Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஜனாதிபதியின் நிபுணர் குழு ஐ.நாவுக்கான சவாலா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதியின் நிபுணர் குழு ஐ.நாவுக்கான சவாலா?

ச.பா. நிர்மானுசன்

sri_lanka_killing_field-e1406269208852.j

படம் | JDSrilanka

ஜூலை 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை நடவடிக்கைகள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசை நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தன்னால் உருவாக்கப்பட்ட, போர்க்காலப் பகுதியில் காணமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சர்வதேச ரீதியில் அங்கீகாரமும் பிரபல்யமுமுடைய மூன்று நிபுணர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ளார்.

இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் பணிகளை அதிகரித்துள்ளதோடு, அதிர்ச்சியடைய வைத்திருப்பதாகவும் அறிய வருகிறது. இது, சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசுக்குமிடையில் நிலவிய மென்போக்கு அணுமுறை மென்தீவிர நிலையை தாண்டிச் செல்லவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

இலங்கை அரசின் இந்த நகர்வை, நீண்டகாலத்திற்குப் பின்னர் மஹிந்த அரசு எடுத்த சமர்த்தியமான நடவடிக்கையென சர்வதேச நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குப் பின்னணயில், இலங்கையால் அண்மையில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட பொதுசன உறவாடலுக்கான முகவர் அமைப்போ அல்லது ஒரு சக்திமிக்க நடோ இருக்கக்கூடும் என சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.

சர்வதேச ரீதியான தலையீட்டையும், சர்தேச நிபுணர்களின் ஈடுபாட்டையும் கடுமையான எதிர்த்து வந்த இலங்கை அரசு, வரலாற்றில் முதல்தடவையாக, வெளிநாட்டு நிபுணர்கள் மூவரை, காணமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக வெளிப்படையாக நியமித்துள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய சட்டவாளரும், சியராலியோனில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த வழக்கில் ஐ.நாவின் தலைமை சட்டவாளராக பணியாற்றியவருமான சேர் டெஸ்மன்ட் டி சில்வாவின் (Sir Desmond de Silva)திறமையான செயற்பாட்டால், அன்றைய ஐ.நா. செயலாளர் நாயகமாக இருந்த கொபி அனானால் பிரதி சட்டவாளர் நிலையிலிருந்து தலைமைச் சட்டவாளராக 2005இல் பதவியுயர்த்தப்பட்டார். 2011ஆம் ஆண்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில், போர்க்குற்றங்கள் புரிந்ததாக நிரூபிக்கப்பட்ட லைபீரியாவின் முன்னால் ஜனாதிபதி சாள்ஸ் ரெயிலர் கைதுசெய்யப்படுவதற்கு பின்னணியில் இருந்த இவர், பொல்கன்ஸ் (Balkans) போரின்போது, போர்க்குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை சரணடையச் செய்யும் நடவடிக்கைக்கான ஐ.நாவின் சிறப்பு தூதுவராக சேர்பியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அதேவேளை, காஸாவுக்கு மனிதாபிமான உதவிப்பொருட்களோடு சென்ற கப்பல் தொடரை இஸ்ரேல் வழிமறித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒன்பது பேர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இவர் நியமிக்கப்பட்டிருந்தார். இலங்கையின் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், சிரியாவில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதை மற்றும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்யும் குழுவின் தலைவராக இந்த ஆண்டு சேர் டெஸ்மன்ட் டி சில்வா நியமிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் இடம்பெற்ற வழக்கில் பிரதி சட்டவாளராக பணியாற்றியவரும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போதும் செயற்பாட்டு தளமுடையவராகவும் திகழ்கின்ற சட்ட பேராசிரியரனா சேர் ஜெப்ரி நைஸ் (Sir Geoffrey Nice) இந்த ஆலோசனைக் குழுவில் உள்ள மற்றைய நபர்.

மூன்றாவது நிபுணராக, அமெரிக்க சட்ட பேராசிரியரான டேவிட் கிறேன் (Prof. David Crane) நியமிக்கப்பட்டுள்ளார். சேர் டெஸ்மன்ட் டி சில்வாவுக்கு முன்னர் சியராலியோனுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் தலைமை சட்டவாளராக இவர் விளங்கினார். இவரும் லைபீரியாவின் முன்னால் ஜனாதிபதி சாள்ஸ் ரெயிலருக்கு தண்டனை வழங்குவதில் முன்னணியல் செயற்பட்டவர்.

இத்தகைய பின்புலத்தை கொண்டவர்களை மஹிந்த ராஜபச்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசர்கர்களாக நியமித்துள்ளமையே மேற்குலகை மையமாகக் கொண்ட சர்வதேச சமூகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முதன்மை இணைப்பாளர் சன்ரா பைய்டஸ் (Sandra Beidas), ஆற்றல் உடையவர் என்றாலும், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள் மூவரையும் கொண்ட இலங்கை தரப்பை கையாளக்கூடிய சக்திமிக்கவரா என்ற கேள்வி இருப்பதோடு? அவர்களின் ஆளுமையை எதிர்கொள்வது அவருக்கு இலகுவாக இருக்கப் போவதில்லை எனவும் தெரியவருகிறது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு ஆலோசகர்களாகவும், ஆதரவு வழங்குபவர்களாகவும் பின்லாந்தின் முன்னால் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்ரி அஹ்ரிசாறி (Martti Ahtisaari), நியூசிலாந்தின் ஆளுநர் நாயகமாகவும், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்து வரும் தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும் பணியாற்றிய சில்வியா கார்ட்ரைட் (Silvia Cartwright) மற்றும் பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், பலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்கள் மேற்கொண்டுவரும் குடியேற்றங்கள் தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கான குழுவின் உறுப்பினருமான அஸ்மா ஜஹான்கீர் (Asma Jahangir) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரு ஆணைக்குழுக்களினதும் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் ஆளுமை பல்வேறு வகைகளில் வேறுபட்டாலும், ஆரம்பத்தில் எதிர்பார்த்ததையும் விட, இலங்கை தரப்பால் எழக்கூடிய சாவால்கள் அதிகமாகவே இருக்கப்போகிறது.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த ஆணையாளராக வரவுள்ள ஜோர்தான் நாட்டின் இளவரசர் சையிட் ராட் சையிட் அல் ஹுசைன் (Prince Zeid Raad al-Hussein), இலங்கை தொடர்பாக இறுக்கமான நகர்வையே கடைபிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான ஐ.நா. படை தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீன் மூனின் மூத்த ஆலோசகர் குழாமில், போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திர சில்வா அங்கம் வகிப்பதை கேள்விக்குட்படுத்தியவர். குறைந்தது 14 வருடங்கள் அமெரிக்காவிலிருந்தே தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய இவருக்கும் அமெரிக்காவும் நல்லுறவு இருப்பதாகவே அறியமுடிகிறது. மத்திய கிழக்கில் தொடரும் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டே இவரது நியமனத்துக்கு பெரும் அங்கீகாரம் கிடைத்ததென்றாலும், இவருடைய நிகழ்ச்சி நிரலில் இலங்கைத் தீவுக்கான முக்கியத்துவம் இருக்கும் எனலாம்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணியக விசாரணை எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை தமது ஆட்சிக்கு ஏற்படுத்தலாம் என்று இலங்கை அஞ்சுகிறது. ஆதலால​ தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, குறித்த விசாரணையை மூர்க்கமாக எதிர்ப்பதற்கு மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிபீடம் முடிவுசெய்துள்ளது. அதன் ஒரு அங்கமாகவே மேற்குறிப்பிட்ட மூன்று வெளிநாட்டு நிபுணர்களை ஆலோசகர்களாக பணிக்கமர்த்தியுள்ளது. இதனூடாக, உள்ளக பொறிமுறையே போதுமானதென சர்வதேசத்துக்குக் கூறி, தனக்கான ஆதரவு தளத்தை விரிவாக்கப்போகிறது. ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டது போல, ஆலோசகர்களால் வழங்கப்படும் ஆலோசனைகளை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்ற இறுதி முடிவை இலங்கை அரசே எடுக்கும். ஆயினும், அரசின் ஏமாற்று வித்தைகளுக்கு வெளிநாட்டு நிபுணர்கள் மூவரையும் இலங்கை அரசு பெரும் கவசமாக பயன்படுத்த முயற்சிக்கும்.

அதற்கு அவர்கள் இணங்காவிட்டால், அவர்களை ஆலோசகர்கள் பதவியிலிருந்து வெளியேற்றும்.

தவிர்க்க முடியாத சர்வதேச அழுத்தங்கள் காரணமாக, ஆகஸ்ட் முதலாம் திகதி 2005 தொடக்கம் இடம்பெற்ற மிக மோசமான 16 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கான விசாரணை ஆணைக்குழுவை நவம்பர் 2006,ல் மஹிந்த ராஜபக்‌ஷ நியமித்தார். இந்த விசாரணையை கண்காணிப்பதற்காக, சர்வதேச ரீதியாக பிரபல்யமான 11 வெளிநாட்டு நிபுணர்களை அழைத்திருந்தார். கீர்த்தி மிக்கவர்களின் சர்வதேச சுயாதீன ஆணைக்குழுவின் (The International Independent Group of Eminent Persons – IIGEP)பதினோராவது நபருக்கான அனுமதி பெப்ரவரி 2007 இலங்கை அரசால் வழங்கப்பட்டது. ஆயினும், இலங்கை அரசின் ஒத்துழையாத தன்மை மற்றும் நெருக்கடிகளால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை சர்வதேச தராதரங்களுக்கு அமையவில்லை என்பதை தெரியப்படுத்திவிட்டு, குறித்த நிபுணர்கள் மார்ச் மாதம் 2008 இலங்கையை விட்டு வெளியேறினார்கள்.

அதன்பிற்பாடு, தம்மை சிக்கலுக்குள் தள்ளும் என எதிர்பார்க்கும் எத்தகையை சர்வதேச தலையீட்டுக்கும் இலங்கை அனுமதி வழங்குவதில்லை. அதற்கான வாதமாக, விசாரணைகளை மேற்கொண்டு நீதி வழங்கக்கூடிய உள்நாட்டு பொறிமுறை தம்மிடம் உள்ளதாக்க் கூறி சர்வதேச தலையீட்டை தவிர்த்துவருகிறது. இதன் அங்கமாகவே, கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவையும், அதனோடு இணைந்ததான ஏனைய ஐந்து குழுக்களையும் இலங்கை அமைத்துள்ளது.

தீர்வு முயற்சி என்னும் போது, அனைத்து கட்சி பிரதிநிதிகளின் மாநாடு (All Party Parliamentary Conference – APRC), நாடாளுமன்ற தெரிவுக்குழு (Parliamentary Select Committee) என ஏமாற்று வித்தைகள் காட்டும் இலங்கை அரசு, நீதிசார் விடயங்களுக்கு கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு (The Lessons Learnt and Reconciliation Commission)தொடக்கம் பல்வேறு குழுக்களை அமைத்து காலத்தை இழுத்தடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது.

மறுபக்கத்தில், 2010 மார்ச்சில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (Report of the Secretary-General’s Panel of Experts), 2012 நவம்பரில் இலங்கை தீவில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான இடைக்கால மதிப்பீட்டு அறிக்கை (Report of the Secretary-General’s Internal Review Panel on United Nations Action in Sri Lanka) ஆகியன வெளிவந்துள்ளதோடு, அடுத்து 2015 மார்ச்சில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணியக விசாரணைக் குழு அறிக்கை வரவிருக்கிறது. இதற்கிடையில், 2012, 2013 மற்றும் 2014 மார்ச் மாதங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைகளும் குறித்த காலங்களில் வெளிவந்துள்ளன.

அறிக்கைகளின் போர்களாகவும், ஆணைக்குழுக்களின் போர்களாகவும் மேற்குலகை மையமாகக் கொண்ட சர்வதேச சமூகத்துக்கும், இலங்கைக்கும் இடையிலான கையிழுத்தல் போட்டி எதிர்வரும் மாதங்களில் தீவிரமடையப் போகிறது.

பூகோள அரசியலால் உருவான மென்தீவிர நிலையை தாண்டக்கூடிய முரண்பாடுகளை, தமிழர் தேசத்துக்கு சார்பான முறையில் மாற்றக்கூடிய ஆக்கபூர்வமான பொறிமுறைகளை வகுத்திருக்க வேண்டிய பொறுப்பு, தாயகத்திலும், புலத்திலும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு உண்டு. ஆனால், இதுவரை வகுக்கப்படவில்லை. ஆதலால், அத்தகைய நடவடிக்கைகளை விரைந்தெடுக்கவேண்டும். இல்லாவிட்டால், மற்றுமொரு சந்தர்ப்பத்தை நழுவவிட்டவர்கள் என்று மட்டுமல்ல தமிழர்களுக்கான நீதி மறுப்புக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற வரலாற்று பழிக்கும் ஆளாக நேரிடும்.

http://maatram.org/?p=1545

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.