Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் - அரசறிவியல் பேராசிரியர் வீ. சூர்யநாராயணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் - அரசறிவியல் பேராசிரியர்

[ வெள்ளிக்கிழமை, 09 மே 2014, 07:55 GMT ] [ நித்தியபாரதி ]

இந்தியாவைப் போலல்லாது, அபிவிருத்தியடைந்த நாடுகளில் புகலிடக் கோரிக்கை என்பது குடியுரிமை பெறுவதற்கான முதலாவது படிமுறையாகக் காணப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் குடிப்பரம்பலில் சிறிலங்காத் தமிழர்கள் நிரந்தரமானவர்களாகக் காணப்படுகின்றனர்.

இவ்வாறு The New Indian Express ஆங்கில ஊடகத்தில் முன்னாள் அரசறிவியல் பேராசிரியர் V Suryanarayanan* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சிறிலங்கா அரசாங்கமானது புதிய கொள்கைகளை அமுல்படுத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியது.

சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற தனது நட்பு நாடுகளுடன் மிகப் பலமான உறவைக் கட்டியெழுப்பி வரும் அதேவேளையில், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் அதிகரித்து வரும் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படும் போது புலம்பெயர் தமிழ் சமூகமானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியங்களை வழங்கும் என்பது உறுதியானதாகும்.

பயங்கரவாததச் செயற்பாடுகளுக்கு நிதி வழங்குபவர்கள் என்கின்ற குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா அரசாங்கத்தால் அண்மையில் 16 அமைப்புக்களும் 424 தனிநபர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக சிறிலங்கா அரசாங்கம் தன்னால் அடையாளங் காணப்பட்டவர்களின் சொத்துக்களை முடக்கிவருகிறது.

இதற்கான நடவடிக்கைகள் உலக வர்த்தக மையத்தின் மீது விமானக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவுடன் ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட 2001ம் ஆண்டின் 1373வது பரிந்துரையின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுடன் தொடர்புகளைப் பேணும் இலங்கையர்கள் அனைவரும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆகியன உட்பட 16 அமைப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் தடைசெய்துள்ளது.

இதேபோன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைச் சேர்ந்த வி.உருத்திரகுமரன், உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய இமானுவேல் அடிகளார் மற்றும் புலித் தலைவர்களான நெடியவன், விநாயகம் போன்ற முக்கியநபர்கள் உட்பட 424 பேரை சிறிலங்கா அரசாங்கம் தடைசெய்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பல நாடுகளில் பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்தப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 1992 மே மாதத்தில் இந்தியாவால் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பெனத் தடைவிதிக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கம் புலிகள் அமைப்பை ஜனவரி 07, 2009 அன்றே தடைசெய்தது.

இந்திய அமைதி காக்கும் படையினர் சிறிலங்காவில் கடமையில் ஈடுபட்டனர். இவர்கள் வவுனியாக் காடுகளில் புலிகள் அமைப்பிற்கு எதிராக யுத்தம் புரிந்தனர். இவர்கள் அதிகளவான படையினரைக் கொண்டிருந்த போதும் புலிகள் அமைப்பின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதன்பின்னர் பிரபாகரனும் பிறேமதாசவும் இணைந்து இந்திய அமைதி காக்கும் படையை சிறிலங்காவிலிருந்து வெளியேற்றினர். இதன்மூலம் பிறேமதாச அரசாங்கம் புலிகளுக்கு பெருமளவான நிதியையும் ஆயுதங்களையும் வழங்கியது.

"தமிழ் மக்களின் பாதுகாப்புத் தொடர்பாகப் பேசுவதற்கு இந்தியா எந்தவொரு சட்ட உரிமையையோ அல்லது தார்மீகத்தையோ கொண்டிருக்கவில்லை. இது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பிரச்சினை என்பதால் இதனை இவ்விரு தரப்பினருமே தீர்த்துக் கொள்ள வேண்டும். சிறிலங்காவில் அமைதியைக் கொண்டுவருவதற்கான வெளிநாட்டுத் தலையீடு தோல்வியுற்றுள்ளது" என புலிகள் அமைப்பின் தத்துவாசிரியரான அன்ரன் பாலசிங்கம், The Times of London ஊடகத்திடம் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறிருப்பினும் புலிகள் அமைப்பிற்கும் பிறேமதாச அரசாங்கத்திற்கும் இடையிலான உறவு நீண்டகாலம் நிலைத்திருக்கவில்லை. புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் பிறேமதாச படுகொலை செய்யப்பட்டார்.

சிறிலங்காத் தமிழர்கள் எப்போதும் புலம்பெயர் சமூகத்தவர்களாகவே வாழ்கின்றனர். கொலனித்துவ ஆட்சியின் போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கல்வியறிவுடைய தமிழர்கள் மலாயா, சிங்கப்பூர் மற்றும் பிரித்தானியக் கொலனித்துவத்தின் பிடிக்குள்ளிருந்த வேறு நாடுகளுக்கு சென்றனர். இவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக சிறிலங்காவை விட்டு புலம்பெயர்ந்தனர். இவர்களால் ஈட்டப்பட்ட வருவாய்கள் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றியது.

இதேபோன்று கொலனித்துவ ஆட்சியிலிருந்து சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர், உயர் பட்டங்களைப் பெற்ற சிறிலங்காத் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கல்விமான்கள், சட்டவாளர்கள், தொழினுட்பவியலாளர்கள் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.

1983 யூலைக் கலவரத்தைத் தொடர்ந்து சிறிலங்காவில் வாழ்ந்த தமிழர்கள் பலர் தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக நாட்டைவிட்டுத் தப்பியோடினர். இக்காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவியதால், தமிழர்களின் புலம்பெயரலை இந்த நாடுகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இதன் பெறுபேறாக, ஐரோப்பிய நாடுகள் தமது நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்கு கருணை காட்டியதுடன் இவர்களுக்கு குடியுரிமையையும் வழங்கின.

ஆனால் இன்று சிறிலங்காவிலிருந்து புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகும் சிறிலங்காத் தமிழர்கள் அந்த நாட்டு அரசாங்கத்தின் 'வேண்டாத, வரவேற்கப்படாத விருந்தாளிகளாக' உள்ளனர். தற்போது புலம்பெயர்ந்து வாழும் சிறிலங்காத் தமிழர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமானதாகும்.

இந்தியாவைப் போலல்லாது, அபிவிருத்தியடைந்த நாடுகளில் புகலிடக் கோரிக்கை என்பது குடியுரிமை பெறுவதற்கான முதலாவது படிமுறையாகக் காணப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் குடிப்பரம்பலில் சிறிலங்காத் தமிழர்கள் நிரந்தரமானவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் சிறிலங்காவில் நிரந்தரமாகத் தங்க விரும்பவில்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகளாக, தமது உறவுகளுடன் பேணுவதற்காக சிறிலங்காவுக்கு வருவதில் நாட்டங் காட்டுகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் பொருளாதாரத்தைப் புனரமைப்புச் செய்வதில் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் விருப்பங் கொண்டுள்ளனர். இவர்கள் தாமாக முன்வந்து சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிகளை வழங்குகின்றனர். இதேபோன்று புலம்பெயர் அமைப்புக்கள் பல பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வைப் புனரமைப்பதற்காகவும் அழிக்கப்பட்ட கோயில்கள் மற்றும் தேவாலயங்களைப் புனரமைப்பதற்காகவும் தம்மாலான உதவிகளை வழங்க முன்வருகின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உளவியல் ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் தமக்குப் பழக்கப்பட்ட சமூக-கலாசார முறைமையிலிருந்து தற்போது வேறொரு சமூக-கலாசாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

யூன் 1998ல் நான் செல்வி என்கின்ற தமிழ்ப் பெண்மணி ஒருவரைச் சந்தித்தேன். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் 1988ல் இறந்துவிட்டார். இவரது தாயார் 1989ல் இறந்துவிட்டார். 1989ல் யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. செல்வி மூன்று தடவைகள் புலிகளுக்கு இறை செலுத்தியிருந்தார். இதன் பின்னர் இவர் கொழும்புக்குச் சென்றுவிட்டர். இவர் சில ஆண்டுகள் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த பின்னர், கனடாவுக்குச் செல்வதெனத் தீர்மானித்தார். இவர் போக்குவரத்து முகவர் ஒருவரின் உதவியுடன் அவரால் வழங்கப்பட்ட போலிக் கடவுச்சீட்டு மற்றும் போலி நுழைவுவிசைவைக் கொண்டு நாட்டிலிருந்து புறப்படத் தயாரானார். இவர் இதற்காக 20,000 கனேடிய டொலர்களைக் கட்டணமாகச் செலுத்தியிருந்தார். இவர் முதன்முதலாக டாக்காவுக்கு அனுப்பப்பட்ட போதிலும் அங்கிருந்து சிறிலங்காவுக்குத் திருப்பியனுப்பப்பட்டார். இரண்டாவது முயற்சியாக சிங்கப்பூருக்குச் சென்று பின்னர் நியூயோர்க்கின் ஊடாக செல்வி கனடாவில் தஞ்சம் புகுந்தார். நான் செல்வியை ரொரன்ரோவில் உள்ள சிவன் ஆலயம் ஒன்றில் சந்தித்த போது, தனது புகலிடக் கோரிக்கையின் இறுதிப் பதிலை எதிர்பார்த்திருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.

புலம்பெயர் தமிழ் மக்களின் வாழ்வை எடுத்துப் பார்த்தால் அவர்கள் சிறிலங்காவில் பல்வேறு கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருப்பார்கள். இவர்கள் புலிகளுடன் தொடர்பைப் பேணாவிட்டாலும் கூட, தாம் சித்திரவதைகளை அனுபவித்துவிடுவோமோ என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்துள்ளனர். புலிகளுக்கு ஆதரவான அமைப்பக்கள் புலிகளின் போர்த் தேவைகளை நிறைவேற்றியுள்ளனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர், புலம்பெயர் தமிழ் சமூகமானது சீர்குலைந்தது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் உலகத் தமிழர் பேரவையும் புதிய சவால்களை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டன. பிரபாகரன் வெல்லப்பட முடியாதவர் என்கின்ற கட்டுக்கதை உருவாக்கப்பட்டது. இதனை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தினர். தமிழ் மக்களின் துன்பங்களை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமது அரசியல் மூலதனமாக்கினர்.

இவ்வாறான ஒரு சிக்கலான சூழ்நிலையில், புலம்பெயர் தமிழ் சமூகத்திற்குள் காணப்பட்ட தீவிரவாதக் குழுக்களை வெற்றி கொள்வதற்கான எந்தவொரு முயற்சிகளையும் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு 13வது திருத்தச் சட்டம் நீர்த்துப்போகச் செய்தமை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான நம்பகமான பொறிமுறையைக் கட்டியெழுப்புவதில் தோல்வியுற்றமை போன்றன சிறிலங்கா, அனைத்துலகத்திலிருந்து தனிமைப்படுவதற்கு வழிவகுத்தது.

இன்று புலம்பெயர் தமிழர்கள் தலைப்புச் செய்திகளாக உள்ளபோதிலும், ஈழத் தமிழர்களால் தொடர்ச்சியாக அனுபவிக்கப்படும் துன்பியல்கள் ஊடகங்களில் பேசப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளாரான போல் கஸ்பேஸ் ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்தார். "எந்தவொரு விதிவிலக்குமின்றி அனைவரும் சமாதானத்திற்காக ஏங்குகின்றனர்" என போல் கஸ்பேஸ் யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் உணர்வை வெளிப்படுத்தியிருந்தார்.

*The writer is former senior professor, the Centre for South and Southeast Asian Studies, University of Madras.

http://www.puthinappalakai.com/view.php?20140509110486

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.