Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறியியல் படிப்பு: பொசுங்கிய கனவு

Featured Replies

பன்னிரெண்டாம் வகுப்புப் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த ஆண்டும் பெருமளவில் மாணவிகளே தேர்ச்சியுற்ற நிலையில், அடுத்த கட்டக் கல்வி குறித்து மாணவர்களும், பெற்றோர்களும் திட்டமிடத் தொடங்கிவிட்டனர். நாளேடுகளை அடைத்துக் கொண்டு வெளியாகும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி விளம்பரங்கள், அதற்கான தூண்டிலை வீசி நிற்கின்றன.

 

இதே நேரத்தில் இன்னொரு செய்தியும் ஊடகங்களில் வலம் வந்தது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பொறியியல் இடங்கள் நிரம்பாமல் இருப்பதைத் தவிர்ப்பதற்காக பல தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள், புதிய மாணவர்களை ஈர்த்து வருவதற்காக அங்கு ஏற்கெனவே பயிலும் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது குறித்த செய்தி அது! 

 

ஏற்கெனவே பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர், இன்னொரு புதிய மாணவரை அதே கல்லூரியில் சேர்த்துவிட்டால் ரூ 10,000 முதல் 15,000 வரை பரிசளிக்கப்படுவதாகவும், பேராசிரியர்களுக்கும் இது போல சலுகைகள் உண்டென்றும் சில தனியார் நிறுவனங்கள் அறிவித்துவிட்டன.

 

உண்மையில், அத்தொகையை வேறுபல காரணங்களைச் சொல்லி ‘சிறப்புக் கட்டணம்’ என்ற பெயரில், கல்லூரி நிர்வாகங்கள் ‘அறுவடை’ செய்துவிடும் என்பது ஒரு செய்தி. இன்னொரு செய்தி, கடந்த ஆண்டைப் போல இந்தாண்டும் பெருமளவிலான பொறியியல் கல்லூரியிடங்கள் நிரம்பாமல் போய்விடுவதைத் தடுக்கச் செய்வதற்கான தனியார் நிர்வாகங்களின் தந்திரம் இது! ஏனெனில், கடந்த 2012-13ஆம் ஆண்டு கல்வியாண்டில், தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் மொத்த இடமான 1.73 இலட்சத்தில், சற்றொப்ப 1.20 லட்சம் இடங்களே நிரம்பின. 50,000க்கும் அதிகமான இடங்கள் நிரம்பாமல் காலியாகவே இருந்தன. இந்தாண்டு இந்த எண்ணிக்கை மேலும் குறையும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கவே இந்த ‘சலுகை’ ஏற்பாடுகள்!

 பொறியியல் கல்வி என்பது அறிவு சார்ந்த படிப்பாக பார்க்கப்படாமல், வெறும் பணம் ஈட்டும் வழிமுறையாகவே பார்க்கப்படும் சமூகத்தில், இது வெறும் செய்தி மட்டும் அல்ல. ‘பொறியியல் கல்வி படித்தால் கைநிறைய சம்பாதிக்கலாம்’ என ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தினரின் பெருங்கனவிற்கு இச்செய்தி ஏற்புடையதும் அல்ல.

 ஏனெனில், தற்போதைய நிலவரப்படி, இந்திய அளவில், பொறியியல் படித்த சற்றொப்ப 1 கோடிக்கும் அதிகமானோர் இன்னும் சரியான வேலையின்றி இருக்கின்றனர். தமிழகத்தில், கடந்த 2012 சூன் நிலவரப்படி, இளநிலைப் பொறியியல் (பி.இ) படித்துவிட்டு, 2 லட்சத்துக்கு அதிகமானோரும், முதுநிலைப் பொறியியல் (எம்.இ) படித்துவிட்டு 1 லட்சத்துக்கு அதிகமானோரும் வேலை வேண்டி வேலைவாய்ப்புத் துறையிடம் பதிவு செய்துள்ளனர். உண்மையில், இது பல இலட்சங்களைத் தாண்டும்.

 வங்கிகளில் கடன் வாங்கியும், சொத்துக்களை அடகு வைத்துக் கட்டணம் செலுத்தியும் இங்கு சேர்ந்த பெற்றோரின் நிலை கேள்விக் குறி! பொறியியல் கல்வி குறித்து ஊதிப் பெருக்கிய ஊடகங்களோ, அடுத்து வேலைக்குச் சென்று விட்டன.

 இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஒரிசாவிற்கு அடுத்து, அதிகளவிலான பொறியியல் கல்லூரிகளைக் கொண்டு, அதிகளவிலான பொறியியலாளர்களை உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டிற்கு இது நிச்சயம் கவலைக்குரிய செய்தி!

 சற்றொப்ப 7 அரசுப் பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 18 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 525 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 553 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. இவை தவிர, 69 எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ. மட்டுமே பயிற்றுவிக்கும் உயர்கல்வி கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. மேலும், தமிழகத்தில் பெருகிய பொறியியல் கல்லூரிகளின் காரணமாக, ஜார்கண்ட் – பீகார் – ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்து மாணவர்கள் இங்கு குவிந்துள்ளனர். 

 

1980களில் இந்த நிலை கிடையாது. அப்போது, பொறியியல் கல்வி என்றாலே அது வசதிமிக்கவர்களின் படிப்பு என்ற நிலை இருந்தது. ஆனால், இப்பொழுது நிலை தலைகீழ்! வீதிக்கு வீதி பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்டன. கடந்த 2006-2007ஆம்  கல்வியாண்டில் சற்றொப்ப 1511 பொறியியல் கல்லூரிகளையும், 1132 மேலாண்மைக் கல்லூரிகளையும் கொண்டிருந்த ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பு, 2012-2013ஆம் கல்வியாண்டில் 3495 பொறியியல் கல்லூரிகளும், 2450 மேலாண்மை கல்லூரிகளும் இந்தியாவில் இயங்குகின்றன என்கிறது.

 இந்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் இயங்கும் இந்த ஏ.ஐ.சி.டி.இ. (AICTE) எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி வாரியம் தான், இந்தியத் துணைக் கண்டமெங்குமுள்ள தொழில்நுட்பக் கல்வி சார்ந்த நிறுவனங்களையும், கல்வியையும் ஒழுங்குபடுத்துதற்காக செயலாற்றுகிறது. மேலும் மேலும் அதிகாரக் குவிப்பை விரும்புகிற இந்திய அரசு,   இந்தியாவெங்கும் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைத் தொடங்க, இவ் அமைப்பிடம்தான் அனுமதி பெற வேண்டும் என்றது.

 மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில்தான் குறைந்த கூலியில் நிறைவான உழைப்பைத் தரும் உழைப்பாளிகள் இருக்கிறார்கள் என உணர்ந்து கொண்ட பல பன்னாட்டு  நிறுவனங்கள், 1990களில் செயலுக்கு வந்த புதியப் பொருளியல் கொள்கையுடன் இந்தியாவில் காலூன்றின. இந்நிறுவனங்களில் பணியாற்ற பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வியும், ஆங்கில மொழியும் அவசியமாக இருந்தது.

 வெவ்வேறு மொழிகளுடன் இயங்கும் பல்வேறு தேசிய இன மக்கள் வாழும் இந்தியத் துணைக் கண்டத்தில் இந்தி மேலாதிக்கம் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை, ஆங்கில மேலாதிக்கமாவது முதலில் இருக்கட்டும் என்ற வகையில், இந்திய அரசுக்கும் இது உவப்பாய் இருந்தது. தொழில்நுட்பக் கல்வியின் அதிகார மையமாக ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பு, செயலாற்றியது.

 தில்லியிலிருந்து வரும் இவ்வமைப்பின் அதிகாரிகள், ஒர் தொழில்நுட்பக் கல்லூரி இயங்குவதற்கான இடம், வசதிகள், தொழில்நுட்ப ஏற்பாடுகள் என அனைத்தையும் பார்வையிட்ட பிறகுதான் அக்கல்லூரிக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்பது விதிமுறை. ஆனால், உண்மையில் நடப்பதோ வேறு! பெருமளவிலான ஊழல்களும், கையூட்டுகளும் தான் அங்கு நடக்கின்றன. அதிகாரக் குவிந்துள்ள இடங்களில் தான் ஊழல்களும், விதிமுறை மீறல்களும் எளிதாக நடக்கின்றன என்பது புரியாத செய்தி ஒன்றுமல்ல. ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பின் செயலாளர் ஒருவரே நேரடியாக கையூட்டு பெறும் போது சிக்கிக் கொண்டார்.

 இன்னொரு புறத்தில், கலை – அறிவியல்  உள்ளிட்ட கல்விகளில் அதிகளவில் பணம் ஈட்ட முடியாதென முடிவுக்கு வந்த நடுத்தர வர்க்கம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி மீது அதிகளவில் மோகம் கொண்டது. இப்பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய சில ஆயிரம் பேர் மட்டுமே தேவை என்ற நிலையிலும் கூட, அதற்கு நேர் மாறாக பல இலட்சம் பொறியியலாளர்கள் இங்கு உருவாக்கப்பட்டனர். வட அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளைச் சேர்ந்தும் கூட உருவாக்க முடியாத வகையில், இந்தியாவில் சற்றொப்ப 1.5 மில்லியன் பொறியியலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கப்படுகின்றனர்.

 கல்வி வணிகமாக்கத்தின் ஒரு பகுதியாக, பொறியியல் கல்வி ‘பொன் முட்டையிடும் வாத்து’ போன்று ஒரு முக்கியத் தொழிலாக உருவானது. அரசியல்வாதிகள் ‘கல்வி வள்ளல்’கள் ஆனார்கள். தமக்கென சொந்தமாகக் கல்வி நிறுவனம் கொண்டிராத அரசியல்வாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவில், ஒவ்வொரு மாநிலத்திலும் இதே நிலை உருவானது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியத் துணைக் கண்டத்தின் இதர மாநிலங்களிலும் இதே நிலையே நீடிக்கிறது. இதன் விளைவாக, இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக ஒரிசாவை அடுத்து, தமிழ்நாடு நிற்கிறது.

 பொறியியல் கல்வியில் சேர கடும் போட்டி உருவானது. ஆனால், எந்த நிலையிலும் பொறியியல் கல்வியின் தரமோ – கல்லூரிகளின் தரமோ உயரவில்லை. மேற்கத்திய நாடுகளின் பொறியியல் கோட்பாடுகளும், வழிமுறைகளுமே இங்கு கல்வியாகக் கற்பிக்கப்பட்டன. பயிற்சிகள் தரப்பட்டன. இதன் காரணமாக இங்குள்ள பொறியியல் கல்லூரிகள் பொறியியலாளர்களை உற்பத்தி செய்யவில்லை. மாறாக, பொறியியல் அறிவு கொண்ட பணியாளர்களையே உற்பத்தி செய்கின்றன.

ஆஸ்பிரிங் மைன்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்வி மற்றும் மாணவர்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை நடத்தி வெளியிட்டு வருகின்றது. கடந்த 2013ஆம் ஆண்டு சூன் மாதம், இந்நிறுவனம் பொறியியல் கல்வி பயின்றோரின் நிலை குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில், இந்தியாவில் பொறியியல் கல்வி பயின்றவர்களில் 47 விழுக்காட்டினர் எந்தவித வேலைக்கும் தகுதியானவர்கள் அல்ல என்றது அவ் ஆய்வறிக்கை. 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், ஒட்டு மொத்த இந்தியப் பொறியியலாளர்களில் வெறும் 17.45 விழுக்காட்டினரே பொறியியல் வேலைகளுக்குத் தகுதியானவர்கள் எனத் தெரிவித்தது. (காண்கதி இந்து, எடுகேசன் பிளஸ், 12.03.2012).

 

கோடி, கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்படும் இப்பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் கல்விக் கூடங்களுக்கு தேவையான அடிப்படை வசதியோ, தேவையான ஆராய்ச்சிக் கூடங்களோ கிடையாது. குறைந்தபட்ச தகுதி கூட இல்லாத ஆசிரியர்களை தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் நியமித்து பாடம் கற்பித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பல கல்லூரிகளில் போதிய ஆசிரியர் இல்லாத நிலையும் உள்ளது. இதனால், தரமான கல்வியின்றியும் மாணவர்கள் திணறுகின்றனர்.

1000 பொறியியல் கல்லூரிகளோடு தமிழகத்தை இரண்டாமிடத்திற்கு தள்ளி நிற்கும் ஒரிசாவில், பொறியியலாளர்களின் நிலை மிகவும் மோசமானது. கடந்த 2012-2013ஆம் கல்வியாண்டில் சற்றொப்ப 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளிலும், 227க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ. கல்லூரிகளிலும் 41,603 இடங்கள் நிரம்பாமல் இருந்தன. 2013-2014ஆம் கல்வியாண்டில் இது 52 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. வேலையில்லாப் பொறியியலாளர்களின் எண்ணிக்கையும் இங்கு பலமடங்கு அதிகமானது.

 எனவே இது குறித்து ஆராய ஒரிசா அரசு ஓர் குழுவை நியமித்தது. மாதுங்கா வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத் துணைவேந்தர் தலைமையில் நியமிக்கப்பட்ட அக்குழு, கடந்த 2014 பிப்ரவர மாதம் தனது ஆய்வறிக்கையை அரசுக்கு அளித்தது. அவ்வறிக்கை, ஒரிசா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் நிலையை எடுத்துக்காட்டியது.

 இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலுமுள்ள தொழில்நுட்பக் கல்வியையும், கல்வி நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்டது தான், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி வாரியம் (AICTE) என்ற அமைப்பாகும். ஆனால், அவ்வமைப்பு பொறியியல் கல்விக்கு அனுமதி அளிக்கிறோம் என்ற பெயரில் நடத்தியுள்ள கூத்துகளை இவ்வறிக்கை அம்பலப்படுத்தியது.

 புதிதாக தொடங்கப்படும் பொறியியல் கல்வி நிறுவனங்கள், புதிய புதிய தொழில்நுட்பக் கல்வியைக் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் ஏற்கெனவே உள்ள பொறியியல் கல்விகளின் பெயரில் சில மாற்றங்களைச் செய்து, அதை வேறு பெயரில் கற்பிக்கி முற்படுன்றன.

 உதாரணத்திற்கு, AICTE அமைப்பு, electrical engineering, electrical and electronics engineering, electrical and power engineering, electrical engineering (electrical and power), electrical engineering (electronics and power), electrical and electronics (power system) என சற்றொப்ப 42 மின் பொறியியல் படிப்புகளுக்கு அனுமதியளித்துள்ளது. இவற்றை ஒழுங்குபடுத்தி மின் பொறியியல் என்ற ஒரே தலைப்பில் கல்வியாக அளிக்க வேண்டுமெனச் சொல்ல வேண்டியதுதான் AICTE அமைப்பின் கடமை. ஆனால், தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்களின் ‘நலன்’களுக்காக இத்தனைப் பெயர்களுக்கும் அனுமதி அளித்துள்ளது AICTE. இவற்றையெல்லாம் இவ் ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியதோடு, இதனை தனது பரிந்துரையாகவும் வெளிப்படுத்தியது. (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 17.02.2014).

 இந்தியாவெங்கும் நடைபெறுகின்ற பொறியியல் கல்லூரி மோசடிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டிய AICTE – தனக்கு ஆள்பற்றாக்குறை இருப்பதால் இவற்றை செய்யமுடியவில்லை என்கிறது. அனைத்துக் கல்வியையும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் முழுவதுமாக விட்டுவிட்டால் இக்கேள்விக்கு இடமிருக்காது. ஆனால், அதிகாரக்குவிப்பையே முழுநேரமாகக் கொண்டு செயல்படும் இந்திய அரசு, இதற்கு அனுமதி மறுக்கிறது.

 இதே ஆய்வு நிறுவனம், இந்தியாவெங்கிலும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே ஆங்கிலப் பயன்பாடு குறித்து ஓர் ஆய்வு நடத்தியது. அதில், சற்றொப்ப 43 விழுக்காட்டுப் பொறியியலாளர்களுக்கு ஆங்கிலத்தை சரியான வகையில் எழுதத் தெரியாது என அவ்வமைப்புக் கண்டறிந்தது. 25லிருந்து 35 விழுக்காட்டுப் பொறியியலாளர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள முடியாதவர்களாக உள்ளனர் என்றும் அவ்வறிக்கைத் தெரிவித்தது. (காண்கதி பிசினஸ் ஸ்டான்டர்டு, 25.07.2012)

 இந்தியத் துணைக் கண்டமெங்கும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் பொறியியல் கல்வி, உண்மையில் மாணவர்களைப் போய்ச் சேரவில்லை. சேரவும் வாய்ப்பில்லை. தாய்மொழி வழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்விகளை கொண்டு சென்றால் மட்டுமே, அக்கல்வியின் தரம் உயர வாய்ப்புள்ளது. ஆனால், இந்தியாவில் அது கேள்விக்குறியே!

 இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் மாநில மொழியில் பொறியியல் கல்வி பயிலும் முறை இருக்கிறது. 1999ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசிடம் போராடி, பல தடைகளைத் தகர்த்துதான் தமிழ்வழிப் பொறியியல் கல்வி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெறும் காட்சிக்காக ஒரே வகுப்பை வைத்திருக்கும் நிலையை மாற்றி, இதை தமிழகமெங்கும் விரிவுபடுத்துவதும், ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில மக்களின் மொழியில் கல்வியைப் பயிற்றுவித்து அம்மக்களை அடுத்த நிலைக்குக் கொண்டுச் செல்வதும்தான் ஆக்கப்பூர்வமான அரசின் கடமை. ஆனால், இந்தி – ஆங்கில மொழித் திணிப்பை ‘தேசியப்பணி’யாக செய்து வரும் இந்திய அரசு, இதற்கு ஒருபோதும் முன்வராது.

 பள்ளிக்கல்வி – உயர்க்கல்வி என அனைத்தையும் அந்தந்த மாநில அரசுகளின் கையில் முழுவதுமாக விட வேண்டிய இந்திய அரசு, நடைமுறையில் அதிலுள்ள மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதைப் போராடி முறியடிக்காமல், தொழில்நுட்பக் கல்வியின் தரம் உயர வாய்ப்பே இல்லை.

 இலட்சக்கணக்கில் பொறியியலாளர்களை உற்பத்தி செய்யும் தமிழகத்தில் இயங்குகின்ற பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களில், சில ஆயிரம் பொறியியலாளர்களுக்கே பணி கிடைக்கிறது. அதிலும், தலைமை அதிகாரிகளாக இந்நிறுவனங்களில் உள்ளவர்களில் கணிசமானவர்கள் வெளி மாநிலத்தவரும், பார்ப்பனர்களுமே இருக்கின்றனர். பணியாளர்களில் கணிசமானவர்களாகவும் வெளி மாநிலத்தவரே உள்ளனர். தமிழகத்திற்குள் அயல் இனத்து  மாணவர்களை அதிகளவில் நிரப்பியதன் வெளிப்பாடு இது!

 எனவே, இந்நிலையை மாற்ற, தமிழகத்தில் இயங்கும் அனைத்து பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களும், எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அவர்களது பணியிடங்களுக்குத் தேவையானவர்களை மாநில அரசின் வேலைவாய்ப்புத் துறையிடம் கேட்டுப் பெற்றே இட ஒதுக்கீடு வழங்கி நிரப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அப்பொழுதுதான், தமிழர்களுக்கு இந்நிறுவனங்களில் சமூக நீதி அடிப்படையில் வேலை கிடைக்கும். அதுவரை, தமிழ்நாடு அயலாரின் வேட்டைக் காடாகவேத் திகழும். பொறியியல் கல்வி போல, கலை – அறிவியல் உள்ளிட்ட ஆராய்ச்சி வகைக் கல்வியிலும் மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்.  

-க.அருணபாரதி

arunabharthi@gmail.com

http://sengodimedia.com/Blog/Description.aspx?id=4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.