Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…

ஒன்று

பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி? ”முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று வீதம் சொற்றொடர்களைப் பொறுக்கிச் சேர்த்து வரிசைப்படுத்தினால் நவீனச்சிறுகதை ஆகிவிடும்.” ஆம்,சொற்றொடர்ச்சிக்கல்களை உருவாக்குவதே நவீனச்சிறுகதை என்ற எண்ணம் எழுத்தாளர்களில் ஒருசாராரிடம் வலுவாகவே இருந்தது.

உண்மையில் சிக்கலான சொற்றொடர்கள் கொண்ட படைப்புகள் உருவாவதற்கான காரணங்கள் பல இருந்தன. ஏராளமான எழுத்தாளர்களுக்கு தமிழில் போதிய பயிற்சி இல்லை. எளிய நேரடிச் சித்தரிப்பை அளிக்கவே திண்டாடக்கூடியவர்கள். திடீரென்று மனம் செயல்படும் சிடுக்குகளையும், வரலாறும் நம்பிக்கைகளும் யதார்த்தமும் முயங்கிக்கிடக்கும் பின்னல்களையும் இலக்கியத்தில் சொல்லியாகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. அதன்பொருட்டு மொழியை பற்பல அர்த்த அடுக்குகள் கொண்டதாக ஆக்கவேண்டுமென கோரப்பட்டது. அதற்காக இவர்கள் முயன்றபோதுதான் காலில்லாதவர் நடனமிட்டதுபோல விபரீதமான விளைவுகள் பல உருவாயின.

இன்று அந்தக் காலகட்டம் தாண்டப்பட்டுவிட்டது. வெறும் சொற்றொடர்ச் சிடுக்குகளை முன்வைந்துவிட்டு இலக்கியம் என்று கூறிக்கொள்வதற்கான வாய்ப்புகள் முற்றாக அடைபட்டு அத்தகைய முயற்சிகள் கேலிக்குரியதாக மாறிவிட்டன. இன்றைய எழுத்தாளர்களில் பலர் மிக எளிமையான நேரடிநடையில் யதார்த்த தளத்தில் நின்றபடி கதைகளை உருவாக்குகிறார்கள். சமீபகாலத்தில் நிகழ்ந்த இலக்கிய மாற்றம் என்று மேலோட்டமாகத் தெரிவது இதுவே.

இதற்கான பின்புலத்தை விரிவாகவே ஆராய வேண்டும். உலகளாவிய இலக்கியச் சூழலில் சிறுகதையை திரும்பிப்பார்க்கும்போது பொதுவான நோக்கில் நான்கு காலகட்டங்களை நாம் காணலாம். சிறுகதை எட்கார் ஆல்லன் போ,ஓ.ஹென்றி முதலியோரால் ஒருவகையான வேடிக்கைப்புனைவு உத்தியாக முன்வைக்கப்பட்டு பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாகிவந்த புதிய ஊடகமான அச்சிதழ்களில் வெளியாகி கவனத்தைக் கவர்ந்ததே தொடக்க காலம். சிறுகதையின் வடிவத்தில் உள்ள கடைசித் திருப்பம் என்ற அம்சம் வாசகர்களை அதிர்ச்சி கொள்ளவைக்கவும் வியப்படையச் செய்யவும் சிரிப்பூட்டவும் மிக உதவியாக இருந்தது. இவ்வகை எழுத்தில் என் கருத்தில் உச்ச சாதனை என்பது ஸக்கி [எச்.எச்.மன்றோ]வின் கதைகள்தான்.

சிறுகதை, அது பிறந்த சில வருடங்களிலேயே உச்சத்தைத் தொட்ட கலை. ருஷ்ய எழுத்தாளர் அந்தோன் சேகவ், பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசான் போன்றவர்கள் வழியாக சிறுகதையில் இன்றும் ஒளிமங்காத செவ்வியல் காலகட்டம் உருவாகியது. சிறுகதையை ‘ஒளிமிக்கதும் திருப்புமுனையாக அமைவதுமான வாழ்க்கைத்தருணங்களின் சித்தரிப்பு’ என்ற இலக்கணத்துக்குள் அடக்கிக் கொண்ட கதைகள் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டன . இக்காலகட்டக் கதைகளை பொதுவாக சேகவ் பாணி கதைகள், மாப்பசான் பாணி கதைகள் என பிரிக்கலாம். மனிதாபிமானம், தியாகம் ,கருணை போன்ற மானுட உச்சங்கள் வெளிப்படும் தருணங்களை எழுதுவது சேகவ் பாணி. மனித மனத்தின் உள்ளடுக்குகளின் விசித்திர இயக்கங்களை உணர்ச்சிகரமாக சித்தரிக்க முயல்வது மாப்பஸான் பாணி.

அடுத்த காலகட்டத்தை நவீனத்துவ காலம் என்பது வழக்கம். இருத்தலியல் சிந்தனைகள் படைப்பாக்கத்தில் ஆதிக்கம் செலுத்தின . இருத்தலியம் தனிமனிதனை அடிப்படை அளவாகக் கொண்டு வாழ்க்கையையும் காலவெளியையும் மதிப்பிட முயன்றது. அதன் வழியாக வாழ்க்கையில் உள்ள அர்த்தமின்மையையும் அபத்தத்தையும் எழுதிக்காட்டியது. அதற்கு மிகப்பொருத்தமான வடிவமாக சிறுகதை அமைந்தது. வாழ்க்கையின் ஒரு தருணத்தை எடுத்துக்கொண்டு அதை நுட்பமாகச் சித்தரித்து இறுதியில் ஒரு திருப்பம் வழியாக அதில் உள்ள சாரமின்மையை வெளிப்படுத்தி முடிக்கும் கதைகள் பல எழுதப்பட்டன. ‘வாழ்க்கையின் ஒரு திருப்புமுனைத் தருணத்தைச் சொல்வதே சிறுகதை’ என்பது இக்காலகட்டத்தின் இலக்கணம்.

இவ்வகை எழுத்தில் உச்சங்கள் என ஜெர்மானிய எழுத்தாளாரான ஃபிரான்ஸ் காஃப்கா, பிரெஞ்சு எழுத்தாளரான அல்பேர் காம்யூ என இருவரைச் சொல்வது மரபு. இவர்களே இதிலுள்ள இரு பெரும்போக்குகளுக்கு முன்னுதாரணங்கள். குறியீட்டுத்தன்மையுடன் கவித்துவத்துக்காக முயன்ற கதைகளை கா·ப்கா பாணி என்றும் செறிவான யதார்த்தச் சித்தரிப்பு மூலம் முரண்பாடுகளை முன்வைத்த கதைகளை காம்யூ பாணி என்றும் சொல்வதுண்டு.

தமிழில் முதல் காலகட்டக் கதைகளை அ.மாதவையா, சி.சுப்ரமணிய பாரதி, வ.வே.சு அய்யர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். தமிழில் தொடக்க காலகதைகள் சமூக சீர்திருத்த நீதிகளை விளையாட்டு கலந்து முன்வைப்பவையாக இருந்தன. மாதவையாவின் ‘கண்ணன்பெருந்தூது’ என்ற கதையை மிகச்சிறந்த முன்னுதாரணமாகச் சொல்லலாம். அதையே தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்றும் குறிப்பிடலாம்.

அடுத்த காலகட்டம் தமிழில் பொதுவாக மணிக்கொடி என்ற இதழினூடாக உருவாகி தேனீ, கலாமோகினி, கலைமகள்.சுதேசமித்திரன் போன்ற இதழ்கள் வழியாக வளர்ந்தது. இதுவே தமிழ்ச் சிறுகதையின் செவ்வியல் காலகட்டம். ந.பிச்சமூர்த்தி, ரஸிகன், எம்.எஸ்,கல்யாணசுந்தரம், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி போன்றவர்களில் செக்காவ்தன்மை மேலோங்கியிருக்கிறது. புதுமைப்பித்தன் , கு.ப.ராஜகோபாலன் போன்றவர்களில் மாப்பஸான் இயல்பு. பொதுவாக இருவகை பாதிப்புகளும் கொண்ட படைப்பாளிகளாகவே நாம் இக்காலகட்டத்தினரைக் காண முடிகிறது. இப்பிரிவினை புரிந்துகொள்வதற்கான ஒரு முயற்சி மட்டுமே.

மூன்றாவது காலகட்டத்தின் பாதிப்பு மணிக்கொடி காலத்திலேயே தமிழில் வந்துவிட்டாலும் அடுத்த தலைமுறையினரில்தான் வலிமைகொண்டது. தமிழ் நவீனத்துவப் படைப்பாளிகளில் அசோகமித்திரன், சா.கந்தசாமி, ந.முத்துசாமி, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் காம்யூபாணி கொண்டவர்கள் என்றும் பிற்கால சுந்தர ராமசாமி , நகுலன், சம்பத் போன்றவர்களை கா·ப்காபாணி கொண்டவர்கள் என்றும் அடையாளப்படுத்திப் பார்க்கலாம். இவர்கள் அனைவரிலும் இருத்தலியல் பாதிப்பு உண்டு.

இந்நிலையில்தான் தமிழில் எண்பதுகளின் இறுதியில் நவீனத்துவத்துக்கு எதிரான கோணம் வலுவுடன் எழுந்துவந்தது. நவீனத்துவத்தின் நான்கு இயல்புகளை இந்தக் கோணம் நிராகரித்தது. 1. நவீனத்துவம் விரிவான வரலாறு நோக்கு இல்லாமல் தனிமனித நோக்கில் பிரச்சினைகளை அணுகியது. அதை நிராகரித்து வாழ்க்கையின் அனைத்து பிரச்சினைகளையும் ஒரு வரலாற்றுப் பின்னணியில் வைத்து நோக்கும் அணுகுமுறை முன்வைக்கப்பட்டது. 2. நவீனத்துவம் ஒரு மையத்தை வலியுறுத்தும் படைப்புகளை உருவாக்கியது. அதற்குமாறாக கதையின் மையத்தை பல கோணங்களில் ஆராயும் எழுத்துமுறை உருவாகியது. 3. நவீனத்துவம் மொழியை செறிவாகவும் கட்டுப்பாடுடனும் பயன்படுத்தவேண்டும் என்றது. அதை நிராகரித்து மொழி ஆழ்மனதுக்குள் ஊடுருவும் விதத்தில் கட்டற்று பாயவேண்டும் என்று கூறப்பட்டது. 4. கடைசியாக, நவீனத்துவம் தர்க்கபுத்திக்கு பொருந்தக்கூடியவற்றை மட்டுமே எழுதியது. அதன் மூலம் வாழ்க்கையின் ஒரு தளம் மட்டுமே எழுதப்படமுடியும் என்று வாதிட்ட அடுத்த தரப்பினர் தர்க்கத்தை உதறி கற்பனை மூலமே சஞ்சரிக்ககூடிய வெளிகளையும் கதைகளுக்குள் கொண்டுவந்தார்கள்.

இக்காலகட்டத்தின் முன்னுதாரணமான படைப்பாளிகள் என அர்ஜெண்டீனா நாட்டு எழுத்தாளரான ஜோர்ஜ் லூயி போர்ஹெ, கொலம்பியா நாட்டு எழுத்தாளரான கப்ரியேல் கார்ஸியா மார்க்யூஸ், இத்தாலிய எழுத்தாளரான இடாலோ கால்வினோ ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களின் பாதிப்பு அதிகமும் வடிவரீதியாகவே இருந்தது. இவர்களின் கதைகள் சா.தேவதாஸ், பிரம்மராஜன், ஆர்.சிவக்குமார்,லதா ராமகிருஷ்ணன் போன்றவர்களின் மொழிபெயர்ப்புகளாக தமிழில் கிடைக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணன் போர்ஹெ பற்றி ‘என்றார் போர்ஹெ’ என்ற அறிமுக நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

நவீனத்துவத்தைத் தாண்டி தமிழில் நிகழ்ந்த இந்த நகர்வுக்கு மேல்நாட்டு பின்நவீனத்துவம் ஒரு முன்னுதாரணமாகவே இருந்தது. அது இங்கே சிலர் தவிர பிறரால் அப்படியே நகல்செய்யப்படவில்லை. நவீனத்துவத்துக்கு பிறகான தமிழிலக்கியத்தில் பல தனிப்போக்குகள் உள்ளன. பொதுவாகப் பார்த்தால், மையப்படுத்தப்பட்டவையும் ஒருங்கிணைவுள்ளவையுமான படைப்புகளுக்குப் பதிலாக விவாதத்தன்மையுள்ளவையும் பலகுரலில் பேசுகின்றவையும் ஊடுபாவுகள் கொண்டவையுமான வடிவங்கள் உருவாகி வந்தன எனலாம்.

இதன் விளைவாகச் சிறுகதையில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு புள்ளியில் ஒருங்கிணைவோடு குவியக்கூடிய சிறுகதை வடிவம் பின்னகர்ந்தது. சிறுகதைக்குள் பல அடுக்குகள் ஒரேசமயம் கூறப்படவேண்டும் என்றும் அதற்குள் ஒரு விவாதத்தன்மை இருக்க வேண்டும் என்றும் முயலப்பட்டது. ஆகவே சிறுகதை குறியீட்டுத்தன்மை கொண்டதாக ஆகியது. சிறுதையின் இறுதியில் உள்ள திருப்புமுனைப்புள்ளியில் மட்டும் அதன் உச்சம் நிகழவேண்டுமென்பதற்குப் பதிலாக அதன் உடலெங்கும் கவித்துவமான உட்குறிப்புகள் மூலம் உச்சப்புள்ளிகளை கொண்டுவரமுடியுமா என்ற முயற்சிகள் உருவாயின. இதற்கு யதார்த்தவாத எழுத்துமுறை உதவாது என்ற கண்டடைதல் காரணமாக மிகைபுனைவுகள் அதிகமாக எழுதப்பட்டன. மாய யதார்த்தம் போன்ற வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டன.

கோணங்கி,ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன், ரமேஷ்-பிரேம்,யுவன் சந்திரசேகர் ஆகிய ஐவரையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை படைத்தவர்கள் எனலாம். கோணங்கி மொழியின் வழியாக நிகழ்த்தப்படும் கட்டற்ற கனவு போன்ற சிறுகதை வடிவத்தை எழுதினார். ஜெயமோகன் செவ்வியல்பாணியிலான மிகையதார்த்தக் கதைகளை பல கோணங்களில் உருவாக்கினார். எஸ்.ராமகிருஷ்ணன் மாய யதார்த்த அழகியலை கையாண்டார். ரமேஷ்-பிரேம் வரலாற்றெழுத்தில் உள்ள கூறுமுறைகளை புனைவுகளுக்குள் கொண்டுவந்தார். யுவன் சந்திரசேகர் கதைகளின் தொகுப்பாக அமையும் கதைகள் என்ற வடிவில் எழுதினார். சாரு நிவேதிதா இவ்வகையில் செய்தியறிக்கைகள் கிசுகிசுக்கள் அரட்டை போன்றவற்றின் கலவையாக அமையக்கூடிய கொண்ட கதைகளை எழுதிப்பார்த்தாலும் அதிகமாக எழுதவில்லை. கௌதம சித்தார்த்தன், பா.வெங்கடேசன், எம்.ஜி.சுரேஷ் போன்றவர்களும் சில கோணங்களில் இவ்வகைப்பட்ட கதைகளை எழுத முயன்றிருக்கிறார்கள்.

இவ்வகை எழுத்து சிறுகதையில் விரைவிலேயே அதன் எல்லைகளைக் கண்டடைந்தது எனலாம். செவ்வியல் மற்றும் நாட்டாரியல் கூறுகளை படைப்புகளுக்குள் கொண்டுவருதல் படைப்புகளை வரலாற்றுவிரிவின் முன் நிறுத்துதல் , விவாதித்தல் போன்றவற்றுக்கு நாவலே உரிய வடிவம் என்று உணர்ந்து ஏறத்தாழ மேலே குறிப்பிட்ட ஐவருமே நாவலுக்குத் திரும்பினார்கள். சிறுகதையில் தொண்ணூறுகளில் இருந்த வேகம் சட்டென்று மிகக் குறைந்தது. இதற்கு அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளும்கூட நாவலையே தெரிவுசெய்தனர். சமகாலத் தமிழிலக்கியத்தில் நாவலிலேயே முக்கிய படைப்புகள் வருகின்றன.

இந்தச் சூழலில்தான் இன்றைய சிறுகதையின் சிக்கல்களை நாம் கணக்கில்கொள்ள வேண்டும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் காண முடிகிறது. எண்பதுகளில் தமிழவன், அ.மார்க்ஸ் போன்ற விமரிசகர்கள் ஈழ தலித் எழுத்தாளரான கெ.டானியல் மற்றும் மராட்டிய, கன்னட தலித் எழுத்துக்களை முன்னுதாரணமாக காட்டி ,தமிழில் தலித் இலக்கியம் உருவாகவேண்டிய தேவையைப்பற்றிப் பேசினார்கள். தமிழ் தலித் இலக்கியம் பின்நவீனக்குணங்கள் கொண்டதாக இருக்கவேண்டுமென்றும் வாதிட்டார்கள்.

தொண்ணூறுகளில் தமிழில் தலித் இலக்கியம் உருவாகியதற்கு இம்முன்னோடி விமரிசகர்கள் காரணம். ஆனால் அவர்கள்’வழிகாட்டிய’ பாணியில் அது உருவாகி வளரவில்லை. மாறாக அது இங்கே ஏற்கனவே இருந்த முற்போக்கு இலக்கியத்தின் உணர்ச்சிகரத்தையும் நவீனத்துவப் படைப்புகளின் வடிவச்செறிவையும் உள்வாங்கிக் கொண்டு உருவாகியது. அதன் வடிவம் நேர்த்தியான யதார்த்தவாதமாகவும் இயல்புவாதமாகவும்தான் இருந்தது. யதார்த்தவாதம் இறந்துவிட்டது என்ற விமரிசகர்களின் குரல்களை அவர்கள் பொருபடுத்தவீல்லை. தங்கள் வாழ்க்கையின் கரிய யதார்த்தத்தைச் சொல்ல அவர்களுக்கு யதார்த்தவாதமும் இயல்புவாதமும்தான் பொருத்தமாகப்பட்டன.

தலித் இலக்கியம் வழியாக யதார்த்தவாதம் புத்துயிர் கோண்டபோது இன்னொரு விளைவும் உருவானது. தலித் வாழ்க்கைக்கு சற்று மேல்தளத்தில் உள்ள பலவகையான மிகவும் பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் எழுதவந்தார்கள். அவர்களில் பலர் அச்சமூகத்தில் எழுதவந்த முதல் தலைமுறையினர். அவர்களுக்கும் யதார்த்தவாதமே இயல்பான தேர்வாக அமைந்தது. அவர்கள் வழியாக இதுநாள் வரை குரலற்றுக் கிடந்த பல தமிழ்ச்சாதிகள் பேசத்தொடங்கியுள்ளன. இன்று தமிழில் நிகழும் முக்கியமான இலக்கிய அலை என்பது இதுவே.

இதற்குச் சமானமாகவே அமெரிக்க-ஐரோப்பிய இலக்கியத்திலும் பொதுவாக மிகைக்கற்பனைமீதான ஆர்வம் மட்டுபட்டு யதார்த்தவாதம் மேலெழுந்திருப்பதைக் காணமுடிகிறது. மேலே குறிப்பிட்ட காலகட்டங்களில் இரண்டாவதைச் சேர்ந்தவர்கள் என வகைப்படுத்தத் தக்க எடித் வார்ட்டன்,ரேமண்ட் கார்வர் போன்றவர்கள் மேல் மீண்டும் கவனம் விழுவதைக் காணலாம். இதற்குக் காரணங்கள் பல இருந்தாலும் இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, மேலைநாடுகள் இன்று அரேபிய ஆப்ரிக்க ஆசிய யதார்த்தங்களை புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.அதற்கான அழகியல் தேவைப்படுகிறது. அது நேரடியான கூறுமுறையாகிய யதார்த்தவாதமாகவே அதிகமும் இருக்கிறது. இரண்டு, கேளிக்கை ஊடகமானது வரைகலை மூலம் மிகைக்கற்பனையை உற்பத்திசெய்து தள்ளிக் கொண்டிருக்கும் இன்று சீரிய இலக்கியம் யதார்த்தத்தின் உள்ளார்ந்த ஆழங்களை நோக்கிச் செல்லவேண்டியுள்ளது.

இரண்டு

தமிழில் தலித்தியத்தையும் பின்நவீனத்துவத்தையும் ஒருசேர முன்வைத்த கோட்பாட்டாளர்களில் முக்கியமானவர் பேரா.ராஜ்கௌதமன். ஆனால் பலவருடங்கள் கழித்து அவர் நாவல்கள் எழுதியபோது யதார்த்தவாத அழகியல் கொண்ட சுயசரிதைப் பாணியிலான நாவல்களையே எழுதினார். ‘சிலுவைராஜ் சரித்திரம்’ ‘காலச்சுமை’ என்ற இருநாவல்களும் நேரடியானவை. மெல்லிய அங்கதம் இடையோட பேச்சுத்தமிழில் சுயவிமரிசனப் பாங்குடன் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையின் அவலங்களையும் மீட்புக்கான முயற்சிகளையும் முன்வைப்பவை.

ராஜ்கௌதமனை யதார்த்தவாதம் நோக்கி கொண்டுசென்றதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று ஏற்கனவே தலித் இலக்கியம் யதார்த்தவாதம் சார்ந்து வலுவாக நிறுவப்பட்டிருந்தமையாகும். தமிழ் தலித் இலக்கியத்தில் ஐந்து படைப்பாளிகளை முக்கியமான முன்னோடிகளாகச் சொல்லலாம். இமையம், சொ.தருமன், அழகியபெரியவன், சிவகாமி,பாமா. இவர்களில் இமையம்,பாமா ஆகிய இருவரும் மொழியாக்கங்கள் மூலம் தமிழிலக்கியத்தின் முகங்களாக மேலைநாடுகளிலும் அறியப்படுகிறார்கள்.

தமிழ் தலித் இலக்கியத்தின் அழகியலை நிறுவிய முதன்மையான படைப்பாளி என்று இமையத்தைச் சொல்லலாம். அவரது சாதனைகள் நாவலிலேயே. அவரது முதல்நாவல் ‘கோவேறு கழுதைகள்’ வெளிவந்தபோதுதான் தமிழ் தலித் இலக்கியம் ஓர் அலையாக மாறியது. ‘ஆறுமுகம்’ ‘செடல்’ போன்ற நாவல்களையும் அவர் எழுதியிருக்கிறார். மிகுந்த மொழிக்கட்டுப்பாட்டுடன் துல்லியமான யதார்த்தச் சித்தரிப்புடன் உணர்ச்சிகரமாக கதாபாத்திரங்களைக் காட்டுபவை இமையத்தின் நாவல்கள். அவரது சிறுகதைகள் ‘உண்மையான வாழ்க்கையின் ஒரு கீற்று’ என்று தோற்றம் அளிப்பவை.

சொ.தருமன் தலித் வாழ்க்கையில் உள்ள நாட்டாரியல் அம்சத்தையும் அதன் கொண்டாட்ட மனநிலைகளையும் எழுதிய குறிப்பிடத்தக்க படைப்பாளி. ‘தூர்வை’, ‘கூகை’ ஆகியவை முக்கியமான நாவல்கள். சோ.தர்மனின் சிறுகதைகளில் கிராமிய வாழ்க்கை இயற்கையுடனான நுண்ணிய உறவு ஆகியவை உள்ளன. அவ்வகையில் அவை கி.ராஜநாராயணனின் உலகின் நீட்சியாக அமைகின்றன

சிவகாமி ‘பழையன கழிதலும்’ என்ற நாவல் மூலம் கவனத்துக்கு வந்தவர். ‘ஆனந்தாயி ‘ இவரது முக்கியமான படைப்பு. மனத்தடைகளும் செயற்கையான பாவனைகளும் இல்லாத எழுத்து இவருடையது. பாமா தலித் மக்களின் சமூகவியல் பிரச்சினைகளை விரிவாக ஆராயும் ‘கருக்கு’ ‘சங்கதி’ ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். இந்நான்குபேருமே சாதனைகளை நாவலில்தான் நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாவல்களின் அத்தியாயங்கள் போல அமையும் கதைகளையே அதிகமும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழ் தலித் எழுத்தாளர்களில் மிகச்சிறந்த சிறுகதையாசிரியர் என அழகியபெரியவனையே சொல்ல வேண்டும். தகப்பன்கொடி என்ற நாவலையும் எழுதியிருக்கிறார். சிறுகதைகளில் அடித்தள மக்களின் வாழ்க்கையின் தீவிரமான தருணங்களை பிசிறற்ற மொழியில் சொல்லிச்செல்பவர் அழகிய பெரியவன். பல கதைகளில் நுண்ணிய கவித்துவம் நிகழ்ந்திருக்கக் காணலாம். கவிஞராகவும் முக்கியமானவர்.’தீட்டு’ முக்கியமான சிறுகதைத் தொகுதி.

முற்போக்கு முகாமைச் சேர்ந்த படைப்பாளிகளில் அடித்தள மக்களின் வாழ்க்கையை வலுவாகச் சித்தரித்த படைப்பாளி என பவா.செல்லத்துரையைச் சொல்லலாம். சற்று கற்பனாவாதம் கலந்த எழுத்துமுறை இவருடையது. நெகிழ்ச்சியான மனஓட்டங்களைச் சொல்ல அது அவருக்குத்தேவைப்படுகிறது. ‘சத்ரு’ அவரது சிறுகதைத் தொகுதி. ஆதவன் தீட்சண்யா தலித் வாழ்க்கையை எழுதும் முற்போக்கு முகாமைச் சேர்ந்த படைப்பாளி.

உப்புவயல், சந்தி போன்ற நாவல்களை எழுதியிருக்கும் ஸ்ரீதர கணேசன் கடலோரத்து கிராமங்களின் தலித் வாழ்க்கையை விரிவாகவே சித்தரித்துள்ளார்.பாப்லோ அறிவுக்குயில்,அமிர்தம் சூரியா போன்றவர்கள் யதார்த்த நோக்கில் தலித் வாழ்க்கையின் சித்திரங்களை அளிக்கும் படைப்பாளிகள்.

இளம்தலைமுறையின் யதார்த்தவாத எழுத்தின் தலையாய படைப்பாளிகள் என நான் எண்ணுபவர்கள் சு.வேணுகோபால், யூமா வாசுகி, எம்.கோபாலகிருஷ்ணன்,கண்மணி குணசேகரன், உமா மகேஸ்வரி ஆகிய ஐவரையே.

இவர்களில் யூமா வாசுகி ரத்த உறவு என்ற முதல் நாவல் மூலம் பரவலான கவனத்தைக் கவர்ந்தவர். அடிப்படையில் கவிஞர் ஆதலால் மொழியை உணர்ச்சிகரமாகவும் மன எழுச்சியுடனும் கையாள்கிறார். அதிகமும் கைவிடப்பட்ட மனிதர்களின் தனிமையையும் பிரியத்துக்கான ஏக்கத்தியும் சொல்பவை இவரது கதைகள். ‘உயிர்த்திருத்தல்’ என்ற சிறுகதைத்தொகுதி குறிப்பிடத்தக்கது. எம்.கோபாலகிருஷ்ணன் அடிப்படையில் நாவலாசிரியர். இவரது ‘மணற்கடிகை’ திருப்பூர் நகரத்து தொழில்மயமாதல் மனிதஉறவுகளில் உருவாக்கும் சீர்கேடுகளை விரிவாகச் சித்தரிக்கும் முக்கியமான நாவலாகும். ‘பிறிதொரு நதிக்கரை’ இவரது சிறுகதைத் தொகுதி.

‘அஞ்சலை’என்ற முக்கியமான நாவலின்மூலம் தமிழில் பரவலாக வாசகர்களைக் கவர்ந்த கண்மணி குணசேகரன் அடித்தள மக்களின் வாழ்க்கையில் உள்ள ஓயாத சமரை தீவிரத்துடன் சித்தரிக்கும் முக்கியமான படைப்பாளி. ‘கோரை’ என்ற நாவலையும் எழுதியிருக்கிறார். ‘ஆதண்டார் கோயில் குதிரை’ ‘உயிர்த்தண்ணீர்’ கண்மணி குணசேகரனின் குறிப்பிடத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுதிகள்.

இம்மூவருமே அவர்களின் சாதனைகளை நாவல்களில்தான் நடத்தியிருக்கிறார்கள். இவர்களில் சு.வேணுகோபால், உமாமாகேஸ்வரி ஆகியோரே சிறுகதைகளில் அழுத்தமான பல படைப்புகளை உருவாக்கியுள்ளார்கள்.. இளைய தலைமுறைப்படைப்பாளிகளில் சிறுகதையில் சாதனைசெய்தவர் சு.வேணுகோபால்தான். ‘கூந்தப்பனை’ ‘களவுபோகும்புரவிகள்’ ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’ ‘வெண்ணிலை’ ஆகிய தொகுதிகளில் சு.வேணுகோபாலின் தலைசிறந்த பல கதைகள் உள்ளன. ‘நுண்வெளிக்கிரணங்கள்’ என்ற நாவலையும் எழுதியிருக்கிறார். உமாமகேஸ்வரி ‘யாரும் யாருடனும் இல்லை’ என்ற நாவலை எழுதியிருந்தாலும் அவரது சிறந்த ஆக்கங்கள் ‘தொலைகடல்’ ‘மரப்பாச்சி’ போன்ற சிறுகதைத் தொகுதிகளிலேயே உள்ளன.

தமிழில் எழுதப்படாத பகுதி மக்களின் வாழ்க்கைகள் எழுதப்பட ஆரம்பித்தபோது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் கவனத்துக்கு வந்தது– பல நிலப்பகுதிகளும் முதன்முறையாக எழுதப்பட ஆரம்பித்தன. தஞ்சை,நெல்லை,குமரி மாவட்டங்களைச் சேர்ந்த வளம் மிக்க பகுதிகளே அதிகமும் இலக்கியத்தில் கவனத்துக்கு உள்ளாகியிருந்தன. சாத்தூர், ராமநாதபுரம் ,கடலூர், விருத்தாசலம் போன்ற வரண்ட நிலப்பகுதிகளோ தேனி,கம்பம் போன்ற மலைப்பகுதிகளோ அதிகம் எழுதப்படவில்லை. கொங்குமண்டலம்கூட அதிகம் எழுதப்படாததே. இப்பகுதிகள் எழுத்துக்குள் வந்தபோது முற்றிலும் புதிய படிமங்கள் இலக்கியத்தில் உருவாயின

வடதமிழகத்தை சித்தரிக்கும் இளம்படைப்பாளிகள் பலர் இன்று தீவிரமாக எழுத தொடங்கியுள்ளனர். இவர்களில் காலபைரவன் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவரது ‘புலிப்பாணி ஜோதிடர்’ கவனத்தைக் கவர்ந்த சிறுகதைத் தொகுதி. ஜி.முருகன் ‘சாயும்காலம்’ ‘கறுப்பு நாய்க்குட்டி ‘ ‘சாம்பல் நிற தேவதை’ போன்ற சிறுகதைத்தொகுதிகள் மூலம் கவனம்பெற்றவர். முகையூர் அசதா ‘வார்த்தைப்பாடு’ என்ற சிறுகதைத் தொகுதி மூலம் கவனத்துக்குரியவரானார்

கொங்குமண்டலத்தைச் சார்ந்து எழுதும் என்.ஸ்ரீராம் ‘உருவாரம்’ என்னும் சிறுகதைத் தொகுதி மூலம் வாசகர்களிடையே பேசப்பட்டார். க.சீ.சிவக்குமார் ‘கன்னிவாடி’ ‘என்றும் நன்மைகள்’ போன்ற தொகுதிகள் மூலம் கொங்குவட்டார வாழ்க்கையை நகைச்சுவையுடன் சித்தரிக்கும் படைப்பாளி என்று அறியப்பட்டவர். பாஸ்கர் சக்தி ‘பழுப்புநிற புகைப்படம்’ என்ற சிறுகதைத்தொகுதியில் தேனி பகுதி கிராமத்துச் சித்திரங்களை அங்கதம் கலந்த நடையில் அளித்திருக்கிறார். ‘புகழ்’ கொங்குப்பகுதி பிற்பட்டமக்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறார்.

தேனியைச் சேர்ந்த எஸ்.செந்தில்குமார் ‘வெயில் உலர்த்திய வீடு ‘ என்ற சிறுகதைத் தொகுதியால் அறியப்பட்டார். சாத்தூர்காரரான லட்சுமணப்பெருமாள் ‘பாலகாண்டம்’என்ற சிறுகதைத் தொகுதியின் மூலம் பரவலான கவனத்தைக் கவர்ந்தார். கி.ராஜநாராயணனை நினைவூட்டும் நேரடியான கதைசொல்லி இவர்.

அடித்தள மக்களின் வாழ்க்கையின் உறவுச்சிக்கல்களை மிகைப்புனைவின் வழியாக எழுதியவர் ஜெ.பி.சாணக்யா. கோணங்கியின் கதைசொல்லும் முறையை அடியொற்றி பல கதைகளை உருவாக்கியிருக்கிறார். பாலுறவுச் சித்தரிப்புகள் கொண்ட இவரது கதைகள் பரவலாக கவனத்துக்கு உள்ளானவை. ‘என் வீட்டின் வரைபடம்’ ‘கனவுப்புத்தகம்’ ஆகியவை இவரது சிறுகதைத்தொகுதிகள்.

தொகுதியாக கதைகள் ஏதும் வரவில்லை என்றாலும் சிற்றிதழ்களில் இப்போது எழுதிவரும் ‘திருச்செந்தாழை’ மிகவும் கவனத்துக்குரிய படைப்பாளி. செறிவான நடையும் கூர்ந்த அவதானிப்புகளும் கொண்ட இவரது ஆக்கங்கள் தமிழின் சிறந்த படைப்பாளி ஒருவரின் வருகையை அடையாளம் காட்டுகின்றன.

இளைய தலைமுறை படைப்பாளிகளில் சென்ற சிலவருடங்களில் அதிகம் கவனிக்கப்பட்டவர் ஜோ டி குரூஸ் . இவர் ‘ஆழிசூழ் உலகு’ என்ற ஒரேஒரு நாவலை மட்டுமே எழுதியிருக்கிறார். தமிழின் நீண்டகால மரபில் நெய்தல் திணை என்றபேரில் கடல்சார் வாழ்க்கை சொல்லப்பட்டிருப்பினும் மீனவர்களின் வாழ்க்கையை அவர்களே எழுதுவது நிகழவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அது நிகழ்ந்தது ஆழிசூழ் உலகு மூலமே. அவ்வகையில் அது தமிழிலக்கிய மரபில் ஒரு பெரும் திருப்பம் எனலாம். மிகவிரிவான திரையில் கடல்புறத்து வாழ்க்கையில் மரணமும் காமகுரோதங்களும் போடும் ஆட்டத்தைச் சித்தரித்த அந்நாவல் ஒரு நவீனத்தமிழிலக்கிய சாதனையாகும். கவிஞராக அறியப்படும் ஜெ.·ப்ரான்ஸிஸ் கிருபா எழுதிய ‘கன்னி ‘ உணர்ச்சிகரமான கற்பனாவாதச் சாயலுடன் தீவிரமான மொழிநடையில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க படைப்பு.

இத்தலைமுறையில் புலம்பெயர்ந்த படைப்பாளிகளில் இருந்து உருவாகி வந்த ஷோபாசக்தி நவீனத்தமிழிலக்கியத்தில் மிகுந்த பாதிப்பை உருவாக்கிய படைப்பாளி. கரிய அங்கதம் நிறைந்த இவரது ‘கொரில்லா’ ‘ம்’ போன்ற நாவல்கள் தமிழ்நாட்டில் அதிகமாகப்பேசப்பட்டவை. ‘ ‘தேசத்துரோகி’ என்ற சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது. சிறுகதையில் அவரது மொழிநடையும் கூறுமுறையும் இயல்பான வடிவ ஒருமையை அடையாமலேயே உள்ளன. இதழியலாளரான மனோஜ் வடிவச்சோதனைகள் கொண்ட கதைகள் சிலவற்றை ‘புனைவின் நிழல் ‘ என்ற தொகுதியில் எழுதியிருக்கிறார்.

கீரனூர் ஜாகீர் ராஜா இஸ்லாமிய சமூகத்துக்குள் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஒலிக்கும் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவரது சிறுகதைகள் இப்போதைக்கு குறிப்பிடும்படி இல்லை என்றாலும் ‘மீன்காரத்தெரு’ என்ற சமீபத்திய நாவல் மிகமுக்கியமான படைப்பு.

மூன்று

சமீபத்திய சிறுகதைத் தொகுதிகளில் மிக முக்கியமானதாக என் வாசிப்புக்குப் பட்டது சு.வேணுகோபாலின் ‘வெண்ணிலை’. இதழ்கள் எதிலுமே பிரசுரமாகாத முற்றிலும் புதிய கதைகளின் தொகுப்பு இது. வாழ்க்கையின் நுண்ணிய,விசித்திரமான தருணங்களை யதார்த்தத்தின் துல்லியத்துடனும் கவித்துவத்துடனும் சொல்லும் இக்கதைகளில் சில தமிழில் எழுதப்பட்ட அபூர்வமான ஆக்கங்கள் என தயக்கமில்லாமல் சொல்லலாம். இதில் இருவகைக் கதைகளைக் காணலாம். பொதுவாக இன்றைய உலகமயமாக்கலில் புறக்கணிக்கப்பட்டு அழிந்துகொண்டிருக்கும் விவசாயியின் அவலமே சு.வேணுகோபாலின் களம். புற்று, தீராக்குறை போன்ற பல கதைகளில் அந்த சரிவை உக்கிரமாக சித்தரித்திருக்கிறார். மனதின் இருண்ட பள்ளங்களை நோக்கிச் செல்லும் ஒரு கூர்ந்த அவதானிப்பு எப்போதுமே அவரிடம் உண்டு. ‘புத்துயிர்ப்பு’போன்றகதைகளில் அந்த யதார்த்த தளத்தில் நின்றுகொண்டே அபூர்வமான கவித்துவத்தை அவர் சென்றடைவதைக் காணலாம். தமிழின் சிறந்த கதைகளில் ஒன்று அது

ஆனால் சிறுகதைவடிவத்தைப் பொறுத்தவரை இவை முற்றிலும் சம்பிரதாயமானவை. இதற்கு மாறாக சிறுகதை வடிவத்தில் சோதனைகளை நிகழ்த்தும் ஜி.முருகன் ஜெ.பி.சாணக்யா,எஸ்.செந்தில்குமார் ஆகியோரின் படைப்புகள் வாழ்க்கையின் உண்மையான தளங்களைத் தொடாமல் மொழிச்சோதனைகளாகவும் வடிவச்சோதனைகளாகவும் நின்று விடுகின்றன. இதுவே இன்றைய சிறுகதையில் தென்படும் முக்கியமான சிறப்பியல்பு எனலாம். வாழ்க்கையின் வெம்மை உள்ள கதைகள் நேரடியாகவும் சம்பிரதாயமாகவும் உள்ளன. வடிவச்சோதனைகள் செய்யும் கதைகள் வாழ்க்கையின் ஆழம் வெளிப்படாத வெற்றுப்பயிற்சிகளாக உள்ளன. இவ்விரு போக்குகளும் முரண்பட்டு உருவாக்கும் நகர்வே தமிழ்ச் சிறுகதையின் இன்றைய இயங்கியலாகும்.

முதல்ஓட்டத்தைச் சேர்ந்த தொகுப்பு என காலபைரவைனின் ‘புலிப்பாணி ஜோசியர்’ ஐச் சொல்லலாம். சமீபத்தில் தமிழில் வெளிவந்த முக்கியமான சிறுகதைத் தொகுதி இது. தன் தொகுதியில் உள்ள கதைகளில் நம் முன் நிகழும் யதார்த்தத்தையே காலபைரவன் சித்தரிக்கிறார். அதனுள் உள்ள மர்மங்களும் புனைவுகளும் மனித இருப்பின் சில தருணங்களாகவே வெளிப்படுகின்றன. புலிப்பாணி ஜோதிடர் இவ்வகைக்கு உதாரணமான கதை. கதைகளில் இன்னும் உறுதிகொள்ளாத குரலும் தடுமாறும் வடிவமும் இருந்தாலும் ஆழமான ஒரு பதற்றம் குடிகொள்ளும் படைப்புகளாக அவை உள்ளன.

சமீபத்தில் குற்றாலம் இலக்கியச் சந்திப்பில் நான் காலபைரவனிடம் உரையாடியபோது இன்றைய சிறுகதை குறித்து உலகமெங்கும் இளம் படைப்பாளிகள் கூறும் கருத்துக்களையே அவரும் முன்வைத்தார்

அவை, 1.மிகைக் கற்பனையும் புனைவு விளையாட்டும் கொண்ட படைப்புகள் தங்கள் உள்ளார்ந்த அரசியலை தீவிரமாக முன்வைப்பதில்லை. ஆதாரமான அரசியல்தரிசனத்தின் பலத்தில் நிலைகொள்ளும் படைப்புகள் இன்று தேவைப்படுகின்றன, அதற்கு யதார்த்தவாதமே ஏற்றது. 2. மிகைக் கற்பனைப் படைப்புகளின் நடையானது புகைமூட்டம் கொண்டதாக இருப்பதால் அவற்றின் தொடர்புறுத்தும் திறன் குறைகிறது. இது இலக்கியத்தின் நோக்கத்தைச் சிதைக்கிறது 3. உண்மை பலமுகம் கொண்டது பல அடுக்குகள் கொண்டது என்ற பின்நவீனத்துவ நோக்கு மரபார்ந்த கருதுகோள்களை மறுபரிசீலனை செய்வதற்கு மட்டுமே ஏற்றது. சமகால யதார்த்தங்களை அதை அடிப்படையாகக் கொண்டு சித்தரித்தால் அடிப்படை அறம் என்பதே மறுக்கப்படும். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் இன்றியமையாத எதிர்ப்பை உருவாக்குவதற்கு அதற்குரிய அற அடிப்படைகள் தேவையாகின்றன. ஆகவே யதார்த்தவாதமே தன் எழுதுமுறை என்று சொன்ன காலபைரவன் தன்னுடைய நோக்கம் யதார்த்தவாததின் எல்லைக்குள் வேறுபட்ட கோணங்களை உருவாக்கிக் கொள்வதுமட்டுமே என்றார்.

சோதனை முயற்சிகளில் இருவகை. ஒன்று, மொழியை திருகியும் பலபடியாக வளைத்தும் எழுதப்படும் சோதனை முயற்சிகள் . இவை பெரும்பாலும் கோணங்கியை முன்னுதாரணமாகக் கொண்டு செய்யப்பட்டன. ஜெ.பி.சாணக்யாவின் கதைகள் இவ்வகையானவை.இவற்றில் மனம் இயங்கும் சொல்லோட்டத்தை ‘அப்படியே’ பின்பற்ற முயன்றிருக்கிறார். புனைவு ஒருபோதும் மனதின் பாய்ச்சலை தொடமுடியாது. புனைவுமூலம் மன ஓட்டத்தை காட்டுவதென்பது உண்மையில் ஆசிரியர் காட்டும் ஒரு பாவனை மட்டுமே. அதில் மன இயக்கத்தின் உச்சநிலைகளையும் நுட்பங்களையும் ஆசிரியர் முன்வைக்கும்போதே படைப்புக்கு ஆழமும் அழகும் கைகூடுகிறது. அவ்வாறில்லாமல் சாதாரணமாக முன்வைக்கப்படும் ஜெ.பி.சாணக்யாவின் வருணனைகள் வலிந்து முன்வைக்கும் சொற்குவியல்களாக நின்றுவிடுகின்றன. உதாரணம் ‘பதியம்’ என்ற கதை. அதில் ‘என்று தோன்றியது பச்சையம்மாளுக்கு’ என சாதாரணமான மனச்சலனங்கள் வந்தபடியே இருக்கின்றன. மொழியை கட்டுப்படுத்தவேண்டும் என்ற நவீனத்துவத்தின் வரையறையைறைன்றைய புனைவு மீறியது அதன் மூலம்தான் தீவிரத்தை அடையமுடியும் என்பதனாலேயே. தீவிரமில்லாத சாதாரண மனநிலையில் எழுதப்படும்போது கட்டற்ற மொழி என்பது ஒரு சுமையாக ஆகிவிருகிறது

வடிவத்தில் சோதனைகளைச் செய்யும் கதைகள் இரண்டாம் வகையானவை. ஜீ.முருகனின் கதைதாகுதிகள் இரண்டாம் ஓட்டத்தைச் சேர்ந்தவை. புதிய வடிவங்களுக்காக முயற்சிசெய்பவை அவை எனச் சொல்லலாம். அவ்வாறு முயற்சி செய்யாத கதைகள் எளிய சித்தரிப்புகளாக நின்று விட்டிருக்கின்றன. ஜி.முருகனின் முக்கியமான பலம் அவருக்கு மொழியாளுமையில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது. அவரது கதைகள் ஒரு யதார்த்த தளத்திலிருந்து எழுந்து சித்தரிப்பின் ஒரு அம்சத்துக்கு மட்டும் மேலதிகமான குறியீட்டு அழுத்தத்தை அளித்து ஒரு படிமத்தை உருவாக்க முயல்கின்றன. ‘கறுப்ப்புநாய்க்குட்டி’ ‘அதிர்ஷ்டமற்ற பயணி’ போன்ற கதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஜீ.முருகன் வழக்கமான கதைவடிவத்தை அடைவதற்கு முன்னாலேயே கதையை நிறுத்திவிடுதல், கதைக்குள் பிரக்ஞைபூர்வமாக தலையிட்டு பேசுதல் போன்றவற்றையே உத்திகளாக செய்திருக்கிறார். இம்முயற்சியில் அவை வெற்றிபெறும்போதுகூட அப்படிமம் மூலம் வாசகன் சென்றடையும் வாழ்க்கையின் ஆழம் ஏதுமில்லை. அது வெறுமொரு உத்தியாகவே நிற்கிறது.

ஜெ.பி.சாணக்யா ,ஜி.முருகன், கதைகளில் உள்ள சாரமான வாழ்க்கையம்சம் என்பது பாலியல் உளத்திரிபே. ஜீ முருகனின் ‘பூனைக்குட்டி ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும்?’ அவ்வகையில் அவரது வெற்றிபெற்ற ஒரு படைப்பு. கதையின் மையப்படிமத்தை பாலியல்சார்ந்ததாக ஆக்கும் உத்தி இது. இதேபோல பாலியல் திரிபை நோக்கித் திறக்கும் சோதனை முயற்சிகளையே ஜெ.பி.சாணக்யாவும் எழுதுகிறார். அவரது முயற்சியும் படிமங்கள்தான்.ஆனால் ஒரு மையப்படிமத்தைச் சுற்றி வரிதோறும் படிமங்களை உருவாக்க முயல்கிறார். அதன்பொருட்டு மொழியை திருகியும் அலையவிட்டும் கட்டற்று விரியவிட்டும் கதைகளை உருவாக்குகிறார். அவரது திறனற்ற மொழிநடை மொழியின் மர்மங்களை உருவாக்கி படைப்புக்கு கவற்சியை உருவாக்குவதற்குப் பதிலாக அயர்வையே அளிக்கிறது. ‘அமராவதியின் பூனை’ போன்ற கவனிக்கப்பட்ட கதைகள் நேரடியாக பாலியல்சிக்கல்களுக்குள் செல்கின்றன.

இவ்விரு கதைகளையும் ஒப்பிட்டால் ஜீ.முருகனின் கதை எளிய ஒரு பாலியல்நெருகக்டி சார்ந்த ஓர் உளத்தருணத்துக்கு அப்பால் செல்வதில்லை என்பதைக் காணலாம். ஜெ.பி.சாணக்யாவின் கதையோ உடல்சார்ந்த ஒரு தருணத்துடனேயே நின்றுவிடுகிறது. அதற்குமேல் மொழியின் புழுதி மூடியிருக்கிறது. இதே கதைக்கருக்களை எளிய யதார்த்தவாதம் மூலம் ராஜேந்திர சோழன் போன்றவர்கள் பலமடங்கு உக்கிரமாக எழுதிவிட்டார்கள் என்பதை அறிந்த நவீனத்தமிழ் வாசகன் இக்கதைகளில் அதிக ஆர்வம் கொள்ளமுடியாது. இவ்வகையில் இன்றும் என் வாசிப்பில் சிறந்த கதையாக எழுவது ஜெயகாந்தனின் ‘எங்கோ யாரோ யாருக்காகவோ’தான்.

பாலியல் திரிபு என்பது ஒருவகைக் கொண்டாட்டமும் அதன் மறுபக்கமான கொடுந்துயரும் கலந்த ஒன்று. ஜி.நாகராஜன்,ராஜேந்திர சோழன் போன்று வாழ்வின் தளத்திலிருந்து பாலியல்திரிபை எழுதியவர்களின் படைப்பில் இவ்விரு தளங்களும் முயங்கியிருப்பதைக் காணலாம். ஆனால் இவ்விளம் எழுத்தாளர்களின் பாலியல்திரிபுச் சித்தரிப்புகள் ஆழ்ந்த துயரில்லாமல் அழுத்தமில்லாமல் உள்ளன. காரணம் இவை மேலோட்டமான பகற்கனவின் பரப்பிலிருந்து உதிப்பவை என்பதே.

நேர் மாறாக நம் இளம் யதார்த்தவாதப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் வாழ்க்கையின் ஊன்றிநின்ற காலைப்பொசுக்கும் அன்றாட அவலத்தின் காட்சிகளாக உள்ளன. ஆனால் சம்பிரதாயமான சித்தரிப்பு காரணமாக அவை எப்போதும் பொதுவான உண்மைகளையே சென்று தொடுகின்றன. சாதாரணமான நோக்குக்கு அப்பாலுள்ளவற்றைச் சொல்லாமல் நின்றுவிடுகின்றன. சு.வேணுகோபாலின் கூந்தப்பனை, புத்துயிர்ப்பு போன்ற சிலகதைகள் மட்டுமே விதிவிலக்காக உள்ளன. அக்கதைகள் கூட அவற்றின் மரபான வடிவம் காரணமாக உட்செறிவை போதுமான அளவுக்கு அடையாமலேயே உள்ளன.

இன்றைய சிறுகதையின் முன் உள்ள சவாலே இதுதான் என்று படுகிறது. உண்மையின் பலவேறுபட்ட ஆழங்களைச் சொல்லும் கவித்துவம் கொண்ட வடிவையும் பலக்குரல்தன்மையையும் இன்றுள்ள தேவைக்கு ஏற்ப அடைவது எப்படி என்பது. அதற்கான முயற்சிகளாக எதிர்கால கதைகள் இருக்கலாம்.

==============================================================

கலைச்சொற்கள்

—————-

நவீனத்துவம் [Modernism]. அறிவியல் தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய காலகட்டம்

பின்நவீனத்துவம் [Post modernism ]நவீனத்துவத்தை மறுத்து தர்க்கத்தைமீறிய அறிதலை முன்வைக்கும் இலக்கிய காலகட்டம்

இருத்தலியம்[ Existentialism ]தனிமனிதனின் இருத்தலை ஆராயும் தத்துவ சிந்தனை

செவ்வியல் [Classicism ]அடிப்படையான பேரிலக்கியங்களின் இயல்பு

நாட்டாரியல் [Folklore] தொகுக்கப்படாத நாட்டுப்புறப் பண்பாடு

அழகியல் [Aesthetics] அழகையும் ஒழுங்கையும் உருவாக்கும் விதிகளின் தொகை

மிகையதார்த்தம் [Fantasy]கற்பனை மூலம் புறவுலகின் தர்க்கத்தை மீறிச்செல்லும் எழுத்துமுறை

மாய யதார்த்தம் [Magical Realism] கற்பனையான நிகழ்வுகளை யதார்த்தம்போலவே சொல்லும் எழுத்துமுறை

புனைவு [Fiction ] கற்பனைக்கதை

யதார்த்தவாதம் [Realism] உள்ளது உள்ளபடி கூறுவதாக நம்பவைக்கும் இலக்கிய முறை

இயல்புவாதம் [Naturalism ] புறவுலகின் தகவல்கள் சார்ந்த விஷயங்களை மட்டுமே சொல்லும் எழுத்துமுறை

வரைகலை [Graphics] வடிவங்களை வரைந்து உருவாக்கும் காட்சிவெளி

[டைம்ஸ் ஆ·ப் இண்டியா இலக்கியச்சிறப்பிதழ் 2008 ஜனவரி யில் வெளிவந்த கட்டுரை]

http://www.jeyamohan.in/?p=169

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.