Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரும் சொல்லமாட்டார்களா....

Featured Replies

  • தொடங்கியவர்

கற்பு என்பது தமிழ்ப் பாண்பாட்டோடு இரண்டறக் கலந்துவிட்டது என்றும், அத்தகமையானது தமிழ் பெண்களுக்கு உயிரைக் காட்டிலும் மேலானது என்ற கருத்தியலும் நமது சமூகத்தில் ஆண்டாண்டு காலம் கூறப்பட்டு வருகிறது. பண்பாடு என்ற பெயரில் ஆணாதிக்கச் சிந்தனையை உரம் போட்டு வளர்க்கவே இக் கருத்து பயன்படுகிறது.

கற்பு என்றால் என்ன? ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மையைக் குறிக்கவே பயன்படுகின்றன. கற்பழித்தல், கற்புக்கரசி போன்ற சொற்பதங்கள் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லை. Rape என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் பதம் வன்புணர்ச்சியே (பாலியல் வல்லுறவு) தவிர கற்பழித்தல் அல்ல. கற்பழித்தல் என்ற சொல்லாடல் முழுக்க முழுக்கத் தவறானது. கற்பை எது வரைக்கும் அழிக்கமுடியும் என்று கேட்டால் யாரிடமும் தெளிவான பதில் இல்லை. பெண்ணின் கன்னித்தன்மையை பலவந்தமாகப் பறிப்பதற்குப் பெயர்தான் கற்பழித்தல் என்றால் ஏற்கனவே கன்னித்தன்மையை இழந்த பெண்ணைப் பலவந்தப் படுத்துவதை என்ன பெயர் சொல்லி அழைப்பது? அல்லது பெண்ணின் உடலியல் ஒழுக்கம்தான் கற்பு என்றால் ஒரு பெண் அவளது விருப்பத்திற்கு மாறாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டால் அப்பெண்ணை கற்பிழந்த பெண் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? எனவே ஒரு பெண்ணை, அவள் மனைவியாக இருந்தாலும், காதலியாக இருந்தாலும் அவளது விருப்பத்திற்கு மீறி பலாத்காரப் படுத்தி உடலுறவு கொண்டால் சட்டப்படி குற்றமாகும் என்பதுடன் சம்பந்தப்பட்ட ஆணுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப் படவேண்டும் என்பதே சரியானதும் நியாயமானதுமாகும். ஒரு பெண் பாலியல் வல்லுறவு என்ற மிருகத்தனத்திற்கு உட்படுத்தப்பட்டால் அதற்காக வாழ்வை முடித்துக் கொள்வது மிகப் பெரிய அறிவீனம் ஆகும்.

நமது தமிழ் சமுதாயத்தில் கற்பு என்பதே மனைவியானவள் தன் கணவன் மீது கொண்டிருக்கும் அதீத பற்றை வெளிப் படுத்தும் ஒன்றாகவே கருதப்படுகிறது. இங்கு தமிழ் பண்பாட்டையும் வடஆரியப் பார்ப்பனப் படை எடுப்பால் தமிழர்களுக்குள் ஏற்பட்ட ஆரியத் தாக்கங்களையும் ஒப்பிடும் போது இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துருவாக்கங்களையே கொண்டுள்ளன. தமிழ்ச் சமூகம் பண்டையகாலத்தில் தாய்வழிச் சமூகமாகவே வாழ்ந்து வந்திருக்கின்றது. ஆரியப் படை எடுப்பால் தாய் வழிச் சமூகம் தந்தைவழிச் சமூகமாக மாற்றப்பட்டு பிறவிப் பெண்ணடிமைத் தனமும் ஆணதிக்கமும் புகுத்தப்பட்டன. சாதிகளற்ற தமிழ் சமுதாயத்தில் சாதியம் புகுத்தப்பட்டதைப்போல் பிறவிப் பெண்ணடிமைத்தனமும் புகுத்தப்பட்டது. அதிலும் குஷ்டம் பிடித்த கணவனை கூடையில் வைத்து தாசி வீட்டுக்குச் சென்ற நளாயினி, கட்டிய கணவனின் சுடு சொல் கேட்டு தீக்குள் குதித்த சீதை, இந்திரனோடு கட்டிலில் கூடி கன்னித்தன்மையை இழந்த அகலிகை, பஞ்ச பாண்டவர் ஐவருக்கும் பொது மனைவியாக இருந்த பாஞ்சாலி, கணவனுக்காக கண்ணைக் கட்டிக் கொண்ட காந்தாரி போன்றவர்களை பத்தினிகள் என்றும் கற்புக்கரசிகள் என்றும், அதே சமயம், தாருகா வனத்தில் முனி பத்தினிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிவன், பிருந்தாவனத்தில் கோபியர்களைக் கூட்டி வைத்து சல்லாப லீலை நடத்திய கண்ணன் போன்ற ஒழுக்கக் கேடுடைய புராணக் கதாபாத்திரங்களைக் கடவுள்களாகவும் புண்ணிய புருசர்களாகவும் காட்டியிருப்பதை எண்ணும் போது தனிப்பட்ட ஒழுக்க நலன்களைவிட ஆணாதிக்கமும் அதில் புரையோடிக் கிடக்கும் பிறவிப் பெண்ணடிமைத்தனங்களுமே மேலோங்கி நிற்கின்றன.

இராமாயணத்தில் அயோத்தியாக் காண்டம் எட்டாவது அத்தியாயம், இராமன் தனது காம இன்பத்திற்காக, அரச பழக்க வழக்கங்களுக்கு இணங்க பலதார மணம் புரிந்தான் என்று கூறுகிறது. இது இராமனின் ஒழுக்கக் கேட்டைப் பறை சாற்றுவதுடன் இராமன் ஏகபத்தினி விரதன் என்பதை நகைப்புக்குரியதாக்குகிறது. ஆரிய தர்மத்தில் கற்பு என்பது ஆண்களின் ஒழுக்கக் கேட்டையும் பெண்கள் மீதான பாலியல் வக்கிரத் தன்மைகளையுமே நியாயப் படுத்தி நிற்கின்றன.

தமிழுலகத்தை எடுத்துக்கொண்டால் பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஆரிய நூல்களில் கூறப்பட்டதைப்போல் பெண்களை விறகுக் கட்டைக்கு ஒப்பாக வர்ணிக்கவில்லை. அதே நேரம் ஆண்களை ஒழுக்கக் கேடர்களாகவும் வர்ணிக்கவில்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாட்டை வலியுறுத்துகின்றன. காதல் சுதந்திரமும் காதலுக்கு அடுத்த களவியலும் மிக அழகாக விளக்கப் பட்டுள்ளன. ஒருவருக்கொருவர் மனத்தைப் பறிகொடுத்த ஆணும் பெண்ணும் திருமணம் முடிக்க முன் உறவு கொள்வதை, (Pre-marital sex) இக் காதலும் களவொழுக்கமும் நியாயப் படுத்துகின்றன. தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் உள்ள களவியலில் திருமணத்திற்கு முந்திய உடலுறவுச் சுதந்திரம் விளக்கப் பட்டிருக்கிறது. திருக்குறளில் உள்ள காமத்துப் பாலில்

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்

என்ற குறள் காதல் சுதந்திரத்தை நியாயப் படுத்துகிறது. அதே காமத்துப் பாலில் உள்ள கற்பியல் தொடர்பான குறட்பாக்கள்; காதல் துணையின் பிரிவால் ஏற்படும் உளம், உடல் சார்ந்த விரகதாபத்தையும் தலைவன் தலைவிக்கிடையே இருக்கும் ஆழமான அன்பையும் விளக்கும் விதமாகவே அமைந்திருக்கின்றனவே தவிர பிறவிப் பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தவில்லை. பெண்ணியவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப் படும்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யனப் பெய்யும் மழை

என்ற குறளுக்கு, பரிமேலழகர் போன்றவர்கள் "தெய்வத்தை வணங்காமல் கணவனை வணங்குபவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்" என்ற கருத்துப்படி பிற்போக்குத் தன்மையுடன் உரை தீட்டியுள்ளனர். ஆனால் அதன் உண்மைப் பொருள் பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் உரை எழுதியதைப்போல் "தொழு என்ற சொல் பின்பற்றுதல்” என்றும் “பெய்யனப் பெய்யும் மழை என்றால் பெய்த இடத்தில்" என்றும் பொருள்படும் எனவே பெண்ணானவள் மழையைப் போன்றவள். மழை எவ்வாறு பூமியை வளப்படுத்துகிறதோ அவ்வாறு தன் வாழ்க்கைத் துணைவனை வளப்படுத்துபவள் பெண் என்பதே அக்குறளின் பொருள். இங்கே வள்ளுவரும் ஒரு பெண்ணியவாதியாகவே தென்படுகிறார். அடுத்து வள்ளுவர் கூறும் அடக்கம் என்பது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தலைக்கனம் கொள்வது தவறு என்று சொல்கிறதே தவிர பெண்மீதான சமூக ஒடுக்குமுறையை நியாயப் படுத்திக் கூறவில்லை. வள்ளுவர் ஒழுக்கத்தை பெண்களுக்கு மட்டும் வலியுறுத்தவில்லை. 'பிறனில் விழையாமை' என்ற அதிகாரத்தில் ஆண்களுக்கும் வலியுறுத்துகிறார்.

சங்க இலக்கியங்களில் உள்ள குறுந்தொகை, அகநாநூறு போன்றவற்றிலும் திருமணத்திற்கு முந்திய உறவு பல இடங்களில் கூறப் பட்டுள்ளன. மனத்தால் இணைந்த ஆணும் பெண்ணும் திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழும் முறையை (Concubinage) தமிழிலக்கியங்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கின்றன. இவற்றை எல்லாம் எண்ணும்போது பண்டைய தமிழ் இனம் எந்தளவிற்கு காதல் சுதந்திரத்துடன் வாழ்ந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆண் புலவர்கள் மட்டுமல்ல சங்க காலத்துப் பெண்பாற் புலவர்களான ஒளவையார், வெள்ளி வீதியார் போன்றவர்களும் ஆண்களுக்கு நிகராக அரசியல் சமூகக் கருத்துக்களுடன் காதல், களவியல் செய்திகளை எல்லாம் தங்கள் பாடல்களில் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கின்றனர்.

சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள பெண்ணடிமைத்தனமும், கண்ணகிக்கும் கோவலனுக்கும் நடைபெற்ற திருமணமுறையும் ஆரியக் கலாச்சாரத்தை ஒட்டியே இருக்கின்றன. சிலப்பதிகாரம் என்னதான் தமிழ்த் தேசியக் காப்பியமாக இருந்தாலும் அது எழுதப்பட்ட காலம் ஆரியப் படையெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த காலமாகையால் ஆரியக் கறை சிலப்பதிகாரத்திலும் ஒட்டிக் கொண்டுவிட்டது. இருந்த போதிலும் தமிழ் இனத்துக்கு உரிய காதலும் வீரமும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. கணவன் செய்யும் தவறுகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு அதற்கு உடந்தையாக இருக்கும் கண்ணகி, புராணப் பெண் கதாபாத்திரங்களான நளாயினி, சீதை போன்றவர்களைப் பிரதிபலித்தாலும், கொற்றவனே ஆனாலும் குற்றமிழைத்தவனை விடேன் என்று கட்டறுத்துக்கொண்டு ஓடிய பெண்மையின் சீற்றமாக மாறும்போது அங்கே தமிழ் இனத்தின் வீரம் அப்பெண்ணின் ஊடக வெளிப்படுகிறது.

காமம் என்பது வள்ளுவரின் காமத்துப்பாலில் சொல்லப் பட்டதைப்போல் உடல் ஒழுக்கத்துடன் கூடிய உயிரியல் தன்மையுடன் பேணப்பட வேண்டுமே தவிர வத்சயானரின் காம சாஸ்திரத்தில் கூறப்பட்டதைப்போல் தறி கெட்ட தன்மையுடன் அல்ல. பெண்களை ஆண்களின் காம இச்சையை தீர்க்கப் பயன்படும் பாலியல் நுகர்வுப் பொருட்களாகச் சித்தரிக்கும் ஆரிய நூல்கள் தமிழ்ச் சமூகத்திலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். எனவே, கற்பு என்ற பெயரில் பெண்களை அடிமைப்படுத்தும் முறை, வேத கால ஆரிய மரபேயன்றித் தமிழர்களுடையது அல்ல. எந்த ஆரியக் கலாச்சாரம் தமிழர்கள் மத்தியில் பெண்ணடிமைத்தனத்தைப் புகுத்தியதோ அதை தமிழ் ஆண்கள் பிடித்து வைத்துக் கொண்டு பெண்களின் கற்பை எடை போடுகின்றார்கள். ஆண்களின் தொடர்பு இல்லாமல் தவறு நடக்குமா? அப்படி நடந்தால் அதில் தங்களுக்கும் பங்கு உள்ளது என்ற நியாயமான குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் பெண்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு ஆண்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? படுக்கை அறையில் இரத்தக் கறையைத்தேடும் ஆண்களுக்கு, பெண்கள் உடற்பயிற்சி, நீச்சல், கராத்தே போன்றவற்றில் ஈடுபடுவது ஏமாற்றத்தையே தருகிறது. கற்பு உடல் தொடர்புள்ள ஒன்றாக இருந்தாலும் அல்லது உள்ளம் தொடர்புள்ள ஒன்றாக இருந்தாலும் கற்பு என்பது பாரதி எழுதியைப் போல்

“கற்பு நிலை என சொல்ல வந்தார், இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்"

என்ற நிலைப்பாடே சரியானது,”

பெண்மீதான ஒடுக்குமுறை சமூகத்தின் அனைத்துத் தளங்களில் இருந்தும் அகற்றப்பட்டு, ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருத்தல் வேண்டும். அதே சமயம் பாலியல் கல்வியும், பாதுகாப்பான உறவுக்கான கருத்தடை முறைகளும் சனத்தொகைக் கட்டுப் பாட்டிற்கும் பாலியல் நோய்களைத் தடுப்பதற்கும் இன்றியமையாதவை. பத்தாம் பசலித்தனமான பல்லவிகளைப் பாடி பிற்போக்குத் தனங்களை விதைத்தால், விதைப்பவர்கள் தங்களைக் கலாச்சாரக் காவலர்கள் என்று தம்பட்டம் அடிக்க உதவுமே தவிர, அதிகரித்து வரும் பால்வினை நோய்களைத் தடுக்க நிச்சயம் உதவப் போவதில்லை.

தமிழ் பண்பாட்டைக் காட்டிப் பெண்கள் மீது மதவாத ஆதிக்கத்தையும் மரபு வழி மடமையையும் திணிப்பதற்கு நமது தமிழ்தாயானவள், பிரம்மா உருவாக்கிய சரஸ்வதியோ, சிவனார் கொண்டையில் செருகிக் கொண்ட கங்கா தேவியோ, ஆதாமின் விலா எலும்பில் இருந்து உருவான ஏவாளோ அல்ல. அவள் எத்தனையோ பண்பாட்டுப் படை எடுப்புக்களைத் தாண்டி மொழி ஆதிக்கங்களை எதிர் கொண்டு நமக்கு முகத்தையும் முகவரியையும் தந்து நாளை முடிசூடும் நன்னாளை எதிர்பார்த்து நிற்பவள்.

http://www.webeelam.com/

  • Replies 125
  • Views 13.7k
  • Created
  • Last Reply

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.