசமைப்புச் சட்ட ஆயம் அமைக்கப்பட்டது. மாநில அரசின் விடுதலை வழங்கும் அதிகாரம் 432 (1) -ன் படி கட்டற்றது என்றாலும் 433 (A) விதிக்கும் நிபந்தனைக்கு அது உட்பட்டது என்று கூறும் இத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டப்பிரிவு 161 இந்த 433 (A) க்கு கட்டுப்பட்டதல்ல என தெளிவுபட கூறுகிறது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 72 படி இந்திய குடியரசுத்தலைவரோ, பிரிவு 161 -ன் படி மாநில ஆளுனரோ எப்போது வேண்டுமானாலும் தண்டனை குறைப்பு அளித்து விடுதலை வழங்கலாம். 433 (A) இந்த அதிகாரத்திற்கு விலங்கிட முடியாது என்று அரசமைப்புச் சட்ட ஆயத்தின் தீர்ப்பு கூறியது. பிரிவு 161 -ன் படி மாநில ஆளுனர் என்றால் அது மாநில அமைச்சரவையை குறிக்கும் என்றும் மாரூராம் வாழக்கு தெளிவுபடுத்தியது. அதாவது 433 (A) படி 14 ஆண்டுகள் கழித்த பிறகுதான் ஆளுனர் தண்டனை குறைப்பு வழங்கலாம் என்று கூறிவிட முடியாது. அதற்கு முன்னரேயே மாநில அமைச்சரவை ஆளுனர் வழியாக வாழ்நாள் சிறையாளிக்கு விடுதலை வழங்கலாம் என்று கூறுகிறது. இதே தீர்ப்பு தண்டனை குறைப்பு வழங்கும் போது ஒரு கணக்கீட்டுக்காக வாழ்நாள் தண்டனையை 20 ஆண்டுகள் சிறை தண்டனை என்றுக் கருதிக் கொண்டு தண்டனைக் கழிவு வழங்கலாம் என்றும் கூறியது, ஏழுதமிழர்களை பொருத்த அளவில் 433 (A) படியான 14 ஆண்டுகள், மாரூராம் தீர்ப்பின் படியான 20 ஆண்டுகள் ஆகிய அனைத்தையும் கடந்தவர்கள் . மாரூராம் தீர்ப்புக்குப் பிறகு வந்த சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இந்த அரசமைப்புச் சட்ட ஆயத்தின் தீர்ப்பை கருத்தில் கொள்ளாமலேயே தீர்ப்பு வழங்கியுள்ளன. இப்போது அதிகமாக பேசப்படும் சுவாமி ஸ்ரதானந்தா -எதிர்- கர்நாடக மாநில அரசு என்ற வழக்கும் அதில் ஒன்று 432 -ன் படி அரசுக்கு இருக்கிற தண்டனை குறைப்பு அதிகாரத்தில் தலையிடும் வகையில் 25 ஆண்டுகள் , 35 ஆண்டுகள் என சிறை தண்டனை வழங்கி தீர்ப்புகள் வந்துள்ளன. அவை சட்ட அறியாமை ( per incurium ) என்று தள்ள வேண்டியவை ஆகும். அவற்றை பின்பற்றவேண்டிய அவசியம் எழவில்லை. அவற்றையெல்லாம் காரணமாக்க் காட்டி அரச்மைப்புச் சட்ட ஆயத்திற்கு சதாசிவம் அமர்வு அனுப்பி வைத்தது தவறானதாகும். விவாதத்திற்குரிய இத் தீர்ப்புகளில் கூட அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் படியான தண்டனை குறைப்பு அதிகாரம் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. அரசமைப்புச் சட்ட ஆயமான வி. ஆர் கிருஷ்ணய்யர் ஆயம் வழங்கிய மாரூராம் தீர்ப்பே செயலில் உள்ளது. எனவே 161-ன் படி ஏழுதமிழர்களை விடுதலை செய்வதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை. எனவே தமிழக அமைச்சரவை முடிவு செய்து ஆளுனருக்கு அனுப்பி அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் படி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ரவிசந்திரன், இராபட்பயஸ் ஆகிய ஏழுதமிழர்களையும் தமிழக அரசு உடன்படியாக விடுதலை செய்ய வேண்டும். அதற்கு முன்பாக இந்த ஏழு தமிழர்களுக்கும் நீண்ட கால சிறை விடுப்பு வழங்கி (பரோல்) இடைக்கால விடுதலை அளிக்க வேண்டும். கட்டுரையாளர் தோழர் கி.வெட்கட்ராமன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணை ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர். Posted Yesterday by தமிழ்த் தேசியன் Labels: கட்டுரை கி.வெங்கட்ராமன்

எதோ அந்த 7 அப்பாவிகளின் புண்ணியத்தால்

நேரு குடும்பம், கொங்கிரஸ், ரா, தமிழ்நாடு அரசியல்வாதிகள், வழக்கறிஞ்சர்கள், நீதவான்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என்று ஒரு பெரிய கூட்டமே 22 வருடமா குப்பை கொட்டுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.