Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த - சிங்கள அத்துமீறலை கன்னியாவுக்கு வந்து பாருங்கள்! சர்வதேச சமூகத்துக்கு சம்பந்தன் அழைப்பு

Featured Replies

sampanthan_a.jpg

 

சரித்திர ரீதியாக, தலைமுறை தலைமுறையாகவும், பல நூற்றாண்டுகளாகவும் தமிழ் - இந்துக்களுக்கு இருந்து வரும் மத, கலாசார ரீதியிலான உரிமைகளை மூர்க்கத்தனமாகவும் கொடூரமாகவும் மறுக்கும் வகையில் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பௌத்த - சிங்கள அத்துமீறலை, அட்டகாசங்களை நேரடியாக வந்து பார்க்குமாறு சர்வதேச சமூகத்தின் அங்கத்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் வைத்து பகிரங்கமாக அழைப்பு விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். 
 
நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) என்ற காணிகள் தொடர்பான சட்டமூலத்தின் மீது உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். அங்கு இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்தவை வருமாறு: 
 
'பின்தங்கிய' அல்லது 'பாதிக்கப்பட்ட' என்று குறிப்பிடப்படும் மக்களுக்கு நிவாரணமளிக்கப்படும் விடயத்தை இந்தச் சட்டமூலம் கையாளுகின்றது. தமது சொந்தக் காணிகளின் ஆட்சியுரிமையை இழந்த மக்கள், தாம் 'பாதிக்கப்பட்ட' மக்களாக இருக்கும்போது இந்தச் சட்டத்தின் மூலம் நிவாரணம் பெறமுடியும். ஆனால் அப்படி நிவாரணம் பெறுவதற்கான கால எல்லை இச்சட்டம் நடைமுறைக்கு வந்து ஒரு வருடங்களுடன் முடிந்துவிடும் என்பதுதான் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ தக்கதாக இல்லை. இப்படி கால எல்லை வகுப்பதை அமைச்சர் மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனக் கோருகின்றோம். 1983 ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஆயுதக் குழுக்களினால் மக்களின் பல காணிகள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டன. 2009 யுத்தம் முடியும் வரை இத்தகைய நிலைமைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட மக்களினால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே நிலைமை தொடர்கின்றது. 
 
இந்தச் சட்டத்தினால் ஒரு தொகுதி மக்கள் நயமடையலாம். ஆனால் அதற்கான கால எல்லை 12 மாதங்களாக மட்டுப்படுத்தப்படுவது 'பாதிக்கப்பட்ட' மக்களுக்கு உதவுவதாக இருக்காது. வடக்கு, கிழக்கில் மிகச் சிக்கலான விவகாரம் காணிப் பிரச்சினைதான். அது, அரச காணிகளுடனும், தனியார் காணிகளுடனும் சம்பந்தப்பட்டது. இந்தச் சட்டமூலம் தனியார் காணிகள் சம்பந்தப்பட்டது. ஆனால் எங்கள் பிரச்சினை அரச காணிகளும் சம்பந்தப்பட்டதுதான். வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை அரச காணிகளுடனும் தனியார் காணிகளுடனும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பன்முகத் தன்மை கொண்டவை. அந்தப் பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதற்கான ஒரு தளமாக இந்த விவாதத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன். வடக்கு, கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் பல படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் சில சட்ட ரீதியாக அறிவிக்கப்படாவிட்டாலும் அரசுப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த உயர்பாதுகாப்பு வலயங்கள் எல்லாம் தனியாரின் காணிகளிலேயே அமைந்துள்ளன. இந்த உயர் பாதுகாப்பு வலயங்களுக்கான தேவை என்ன? -
 
புலிகளும் இல்லை; ஆட்லறியும் இல்லை இனி ஏன் உயர்பாதுகாப்பு வலயம்?
 
புலிகள் இருந்த சமயத்தில் அவர்களிடம் நீண்ட தூர வீச்சுடைய ஆட்லறிகள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி தொலைவில் இருந்தே இராணுவ நிலைகளைத் தாக்கக்கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். அதனால் இராணுவ நிலைகளில் இருந்து புலிகளைத் தள்ளி வைப்பதற்காக, பொதுமக்களும் தமது இடங்களுக்குச் செல்ல முடியாதவாறு, இத்தகைய உயர்பாதுகாப்பு வலயங்களை அமைக்க வேண்டியிருந்தது. இப்போது புலிகளும் இல்லை; ஆட்லறிகளும் இல்லை. ஆகவே அத்தகைய உயர்பாதுகாப்பு வலயங்களின் தேவையும் இப்போது இல்லை.
 
இப்போது முழு நிலப்பிரதேசத்தையுமே நீங்கள் விடுவித்து விட்டீர்கள். எனவே, புலிகளிடமிருந்தும் புலிகளின் ஆட்லறிகளிடமிருந்தும் பாதுகாப்பதற்காக என்ற பெயரில் உருவாக்கப்பட்ட உயர்பாதுகாப்பு வலயங்களை, பொதுமக்களின் நிலங்களைத் தொடர்ந்து ஆக்கிரமித்துப் படையினர் பேண வேண்டியதன் நோக்கம் என்ன? வடக்கு, கிழக்கில் மக்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலைகளில் சில விடுவிக்கப்பட்டுள்ளன.எனினும் கணிசமான பகுதி இன்னும் விடுவிக்கப்படவில்லை. 
 
நீதிமன்றுக்கு அளித்த உறுதிமொழி அரசு நிறைவு செய்யவே இல்லை
 
வடக்கில் வலிகாமம் மற்றும் கிழக்கில் சம்பூர் பகுதி காணி உரிமையாளர்கள் தஙகள் காணிகளைப் பெறுவதற்காக உயர்நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். அந்த மக்கள் அந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என சட்டமா அதிபர் மூலம் இந்த அரசு நீதிமன்றத்துக்கு உறுதி அளித்தது. அது பதிவில் உள்ளது. ஆனால் காணிகள் அந்த மக்களுக்கு திருப்பி அளிக்கப்படவில்லை. நான் சம்பூர் காணிகள் தொடர்பான விடயத்தை இந்த நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் குறுக்கிட்டு, சம்பூர் அனல் மின் நிலையத்துக்கான குறிப்பிட்ட ஒரு காணிப் பகுதியைத் தவிர ஏயைவற்றில் மக்கள் மீளக்குடியமர முடியும் என்றார்.
 
அது இந்த ஹன்சாட் பதிவில் உள்ளது. ஆனால் இந்த உறுதிமொழி பேணப்படவேயில்லை. பொதுமக்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பமுடியவேயில்லை. இந்தக் காணிகளில் இருந்த பல எண்ணிக்கையான வீடுகள், பாடசாலைகள், கோவில்கள் அழிக்கப்பட்டன. ஒரு பகுதி நிலம் இராணுவத்தினராலும் மற்றொரு பகுதி நிலம் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த நிலங்கள் பாவனைக்குப் பயன்படுத்தப்படுகின்றன; பயிர்ச்செய்கைக்கு, பொழுதுபோக்கு நடவடிக்கைளுக்கு மற்றும் பிற தேவைகளுக்கு என்றெல்லாம் அவர்களால் பய்னபடுத்தப்படுகின்றன. இந்தக் காணிகளில் டென்னிஸ் ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. கோல்வ் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. நீச்சல் தடாகங்கள், பாதுகாப்புத் தரப்பினரின் பாவனைக்கென சொகுசு பங்களாக்கள் எல்லாம் எழுந்துள்ளன.
 
எமது மக்கள் வாழ்ந்த, பயிர்செய்த, தங்களின் வாழ்வாதாரங்களை மேற்கொண்ட நிலங்களை ஆக்கிரமித்து, இத்தகைய காரியங்கள் நடக்கின்றன. இந்த வகையில் ஆயுதப்படைகளினால் எமது மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றமையால் பல பத்தாயிரம் தமிழ்க் குடிமக்களின் குடும்பங்கள் தங்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டுள்ளன
 
உண்மையில் இவர்கள்தான் மற்றெல்லோரையும் விட அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள். நில விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில நலன்களை வழங்குவது என்ற பெயரில் நீங்கள் ஒரு சட்டமூலத்தை இங்கு கொண்டு வருகின்றீர்கள். அப்படி சொற்ப எண்ணிக்கையினர் இருக்கக்கூடும். ஆனால் எங்கள் மக்களின் நிலைமை என்ன. இவர்கள்தான் மற்றெல்லோரையும் விட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இதனை யாரும் மறக்கமுடியுமா? அவர் சொற்ப எண்ணிக்கையினர் அல்லர். இப்படி பல பத்தாயிரக் கணக்கில் தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. இவ்விடயம் குறித்து, வடக்கு,கிழக்கில் பல போராட்டங்கள் நடக்கின்றன. நாடாளுமன்றத்திலும் பல தடவைகள் குரல் எழுப்பப்பட்டுவிட்டன. இப்படியிருந்தும் ஏன் இந்த விடயம் குறித்து மட்டும் ஏன் சிரத்தை - கவனிப்பு - எடுக்க மறுக்கீர்கள்? இதுதான் அரசின் உள்நோக்கம் கொண்ட போக்கு என நான் கேள்வி எழுப்புகிறேன்
 
அபகரிப்புக்கு போலிக் காரணங்கள்
 
பாதுகாப்பு, அபிவிருத்தி, பாவனை, ஆக்கிரமிப்பு, பயிர்ச்செய்கை, சுற்றுலா, பொழுதுபோக்கு என்ற பல போலிக் காரணங்களின் பெயரில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இவ்வளவும் பெரும்பான்மை இனத்தின் நலனுக்காகத்தான். பல பத்தாயிரம் தமிழ்க்குடிமக்களைப் பாதிக்கச் செய்து - அவர்களின் காணிகளைப் பறித்து - பெரும்பான்மை இனத்தவர்கள் அவற்றில் குடியேற்றப்படுகின்றனர். ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் யாவர்?
 
படைகள் பெரும்பாலும் முழுமையாக சிங்களவர்களைக் கொண்டவைதான். தமிழர்களை நிரந்தரமாகத் துரத்திவிட்டு அந்தக் காணிகளை அவர்கள் ஆக்கிரமித்தால் என்ன நடக்கும்? இந்தக் காணிகளைப் படையினர் தொடர்ந்து ஆக்கிரமித்திருந்தால் அவர்கள் என்ன செய்வர்? அவர்கள் இந்தக் காணிகளில் பயிர்செய்வர். தமது நிரந்தர வாழ்வாதாரங்களை அவற்றிலிருந்தே தேடுவர். அவர்கள் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கில் இந்த நிலங்களிலேயே வாழ்வார்கள். தமிழர்கள் பல தலைமுறைகளாக - பல நூற்றாண்டுகளாக - வாழ்ந்த நிலங்களில் இருந்து அவர்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த நிலங்களை பெரும்பான்மையினரிடம் ஒப்படைப்பது தமிழர்களின் இடங்களில் பெரும்பான்மையினரைக் குடியேற்றும் திட்டமன்றி வேறென்ன? 
 
இதற்கு மேலதிகமாக, வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் பெரும்பான்மையினர் குடியேற்றப்படுகின்றனர். இது, பெரும்பாலும் கிழக்கின் வடக்குப் புற மாவட்டமான திருகோணமலையிலும் வடக்கின் தென்புற மாவட்டமான முல்லைத்தீவிலும் தீவிரமாக உள்ளது. 2009 இற்குப் பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் நாலாயிரம் முதல் ஐயாயிரம் பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகள் புதிதாகப் பதியப்பட்டுள்ளன. இவர்கள் முன்னர் வாக்காளர்களாகப் பதியப்பட்டவர்கள் அல்லர். இப்போதுதான் புதிதாக - முதல் தடவையாக - வாக்காளர்களாகப் பதியப்படுகின்றனர் என்பதே எனக்குக் கிடைத்த தகவலாகும்.
 
இவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து போய் மீளவந்து குடியேறியவர்கள் அல்லர். ஆகவே யுத்தம் முடிவுற்ற பின்னர் வடக்கில் உள்ள நிலங்களில் புதிதாகக் குடியேற்றப்பட்டவர்களே இவர்கள். இந்த நடவடிக்கைகள் உயர்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை, தேசிய மட்டத்திலிருந்து மாவட்ட மட்டம் வரை அரசு ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழர்களின் தனிப்பட்ட காணிகளிலிருந்து அவர்கள் இடம்பெயர்ந்து செல்ல அவற்றைப் பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் ஆக்கிரமித்துக் கொண்ட பெரும்பான்மை இனத்தவர்களுக்கு அந்தக் காணிகளை வழங்குவதற்காக அவற்றை சுவீகரிக்கின்றது அரசு. 
 
கன்னியாவில் நடப்பது என்ன?
 
திருகோணமலை மாவட்டத்தில் கன்னியாவில், நடேசர் கோவிலுக்கும் பக்கத்தில் உள்ள சிவயோகபுரத்திலும் இதுதான் நடக்கின்றது. நீங்கள் பாதிக்கப்பட்டோர் குறித்துப் பேசுகின்றீர்கள். இவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் தமது காணிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். துரத்தப்பட்டுள்ளனர். அவர்களின் நிலங்களைப் பெரும்பான்மையினர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த விடயத்தைப் பரிசீலனைக்கு எடுத்து, இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தமது காணிகள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால், அவர்களுக்கு அவற்றை மீளப் பெற்றுக் கொடுப்போம் என்று இந்த சபையில் உறுதியளிக்க நீங்கள் தயாரா? இந்தச் சட்டமூலத்தின் வாயிலாக நிவாரணம் அளிப்பதாக ஒருபுறம் கூறிக்கொண்டே, மறுபுறம் இந்த மக்களின் காணிகளைப் பறித்து அவர்களுக்கு மட்டும் நிவாரணமளிக்க இந்த அரசு பின் நிற்பதேன்? 
 
 
பௌத்த - சிங்களவர் இல்லாத இடத்தில் பௌத்த வணக்க ஸ்தலங்கள் ஏன்?
 
இந்துக்களின் மத இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சீர்கெடுக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய தகவல்களை எல்லாம் நாம் அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அரசுக்கு, ஜனாதிபதிக்கு எல்லாம் கடிதங்கள் எழுதியுள்ளோம். இந்தச் சபையில் பல தடவைகள் இவை பற்றி குரல் எழுப்பியுள்ளோம். வடக்கு, கிழக்கில் புதிதாக பல பௌத்த ஸ்தலங்கள் எழுந்துள்ளன. புத்தரின் சிலை எங்கு வைக்கப்பட்டாலும் நான் அதைப் பெரிய விடயமாகப் பொருட்படுத்தவில்லை. நாங்கள் எல்லோரும் புத்த பெருமானை போற்றுகின்றோம். எனது சிங்கள நண்பர்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என நினைக்கிறேன்.
 
ஆனால், இந்த பௌத்த வணக்க ஸ்தலங்கள் ஒரு பௌத்த - சிங்களக் குடிமகன் கூட வாழ இடத்தில் புதிதாகத் தோன்றுகின்றன. இதன் நோக்கம் என்ன? ஏன் செய்யப்படுகின்றது? சிங்கள, பௌத்த மக்கள் வாழாத வடக்கு, கிழக்குப் பகுதிகளில் புத்தர் சிலைகள் புதிதாக வைக்கபடுகின்றன. இது ஏன் நடக்கின்றது? மிக உயர்வாகப் போற்றப்படும் இந்து கலாசார இடங்கள் பலவந்தமாகப் பறிக்கப்படுகின்றன. நான் ஒரு குறிப்பிட்ட உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். திருகோணமலை மாவட்டத்தில் ஏழு சுடுதண்ணீர்க் கிணறுகளைக் கொண்ட கன்னியா வெந்நீரூற்று உள்ளது. இந்த வெந்நீரூற்றின் சரித்திரத்தை விளக்க விரும்புகிறேன்.
 
 
 
கன்னியாவின் தோற்றுவாய்
 
சிவபெருமானின் தெற்கு உறைவிடமாக தக்‌ஷணகைலாசம் எனப் புராணங்களில் சுட்டப்படும் திருகோணமலை கோணேஸ்வரர் கோயிலுக்கு பெரும் வரலாற்றுப் பிரமுகரான இராவணன் சென்றான். அங்குள்ள லிங்கத்தில் மனதைப் பறிகொடுத்த அவன் அந்த லிங்கத்தை அப்பாறையிலிருந்து வெட்டி எடுத்து, தனது தாயாரின் வணக்கத்துக்காக எடுத்துச் செல்ல விரும்பினான். அப்படி அவன் பாறையை வெட்டிய பகுதிகளை இன்றும் கோணேஸ்வரத்துக்கும் சென்றால் அதன் வலது புறத்தில் காணப்படும் 'இராவணன் வெட்டு' ஆகத் தரிசிக்கமுடியும்.
 
இராவணின் செயலால் கோபமுற்ற சிவன் பாறையைத் தமது காலால் நகர்த்தி அழுத்தவே அவன் அதில் சிக்கிக் கொண்டான். இந்தியாவில் இருந்த இராவணின் தாயார் இதைக் கேள்விப்பட்டு, இராவணன் இறந்தான் என நினைத்து, அதிர்ச்சியில் உயிரிழந்தார். ஆனால் இராவணன் இறக்கவில்லை. அவனால் சிவலிங்கத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. அவ்வளவே. அவன் சிவனைப் பிரார்த்தித்து தன்னை மன்னிக்க வேண்டினான். சிவன் மன்னித்தார். இராவணன் தனது தாயாருக்கு 31 ஆவது நாள் கிரியையைச் செய்ய விழைந்தான். அவன் கன்னியா என்று அழைக்கப்படும் இடத்துக்குச் சென்று தனது ஈட்டியால் குத்தி ஏழு இடத்தில் தோண்டினான். இதுவே திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்றுக் கிணறுகளின் தோற்றுவாய்.
 
அங்கு ஒரு பிள்ளையார் ஆலயம் உள்ளது. பல தலைமுறையாக, பல நூற்றாண்டுகளாக இந்து, தமிழ் மக்கள் தங்களின் நெருங்கிய உறவுகளின் 31 ஆவது நாள் கடமைகளை நிறைவு செய்ய அங்கு செல்வது வழமை. இன்று புத்தரின் சிலைகள் சில அங்கு நிறுவப்பட்டுள்ளன. நான் நேரில் போய்ப் பார்த்துள்ளேன். ஒரு தடவை இந்தப் பிரதேச பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நான் கடிதம் எழுதினேன். அவர் அந்த வேலையை நிறுத்தினார்.
 
அந்த நேரத்தில் அங்கு புத்தரின் சிலை எதுவும் இருக்கவில்லை. ஆனால் இப்போது புத்தரின் சில சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. புத்த சிலைகள் உள்ள இடத்தின் பக்கமாகவே வெந்நீரூற்றுக்குப் போக வேண்டிய வகையில் ஒரு பாதையும் அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வெந்நீரூற்றைச் சூழவுள்ள பகுதியைச் சேர்த்து அணைத்து நீங்கள் கையகப்படுத்தியுள்ளீர்கள். வெந்நீருற்றுக்கான பழைய பாதை மூடப்பட்டு, புதிய பாதை அமைக்கப்படுகின்றது. இவை எல்லாம் ஏன் நடக்கின்றன? பிள்ளையார் ஆலயம் சீரழிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் இப்போது தற்காலிக கொட்டகை ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளார். ஆகவே சிலர் தங்களின் சில உள்நோக்கங்களைச் செயற்படுத்தும் எண்ணத்தில் ஒரு திட்டத்தை ஆக்கிரோஷமாக முன்னெடுக்கின்றார்கள் என்பது தெளிவு.
 
இது தமிழ், இந்துக்களின் மத,கலாசார உரிமைகளை மூர்க்கத்தனமாக, கொடூரமான வகையில் மறுக்கும் போக்காகும். அவர்கள் இராவணனின் காலத்திலிருந்து ஆற்றி வந்த - தமது 31 ஆம் நாள் நிகழ்வுகளை நிறைவேற்றும் - உரிமையைக் கூட சுயாதீனமாக, சுதந்திரமாக இன்று செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நான் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளை திருகேணாமலையின் கன்னியாவுக்கு நேரடியாக வந்து நிலைமைகளைக் கண்டறியுமாறு வேண்டுகோள் விடுத்து அழைக்கிறேன்.
 
இத்தகைய விடயங்களை நாம் முன்னெடுக்க விரும்பவில்லை. நீங்கள்தான் அத்தகைய வேண்டுகோளை சர்வதேச சமூகத்திடம் நாம் விடுப்பதற்கான நிலைமைக்கு எங்களைத் தள்ளுகின்றீர்கள். நான் ஜனாதிபதிக்கு எழுதினேன். பஸில் ராஜபக்‌ஷவுக்கு எழுதினேன். நாடாளுமன்றத்தில் இவ்விடயத்தைக் கிளப்பினேன். நீங்கள் பதில் தரவில்லை; எதிர்வினை காட்டவில்லை. ஆனால் நீங்கள் சத்தமின்றி உங்கள் திட்டப்படி வேலைகளைத் தொடர்ந்தீர்கள். உங்கள் திட்டப்படி அதனை முழுமையாகப் பூர்த்தி செய்தும் உள்ளீர்கள். 
 
உங்களின் உள்நோக்கம் என்ன?
 
இவை எல்லாம் ஏன் செய்யப்பட்டன? ஏனெனில் வடக்கு, கிழக்கின் குடிசனப் பரம்பல் கட்டமைப்பையும், கலாசார - மொழி அடையாளங்களையும் முழுமையாக மாற்றி அமைக்கும் உள்நோக்கத்துடனேயே நீங்கள் இவற்றைச் செய்துள்ளீர்கள். இப்படி மாற்றியமைப்பதன் மூலம் ஓர் அரசியல் தீர்வு தேவையற்றது, தொடர்பற்றது என்ற அரசியல் தீர்மானத்தை எட்டும் திட்டவட்டமான - தெளிவான - உள்நோக்கத்துடன்தான் இதனை நீங்கள் முன்னெடுத்தீர்கள். இதுதான் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நீங்கள் முன்னெடுத்தமையின் நோக்கம். இது நாட்டுக்கு நல்லதல்ல. நான் யாரையும் கேலி கூறவோ, அவதூறுப்படுத்தவோ விரும்பவில்லை. ஆனால், இத்தகைய போக்கு நாட்டுக்கு நல்லதல்ல என்று மட்டும் கூறிவைக்க விரும்புகிறேன்.
 
இந்தப் பின்புலத்தில். சில புவியியல், அரசியல் மற்றும் தந்திரரோபாய பரிமாணங்களை உள்ளடக்கி, இந்த நாட்டின் எதிர்காலத்தில் பாரதூரமான தாக்கத்தைக் கொண்டுள்ளவை என நான் கருதும் சில மறுக்கப்படமுடியாத உண்மைகள் உள்ளன. அவற்றை நான் இங்கு குறிப்பிடுவது மிக அவசியமானதாகின்றது. அதற்காக, இந்த விடயத்துடன் தொடர்புபட்ட - 1987 ஜுலை 29 ஆம் திகதி ஒப்பமிடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் சில ஷரத்துக்களில் உள்ள முக்கிய விடயங்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "இலங்கையின் ஐக்கியம், இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு" ஆகியவற்றை உறுதி செய்யும் ஒரு தெளிவான நிலைப்பாட்டை அந்த ஒப்பந்தம் எடுத்தியம்புகின்றது. மாற்றவே முடியாத இந்த நிலைப்பாட்டின் மீதுதான் அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
 
 
அந்த ஒப்பந்தம் -
 
* சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் எனப் பல்லின, பலமொழி சமூகங்களை கொண்டது இலங்கை என்பதை ஏற்றுக்கொள்கிறது.
 
* இந்த ஒவ்வொரு இனக்குழுமமும், நன்கு கவனமாகப் பேணப்பட்ட, தனித்துவமான கலாசார, மொழியியல் அடையாளங்களைக் கொண்டவை என்பதை அங்கீகரிக்கின்றது.
 
* அத்தோடு, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் தமிழ்பேசும் மக்களின் பூர்விக வாழிடங்கள் என்பதையும் எல்லாக் காலங்களிலும் அவர்கள் ஏனைய இனக் குழுக்களோடு சேர்ந்து இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையும் அங்கீகரிக்கின்றது.
 
* இலங்கையின் ஐக்கியம், இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றுக்குப் பங்களித்து, அதன் எல்லாப் பிரஜைகளும் சமத்துவமாக, பாதுகாப்பு மற்றும் நல்லிணகத்துடன் தங்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் விதத்தில் சுபீட்சத்துடன் வாழத்தக்க விதத்தில் அதன் பல்லின, பன்மொழி, பலமத மற்றும் பன்மைத்துவ சமூகக் கட்டமைப்புப் பண்பியல்பை பேணும் சக்திகளை ஒன்றிணைத்துப் பலப்படுத்துவதின் அவசியத்தை உணர்கின்றது.
 
பக்கத்தில் உள்ள மாகாணங்களை இணைத்து ஒரு மாகாணமாக செயற்படுகின்றமை பற்றியும், அது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு குறித்தும் அது பிரஸ்தாபிக்கின்றது. இனி, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் தொடர்பில் நான் முன்னர் கூறியவை சம்பந்தமாக சில விடயங்களைத் தெளிவாக வெளிப்படுத்த விரும்புகிறேன்
 
 
திருகோணமலையிலும் முல்லைத்தீவிலும்
 
திருகோணமலை கிழக்கு மாகாணத்தில் வடபுற மாவட்டமாகும். முல்லைத்தீவு வடக்கு மாகாணத்தின் தென்புற மாவட்டமாகும். வடக்கு, கிழக்கு இடையிலான மொழியியல் அடிப்படையிலான தொடர்பு நிலைப்பாட்டை உடைக்கும் உள்நோக்கத்துடனேயே இந்த முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிடையேதான் அரசாங்கத்தின் - அரசாங்கத்தில் இந்த வேலைகளை முன்னெடுப்போரின் - செயற்பாடுகள் எல்லாம் கட்டவிழ்கின்றன. ஆகவே, தொடர்ந்து அனுமதிக்கப்படமுடியாத - தீவிரமான, தெளிவான உள்நோக்கு இலக்குக் கொண்ட - செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கின்றீர்கள் என்பது தெளிவு.
 
அதனால்தான் உங்களின் இந்த நடவடிக்கைகள் புவியியல் சார் அரசியல் மற்றும் புவியியல் தந்திரோபாய பரிமாணங்கள் கொண்ட- அதேசமயம் நாட்டுக்கு நலன் தராத எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் நான் கூறுகின்றேன். இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டை ஆபத்துக்குள்ளாக்குவது ஏன் என்று கேட்கும் உரிமை இலங்கையன் என்ற முறையில் எனக்கு உண்டு. உங்களின் இத்தகைய செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். நிறுத்தப்படாவிட்டால் அதன் விளைவாக இறுதியில் இந்த நாட்டின் மீது பேராபத்து விழும் என்பதால் இதனை நிறுத்தும்படி கேட்கும் உரிமை எனக்கு உண்டு. 
 
 
வெளிநாட்டுச் சக்தியின் தலையீடு திருகோணமலை துறைமுகத்திலும், அதை ஒட்டியும் சில பகுதிகளிலும் வெளிநாட்டு சக்தி ஒன்றின் சம்பந்தத்துடன் அரசு முன்னெடுக்கவிருக்கும் ஒரு வசதித் திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் கேள்வி எழுப்பினார். அந்தத் திட்டம் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கை என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
 
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் சரித்திர ரீதியாக பூர்வீகத் தாயகம் என இலங்கை - இந்திய ஒப்பந்தம் குறிப்பிடுகையில், அந்த மாகாணங்களின் குடிசனப் பரம்பல் கட்டமைப்பை உங்கள் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் நீங்கள் மாற்ற முயல்வது இலங்கை - இந்திய ஒப்பந்த மீறல் இல்லையா? அத்தகைய பூர்வீகத் தாயகம் என்ற அடிப்படையில்தானே வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணக்கப்பட்டு, ஓர் ஆளுநர், ஒரு முதலமைச்சர் மூலம் ஒரு மாகாணமாக ஆளப்படும் அலகாக மாற்றப்பட்டது.
 
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் தத்தமது தனித்துவமான அடையாளங்களுடன் பேணி வளர்க்கப்பட்ட பல்லின, பல் கலாசார, பன்மைத்துவம் கொண்ட ஒரு கட்டமைவுப் பிரதேசம் என்று அங்கீகரித்து, அதனடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் சரித்திர ரீதியான வாழிடமான வடக்கும், கிழக்கும் அதன் காரணமாக ஓரலாகக் கருத்தப்பட வேண்டும் என்று இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கூறப்படுகின்றது. அதில் இருந்து எழுந்துள்ள ஒழுங்கமைப்பை நீங்கள் மீறவில்லையா? அந்த ஒப்பந்த ஏற்பாடுகளை நீங்கள் மீறிச் செயற்படவில்லை என்பதே எனது கேள்வி.
 
"திருகோணமலையோ அல்லது இலங்கையில் உள்ள வேறு பிற துறைமுகங்களோ இந்தியாவின் நலனுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் பிறநாடு ஒன்றின் இராணுவப் பயன்பாட்டுக்கு வழங்கப்படக்கூடாது." என ஒப்பந்தத்தின் இணைப்புச் சரத்து கூறுகிறது. அதையே ரணில் விக்கிரமசிங்கவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஒப்பந்தத்தின் மிக முக்கிய பகுதியை மீறும் விதத்தில், உங்களுக்கு விருப்பமான விதத்தில், நீங்கள் நினைத்தபடி குடிசனப்பரம்பல் கட்டமைப்பை மாற்றமுடியுமா? இது நாட்டுக்கு நல்லதல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். 
 
 
தமிழர்களே அதிகம் பாதிப்புற்றவர்கள்
 
இந்தச் சட்டமூலம் 'பின்தங்கிய' அல்லது 'பாதிப்புற்ற' மக்கள் பற்றிக் கூறுகின்றது. உங்கள் சட்டமூலத்தில் எப்படிக் கூறப்பட்டிருந்தாலும் இந்த நாட்டின் தமிழ்ப் பேசும் மக்களே உண்மையில் பலவழிகளிலும் பாதிப்புற்ற மக்கள் ஆவர். பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 50 லட்சம் ரூபா ஒதுக்கப்படுகின்றது. வடக்கும் கிழக்கும்தான் இந்த முப்பது வருட யுத்தத்தில் அதிகமான சேதங்களை எதிர்கொண்டன. எங்கள் தமிழ் மக்கள்தான் அதிகம் கொல்லப்பட்டனர்; அவர்களின் சொத்துக்களே அதிகம் அழிவுற்றன; இழப்பும், மறுப்பும் அவர்களுக்கே அதிகம். அரசில் இருக்கும் சில எம்.பிக்கள் தவிர, ஏனைய அனைத்துத் தமிழ் எம்.பிக்களுக்கும் இந்த ஒதுக்கீடு ஆக ஐம்பது லட்சம்தான். ஆனால் ஏனைய அனைத்து எம்.பிக்களுக்கும் தலா இரண்டரைக் கோடி ரூபா அதிகமாகக் கூட்டி தலா மூன்று கோடி ரூபாவாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
 
நாங்கள்தான் தமிழ் மக்களை கணிசமான அளவில் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் அவர்கள் எங்களைத்தான் தங்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்துள்ளனர். எங்களுக்கு தலா 50 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்துவிட்டு ஏனைய அனைவருக்கும் தலா 3 கோடி ரூபா ஒதுக்கீடு செய்வது நீதியானதா? நியாயமானதா? நேர்மையானதா? நீங்கள் எப்படி இவ்வாறு செய்யமுடியும்? நீங்கள் அரசின் நிதிக்கு நம்பிக்கையாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்.
 
நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளோம். எங்கள் மக்களுக்கு இறைமை இல்லையா? எங்கள் மக்களுக்கு சமத்துவம் கிடையாதா? எங்கள் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளா? அதனால்தான் நீங்கள் இப்படி எங்களுக்கு குறைத்து ஒதுக்குகின்றீர்கள்? நான் யாருடனும் எதிர்கொண்டு மோத விரும்பவில்லை; நாங்கள் யாரிடமும் இரக்க விரும்பவில்லை; எனது மக்கள் என்னை இரக்குமாறு வேண்டவில்லை. எனது மக்கள்  இரப்பவர்கள் அல்லர். எனவே நான் இரப்பதையும் அவர்கள் விரும்பமாட்டார்கள்.
 
எனக்கு வேண்டியதெல்லாம், இந்த முப்பது வருடப் பிணக்கின் பின்னரும், இத்தகைய இழப்புகள் மறுப்புகளின் பின்னரும், இவ்வளவு பேரிழப்புகள் மற்றும் அழிவுகளின் பின்னரும், எங்களுக்குத்தான் அதிகளவில் உதவிகள் தேவைப்படுகின்ற நிலையிலும், எங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாவை வழங்கிவிட்டு, ஏனைய எம்.பிக்களுக்கு தலா மூன்று கோடி ரூபா வழங்குகின்றமை முழு உலகுக்குமே தெரியவேண்டும். இது சரியானதா? நியாயபூர்வமானதா? இதைச் செய்வதற்காக கடவுள் உங்களை மன்னிப்பாரா? உங்கள் மனச்சாட்சியிடமிருந்து இதற்குப் பதில் கோருகின்றோம். நீங்கள் சரியானதைச் செய்யவேண்டும் என நான் வேண்டுகிறேன். மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியிருக்கையில் நீங்கள் அந்தப் பணியைச் சரியாகச் செய்ய வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். இத்தகைய அதிகாரம் எந்தக்காலமும் உங்களுடன்தான் நிலையாக இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். - என்றார்.
 
http://malarum.com/article/tam/2014/08/09/4376/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html#sthash.kaCY9yPw.dpuf
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.