Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

அந்தப் புத்தகத்தின் பெயர்...

ஒரு மிகப்பெரிய எழுத்தாளன்

எழுதிய புத்தகத்தை

இறுதியாய்

எழுத படிக்க தெரிந்த ஒருவன்தான்

வாங்க ஒப்புக்கொண்டான்

எப்போதும் போல

 

பெரிய நூலகத்தில்

பலரும் படித்துப் பயன்பெற

விரும்பிய புத்தகம்

புத்தக அலமாரிக் கனவுகளுடன்

புது மேசையின் மேல் குடியேறுகிறது.

 

புத்தக வாசத்தை உணரும் நுட்பத்தை

மறந்து போயிருந்தான்-அநேகமாய்

புத்தகத்துடன் உரையாடும் கலையை

அறியாதவனாயும்...

 

இருந்தும்

கோப்படும்போது

தூக்கி எறியவும்,

மேசையின் மீது வைக்கப்படும்

உணவு பண்டங்களின் மீது மூடி

வைக்கவும்,

புழுக்கமான நேரத்தில்

விசிறியாகவும்,

குழந்தை விளையாடிக் கிழித்தெறியும்

காகித பொம்மையாகவும்,

ஏதாவது ஒரு வழியில்

அந்த இல்ல உறுப்பினருக்கு

புத்தகம் பயன்பட்டுக்கொண்டே

இருக்கிறது. அதன் ஆத்மா

படிக்கப்படாமலேயே...

 

இப்போதும்

அந்த புத்தகத்தின் பெயர் திருமதி தான்.

 

கனவுகளுக்கு வாய்க்கரிசி...

எட்டு வயதில்

ஆசிரிய ஆசையில்

கையில் குச்சியை

வைத்துக்கொண்டு கனவு

 

பத்து வயதில்

நாட்டிய மங்கையாகும் நாட்டத்தில்

காலில் சலங்கையை

கட்டிக்கொண்டு கனவு

 

பனிரெண்டு வயதில்

பாடகியாகும் பிரியத்தில்

தொடையில் தாளம்

தட்டிக்கொண்டு கனவு

 

பதினாறு வயதில்

பொறியாளராக 

பொறிதட்டிய ஆசை

அண்ணன் ஊதிவிட்டு வந்த கனவு

 

பதினெட்டு வயதில்

தானாக வந்த தணியாத ஆசை

தாண்டாத வரைபட 

எல்லைகளை கடக்கும் கனவு

 

இப்படியாய்

என் இருபது வருட கனவை

கலைத்துவிட்டு

ஒரு கையில் வரதட்சனை

இன்னொரு கையில் என்

கனவுகளின் வாயில் வாய்க்கரிசி

போட்டு அழைத்து செல்கிறான்

வீட்டிற்குள்ளே இருக்கும்

தன்னடக்கை மனைவி

என்றபடி

தனது இல்ல சிறைக்கு.

 

பிடித்ததற்காக...

நீண்ட தேடலுக்கு பிறகு

நானாக விருப்பப்பட்டு

அதனால் கவரப்பட்டு

பார்த்தெடுத்த ஆடை அது

 

மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு

சில நாட்கள் அணிந்து கொள்ளாமல்

பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்

தினமும் பலமுறை எடுத்தெடுத்து

பார்த்துக்கொள்வேன்

அத்தனை ஈடுபாடு அதன்மேல்

 

பிடித்ததினமாய் தேர்ந்தெடுத்து

அந்த ஆடையே உடுத்த

முற்பட்டேன்

அதன் அளவு எனக்கு

பொறுத்தமானதாக இல்லை

அதில் உள்ள சில தையல்களை

பிரித்துவிட்டு

நுழைத்துவிட முயறசித்தேன்

 

அதுவும் சரிவரவில்லை

கலைப்பு மாறாமல்

மடித்தெடுத்து வைத்துவிட்டேன்

முடிவெடுத்தேன்

என் பருமனை குறைத்துக்கொள்ள

 

என்ன செய்வது

படித்ததற்காக, பிடித்தவர்களுக்காக

நம்மை நாம் மாற்றிக்கொண்டே

தான் இருக்கிறோம்..!

 

பழைய காதல் அறை...

எந்தவொரு

தற்காப்பு ஆயுதங்களும்

வழங்கப்படவில்லை

அந்த அறையில்

போராடி வசிக்க

 

விருப்பப்பட்டவர்கள் 

உள்ளே அனுமதிப்பதால்

முன்னெச்சரிக்கைக்கு

இடமின்றி போராட

வேண்டியிருக்கிறது

அந்த அறைக்குள்

 

அந்த அறையின்

ரகசியங்கள் வெளியே

கசிவதில்லை

அந்த அறையில் இனி

வெளிச்சங்களுக்கும்

இடமிருப்பதில்லை

 

விரும்பமின்றி பற்றுதலின்றி

வலியுடன் வெறுப்புடன்

எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது

அந்த அறையின் நிகழ்வுகளை

 

எங்கோ காத்திருக்கும்

உறவுகளை எதிர்பார்த்துக்கொண்டு

என்றோ நிகழ்ந்த

ஏமாற்றத்தை நினைத்துக்கொண்டு

முடிந்துவிடுகிறது

யாரோ ஒருவரின் பசி

 

அந்த அறைக்குள் இருக்கும்

பொருட்கள் போலவே

ஒவ்வொருவரும்....

 

வசந்தகாலத்தை 

தீர்மானிக்கின்ற துக்க அறையில்

நீங்களும் வசித்து இருப்பீர்கள்தானே!

 

எழுதப்படாதத் தாள்-1

எழுதப்படாத வெள்ளைத்தாள்

எழுத எடுத்தமர்ந்தேன்

தொடங்கம் தவறாகிவிடுமோ

என்ற பயத்தில்

இன்னும் எழுதப்படாமலே

வெள்ளைத்தாள்..!

 

எழுதப்படாதத் தாள்-2

எழுதப்படாத வெள்ளைத்தாள்

எழுத எடுத்தமர்ந்தேன்

நினைவில் வந்தது....

காலதாமதமாய் சென்றதால்

அவன் சினங்கொண்டு சென்றது,

வழியில் கண்ட விபத்து,

மறந்து தவறிய அலுவலக வேலை,

நாளை கடக்கவேண்டிய பயணங்கள்,

இன்னும் நிரப்பப்படாத வெள்ளைத்தாள்

முடிந்துவிட்டது எனக்கான நேரம்..!

 

எழுதப்படாதத் தாள்-3

எழுதப்படாத வெள்ளைத்தாள்

எழுத எடுத்தமர்ந்தேன்-

அடர்ந்த புதர்களை அணைத்துக்கொண்ட

இருள் பூசிய வனப்பகுதியில்

வழித்தடம் இருந்தது,

அங்கு தனியாய் நான் மட்டும்

ஏதோ என்னை துரத்தவதை போல்

உணர்ந்து ஓடுகிறேன்-வேகமாய் .

வாழ்க்கையின் மீது அதீத

ஆசை வைத்து ஓடும் ஓட்டத்தில்

மூச்சு மேலும் கீழுமாய் திணற

கால்கள் இடறி பள்ளத்தில் விழ...

துரத்தி வந்த உருவம்

அருகே நெருங்க..நெருங்க..

 

பயந்தெழுந்தேன்...

ஓ... உறங்கிவிட்டேன்

எனக்கான வழித்தடமாய்...

இன்னும் எழுதப்படாத வெள்ளைத்தாள்.

 

சாபங்களுடன்...

அவளுடைய 

கோபத்திற்கும் அன்பிற்கும்

மதிப்பளித்ததில்லை

சிறு ஆசைகளுக்கு

காதுகொடுத்ததில்லை

ஆச்சர்யங்களை

பரிசளித்ததில்லை

 

அவளை அமரவைத்து 

உணவு பரிமாறியதில்லை

ஒளிந்துகொண்டு

விளையாடியதில்லை

செல்லமாக கொஞ்சியதுமில்லை

வேலையை பகிர்ந்துகொண்டு

ஓய்வெடுக்க சொன்னதுமில்லை

 

அன்பின் ஏக்கத்திலும்

அரவணைப்பின் ஆசையிலும்

கைபற்றுதலின் கனவிலும்

அவளது ஒவ்வொரு நாள்

வாழ்க்கையும் பயணிக்கிறது...

திருமணம் முடிக்கையில்

சரியாகத்தான் இருந்தது

பதினொரு பொருத்தமும்..!

 

முத்தமாக மாறேன்!

உமிழ்துளி தீர்த்தமாய்

இனித்தருளி

உதிர்ந்த பூவையும்

கனியவைத்து

நஞ்சையும் மகரந்தமாக்கும்

அன்னையின் முத்தம்

 

புழுதி படிந்த தினத்தை

பொன்னாக்கி

நீரும் நிழலும் அன்ற

நிலத்தில் மருந்தாகி

உட்பிணியை மயிலிறகால் வருடும்

தந்தையின் முத்தம்

 

வார்த்தைகளை ஊமையாக்கி

சொல்லத்தெரியாத

சொல்லின் மொழியில்

பூங்கொத்து தரும்

குழந்தையின் முத்தம்

 

விடாது நடந்த

போரின் முடிவில் கிழிந்த

நரம்பின் வலியை

பின்நோக்கி ஓடச்செய்து

பூத்துக்குலுங்குவது

நட்பின் முத்தம்

 

வெப்பத்தில் குளிர்காய்ந்து

இதழில் மடல் தீட்டி

துவந்தயுத்தத்தில்

பூ விரியும் பொழுதில்

புதுமொழி பேசும்

காதல் முத்தம்

 

முப்பகையில் முத்தெடுத்து

முத்திபெற அணிவகுத்து

அணிகலன் இன்றி

மங்கையை அழகுபடுத்தும்

ஆண்மகனின் ஆசைமுத்தம்

 

முத்தங்களான உலகில்

நீங்கள் முத்தத்தேர்வில்

ஈடுபட்டவராவென தெரியாது

முத்தமாக மாறுவது தான்

முக்கியமென்று மட்டும்

இப்போது சொல்லத்தெரிகிறது.

 

உயிர்ப் பெற்று கொப்பளிக்கிறது...

அறையில் தாழிடும் சத்தத்தில்

ஏட்டில் ஒரு பக்கமும்

என்னில் ஒரு பங்கும்

நீர்த்துக்கொண்டிருக்கிறது

அன்பை பாதுகாக்குமிடம்

போர்க்களமாய் பாழிடமாய்

மெதுமெதுவாய் அரித்து

வடிந்துகொண்டிருக்கிறது

 

பொம்மலாட்டம் ஆடும்

மனம் விளம்பரமின்றி

முடிவுரை எழுத

எழுத்துகளின் ஓசையால்

உயிர்ப்பு பெற்று

கொப்பளிக்கிறது

 

மனம் கொள்ளாமல்

வெண்துகில் தோளுறித்து

பூத்து காயாமரம்

சிதறி வெடிக்கையில்

பூ விழாத பிஞ்சு

துவழ்ந்து இளகுகிறது

 

மரங்கள் வெட்டப்பட்ட சாலையில்

குடைபிடித்து செல்லும் பெண்ணாய்

கண்ணுக்கு எட்டாத தூரத்தில்

தேடிக்கொண்டிருக்கிறேன்

துவங்கிய கதை

நொடியில் விடுகதையான

காரணத்தை...

கதகதப்பான மழையில்

வழுக்கி தடுமாற

வழிவிடுகிறது நிறைசொல்

தூதுபோக  

நாள்காட்டியில் கடந்துபோன

நாளொன்றில்...

 

-தமிழரசி தண்டபாணி

tamilarasi181229@gmail.com

http://sengodimedia.com/Blog/Description.aspx?id=6

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.