Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாசனை

- சிவப்பிரசாத்

வாசனை * 1

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வாசுவுக்கு யாரோ தன் மேல் படுத்திருந்ததுபோல் பாரம் அழுத்தியது. மல்லாந்து படுத்திருந்தவன் புரண்டு படுக்க முற்பட்டான். அவனால் திரும்பக்கூட முடியவில்லை. மலைப்பாம்புபோல் ஏதோ ஒன்று அவனைச் சுற்றியிருந்தது. வாய்விட்டுக் கத்தலாம் எனப் பார்த்தால், அவன் உதட்டை யாரோ கவ்விக்கொண்டிருந்ததாகத் தோன்றியது. பதட்டத்தோடு மேல்மூச்சு வாங்கினான். அவன் நாசி ஏதோ வாசனையை உணர்ந்தது. அது அவன் அதுவரை முகர்ந்திராத ஒன்று. ஆற்றிலும் குளத்திலும் வளரும் பெயர் தெரியாத ஏதோ செடியின் இலைகளிலிருந்து வரும் வாசனையைப் போல் இருந்தது. அந்தப் பச்சை இலையின் வாசம் வாசுவுக்குக் காமத்தைத் தூண்டியது. அந்தச் சுகந்தத்தை உணர்ந்த தருணத்தில் தன்னுடலின் ரோமங்கள் சிலிர்த்து எழுந்ததை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு பூச்சி ஊர்ந்ததுபோலவோ மயிலிறகால் தடவியதுபோலவோ தன் முதுகில் மென்மையான வருடலை அனுபவித்தான். ஒரு கணம் ஏதோ தேவதையின் அரவணைப்பில் இருந்தது மாதிரியும் மறுகணம் ஓர் அரக்கியின் பிடியில் சிக்கித் தவித்தது மாதிரியும் உணர்ந்தான்.

தன் பலத்தையெல்லாம் திரட்டி உதறி எறிந்துவிட முயன்றான். வாசுவால் முடியவில்லை. அந்தச் சுகமும் வலியும் இன்னும் வேண்டும்போல் உணர்ந்தான். கண்களைப் பலவந்தமாகத் திறக்க முற்பட்டபோது அகோரமான முகம் ஒன்று நாக்கை நீட்டிக்கொண்டு கோரைப்பற்கள் தெரிய இவனைச் சுக்கிலத் துளிகளாக்கி விழுங்கிவிடும் ஆவேசத்தில் இருந்தது. முகத்தோடு முகமாய் ஒட்டியிருந்த அதன் கண்களில் உலகத்திலுள்ள ஆண்களையெல்லாம் ஒட்டு மொத்தமாகப் புணர்ந்தாலும் அடங்காத காம ஆவேசம் தெரிந்தது. மறுகணமே உலப் பேரழகிகளை ஒத்த சாந்த சொரூபமான முகத்தைக் காட்டியது. முதல்முறை புணரும் பெண்ணின் நாணம் மிக்க தாபத்தோடு நெளிந்தது. பனைவெல்லம்போல் கருத்திருந்த வடிவான மார்பகங்கள் அவன் நெஞ்சுப் பகுதியில் அழுந்தின. கரம்படாத அந்த ஸ்தனங்கள் பஞ்சுப் பொதிபோல் மிருதுவாகவும் இருந்தன. அடுத்த கணம் கல்லாய் இறுகிக் கனத்தன. தன்மேல் கவிந்திருந்த நிர்வாண உடல் ஊத்தைச் சதைகள் கொண்ட காண்டமிருகம்போல் அருவருப்பூட்டியது. பின் பல்லியின் உடம்பாய்ப் பச்சை நரம்புகள் தெரியக் கண்ணாடியாகப் பளபளத்தது. பச்சோந்தியைப் போல் நிறம் மாறிய அந்த உருவத்திடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளும் வழி தெரியாமல் உழன்றான். நீண்ட நாட்களாகப் பட்டினி கிடந்த மிருகத்திடம் வசமாய் மாட்டிக்கொண்டு அதன் ராட்சதப் பற்கள் தன் கழுத்தைக் கவ்விய மரண நொடியில் வாசுவுக்குத் திடுக்கென்று விழிப்பு வந்தது.

தான் படுத்திருந்த மூங்கில் கட்டிலிலிருந்து எழுந்தான். ஜில்லிட்ட குளிரிலும் அவன் உடல் வேர்த்துப் பிசுபிசுத்தது. இனம்புரியாத பயம் அவனை அப்பிக்கொண்டது. அடர்ந்த இருளுக்குள் ஒற்றை விளக்கின் வெளிச்சம் பிரகாசமாய் இருந்தது. தன் கட்டிலுக்குக் கீழ் பாய் போட்டுப் படுத்திருந்த மாணவன் ஞானசேகரைப் பார்த்தான். எழுப்பலாமா என வாசு நினைத்தான். கால்முதல் தலைவரை போர்வையால் மூடிப் படுத்திருந்த அவன் தூக்கத்தைக் கெடுக்க மனம் வராமல் குடிசையின் சுவற்றையே வெறித்துப் பார்த்தபடியிருந்தான். மூங்கில் படல்கள்மேல் செம்மண் பூசப்பட்ட அந்தச் சுவர் காச நோயாளியின் பூஞ்சையுடலின் நெஞ்செலும்பாகத் தோன்றியது. முந்தைய நாள் நடந்த சம்பவங்களெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன.

வாசனை * 2

காலையில் வாசு பள்ளிக்கு வந்தபோதே, பத்தாம் வகுப்பு மாணவி ரஞ்சிதா வயசுக்கு வந்துவிட்டாள் என்பதை இரவுக் காவலர் மாணிக்கம் சொன்னார். இந்த ஒன்றரை ஆண்டுகளில் இதுபோல் ஐந்தாறு மாணவிகள் பள்ளியிலேயே பருவமடைந்திருந்ததால் வாசுவுக்கு அப்போது அது வெறும் செய்தியாக மட்டுமே இருந்தது. அவளுடைய பெற்றோருக்கு விஷயத்தைச் சொல்லிவிட்டார்களா என்று விசாரித்தபடியே வகுப்பறைக்குச் சென்றுவிட்டான்.

ரஞ்சிதாவின் பெற்றோர் கேரளாவிற்கு மிளகு பறிக்கும் வேலைக்குச் சென்றுவிட்டதாகவும் வர இன்னும் ஒரு வாரமாகும் எனவும் தெரியவந்தது. அவர்களிடம் கைப்பேசியில் தொடர்புகொண்டபோது, ரஞ்சிதாவை அவள் பாட்டியின் வசம் ஒப்படைத்துவிடுமாறு சொல்லிவிட்டார்களாம். ரஞ்சிதாவின் வீடு கல்வராயன்மலையில் மிகவும் உயரமான பகுதியான மண்ணூரில் உள்ளது. மண்ணூர் செங்குத்தான மலைப்பகுதி. சாலை வசதி இல்லாத அந்த ஊருக்கு ஒற்றையடிப் பாதையில் நடந்தே செல்ல வேண்டும். பள்ளியிலிருந்து மேல் நோக்கிச் சென்றால் இருபது கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும். ஆனால் பேருந்தில் சென்றால் மலையைவிட்டு இறங்கிச் சமதளத்தில் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இறங்கி மலையில் பத்துக் கிலோ மீட்டர் நடக்க வேண்டும். மலைப் பகுதியில் இப்படித் தினமும் செல்ல முடியாது என்பதாலேயே அரசாங்கம் உண்டு உறைவிடப் பள்ளிகளைத் திறந்திருக்கிறது. வாசு பணியாற்றும் இந்தப் பள்ளியும் அப்படிப்பட்டதுதான். இருபாலாரும் படிக்கும் உயர்நிலைப் பள்ளி. பகலில் வகுப்பறைகளாகவும் இரவில் மாணவ மாணவியர் தங்கும் விடுதிகளாகவும் பள்ளியின் அறைகள் இருக்கும். தலைமையாசிரியரே காப்பாளராகவும் செயல்படுவார்.

ரஞ்சிதாவை யாரோடு அனுப்பிவைப்பது என்பதில்தான் சிக்கல். மண்ணூரைச் சேர்ந்த மற்ற மாணவிகள் இருவரோடு அனுப்பிவைக்கலாம். துணைக்குப் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனையும் போகச் சொல்லலாம் என்ற யோசனையைத் தலைமையாசிரியர் ஒப்புக்கொள்ளவில்லை. பெரியவர்கள் யாராவது துணைக்குப் போக வேண்டும் என்பதில் பிடிவாதமாயிருந்தார். இரவுக் காவலரையும் அனுப்ப முடியாது. இரவுக் காவலுக்கு அவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். சமையல்காரர்கள் இரண்டு பேரில் ஒருவன் சொந்த ஊருக்கு விடுப்பில் சென்றதால் ஒருவன் மட்டுமே இருக்கிறான். அவனையும் அனுப்பிவிட்டால் யார் சமைப்பது? இப்படி ஒவ்வொருவராகத் தலைமையாசிரியர் யோசித்ததில் வாசுதான் அவருக்குச் சரியான தேர்வாகத் தோன்றினான்.

ரஞ்சிதாவிற்கு மகிழ்ச்சி. தான் பருவமடைந்துவிட்டோம் என்பதைக் காட்டிலும் தன் வீட்டிற்கு வாசு சாரும் வருகிறார் என்பதில் அவளுக்கு அதிக சந்தோசமிருந்தது.

வாசனை * 3

நம்ப முடியாமல் ‘சார் நெசமாவே எங்ககூட வரீங்களா?’ என மூன்றாம்முறையாகக் கேட்டாள். வாசுவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘ஏன் நான் உங்க வீட்டுக்கு வரக் கூடாதா?’ என்றான். அதைக் கேட்டுப் பதறிய ரஞ்சிதா ‘கண்டிப்பா வாங்க சார்’ என்றாள். இதற்குள்ளாகவே பத்தாம் வகுப்பு மாணவன் ஞானசேகர், ‘வாசு சார் எங்ககூட மண்ணூர் வருகிறார்’ என்று பள்ளி முழுக்கப் பரப்பிவிட்டிருந்தான். கள்ளம் கபடமில்லாத அவர்களின் அன்பு வாசுவுக்குப் பிடித்திருந்தது. அவர்களின் சந்தோசத்திற்காகவாவது பத்துக் கிலோ மீட்டர் நடக்கும் கஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளத் தீர்மானித்தான்.

அந்த மலைக் கிராமத்திற்கு அடிக்கடி பேருந்து கிடையாது. பதினோரு மணிக்கு ஆத்தூர் செல்லும் பேருந்தில் காத்திருந்து ஏறிக்கொண்டார்கள். ரஞ்சிதா, அவளுக்குத் துணையாக இன்னொரு மாணவியான அம்பிகா, மாணவன் ஞானசேகர், வாசு என்று நான்கு பேர் சென்றார்கள்.

‘ரஞ்சிதா உனக்கு மூனு பேர் எஸ்கார்டு. இதுக்கெல்லாம் கொடுத்துவச்சிருக்கணும்’ என்று வாசு அவளைக் கிண்டல் செய்தான்.

ரஞ்சிதா மிகுந்த வெட்கத்தோடு நெளிந்தாள். அவளுக்கு என்ன பதில் சொல்லுவதேன்றே தெரியவில்லை. தலைவரைக்கும் போர்த்தியிருந்த துப்பட்டாவுக்குள்ளிருந்து கண்கள் மிளிரச் சிரித்தாள்.

வாசு ஒரு கணம் அவளையே பார்த்தான். ஒல்லியான தேகம். செம்மண்ணும் மஞ்சளும் கலந்தது போன்ற நிறம். சின்ன கண்கள். கூர்மையான நாசி. அதில் தங்கத்தாலான மூக்குத்தி போட்டிருந்தாள். ரஞ்சிதா மட்டுமல்ல பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவிகள் மூக்குத்தி குத்தியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த சுடிதார் போட்டுத் துப்பட்டாவால் தலை முழுவதும் மூடியிருந்தாள். கையில் கொஞ்சம் வேப்பிலையும் ஒரு எலுமிச்சம்பழமும் இருந்தன. பேய்பிசாசு பிடிக்காமலிருக்க வைத்திருக்கிறாள்போல என்று எண்ணியபோது மீண்டும் சிரிப்பாக இருந்தது. வாசு தன் சகோதரியை நினைத்துக்கொண்டான். அவள் பருவமடைந்தபோதும் இப்படித்தான் வெளியில் போனால் கையில் சின்ன கத்தியையும் வேப்பந்தழையையும் அம்மா கொடுத்தனுப்புவாள். காத்துகறுப்பு அண்டாமல் இருப்பதற்கு என்று விளக்கம் வேறு கொடுப்பாள். ‘இந்த மொண்ணக் கத்தியப் பாத்துத்தான் பேயி பயந்து ஓடுமாக்கும்’ என்று தான் கேலிசெய்தது ஞாபகம் வந்தது. அம்மாவைப் போலவே ரஞ்சிதாவும் நம்பியது ஆச்சரியமாயிருந்தது.

பேருந்து மலைப்பாதையில் மெல்ல ஊர்ந்து வந்ததால் இவர்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு வர மதியம் ஒரு மணியாகிவிட்டது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில் ஐந்தாறு கடைகளிருந்தன. அவற்றில் ஒன்று சிறிய ஓட்டல் என்பதால் மலையேறுவதற்கு முன் சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என வாசுவுக்குத் தோன்றியது. ஆனால் உடன் வந்த பிள்ளைகள் கூச்சப்பட்டு மறுத்தார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று புரோட்டா வாங்கிக் கொடுத்தான். அவர்கள் விரும்பிச் சாப்பிடுவதைப் பார்த்தபோது பள்ளிப் பருவத்திற்கும் புரோட்டாவிற்க்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக வாசுவுக்குத் தோன்றியது. வீட்டில் சமைக்க முடியாத உணவு என்பதால் இந்தப் பந்தம் உருவாகியிருக்கலாம் என்று நினைத்தன். வாசு மாணவனாக இருந்தபோது மதிய உணவு கொண்டு போகாத நாட்களில் ஓட்டலில் ஏதாவது சாப்பிட்டுக்கொள்ள அவன் அப்பா காசு கொடுத்தனுப்புவார். அப்பொதெல்லாம் வாசு புரோட்டாவே விரும்பிச் சாப்பிடுவான். கந்தசாமி கடையின் கறிக் குழம்பில் புரோட்டாவை ஊறவைத்துத் தின்ற இனிமையான நாட்களை நினைத்துக்கொண்டான்.

வாசனை * 4

வெயில் கொஞ்சம் உக்கிரமாகவே இருந்தது. மலைப் பாதை நெடுக மரங்களும் செடிகளும் இருக்கும் அவற்றின் நிழலால் வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்தபடியே நடந்தான். ஆனால் பிள்ளைகளுக்கு வெயில் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. பழக்கப்பட்ட பாதையில் சென்றதால் அதுவரையிருந்த மெல்லிய கூச்சத்தைவிட்டு இயல்பாக நடந்தார்கள். அந்த ஒத்தையடிப் பாதையில் ஞானசேகர் முதலாவதாகச் சென்றான். ரஞ்சிதாவும் வாசுவும் அடுத்தடுத்து வரக் கடைசியில் அம்பிகா வந்தாள். தான் கடைசியாக வருவதாய் வாசு எவ்வளவு சொல்லியும் அம்பிகா கேட்கவில்லை.

மலைப் பாதையில் எந்த நேரமும் காட்டெருமையோ கரடியோ வரலாம் என எச்சரித்தார்கள். அதற்குத் தோதாக முதலிலும் கடைசியிலும் பழக்கப்பட்டவர்கள் செல்லுவதுதான் சரி என்று ஞானசேகர் சொன்னான். வேகமாகச் சென்று கொண்டிருந்தவன் கொஞ்சம் இருங்க என்பதுபோல் சைகை காட்டிவிட்டு மூங்கில் மரங்கள் வளர்ந்திருந்த பகுதிக்குச் சென்றான். அங்கு நல்ல வாகாக இருந்த மூங்கில் குச்சியென்றைக் கையாலேயே ஒடித்து வந்தான். அதிலிருந்த சின்ன கிளைகளையெல்லாம் ஒடித்துத் தடித்த குச்சியை வாசுவிடம் கொடுத்தான். வாசுவுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘மேடு பள்ளமான இடங்கள்ல இந்தக் குச்சியை ஊனிக்கிட்டு நடந்தா வசதியா இருக்கும் சார்’ என்றான்.

‘உங்க ஊருக்கு வர்ற எனக்கு என்ன தருவீங்க?’ என விளையாட்டாய் வாசு கேட்டான்.

‘சார் ஊருக்கு வாங்க. உங்க கண்ணுமுன்னாலே தேன்கூடு அழிச்சு சுத்தமான தேன் தரேன்’ என்றான் ஞானசேகர்.

‘ஆமாங்க சார். ஞானசேகர் தேனெடுக்கறதுல கெட்டிக்காரன் சார்’ ரஞ்சிதாவும் அவனுக்கு ஆதரவாகச் சொன்னாள்.

‘தேன் குடுக்கறதுக்கு முன்னாடி சாருக்கு மொதல்ல மாங்கா பறிச்சுக் கொடுடா’ என அதிகாரத்தோடு அம்பிகா சொன்னாள்.

‘ஏய் அம்பிகா எனக்குத் தெரியாதா? என்னமோ பெருசா சொல்ற’ என முறைத்தவன் வாசுவின் பக்கம் திரும்பி, ‘சார் இங்கயிருக்கற மரத்துக் காயவிட இன்னும் கொஞ்ச தூரம் போனா சின்ன ஓடை வரும் சார். அதுக்குப் பக்கத்துல ஒரு மரமிருக்கு. அதுலருந்து மாங்கா பறிச்சுத் தரேன். ரொம்ப ருசியா இருக்கும் சார்’ என்று ஆர்வம் பொங்கச் சொன்னான்.

வாசுவுக்கு அவன் செய்கைகள் ஆச்சரியத்தைக் கொடுத்தன. பத்தாம் வகுப்பில் வகுத்தல் கணக்கே தெரியாமல் தன்னிடம் அடிவாங்கும் ஞானசேகரனா இப்படி என்று ஆச்சரியத்தோடு, ‘எனக்கு எதுவும் கொடுக்க வேணாம். நாம பத்திரமா வீடு போய்ச் சேர்ந்தா அதுவே போதும்’ என்றான்.

வாசனை * 5

குளிர்ச்சியான காற்று அவர்களை வருடியபடியே அழைத்துச் சென்றது. அந்த மலை முழுவதும் படர்ந்திருந்த பச்சைநிறம் வாசுவின் மனத்தில் இதமான சந்தோசத்தைத் தோற்றுவித்தது. தூரத்தில் தெரிந்த மயில் கூட்டத்தை அம்பிகா காட்டினாள். தோகை நீண்ட ஆண் மயில்களும் தோகையில்லாத பெண் மயில்களும் கூட்டமாய் மரங்களின் நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்தன. வெள்ளை முயல்குட்டிகள் இரண்டு இவர்களின் காலடியோசை கேட்டு வேகமாக ஓடி அருகிலிருந்த புதருக்குள் மறைந்துகொண்டன.

நகரத்தில் வசிக்கும் வாசு இந்த ஒன்றரையாண்டுகளில் மலை வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டிருந்தான் என்றாலும் இப்படி வழியெங்கும் பறவைகள், விலங்குகளின் தரிசனம் கிடைத்தது அவனுக்குப் புதுமையாகத் தோன்றி சந்தோசத்தைக் கொடுத்தது. கடையில் வாங்கியிருந்த திண்பண்டத்தைப் பிரித்து எல்லோருக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்டான். நடந்துகொண்டே சாப்பிட்டதால் திண்பணடத்தின் சுவை இன்னும் கூடியிருந்ததாகத் தோன்றியது.

பலா, மா, தேக்கு, கொய்யா மரங்களும் வாசுவுக்குப் பெயர் தெரியாத பல மரங்களும் வழியெங்கும் வளர்ந்திருந்தன. ஒரு மேட்டுப் பகுதியில் ஏறியபோது ஞானசேகரின் நடையின் வேகம் குறைந்தது. சத்தம் வராமல் மெல்ல நடக்கும்படி சொன்னான். வாசு ஒன்றும் புரியாமல் என்ன என்று கேட்டபோது வலது புறமிருந்த பள்ளத்தைக் காட்டினான். அங்கு ஆறேழு காடெருமைகள் மேய்ந்துகொண்டிருந்தன. செம்பழுப்புநிறத்தில் கொழுத்துத் திரண்டிருந்த அவற்றின் உருவத்தைப் பார்த்து அவை எருமைகள் என்பதை வாசுவால் நம்பவே முடியவில்லை. அவனுக்கு வீட்டில் வளர்க்கும் கறுப்புநிற எருமைகள் நினைவுக்கு வந்தன. அந்த எருமைகள் எவ்வளவு சாதுவானவை. ஆனால் இந்தக் காட்டு எருமைகளின் கம்பீரத்தையும் கூர்மையான கொம்புகளையும் பார்த்து வாசுவுக்குக் கொஞ்சம் பயமாகவேயிருந்தது.

அந்தச் செங்குத்தான மேட்டைவிட்டு இறங்கியபோது வாசுவுக்கு வேர்த்துக் கொட்டியது. மேல்மூச்சு வாங்கியது. கொஞ்சம் இளைப்பாறிச் செல்லலாம் என்றான். இன்னும் கொஞ்ச தூரத்தில் தான் சொன்ன சின்ன ஓடை வந்துவிடும் அங்கே போய் ஓய்வெடுக்கலாம் என்றான் ஞானசேகர். ரஞ்சிதாவுக்கும் அம்பிகாவுக்கும் வாசுவைப் பார்த்துச் சிரிப்பு வந்துவிட்டது.

‘என்ன சார் கொஞ்ச தூரம் நடந்ததுக்கே இப்படி எளப்பு வாங்குறீங்க?’ என்றார்கள்.

‘புதுசா நடந்தா இப்படித்தான் ஆகும்’ என்று அவர்களுக்குப் பதில் சொன்னான்.

பத்து நிமிடம் நடந்ததும் ஞானசேகர் சொன்ன சின்ன ஓடை வந்தது. அதில் தண்ணீர் பெருக்கெடுக்கவிட்டாலும் கால் நனைக்குமளவிற்கு இருந்தது. ரஞ்சிதாவும் அம்பிகாவும் மாமரத்தின் அடியில் அமர்ந்துகொள்ள ஞானசேகர் தான் சொன்ன மரத்தில் பழம் பறிக்க ஏறினான்.

மற்ற இடங்களைவிட அங்கே குளிர்ச்சியாக இருந்தது. வாசுவுக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும்போல் இருந்தது. மாணவிகள் அமர்ந்திருந்த இடத்தைவிட்டுக் கொஞ்சம் தள்ளி ஒரு பள்ளத்தில் இறங்கினான். அங்கே சின்ன குளம்போல ஓடைத் தண்ணீர் தேங்கியிருந்தது. அந்த நீர் கண்ணாடியைப் போல் தெளிவாயிருந்தது. அந்த நீரைக் குடிக்கத் தோன்றவே கைகளைக் கூப்பி அள்ளிக் குடித்தான். தண்ணீர் ருசியாய் இருந்தது.

இன்னொருமுறை அள்ளிக் குடித்தான். அப்போது ஏதோ அலறல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டான். ஏதாவது விலங்குகளோ எனச் சுற்றுமுற்றும் பார்த்தான். எதையும் காணவில்லை. வாசுவுக்கு மரத்திலேறிய ஞானசேகரின் ஞாபகம் வந்தது. என்னமோ ஏதோ எனப் பயந்தபடியே குளத்திற்கு எதிரேயிருந்த பாறையின் அருகில் அவசரமாய்ச் சிறுநீர்கழித்துவிட்டு மற்றவர்கள் இருந்த இடத்திற்கு வேகமாய் வந்தான்.

வாசனை * 6

இரண்டு பேர் மாம்பழம் தின்றுகொண்டிருக்க, ரஞ்சிதா மட்டும் கையில் மாம்பழத்தை வைத்துக்கொண்டு சாப்பிடுவதா வேண்டாமா என்று விழித்த படியிருந்தாள். இவன் அருகில் வந்ததும் ‘சார் நான் சாப்பிடலாமா?’ எனக் கேட்டாள். உண்மையில் இவனுக்கும் என்ன சொல்லுவது எனத் தெரியவில்லை. இருந்தும், ‘நீ சாப்புடாதே’ என்றே சொன்னான். ரஞ்சிதாவிற்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவேயிருந்தது. இருந்தும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஞானசேகர் இவனிடம் ஒரு பழத்தைக் கொடுத்தான். ரஞ்சிதாவைவிட்டுத் தான் மட்டும் சாப்பிட ஏனோ மனம் ஒப்பவில்லை. வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று மறுத்துவிட்டான்.

வாசுவுக்குச் சின்ன ஓடையைக் கடந்ததிலிருந்து ஒரு துர்நாற்றம் வந்துகொண்டேயிருந்தது. ஏதோ உடல் அழுகிய நாற்றம்போல இருந்தது. வழியில் ஏதேனும் விலங்கு இறந்திருக்கக் கூடும் என்று மூக்கைப் பொத்திக்கொண்டான். ஆனாலும் துர்நாற்றம் வீசிக்கொண்டேயிருந்தது. அந்த நாற்றத்தால் குடலைப் பிடுங்கிக்கொண்டு வாந்தி வருவதுபோல் இருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நடந்தான்.

ஆனால் உடன் வந்த பிள்ளைகளோ எவ்வித அசூசையுமின்றி வந்தார்கள். வாசு அவர்களிடம், ‘உங்களுக்கு ஏதாவது நாத்தம் வருதா?’ என்று கேட்டான். ஆனால் அவர்களோ அப்படி எதுவும் வரவில்லை என்றார்கள். தனக்கு மட்டும் நாற்றம் வருகிறதே எப்படி என யோசித்தான். ஒருவேளை ரஞ்சிதாவிடமிருந்து அந்த நாற்றம் வந்ததோ எனச் சந்தேகப்பட்டான். ரஞ்சிதாவிற்கும் பின்னாடி தான் போகிறோம். முன்னாடி இருக்கும் ஞானசேகருக்கோ தனக்குப் பின்னாடியிருக்கும் அம்பிகாவிற்கோ அந்த நாற்றம் வருவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்தான். உடனே அம்பிகாவை ரஞ்சிதாவிற்குப் பின்னால் வரச் சொல்லிவிட்டு வாசு கடைசியில் வந்தான்.

அப்போதும் அந்தத் துர்நாற்றம் நிற்கவில்லை. வாசுவுக்குத் தலைசுற்றியது. எவ்வளவு அடக்கியும் முடியாமல் குடலைப் புரட்டிக்கொண்டு வாந்தி வந்தது. நடக்க முடியாமல் கால்கள் நடுங்கியபடி தடுமாறிக் கீழே விழவிருந்த நிலையில் சுதாரித்துக்கொண்டு அந்தப் புல்தரையிலேயே அமர்ந்தான். வாசுவின் இந்தச் செய்கையால் பிள்ளைகள் மூன்று பேரும் பயந்துபோனார்கள். தான் கொண்டுவந்திருந்த தண்ணீரில் வாயையும் முகத்தையும் கழுவிக்கொண்டு கொஞ்சம் குடித்தான்.

மதியம் சாப்பிட்ட புரோட்டா ஒத்துக்கொள்ளவில்லைபோலிருக்கிறது. அதுதான் வாந்திவந்துவிட்டது என்று பயந்திருந்த பிள்ளைகளைத் தேற்றினான். அவர்களை முன்னால் போகச் சொல்லிவிட்டு வாசு இருபதடி இடைவெளி விட்டுத் தனியாக நடந்தான். என்ன ஆச்சரியம் அந்தத் துர்நாற்றம் இப்போது கொஞ்சம்கூட வரவில்லை. அந்த நாற்றம் ரஞ்சிதாவிடமிருந்துதான் வந்திருக்கும் என்று வாசு முழுமையாக நம்பினான். எனவே முடிந்தவரை அவர்களுக்கும் தனக்குமான இடைவெளியைஅதிகமாக்கிக்கொண்டான். எதுவும் புரியாமல் ஞானசேகரன் அடிக்கடி இவனைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தான்.

வாசனை * 7

சிறிது தூரம் சென்றதும் வாசுவுக்குத் தன்னை யாரோ பின் தொடர்ந்ததாகத் தோன்றியது. மெல்லத் திரும்பிப் பார்த்தான். யாரையும் காணவில்லை. ஒருவேளை அது மனப்பிரமையோ என்று நினைத்தான். அந்தத் துர்நாற்றத்தால் தான் மிகவும் குழம்பிவிட்டதை வாசு நன்றாகவே உணர்ந்தான். அப்போது ஏதோ மெல்லிய துணி காற்றின் வேகத்தில் தன் வலது கைப்பகுதியில் மோதியதுபோல இருந்தது. அப்படி உணர்ந்தது நிஜமா தன் கற்பனையா என்பது அவனுக்குத் தெளிவாகவில்லை. ஆனாலும் அந்தக் கணத்திலிருந்து வாசுவால் தனிமையில் நடக்க முடியவில்லை. ஞானசேகரனைச் சற்று நிற்கும்படி சொல்லிப் பிள்ளைகளுடனேயே மீண்டும் சேர்ந்து நடந்தான். நல்லவேளை துர்நாற்றம் வரவில்லை. வாசுவுக்கு இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நடையில் கொஞ்சம் வேகத்தைக் கூட்டினான். அவனுக்குச் சீக்கிரம் மண்ணூர் போய்விட வேண்டும்போல் இருந்தது.

மீண்டும் காற்று சற்றுப் பலமாக வீசத் தொடங்கியது. அப்போது அந்த மெல்லிய துணி பறந்து வந்து தன்னுடைய முகத்தில் விழுந்ததைப் போல் வாசு உணர்ந்தான். அந்த நிமிடத்திலிருந்து ஒரு நறுமணம் வீசத் தொடங்கியது. அது எந்தப் பூவின் வாசனை என அறுதியிட்டுக் கூற முடியாதபடி பல பூக்களின் சங்கமத்தில் எழுந்த சுகந்தமாக இருந்தது. அதை நுகர நுகர வாசுவின் உடலுக்குள் உஷ்ணம் மெல்லக் கொப்பளித்தது.

வாசு அந்த நறுமணத்தை வெறுத்தான். தன் பலம் முழுவதையும் திரட்டித் தன்னைச் சமநிலைக்குள் வைத்துக்கொள்ள வெகுவாக முயன்றான். ஆனாலும் மெல்லிய துணி அப்போது அவன் கழுத்துப் பகுதியில் படபடத்தது. கம்பளிப்பூச்சி ஊர்ந்தாற்போல வாசு உடம்பைச் சிலிர்த்துக்கொண்டான். ஏதாவது பேய்பிசாசின் வேலையோ என முதன்முறையாக நினைத்தான். ஆனால் வாசுவுக்கு அவற்றின் மீதெல்லாம் துளிக்கூட நம்பிக்கை இருந்ததில்லை. நடந்ததெல்லாம் தன் கற்பனை; அந்தப் பரந்த மலையும் அதைக் கவிந்த அமைதியும் தனக்குள் ஒளிந்திருக்கும் பயவுணர்வைக் கிளர்த்தெழச் செய்வதாக நினைக்கத் தலைப்பட்டான். இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில் பேயாவது பிசாசாவது என்று தன்னையே தேற்றிக்கொண்டான்.

வாசு எதுவும் பேசாமல் ஒருவிதப் பதற்றத்தோடு வந்தது பிள்ளைகளையும் கொஞ்சம் பாதித்திருந்தது. வாந்தி எடுத்ததிலிருந்து அவனிடம் தெரிந்த மாற்றம் அவர்களைக் குழப்பிவிட்டது. ஆனாலும் அதைப் பற்றிப் பேசத் தயக்கமாகயிருந்தது. எனவே தங்களுக்குள்கூட எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக நடந்தார்கள்.

தான் உணர்ந்த விஷயங்களைப் பிள்ளைகளிடம் சொல்லலாமா என வாசு யோசித்தான். ஆனால் அவர்கள் பயந்துவிட்டால் என்ன செய்வது என்பதால் அமைதியாக நடந்தான். ஆனால் அந்தப் பரிமளம் அவனை இம்சித்துக்கொண்டேயிருந்தது. நேரம் செல்லச் செல்ல முன்பு வந்த துர்நாற்றத்தைவிட இந்தச் சுகந்தம் அவனைப் பைத்தியம் பிடிக்கச் செய்துவிடும்போலிருந்தது. தலை வெடித்துவிடுமளவுக்கு வலித்தது. தன் கையிலிருந்த மூங்கில் கழியைத் தூக்கி எறிந்தான். ஏதோ பலமான சூறைக்காற்றில் மாட்டித் தவித்ததுபோல் தலைச்சுற்றல் வர மயங்கி விழுந்தான்.

வாசனை * 8

வாசு தன் தலைமாட்டில் வைத்திருந்த கைப்பேசியில் மணி பார்த்தான். நடு ஜாமம் ஒரு மணியாயிருந்தது. டவரில்லாததால் சிக்னல் கிடைக்காமல் கைப்பேசி உபயோகமற்றுக்கிடந்தது. அந்த நிசப்த வெளியில் எங்கிருந்தோ ஒரு ஓநாயின் ஊளைச்சத்தம் காதில் விழுந்தது. இரண்டு அறைகள் கொண்ட அந்தக் குடிசையில் மற்றொரு அறையிலிருந்து படலை விலக்கிய சத்தம் கேட்டது. சிறிய இடைவெளிக்குப் பின் சிறுநீர் கழித்த சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் படலை மீண்டும் அடைத்த சத்தம் கேட்டதும். வாசுவுக்குத் தானும் சிறுநீர் கழிக்க வேண்டும்போல் தோன்றியது. கைப்பேசியின் டார்ச்சு வெளிச்சத்தில் வெளியே வந்தான்.

நிலா நடுவானத்துக்கு ஏறியிருந்தது. செயற்கை விளக்குகளற்ற அந்த இருளில் நிலா வெளிச்சம் அலைகளின் நுரைகளைப் போல வெண்மையாகப் படர்ந்திருந்தது. வீட்டின் வாசலுக்கு முன்னால் இருந்த மாமரத்தின் அடியில் வாசு சிறுநீர் கழித்தான். நேற்று மதியம் வெயிலில் நடந்ததால் சூடுபிடித்திருந்தது. சிறுநீர் வெளியேறியபோது வலித்தது. இப்படி வலிக்கிறதே என நினைத்தபடி மீண்டும் குடிசையை நோக்கி வந்தவன் திடுக்கிட்டான்.

இவன் அறைக்குச் செல்லும் படலுக்கருகில் ஒரு கிழவன் நின்றுகொண்டிருந்தான். அவன் யாரெனத் தெரியாமல் வாசு தயங்கி நின்றான்.

‘பயப்படாத தம்பி. நான் பக்கத்து வீட்டுக்காரன்தான்’ என்று சிரித்தபடி சொன்னான்.

வாசுவுக்கு அதை நம்புவதா வேண்டாமா எனக் குழப்பமாக இருந்தது.

‘வயாசான காலத்துல எங்க தூக்கம் வருது?’ என்று சொன்னவன் வாசுவின் பதிலை எதிர்பார்க்காமல், ‘தம்பி உடம்பு இப்ப எப்படியிருக்குது? ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா? இப்படி நடுராத்திரியில் முழிப்பு வந்திருச்சே’ என்றான்.

வாசுக்கு அவன் விசாரிப்பால் கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டு, ‘இப்பப் பரவாயில்லை. நல்லாயிருக்கு’ என்றான்.

‘நேத்து சாயந்திரத்திலிருந்து எங்களைப் பயப்படித்திட்டீங்க’ என்ற கிழவன் ‘உங்களுக்குக் கண்ணாலம் ஆயிருச்சா?’ என்றான்.

‘இன்னும் இல்ல.’

‘கண்ணாலம் ஆகாத கொமரன். வயசுக்கு வந்த பெண்பிள்ளைய இப்படி மட்ட மத்தியானத்தில் கூட்டி வந்திருக்கியே. அப்புறம் காத்துகறுப்பு அண்டாம என்ன செய்யும்?’ என்றான்.

வாசுவுக்கு என்ன சொல்லுவது எனத் தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

அந்த மௌன இடைவெளியில் கிழவன் தன் காகிதப் பையிலிருந்து வெற்றிலைபாக்கை எடுத்துப் போட்டுக்கொண்டான். அதை மென்றபடியே ‘நேத்து உனக்குப் பேய் பிடிச்சிருச்சு’ என்றான்.

‘பேயா?’

வாசனை * 9

நாக்கில் இன்னும் கொஞ்சம் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டே, ‘ஆமா. அந்தக் கழுத முண்ட பரிமளாதான் உன்னையும் புடிச்சுக்கிட்டா’ என்றான் கிழவன்.

‘பரிமளா யாரு? அவ என்னை ஏன் பிடிக்கணும்’ என்றான் வாசு.

அதுவரை நின்றபடியே பேசிக்கொண்டிருந்த கிழவன் வீட்டின் வெளித் திண்ணையைக் காட்டி, ‘அப்படி ஒக்காந்து பேசலாமா?’ என்றான். வாசுவும் அதில் அமர்ந்தான். கிழவன் அவனுக்கு எதிரில் வாசலில் போட்டிருந்த உரலில் உட்கார்ந்துகொண்டான். வாயில் குதப்பியிருந்த வெற்றிலைச் சாறைத் துப்பிவிட்டுப் பேசத் தொடங்கினான்.

‘நீங்க வந்த வழியில் சின்ன ஓடையைப் பார்த்திருப்பீங்களே? அதுக்குப் பக்கத்துப் பள்ளத்தில் இருக்கற குளத்துக்குக் கன்னிமார் குளமுன்னு பேரு. அந்தக் குளத்துல தண்ணி கண்ணாடி மாதிரியிருக்கும். அந்தத் தண்ணீயோட ருசி தேன் மாதிரியிருக்கும். அந்தச் சின்ன குளத்துக்குப் ஒவ்வொரு பவுர்ணமி ராத்திரியிலயும் ஏழு கன்னிமாருங்க குளிக்க வர்றதா எங்க முன்னோருங்க காலத்துலயிருந்தே ஒரு நம்பிக்கை. அதனால அந்தக் குளத்த நாங்க யாரும் பொழங்குறதில்ல. காட்டு மிருகங்கதான் அதுல தண்ணி குடிக்கும். எங்க ஊர்ப் பூசாரிக்கு ஏழு பிள்ளைங்க. அதுல பரிமளாதான் கடைசி. நல்ல அழகா வடிவமா இருப்பா. பூசாரிக்குக் கடைசி மகமேல கொள்ள பிரியம். அவ எது கேட்டாலும் வாங்கிக் கொடுப்பான். எங்க ஊருலயே மொதமொதலு பத்தாம் வகுப்பு படிச்சவ அவதான். அப்பேர்ப்பட்டவளுக்கு ஒரு கொறை. வயசு இருபது ஆகியும் பருவமடையல. பூசாரியும் பண்ணாத வைத்தியமில்ல, போகாத கோயிலுமில்ல. ஆனா பரிமளாவுக்குக் குணமாகவேயில்ல. இப்படிக் கவலையாவே போயிட்டிருந்தப்போ ஒரு நாள் பூசாரி கனவு கண்டானாம். ஊருக்கு வெளியிலயிருக்கற கன்னிமார் குளத்துல பவுர்ணமி ராத்திரி பரிமளாவை ஒட்டுத் துணியில்லாம மூணுதடவ முங்க வச்சா அவ பருவத்துக்கு வந்துடுவான்னு சாமி வந்து சொல்லுச்சாம். பூசாரி அந்தக் கனவ நம்புனான். யாருகிட்டையும் அதப் பத்தி வாயே தொறக்குலே. மவ பரிமளாவ அடுத்த பவுர்ணமி அன்னிக்கி ராத்திரி கன்னிமார் குளத்துக்குக் கூட்டிட்டுப் போனான். ஒட்டுத் துணியில்லாம மவளக் குளத்துல இறங்கி முங்கச் சொன்னான். ஆனா குளத்துல எறங்குன மகளக் காணோம். என்னமோ ஏதோன்னு பதறிப்போன பூசாரி மவளத் தேடித் தானும் குளத்துல எறங்கியிருக்கான். அடுத்த நாள் பூசாரியோட உடம்பு உப்பிப் போயிக் குளத்துக்கு வெளியில கிடந்துச்சு. ஆனா பரிமளாவோட உடம்பு மட்டும் எங்கத் தேடியும் கிடைக்கல. அவ கன்னிமார் ஆயிட்டான்னு நாங்க நம்புறோம். ஆனாலும் இந்த ஊருக்கு வர்ற வேத்து ஆளுங்கள்ல கண்ணாலம் ஆகாதவங்களை அவ புடிச்சுக்கிறா. அவங்களுக்கு வெளையாட்டு காட்டறா. அதுக்கு என்ன பரிகாரம் பன்னுறதுன்னுதான் தெரியல'.

கதையைச் சொல்லி முடித்த கிழவனின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. கிழவன் தனக்காக அழுதானா பரிமளாவுக்காக அழுதானா எனத் தெரியாமல் வாசு குழம்பினான்.

கண்ணீரைத் துடைத்தபடியே கிழவன் ‘தம்பி பூசாரி செஞ்சது சரியா தப்பா?’ என்றான்.

வாசனை * 10

வாசுவுக்கு என்ன சொல்வது எனக் குழப்பமாக இருந்தது. எதுவும் சொல்லாமல் ‘எனக்குத் தூக்கம் வருது. நாளைக்குச் சொல்றேன்’ என்று எழுந்துகொண்டான். கிழவன் எதுவும் சொல்லவில்லை. வாசுவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

வாசு குடிசைக்குள் வந்து படலைச் சாத்திவிட்டுப் படுத்தான். படுத்த கொஞ்ச நேரத்திலேயே தூக்கம் வந்துவிட்டது. மறுநாள் காலையில் எட்டு மணி சுமாருக்கு ஞானசேகர் வந்து எழுப்பும்வரை அவன் தூங்கிக்கொண்டேயிருந்தான்.

கொத்தமல்லிக் காபியை ஆவிபறக்க ஞானசேகர் வாசுவிடம் கொடுத்தான். வாசுவுக்கு அதன் சுவை அற்புதமாக இருந்தது. ரசித்துக் குடித்தபடியே பக்கத்து வீட்டுக் கிழவனைப் பற்றி விசாரித்தான்.

‘பூசாரி தாத்தாவா? அவுரு செத்து அஞ்சு வருசத்துக்கும் மேல இருக்கும் சார்’ என்றான்.

வாசுவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அந்த ஊரைவிட்டுப் போய்விடத் தீர்மானித்தான்.

* * * * *

http://malaigal.com/?p=5547

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.