Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் நாட்டில் சாதி இல்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நாட்டில் சாதி இல்லை!

யோகி

images-0.jpg

மலேசியாவில் சாதி இல்லை என்று பலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். “செ…செ.. அதெல்லாம் கல்யாணத்தின்போது மட்டும்தாங்க…” என பல்லிளிக்கும் கூட்டம் இங்கு அதிகம். இன்னும் கொஞ்சம் முற்போக்காகப் பேசுகிறேன் பேர்வழிகள் “சாதியப் பற்றி பேசலைன்னா அது தன்னால ஒழிஞ்சுருங்க… நாம தமிழரா இணைஞ்சிருப்போம்” என ‘நாம் தமிழர்’ சீமான் போல சீன் போடுவதுண்டு. மற்ற அனைத்தையும்விட சீமான் போன்றவர்களின் அரசியலே சாதியை வளர்க்ககூடியது. ‘தமிழர்கள்’ எனும் அடையாளத்தின் கீழ் ஒன்று சேர்வார்களாம். ஆனால் சாதிய மனம் அப்படியே அடியில் இருக்குமாம். இவர்கள் சொல்லும் தமிழர்கள் இணைப்பில் தலித்துகளோ அவர்கள் நலன்களோ காக்கப்படாததும், அவர்களுக்காக எவ்விதத்திலும் போராடாததற்கும் தருமபுரி சம்பவமே ஒரு சமீப சான்று. தமிழர்கள் என்ற தேசியத்தின் கீழ் தலித்துகள் இவர்கள் பட்டியலில் அடங்குவதில்லை. சமூகத்தில் ஊடுருவியுள்ள ஒரு நோய்மை குறித்துப் பேசாமல் இருப்பது அதனோடு ஒத்துப்போவதற்கு சமமானதே. இன்னும் சொல்லப்போனால் அதன் வளர்ச்சிக்கு நாம் இடதுகையால் உரம் போடுகிறோம் என்றே அர்த்தப்படும்.

மலேசியாவில் இந்தநிலை நெடுங்காலமாகவே இருந்து வருவதுதான். ‘இண்டர்லோக்’ நாவல் விவகாரத்தில் கொஞ்சம் சமூகத்தில் உள்ள சாதி குறித்து பேசப்பட்டு பின்னர் அமுங்கிப் போனது. தாங்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் இல்லை எனப் பிரகடனப்படுத்த எல்லோருக்கும் அந்தச் சம்பவம் பெரும் பாதை அமைத்துக்கொடுத்தது. இப்படி மலேசியாவில் உள்ள சாதி அமைப்பு குறித்து பேசுவதை ஒரு பாவமாக்கிவிடும் கூட்டம் ஒரு பக்கமும் ‘தமிழர்கள்’ எனும் அடையாளத்தால் ஒன்றிணைவோம் அதனால் சாதி அழியும் என கூச்சல் இடும் கோமாளிகள் மறுபக்கமும் என மலேசிய சூழல் போய்க்கொண்டிருக்க, வெளியில் உள்ளவர்களிடம் “எங்கள் நாட்டில் சாதி இல்லை” எனச் சொல்ல வசதியாகி விடுகின்றது.

சாதிகள் என்று ஒன்றும் இல்லை என்று வெறும் பேச்சினில் மட்டுமல்லாமல் தன் வாழ்க்கைத் துணையையும் நண்பர்களையும் மனம்போலத்தேடிக்கொண்டவர் என் தந்தை. ஆனால், என் அப்பாவை சார்ந்தவர்கள் அவரை ஒதுக்கி வைத்திருந்த காலகட்டத்திதான், மீண்டும் இணைவதற்குக் காரணமாக நானும் என் தம்பியும் பிறந்தோம். எங்கே பிள்ளைகள் தாய்வழி சமுகமாக வளர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தோடே என் அப்பாவை சார்ந்தவர்கள் மீண்டும் அப்பாவோடு இணையத் தொடங்கினர். அதற்கு இன்னும் வலுவான சம்பவமாக என் பூப்பெய்த நாள் சடங்கு நிகழ்வு அமைந்தது. அப்பாவுடன் பிறந்த என் அத்தைகள் தங்கள் உரிமையை நன்றாகவே அன்றைய தினம் நிலைநாட்டினர்.

நானும் அன்றுதான் என் அப்பாவின் குடும்பத்தாரை முழுமையாகக் கண்டேன். என் அப்பாவின் உடன் பிறப்புகளில் மூத்தவர் லெட்சுமி அத்தை. அந்தக்குடும்பத்தின் சாதி காப்பாளர் தலைவராகவே அவர் இருந்தார். தாய் வழிச் சமூகமாக வளர்ந்து கொண்டிருக்கும் எங்களைத் தந்தை வழிச் சமூகமாக மாற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும் அவரே மேற்கொண்டார். அதன் முதல் திட்டமாக பள்ளி விடுமுறையில் என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். எனக்கு 14 வயது இருக்கும். அத்தையின் சாதி கற்பித்தல் மிகவும் நூதனமானது; பயங்கரமானது. அதற்கு ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாகச் சொல்கிறேன்.

மிக அழகான, வசதியான, பளிங்குக் கற்கள் போட்ட, குளிர்சாதன வசதிகொண்ட சொகுசு வீடு அத்தையுடையது. 80-ஆம் ஆண்டுகளில் அவர்கள் அந்த வீட்டைக் கட்டினார்கள். அது உண்மையில் பெரிய விஷயம். காரணம் வசதி படைத்த தலைவர்களும், சீனர்களும் மட்டுமே அப்படி ஒரு வீட்டை அந்தக் காலகட்டத்தில் கட்டி இருந்தனர். (அவர்களின் அந்த வீட்டுக்கும், சொத்துக்கும் பின்புலமாக, அவர்கள் சூரையாடிய பலரின் வாழ்வும், உழைப்பும் உள்ளதைப் பின்னாளில்தான் தெரிந்துகொண்டேன்.)

எனக்கு அந்த வீடு மிகவும் பிடிக்கும். அத்தைக்கு 3 ஆண் 1 பெண் பிள்ளைகளும் இருந்தனர். அத்தை மகன்களில் ஒருவருக்கு என்மேல் விருப்பம் இருந்ததால், அதைச் சாதகமாக்கிக்கொள்ள சிறு வயது பிள்ளை என்றும் பாராமல் எனக்குத் தீவிரமாக சாதிப் பாடம் எடுத்தார். அத்தையின் விசாலமான வீட்டில் சமையலறை தனி வரவேற்பறை மாதிரி இருக்கும். வீட்டிற்கு உபயோகப்படுத்துவது அனைத்தும் சில்வர் பாத்திரங்கள்தான். வீட்டிற்கு வெளியே பின்புறத்தில் தனியாகக் கண்ணாடி பாத்திரங்கள், குவளைகள் அடுக்கிய ஒரு அடுக்கு இருந்தது. அதில் இருக்கும் பொருள்களை அத்தை உபயோகப்படுத்தவே மாட்டார். மாமா செம்பனை தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்து, ஆள்களை வைத்து வேலை செய்துகொண்டிருந்தார்.

வேலைக்கு வராதவர்கள் காரணம் சொல்வதற்கோ, கைப்பணம் வாங்குவதற்கோ அத்தையின் வீட்டிற்கு வருவதுண்டு. வருபவர்கள் வாசலைத்தாண்டி வீட்டிற்குள் வரமாட்டார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் என்னிடம் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தரும்படி கேட்டார். நான் வீட்டிலிருந்த குவளையில் தண்ணீர் கொண்டு வந்தேன். என்னைத் திரும்பி பார்த்த அத்தை அதிர்ச்சியானார். “உள்ளே போடி நாயே,” என்றார். எனக்கு அத்தை ஏன் ஏசுகிறார் என்று புரியவில்லை. “சில்வர் குவளையில் தண்ணீர் கொடுக்கிறாயே, உனக்கு அறிவு இருக்கா?” என்றார். வாசலிலேயே உட்கார வைத்திருக்கேனே அவர்கள் பறையர்கள் என்று உனக்குத் தெரியவில்லையா?” என்று கடுமையாக வசைபாடினார். பிறகுதான் தெரிந்தது வீட்டிற்கு வெளியே உள்ள பாத்திரங்கள் அத்தை தீண்டத்தகாதவர்கள் என்று நினைப்பவர்களுக்காக ஒதுக்கியது என்று. அந்தப் பாத்திரத்தில் உணவையோ, தண்ணீரையோ கொண்டு வரும்போது வீட்டிற்கு உள்ளிருந்து கொண்டுவரக்கூடாது. வெளிப்புறமாகவே வரவேண்டும். உபயோகப்படுத்தின பாத்திரங்களையும் வந்த வழியே கொண்டு போய்க் கழுவி, இருந்த இடத்திலேயே வைத்துவிட வேண்டும்.

அவர்கள் சென்ற பிறகு, வாசலைக் கழுவ வேண்டும். அத்தையின் இந்த நடவடிக்கைகளை அவர்களின் குடும்பத்தினர் மிகவும் தீவிரமாகப் பின்பற்றி வருகின்றனர். நான் மட்டுமே பச்சைப் பிள்ளையாக அந்த வீட்டில் இருந்தேன். அத்தை என்னை அவரின் மருமகள் ஆக்கிக்கொள்வதற்குக் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தார். ஆனால், அங்கு நடந்த ஒவ்வொரு சம்பவமும் சாதிக்காப்பாளர் வீடுகளில் மிகச் சாதாரணமாக நடந்துகொண்டிருக்கும் என்பது அவர்களிடத்தில் போன பிறகுதான் தெரிந்தது. அதிகம் படிக்காத அப்பா காதலினால் ஈர்க்கப்பட்டு, சாதி பார்க்காமல் திருமணம் செய்துகொண்டார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சிறுவயதிலிருந்தே அப்பா எல்லாரிடமும் நட்புடன் பழகியதை மாபெரும் குற்றம்போல், அத்தையும் பாட்டியும் திரும்பத் திரும்பக் கூறியபோதுதான் அப்பா வேறு மாதிரி என்று உணர்ந்துகொண்டேன்.

அத்தையின் சாதி பிடிப்பு என்னை இரவு பகலாக ஆட்டிப் படைத்தது. ஒவ்வொரு விஷயத்திலும் சம்பவத்திலும் சாதியை நுழைப்பதில் அத்தையை மிஞ்சியவர்கள் இருப்பார்களா தெரியவில்லை. அத்தையின் இந்த நடவடிக்கையால் சொகுசான அத்தைவீடு சிறையாக மாறி வருவதை வெகுசீக்கிரமே உணர்ந்துகொண்டேன். அத்தை மகன்மேல் கொண்ட மயக்கம் எல்லாம் பயமாக மாறிப்போனது. ஒரு மாதம்கூட முழுமையாக முடியாத நிலையில், அத்தை வீட்டில் தொடர்ந்து இருந்தால் மனநல காப்பகத்திற்குச் செல்வது உறுதி எனத் தெளிவாகத் தெரிந்தது. அதுவே நான் அத்தைவீட்டில் தங்கியது முதலும் கடைசியுமாகும். அத்தைப்போல சாதித் தீவிரம் அப்பா குடும்பத்தைச் சேர்ந்த அனைவரிடத்திலும் இருந்தது. என் வயதை ஒத்த அவர்களின் பிள்ளைகள் சட்டென்று சாதி பெயர் சொல்லி ஒருவரை சுலபமாகத் தாக்குவதில் எந்தக் குற்ற உணர்ச்சியையும் கொண்டிருக்கவில்லை.

நான் தலைநகருக்கு வந்த பிறகு கம்பத்தில் உள்ளதுபோலத் தீவிர சாதியர்களை அவ்வளவாகக் காண முடியவில்லை. தந்தையின் மறைவிற்குப் பிறகு குடும்பத்தைக் காப்பாற்றுவதிலேயே எனது மொத்த நேரத்தையும் செலவு செய்ததால் நாட்டில் நடப்பதையும், சமூக விஷயங்களையும் கண்டுகொள்ளாமலேயே சுயநலமாக இருந்துவிட்டேன். அந்தக் குற்ற உணர்வு என் மனதின் ஓரத்தில் இன்றும் இருக்கவே செய்கிறது. குறிப்பாக மலேசிய அரசியலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு நான் விரும்பியதே இல்லை. எல்லோரும் சொல்வதுபோல, திருமணத்தில் மட்டும் சாதி பார்ப்பதாக இருந்த பேச்சையும் நம்பியதுண்டு. இவை அனைத்தும் எளிய மக்களின் சுய கருத்து மட்டும்தான் என்பதை நான் நிருபராகிய பிறகு தெரிந்துகொண்டேன். அரசியலில், கோயில்களில், அரசு சாரா அமைப்புகளில் சாதியம் எவ்வாறு புகுந்து ஆட்சி செய்கின்றது என்பதையும் அது மேல் மட்டத்தில் எவ்வாறு இயங்குகிறது, இயக்குகிறது என்பதையும் அறிய வாய்ப்பும் கிடைத்தது.

ஆதி.குமணன் வாழ்ந்த காலத்தில் தான் ஆசிரியராக இருந்த நாளிதழில் எவ்வளவு பணம் கொடுத்தலும் சாதி சார்ந்த விளம்பரம் வராது என அறிவித்திருந்தார் என்பது பலரது நினைவில் இருக்கலாம். இன்று அவரது அல்லக்கை நல்லக்கை நொல்லக்கை எனச் சொல்லிக்கொள்பவர்கள் தங்கள் பத்திரிகை விற்பனைக்காக எவ்வாறான சமரசங்களில் ஈடுபடுகிறார்கள் என கொஞ்சம் நாளிதழ்களை ஆராய்ந்தாலே புரியும். வணிகத்துக்காக ஆதியின் பெயரை ஒரு பக்கமும் சாதி சங்கங்களின் பெயரை மறுப்பக்கமும் பிரசுரித்து லாபம் தேடும் இவர்கள் சமூகத்துக்காகப் போராடுவதாக வர்ணிப்பதெல்லாம் தங்கள் வயிற்றுப்பாட்டுக்குதான். சமூகம் என சொல்லிக்கொள்வதும் தங்களின் குடும்பத்தைதான்.

அடுத்ததாக மலேசியத் தமிழர்களின் தாய்க்கட்சி என்று சொல்லக்கூடிய ம.இ.கா சாதி கட்சிதான் என்ற கருத்துகளை ஆதாரங்களுடன் கட்சியில் உள்ள சிலரும் எதிர்கட்சியினரும் மிக வலுவாக முன்வைக்கின்றனர். அதற்கான சூடான விவாதங்கள் கடந்த ஆண்டு நடந்த ம.இ.கா தேர்தலில் காண முடிந்தது. பல குட்டுகள் அம்பலமானதும் அப்போதுதான். கட்சியின் தேசியத் தலைவரும் ஏதோ ஒரு மேல்தட்டு சாதியின் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அது வெளிப்படையாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், பல அமைச்சர்களின் படங்கள் சாதிச் சங்கங்களின் ஆண்டு இதழ்களில் ‘ஆலோசகர்’, ‘காப்பாளர்’ என்ற அடைமொழியுடன் வருவதுதான் கொடுமை. இதைத்தவிர இன்றைய பத்திரிகை அதிபர்களாகவும் தமிழ்ப்பள்ளிக் காப்பாளர்களாகவும் தங்களைப் பறைச்சாற்றிக் கொள்பவர்கள் சாதிய அடையாளங்களுடன் கூட்டங்கள் நடத்தியதை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியாது.

இவை ஒருபுறம் இருக்க, அண்மையில் பத்திரிகையில் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘கொங்கு பிரதர்ஸ்’ சம்பவம் சாதி உயர்மட்டத்தில் மலேசியாவில் எப்படி வேரூன்றியுள்ளது என்பதற்கான சான்று. ம.இ.காவின் முன்னாள் துணைத்தலைவரின் மகன் சுந்தர் சுப்ரமணியம்தான் அந்தப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டவர். கொங்கு சகோதர்கள் மிகவும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதின் விளக்கத்தை அவர் போட்ட ‘வாட்சப்’ (whatsapp) செய்தி அம்பலப்படுத்தியது. அதற்காக சுந்தர் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். உண்மையில் அவர் விமர்சிக்க மட்டுமே பட்டார் என்பதைச் சிறிது அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது.

இப்படிப் பல சாதி சம்பவங்களையும் நடவடிக்கைகளையும் காணும்போது அப்படியா? அப்படியா! என்று பல அப்படியாக்களைப் போட்டு நான் அடங்கி விட்டேன். காரணம் முன்பை விடவும் இளம் சமூகத்தினரிடத்தில் மிகத் தீவிரமாக சாதிப் பிடிப்பு இருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

திருமணம், கோயில், கட்சி, கூட்டம் என எங்கும் சாதி சூழ்ந்திருக்கும் இந்த நாட்டில், சாதி எதிர்ப்பாளர் அல்லது சாதிக்கு எதிரானவர் ஒவ்வொருவரையும் நான் ஒவ்வொரு பாரதியாகவே பார்க்கிறேன். அதில் முதல் பாரதியாக என் அப்பா இருப்பதில் என்றும் கர்வம் கொண்டவள் நான்.

http://vallinam.com.my/version2/?p=1489

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.