Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் அத்து மீறல்கள் - வா. மணிகண்டன்

Featured Replies

பாலியல் அத்து மீறல்கள்

 

வா. மணிகண்டன்

www.nisaptham.com

 

 
மிகச் சமீபத்தில் இந்தியாவில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்று பட்டியல் எடுத்தால் பயங்கரமாக இருக்கிறது. வன்புணர்ந்து பிறகு தலையில் அடித்துக் கொல்வது, அடையாளம் தெரியாதபடிக்கு பாதி உடலை எரித்துவிட்டு போவது, தூக்கில் தொங்கவிடுவது என்று ஒவ்வொன்றும் குரூரமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் வெறும் செய்தியாகப் படித்தால் பெரிதாக பாதிப்பு தெரிவதில்லை. நம் உறவுப் பெண் யாரையாவது அந்த இடத்தில் ஒரு வினாடிக்கு பொருத்திப் பார்த்தால் நெஞ்சுக்குள் மிகப்பெரிய உருண்டை ஒன்று அடைத்துக் கொள்கிறது. 
 
இவையெல்லாம் உத்தரப்பிரதேசத்திலும் டெல்லியிலும்தான் நடக்கின்றன என்றில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பெருந்துறையில் பெண் போலீஸ் ஒருவருக்கு லிப்ட் கொடுப்பதாகச் அழைத்துச் சென்று நடுக்காட்டில் பாலியல் வல்லுறவு செய்துவிட்டு பாதி உடலை எரித்துவிட்டுப் போயிருந்தான் ஒருவன். இன்னொரு சமயத்தில் சத்தியமங்கலத்தில் ஒரு நடுத்தர வயது பெண்ணை வன்புணர்ந்துவிட்டு தலையில் கல்லைப் போட்டு நசுக்கிவிட்டுச் சென்றிருந்தான் இன்னொருவன். இந்தச் சம்பவங்களில் வயதும் தடையாக இருப்பதில்லை. ஐந்து வயது சிறுமி, பதினைந்து வயது பள்ளிப்பருவப் பெண், முப்பது வயதுப் பெண், எழுபது வயது மூதாட்டி என்று யாருமே தப்பிப்பதில்லை. பெண். அவ்வளவுதான். அது சிறுமியாக இருந்தாலும் சரி. கிழவியாக இருந்தாலும் சரி. வடநாட்டில் இருந்தாலும் சரி. தென்னாட்டில் வாழ்ந்தாலும் சரி. இவற்றில் வட இந்திய ஊடகங்கள் கையில் எடுக்கும் செய்திகள் மட்டும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கவனம் பெறுகின்றன. மற்றவையெல்லாம் ஊடகங்களில் இருந்து தப்பித்துவிடுகின்றன. 
 
உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பெண்களை தூக்கில் தொங்கவிட்டது பற்றிய செய்தி ஆறுவதற்குள் மேகாலயாவில் நடந்த இன்னொரு செய்தி வந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் குழந்தைகளையும் அவளது கணவனையும் வீட்டுக்குள் பூட்டிவிட்டு இவளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்திருக்கிறார்கள். அவள் ஒத்துழைக்க மறுத்திருக்கிறாள். தலையிலேயே சுட்டுவிட்டார்கள். இந்த சம்பவம் முழுவதையும் அந்தக் குழந்தைகள் பார்த்திருக்கிறார்கள். சாகும் வரைக்கும் மறக்குமா என்ன?
 
இவையெல்லாம் சாம்பிள் செய்திகள். ஏகப்பட்ட நிகழ்வுகளை பாதிக்கப்பட்டவர்களே மறைத்துவிடுகிறார்கள். குற்றவாளியைக் காட்டிக் கொடுப்பதைவிடவும் இந்தக் கறையை மறைப்பதுதான் முக்கியம் என நினைக்கிறார்கள். அதைத்தானே நம் சமூகம் சொல்லிக் கொடுத்திருக்கிறது? ‘சீரழிஞ்சு வந்து நிக்கிறாளே..இவளுக்கு இனி யார் வாழ்வு கொடுப்பார்கள்?’ என்கிற மனநிலை. இதையும் மீறி பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்தாலும் காவல் துறையும் அதிகார வர்க்கமும் செய்தியை அமுக்கிவிடுவதிலேயே குறியாக இருக்கின்றன. 
 
நேற்று பெங்களூரில் வசிக்கும் ஈரான் தேசத்துப் பெண்ணின் வீட்டை யாரோ தட்டியிருக்கிறார்கள். அவள் திறந்து விசாரித்த போது வெளியில் நின்றிருந்தவன் ‘கூரியர் வந்திருக்கு’ என்றிருக்கிறான். ‘வாய்ப்பில்லையே’ என்று அவள் சொல்ல முயற்சிப்பதற்குள் கீழே தள்ளி கத்தியைக் கழுத்துக்கு நேராக வைத்திருக்கிறான். கத்தியைக் காட்டியபடியே அவன் பேண்ட் ஜிப்பைக் கழட்டியிருக்கிறான். சுதாரித்தவள் அவனது தொடைகளுக்கு இடையில் உதைத்துவிட்டு வெளியே ஓடி வந்து கத்தியிருக்கிறாள். அக்கம்பக்கத்தவர்கள் துரத்தியபோது கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டானாம். அவனைப் பிடித்து போலீஸில் ஒப்ப்படைத்தால் ‘திருட்டு கேஸ்’ பதிவு செய்திருக்கிறார்கள். ‘பாலியல் வல்லுறவு முயற்சி’ என்று பதிவு செய்தால் - அதுவும் வெளிநாட்டு பெண் என்றால் போலீஸுக்கு நிறைய கேள்விகள் வரும் அல்லவா? அதனால் திருட்டு முயற்சி கேஸ்.
 
பெங்களூரை விடுவோம். சில நாட்களுக்கு முன்பாக பரபரப்பாக பேசப்பட்ட காரைக்கால் பாலியல் வல்லுறவு வழக்கு என்ன ஆனது? இப்போதைக்கு இந்தச் செய்திதான் உடனடியாக ஞாபகத்துக்கு வருகிறது. யோசித்துப் பார்த்தால் இன்னும் பத்து வழக்குகளையாவது நினைவுக்கு கொண்டு வர முடியும். இப்படியே ஆளாளுக்கு ஒரு பாலியல் வல்லுறவு செய்தி ஞாபகத்து வரக் கூடும். இப்பொழுது அவற்றைத் தேடிச் சென்றால் என்ன ஆனது என்றே கண்டுபிடிக்க முடியாது. இப்படி நமக்குத் தெரியும் பாலியல் பலாத்காரச் செய்திகள் எல்லாம் அதிகாரம், பணபலம் ஆகியவற்றின் கொடூர கரங்களில் இருந்து அதிசயமாக தப்பித்து ஊடகங்களில் வெளியான செய்திகள்தான். ஆனால் இப்படி வெளியான செய்திகளையும் கூட அடுத்த பதினைந்து நாட்களில் எப்படி மறக்கடிக்கச் செய்வது என்று நம்மவர்களுக்குத் தெரியும். அமுக்கிவிடுவார்கள்.
 
ஊடகங்களில் வெளியாகும் சொற்பமான நிகழ்வுகளே கடும் அதிர்ச்சியைக் கொடுக்கின்றன என்றால் ஊடக வெளிச்சத்திற்கே வராத பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக இருக்கும். அவையெல்லாம் எந்தவித சத்தமும் இல்லாமல் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. எந்த ஊடகத்திலும் பேருந்தில் உரசுவதைப் பற்றியும் பொது இடங்களில் கைகள் நீள்வதைப் பற்றியும் கட்டுரைகள் வருவதில்லை. பெண்குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரங்களைப் பற்றிய பெரிய அளவிலான விவாதங்கள் நடப்பதில்லை. ‘நம் வீட்டில் நடக்காத வரைக்கும் சரிதான்’ என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மை என்னவென்றால் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் பெண் குழந்தைகள் ஏதாவதொரு விதத்தில் பாலியல் அத்து மீறல்களால் பாதிக்கபட்டிருக்கிறார்கள் என்பதுதான். அது தொடுதல், உரசுதலிலிருந்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
 
கர்நாடகாவில் இன்று வெளியான செய்தி- பதினைந்து வயது மகளை அப்பன் பாலியல் வல்லுறவு செய்திருகிறான். எட்டாவது படிக்கும் மாணவி அவள். ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பாக அந்தப் பெண் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறாள். பக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற போது அவள் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். விசாரித்தால் ‘உன்னையும் உங்க அம்மாவையும் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டி கந்தரகோலம் ஆக்கியிருக்கிறான். 
 
எங்கு சிக்கல்? எதனால் இத்தனை அத்து மீறல்கள் நடக்கின்றன? இதையெல்லாம் நாம் ஏன் வெளிப்படையாக பேசுவதில்லை?  இருபது வருடங்களுக்கு முன்பாகவும் இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்தன-வெகு அரிதாக. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. சர்வசாதாரணமாகிவிட்டது. 
 
என்னதான் பிரச்சினை? பாலியல் வறட்சிதான் அடிப்படையான காரணம் என்கிறார்கள். ஒரு பக்கம் பண்பாடு விழுமியங்கள் என்று பாலியல் சுதந்திரங்களை கட்டுக்குள் வைக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் ஊடகங்கள் வழியாகவும், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் வழியாகவும் உணர்ச்சிகளை சுண்டி விடுகிறார்கள். மற்றொரு பக்கம் மது இன்னபிற போதை வஸ்துகளை பரப்பி வைத்திருக்கிறார்கள்.

பிறரின் மீதான மோகம், அதை வெளிப்படுத்துவதற்கு வழியில்லாத சமூகக் கட்டமைப்புகள், பாலியல் தேவைகளை வெளிப்படையாக பேச முடியாத பண்பாட்டு கட்டுபாடுகள் என ஏகப்பட்ட சிக்கல்களைக் கை நீட்டலாம். 
 
இருபது வருடங்களுக்கு முன்பாக பெண்ணின் சதையைப் பார்க்க வேண்டுமானால் இப்பொழுது இருக்கும் அளவிற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. இப்பொழுது அப்படியில்லை. ஃப்ளக்ஸ் பேனரிலிருந்து கையில் இருக்கும் செல்போன் வரையில் எங்கு வேண்டுமானாலும் பார்க்க முடிகிறது. வாழ்க்கை முறையைப் புரட்டிப் போட்டிருக்கிறோம். ஆனால் பண்பாடு என்ற பெயரில் முக்கியமான பல விஷயங்களை வெளிப்படையாக பேச வழியில்லாத சமூகத்தையே தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். Sexual dryness என்பதன் அடிப்படையே இங்குதான் தொடங்குகிறது. இங்கு ஒரு ஆணின் பாலியல் கிளர்ச்சிகள் பத்து வயதிற்கும் முன்பாகவே தூண்டப்பட்டுவிடுகின்றன. ஆனால் அவன் ஒரு பெண்ணை அடைவதற்கு முப்பத்தைந்து வயது வரைக்கும் கூட காத்திருக்க வேண்டியிருக்கிறது. வெளிப்படுத்த வழியில்லாத அவனது இச்சைகள் வெவ்வேறு வடிவங்களில் அத்துமீறல்களாகிக் கொண்டிருக்கின்றன. கிடைக்கும் அப்பாவிப்பெண்களின் மீது தனது குரூரங்களை இறக்கிக் கொண்டிருக்கிறான். அந்தப் பெண்கள் தங்களின் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள்.
 
உரசுவது, பிறரின் அந்தரங்க உறுப்புகளை தொட முயற்சிப்பது, தனது உடல் பாகங்களை எதிர்பாலினரிடம் காட்டுவதற்கான முயற்சிகளைச் செய்வது என அத்தனையுமே ஒருவித மனநோய்தான். இங்கு யாருக்குத்தான் மனநோய் இல்லை? கிட்டத்தட்ட ஒவ்வொருவருமே ஏதாவதொரு imbalanceனால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நம்மால் பெரும்பாலானவற்றை மறைத்துக் கொள்ள முடிகிறது. அதனால் இயல்பாக நடந்து கொள்வதைப் போன்ற தோற்றத்தை வெளியில் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் மனநோயின் விளைவுகள் பரவலாக எல்லை மீறும் போதுதான் மிகப்பெரிய சமூகப்பிரச்சினையாக உருவெடுக்கிறது. 
 
முன்பெல்லாம் ஒரு ஊரில் தவறு நடக்கிறது என்றால் அவனைக் கட்டம் கட்டிவிடுவார்கள். அவனை அடையாளம் கண்டுபிடிப்பது மிக எளிது. இப்பொழுது ஆயிரம் பேர் வசிக்கும் கிராமங்களில் கூட புதிய முகங்கள் நூறாவது தேறிவிடுகின்றன. எங்கள் ஊரில் இறங்கினால் ஐந்து சதவீதம் பேரைக் கூட என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடிவதில்லை. அத்தனை புதுமுகங்கள். நகரங்களில் என்றால் கேட்கவே தேவையில்லை. அத்தனையும் புதுமுகங்கள்தான். இந்த அடையாளமின்மையே அத்து மீறுவதற்கான மிகப்பெரிய சுதந்திரத்தைத் தருகிறது. ‘நம்மைக் கண்டுபிடிக்க முடியாது’ என்கிற பயமின்மையால் கையை நீட்டுகிறார்கள். இது ஒருவிதத்தில் தனது பாலியல் இச்சையை வடிகட்டிக் கொள்ளும் முறை.
 
நமது சமூக அமைப்பில் பிரச்சினையா? நமது பிள்ளை வளர்ப்பு முறையில் இருக்கும் பிரச்சினைகளா? கல்விமுறையில் இருக்கும் போதாமைகளா? தண்டனைச் சட்டங்களில் இருக்கும் கடுமையின்மையா? எதிர்பாலினரை புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல்களா என்றெல்லாம் தெளிவான வரையறையைச் செய்ய முடிவதில்லை. எல்லாவற்றிலுமே பிரச்சினைகள் இருக்கின்றன. 
 
கிராமங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. நகரங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்து அரசாங்கங்களும் அதிகார வர்க்கங்களும் செயல்படுவதாகத் தெரியவில்லை. எந்த ஆட்சியாளரும் இதைப் பற்றி பேசுவதாகவே தெரியவில்லை. அப்படியே பேசினாலும் அகிலேஷ் யாதவ் ‘கூகிளில் தேடினால் இங்கு நடப்பதைவிடவும் அதிகமான நிகழ்வுகள் வெளியில் நடப்பது தெரியும்’ என்கிறார். ‘நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்று முலாயம் சிங் யாதவ் சொல்கிறார். 
 
கடந்த இருபதாண்டுகளில் தொழில்நுட்பம் எவ்வளவோ மாறுதல்களைக் கொண்டு வந்துவிட்டது. நம் மக்களின் அடி மனதில் ஏகப்பட்ட கசடுகள் சேர்ந்துவிட்டன. இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் வெறும் தண்டனைகளாலும், அறிக்கைகளாலும் மட்டும் எந்த மாறுதலையும் உருவாக்கிவிட முடியாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்தான் ஆனால் அதே சமயமும் அரசாங்கமும் அதிகாரவர்க்கமும் பிரச்சினையின் அடிப்படையான காரணங்களை உணர்ந்து உடனடியாக செயல்படத் துவங்கினால் மட்டுமே இன்னமும் இருபதாண்டுகளில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இப்பொழுதே காட்டுமிராண்டித்தனத்தின் பல்வேறு வடிவங்களை நேரடியாகப் பார்க்கத் துவங்கிவிட்டோம். இதை கண்டுகொள்ளாமல் விட்டால் நிலைமை விபரீதமாகிவிடும்.

 

 

http://www.nisaptham.com/2014/06/blog-post_4.html#comment-form

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு தேவையான இணைப்பு, நிழலி!

 

சில வேளைகளில், எனது இளமைக்காலத்து நினைவுகளை மீட்டும்போது, எவ்வளவு அடக்க ஒடுக்கமாக இருந்திருக்கின்றேன் என ஆச்சரியப் படுவதுண்டு!

 

எவ்வளவோ சந்தர்ப்பங்கள், தாமாகவே உருவாகிக், காலடியில் கிடந்த போதும், அவற்றை எவ்வாறு என்னால் இலகுவாகப் புறந்தள்ளி, நடக்க முடிந்தது என்று இன்று நினைத்தாலும், மிகவும் ஆச்சரியமாக உள்ளது!

 

ஒரு வேளை, சகோதரிகள் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்!

 

சமூக அமைப்புச் சீரழிந்து வருவது, எல்லாவற்றையும் விரைவில் அனுபவித்து முடித்து விட வேண்டுமென்ற உந்துதல், எந்தப் பக்கம் திரும்பினாலும் பாலுணர்வைத் தூண்டும் விதமான விளம்பரங்கள், மதங்கள் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாமை, போன்றவை வெளிப்படையான காரணங்களாக இருப்பினும்,இன்னும் பல புதிய காரணங்களும் உண்டு!

 

இளவயதில் மது பான உபயோகம், அதிக பணப்புழக்கம், விபச்சார நிலையங்களின் வெளிப்படையான தொழில்பாடு, திருமணம் என்ற ஸ்தாபனத்தின் பலவீனம், இணையத் தளங்களின் கட்டுப்பாடற்ற செயல்பாடு என்பனவும் காரணமாக அமையக்கூடும் என எண்ணுகின்றேன்!

 

மற்றைய உறவுகளும் தங்கள கருத்துக்களை எழுதினால், ஒரு விதமான தெளிவு பிறக்கக்கூடும்! நன்றிகள்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.