Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மு .ஹரிகிருஷ்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மு .ஹரிகிருஷ்ணன் - நேர்காணல்-ஷோபா சக்தி
 
 
நேர்காணல்-ஷோபா சக்தி 
 
மு .ஹரிகிருஷ்ணன் -
 
சில வருடங்களிற்கு முன்பு தமிழகத்தின் மேற்குச் சிறு கிரமமான ஏர்வாடியில் நடந்த கூத்துக் கலைவிழாவுக்குச் சென்றிருந்தேன். கிராமத்து மக்கள் , நாட்டுப்புற ஆய்வாளர்கள், நாஞ்சில் நாடன், பொதியவெற்பன் என மூத்த எழுத்தாளர்களிலிருந்து  லீனா, சந்திரா, இசை என இளைய தோழர்கள்வரை கூடியிருந்தார்கள். விடிய விடியக்கூத்தும் கட்டப் பொம்மலாட்டமும் கூத்துக் கலைஞர்களை மதிப்புச் செய்தலும் என  நிகழ்ந்த அந்த அற்புத இரவின் சூத்திரதாரி ஹரிகிருஷ்ணன்.
‘ஒரு அசல் கலைஞனுக்கு பேரனாகவும், ஒரு அசல் இரசனைக்காரிக்கு மகனாகவும் பிறந்த  எனக்கு,  என்னை எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதைவிடக்  கூத்துக் கலைஞன் என்று சொல்லிக்கொள்வதே மிகு உவப்பாக இருக்கிறது’ எனச் சொல்லிக்கொள்ளும் ஹரிகிருஷ்ணன் தமிழின் தனித்துவமான சிறுகதையாளரும் கூட.  ‘மயில் ராவணன்’,  ‘நாயீவாயிச்சீலை’  என சிறுகதைத் தொகுப்புகளும் ‘அருங்கூத்து- தொகை நூல்’ எனும் கூத்து கலைஞர்களின் வாழ்வியற் பதிவுவும் வெளியாகியுள்ளன. ‘விதைத்தவசம்’  இவர் உருவாக்கிய ஆவணப்படம்.
தற்போது   ஜிண்டால்  இரும்பாலையில் எலக்ட்ரிசியனாகப் பணியாற்றும் ஹரிகிருஷ்ணன்  நாட்டார் கலைகளுக்கான 'களரி’ மையத்தை உருவாக்கி இயக்கிவருகிறார். காலம் இதழுக்கான இந்நேர்காணல் மின்னஞ்சல்வழியே நடந்தது.
 
 
 
1.உங்களது பிறந்த ஊர், ஊரின் பின்னணி, உங்களது குடும்பம், உங்களது இளமைக்காலம்குறித்துச் சொல்லுங்கள்?
 
பிறந்தது  பெரியகுனிச்சி. இப்போதைய  வேலூர்  மாவட்டம் திருப்பத்தூருக்கு    அருகாமையில்  இருக்கிறது  இந்த  கிராமம் . உழவும் நெசவும்  பிரதானமான   தொழிலாக  கொண்ட பாட்டன்  துரைசாமி சாயப்பட்டறையில்  ஒற்றைக்கண்  இழந்து  அந்தகன்  ஆகும்  பரியந்தம்   அடுக்கத்தூர்  கொட்டாவூர் கண்ணையன்  ஜமாவில்  மெயின்   ஸ்திரி  பார்ட்   போட்டு  கூத்தாடிக்கொண்டிருந்தாராம். பிறகு அப்பன்  முனிரத்தினம்  பகவான்  வேட தாரி....அம்மா  உண்ணாமலையை  மணம்  முடிக்க   பஞ்சனம்பட்டி  நிலக்கிழார்  முனுசாமியிடம்  பெண் கேட்டுப்போக அவர் , கூத்தாடிக்கு  பெண் தரமாட்டேன் என்று முகத்தில் காறித்துப்பாத   குறையாக  விரட்டிவிட்டாராம்... முன்னே  வைத்த  காலை  பின்னே  வைக்காத எங்கப்பன்  ஆயீக்காக  கூத்தை  விட்டொழித்து  பொதுப்பணித்துறையில்  பரிசாரகனாகி  கர்ம வீரர்  காமராசாவுக்கு  (ஓமலூர்  ஜோடுகுளியில்  உள்ள பயணியர்மாளிகையில் ) காஞ்சி காய்ச்சி  ஊத்தப்   போய்விட  கூத்து  எங்கள் குடும்பத்திலிருந்து  விடை பெற்றுக்கொண்டுவிட்டது .எண்ணம்  ஈடேறி   பிள்ளைகள்  ஏழு   பிறந்தது ...என்  தந்தை  ஊருக்கு  பெரிய மனிதர் ஆனார் .எழுபத்தி ஒன்பது  திருப்பத்தூர்  இந்து  முஸ்லிம்  கலவரத்தின்   போது  , இஸ்லாம்  சகோதரர்களுக்கு ஆதரவாக அவர்  நின்ற  காரணத்தால்  பங்காளிகள்  எங்கள் வீட்டிற்கு  தீ வைக்க  வெறுங்கை வெறும் கால்களோடு இப்போதுள்ள  ஏர்வாடிக்கு  அகதியாக வந்து  சேர்ந்தோம் . பசிக்கு பனம்பழம் ... பன்னகீரை  கடைசல் தான்  எந்நேரமும்   ஆனம் ...அன்னாடம் காய்ச்சி  வண்ணாம் மாத்து  பிழைப்பு ...  பள்ளிக்கு  போவதை விட , என்  அண்ணனிடம்  உதை  வாங்கினாலும் சரி ...  சுத்துப்பட்டில்  நடக்கும்  கூத்துக்கு  ஓடி விடுவதே  எனக்கு  விருப்பமானதாக இருந்தது . கூத்தாடிக்கு  பெண்  தரமாட்டேன்  என்று  சொன்ன   தாய்வழி  பாட்டனுக்கு   மகளின் கூத்துப்பித்து  தெரியாமல் போனது  துரதிஷ்டம் .. ஆம் இன்றைக்கும் என்  அம்மா  பத்து  மைல்  விஸ்தீரணத்தில்  எங்கு கூத்து என்றாலும்  துப்பட்டி  சகிதமாக  கிளம்பிவிடும் .ஒரு அசல்  கலைஞனுக்கு  பேரனாகவும் , ஒரு அசல் பார்வையாளருக்கு  மகனாகவும்   பிறந்த  எனக்கு எழுத்தாளன்   என்பதைவிட  கலைஞன்  என்று  சொல்லிக்கொள்வதே  மிகு உவப்பாக இருக்கிறது .. 
 
 
 
2.நவீன இலக்கியம் மீதான ஈர்ப்பு எங்கிருந்து தொடங்கியது உங்களது எழுத்து ஆதர்சங்கள் யார்?
 
 
பள்ளிக்கூடம் போகாத  நாட்களில் 
பால்யகால  சகி  லட்சுமி  என்கிற  புரிக்கி  வீட்டில்  ஒளிந்து  திரிவேன்.கை கால்கள் வாராமல்  கட்டிலில்  கிடையாக  கிடந்த  அவளது தாயார்  நெஞ்சின் மீது  ஓர்  தாங்கிபோல்  விரைத்து  நிற்கும்  கரங்களுக்கிடையில் வார இதழ்களில்  தொடராக  வந்து  பைண்ட்  செய்யப்பட்ட  ஜெயகாந்தனின்  பாரிசுக்கு போ , ராஜம் கிருஷ்ணனின்  ரோஜா இதழ்கள்  போன்ற  நாவல்களை தலைகீழாக  செருக சொல்லி  வாய்விட்டு  படிப்பதோடு     களைப்படைந்த  தருணங்களில்  எங்களையும்  படித்துக்காட்டசொல்வார்.வாசித்து  காட்டுவதற்கு  ஈடாக அல்லது  முன்சீப்  நாராயணம் பிள்ளை கடையில்  வாங்கி தரும்     தம்பழத்துக்காக   அவர்  அவிழ்த்து  விடும்  கதைகளில்  தான் நவீன  இலக்கிய  ஈர்ப்பும்  வாசிப்பும் தொடங்கியது ...எழுத்து ஆதர்சங்கள் என   சொன்னால் ராஜம் கிருஷ்ணன் , ராஜேந்திர சோழன் , ஜெயகாந்தன் ,டேனியல் ,  சுனில் கங்கோ பாத்தியாய  , மலையாற்றுரூர்  ராமகிருஷ்ணன் , மாண்டோ , எம் . டி .எம் , தகழி , பஷீர் , ஜி .நாகராஜன் , அழகிரிசாமி , கிருஷ்ணன்  நம்பி ,தி ,ஜா  ஆகியோர்களை  சொல்வேன் .
 
 
 
3.கூத்துக் கலைஞரான அப்பாவிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்டதென்ன?
 
 
மரபு கலைக்கூறுகள் , அவற்றின்  நுட்ப திட்பங்கள், நிகழ்த்துபாங்கை குறித்த அறிவு  இவையேதும்  என்  தந்தை வழி    எனக்கு  கிட்டவில்லை . வாழ்க்கை  பகடையில் அவர் தான் வம்பாய்  தொலைத்த  கலை  அவரை  விடாமல் பற்றி  வருத்தியது . சமயங்களில்  கூத்தில் எடுத்த  வீடியோ  பதிவுகளை  வலையேற்ற  நான் சரிப்பார்க்ககும்  பொருட்டு  கணனித்  திரையில்  இயக்க  மத்தள இசைக்கு   தாளாது தாளிட்ட   கதவிற்கு  பின்  அவர்  உடல் தள்ளாமையோடு போடும்  அடவின்  த்வனி  கேட்டு  வேதனைப்பட்டிருக்கிறேன் . இறுதியாக  இயக்குனர்  வச்ந்தபாலனுக்காக   களரி நடாத்திய  அரவான் களப்பலி  கூத்தில்  கிருஷ்ணர்  வேடம் போட  விருப்பபட்டார் .. சினிமாக்காரன்  முன்பு  கூத்தாடவேண்டாம் என்று மறுத்து விட்டேன் . ஆசை நிறைவேறாமல்  போய்  சேர்ந்தது  அவர்  கட்டை .     ஒன்றின் பால்   இயல்பாய்  நமக்கிருக்கும் ஈடுப்பாட்டையையும் , திறமையையும்  எதற்காகவும் , யாருக்காகவும்  அடகு  வைக்கலாகாது  என்கிற வைராக்கியத்தை  அவரின் அனுபவத்தினால்  பெற்றேன் .  
 
 
 
 
 
 
4.இன்றைக்கு தமிழகத்தில் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் போன்றவை இன்னும் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்கள் எவை?
 
அரங்கக்கலைகள்  யாவும்  பார்வையாளன்  என்று சொல்லப்படுகிற  ரசிகனை  பங்காளியாக கொண்டவை .  ருசனை  என்பதும் சின்ன விலை சமாச்சாரமில்லை .கவுண்டன் , செட்டி .முதலியாரென்று   கரை மேல்  நின்று வேலை  சொல்பவர்கள், சோக்காளிகள் , நோட்டு  எண்ணுபவர்கள் , காசுப்பணத்தை   மட்டும்  பெரிதாக நினைப்பவர்  தமக்கு  ஆட்டம், பாட்டம்  எல்லாம்  தொண்டைக்கு கீழே  போனால் நரகல்  என்கின்றார்  போல்  போழுதோட்டும்   சங்கதி. நெற்றி  வியர்வையை   நிலத்தில் சிந்தி    புழுதி மண்ணை  தின்கிறானே பறையனும், சக்கிலியனும், குறவனும்  தான்  பத்தாயிரம் , பதினைந்தாயிரம்  என்று  காசை  காசாக பார்க்காமல்  செலவழித்து  கூத்து விடுகின்றவன் .அவனும்  இந்த மண்ணும்தான்  கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் போன்றவை இன்னும் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்கள்.
 
 
5.இக்கலைகள் பெரும்பாலும் இதிகாசங்கள்,புராணங்கள் சார்ந்து மதக்கறையுடன்தானே விளங்குகின்றன..இவற்றை இன்னும் காப்பாற்றத்தான் வேண்டுமா? இக்கலைவடிவங்களை சமகாலத்துக்கு ஏற்றவாறு கருத்தாக்கத்தில் வடிவமைக்கலாம் எனக் கருதுகிறீர்களா? அய்யா ஓம் முத்துமாரி போன்றவர்கள் அதைச் செய்கிறார்களல்லவா?
 
மனிதன் இடம்  இருக்கும் அழுக்குகளும் , அவனை உள்ளடக்கிய சமூகத்தில்  பட்டிருக்கும்    கறைகளும்  தாமே  அவன் திட்டித்த  மதங்களிலும் புராண  இதிகாசங்களிலும்   மண்டி கிடக்கும் .மூளைக்காரர்களாகிய   நாம் நினைப்பது  போன்று  நட்டார் நிகழ்த்துக்கலைகளும்     சரி  அவற்றின்  சூத்திரதாரிகளும் சரி  எந்த மத போதனைகளைவயு ம் , பிரசாரங்களையும்  செய்வதில்லை . மாறாக அதிலேதும் பட்டுக்கொள்ளாமல் . திரும்ப  திரும்ப  நிகழ்த்துவதினால் அவற்றின்  மூலம்  நாமடையும்   மனகேடுகளை  பகடி செய்கிறான்.  ? இக்கலைவடிவங்களை சமகாலத்துக்கு ஏற்றவாறு கருத்தாக்கத்தில் வடிவமைப்பது  நிகழ்த்துவோனை  மாத்திரம் பொறுப்பாளியாக்கி  செய்யும்  காரியமல்ல.....  படியளக்கப்பட்ட  கர்த்தாக்கள்  மனது வைக்கவேண்டும் ... மற்றும்  பனுவல்  நெறியாளுகை சமாச்சாரமெல்லாம்  கைநாட்டும்  எம் கலைஞர்களுக்கும்   மக்களுக்கும் அப்பாலானது . ஓம்  முத்துமாரி  அய்யா அவர்களுக்கு  தோழர்கள்  கை  கொடுத்தார்கள் ... இங்கு  பேசுகிறார்கள்  அவ்வளவே... 
 
5A. பனுவல், நெறியாளுகை சமாச்சாரமெல்லாம் கைநாட்டும் கலைஞர்களிற்கு அப்பாலானது என்கிறீர்கள்..ஏன் அப்பாலானது? ஏன் வராது? வாய்மொழிக் கலைகளும் கிராமிய கூத்து வாத்தியார்களும் செழித்த நிலமல்லவா இது?
 
 
 
 நாம்  அர்த்தங்கொள்ளும்படிக்கு     பனுவல், நெறியாளுகை சமாச்சாரமெல்லாம் கைநாட்டும் கலைஞர்களிற்குஅப்பாலானது  எனபது நடப்பு உண்மை ..ஆனால் அவர்கள் ஆற்றுகையில்  தானாய்  சமைந்த ,( எப்பொழுது  வேண்டுமானாலும் தன்னை  மாற்றத்திற்கு  இசைவாய்  தகவமைத்துக்கொள்ளும் ) பனுவலும்  நெறியாளுகையும்   புழக்கத்தில்  உண்டு . அவர்கள் பாவிக்கும்  இசையும்  அவ்வழிப்பட்டதே ...அத் திவாரம் இல்லாத  கட்டிடம் இல்லை இது ... உறுதி  மிக்கதன்  கட்டுமானம்   அறிந்தும்  அறியாத  சிவமணிகளாகிய   நம்மால் உணரமுடியாது  ... எழுத்தோர்   படைப்புக்கலையென்பார்  தம்மை   இன்ன  கன்டென்ட் , இன்ன சப்ஜெக்டில்  ஆர்டிகல்   ( படைக்க )இருக்க வேண்டுமென  கோரிவிட்டால்  அதன் பின்   நம் உயிர்  தப்பி  பிழைப்பது  உசிதமில்லை . படைப்பு  சுதந்திரம்  தன்  சூலாயுதத்தால்  நம்மை  சூழ்ந்து  சிறையிடும் ....கூத்தாடி  , அவன்  கலைகள்  எல்லாம்  அப்டேட் , என்றிச் ( யாருக்கு,  எதற்கு , வாய்ப்பு  உண்டா    என்று கேள்வி  கேக்காமல்)  ஆகவேண்டும். இல்லை  டையிங்  ஆர்ட் லிஸ்டில்  சேர்த்துவிட்டு  போய்க்கொண்டே  இருப்பார்கள்.    
 
மேக்பெத்  நாடகத்தை  கூத்தாக  நிகழ்த்தும்  தேட்டமும் , தேவையும்  நமக்கிருக்கலாம்  தப்பில்லை ...இதை  அம்மாபேட்டை  கணேசனோ , எகபுரம் சுப்ரோ  விரும்பவேண்டுமல்லவா ? ஒரு கால்  அவர்கள்  மறுத்தால்  அவர்களது  திறமை குறித்த நமது மதிப்பீடு  என்னவாக  இருக்கும் ...அந்நேர  கற்பனைகள்  , தொடர்  நிகழ்த்துதல்  வழி  அரங்கக்கலைகளில்  ஓர்  நிகழ்வு செம்மையாக்கம்  பெறுகிறது .  ஆசைக்கு  ஈசல்  பிடிக்க  போய்  அரைப்பண்டத்தை  கரையான்  தின்ற  கதையாகி  விடக்கூடாது ... விட்டு  விடுங்கள் ...நாட்டார்  கலைகள்  அதன் போக்கில்  இருக்கட்டும் .
 
 
 
6.கூத்துக்கும் சாதியத்திற்குமள்ள வரலாற்றுத் தொடர்பென்ன? இக்கலையில் சாதியத்தின் பாத்திரமென்ன?
எந்தெந்தச் சாதியினர் கூத்தில் ஈடுபடுகிறார்கள்?
 
கண்ணுக்கு   வெளிச்சமாக   வேடங்கட்டி    தாளம் , காலம் , சுதி யோடு பாட்டுப்பாடி, ஆட்டமாடி  புத்திக்கு  உ றைக்கிற  கதை  சொல்வதுதான்  கூத்து . கூத்தும்  கொட்டும்  கொண்டாட்டமும்     ஒடுக்கப்பட்டவர்களிடம்தான்   வீர்யமாக  , உயிரோட்டத்தோடு   சீவித் திருக்கிறது. மீளமுடியாத  வறுமையில்  உழன்றபோதும்  அவற்றை   ஈடுப்பாட்டோடும் அர்ப்பணிப்போடும்  கைக்கொண்டிருப்போரும் அவர்களே !  ஆக   இக்கலைகள்  வேடிக்கை பார்க்கும்  பண்ணாடிமார்களுக்கு   பாத்தியப்பட்டவை    அல்ல .மாறாக அவை  பறையன் , சக்கிலி , குறவன், தொம்பன்  இவர்களுடைய கலை . இங்கே இந்த  சாதியினரோடு   வன்னியர்களும் , வண்ணார்களும்  கூத்தாடுகிறார்கள் ...ஆனால்  தான் என்று  பறந்தாடும்  கூத்தாடி என்றாலும்  அவன்  பின்னால்  பக்க இசை ( முகவீணை, மிருதங்கம் ) வாசிக்க  மேல்சொன்ன  சாதிக்காரன்  இல்லாமல்  கூத்தே  ஆட   முடியாது . 
 
 
7.வடதமிழகத்தில் கூத்துக்கலை நிகழாதற்கான சமூகவியல் காரணங்கள்எவை?  
 
பிரதேசவாரியாக  அங்கங்கே  பிறந்து  சீர்பெறும் கலை வடிவங்கள் பல ...கால ஓட்டத்தில்  மனிதனின்  அலட்சிய  போக்கால்  அவை அருகி மறைவதும்  உண்டு . அறிவு  அறிய  எனது இருப்பிடத்திற்கு வடக்கே  சென்னை வரையிலும் , வட  கிழக்கில் பாண்டி வரையிலும் , மேற்க்கே  பெருந்துறை  வரையிலும் ,வடமேற்கில்  மைசூர்  ராமாபுரம்  வரையிலும் கிழக்கே ஆத்தூர்  ,மற்றும் தென் கிழக்கில்  துறையூர்  வரையிலும்  தெற்க்கே  கரூர்  வரையிலும்  தென்மேற்கே  பழனி  வரையிலும்  கூத்து இன்றளவும்  செல்வாக்கோடுதான் உள்ளது...ஏனைய  பகுதிகளில்  அவற்றிற்கு  தக  மற்ற   வில்லுப்பாட்டு , தேவராட்டம், லாவணி ,   தோல்பாவை நிழற் கூத்து , பொம்மலாட்டம்  உள்ளிட்ட  நிகழ் கலைவடிவங்கள்  நிகழ்த்துப்பட்டுக்கொண்டுதான் உள்ளன . 
 
8.நீங்கள் உருவாக்கியிருக்கும் களரி அமைப்புக் குறித்து?
 
தொன்மைக்கலையான கூத்து நிலைபெற்று நிற்க வேண்டுமெனில் அதன் நிகழ்த்துனர்கள் வாழ்வியல் பொருளாதார மேம்பாடுடையதாகவும் கலைஞர்கள் உளப்பாங்கு இடுக்குகள் சிணுக்கங்களற்றதாகவும் இருக்கவேண்டுமென்பதை தெளிந்து அதன் வழி அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்கும் பொருட்டும் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அவற்றின் ஆதார படிவம் மாறாது ஒப்பற்ற நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்கு கையளிக்கும் பொருட்டும் கடந்த இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு ஜனவரி மாதம் களரி தொடங்கப்பட்டது. இரண்டாயிரத்து பத்து மார்ச் மாதம் அரசு பதிவும் செய்தாகிவிட்டது. பதிவு எண்- 310|2010
 
களரி- களப்பணிகள்
 
 
முதற்கட்டமாக கொங்கு மண்டல கலைவடிவங்களான கூத்து, பாவைக்கூத்து, கட்ட பொம்மலாட்டம் ஆகியனவற்றை கலைநுகர்வு பரப்பில் கவனப்படுத்தும்படியாக சங்கீத் நாடக அகாதமி சார்பில் சென்னை, டில்லி, கௌகாத்தி உட்பட பிற மாநிலங்களில்  மற்றும் தமிழகமெங்கும் நிகழ்வுகள் நடத்தியது.
 
 
சேலம் மண்டல கலைபண்பாட்டு மையம் வாயிலாக ஈரோடு மாவட்ட கூத்துக்கலைஞர்கள் நாற்பது பேர்களுக்கு வீட்டு மனை பெற்றுத் தந்தது.
 
 
கலைகளோடு கலைஞர்கள் வாழ்வியலையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் அருங்கூத்து என்றதோர் தொகைநூற்பிரதியையும், விதைத்தவசம் என்றதோர் ஆவணப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.
 
 
மூத்த கலைஞர்களுக்கு அரசு வழங்கும் நல உதவிகள் பெற்றுத்தருவது உட்பட எண்பதுக்கும் மேற்பட்ட நிகழ்த்துக்கலைஞர்களை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச்சேர்த்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் பெற களப்பணி ஆற்றியிருக்கிறது.
 
 
கலைஞர் பெருமக்களை உத்வேகப்படுத்தும் கடப்பாட்டில் கடந்த ஐந்து வருடங்களாக விழா எடுத்து பாராட்டுக்களோடு பரிசத்தொகைகள் வழங்கி கௌரவித்திருக்கிறது
 
 
களரி முன்னெடுத்துள்ள மற்றும் சில செயற்பாடுகள்
 
 
பெண் பொம்மலாட்டக்கலைஞர் பெரிய சீரகாப்பாடி சரோஜா-முத்துலட்சமி அவர்கள் குறித்த ஆவணப்படத்தயாரிப்பு.
 
 
 
 
உலக பிரபஞ்சத்தில் மாசுமருவற்றதும், கலப்படமற்றதும், கேட்கின்ற பேரை மனிதனாக பண்படுத்தும் இசையாகப்பட்டது கூத்தில் இடைவெளியை இட்டு நிரப்புவதற்கும், ஒட்டு போடுவதற்கும், கதை கட்டங்களை நிகழ்வுக்கோர்வையை, தளர்த்தி முறுக்குவதற்கும், வேடதாரிகள் பேசுகின்ற வசனங்களை அடிக்கோடிட்டு பார்வையாளர் இதயத்தில் அழுந்த பதிப்பதற்குமானதன்று! அது அம்பலக்கலையின் உயிர்த்தளம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் முகவீணை, மிருதங்கம் தாளம், ஹார்மோனியம் முதலிய பக்க இசைக்கலையில் விற்பன்னரான கூத்திசை மேதை அம்மாபேட்டை செல்லப்பன் அவர்களை குறித்த ஆவணப்படத்தயாரிப்பு.
 
 
ஆதியில் புழக்கத்தில் இருந்து தற்பொழுது அருகிவிட்ட கூத்து பனுவல்களை சேகரித்து பிரதியாக்கம் செய்யும் முயற்சியில் சபையலங்காரம், உடாங்கனையின் கனவு நிலை முதலிய பிரதிகளின் அச்சாக்கப் பணிகள். 
 
வளர் தலைமுறையினருக்கு நமது தொல்கலைகள் குறித்த கவனத்தையும் , விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாக களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு ஒன்றினை தருமபுரி மாவட்டம் , பென்னாகரம் வட்டம் , மூங்கில் கோம்பை கிராமத்தில் உள்ள கூட்டுறவு வனப்பண்ணையில் நிகழ்த்தவிருக்கிறது
 
 
கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல,அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள தொல்கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் நுண்கலைகளின்தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு.மரபார்ந்த தொல்கலைக்ககூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக்கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும், அக்கறையையும், அதிகாரங்களுக்கு எதிரான போர்க்குணங்களையும், கலகக்குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெறவேண்டியிருக்கிறது. அத்துடன் ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வேறெந்த கொம்பு முளைத்த கலையிலக்கிய உற்பவனங்களும் தந்து விட முடியாது. சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக்கலைஞர்கள் மீளமுடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம், உடல், பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்.நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும் அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச்செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும்.கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அவற்றின் தொன்மம் மாறாது பாரம்பர்யம் வழுவாது ஒப்பற்ற நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்கு கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது. மேற்சொன்ன களப்பணிகளில் கடந்த ஐந்தாண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும் களரி தொல்கலைகள்& கலைஞர்கள் மேம்பாட்டு மையம், கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம்,சேவாட்டம் முதலிய நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளியை சேலம்மாவட்டம் ஏர்வாடியில் தொடங்கவிருக்கிறது. அதற்கான ஆரம்பகட்டப்பணிகள் ஏலவே செயலாக்கம் பெற்றுவிட்டன. பெரும் நிதி வேண்டும் இக்களப்பணிக்கு அன்பர்கள் உற்ற நிதியுதவி செய்து உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
 
 
 
9.இத்தகைய பாரிய வேலைத்திட்டத்திற்கு நிதியாதாரங்களை எங்கிருந்து பெறுகிறீர்கள்? அரசு உதவுகிறதா?
 
 வேலைத்திட்டம் எது வென்றபோதிலும்  எண்ணத்தை  செயலாக  மாற்றும் முன்  அதற்கு  வேண்டிய  நிதியில்  மூன்றில் இரண்டு  பங்கு கைப்பணத்தை  எடுத்து வைத்தப்பிறகே காரியம்  தொடங்குகிறேன் .. இயலாத அரும்பெரும்  செயற்பாடுகளுக்கு  என் ஆப்த நண்பர்களும் , கலை ஆர்வலர்களும்  உதவுகிறார்களே அன்றி அரசோ , அதைபோன்ற  நிறுவனங்களோ  இதுவரை  உதவவில்லை .
 
 
 
 
10.இயல் -இசை - நாடக மன்றம்நாட்டுப்புறக் கலைஞர்களைத் திட்டமிட்டுப் புறக்கணிப்பதாகச் சில காலத்திற்கு முன்பு கடுமையாக எழுதியிருந்திர்கள்..இப்போதும் அந்தப் புறக்கணிப்புத் தொடர்கிறதா?
 
ஆட் சிக்கு   வ ரும்   எந்த  கட்சியாக  இருந்தாலும்  தன்  அனுதாபிகளுக்காக  தான்  வாரியங்களை   உற்பவனம் செய்கின்றன . வாக்களித்த  சனங்களின்  வாழ்வு  மேம்பாடு  கருதி  அவை ஒருபோதும்  செயற்படுவதில்லை  .  இயல் -இசை - நாடக மன்ற  பொறுப்பாளிகளாக பீடமேறும்  சினிமாக்காரர்கள்  தொல் கலைகள்  குறித்த அடிப்படை அறிவு  கூட  இல்லாதாவர்கள் ..அருமை தெரியாதவர்களிடம்  போனால்  நம் பெருமை குலைவதில்  ஆச்சிரியம்   ஏதுமில்லை ... 
 
 
 
11.கூத்துக் கலைஞர்களை தமிழ்ச் சினிமா ஓரளவாவது உள்வாங்கிக்கொண்டுள்ளதா?
 
மூன்று  வருடங்களுக்கு முன்போர் சமயம் ,
வசந்தபாலன்  என்கிறதோர்  திரை ஆகிருதி   மகாபாரத  அரவான் பாத் திரவார்ப்பின் தொன்மம் அறிய வேண்டி , கூத்துப்பார்க்க  தன்   சேனா சைன்யங்கள், பரிவாரங்கள்  புடை சூழ   எங்கள்  குற்றூருக்கு  களமிறங்கினார் .அன்செட்டிப்பட்டி  துரைசாமி , அம்மாபேட்டை கணேசன் ,  உள்ளிட்ட  கூத்து ஆளுமைகளை  ஒருங்கிணைத்து  அரவான் கடபலி  கூத்து ஏற்பாடு  செய்திருந்தேன் . குறித்த நேரத்தில்  சம்பிரதாய  பூசனைகள்  முடித்து  களரி  கூட்டி  நிகழ்வு  துவங்கியது.
 
அதுதொட்டு  விடிகிற  வரை  (   ஹார்மோனியத்தை  நிறுத்தி  தரு பாட சொன்னது , ஜால்ரா  - கைதாளத்தை  போடாமல்  மிருதங்கம்வாசிக்க  பணித்தது , சபையில்  ஆடிய  கலைஞனை  கைசொடுக்கி  கூப்பிட்டு  தன்  காலடியில் ஆட ஏவியது   , பலியாக  போகிற  காட்சியில்  அரவான் வேடதாரி  வன  மிருகங்களிடம்  கடைசி  விடைபெற்றுக்கொள்ள  உக்கிரமாக  பாட்டு  எடுக்க  அந்நேரம்  இவர்  முகவீணை கலைஞரை  அழைத்து , அருகமர்த்தி,  உங்க  முகவீணையில்  இருக்கும்  இந்த  ஏழு துளைகளில்  மட்டும்தான்  காத்து வருகிறதா  இல்ல எல்லா  முகவீணையிலும்  அந்த மாதிரி  காத்து வருகிறதா   என்ற  தனது ஐயத்தை  நிவர்த்திக்க  முரண்டுப்பிடித்தது என )  முற்போக்கு  இயக்குனரின்  நெறியாளுகையின்  தீவிரத்தில்  சிக்கி  கூத்தின்  ரத்த  அழுத்தம் அபாய  அலகுகளை  தாண்டி  எகிற , பொறுமை  முற்றிலும்    இழந்த நான்  அவனை  போடா  வெளியே  என்று  கழுத்தை  பிடித்து  தள்ளும்  நிலைமைக்கு போக , விருந்தாடியை  அவமதிக்கலாகாது என நண்பர்  முர்த்தி  எனை  தடுத்தாட்கொண்டார்.
 
வல்லிய காணூடகத்தை கலையாக   பார்க்காமல் , வேவாரமாக  பார்க்கும்  மேல்மேச்சல்காரர்கள்   மலிந்த தமிழ் சினிமா  உலகு , 
ஒரு மோஸ்தருக்காகத்தான்  கூத்து  முதலான நிகழ்த்துக்கலைகளையும், கலைஞர்களையும்    பயன் படுத்த  விழைகிறதே  அன்றி , அதை  கனம்  பண்ணுகிற  நோக்கோ , முனைப்போ கிஞ்சித்தும்  கிடையாது .
 
 
 
11அ-பல்கலைக்கழகங்கள்   ஆதுரத்தோடு  அவை இயக்கும்  நிகழ்  கலைத்துறை , களப்பணிகள்  பல கண்டு  அவற்றில்  முனைவர்  பட்டம்  பெற்று  திறமையால்  மட்டுமே , வாயிப்பு பெற்று  அங்கே  கடைமையாற்றும்  பேராசிரியர்கள்  நாட்டார்  கலைகள் மற்றும்  கலைஞர்கள்  மேம்பாட்டில்  ஒத்துழைப்பு  நல்குகிறார்களா ?
அவர்களுடனான  உங்கள் ஒட்டுறவு  எப்படியிருக்கிறது ?
 
 
 புதுவை   பல்கலை கழக ஸ்கூல்  ஆப்  பெர்போர்மிங்  ஆர்ட்ஸ்  துறை  தலைவராக  காரியமாற்றிய   பேராசான் அய்யா  திரு . கருஞ்சுழி  ஆறுமுகம்    அவர்கள்  மதுரை வீரன்  கூத்து பார்க்க  வேண்டுமென  கோர,  நான்  எடப்பாடி  நல்லதங்கையூரில்  வடிவேல்  வாத்தியாரின் ஜமா  மதுரை வீரன்  கூத்தாடும் தகவலை  சொல்லி வரச்சொல்லியிருந்தேன் ...அவர்  எனக்கு தெரியாமல்  வந்ததோடு  அந்த கூத்தை வீடியோ  பதிவும்  எடுத்துக்கொண்டுவிட்டார் . அதே கையோடு    வடிவேல்  வாத்தியாரை மாணவர்களுக்கு  பயிற்சி  கொடுக்க என்று  கூட்டி  சென்று  அறையும்  குறையுமாக தான் பயின்று  மேலை தேயம்  ஒன்றில்  அவர்  மதுரை வீரன் வேடந்தரித்து  கூத்து ஆடியிருக்கிறார் . ஓர் கூத்து  குடும்பத்தை   சேர்ந்த  தான்  போய் அறிவு  கொள்ளை  அடிக்க தகுமா ?   இப்படிதான்   நான்போய்  வெளிநாட்டில்  கூத்தாட  போகிறேன் , எனக்கு  மதரை வீரன் கூத்தின் அரிச் சுவடி  கூட  தெரியாது .  உங்களிடம்  அதை  பயின்றுதான்  ஆட வேன்டும்  என்று  சொல்கிற  குறைந்த  பட்ச  நேர்மையாவது  வேண்டாமா ?
 
 
 
மதுரை  காமராஜர்  பல்கலைகழகத்தில்  விதைத்தவசம் 
( தோற்ப்பாவை  கலைஞர் அம்மா பேட்டை   கணேசன்  அவர்களை குறித்த)  என்றதோர்  ஆவணப்படத்தை   இரண்டு வருடங்களாக  திரையிடுகிறார்கள் ....இன்னும்  கைகூடவில்லை ....வாழ்க  அதன் துறைத் தலைவர்! வளருக அவர் செயலூக்கம்!
 
 
சென்னை  பல்கலைகழகத்தில்   முனைவர்  பட்ட ஆய்வு  செய்த  காலத்தில்  முத்துகந்தன்  என்பவர்   தனது   நெறியாளருக்காக  சுமார்  முப்பது  கூத்து கலைஞர்களின்  நேர்காணலை  ( அவரிடம்  இருந்ததும்  மொத்தம்  முப்பது  கேள்விகள்தாம் ) தொகுத்து  எடுத்து சென்றார் .  இன்று கருணா பிரசாத்தின்  போதி  வெளியீட்டில்  புத்தகமாக்கி  விற்றுவரும்    நெறியாளர்  கோ .பழனி  அய்யா  அவர்களுக்கு  செவ்வி  தந்த கூத்து  வாத்தியார்களுக்கு   ஒரு பிரதி  தரவேண்டும் என்ற  மரியாதையை  யார்  கற்று தருவது ? 
 
வருடத்திற்கு  வருடம் தவறாமல்   ஆறு வருடங்களாக வளாகங்களுக்கு நான் அனுப்பும்  மக்கள் கலை  இலக்கிய விழா  அழைப்பிதழை  மதித்து     பேருக்கென்று   ஒரு  மாணவனை  கூட இந்த  பேராசான்கள்  நிகழ்வுகளுக்கு  அனுப்பியதில்லை . 
 
 பல்கலைகழக வளாகங்களில்    வருடம் தவறாது    இந்திய அளவிலான  நாட்டுப்புற வியலாளர்களின்  கூடுகை  ஒன்று  நடத்துகிறார்கள் . மறந்தும் கூட  கலைஞர்களை  பேராசான்கள்  அழைப்பதில்லை . ஏனோ  தெரியவில்லை   மாணவர்கள்  - கலைஞர்கள்  சந்திப்பை  ஒரு  முறை  பிறழ்ந்த  உறவாக  கருதி  அவ்வளவு  பிடிவாதமாக  தவிர்க்கிறார்கள். இதற்கான காரணம்  கண்டு சொல்வது ஆர் ? 
 
 பனை மரத்து  நிழலும்  சரி! பங்காளி  உறவும்  சரி என்றொரு  பழமொழி  உண்டு .       
  
 
இப்படிதான்  இருக்கிறது எங்கள்  உறவு .
 
 
 
12.நவீன நாடக இயக்கங்கள்கூத்துக் கலைக்கு ஒரு மறுமலர்ச்சியை அளிக்க முயல்கின்றனவா? புரிசை தம்பிரான் போன்றவர்களிற்கு அவர்கள் புதிய களங்களை அமைத்துக்கொடுத்தார்களல்லவா?
 
இல்லை .அவற்றிலிருந்து  கூத்து முதலான  நிகழ்த்து  கலைகள்  விடை  பெற்றுக்கொண்டுவிட்டன .  அவர்கள்  அமைத்துக்கொடுத்த  களத்தில்  கழுதை  புரண்டுக்கொண்டிருக்கிறது .
  
 
13. கூத்துப் பட்டறை போன்ற நிறுவனங்கள் வணிகச் சினிமாக்களிற்கு நடிகர்களைத் தயாரித்தளிக்கும் பட்டறைகளாக மாறியிருக்கின்றன என்றொரு விமர்சனம் உண்டல்லவா?
 
ஆம் ... முற்றிலும்  உண்மை . வெறும் நிறுவனங்களாக ஆவது     மாத்திரம் மனிதனின்  ஆக  பெரிய  குறிகோளாக  ஆன     பின்  அவனும்  அவனது  தேட்டங்களும்   சுயம் திரிந்து  இந்நிலையை  அடைவது  தவிர்க்க முடியாதது .
 
14.தமிழ் நவீன இலக்கியத்தில் கூத்துக்கலை குறித்த பதிவுகளுண்டா? சிறுபத்திரிகைகளின் ஆதரவு கூத்துக்கலைக்கு எவ்வளவு இருக்கிறது?
 
எனக்கு தெரிந்தவரை  யாத்ராவில்  வந்த  வெங்கட்  சாமிநாதனின் மற்றும்  செ . ரவீந்திரனின் . கட்டுரைகள் ... அகரம்  வெளியீடாக  வந்த  ந .முத்துசாமி  அவர்களின்  அன்று பூட்டிய வண்டி ....
 நீண்ட  இடைவேளைக்கு  பிறகு  மணல்வீட்டில்  வந்த  அருங்கூத்து  தொகை நூற்பிரதி .... பெரும்பான்மை           சிறுபத்திரிகை காரர்கள் 
போதைக்கு  ஊறுகாயாகத்தான் கூத்துக்கலையை  பாவிக்கிறார்கள் . அவர்கள் ஆதரவு  வெறும்  தேங்காய்  மூடி  கச்சேரிதான் .
 
 
15. இன்றைக்குக் கூத்தக் கலைஞர்களின் தொழில் எப்படியிருக்கிறது? கூத்து சோறுபோடும் நிலையிருக்கிறதா?
 
 
 கொங்கு   மண்டலத்தில்  கூத்து   சடங்கு சார்ந்த  ஒரு நிகழ்வாக  இருப்பதால் .. மக்களிடம்  பரந்துப்பட்ட  ஆதரவை  பெற்றுள்ளது .மார்கழி  முதல்  ஆடி  வரை  கூத்துக்கு  இங்கே  நிறைந்த  சீசன் . ஒவ்வொரு  கலைஞனும்  வருடத்திற்கு  150 முதல் 200   இரவுகள்  கூத்தாடுகிறான் . அவனது வருட வருமானம்  சராசரியாக  ஒன்றரை  லட்சம் ...அவன்  பத்து  பேருக்கு சோறு போடுவான் .கூத்து அவன் பரம்பரைக்கும்  சோறு போடும் . 
 
 
 
16.கூத்துக் கலையில் ஈடுபடும் பெண்கள் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்களா ? அவர்களது நிலை எப்படியிருக்கிறது? 
 
 
ரெகார்டு  டான்ஸ்  ஆடும்  பெண்ணை   நானூறு  பேர்கள்  பாத்திருக்க  நட்ட  நடு  அரங்கத்தில்  லக்ஸ் ஷோப்  கொடுத்து  நிர்வாணமாக   நீராட  பணிக்கிறோம்  காசு கொடுக்கும்  பன்னாடிகள் . இப்படி  கலைதொழிலில்  ( எந்த கலையாக  இருக்கட்டும் ) ஈடுப்படும்  பெண்களுக்கு  புறக்கணிப்பை  மட்டுமல்ல  வாழ்நாளில்  மறக்க ஒண்ணாத  அவமதிப்புக்களை  நமது  சமூகம்  பரிசளிப்பதை  சொல்லி தெரிய வேண்டியதில்லை ...அதிட்டவசமாக  கொங்குசீமை  நிகழ்த்து   வெளியில்  .கூத்தாடும் பெண்கள்   அந்த அவகேட்டிற்க்கு   ஆளாகவில்லை . இல்லையென்றால்  நான்கு தலைமுறையாக  கந்தாயீ , பூவாயி , பவுனாம்பா , லட்சுமி  போன்ற கலைஞர்கள்  தனித்து  ஜமா  வைத்து   கூத்தாடியிருக்க முடியாது. இன்றளவில்  கூத்தாடும்  சத்தியவதி , கந்தம்மாள்  ஆகியோர்களுக்கு  இந்த  மன குறைகள்  இல்லை .
17.திருநங்கைகள் கூத்தில் பங்குபெறுவதுண்டா?
 
 
ஆம்   கூத்தில்  திருநங்கைகள்  பங்குபற்றி   சிறந்து  விளங்கி வருகிறார்கள் தெருக்கூத்தில் திருநங்கைகளை பங்கேற்க வைப்பதில் முன்னோடியானவர் கூலிப்பட்டி சுப்ரமணி வாத்தியார் அவர்களே! அவரது ஜமாவில் பங்கு பற்றிய ரேகா அவர்களை தொடர்ந்து ஒக்கிலிப்பட்டி சாமியாருடன் இயங்கிய அபிராமி, புவியரசி,ஆகியோருடன் கனகு அவர்களும் சுப்ரு வாத்தியாரிடம் கடந்த பத்தாண்டு காலங்களாக வேடங்களிட்டு ஆடி வருகிறார். ஒப்பு நோக்கும்போது திருநங்கையருக்கு ஆடவர் பெண்டிரைக்காட்டிலும் விஞ்சிய கலைத்தேட்டமும்,நுகர்வும், உற்றுநோக்கி உள்வாங்கும் திறனும் இருப்பதை உணரலாம். மண்டோதரி, அதி வர்ணமாலை, துரோபதை, ஏலக்கன்னி போன்ற பெருங்கொண்ட கதைமாதர்களாக தோன்றும் க�

https://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/1403594413235162

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.