Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாமானிய நாயகர்களின் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாமானிய நாயகர்களின் மரணம்
சுரேஷ் கண்ணன்


Gemini-Ganesan.jpg




வாரம் ஒரு முறை மாத்திரமே திரைப்படம் ஒன்றைக் காண கூடிய தூர்தர்ஷன் காலக்கட்டத்தில் அதைக் காணப் போகும் பரவசத்தின் ஊடே பெயர்கள் ஓடும் போது 'சண்டைக்காட்சிகள் அமைப்பு" என்கிற வார்த்தை வருகிறதா என்பதை நண்பர்களுடன் இணைந்து கூர்மையாக கவனித்து நிச்சயித்துக் கொள்வோம். அந்த வார்த்தைதான் அந்தப் படத்தை தொடர்ந்து பார்க்கப் போகிறோமோ அல்லவா என்பதை தீர்மானிக்கும் விஷயமாக அப்போது இருந்தது. ஹீரோ என்று ஒருவன் இருந்தால் அவன் நிச்சயம் சண்டை போடத்தெரிந்தவனாகத்தான் இருந்தாக வேண்டும், அல்லாவிடில் அவன் ஹீரோவே அல்ல என்று நம்பிக் கொண்டிருந்த விடலை வயதுக் காலத்தை தாண்டிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு திரைப்படத்தின் காட்சி என்னை சற்று கலைத்துப் போட்டது.

அது 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படம் என்றுதான் நினைக்கிறேன். அதன் நாயகனான மோகன், நாயகியான பூர்ணிமா ஜெயராமிடம் இங்க் பேனாவை கடன் வாங்கி அதனுள் இருக்கும் மையையெல்லாம் ரகசியமாக தன் பேனாவில் ஊற்றிக் கொண்டு வெறும் பேனாவை திருப்பித் தருவதை வழக்கமாக வைத்திருப்பார். ஒரு முறை மாட்டிக் கொண்டவுடன் அசட்டுத்தனமாக சிரித்து மழுப்புவார். ஒரு சாமனியன் செய்யும் இந்த அற்ப செயலை திரையில் ஓரு ஹீரோவால் செய்ய முடியுமா என்று எனக்கு அப்போது மிக ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அதுவரையில் ஹீரோக்கள் என்பவர்கள் ஒரு சாதாரணன் தன் அன்றாட வாழ்க்கையில் நிகழத்த முடியாத சாகசங்களையும் தீரச்செயல்களையும் திரையில் மிகைப்பட நிகழ்த்தி பார்வையாளனின் ஆழ்மன புனைவுலகை திருப்தி செய்வதின் மூலம் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருந்தவர்கள் என்பதை லேசுபாசாகவாவது அறிந்திருந்த அந்த வயதில் இப்படியொரு காட்சி, ஹீரோக்களின் மீதான பிரமைகளை உடைத்த அதிர்ச்சியையும் என்னுடைய பிரதிநிதி ஒருவனை திரையில் சந்தித்துவிட்ட திருப்தியையும் ஒருசேர அளித்தது. மரத்தைச் சுற்றி டூயட் பாடும் நாயகனுக்கு இயற்கை உபாதையை கழித்துக் கொள்ளக்கூடிய அவசரமான அசந்தர்ப்பங்களைக் கொண்ட காட்சி தமிழ் சினிமாவில் ஏன் ஒரு முறை கூட நிகழ்வதில்லை என்று எழுத்தாளர் சுஜாதா கிண்டலடித்து எழுதியிருந்தது நினைவிற்கு வருகிறது.


***

தமிழ் சினிமாவின் வரலாற்றில் பொதுவாக எப்போதுமே இரு பெரும் நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த தற்செயலான வழக்கம் இருந்தாலும் அவர்களின் இடையே சாமானியர்களின் பிரதிபலிப்புடனும் நாயகர்கள் இருந்து கொண்டுதான் இருந்தார்கள். தியாகராஜ பாகவதர் x பி.யு. சின்னப்பா காலத்தில்தான் டி.ஆர்.மகாலிங்கம் இருந்தார். எம்.ஜி.ஆர் x சிவாஜியின் கொடி பறந்து கொண்டிருந்த காலத்தில்தான் ஜெமினி கணேசன் 'காதல் மன்னன்' பட்டத்தை அநாயசமாக தட்டிச் சென்றார். கமல் x ரஜினி காலத்தில் கூட மோகன், முரளி போன்ற சாதாரண நாயகர்களும் தங்களுக்கு சாத்தியமான பகுதிகளில் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்கள். இந்த பரிமாணம் அஜித் x விஜய் என்பதாக திசை திரும்பிய போது மெல்ல மங்கத் துவங்கியது. ஒரு திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றியே அப்போதைக்கு அப்போதைய சூப்பர் ஸ்டாரை தீர்மானிக்கும் சக்தியாக மாறியது எனவே இந்த வரிசையில் சூர்யா, தனுஷ், சிம்பு, விக்ரம் போன்றோர்களும் இரண்டறக் கலந்தார்கள். இரண்டு மூன்று திரைப்படங்கள் தோற்றால் அவர்களின் ஸ்டார் அந்தஸ்து தடாலென தடம் புரண்டது.

இப்போது எனக்குள்ள பிரச்சினை என்னவெனில் சமகால தமிழ் சினிமாவில் சாமானியர்களின் கூறுகளை பிரதிபலித்த இடைநிலை கதாநாயகர்கள் ஏன் காணமாற் போனார்கள் என்பதுதான். இப்போது வரும் எல்லா ஹீரோக்களுமே அசகாய சூரர்களாகத்தான் இருக்கிறார்கள். கேமிராவை நோக்கி வெறித்தனமாக பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள். அவர்கள் சுண்டுவிரலை உயர்த்தினால் கூட டாட்டா சுமோக்கள் ஆகாயத்தில் பறந்து விழுகின்றன. ஹீரோ என்பவன் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் சரி அல்லது பொறுக்கியாக இருந்தாலும் சரி, தீயசக்திகளை துரத்தி அழித்து பொதுச் சமூகத்தை காக்கும் விஷ்ணு அவதாரத்தை நிகழத்துவதில் விற்பன்னர்களாக இருக்கிறான். இடையில் காதலியுடன் டூயட் பாடும் அல்லது குத்துப்பாட்டு பாடும் அத்தியவாசிய கடமைகளையும் மறப்பதி்ல்லை. இம்மாதிரியான ஆக்ஷன் மசாலாக்கள் இங்கு திரும்பத் திரும்ப வேறு வேறு வடிவில் இறக்குமதி டிவிடி காட்சிகளின் நகல்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு விரிவான அளவில் நுட்பமாக சந்தைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூட்டத்தில் இரவல் பேனாவிலிருந்து இங்க் திருடும் அந்த சாமானிய நாயகன் எங்கே தொலைந்து போனான்? ஏன் காணாமற் போனான்?

ஒரு சினிமா உருவாவதின் பின்னணிகளைப் பற்றி அவ்வளவாக அறிந்திராத அந்தக் காலக் கட்டத்தில் அந்த அசகாய சூரத்தனங்களைக் கொண்ட நாயகர்களின் மீதான பிரமிப்பையும் ஹீரோதான் நிஜமாகவே சண்டையிடுகிறான் என்று நினைத்துக் கொண்ட அறியாமையையும் புரிந்து கொள்ள முடிகிறது. எம்.ஜி.ஆர் நடித்திருந்த ஒரு திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போது ஒரு பரபரப்பான சண்டைக்காட்சியில் அவர் தன் வாளைத் தவற விட்ட காட்சி வந்த போது அவருக்கு உதவுவதற்காக பார்வையாளர்களிலிருந்து ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு தன்னிடமிருந்த கத்தியை திரையை நோக்கி தூக்கிப்போட்டதான வரலாற்றுச் சம்பவங்களை உள்ளடக்கியதுதான் தமிழ் சினிமா பார்வையாளர்களின் வரலாறு. ஆனால் ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது என்பதும் சண்டைக்காட்சிகள் பெரும்பாலும் புனைவே என்பதும் இன்று ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. சினிமா படப்பிடிப்புகளை காட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் அதன் உத்திகளை பார்வையாளர்களும் அறிந்திருக்கிறார்கள், அதன் போலித்தன்மைகளைப் பற்றி பொதுவில் விவாதிக்கவும் கிண்டலடிக்கவும் கூட செய்கிறார்கள்.

இன்று திரையில் ஒரு ஹீரோ நம்பமுடியாத ஒரு மிகையான சாகசத்தை நிகழ்த்தினால் பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டலுக்குப் பதிலாக சிரிப்பொலியே எதிர்வினையாக கிடைக்கிறது. எனில் ஆக்ஷன் நாயகர்களின் மீதான பிரமிப்பும் நம்பகத்தன்மையும் குறைந்திருக்கத்தானே வேண்டும்? மக்களின் அன்றாட பிரச்சினைகளைப் பற்றி பேசும் திரைப்படங்களும் அவர்களை பிரதிபலிப்பவர்களும்தானே ஒரு திரைப்படத்தின் நாயகனாக இருந்திருக்க வேண்டிய அவசியம் நிகழ்ந்திருக்க வேண்டும்? ஆனால் மாறாக இந்த ஆக்ஷன் மசாலாக்கள்தானே திரும்பத் திரும்ப உருவாகி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன? இது ஒரு விசித்திரமான முரணாக உள்ளது. சாமானிய மனதுகளின் ஆழ்மனதுகளில் உறைந்துள்ள கையாலாகாததன்மை இந்த விஷ்ணு அவதாரங்களை கைவிட விரும்பவில்லையா? நமக்கு முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் அநீதிகளை எதிர்த்துப் போராட ஆகாயத்திலிருந்து குதித்து ஒரு அதிசய நாயகன் வரவேண்டும் என்று ஒரு சாமான்ய மனம் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதா?

***

இந்த சாமானிய நாயகனின் மிக கச்சிதமான உதாரணம் ஆரம்ப கால பாக்கியராஜ். ஒரு சாதாரணனின் அறியாமையையும் பாமரத்தனத்தையும் தனித்துவமான நகைச்சுவையுடன் திரையில் பிரதிபலித்தார் பாக்யராஜ். தன்னுடைய கலைவாரிசு என்று எம்.ஜி.ஆர் எப்படி இவரை அறிவித்தார் என்பது இன்னமும் கூட அகலாததொரு ஆச்சரியம். திரையில் எம்.ஜி.ஆர் பயணமும் பாக்கியராஜின் பயணமும் நேரெதிர் திசையில் அமைந்திருந்தது. துவக்க கால திரைப்படங்களில் மிக அப்பாவித்தனத்துடன் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த பாக்யராஜ் மெல்ல மெல்ல ஒரு வழக்கமான கதாநாயகனின் சம்பிதாயங்களுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள முயன்ற போது அவரது தனித்துவத்தை இழந்தார் என்று தோன்றுகிறது. மலையாள திரையுலகில் பாக்யராஜை விடவும் சிறந்த திரைக்கதையாசிரியராகவும் நடிகராகவும் இருக்கும் சீனிவாசன் பெரும்பாலும் இறுதிவரையிலும் தனது சாமானிய முகத்தை இழக்கவேயில்லை. தமிழ் திரையுலகில்தான் நடிக்க வருகிற அனைவருக்குமே சூப்பர் ஸ்டார் கனவு ஏற்பட்டு விடுகிறது. தன்னுடைய பிரத்யேக பலம் எதுவோ அதில் தொடர்ந்து சோபிக்க வேண்டும் என்று தோன்றுவதில்லை. எனவேதான் சாமானியர்களின் பிரதிநிதியாக தன் பயணத்தை துவங்குகிற நாயகர்கள் மெல்ல மெல்ல அடுத்த நிலைக்கு நகரும் ஆசையில் தன்னுடைய இடத்தை இழந்து காணாமற் போகிறார்கள்.

பொருளாதார வெற்றியின் மூலம் மாத்திரமே ஒருவரின் சாதனை அளக்கப்படும் இந்த உலகமயமாக்க காலகட்டத்தில் சாமானியனின் முகத்தை எவருமே விரும்புவதில்லையோ என்றும் கூட தோன்றுகிறது. சமீபத்தில் 'தங்கமீன்கள்' என்றொரு திரைப்படம் வெளிவந்து தேசிய விருது கூட பெற்றது. பொருளியல் உலகில் அதன் நாயகன் ஒரு தோல்வியுற்றவன். அவனது மகளின் பள்ளிக் கட்டணத்தை கட்டக்கூட தந்தையை எதிர்பார்த்திருப்பவன். மகளின் அருகாமையை இழக்க விரும்பாமல் சொற்ப சம்பளத்தில் தன் ஜீவிதத்தை தொடர்கிறான். அதையும் கூட இழக்க நேரும் போது தனது மகளைப் பிரிந்து வேறோரு இடத்தில் அமைந்த பணியில் துன்புறுகிறான். இப்படியொரு சாமானியனை பெரும்பாலோனோர்க்கு பிடிக்கவேயில்லை. அவன் ஒரு கேலிச் சித்திரமாகவே தெரிந்தான். மிகையாக சித்தரிக்கப்படும் காட்சிகளை கிண்டலடித்தும் வெறுத்தும், யதார்த்ததிற்கு நெருக்கமாக காட்சிகள் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஒரு ரசனை மாற்றத்திற்கு பயணித்திருக்கிற சமகால சினிமா பார்வையாள சமூகம், இந்தச் சமூகத்திலேயே இருக்கிற ஒரு சாமானியனை நாயகனாக பார்க்க ஏன் விரும்புவதில்லை என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு முரண்.

ஒரு காலத்தில் சூப்பர் நாயகர்களுக்கு ஏறத்தாழ இணையாக பயணித்துக் கொண்டிருந்த சாமானிய நாயகர்கள் இன்று பெரும்பாலும் காணாமற் போயிருந்தாலும் அதற்கான தடயங்களைக் கொண்ட சொற்ப அடையாளங்களாவது மீதம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்ததில் சமீபத்தில் வெளியான இரண்டு திரைப்படங்கள் கிடைத்தன. சிவகார்த்திகேயன் நடித்த 'மான்கராத்தே' மற்றும் சந்தானம் நடித்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' இதில் சாமானிய நாயகனுக்கு மிக கச்சிதமாகப் பொருந்தக் கூடிய ஆளுமை சிவகார்த்திகேயனுக்கு இருப்பதாகத் தோன்றுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில்தான் அவரது துவக்க காலத்திரைப்படங்களும் இருந்தன. ஆனால் வணிகசினிமா அவரையும் தனக்குள் செரித்துக் கொண்டது ஒரு துரதிர்ஷ்டம்.

மான்கராத்தே என்பதன் விளக்கமே ஏற்கெனவே வந்திருந்த ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியொன்றில் விவரித்திருந்த படி ஏதாவது சண்டையொன்று வந்தால் மான் போல் ஓடி விடுவதையே சங்கேத பாணியில் அதை ஏதோ ஒரு வித்தையைப் போல நகைச்சுவையாக குறிக்கும் வார்த்தை. ஒரு சாமான்யனுக்கு சரியாகப் பொருந்தக்கூடிய கதைக்களம். இந்த ஒரு வார்த்தைக்கேற்ப கதையை அமைத்துக் கொண்டு இத்திரைப்படத்தை மிக மிக சுவாரசியமாக உருவாக்கியிருக்கலாம்.

ஆனால் இதன் நாயகன், சண்டையிடுவதை தவிர ஒரு சம்பிரதாய ஹீரோவுக்குரிய சகலவிதமான கல்யாண குணங்களுடன் இருக்கிறான். இதன் கதை ஏ.ஆர்.முருகதாஸாம். மனிதர் இன்னும் 'போதி தர்மர்' ஹேங் ஓவரிலிருந்து வெளியே வரவில்லை என தெரிகிறது. ஒரு சாமியாரிடமிருந்து வருங்காலத்தில் பிரசுரமாகயிருக்கும் நாளிதழ் ஒன்று கிடைக்கிறதாம். அதில் பீட்டர் என்கிற பாக்சிங் சேம்பியனுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளும், வேலையை இழந்த நாலைந்து சாஃப்ட்வேர் இளைஞர்கள் அவரை வைத்து பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்களாம். இதற்கு மாதம் ஆயிரக்கணக்கில் சம்பளமும் ஏஸி, பைக் என்று இன்னபிற பல வசதிகளை பீட்டருக்கு தருகிறார்களாம். கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடிப்பதை விடவும் கேனத்தனமான இப்படியொரு யோசனை, ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாளுக்கு கூட தோன்றாது. இப்படியொரு அற்புதமான கதையின் பின்புலத்தில் நடனமாடுகிறது இந்த மான்கராத்தே.

இதன் ஹீரோ வடசென்னையின் பின்புலத்திலிருந்து வருவதாக அமைந்திருக்கிறது திரைக்கதை. ஆனால் வடசென்னையை அதன் கலாசார மற்றும் வரலாற்று பின்புலத்திலிருந்து யோக்கியமாக சித்தரித்த ஒரு தமிழ் திரைப்படமும் இதுவரை உருவாகவில்லை. ஷாப்பிங் மால்களிலேயே எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் நவநாகரிக உடைகள் அணிந்த ஒரு ஹை-டெக் இளைஞனாகவே காட்டப்படுகிறார் இதன் நாயகன். ஏனெனில் சினிமா இலக்கணத்தின் படி பொதுப்புத்தியில் பதிந்துள்ள ஓர் அசலான வடசென்னைவாசியை அப்படியே ஹீரோவாக சித்தரித்தால் மல்டிப்ளெக்ஸ் ரசிகர்கள் முகஞ்சுளிக்கலாம் என்று இயக்குநர் நினைத்திருக்கலாம். இதற்கான நிரூபணம் இதன் படத்திலேயே உள்ளது. குண்டாகவும் கருப்பாகவும் ஓர் இளைஞன் லிப்டில் பெருமளவு அபானவாயுவை வெளியிடுகிறான். அதற்குப் பின்னால் வரும் சிவகார்த்திகேயனை சந்தேகமாக பார்க்கிறாள் வெள்ளைத் தோல் நாயகி. பிறகு இருவரும் வாந்தியெடுக்குமளவிற்கு ஓங்கரிக்கின்றனர். உலக அழகியாகவே இருந்தாலும் அவரின் அபானவாயு நாற்றமுடையதாகத்தான் இருக்கும். இது மாத்திரமல்ல நாயகனுக்கு நண்பனாக வருபவனும் கருப்பாக, அவலட்சணமாகவே ஒரு அடிமை போல சித்தரிக்கபட்டிருக்கிறான். நாயகனை அழகானவனாக காட்டும் உத்தி போல. பத்து திருக்குறள்களை மனப்பாடமாக சொல்பவனுக்கு தன் மகளை மணமுடித்து தர தயாராக இருக்கும் ஒரு தந்தையின் அற்புதமான காமெடி டிராக் வேறு.

இத்திரைப்படத்தில் குத்துச் சண்டை விளையாட்டை தவறுதலாக சித்தரித்ததாக அதன் சம்மேளனத்திலிருந்து எதிர்ப்பும் தடையுத்தரவு வழக்கும் போடப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாயின. உண்மைதான். அந்த விளையாட்டை மிக மலினமானதொரு கேளிக்கையாகவும் நகைச்சுவையாகவும்தான் இத்திரைப்படத்தில் சித்தரித்திருப்பார்கள். குத்துச்சண்டை விளையாட்டை அதன் தீவிரத்தோடு முன்வைத்த சிறந்த வணிகசினிமாவாக சில்வஸ்டர் ஸ்டாலினின் 'ராக்கி' தொடர் திரைப்படங்களைச் சொல்லலாம். சண்டையை விடவும் அது நிகழப் போவதற்கான முன்னோட்டங்களையும் கொந்தளிப்பான உணர்ச்சிகளையும் பார்வையாளனின் ஆர்வத்தை உயர்த்தும் வகையில் அற்புதமான திரைக்கதையால் உருவாக்கியிருப்பார்கள். ஆனால் மான் கராத்தேவில் சில காட்சிகளில் சார்லி சாப்ளினின் 'சிட்டி லைட்ஸ்' திரைப்படத்தின் காட்சிகளை மிக மோசமாக நகலெடுத்திருக்கிறார்கள்.

'மான் கராத்தே' என்கிற தலைப்பின் நோக்கத்திலிருந்து விலகும் வரையில் பாக்ஸிங் என்றால் என்னவென்றெ தெரியாத ஹீரோ, ஏற்கெனவே சாம்பியனாக உள்ளவரை திடீரென்று உந்தப்பட்ட ஆக்ரோஷத்தின் மூலம் வெற்றி கொள்வதாக இதன் உச்சக்காட்சி அமைந்திருக்கும். இதற்கான பின்னணியும் அபத்தமானது. ஒரு சாமானிய நாயகனை எந்தவகையிலும் இத்திரைப்படம் பிரதிபலிக்கவில்லை.

***

இன்னொரு சமகால திரைப்படமான 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' அதன் தலைப்பிலேயே ஒரு சாமானிய நாயகனை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இதன் திரைக்கதையும் ஏறக்குறைய அவ்வாறே அமைந்திருக்கும். ராஜ்மெளலியின் தெலுங்கு திரைப்படமான 'மரியாத ராமண்ணா'வின் மறுஉருவாக்கமே வ.பு.ஆ. ஆனால் இதன் மூலம் பஸ்டர் கீட்டனுடையது. மெளன திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருந்த காலத்தில் 1932-ல் வெளியான Our Hospitality என்கிற திரைப்படத்தின் நகலே 'மரியாத ராமண்ணா'. சார்லி சாப்ளினின் அபரிதமான புகழின் வெளிச்சத்தில் மங்கிப் போன, சாப்ளினுக்கு இணையாக வைத்து போற்றப்படக் கூடிய கலைஞன் பஸ்டர் கீட்டன். ஒரு சாமானிய நாயகனின் அசலான சித்திரம் கீட்டன். தன்னுடைய உயிராபத்திலிருந்து தப்பிப்பதற்காக இத்தி்ரைப்படத்தில் கீட்டன் செய்யும் ஒவ்வொரு கோணங்கித்தனமான, புத்திசாலித்தனமான முயற்சியும் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவை. இதன் உன்னதத்தை நகல்களில் அதுவும் இந்தியத் திரைப்படங்களில் எதிர்பார்ப்பது அதிகமானதுதான் என்றாலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்தின் திரைக்கதை அதன் மையத்திலிருந்து பெரிதும் விலகாமல் இருப்பது சற்று ஆசுவாசமளிக்கிறது.

குறுகிய காலத்தில் புகழ் பெற்று விட்ட சந்தானம் அடுத்த படிநிலைக்கு உயர விரும்பி அதற்கேற்ற திரைக்கதையை தேர்வு செய்தது புத்திசாலித்தனமானதுதான் என்றாலும் தன்னுடைய பாணி நையாண்டியை அவரால் பெரிதும் கைவிட முடியவில்லை. பெரும்பாலான ஹீரோக்களைப் போலவே இவரும் ஒரு அறிமுகக்காட்சியோடும் பாடலோடும்தான் தோன்றுகிறார். அதன் இறுதியிலாவது தன்னை சுயஎள்ளல் செய்து கொள்ளும் ஒரு வசனம் மூலம் அந்தக் குறையை சமன் செய்வார் என்று எதிர்பார்த்தேன். அவ்வாறு நிகழவில்லை. தன்னுடைய புத்திசாலித்தனத்தின் மூலமாகவே நாயகன் தன் மீதுள்ள ஆபத்தை எதிர்கொள்ளும் அதே திசையிலேயே திரைக்கதை பயணிக்கிறது என்றாலும் மான்கராத்தே -வைப் போலவே அதன் உச்சக்காட்சியில் தன் இயல்பிலிருந்து நழுவி தடாலென்று விழுந்து விடுகின்றது.

உயரமானதொரு மலையில் இருந்து ஆற்றில் குதித்து விடுவாள் நாயகி. மிக முரட்டுத்தனமானவர்களாகவும் வீரர்களாகவும் அதுவரை சித்தரிக்கப்படும் அவளது சகோதரர்களும் அவர்களது ஆட்களும் கூட அங்கிருந்து குதிக்க அஞ்சி கண்ணீர்விடும் போது அசமஞ்சமாக இருக்கும் ஹீரோ திடீரென்று வீரம் பெற்று ஆற்றில் குதித்து நாயகியை காப்பாற்றி விடுவான். இதன் மூலம் அத்திரைப்படத்தில்அது வரையாவது சற்று உயிர்ப்போடு இருந்த சாமானிய நாயகன் தடாலென்று இறந்து போகிறான். இந்த சூழலை பஸ்டர் கீட்டன் தன் திரைப்படத்தில் ஏற்றுக் கொள்ளும் வகையில் இயல்பாக உருவாக்கியிருப்பார்.

சாமானிய நாயகன் என்பது வேறு யாருமல்ல. நம்மில் இருந்து உருவாகிறவன்தான். சினிமாத்தனங்கள் இல்லாதவன். அசந்தர்ப்பான சூழலை எவ்வித நாயகத்தனங்களும் அல்லாமல் பெரும்பாலும் இயல்பாகவும் கோழைத்தனங்களுடன் எதிர்கொள்கிறவன். அவன் துப்பாக்கி என்கிற வஸ்துவை தன் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டான். அதை உபயோகிப்பதை கனவிலும் கூட எதிர்பாாத்திருக்க மாட்டான். எதிர்பாராதவிதமாக அவனுக்கு திடீரென்று கோடிக்கணக்கான பணம் வழியில் கிடைத்தால், சுஜாதாவின் சிறுகதையொன்றில் வருவது போல கை நடுங்க கடன் வாங்கியாவது ஆட்டோ பிடித்து கைகள் நடுங்க அதை காவல்நிலையத்தில் ஒப்படைத்து விடுவான். அவனுக்கு பஞ்ச் டயலாக்குகள் பேசத் தெரியாது. அநியாயங்களைக் கண்டு மனம் குமுறி ரகசியமாக அழத் தெரியும். சில பல குறைகளும் அபத்தங்களும் பழமைவாத சிந்தனைகளைக் கொண்டிருந்தாலும் பொதுவாக நல்லவனாக இருப்பான். சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் விழுமியங்களுக்கு மதிப்பளிப்பவனாக இருப்பான்.

திரைப்படத்தின் இறுதி வரையிலும் தன் இயல்பிலிருந்து மாறாத தர்க்கத்தோடு உருவாகும் சாமானிய நாயகனின் சித்திரத்தை யோசித்துப் பார்த்தால் பாக்கியராஜ்தான் மறுபடியும் நினைவுக்கு வருகிறார். 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தில் தன்னைக் காதலிக்கும் மூன்று இளைஞர்களை சோதிக்க 'தான் கற்பை இழந்தவள்' என்று நாயகி பொய் சொல்லும் போது மற்றவர்கள் விலகி செல்ல அவளை அந்நிலையிலேயே ஏற்றுக் கொள்ள முன்வரும் இளைஞன் சாமானியர்களின் நாயகன் என்று கொள்ளலாமா? தான் காதலித்த பெண் திருமணமானவள் என்பதை அறிந்ததும் அவளது கணவனிடமே ஒப்படைக்கும் 'பாலக்காட்டு மாதவனை" எவ்வாறு வகைப்படுத்தலாம்? அபத்தமான சென்டிமென்ட்டுகளை பின்பற்றுவன் என்றாலும் சாமானியனால் அதைத்தானே செய்ய முடியும்.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி நம்முடைய சமகால திரைப்படங்களில் யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான காட்சிகளையும் மனிதர்களையும் எதிர்பார்க்கும் சமகால பார்வையாளன், அதற்கு முரணாக அதே பழைய ஆக்ஷன் நாயகர்களை, காக்கும் அவதாரங்களை வழிபட்டுக் கொண்டிருப்பது விநோதமாகத்தான் இருக்கிறது. மாறாக தமிழ்த்திரையில் முன்பு உயிர்ப்புடன் இருந்த சாமானிய நாயகர்கள் மேலதிக இயல்புத்தன்மையுடன் தமிழ் சினிமாவில் மீண்டும் வலம் வருவார்களா என்பதற்கான விடை தமிழ் இயக்குநர்களின் கையில்தான் இருக்கிறது.




(காட்சிப் பிழை, ஜூலை 2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)

http://pitchaipathiram.blogspot.co.uk/2014/07/blog-post_18.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.