Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்‌ஷேவை இடித்தால் சுப்ரமணியன் சுவாமிக்கு வலிப்பதேன்!? -ப.திருமாவேலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR.SS.jpg

நன்றி: ஆனந்த விகடன் - 13 Aug, 2014. 

வரலாற்றின் குப்பைத் தொட்டியை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கு, வலியப் போய் மலர் மாலைகள் சூட்டவிருக்கிறது இந்தியா! 

ராஜபக்ஷேவை உலகின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கானதருணம் நெருங்கிக்கொண்டிருக்கும்போது, அவரிடம் ராணுவப் பாடம் கேட்பதற்குத் தயாராகிறது இந்தியா. இந்த மாதம் 18-20 தேதிகளில், கொழும்பில் நடக்கும் ராணுவக் கருத்தரங்குக்கு இந்தியப் பிரதிநிதிகள் செல்லப் போவதாகத் தகவல். செப்டம்பர் மாதம் 18-21 தேதிகளில், ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு ஒன்றைக் கூட்டி, 'ஆசிய சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புதல்’ என்பது பற்றி பேச இருக்கிறார் ராஜபக்ஷே. போகிற போக்கைப் பார்த்தால், அதற்கும் பா.ஜ.க தனது பிரதிநிதியை அனுப்பக்கூடும்போல.

Mahinda-Swamy.jpg

ராணுவக் கருத்தரங்கம், அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு... என்றெல்லாம் நடத்துவதற்கான தேவை ராஜபக்ஷேவுக்கு இருக்கிறது. ஏனெனில், ஐக்கிய நாடுகள் சபை தன் விசாரணை ஆணையத்தை அமைத்துவிட்டது. ராஜபக்ஷே வலிய வலிய பல நாடுகளுக்குச் சென்று கை குலுக்கினாலும், ஐ.நா வாக்கெடுப்பில் அவர்களுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கின்றன. அமெரிக்கா பக்கம் போகவே முடியவில்லை. லண்டனுக்கு ஒரு தடவை சென்றபோது, தலைமறைவாகத் தப்பிவந்ததே பெரும்பாடு ஆகிவிட்டது. கனடா, விசா தரத் தயங்குகிறது. 'காமன்வெல்த் போட்டிகளைப் பார்க்க ஏன் போகவில்லை?’ என்று கேட்டால், 'பாதுகாப்புக் காரணங்களுக்காக’ என்று எழுதுகின்றன கொழும்பு பத்திரிக்கைகள். இந்தியாவுக்குள் வந்து போனாலும் ஏராளமான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி சொந்த தேசத்துக்குள் முடங்கிக்கிடக்கிறார் ராஜபக்ஷே. 

சரி, இலங்கைக்குள் அமைதியாக இருக்க முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் என்பதால், அலறி மாளிகையில் அலறல் சத்தம் அதிகமாகக் கேட்கிறது. இதுவரை புலிப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த ராஜபக்ஷேவால், போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும் இலங்கை மக்களுக்கு எந்த சுபிட்சத்தையும் காட்ட முடியவில்லை. 'கடன்... கடன்... மேலும் கடன்’. நாடே கடனில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. குடியானவனின் கஞ்சிக் கலயத்தையும் பறிக்கும் நோக்கத்தோடு பண்ணையார்கள் கடன் கொடுப்பதைப்போல, இலங்கைக்கு சீனா சில்லறைகளை வீசி வருகிறது. வட்டி கட்ட முடியாத நிலையில், திரிகோணமலைப் பகுதியில் 1,200 ஏக்கர் நிலத்தை சீனாவுக்குத் தாரை வார்த்துவிட்டார்கள். எல்லா இடங்களிலும் சீனத் தொழிலாளர்கள் வந்துவிட்டதால், சிங்களத் தொழிலாளர்கள் சினத்தோடு திரிகிறார்கள். 

ராஜபக்ஷே சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர். பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய தேசியக் கட்சி. அதன் தலைவர் ரணில் விக்கிரம சிங்கே, இப்போது எழுந்து நிற்க ஆரம்பித்துவிட்டார். 'கடந்த காலங்களில் இந்து மகாசமுத்திரத்தின் நித்திலம் என்றும் தர்ம தீபம் என்றும் வர்ணிக்கப்பட்ட நம் நாடு, இன்று உலகின் இழிவான நாடுகளின் வரிசையில் இணைந்துவிட்டது’ என்று பிரசாரம் செய்கிறார் ரணில். ராஜபக்ஷேவின் கூட்டணிக் கட்சிகள், விலக நேரம் பார்த்து வருகின்றன. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிலரே, ஆட்சிக்கு எதிராகக் கருத்துகள் சொல்லி வருகிறார்கள். 'இருளை எதிர்க்கும் உங்களுக்கு’ என்று ஜூலை 31-ம் தேதி நள்ளிரவில் சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் நாடு முழுக்க போஸ்டர் ஒட்டினார்கள் சிலர். அந்தச் சிலர் யார் என்றே ஆட்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 'முதலாம் முன்னணி’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் 'நாங்கள்தான் ஒட்டினோம்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணிலைச் சந்தித்துச் சொல்லியிருக்கிறார்கள். 

ராஜபக்ஷே இப்போது இருக்கும் சுதந்திரா கட்சி, சந்திரிகா குமாரதுங்காவின் அப்பா ஆரம்பித்தது. சந்திரிகாவை விரட்டிவிட்டு மகிந்தா சகோதரர்கள் கட்சியைக் கைப்பற்றிவிட்டார்கள். அதனால், அவர்களைக் கவிழ்க்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு இருக்கிறார் சந்திரிகா. பல்வேறு சர்ச்சைகளுக்கு அடித்தளமிட்ட பெண் நீதிபதி ஷிராணியைப் பொது வேட்பாளராக நிறுத்த பலரும் முயற்சித்து வருகிறார்கள். 'மகன் நிமல் ராஜபக்ஷேவை ஜனாதிபதி ஆக்குங்கள்’ என்று மகிந்தாவின் மனைவி நிஷாந்தி கோரிக்கை வைக்கிறார். மகிந்தாவின் தம்பிகளான பஷில், கோத்தபயவுக்கும் - நிஷாந்திக்குமான யுத்தத்தின் வெளிப்பாடு இது. 

இப்படி எல்லா வலிகளும் உடம்பில் வந்த பிறகு அத்தனையையும் மறைக்க, சண்டையையே சாதனையாகக் காட்டி மொத்தத்தையும் திசை திருப்ப நினைக்கும் ராஜபக்ஷேவின் தந்திரம்தான் ராணுவக் கருத்தரங்கமும், ஆசிய அரசியல் கட்சிகளின் ஆலோசனையும். இதில் இந்தியா கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? 

'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்று சொல்லிவிட்டு அப்பாவி மக்களை வாழைக்குலைகளைப் போல வெட்டிச் சாய்த்த இரக்கமற்றவர்களிடம் ரத்தப் பாடம் கற்றாக வேண்டுமா? போர் நடக்காத நாடு எதுவும் இல்லை. ஆனால், போர் நெறிமுறைகள் அனைத்தையும் மீறி நடந்த அக்கிரமப் போர் அவர்கள் செய்தது. மருத்துவமனைகள், பள்ளிகள் மீது கொத்துக் குண்டுகளைப் போட்டு, தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸை மக்கள் வாழும் பகுதியில் வீசி, பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தவர்கள் அவர்கள். 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட கணக்கின்படி வன்னிப் பகுதி மக்கள் தொகை, 4,29,059. 2009-ம் ஆண்டு மே மாதம் போர் முடிந்த பிறகு முகாம்களுக்குத் திரும்பியவர்கள் 2,82,380. மீதம் உள்ள 1,46,679 பேரைத் துள்ளத் துடிக்கக் கொன்று குவித்தவர்கள் அவர்கள். 

அட தமிழர்கள் சொல்வதை நம்ப வேண்டாம். ஐ.நா அமைத்த குழுவில் இந்தோனேசியாவைச் சேர்ந்த மார்சுக்கி தாருஸ்மான், ஐக்கிய அமெரிக்கர் ஸ்டீவன் ரட்னர், தென் அமெரிக்கர் யஸ்மின் சூக்கா ஆகியோர் கூறுவதை நம்பலாமே! இவர்கள் அளித்த அறிக்கையில், 'சிறு குழந்தைகளின் உடல்கள் சிதறி மேலே மரங்களில் சிக்கிக்கொண்டிருந்தன’ என்று சொல்லப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு, புது மாத்தளம், முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகள் மீது ஒவ்வொரு நாளும் எத்தனை தடவை குண்டு வீசப்பட்டன என்று அந்த அறிக்கையில் உள்ளது. ஒரே நாளில் ஒன்பது முறை புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது குண்டுகள் வீசப்பட்டன. மருத்துவமனைகள், கோவில்கள், பள்ளிகள் மீது குண்டு வீசக் கூடாது என்பதுதான் முதல் பாடம். அதையே மீறிய கொடூரர்களிடம் என்ன பாடம்? 

'கொலை செய்யப்படும் முன் அல்லது பின் வன்புணர்ச்சி அல்லது பாலியல் வன்முறை நிகழ்ந்திருக்கலாம் என்ற உறுதியான ஊகத்தை ஏற்படுத்துகிறது’ என்று ஐ.நா அறிக்கை சொல்கிறது. மகளையும் தாயையும் ஒரே நேரத்தில் நிர்வாணமாக்கி பாலியல் வேட்டையாடிய பாவிகள். வன்புணர்ச்சி செய்து கொன்ற காட்சியை ஒளிபரப்பிய சேனல் 4, கொல்லப்பட்ட உடலின் பெண் உறுப்பில் துப்பாக்கியை நுழைத்து 'பாலியல் அசைவுகளை’ மேற்கொண்டதைக் காட்டத் தயங்கியது. நாடு முழுக்க நடந்தது நரபலி. அதுவும் இனப் பலி! 

இப்போதும் அங்கு நிலைமை எதுவும் மாறிவிடவில்லை. வானத்தில் இருந்து கொத்துக் குண்டுகள் வீசவில்லையே தவிர, போர் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது நடப்பது உளவியல் போர். உணர்வற்ற பிண்டங்களாக தமிழர்களை மாற்றும் போர். உடம்பில் உயிர் இருக்கும். ஆனால், சித்த பிரமை பிடித்தவர்களைப்போல உருமாற்றி வருகிறார்கள். தமிழர்கள் பெரும்பான்மை இருந்தால்தானே வடக்கு, கிழக்கை இணைக்கச் சொல்வார்கள், தனி நாடு கேட்பார்கள்... என்று மொத்தப் பகுதியிலும் சிங்களக் குடியேற்றம் நடந்து வருகிறது. பத்திரங்கள் தமிழர்களிடம் உள்ளது. ஆனால், நிலங்கள் சிங்களர் வசம். 

''இலங்கையில் ஒரே இனம்தான் உள்ளது. அது சிங்களர்கள் மட்டும்தான். இஸ்ரேலைப்போல இலங்கையும் ஒரே இனத்தைக்கொண்ட நாடு. தென்னந்தோப்புகளில் இடையிடையே வாழைச்செடிகளும் கடுகுச் செடிகளும் செழிப்பாக வளர்ந்தாலும், அதை தென்னந்தோப்பு என்றுதான் சொல்வோம்'' என்று பொதுபல சேனப் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொக்கரித்திருக்கிறார். சமீபத்தில் தமிழ் முஸ்லீம்களை வேட்டையாடிய அமைப்பு இதுதான். 

இவை அனைத்தையும் சொரணையே இல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. மறைமுகமாக உதவிகள் செய்தது. அதனாலேயே தமிழகத் தேர்தலில் மரண அடி வாங்கியது. இப்போது பா.ஜ.க-வின் நேரம். 

ராஜபக்ஷேவையும் நரேந்திர மோடியையும் கூடிக் குலாவவைக்கத் துடிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி. 'மோடியின் கீழ் இந்தியா - உலகுக்கும் தெற்காசியாவுக்கும் தேவை’ என்ற தலைப்பில் கொழும்பு சென்று ஜூலை 21-ம் தேதி பேசினார் சு.சுவாமி. ஒரு வாரம்கூட ஆகவில்லை. 'மோடிக்கு ஜெயலலிதா காதல் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்’ என்று இலங்கை ராணுவத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் செய்தி போடுகிறது. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும், தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று துணிச்சலாகத் தீர்மானம் இயற்றிய ஜெயலலிதா மீது, ராஜபக்ஷே கூட்டத்துக்கு கோபம் இருக்கலாம். ஆனால், மோடியையும் சேர்த்துக் கொச்சைப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சுவாமி வெண்சாமரம் வீசி தனது விசுவாசத்தைக் காட்டுகிறார். 

'இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை ஜெயலலிதா தீர்மானிக்க முடியாது’ என்பது சுவாமியின் கட்டளை. அப்படியெனில், இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் இவருக்கு என்ன அக்கறை? தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரைக் கொச்சப்படுத்துவதற்கு இலங்கைக்கு உரிமை உள்ளது என்றால், லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றவர்களைக் கண்டித்துத் தீர்மானம் இயற்ற தமிழக முதல்வருக்கு உரிமை இல்லையா? 'இலங்கை அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களை தமிழக மக்கள் தோற்கடித்துவிட்டார்கள்’ என்று கொழும்பில் போய்ச் சொல்லும் உரிமையை பா.ஜ.க தலைமை சுவாமிக்குக் கொடுத்துள்ளது. சபாஷ்! தோற்றுப்போனது பா.ஜ.க கூட்டணியில் இருந்த வைகோதான். இந்தியாவின் தேர்தல் அரசியலை கொழும்பில் பேச முடியுமானால், கொழும்புக் கொலைகளை தமிழக முதல்வர் பேசக் கூடாதா? இலங்கை அரசுக்கு எதிராகக் குரல்கொடுத்த ஜெயலலிதாதான், 39-க்கு 37 இடங்களில் வென்றார். அதே சமயம் சிங்களர்களோடு கைகோத்திருந்த காங்கிரஸ் கட்சிதான் 40க்கு 0 வாங்கியது. இதை இந்தியா முழுக்க ஜெயித்து, தமிழகத்தில் தோற்ற மோடி உணர வேண்டும். 'விடுதலைப் புலிகள் அமைப்பை எம்.ஜி.ஆர்-தான் உருவாக்கினார்’ என்று ஜெயவர்த்தனா சொன்னதில் இருந்துதான், ஈழப் பிரச்னையில் தமிழகம் ஒரே குரலாக ஒலித்தது. இப்போதும் இலங்கை ராணுவ வலைதளத்தில் ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்திய விவகாரத்திலும் தமிழகம் ஒருமுகம் கண்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஈழ அனல் அடிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு இது. 

'வயிற்றில் குத்துவதுபோல வந்து முகத்தில் குத்த வேண்டும்’ என்பது 1983-ம் ஆண்டு ஜூலை கலவரத்தின்போது ஜெயவர்த்தனா சிங்களர்களுக்குச் சொல்லிக் கொடுத்த பாடம். 30 ஆண்டுகள் ஆன பிறகும் குத்திக்கொண்டே இருக்கிறார்கள்; தமிழர்கள் கத்திக்கொண்டே இருக்கிறார்கள்!

 

http://www.puthinappalakai.com/view.php?20140807111027

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.