Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தரின் தொப்பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் தொப்பி

ஜீ.முருகன்

இப்போது கனவுகள் அதிகம் வருகின்றன. நிம்மதியான தூக்கம் என்பது அரிதாகி விட்டது. இதற்கு நான் புதிதாக வாங்கியிருக்கும் கட்டில்தான் காரணம் என்றால் நீங்க நம்பமாட்டீர்கள். இடது பக்கம் சாய்ந்து படுத்தால் நல்ல கனவுகளும், வலது பக்கம் சாய்ந்து படுத்தால் கெட்ட கனவுகளும் வருகின்றன என்றால் மொத்தமாகவே நம்பமாட்டீர்கள். தயவு செய்து நீங்கள் நம்பவேண்டும். நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவுகள் தொடங்கிவிடுகின்றன. கனவுகளின் விபரீதமான கணத்தில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தால் பத்து நிமிடம்தான் தூங்கியிருப்பது தெரிகிறது. ஆனால் பத்து மணி நேரம் நிகழக்கூடிய சம்பவங்களைக் கொண்டதாக இருக்கின்றன கனவுகள். சில கனவுகள் பனி படர்ந்த நிலப்பரப்பு போல காட்சி தருகின்றன, சில கனவுகள் புகைப்படம் போல துல்லியமாக ஞாபகத்தில் படிகின்றன.

நீங்கள் கூட இவ்விதமாக கனவுகள் காணக்கூடியவராக இருக்கலாம். அப்படியானால் நான் சொல்ல வருவது உங்களுக்கு நன்றாகப் புரியும். கனவே காணாதவர்களுக்கு எப்படி புரியமென்று நீங்கள் கேட்கலாம். அப்படிப்பட்ட துரதிஷ்டசாலிகளுக்காக நான் வருந்துகிறேன். நிச்சயம் அவர்களால் ஜெர்ரியைப் போல ஒன்றை வாழ்நாளில் சந்திக்கவே முடியாது.

யார் இந்த ஜெர்ரி? ஜெர்ரியை உங்களுக்கு நேரடியாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. அது ஒரு எலி. உண்மையில் அதற்கு பெயர் இருந்ததா அல்லது டாம் அண்டு ஜெர்ரி கார்ட்டூன் படம் பார்த்ததன் விளைவாக நானே அப்படி அழைத்தேனா தெரியவில்லை. யார் கண்டது, கனவில் வந்தது போல ஜெர்ரி என்ற பெயரால் தன்னை அழைக்க விரும்பும் எலிகள் அந்த தலைகீழ் நகரத்தில் நிஜத்தில் வாழ்கிறதோ என்னவோ.

பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்வதால் தினமும் நான் தவறாமல் செய்யும் காரியம் பகல் நேரங்களில் தூங்குவது (டிராகுலாக்களைப் போலத்தான் நாங்களும்; இரவில் விழித்திருந்து பகலில் தூங்கும் இனம்). அப்படித்தான் அன்றும் மதிய உணவுக்குப் பிறகு தூங்கினேன். தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவுகள் வரத்தொடங்கிவிடுகின்றன என்று சொன்னேன் இல்லையா, அப்படித்தான் அந்த கனவு வந்தது. ஒரு குகை போன்ற வழியில் நான் நடந்து போய்கொண்டிருகிறேன். எனக்கு முன் ஒரு யானை நடந்து போய்கொண்டிருக்கிறது. அனால் அது நிஜ யானையைப் போல இல்லை. யானைக்கு குட்டியோண்டு வால்தானே இருக்கும், ஆனால் அதற்கோ மிக நீண்ட வால் இருந்தது. வாலின் கடைசி நுனி என்னைக் கடந்து எனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்தது.

ஒரு வேளை அது டைனோஸராக இருக்குமோ என்று பயந்தேன். ஆனால் அது டைனோஸர் போலவும் தெரியவில்லை. திரைப்படங்களில் பார்த்திருக்கும் டைனோஸர்கள் எதுவும் இதுபோல் இருந்ததில்லை. யானையும் இல்லை டைனோஸரும் இல்லை, பிறகு என்ன? நான் சற்றே தயங்கி பின் தங்கிய போது அந்த விலங்கு திரும்பி என்னைப் பார்த்துச் சொன்னது, “மிஸ்டர் முருகன், என்ன யோசனை? ஏன் மெல்லமாக நடக்கிறீர்கள்? நாம் இன்னும் நீண்ட தூரம் போகவேண்டும், வேகமாக வாருங்கள்.’’

என்னால் நம்பமுடியவில்லை; எலிதான் அது. சராசரி மனிதனைவிட சற்றே உயரமான ஒரு எலியை கற்பனை செய்து பாருங்கள். அது மனிதனைப் போல நேராக நிற்காமல் படுத்த நிலையில் காணப்படுவதால் அது எவ்வளவு பிரமாண்டமான உருவமாக இருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதில்லையா? அப்படிப்பட்ட ஒரு எலிதான் துரிதமாக நடந்து வரும்படி எனக்கு அழைப்பு விடுத்துவிட்டு நடந்துகொண்டிருந்தது.

ஆலீஸின் அற்புத உலகில் வருவது போல நான்தான் சிறியவனாக சுருங்கிவிட்டேனோ என்று தோன்றியது. ஆனால் குகையின் வாசலில் அப்படிப்பட்ட உணவுப் பண்டம் எதுவும் உண்டதாக ஞாபகம் இல்லை. என் உயரத்தை ஒப்பிட்டுத் தெரிந்துகொள்ள நிஜ உலகத்தின் பொருள்கள் எதுவும் அங்கே இல்லாததால் நான் குழப்பத்தில் இருந்தேன்.

ஆனால் அங்கு என்னுடைய உயரம் ஒரு பிரச்சினையே இல்லை. ஒரு எலி தன் முன் கால்களை தூக்கி நிற்கும் அளவுக்கு குகை இருந்ததுதான் காரணம். எலி அப்படி நிற்கும் போது அது ஒரு குட்டி முயலை போல இருப்பதாக என் மகன் சொல்கிறான்.

அந்த வளை பல கிளைகளாகப் பிரிந்து பல திசைகளிலும் சென்று மறைந்தது. சற்றே இருள் சூழ்ந்திருந்ததால் அவற்றை சிறிது தூரம்தான் பார்க்க முடிந்தது. உள்ளே போகப் போக அங்கே நிறைய எலிகள் தென்பட்டன. இருளான பிரதேசத்திலிருந்து திடுக்கிடும்படி தோன்றி நகர்ந்துகொண்டிருந்தன. அவை உறங்கி ஓய்வெடுத்தபடியும், பேசியபடியும், விளையாடிக்கொண்டும் இருந்தன. சில எலிகள் தன்னுடைய குட்டி எலிகளை சுமந்து போய்க்கொண்டிருந்தன. சில குட்டிகள் கண்மண் தெரியாமல் ஓடிப் பரபரத்துக்கொண்டிருந்தன. உண்மையில் இன்னொரு நகரத்தை நான் அங்கே கண்டேன். அந்த நகரம் மண்ணாலும் கற்களாலும் உருவாக்கப்பட்டிருந்தது. விளையாடுவதற்கும், படுப்பதற்கும், உணவுப் பண்டங்களை சேமிக்கவும் தனித்தனி அளவில் அறைகளைக்கொண்டிருந்தன. எல்லாமே சேர்ந்து எண்ணற்ற அறைகள் கொண்ட பெரிய வீடாக அது தோன்றியது. எலிகள் எல்லாம் அந்த ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள் போலத் தோன்றினார்கள். சில இடங்களில் பிறந்த சில மணி நேரங்களே ஆன குட்டிகள் ரோஸ் நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தன.

“இன்னும் போக வேண்டும். வேகமாக நடந்து வாருங்கள்’’ என்றது ஜெர்ரி.

“மிஸ்டர் ஜெர்ரி, நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?’’ என்று நான் கேட்டேன்.

“புத்தரின் தொப்பிக்கு’’ என்றது அது.

தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்படும் பிணை கைதிகளின் நிலையில் நான் இருந்ததாகத் தோன்றியது. ஆனால் என் கண்கள் கட்டப்படவில்லை. அதற்கு அவசியம் இல்லை என்று அது நினைத்திருக்கலாம். காரணம் ஜெர்ரியின் வழிகாட்டுதல் இல்லாமல் அங்கிருந்து என்னால் தப்பிப் போகவே முடியாது. அப்படி தப்பிக்க நினைத்தால் அந்த சிக்கலான வளை பின்னலுக்குள் நான் தொலைந்து போவேன் என்பது உறுதி. வேறு எலிகள் ஏதாவது வந்து வழிகாட்ட விரும்பினாலும் நான் எங்கிருந்து வந்தேன் என்பதை அதற்கு எப்படி விளக்குவேன்? உண்மையில் நான் என் விலாசத்தை முற்றிலும் மறந்துவிட்டதாகவே தோன்றியது. அப்போதைக்கு எனக்கிருந்த ஒரே வழி ஜெர்ரியை பின்தொடர்வதுதான்.

ஜெர்ரியின் கூர்மையான வால் என்னை அச்சமடையச் செய்தது. எங்கே அது என்னை குத்திக் காயப்படுத்திவிடுமோ என்று பயந்தேன்.

“மிஸ்டர் முருகன், இதுவரை என் வாலால் எந்த ஆபத்தும் நேர்ந்ததில்லை. நீங்கள் பயப்படத்தேவையில்லை’’ என்றது அது.

ஒரு டிவி கேமராவுக்கு முன்னால் மண்டியிட வைத்து என் தலையை நிச்சயம் அது துண்டிக்காது என நான் நம்பினேன். பிறகு எதற்கு பயப்படவேண்டும்?

பிறகு எதற்காக அது என்னை அழைத்துச் செல்கிறது?

காரணம் எதையும் அது முன்பே சொன்னதாகவும் ஞாபகமில்லை. வெறுமனே நான் அதன் பின்னால் போய்கொண்டிருகிறேன், அவ்வளவுதான்.

வழியில் ஒரு இடத்தில் தண்ணீர் கசிந்து சிறு ஓடை போல தோன்றி பாதைக்கு அடியில் மறைந்தது. ஒரு பாலத்தை நான் கடந்து கொண்டிருப்பதாக கற்பனை செய்துகொண்டேன்.

கையில் தடியுடன், ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து, யோசனையில் ஆழ்ந்திருந்த கிழட்டு எலியை கடந்து போன போது அது கேட்டது, “யார் இந்த புது விருந்தாளி?’’

“இது முருகன், பத்திரிகையாளர்’’ என்றது ஜெர்ரி நடந்துகொண்டே.

அதைக்கடந்து சிறிது தூரம் வந்த பிறகு சத்தமாகச் சொன்னது, “நீ கொஞ்சம் கவனமாக இரு.’’

இந்த எச்சரிக்கை என்னை அவமானப்படுத்துவது போல இருந்தது.

“மிஸ்டர் ஜெர்ரி என்னை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்’’ என்றேன் நான்.

“எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டது ஜெர்ரி நடந்துகொண்டே.

ஆமாம், எதை வைத்து நான் அப்படி சொன்னேன்?

ஒரு பிணை கைதி போல நடத்துப்படுவதாக நான் உணர்ந்தது எந்த விதத்திலும் தவறான யூகமாக இருக்காது எனத் தோன்றியது. ஜெர்ரியின் பேச்சும், முக பானைகளும் அதை உறுதிபடுத்தவே செய்தன. சகஜபாவம் என்பது அதனிடம் கொஞ்சமும் இல்லை. என் மேல் அதற்கு அன்பும் மரியாதையும் இருக்குமானால் நான் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறேன், எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறேன் என்பதை அது சொல்லி என் அச்சத்தைப் போக்கியிருக்க வேண்டும் இல்லையா? உண்மையில் அப்படி எதையும் அது செய்யவே இல்லை. மேலும் அது கண்டிப்பாக நடந்துகொண்டது.

திரும்பவும் அதனிடம் அசட்டுத்தனமாக பேசி என்னை தாழ்த்திக்கொள்ளக்கூடாது என எனக்குள் உறுதி சொல்லிக்கொண்டேன். நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அடிப்படையான சில கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரிந்தாகவேண்டும். அதனால் எலிகளுக்கு எதிராக நான் என்ன குற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டேன் என்ற ரீதியில் சிந்திக்கத்தொடங்கினேன்.

கிராமத்திலிருந்த எங்கள் வீடு அப்போது மஞ்சம் புற்கள் வேய்ந்த கூரை வீடாக இருந்தது. அது சற்றே பெரிய வீடு. பெரிய மர தூளங்கள் கூரையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும். வெளிச்சத்தைக் கொண்டுவர போதிய சன்னல்கள் இல்லாததாலும், புகை படிந்ததாலும் பகலிலும் கூரைப் பகுதி இருட்டாகவே இருக்கும். தானிய உரைகளும், பானைகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அறை இன்னும் இருட்டாக இருக்கும். கையில் விளக்கு இல்லாமல் அதற்குள் போகவே முடியாது. அது பல்வேறு ரகசியங்களையும், பொக்கிஷங்களையும் கொண்டது. அந்த இருட்டின் ஊடே, ரகசியங்களின் ஊடேதான் தங்களது ராஜ்ஜியத்தை நடத்தி வந்தன அந்த எலிகள். எங்கள் பூர்வீகத்தையும், பகட்டையும் உணர்த்தும்படி நின்றிருந்த பெரிய மர பீரோதான் அதன் அரண்மனை. அதன் ரகசிய அறைகளில் அவை தாராளமாக புழங்கி வந்தன. ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் செல்ல வழிகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. அதிலுள்ள எலிகளை கண்டுபிடித்து கொல்வதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. என்னுடைய பாட நோட்டுகளையும், புத்தகங்களையும், எங்களுடைய சொத்து பத்திரங்கள் சிலதையும் அந்த அறைகளில் வைத்துத்தான் எலிகள் கபளிகரம் செய்தன.

பீரோவில் மட்டுமல்ல பல அறைகள் கொண்ட எங்கள் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் அதனால் சென்று வரமுடிந்தது. கூரை கான்கிரீட்டாக மாறிய பிறகும்கூட அவற்றிடமிருந்த இந்த சுதந்திரத்தை எங்களால் பறித்துக்கொள்ள முடியவில்லை. கதவுகளில் ஓட்டைபோட்டு வழி ஏற்படுத்திக்கொண்டன. இரவும் பகலும் அதற்காக அவை பாடுபட்டதை நான் அறிவேன். கதவை சுரண்டி ஓட்டையிடும் சத்தம் இரவு முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கும்.

நெல் மூட்டைகளையும், வேர்கடலை மூட்டைகளையும் நாசம் செய்யும் காலங்களில் அவைகளைக் கொல்லும் நடவடிக்கையில் எங்கள் குடும்பம் இறங்கும். இது போல பல முறை நடந்திருக்கிறது. எலிப் பொறி வைத்து பிடிக்கும் நடவடிக்கை எங்களைப் பொறுத்தவரை விளையாட்டுத்தனமான காரியமாகவே பட்டது. எங்கள் வீட்டிலிருந்து எலிகளின் எண்ணிக்கைக்கும் இந்த காரியத்துக்கும் பொறுத்தமே இருப்பதில்லை. வருஷம் பூராவும் பிடித்திருந்தால்கூட அவற்றை அழிக்க முடிந்திருக்காது.

இதனால் அதிரடி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். வறுத்த வேர்கடலையை உடைத்து தூளாக்கி அதில் எலி பாஷாணத்தை கலந்து எலிகள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதிகளில் வைப்போம். தண்ணீர் குடங்களை நன்றாக மூடிவைப்போம். மறுநாள் தேடுதல் வேட்டை நடைபெறும். ஆங்காங்கே செத்துக்கிடக்கும் எலிகளை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும். மூன்று நான்கு நாள்கள் கழித்து சில பகுதிகளில் நாற்றம் கிளம்பும். கூரையிலிருந்து புழுக்கள் உதிரும்.

இப்படி ஏராளமான எலிகளை எங்கள் குடும்பம் கொன்றதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அம்மாவின் உத்தரவின் பேரில்தான் இதெல்லாம் நடக்கும். அப்போது நான் ஒரு அப்பாவி சிறுவனாகவே இருந்தேன்.

வீட்டு எலிகளைப் போல வயல் எலிகளைக் கொல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. வரப்புகளில் அவை எங்கே வளை தோண்டி எங்கே வாழ்கின்றன என்பதை கண்டுபிடிப்பது கடினம். வயல்கள் எங்களுக்கு சொந்தமென்றாலும் வரப்பு அவைகளுக்கு சொந்தம்.

இந்த எலிகளால் விவசாயிகள் அடைந்த நஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. தண்ணீர் பாய்ச்சிவிட்டு வந்து மறுநாள் போய்ப் பார்த்தால் வயல் வறண்டு போயிருக்கும். இரண்டு மூன்று இடங்களில் துளை விழுந்து அடுத்தவன் வயல் நிறைந்து வழிந்துகொண்டிருக்கும். வரப்போரம் உள்ள நெற்பயிர்கள், கதிர்கள் பறிபோன நிலையில் பரிதாபமாக விழுந்துகிடக்கும். அறுவடை முடியும் வரை வயல்களில் எலிகளின் ராஜ்ஜியம்தான். அதற்குள் அவை தங்களுடைய தானியக் கிடங்குகளை நிறைத்துக்கொள்ளும்.

அறுவடை காலங்களில் கடப்பாறைகளையும் பைகளையும் எடுத்துக்கொண்டு ஆண் பெண் ஜோடிகளாக அறுவடை நிலங்களைத் தேடி வருவார்கள் குறவர்கள். அவர்களுக்கு எலிகளின் சூட்சுமம் தெரியும். எலி வளைகளின் போக்குத் தெரியும். வளைகளைத் தோண்டி எலிகளை பிடித்து விடுவார்கள். அவர்களிடமிருந்து திருடர்களைப் போல எலிகள் தப்பித்து ஓடும். அதை லாவகமாகப் பிடித்து கை கால்களை நட்டை முறித்து பைகளில் போட்டுக்கொள்வார்கள். எலிகள் பதுக்கி வைத்திருக்கும் நெற்கதிர்களையும் பைகளில் சேகரித்துக்கொள்வார்கள். இந்த சுவராஸ்யமான சம்பவத்தை சிறுவர்களாகிய நாங்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம். அறுவடை வயல்களில் நாங்கள் அந்த குறவர்களை வேட்டையாட அனுமதிக்கிறோம் என்பதைத் தவிர அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

எனது பாட நோட்டு எலிகளால் குதறப்பட்டு சேதமாகி வாத்தியாரிடம் அடிவாங்கிய பின்பு கூட பழிவாங்கும் நடவடிக்கையில் நான் இறங்கியதில்லை என்பதை நான் நினைவு கூர்ந்தேன்.

எங்கள் வீட்டிலிருந்த மரத்தாலான கறுப்புவெள்ளை டிவி ஒன்றை எலிகள் பழுதடையச் செய்ததை என்னால் எப்படி மறக்க முடியும்? பின்பக்க டோரை குடைந்து உள்ளே சென்று, ஒயர்களையெல்லாம் சிறுசிறு துண்டுகளாகக் கடித்துப் போட்டிருந்தன அவை. மெக்கானிக் வந்து அதைத் திறந்த பார்த்த போது நாரில் கூடு கட்டி குழந்தைக் குட்டிகளுடன் அவை வாழ்ந்து வந்தது தெரிந்தது. மேலும் தொலைந்து போன அம்மாவின் விலை உயர்ந்த ஜாக்கெட் கந்தலான நிலையில் அங்குதான் கிடைத்தது. எனது ஜாதக நோட்டின் பக்கங்கள் அங்கே பாதி குதறப்பட்ட நிலையில் கிடத்தன. டிவியை ரிப்பேர் செய்த பிறகு அதனுடைய ஜாதகம் சரியில்லாமல் போனது வேறு விஷயம். அம்மா பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி 99 எலிகளை கொன்று குவித்ததாக எனது தங்கை கடிதத்தில் எழுதியிருந்தாள். நீங்கள் நம்ப வேண்டும்; இந்த படுகொலை நிகழ்ந்த போது நான் வெளியூரில் படித்துக்கொண்டிருந்தேன்.

நகரத்துக்கு வந்த பிறகு எனக்கும் எலிகளுக்குமான உறவு அறுந்தே போனது. ஆனாலும் எனது படைப்புகளில் அதற்குறிய இடத்தை கொடுத்தே வந்திருக்கிறேன். ‘குளோப்’ என்ற கதையை ஜெர்ரி படித்திருந்தால் என்னை ஒரு குற்றவாளி போல நடத்தியிருக்காது என்பது உறுதி. அதில் வரும் ஆறுமுகம் என்ற எலியை மிகவும் அறிவாளியான, பக்குவம்கொண்ட எலியாக நான் சித்தரித்திருந்தேன். பெண்களை எலிகளோடு ஒப்பிட்டு ஒரு கதை எழுதத் தொடங்கியவன் அது சரியாக வராததால் கைவிட நேர்ந்தது. பெண்களும் எலிகளைப் போல ரகசியமான வழிகளை மேற்கொள்பவர்கள், தந்திரமானவர்கள் என்பதை உணர்த்துவதே என் நோக்கமாக இருந்ததேயொழிய எலிகளை எங்கேயும் நான் இழிவு படுத்த நினைக்கவேயில்லை.

உணவு விஷயத்தில்கூட கிராமத்தில் இருந்த போது அணில்களை பிடித்து சுட்டு தின்றிருக்கிறேனேயொழிய எலிகளை தின்றதே இல்லை. ஒருவேளை என்னுடைய ‘எலிக்குட்டிகள்’ என்ற கவிதையை படித்துவிட்டு அது தவறான முடிவுக்கு வந்திருக்குமோ என்னமோ. அந்த கவிதையில் கடைசியாக ‘என் கணினியின் நரம்பொன்று துண்டிக்கப்படும் நாளில் சகல நியாயங்களுடன் அந்த எலிக்கூட்டத்தைக் கொல்வேன்’ என்று எழுதியிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் சுயநலமிக்க, இரக்கமற்ற மனிதர்களின் குரலாகத்தான் அதை ஒலிக்க நினைத்தேன். அதன் மூலம் அவைகளுக்கு எச்சரிக்கை விடுக்க நினைத்தேன் அவ்வளவுதான்.

இப்படி யோசனைகளுடன் நான் சென்றுகொண்டிருந்த போது ஒரு ஓடைக்கரையில் உட்கார்ந்து ஒரு எலி தூண்டில் போட்டுவிட்டு காத்திருப்பதைப் பார்த்தேன். அதற்குப் பக்கத்தில் ஒரு கூடை வைக்கப்பட்டிருந்தது. ‘எலிகள் மீன்களைத் திண்ணுமா?’ இந்தக் கேள்வியை ஜெர்ரியிடம் கேட்கலாமா என நா எழுந்தது. அனால் கேட்கவில்லை. எலி மீன்களைத் தின்றால் என்ன தின்னாமல் போனால் என்ன என்று நான் நடந்துகொண்டிருந்தேன்.

என் மனதில் ஓடும் கேள்வியைப் புரிந்துகொண்டது போல ஜெர்ரி சொன்னது, “அது மீன் பிடிக்கவில்லை. மேலே ஒரு உணவு விடுதி இருக்கிறது. அதிலிருந்து மிதந்து வரும் தின் பண்டங்களைத்தான் பிடித்துப் போட்டுக்கொண்டிருக்கிறது.’’

ஓடையைக் கடந்த சிறிது தொலைவிலேயே எலிகள் அதிகம் தென்படத்தொடங்கின. நாங்கள் போய்ச் சேரப்போகும் இடம் நெருங்கிவிட்டதாக எனக்குத் தோன்றியது. இதனால் பீதியுணர்வுக்கு நான் ஆட்பட்டேன்.

வளையின் சுவர்களில் தென்பட்ட மரங்களின் சல்லி வேர்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவை சுவர் ஓவியங்கள் போன்ற தோற்றத்தை எற்படுத்தின. சில இடங்களில் சிமெண்ட் சுவர்கள் எதிர்பட்டன.

சுவர்களிலும், அகன்ற வேர்களிலும் எழுதியிருந்த வாசகங்கள்தான் என்னை முதலில் திடுக்கிடச் செய்தன. அவை மனிதர்களுக்கான கண்டனங்களாக இருந்தன. சக எலிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கைகளாக இருந்தன. பாஷாணம் கலந்த உணவுகளை இனம் காணும் விதம் குறித்த அறிவிப்புகளாக இருந்தன. கொல்லப்பட்ட எலிகளுக்கு இரங்கல் தெரிவித்தன. ஒரு பாறையில் எழுதப்பட்டிருந்த வாசகம் நான் பணிபுரியும் பத்திரிகைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்தது. பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்பது எனக்கு உறுதியாகிவிட்டது.

“மிஸ்டர் முருகன் என்ன சோர்வடைந்துவிட்டீர்களா. கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்துச் செல்வோம்’’ என்றது ஜெர்ரி.

அதன் கருணைக்கு நான் நன்றி சொன்னேன். இந்த ஓய்வு எனக்கு தேவையாக இருந்தது. ஆபத்தை தள்ளிப் போடவும், பிரச்சினை குறித்து ஜெர்ரியோடு பேசவும் கிடைத்த பெரிய சந்தர்ப்பமாக இதைக் கருதினேன்.

“முதலில் ஏதாவது சாப்பிடுவோம்’’ என்று சொன்ன ஜெர்ரி ஒரு கிளை வழியில் என்னை கூட்டிச் சென்றது. சிறிது தூரம் நடந்ததும் நான் அங்கே கூரை முழுவதும் வேர்க்கடலைகள் தொங்கிக்கொண்டிருந்த அதிசயத்தைப் பார்த்தேன். பிஞ்சு முதல் முற்றிய காய்கள் வரை வெண்மையாக பளிச்சிட்டன. மேலே வேர்க்கடலை தோட்டம் ஒன்று இருந்திருக்கவேண்டும்.

“உங்களுக்கு வேண்டியதை நீங்கள் பறித்துக்கொள்ளுங்கள்’’ என்றது ஜெர்ரி.

அதைப் பார்த்த பிறகுதான் பசி பற்றிய எண்ணமே எழுந்தது. நாங்கள் வருவதற்கு முன்னமே அங்கே சில எலிக்குட்டிகள் வந்திருந்தன. இரண்டு எலிக்குட்டிகள் முற்றிய வேர்க்கடலை ஒன்றை பிடித்து ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன. ஜெர்ரி இரண்டு மூன்று பிஞ்சுகளைப் பறித்து கீழே உட்கார்ந்திருந்த எலிக்குட்டிகளுக்குப் போட்டது. நானும்கூட முற்றிய வேர்கடலையை பறிக்காமல் பிஞ்சுகளைப் பறித்து மெல்ல தொடங்கினேன். அவைதான் என்ன ருசி!

‘மிஸ்டர் ஜெர்ரி, எனக்கென்று இது போல நிறைய விருப்பங்கள் இருக்கின்றன. நகரத்துக்கு வந்து நான் வாழத்தொடங்கிவிட்டேன் என்றாலும் கிராமத்திலிருந்து நிறைய சுவைகளையும் உடன் கொண்டு வந்திருக்கிறேன். அவை என் நாவிலும் நாசியிலும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. பனையின் குருத்து, சோளத்தட்டு, பச்சைக் கேழ்வரகுக் கதிர், நீர் சொரியும் வெட்லான் கிழங்கு, காரைப் பழம், சுட்ட காடை முட்டை; இது போல் அபூர்வமான ருசி என் நாவில் இன்னும் தங்கி இருக்கின்றன. மிஸ்டர் ஜெர்ரி, உண்மையில் நான் கிராமத்திலிருந்துத் துரத்தப்பட்டவன். ஒரு அகதி. எனக்குப் பேராசையெல்லாம் இல்லை. எனக்குள் பொறாமை இல்லை. வன்மம் இல்லை.’

இப்படியாக என் மனம் ஜெர்ரியுடன் உரையாடிக்கொண்டே இருந்தது. வேர்கடலையை கொறித்தபடி பிரதான வழிக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம்.

“உட்காருவோம்’’ என்றது ஜெர்ரி.

ஒரு பாறையின் மேல் நாங்கள் உட்கார்ந்தோம்.

அப்போது எங்களுக்கு முன் மண்ணால் செய்யப்பட்ட கை வண்டியை ஒரு எலி இழுத்துக்கொண்டு சென்றது. வண்டியில் இரண்டு எலிகள் படுத்திருந்தன. வால் தரையில் புரண்டபடி சென்றது. அதே போல இன்னொரு வண்டி அதைத் தொடர்ந்து சென்றது. அதிலும் இரண்டு எலிகள் இருந்தன.

“மிஸ்டர் ஜெர்ரி என்னுடைய சிறுவயதில் இது போன்ற களிமண் வண்டிகளை செய்து நான் வரப்புகளில் ஓட்டிக்கொண்டு போயிருக்கிறேன்’’ என்றேன் உற்சாகத்துடன்.

ஜெர்ரி லேசாக புன்னகைத்தது போலத் தோன்றியது. ஒரு சிறுவனின் பேச்சை கேட்பது போன்று அது பாவனை செய்தது.

நான் மேலும் சொன்னேன், “தீப்பெட்டி வண்டி, சோளத்தட்டு வண்டி, பனங்காய் வண்டி, தென்னை மட்டை வண்டி, பேரிங் சக்கரம் பூட்டிய வண்டி, சைக்கிள் சக்கர டயர் வண்டி. என் பையன்களோ 200 ரூபாய் 300 ரூபாய் கொடுத்து வாங்கிய பொம்மை வண்டிகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே களிமண்ணோ, பனங்காய்களோ கிடைப்பதில்லை. இவர்களாக எதையும் கற்பனை செய்யத் தேவையில்லை. எல்லா கற்பனைகளும் டெடிமேடாக கிடைத்துவிடுகின்றன.’’

நான் இப்படி பழம்பெருமைகளைப் பேசிக்கொண்டிருக்கையில் பெயிண்ட் பக்கெட்டுடன் வந்த எலி ஒன்று எங்களுக்கு எதிரே இருந்த பாறையில் எழுதியது, ‘மனிதர்களை, கடவுள் தண்டிப்பாராக.’

“மிஸ்டர் ஜெர்ரி, என்னை மன்னித்துவிடு’’ என்றேன் நான். எதற்காக மன்னிப்பு கேட்டேன் என்பது அதற்கு விளங்கும் என்ற நம்பிக்கையில்.

“எதற்காக மன்னிப்பு கேட்கிறீர்கள் என்று புரியவில்லை’’ என்றது ஜெர்ரி.

‘மனிதனாக இருப்பதற்கான மன்னிப்பு’ என்று சொல்ல விரும்பினேன். ஆனால் இந்த வாசகம் பகட்டாக இருக்குமென்று தோன்றியது. துயரம் கவிந்த சூழலில் ஆட்சியாளர்களைப் போல நாடகீயமான வசனங்கள் உதிர்ப்பது அபத்தமாக இருக்காதா?

“நாம் போவோம்’’ என்று எழுந்தது ஜெர்ரி.

நாங்கள் போகப்போக குகையின் சுவர்களில் விதவிதமான வேர்களைப் பார்க்க நேரிட்டது. நகரத்திலிருந்து விலகி கிராமத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. அதை உறுதிசெய்யும் வகையில் சில எலிகள் தங்கள் மண் வண்டிகளில் நெற்கதிர்களை ஏற்றிக்கொண்டு எதிரே போய்க்கொண்டிருந்தன. வளையின் கூரையில் மரவள்ளிக் கிழங்குகளையும், கருணைக் கிழங்குகளையும், வேறு வகைக் கிழங்குகளையும் நான் பார்த்தேன்.

அப்போது ஒரு எலி எங்களுக்கு எதிரே தோன்றி ஜெர்ரியிடம் தலையை தாழ்த்தி சொன்னது, “நம் தோழர்களுக்காக இன்று நாம் புத்தரின் தொப்பிக்கடியில் கூடுவோம்.’’

அதே போல தலையைத் தாழ்த்தி “அவ்வாறே செய்வோம்’’ என்றது ஜெர்ரியும்.

பிறகு அது எங்களைக் கடந்து நடந்தது.

எங்களுக்கு பின்னால் வந்த ஒரு எலியிடம் இதே வாசகத்தை அது சொல்லியது என் காதில் விழுந்தது. பதிலுக்கு அந்த எலியும் ‘அவ்வாறே செய்வோம்’ என்றது.

நாங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கையில் ஒரு கிளைப் பாதையின் ஓரத்தில் நான்கு எலிகள் வரிசையாக உட்கார்ந்து மலம் கழித்துக்கொண்டிருந்ததை பார்த்தேன். இன்னும் சற்று தொலைவில் இருந்த நீர் நிலையில் சில எலிகள் நீந்தி விளையாடிக்கொண்டிருந்தன. நீர் ஊறிய உடல்களுடன் அவை தேவதைகளைப் போல மின்னிக்கொண்டிருந்தன. இது என்னுடைய விடலைப் பருவத்தை ஞாபகத்தில் கொண்டுவந்தது. என்னுடைய பெரிய மகன் நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டும், நீச்சல் கற்றுக்கொள்ளவேண்டும் அடம் பிடித்தது ஞாபகத்துக்கு வந்தது. நிச்சயம் அவனை நாளை நீச்சல்குளத்துக்கு அழைத்துப்போகவேண்டும் என்று எனக்குள் உறுதிசொல்லிக்கொண்டேன்.

வளையின் அளவு அதிகரித்ததுடன் எலிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போனதால் நாங்கள் சென்று சேருமிடம் நெருங்கிவிட்டதாகத் தோன்றியது.

பரபரப்பாக இங்கும் அங்கும் போய் வந்துகொண்டிருந்தன எலிகள். அவைகளின் முகத்தில் துயரம் படிந்திருந்ததை என்னால் பார்க்கமுடிந்தது. ஏதோ சடங்குக்கான ஆயத்தம் போலவும் அவை இருந்தன. அந்த பிரதான வளையின் முடிவில் நாங்கள் ஒரு மைதானத்தை அடைந்தோம். அதன் வாசலில் ‘புத்தரின் தொப்பி’ என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது. உண்மையில் அந்த மைதானத்தின் கூரை ஒரு பிரமாண்டமான மரத்தின் அடிபாகம் என்பது பார்த்தவுடன் விளங்கியது. எண்ணற்ற பாதைகள் அந்த மைதானத்துக்கு வந்து சேர்ந்தன.

அங்கே கண்ட காட்சிதான் என்னை திடுக்கிடச் செய்தது. எலிகளின் பிணங்கள் அங்கே வரிசையாக கிடத்தப்பட்டிருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூறைத் தாண்டும் போல் தோன்றியது. வண்டியில் வந்து மேலும் குவிந்துவண்ணம் இருந்தன. துயரத்துடனும், கண்ணீருடனும் எலிகள் சுற்றி நின்று அவற்றைப் பார்த்துச் சென்றன. எதையோ சொல்லி பிரார்த்தனை செய்தன.

நான்கைந்து எலிகள் வந்து ஜெர்ரியிடம், “இறந்த தோழர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம். மனிதர்களின் மனதை மாற்றும்படி கடவுளிடம் கேட்போம்.’’

“அப்படியே செய்வோம்’’ என்றது ஜெர்ரி.

பெரிய அளவில் உயிரிழப்போ, அழிவோ நேரும் போது நம்மால் என்ன செய்ய முடிகிறது? ஒரு பத்திரிகையாளனாக இருந்தாலும் சம்பவங்களைப் பதிவு செய்யத்தான் முடிகிறதேயொழிய தடுக்க முடிவதில்லை. உண்மையில் சாவு ஒரு பத்திரிக்கையாளனை சுறுசுறுப்படையச் செய்கிறது. ஒரு வெட்டியானைப் போல தன் வேலையில் உற்சாகமடைகிறான் அவன்.

“இப்படி உட்காருவோம்’’ என்று மண் இருக்கையைக் காண்பித்தது ஜெர்ரி. இருவரும் அதில் உட்கார்ந்தோம். அது போல எண்ணற்ற மண் இருக்கைகள் அங்கே போடப்பட்டிருந்தன. உள்ளே மழை பெய்யும் வாய்ப்பே இல்லை என்பதால் அந்த இருக்கைகள் கறைந்து போகாது என்பது நிச்சயம். அந்த இடம் பெரிய அளவிலான ஒரு விளையாட்டு மைதானம் போலதான் எனக்குத் தோன்றியது.

“மிஸ்டர் முருகன், எங்களுக்கு இது மிகவும் துயரம் மிக்க நாள். அவ்வப்போது ஒன்றிரண்டு சாவு நேரும் என்றாலும் இது போல் எப்போதும் நிகழ்ந்ததில்லை. இவ்வளவு எலிகள் கொல்லப்பட்டதில்லை’’ என்றது ஜெர்ரி.

இது உண்மை என்றால், இந்த வரலாற்று முக்கியத்துவம் உள்ள நாளில் நான் அழைத்துவரப் பட்டிருக்கிறேன் என்றால் என்ன அர்த்தம்?

“எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது’’ என்றேன் நான். “இப்படி ஒரு சம்பவத்தை கற்பனை செய்துகூட பார்த்ததில்லை…’’

“மிஸ்டர் முருகன், கற்பனைகளோ, முன் யோசனைகளோ இது போன்ற படுகொலைகளைத் தடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தெரிந்தேதான் இவை நிகழ்கின்றன. திட்டமிட்டேதான் நிகழ்த்தப்படுகின்றன. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த அந்தச் செய்தியைத் தேர்ந்தெடுத்ததும் என்ன செய்தீர்கள்? அதில் இடம்பெற்றிருந்த அந்த அதிகாரியின் உரையை அக்கரையுடன் சரி செய்தீர்கள். அதை வாசிக்கப் போவது விவசாயிகள் என்பதால் அதை இன்னும் எளிமை படுத்தினீர்கள். விஷம் வைத்து எலிகளைக் கொல்லும் முறையை அதிகாரியைவிட நீங்கள் விளக்கமாக எழுதினீர்கள். எலிகளால் ஒரு வருஷத்துக்கு எத்தனை டன் தானியம் வீணாகிறது என்ற புள்ளி விவரத்தைச் சேர்த்தீர்கள். விவசாயிகள் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று எழுதினீர்கள்…

எனக்கு எல்லாம் விளங்கியது போல இருந்தது. பதற்றத்துடன் நான் குறுக்கிட்டேன், “விவசாயிகள் இன்று நலிந்த நிலையில் இருக்கிறார்கள் மிஸ்டர் ஜெர்ரி, ஒரு மாஜி விவசாயி என்ற முறையில்தான் இதைச் சொல்கிறேன். விவசாயத்தை நம்பாமல் இது போன்ற நகரத்துக்கு வந்து நாங்கள் சீரழிவது இதனால்தான்…’’

ஜெர்ரி வருத்தம் கலந்த ஒரு சிரிப்பை வெளிப்படுத்தியது.

“நல்லது மிஸ்டர் முருகன், ஒரு நேர்மையான எடிட்டராகவும், நலிந்த விவசாயியாகவும் இருந்து அந்த செய்தியை வெளியிட்டீர்கள். பெரும்பாலான விவசாயிகள் உங்கள் பத்திரிகையைத்தான் படிக்கிறார்கள் என்பது எங்களுடைய துரதிஷ்டம்தான். அதெல்லாம் இருக்கட்டும், இதோ இந்த நூற்றுக்கணக்கான மரணங்களை என்னவென்று அர்த்தப்படுத்துவீர்கள்? சொல்லுங்கள், உங்களுக்கான நியாயங்களைத்தான் நாங்களும் கடைபிடிக்க வேண்டுமா? எங்கள் இனத்தை பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற உங்களுடைய கொலைவெறியை நாங்கள் எப்படி மதிப்பது? உங்கள் சௌகர்யங்களுக்காக நாங்கள் உயிர் தியாகம் செய்ய வேண்டுமா?’’

எதுவும் பேசாமல் அந்த பிரம்மாண்டமான கூரையை வெறித்தபடி நான் உட்கார்ந்திருந்தேன். என்றைக்கும் இதுபோன்று யாரெதிரிலும் நான் குற்றவாளியாக நின்றதில்லை, இப்படி அவமானப்பட்டதில்லை. இந்த கேள்விகளுக்கு நான் என்ன பதில் கூறுவது? என்ன சமாதானம் சொல்வது அதற்கு?

“மிஸ்டர் ஜெர்ரி, நான் இதற்காக என்ன பரிகாரம் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள்? இந்த நகரத்தில் வாழ்வதற்காக நான் செய்யும் எத்தனையோ காரியங்கள் பாவம் நிறைந்தவைதான். மனசாட்சிக்கு விரோதமானவைதான். ஆனால் இதில்தான் மனித நாகரீகத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. அதனோடு என்னை பிணைத்துக்கொண்டுவிட்டேன். என்னால் இனி பின்னோக்கிப் போக முடியாது. எனக்குத் தேவையான சௌகர்யங்கள் இங்கே கிடைக்கின்றன. அதை இங்கிருந்தால்தான் நான் பெற முடியும். நகரத்தில் இவ்வளவு பேர்கள் இருக்கும் போது என்னை மட்டும் ஒரு மாபாதகனைப் போல அழைத்து வந்து விசாரிக்கிறீர்களே, குறைந்த அளவான நியாயங்களையாவது என்னிடத்தில் நீங்கள் காணவில்லையா என்ன?’’

“இந்த குறைந்த அளவு நியாயங்கள் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் அளிக்கவில்லையே.’’

“ ‘எலிகளைக் கொல்லாதீர்கள், அது பாவகாரியம்’ என்று சொன்னால் என்னைக் கிறுக்கன் என்றுதான் நினைப்பார்கள். விவசாயிகள் கல்லை தூக்கி அடிப்பார்கள். பொதுவான நியாயம் என்று எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை. இதற்காக நாம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதும் உபயோகமற்றது. ஏதாவது செய்யவேண்டும் என்பது மட்டும் புரிகிறது. என்ன செய்யலாம் சொல்லுங்கள்.’’

“மிஸ்டர் முருகன், செய்வற்கு என்ன இருக்கிறது? நீங்களே சொல்லுங்கள்.’’

“எதுவும் செய்ய வேண்டாமா? இந்த படுகொலைகளுக்கெல்லாம் நீங்கள் பழி தீர்க்கப்போவதில்லையா?’’

“பழி தீர்ப்பதா!’’ ஜெர்ரி வியப்புடன் கேட்டது.

“இதற்காக சில மனிதர்களையாவது நீங்கள் கொல்லலாம். இல்லையென்றால் அவர்களின் சொத்துகளுக்கு நாசம் விளைவிக்கலாம். இது ஒன்றும் உங்களுக்கு புதிதில்லையே.’’

“இதுவரை நாங்கள் திட்டமிட்டு எந்த அழிவையும் நிகழ்த்தியதே இல்லை. இந்த கணம் வரை அப்படி ஒரு எண்ணம் எதுவும் எங்களுக்கு எழவில்லை.’’

“உங்களுக்கு எதிராக குற்றம் இழைத்ததற்கு பரிகாரமாக நான் உங்களுக்கு உதவ நினைக்கிறேன். வெடிகுண்டு செய்யும் தொழில்நுட்பம் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அப்படி ஒரு நண்பர் எனக்கு கிடைத்தது உங்களுடைய அதிஷ்டம் என்றே சொல்வேன். அவரைப் பயன்படுத்தி நாம் கொஞ்சம் குண்டுகளை உற்பத்தி செய்வோம். பிறகு நீங்கள் எதிரிகளாக நினைக்கும் மனிதர்கள் மேல் தற்கொலை தாக்குதலை தொடுக்கலாம். இல்லை என்றால் பாம் வைத்து முக்கிய இடங்களைத் தகர்க்கலாம். ஆக்கபூர்வமாக இதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நினைத்தால் நுழைய முடியாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ள தானிய அறைகளின் சுவர்களைக் கூட உடைத்துகொண்டு உள்ளே நுழையலாம்.’’

நான் எதிர்ப்பார்த்ததற்கு மாறாக ஜெர்ரியின் முகம் பேயறைந்தது போல மாறிவிட்டது. அங்கே கிடத்தப்பட்டிருந்த எலிகளின் பிணங்களைப் பார்த்தபடி எதுவுமே பேசாமல் உட்கார்ந்திருந்தது.

“மிஸ்டர் ஜெர்ரி, இப்படி பேசாமல் உட்கார்ந்திருப்பதால் என் நேரம்தான் வீணாகிறது. நான் அவசரமாகப் போகவேண்டும். பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துகொண்டு வரவேண்டும்.’’

அது என் பேச்சை பொருட்படுத்தவே இல்லை. எங்களுக்கு அருகே வந்த ஒரு எலியைப் பார்த்து “இன்னும் எத்தனை பாக்கியிருக்கிறது?’’ என்று ஜெர்ரி கேட்டது.

“அவ்வளவுதான் முடிந்தது’’ என்றது அது பதிலுக்கு.

“பிரார்த்தனைக்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லுங்கள்’’ என்றது ஜெர்ரி.

“ஆகட்டும்’’ என்று அது பணிவுடன் அங்கிருந்து அகன்றது.

மீண்டும் ஜெர்ரி என்னை கவனிக்காமல் தனக்குள்ளான சிந்தனையில் மூழ்கிவிட்டது போல காணப்பட்டது.

“இது போல் சும்மா உட்கார்ந்திருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. எனக்கு நேரமாகிறது. உங்களைப் போல இல்லை, நாங்கள் எல்லாவற்றையும் காலத்தோடு செய்யவேண்டியிருக்கிறது. நான்கு மணிக்குப் பிள்ளைகளுக்கு பள்ளி முடிந்துவிடும். அவர்களை அழைத்துக்கொண்டு வீடு போய் சேரவேண்டும்.’’

“மிஸ்டர் முருகன். இன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளிகளுக்கு விடுமுறை தினம். நீங்கள் பகலில் எப்போதும் தூங்குவது போல இப்போதும் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். கனவு கண்டுகொண்டிருக்கிறீர்கள்.’’

“மன்னிக்க வேண்டும் ஜெர்ரி, இது வெறும் கனவுதானா! நிஜமாக கனவுதானா!!’’

நான் விழித்துக்கொண்டேன். பெரிய ஆபத்திலிருந்து மீண்டது போல நிம்மதி ஏற்பட்டது. பேரிய அவமானத்திலிருந்து தப்பி விட்டது போல இருந்தது.

http://gmuruganwritings.wordpress.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு வித்தியாசமான எழுத்து. கனவு என்பது மறந்துபோய் நியமாகவே ஜெர்ரி உடன் சென்று வந்த அனுபவம். பகிர்வுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.