Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்கள் பத்து

Featured Replies

  • தொடங்கியவர்

ஜோஹன் அலாய்ஸ் செனஃபெல்டர் 10

 

johan_2188954h.jpg

 

நவீன லித்தோகிராஃபி முறையைக் கண்டுபிடித்த ஜோஹன் அலாய்ஸ் செனஃபெல்டர் பிறந்த நாள் இன்று. அவரைப்பற்றிய அரிய முத்துக்கள் பத்து..
 
 ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை ஒரு நாடக நடிகர். மூனிச் நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். கல்வி உதவித் தொகை பெற்று சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். 1791ல் அப்பா காலமானதால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நடிகரானார். நாடகங்களையும் எழுதினார்.
 
 இவர் எழுதிய பல நாடகங்கள் பரவலான பாராட்டுகளைப் பெற்றன. தான் எழுதிய இரு நாடகங்களின் கையெழுத் துப் பிரதியை எடுத்துக்கொண்டுபோய் ஒரு அச்சகத்தில் கொடுத்தார். அவர்கள் சொன்ன தேதியில் அச்சடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்தனர்.
 
 ஒரு அச்சகத்தில் சேர்ந்து அச்சுக்கலையைக் கற்றார். ஒரு சிறிய அச்சகத்தை விலைக்கு வாங்கினார். தான் எழுதிய நாடகங்களை தானே பிரின்ட் செய்து வெளியிடலாம் என்று விரும்பினார். பிரின்டிங் ப்ளேட்டுகளில் பிரின்ட் செய்வது மிகவும் செலவு பிடிப்பதாக இருந்தது. அதைத் தானாகவே செய்ய முயற்சி செய்தார்.
 
 ஒருநாள் சுண்ணாம்பு பலகை ஒன்றை பாலீஷ் செய்து கொண்டிருந்தார். அப்போது வெளுப்பவருக்கு கொடுக்க வேண்டிய துணிகளின் பட்டியலை அம்மா எழுதச் சொன்னார். கையில் காகிதம் கிடைக்கவில்லை என்பதால், ஒரு கிரீஸ் பென்சிலால் பலகையில் எழுதி னார். பிறகு அதில் ஆசிட் ஊற்றியபோது எழுதாத பகுதி கரைந்து, எழுதிய பகுதிகள் சற்றே மேடாக எழும்பி நின்றன. அதில் மையை ஊற்றி திருப்திகரமாக பிரின்ட் செய்ய முடிந்தது.
 
 சுண்ணாம்புக்கல் பலகை, மையை இயந்திரம் மூலம் எடுத்துக்கொள்ளாமல், ரசாயன ரீதியில் எடுத்துக் கொள்ளும்படி வடிவமைக்க விரும்பினார். பின் மெல்ல மெல்ல சம தளத்தில் பிரின்டிங் செய்யும் நவீன லித்தோகிராஃபி முறையைக் கண்டுபிடித்தார்.ஆரம்பத்தில் ஐரோப்பா முழுவதும் உள்ள நில அளவை அலுவலகங்களில் லித்தோகிராபி அறிமுகப்படுத்தப்பட்டு, பிரபலமடைந்தது.
 
 இசையமைப்பாளர் ஒருவருடன் சேர்ந்து 1796ல் லித்தோ கிராபி முறையில் அச்சிடும் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இவரது மேற்பார்வையில் மூனிச், பெர் லின், பாரிஸ், லண்டன், வியன்னா ஆகிய இடங்களில் லித்தோகிராபி பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
 
 அலோய்ஸ் ‘தி இன்வென்ஷன் ஆஃப் லித்தோகிராஃபி’ என்ற புத்தகத்தில் தனது வாழ்க்கை, இந்த கண்டுபிடிப்பு எவ்வாறு நிகழ்த்தப்பட்டது, இதைத் திறனுள்ள வகையில் எப்படி பயன்படுத்துவது என்பன பற்றி எல்லாம் விரிவாக, விளக்கியுள்ளார்.
 
 இவரது கண்டுபிடிப்பைப் பாராட்டி, அந்த நாட்டு மன்னர், ஸோல்ஹோஃபென் என்ற இடத்தில் இவரது உருவச்சிலையை நிறுவி கவுரவித்தார். இவருக்கு பென்ஷன் தொகையையும் அவர் வழங்கினார்.
 
 கிரேக்க மொழியில் லித்தோகிராஃபி என்றால் கல் அச்சு என்று பொருள். 1834ல் இவர் இறப்பதற்கு முன்பாகவே, படங்கள், இசை வடிவங்கள் ஆகியவற்றைப் புத்தகங் களில் அச்சிடுவதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் முறையாக இந்த லித்தோகிரஃபி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது.
 
 அச்சுத் துறைக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. இந்த அச்சுக்கலை புரட்சி நாயகன், 63-ஆவது வயதில் காலமானார்.
 
  • Replies 81
  • Views 18.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சர் சி.வி.ராமன் 10

 

Untitled_2190719h.jpg

சர் சி.வி.ராமன்

 

உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதை சந்திரசேகர வெங்கட ராமன் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 
 திருவானைக்காவலில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றபோது வயது 18. ஐ.எஃப்.எஸ். தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.
 
 லண்டனில் இருந்து வெளிவரும் அறிவியல் இதழில் 18 வயது இளைஞனின் ஆய்வுக் கட்டுரை வெளியானது சர்வதேச ஆராய்ச்சியாளர்களை வியக்கவைத்தது. அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் அறிவியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இல்லாததால், கொல்கத்தாவில் நிதித் துறை துணை தலைமைக் கணக்கராக பணியில் சேர்ந்தார்.
 
 மகேந்திரலால் சர்க்கார் நிறுவிய இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் பகுதி நேரமாக வேலை செய்தார். இசைக் கருவி களின் அதிர்வுகள், ஒளிச் சிதறல் பற்றி ஆய்வு செய்தார்.
 
 கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரி யராக 16 ஆண்டுகள் பணியாற்றினார். பெங்களூர் இந்திய அறிவியல் கழக இயக்குநராகவும் இயற்பியல் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
 
 இங்கிலாந்தில் இருந்து கப்பலில் நாடு திரும்பும்போது, கடல் ஏன் நீல நிறமாக உள்ளது என்ற சிந்தனை அவருக்கு ஏற்பட்டது. கல்கத்தா திரும்பியதும் இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார்.
 
 ‘திரவப் பொருட்களில் உள்ள கூட்டணுக்களால் ஒளிச் சிதறல் ஏற்பட்டு வெவ்வேறு அலை நீளங்களை உடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. ஒளி ஊடுருவும் தன்மைக்கு ஏற்ப உண்டாகும் வேறுபாடுகளால் கடல் நீல நிறமாகத் தோன்றுகிறது’ என்று கண்டறிந்தார். ‘ராமன் விளைவு’ என அறிவியல் உலகம் போற்றும் இந்த கண்டு பிடிப்புக்காக 1930-ல் நோபல் பரிசு பெற்றார்.
 
 வெறும் 200 ரூபாய் செலவில், தானே உருவாக்கிய கருவி யைப் பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்தி யாவில் மட்டுமே படித்த ஒருவர் நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறை.
 
 ராமன் விளைவை அடிப்படையாகக் கொண்டு அடுத்த 12 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 1500 ஆராய்ச்சிக் கட்டுரை கள் வெளியாயின. இந்த ஆய்வுகள் உலக தொழில் துறை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தன.
 
 லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக 1924-ல் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1929-ல் பிரிட்டிஷ் அரசு ‘நைட்ஹுட்’, ‘சர்’ பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தது. 1954-ல் பாரத ரத்னா வழங்கப்பட்டது.
 
 பெங்களூரில் இவரது சொந்த முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட ராமன் ஆய்வு மையத்தில் இறுதிக் காலம் வரை பணி யாற்றினார். பல விஞ்ஞானிகளை உருவாக்கிய இந்த மேதை 82-வது வயதில் காலமானார்.
 
  • தொடங்கியவர்

வீரமாமுனிவர் 10

 

Untitled_2192701h.jpg

வீரமாமுனிவர்
 
மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
 
 இத்தாலியில் பிறந்த வர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.
 
 மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார்.
 
 கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.
 
 இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
 
 வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.
 
 அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.
 
 தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.
 
 உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.
 
இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.
 
 தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-10/article6577494.ece?widget-art=four-rel

  • தொடங்கியவர்

பி. சுசீலா 10

 

j_2200816h.jpg

 

தென்னிந்திய திரை உலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலாவின் பிறந்த நாள் இன்று. அவரை பற்றிய அரிய முத்துகள் பத்து...
 
 ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர். தந்தை ஒரு வக்கீல். பள்ளியில் படிக்கும்போதே இசை யில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திரா வின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ முடித்தார்.
 
 பதினைந்து வயதில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ் தனது படத்தில் இவரை முதன் முதலாக பின்னணி பாட வைத்தார். 1955ல் இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..’, ‘உன்னைக் கண் தேடுதே…’ பாடல்களால் பிரபலமடைந்தார்.
 
 பி. லீலா, எம்.எல். வசந்தகுமாரி, ஜிக்கி போன்ற பிரபலங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த பின்னணி உலகில் இந்த இளம் பாடகியின் பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. தனித்தன்மை வாய்ந்த தன் குரல் இனிமையால் தொடர்ந்து பல மொழிகளில் ஹிட் பாடல்களை அளித்த இந்த இசையரசியின் ஆட்சி, அரை நூற்றாண்டுகள் தொடர்ந்தது.
 
 1955 முதல் 1985 வரை வெளிவந்த கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் இவர் பின்னணி பாடியுள்ளார். தெலுங்கில் கண்டசாலா, தமிழில் டி.எம். சவுந்திரராஜன், கன்னடத்தில் பி.பி. நிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் தென்னிந்திய திரையிசை உலகில் சரித்திரம் படைத்தன. குறிப்பாக, டி.எம். சவுந்திரராஜனுடன் தமிழில் நூற்றுக்கணக்கான டூயட் பாடல்களைப் பாடியுள்ளார்.
 
 தாய் மொழி தெலுங்கு என்றாலும் இவரது தமிழ் உச்சரிப்பு தனித்தன்மையுடன் விளங்கியது. நாகேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இருவரும் பிரிந்த பின் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் தொடங்கி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
 
 5 முறை தேசிய விருதுகள், பத்ம பூஷன் விருது, 10க்கும் மேற்பட்ட மாநில விருதுகள், கலைமாமணி பட்டம், ஆந்திர மாநில அரசினர் விருது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
 
 25,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் என பல மொழிப் படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.
 
 இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கருடன் இவருக்கு நெருங்கிய நட்பு உண்டு. 2005 வரை ஹிட் பாடல்களை அளித்து வந்தார். தற்போது பக்திப் பாடல்கள், மெல்லிசை பாடல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.
 
 பல்வேறு ஆடியோ நிறுவனங்களுக்காக 1000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.
 
 ஒவ்வொரு வருடமும் இவரது பிறந்த நாளான நவம்பர் 13 அன்று இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வரும் வருவாயில், வறுமையில் உள்ள இசைக்கலைஞர்களுக்கு மாதாந்திர பென்ஷன் தொகையை அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார்.
 
  • தொடங்கியவர்

ராபர்ட் ஃபுல்டன் 10

 

fulton_2204312h.jpg

 

அமெரிக்க கண்டுபிடிப்பாளர், பொறியியல் வல்லுநர், ஓவியர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட ராபர்ட் ஃபுல்டன் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
 
> அமெரிக்காவின் பென்சில் வேனியா மாநிலம் லிட்டில் பிரிட்டனில் பிறந்தவர். விவசாயம் செய்ய முடியாத தால் லான்காஸ்டருக்கு குடியேறியது இவரது குடும்பம். சிறு வயதிலேயே தந்தை இறந்ததால், பிலடெல்பியா வில் நகைக் கடையில் உதவி யாளராக வேலை செய்தார்.
 
> அங்கு தந்தத்தால் செய்யப்படும் லாக்கெட், மோதிரங்களில் அழகான ஓவியங்களை வரைந்தார். அதைப் பார்த்து உள்ளூர் பிரமுகர்கள், வியாபாரிகள் வியந்தனர். அவர்களது ஆதரவுடன், முறைப்படி ஓவியம் கற்க லண்டன் சென்றார்.
 
> ஓவியக் கலையில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. கால்வாய் வடிமைப்பு பணிகளில் ஈடுபட்டார். அதுவும் தோல்வியில் முடிந்தது. நீராவி இன்ஜின்களில் ஆர்வம் பிறந்ததால் அதை படகுகளில் பயன்படுத்தும் முயற்சியில் இறங்கினார். 1800-ல் நெப்போலியன் போனபார்ட் அழைப்பை ஏற்று பாரிஸுக்குச் சென்று நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தார். உலகில் இதுதான் நடைமுறைக்கு வந்த முதல் நீர்மூழ்கிக் கப்பல்.
 
> இவர் உருவாக்கிய முதல் கப்பல் ‘கிளர்மன்ட்’, ஹட்சன் நதியில் வெள்ளோட்டம் விடப்பட்டது. முதலில் அது சரிவர இயங்கவில்லை. ஃபுல்டன் சில மாற்றங்களைச் செய்ததும் கப்பல் புறப்பட்டது. நதியின் நீரோட்டத்தை எதிர்த்து மணிக்கு 5 மைல் வேகத்தில் வெற்றிகரமாகப் பயணித்தது.
 
> அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடன ஆவணத்தை உருவாக்கிய குழு உறுப்பினரான ராபர்ட் லிவிங்ஸ்டனுடன் இணைந்து இவருடைய வடிவமைப்பைப் பயன்படுத்தி பாரிஸில் நீராவிக் கப்பலை உருவாக்க முடிவு செய்தனர்.
 
> ‘நார்த் ரிவர் ஸ்ட்ரீம்போட் கிளர்மன்ட்’ என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல் 1807-ல் கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டில் இதன் வர்த்தகப் போக்குவரத்து தொடங்கியது. நீராவியில் இயங்கும் போர்க் கப்பலை அமெரிக்க கடற்படைக்காக வடிவமைத்தார். இவர் இறந்த பிறகு, முழுமை பெற்ற அந்த கப்பலுக்கு இவரது பெயரே வைக்கப்பட்டது.
 
> 1810-ம் ஆண்டுக்குள் ஹட்சன், ராரிடன் நதிகளில் ஃபுல்டனின் 3 படகுகள் ஓடத் தொடங்கின. கப்பல் வடிவமைப்பு நுட்பங்கள் திருட்டு தொடர்பாக வழக்கு தொடுப்பதிலும், முழுமையாக வெற்றிபெறாத நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களிலும் தனது செல்வத்தை செலவிட்டார்.
 
> இவர் ஒரு கண்டுபிடிப்பாளர், பொறியியல் வல்லுநர், கலைஞர். நீராவிக் கப்பலை சோதனை நிலையில் இருந்து வர்த்தக ரீதியில் வெற்றிகரமாக ஓடும் நிலைக்கு கொண்டுவந்தவர். உள்நாட்டுக் கடல் வழிகளைக் கண்டுபிடித்தவர். நீர் மூழ்கிக் கப்பல், நீராவி போர்க் கப்பல் ஆகியவற்றையும் வடிவமைத்துள்ளார்.
 
> அமெரிக்காவின் பல இடங்களில் இவரது பளிங்குச் சிலை, வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 30-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
> அமெரிக்கக் கடற்படையின் 5 கப்பல்களுக்கு ‘யு.எஸ்.எஸ். ஃபுல்டன்’ என்று பெயரிடப்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்டு 49-வது வயதில் காலமானார்.
 
  • தொடங்கியவர்

வில்லியம் ஹர்ஷெல் 10

k_2205689h.jpg

வில்லியம் ஹர்ஷெல்
பிரிட்டிஷ் வானியலாளர் சர் பிரெட்ரிக் வில்லியம் ஹர்ஷெல் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
 
 ஜெர்மனியில் பிறந்த பிரிட்டிஷ் வானியலாளர். தந்தை வழியில் இவரும் இசைக் கலைஞரானார். 1757-ல் பிரெஞ்ச் ஊடுரு வலின்போது தந்தை இவரை இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தார். அங்கு இசை ஆசிரியராகப் பணியாற்றினார்.
 
 ‘எ கம்ப்ளீட் சிஸ்டம் ஆஃப் ஆப்டிக்ஸ்’ என்ற புத்தகத்தைப் படித்ததால், இரவில் வானத்தை உற்றுநோக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
 
 டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு சூரியன்,சந்திரன், கோள்களை மட்டும் பார்ப்பதோடு இவரது ஆர்வம் நின்றுவிடவில்லை. வானவெளியில் புதைந்திருக்கும் மர்மங்கள், ஆச்சரியங்களைக் கண்டறியும் தணியாத ஆவலும் பிறந்தது.
 
 தன் ஆராய்ச்சிக்கேற்ற தொலைநோக்கி, லென்ஸ்கள் கிடைக்காததால் சொந்தமாக தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆரம்பத்தில் இது தோல்வியில் முடிந்தது. ஆனாலும், அயராது முயற்சித்தவர் அபாரமான தரத்துடனான தொலைநோக்கி மற்றும் 6,450 மடங்கு பெரிதாக்கிக் காட்டும் திறன் படைத்த கண்ணாடியை உருவாக்கினார்.
 
 1781-ல் இரவுநேர ஆய்வின்போது வானவெளியில் ஒரு பொருளைக் கண்டார். முதலில் அதை வால்நட்சத்திரம் என்று நினைத்தார். தொடர்ந்து ஆய்வு செய்து, அது ஒரு கோள் என்று கண்டறிந்தார். அதுதான் ‘யுரேனஸ்’. இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு, ஹர்ஷெல் உலகப்புகழ் பெற்றார். லண்டன் ராயல் சொசைட்டியில் உறுப்பினரானார். இசை ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு முழு மூச்சுடன் வானவெளி ஆராய்ச்சியில் இறங்கினார். 43 வயதில் தொழில்ரீதியான வானியலாளரானார்.
 
 நெபுலாக்களை ஆராய்ந்தார். அவை ஒளிரும் திரவம் என்று கருத்தை தகர்த்து, அனைத்து நெபுலாக்களும் நட்சத்திரங்களால் ஆனவை என்பதைக் கண்டறிந்தார்.
 
 சனி கிரகத்தில் மீமாஸ், என்செலாடஸ் என்ற 2 நிலாக்களை (துணைக் கோள்) கண்டறிந்தார். வானவெளியில் சூரிய மண்டலம் நகர்வதைக் கண்டறிந்தார். நகரும் திசையையும் கண்டறிந்தார். வட்டு (டிஸ்க்) வடிவில் பால்வெளி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
 20 ஆண்டுகள் ஆராய்ந்து 2,500 புதிய நெபுலாக்கள், நட்சத்திரங்களைக் கண்டறிந்தார். 1820-ல் தொடங்கப்பட்ட ராயல் அஸ்ட்ரானாமிகல் சொசைட்டியின் துணைத் தலைவராகவும், அடுத்த ஆண்டில் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
 இவர் கடைசியாக வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் 145 இரட்டை நட்சத்திரங்கள் கொண்ட அட்டவணைத் தொகுப்பு இடம்பெற்றிருந்தது.
 
 ஹர்ஷெல்லை கவுரவிக்கும் வகையில், ‘H’ என்ற எழுத்தாலேயே யுரேனஸ் குறிக்கப்படுகிறது. ‘2000 ஹர்ஷெல்’ என்று ஒரு விண்கல்லுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்திரன், செவ்வாய், சனி கிரகத்தின் நிலா ஆகியவற்றில் உள்ள சில பள்ளங்கள் இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன. இவர் 84-வது வயதில் காலமானார்.
 
  • தொடங்கியவர்
கெம்ப் மெக்கென்னா 10

 

kemp_2206947f.jpg

 

அமெரிக்க தத்துவமேதை, உயிரியல் ஆர்வலர் டெரன்ஸ் கெம்ப் மெக்கென்னா பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
 
 அமெரிக்காவில் பிறந்தவர். மாமா மூலமாக புவியியல் பற்றி அறிந்தார். இயற்கைக் காட்சிகளையும் அறிவியல் அற்புதங்களையும் ரசிக்கத் தொடங்கியவர் அவற்றை போற்றவும் ஆரம்பித்தார். 10 வயதில் கார்ல் ஜங்கின் உளவியல் மற்றும் ரசவாதம் புத்தகத்தைப் படித்தபோது உளவியலிலும் ஆர்வம் பிறந்தது.
 
 மாயத் தோற்றங்கள் பற்றி அல்டோயஸ் ஹக்லே எழுதிய ‘தி டோர்ஸ் ஆஃப் பெர்செப்ஷன்’, ‘ஹெவன் அண்ட் ஹெல்’ புத்தகங்கள் மற்றும் ‘த வில்லேஜ் வாய்ஸ்’ என்ற புத்தகம் மூலமும் மாயத் தோற்றங்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது.
 
 கல்லூரிப் படிப்பின் நடுவே, உலகம் சுற்றும் ஆசை வந்தது. ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா என்று பயணமானார். திபெத்திய ஓவியங்களிலும், மந்திர, தந்திரங்கள், சூனியங்கள் பற்றிய ஷாமனிஸத்திலும் ஆர்வம் ஏற்பட, அதுபற்றி ஆராய நேபாளம் சென்றார்.
 
திபெத் மொழி கற்றார். சிறிது காலம் டோக்கியோவில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தார். தென்கிழக்கு ஆசியா முழுவதும் சுற்றினார். இந்தோனேஷியாவில் வண்ணத்துப் பூச்சி சேகரிக்கும் பணியில் இறங்கினார்.
 
 உயிரியல் பாடத்தை தனது ‘முதல் காதல்’ என்பார் மெக்கன்னா. அதன் மீது மீண்டும் ஆர்வம் ஏற்பட்டதால், சொந்த ஊருக்குத் திரும்பி, உயிரியல் கற்கத் தொடங்கினார். சூழலியல், ஷாமனிசம், இயற்கைவளப் பாதுகாப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றார்.
 
 மன மயக்கமும், மாயத் தோற்றமும் தரும் அமேசான் பகுதி தாவரங்கள் குறித்து தனது சகோதரர் மற்றும் 3 நண்பர்களுடன் சேர்ந்து ஆராய்ந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய முதல் நூல் ‘அமேசானியன் ஹாலுசினோஜன்ஸ்’ 1971-ல் வெளிவந்தது.
 
 ஷாமனிசம், ரசவாதம், மொழி, கலாச்சாரம், சுய முன்னேற்றம், சமயச் சார்பு, பரிணாம வளர்ச்சி, வர்ச்சுவல் ரியாலிட்டி, அழகியல் கோட்பாடு உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பல நூறு மணி நேரங்கள் உரையாற்றியுள்ளார். அந்த உரைகள் கேசட்களில் பதிவு செய்யப்பட்டு அமோகமாக விற்பனையாயின. 1990-களில் பல புத்தகங்களை வெளியிட்டார்.
 
 இவர் 19 ஏக்கரில் உருவாக்கிய தாவரத் தோட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மூலிகைச் செடி வகைகளை சேகரித்து வளர்த்தார். இவை பல்வேறு வகையான மருந்துகள் செய்யப் பயன்படுத்தப்பட்டன.
 
 மன மயக்கம் தரும் காளான்கள், கஞ்சா போன்ற செடிகள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பிரபஞ்சத்தின் மர்மங்களை அறியவும், கற்பனை வளத்தைத் தூண்டவும் இயற்கையுடன் நல்லிணக்க உறவை மீண்டும் உருவாக்கவும் உதவும் இயற்கையான சாதனங்கள் என்று அவற்றை வர்ணித்தார்.
 
 புதிய, வித்தியாசமான கருத்துகளைக் கூறியதால் தொலைநோக்குவாதி, பித்தர், சுவாரஸ்யமான அறிவுஜீவி என்று பலவாறாக அழைக்கப்பட்டார். 53-வது வயதில் காலமானார்.
 
  • தொடங்கியவர்

கமில் சுவலபில் 10

 

Untitled__2208356h.jpg

கமில் சுவலபில்

 

செக் நாட்டில் பிறந்து தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் கமில் வாஸ்லவ் சுவலபில் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 
 செக் நாட்டில் பிறந்தவர். இந்தியவியல், ஆங்கில இலக்கியம், சமஸ்கிருதம், தத்துவம் என பல துறை வித்தகர். சமஸ்கிருதம், திராவிட மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
 
 செக் தூதரகத்தில் பணிபுரிந்த தமிழரிடம் தமிழ் கற்றார். பிறகு வானொலி, புத்தகங்கள் உதவியுடன் தானாகவே தமிழ் படிக்கத் தொடங்கினார். தமிழ் மொழியை ஆய்வு செய்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். நற்றிணை, புறநானூறு நன்கு அறிந்தவர். சிலப்பதிகாரம் மற்றும் கல்கியின் நாவல்களை மொழிபெயர்த்துள்ளார்.
 
 தெள்ளுத் தமிழில் உரைகள் நிகழ்த்துவார். தொல்காப்பியத்தை மொழிபெயர்க்கும் அளவுக்கு தமிழ்ப் புலமை கொண்டவர்.
 
 கிரேக்கம், லத்தீன், ஜெர்மன், ஆங்கிலம், ரஷ்யன், சமஸ்கிருதம், தமிழ், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, இத்தாலியன், போலந்து என பல மொழிகள் அறிந்தவர். பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்துள்ளார்.
 
 தமிழ்க் கடவுள் முருகப் பெருமானிடம் இவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. முருகப் பெருமானின் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தான் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்று நூலுக்கு ‘தி ஸ்மைல் ஆஃப் முருகன்’ என்று பெயரிட்டுள்ளார். சிவபெருமானின் ஆனந்த தாண்டவம் பற்றியும் எழுதியுள்ளார்.
 
 தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி நூல்களை செக், ஆங்கிலம், ஜெர்மனில் மொழிபெயர்த்துள்ளார். திராவிட மொழியியல், சங்க இலக்கியம், தமிழ் யாப்பு பற்றி ஆங்கிலத்திலும், தென்னிந்தியா பற்றி செக் மொழியிலும் புத்தகம் எழுதியுள்ளார்.
 
 பாரதியார் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரைப் பற்றி சிறப்பாக ஆய்வு செய்து, ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதி பாரதியின் புகழை உலகம் முழுவதும் பரப்பியவர். பாரதியார் கால இந்தியாவின் நிலை, தமிழகத்தின் நிலையை அரசியல், சமூகப் பின்னணியுடன் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
 
 தமிழ், தமிழர் பற்றி வெளிநாட்டினருக்கு சிறப்பாக அறிமுகம் செய்துவைத்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழில் சமஸ்கிருதம் கலப்பு, இருளர் மொழி பற்றி ஆய்வு செய்துள்ளார்.
 
 பேராசிரியர் பணியில் இருந்து 1992-ல் ஓய்வு பெற்றார். புத்தகம் எழுதுவது, அதை வெளியிடும் பணி, மொழி ஆராய்ச்சி என்று ஓயாமல் உழைத்தவர். ஏறக்குறைய 25 நூல்களை எழுதியுள்ளார். நூல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என 500-க்கும் மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார்.
 
 அவரது பெயருக்கு செக் மொழியில் ‘எதையும் சிறப்பாக செய்பவன்’ என்று அர்த்தம். அதைக் குறிக்கும் விதமாக, செக் நாட்டில் பிறந்து தமிழுக்கு சிறந்த தொண்டாற்றிய அவருக்கு ‘நிரம்ப அழகியர்’ என்ற பெயரைச் சூட்டினார் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியர் வ. சுப்பையா பிள்ளை. கமில் சுவலபில் 82-வது வயதில் காலமானார்.
 
  • தொடங்கியவர்

ராணி லட்சுமிபாய் 10

 

lakshmi_bai_2211485h.jpg

 

 

ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
 
 வாரணாசியில் பிறந் தவர். இயற்பெயர் மணிகர்ணிகா. மனு என்று அழைக்கப்பட்டார். 4 வயதில் தாயை இழந்தார். தந்தை, பித்தூர் பேஷ்வாவிடம் பணிபுரிந்தார். பேஷ்வா இவரைத் தன் சொந்த மகள்போலவே வளர்த்தார். படிக்கும் வயதிலேயே குதிரை ஏற்றம், கத்திச் சண்டை மற்றும் தற்காப்புப் பயிற்சிகளைப் பயின்றார்.
 
 1842-ல் ஜான்சி மன்னர் கங்காதர ராவுடன் திருமணம் நடைபெற்றதும் ‘ஜான்சி ராணி லட்சுமிபாய்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இவர்களுக்குப் பிறந்த குழந்தை 4 மாதங்களில் இறந்ததால் வேறொரு குழந்தையைத் தத்தெடுத்தனர். ஆனாலும், மகனை இழந்த சோகத்தில் ராஜா இறந்தார். அதன் பிறகு, நாட்டை ஆளத் தொடங்கினார் லட்சுமிபாய். பெண்களுக்கு போர்ப் பயிற்சி அளித்து, தனது ராணுவத்தில் பெண்கள் படையை உருவாக்கினார். அண்டை நாடுகள் மீது படையெடுத்து வென்றார்.
 
 ஆங்கிலேயரின் அவகாசியிலிக் கொள்கைப்படி நேரடி வாரிசு இல்லாத அரசுகள் ஆங்கில ஆட்சியின் கீழ் வந்துவிடும். ரூ.60 ஆயிரம் ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு ஜான்சியை விட்டு வெளியேறுமாறு ஆங்கில அரசு ஆணையிட்டது. லட்சுமிபாய் ஒப்புக்கொள்ளவில்லை.
 
 கிழக்கிந்தியத் தலைவர்களைக் கொன்றதாக லட்சுமிபாய் மீது குற்றம் சாட்டி ஜான்சி மீது படையெடுத்தது ஆங்கிலப் படை. இறுதியில் ஜான்சி நகரைக் கைப்பற்றினர். ஆண் வேடத்தில் இருந்த லட்சுமிபாய், தன் மகனுடன் மதில் மேலிருந்து பாய்ந்து தப்பினார்.
 
 தன் படைகளை மீண்டும் திரட்டி தாந்தியா தோபேயின் படைகளுடன் இணைந்துகொண்டார். இருவரும் இணைந்து குவாலியர் கோட்டையைக் கைப்பற்றினர். ஆங்கிலேயப் படை குவாலியரைத் தாக்கியது.
 
 அவர் சளைக்காமல் போரிட்டார். போர் ஒரு வாரம் நீடித்தது. ஆங்கிலேயரின் அதிநவீன போர்க் கருவிகளை எதிர்கொள்ள முடியாமல் அந்த போரில் கொல்லப்பட்டார். வீர மரணம் அடைந்தபோது லட்சுமிபாய்க்கு வயது 29.
 
 அவர் ஏற்கெனவே கூறியபடி படைவீரர் ராமச்சந்திரா என்பவர் குவாலியர் அருகே புல்பாக் என்ற இடத்தில் ஒரு குடிசையோடு லட்சுமிபாய் உடலை தகனம் செய்தார். தன் உடல்கூட ஆங்கிலேயருக்குக் கிடைக்கக் கூடாது என்பது அந்த இளம் வீராங்கனையின் விருப்பம்.
 
 அவரது வீரதீரச் செயல்களைப் பற்றிய பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டார் கதைகள், நாடகங்கள் பல மொழிகளிலும் உள்ளன. ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளிலும் கதைகள் எழுதப்பட்டுள்ளன. திரைப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்களும் வந்துள்ளன.
 
 ஆங்கிலேயருக்கு எதிராக தான் உருவாக்கிய மகளிர் படைக்கு ‘ஜான்சி ராணி படை’ என்று பெயரிட்டார் நேதாஜி.
 
 அமரத்துவம் பெற்ற வீராங்கனையாக என்றென்றும் இவரது பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது. இவரது வீர வரலாறு அடுத்தடுத்து வந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்தது.
 
  • தொடங்கியவர்

வால்டேர் 10

 

walter_2215005h.jpg

வால்டேர்
 
சமூக சீர்திருத்தக் கருத்துக்களை துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் பேசிய பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் வால்டேரின் பிறந்தநாள் இன்று. அவரைப்பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
 
 இவரது இயற்பெயர், பிரான்சுவா-மாரீ அரூவே. தந்தை, செல்வந்தர். இவரது குடும்பம் பிரான்ஸ் நாட்டின் உயர்குடி சமூகத்தின் பிரதிநிதியான 17-ஆம் லூயி ஆட்சியில் செல்வாக்கு பெற்றிருந்ததால், முதல்தர கல்வி பெற்றார். சிறு வயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அப்பா இவருடைய இலக்கிய ஆர்வத்தை விரும்பினாலும் தன் மகன் ஒரு எழுத்தாளனாக வருவதை விரும்பவில்லை.
 
 இளம் வயதிலேயே இவருக்கு நையாண்டியும் நகைச்சுவையும் கைவந்த கலை. இலக்கிய வட்டாரத்தில் மிக எளிதாக பிரபலமடைந்தார். ஆங்கில மேட்டுக்குடியைச் சேர்ந்த ஃப்ரீரி திங்க்கர், ஜாகோபைட், லார்ட் போலிங்புரோக் ஆகியோருடைய நட்பு இவருக்கு இயற்கை தத்துவத்தை அறிமுகம் செய்து வைத்தது.
 
 அவதூறுகளைப் பரப்புகிறார் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கடுமையான தண்டனையிலிருந்து தப்ப பாரீசிலிருந்து இங்கிலாந்து சென்றார்.  1729ல் இவர் மீண்டும் பிரான்சுக்கு திரும்ப அனுமதி வழங்கப்பட்டது. தாயகம் திரும்பியதும் தனது பொருளா தார நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் அரசியல் ஆதரவைத் திரும்பப் பெறவும் கடுமையாக உழைத்தார்.
 
 சுதந்திரத்தைப் பற்றிய இவரது கோட்பாடு தனித்துவம் வாய்ந்தது. மத போதனைக்காக பிரம்மச்சர்யம் மேற்கொள்ளுதல், பாலியல் கட்டுப்பாடு மற்றும் உடல் தேவைகளைத் தியாகம் செய்தல் போன்றவை மனித இயல்புக்கு எதிரான விஷயங்கள் என்றார்.
 
 ஐயுறவு வாதம், இயற்கை விஞ்ஞானம் ஆகிய மேலும் இரண்டு தத்துவங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எந்தவித அதிகாரமும், அது எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க கூடாது என்று வாதிட்டார்.
 
 மதத்தை பற்றிய இவரது கண்ணோட்டம் மிகவும் சிக்கலானது. இவற்றின் அடிப்படையில் பார்த்தால், இவரை ஒரு நாத்திகர் அல்லது கிறிஸ்தவ எதிர்ப்பாளர் என்று கருதுவது தவறாகிவிடலாம். ஆனால், ஆட்சியில் மதகுருமார்கள் மற்றும் தேவாலயங்களின் அதிகாரம் செலுத்துவதை எதிர்த்தவர்.
 
 இறுக்கமான தணிக்கை விதிகளும் அவற்றை மீறுபவர் களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டு வந்தபோதும், இவர் வெளிப்படையாக பேசும் துணிச்சலான சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். கன்ஃபூசியஸ், ஜான் லாக், ஐஸக் நியூட்டன், பிளேட்டோ, பாஸ்கல் ஆகியோரின் தாக்கம் இவரிடம் காணப்பட்டது. இவர் பிரெஞ்ச் அறிவொளி இயக்க எழுத்தாளர், கட்டுரையாளர், மெய்யியலாளர்.
 
 நாடகம், கவிதை, நாவல், கட்டுரை, வரலாறு, அறிவியல் என இலக்கியத்தின் அத்தனை விஷயங்களைக் குறித்தும் எழுதியுள்ளார். 20,000க்கும் மேற்பட்ட கடிதங்கள், 200க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் வெளியீடுகளை எழுதியதாகக் கூறப்படுகிறது. தலைசிறந்த எழுத்தாளரான இவர் 83-ஆம் வயதில் காலமானார்.
 
  • தொடங்கியவர்

போரிஸ் பெக்கர் 10

Untitled_2216335h.jpg

போரிஸ் பெக்கர்

கழ்பெற்ற டென்னீஸ் வீரர் போரிஸ் பெக்கரின் பிறந்தநாள் இன்று (நவம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

 
 ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை டென்னிஸ் மைதான கட்டிடக் கலைஞர். தந்தையுடன் உதவிக்குச் சென்ற இடத்தில் டென்னிஸ் இவரை இழுத்துக் கொண்டது. 8 வயதிலேயே போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். 
 
 ஸ்டெபிகிராஃபுடன் சேர்ந்து பயிற்சி செய்வார். பின்னாளில் ஜெர்மனியின் சாம்பியனாக விளங்கிய அவரும் அப்போது வளர்ந்துகொண்டிருந்த வீராங்கனை. ஜெர்மன் டென்னிஸ் கூட்டமைப்பில் பயிற்சி பெற 10-வது கிரேடுடன் தனது பள்ளிப் படிப்பை கைவிட்டார் போரிஸ். 16 வயதில் தொழில்முறை ஆட்டக்காரர் ஆனார்.
 
 தங்கள் பிள்ளை பட்டம் பெற்று தொழில் செய்யவேண்டும் என்பது பெற்றோரின் கனவு. பள்ளிப் படிப்பை அவர் கைவிட்டதில் அவர்களுக்கு ஏக வருத்தம். ஆனால், தனது அபார விளையாட்டுத் திறமையால் அவர்களது மனதை மாற்றினார்.
 
 ஆட்டங்களில் போரீஸ் பாணி அதிரடியாக இருக்கும். மொத்த செட்களிலும் ஆதிக்கம் செலுத்துவார். 17 வயதில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றது டென்னிஸ் ஆட்டத்தில் புதிய வரலாறு!
 
 அமெரிக்க ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளார். 1988, 1989-ம் ஆண்டுகளில் தொடர்ந்து 22 முறை ஒற்றையர் ஆட்டங்களில் வென்றது உட்பட மொத்தம் 49 ஒற்றையர் போட்டிகளில் வென்றுள்ளார். தலா 3 விம்பிள்டன் மற்றும் ஏ.டீ.பி., 6 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளார். உலகத் தரவரிசைப் பட்டியலில் 12 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.
 
 1992-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மைக்கேல் ஸ்டிச்சுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். யானைக்கும் அடி சறுக்கும் இல்லையா! உள் விளையாட்டு அரங்கத்திலும் புல் தரை மைதானங்களிலும் வேகம் காட்டும் இந்த வீரரால் கடைசி வரை களிமண் தரை மைதானத்தில் மட்டும் சிறப்பாக விளையாட முடியவில்லை. போரிஸ் இதை பலமுறை சொல்லி வருத்தப்படுவார்.
 
 1999-ம் ஆண்டு ஓய்வு பெற்றபோது அவரது கையிருப்பு 25 மில்லியன் டாலர்கள். தற்போது டென்னிஸ் விளையாட்டு சாதன தொழில் புரிகிறார்.
 
 டென்னிஸ் விளையாட்டில் குறிப்பிடத்தக்க சாதனைகள், பங்களிப்பு செய்தவர்களைக் கவுரவிக்கும் நோக்கில் அமெரிக்காவின் நியூபோர்ட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம்’ அமைப்பில் இவரது பெயர் 2003-ல் சேர்க்கப்பட்டது.
 
 சொந்த மண்ணில் அல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ் உட்பட 14 நாடுகளில் பட்டங்களை வென்றுள்ளார். ஓய்வு பெற்றுவிட்டாலும், அரிதாக வேர்ல்டு டீம் டென்னிஸ் போட்டிகளில் தலைகாட்டுகிறார்.
 
  • தொடங்கியவர்

சத்ய சாய் பாபா 10

 

baba_2217473f.jpg

 

ஆன்மிகத்துடன் அறப்பணிகளையும் செய்துவந்த சத்ய சாய் பாபா பிறந்த நாள் இன்று (நவம்பர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
 
›› ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தவர். இயற்பெயர் சத்யநாராயண ராஜு. 14 வயதில் தேள் கடித்ததால் மயங்கி விழுந்த இவர், மயக்கம் தெளிந்ததும் சிரித்தார், அழுதார், பாடினார். அன்று முதல் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது என்பார் அவரது சகோதரர்.
 
›› ஒருநாள் குடும்பத்தினரை அழைத்து, காற்றில் இருந்து இனிப்பு, விபூதி வரவழைத்துக்கொடுத்தார். பயந்துபோன அப்பாவிடம் இவர், ‘‘நான்தான் சாய் பாபா. ஷீரடி சாய் பாபாவின் அவதாரம்’’ என்றாராம். அப்போதிருந்து, ‘சத்ய சாய் பாபா’ என்று அழைக்கப்பட்டார்.
 
›› புட்டபர்த்தியில் ‘பிரசாந்தி நிலையம்’ என்ற ஆசிரமம் கட்டினார். 1972-ல் சத்ய சாய் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் கோயில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூக சேவை அமைப்புகள் அமைக்கப்பட்டன. ஆஸ்தி ரேலியா, மெக்சிகோ, இங்கிலாந்து, பெரு, ஜாம்பியா உள்ளிட்ட 33 நாடுகளில் இலவசப் பள்ளி தொடங்கினார்.
 
›› ஆந்திராவின் வறண்ட பகுதியான ராயலசீமாவில் 12 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் மெகா குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார். ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டுவரும் தெலுங்கு கங்கைத் திட்டத்துக்கு கால்வாய் கட்ட ரூ.200 கோடி வழங்கினார்.
 
›› பக்தர்களின் சக்தியை நாட்டு நலனுக்கும் எளியவர்களுக் கான சேவைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டவர்.உலகம் முழுவதும் 1300 சேவை மையங்களை உருவாக்கியவர்.
 
›› இவரது சித்து விளையாட்டுகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களும் எழும். இவற்றை சோதிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இவருடன் பழகிய பிறகு, குழு உறுப்பினர்களும் இவரது பக்தர்களாக மாறிவிட்டார்கள்.
 
›› ‘மனித உறவுகள் சத்தியம், தர்மம், அன்பு, அஹிம்சை, அமைதி அடிப்படையில் இருக்கவேண்டும். தனக்குள் இருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் உணரவேண்டும்’ என்று போதித்தார்.
 
›› இவரது பேச்சு, கொள்கையை விளக்கி பல புத்தகங்கள் வந்துள்ளன. இவரைப் பற்றிய ‘சனாதன சாரதி’ என்ற மாதப் பத்திரிகை 25 மொழிகளில் வெளிவருகிறது.
 
›› இவரது பேச்சு, செயல் எல்லாமே ஜாதி, மதங்களைக் கடந்தவை. பிற மத பக்தர்களை ஒருபோதும் இவர் இந்து மதத்துக்கு மாற்ற முயன்றது இல்லை. மதவெறி, மொழிவெறியை கண்டித்த பாபா, பாரம்பரியம் மீதான பற்று அவசியம் என்று கூறியுள்ளார்.
 
›› அன்பே அனைத்து மதங்களுக்கும் அடிப்படை என்று கூறிய சத்ய சாய் பாபா கடந்த 2011-ல் தமது 85-வது வயதில் காலமானார். அவரது அறப்பணிகளை பக்தர்கள் தொடர்ந்து செய்கின்றனர்.
 
  • தொடங்கியவர்

ஆண்ட்ரூ கார்னகி 10

 

1_2220035h.jpg

ஆண்ட்ரூ கார்னகி

 

அமெரிக்காவை வடிவமைத்தவர்களில் ஒருவராகப் போற்றப்படும் தொழிலதிபர் ஆண்ட்ரூ கார்னகி பிறந்தநாள் இன்று (நவம்பர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 
 ஸ்காட்லாந்தில் பிறந்தவர். அப்பா நெசவாளர். 13 வயதில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். பிறகு, தந்தி கொண்டு செல்லும் பணியாளரானார். சிறிது காலத்தில் தந்தி ஆபரேட்டராக உயர்ந்தார்.
 
 பென்சில்வேனியாவில் ரயில் நிலையப் பணியில் சேர்ந்தார். தொழில் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டார். 3 ஆண்டுகளில் ரயில் நிலையக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
 
 ரயில்வேயில் வேலை பார்க்கும்போதே முதலீடுகள் செய்தார். எண்ணெய் தொழிலில் நிறைய வருமானம் கிடைப்பதை அறிந்தார். 30-வது வயதில் ரயில்வே வேலையை விட்டுவிட்டு தொழிலில் இறங்கினார்.
 
 அடுத்த 10 ஆண்டுகள் முழு மூச்சாக எஃகுத் தொழிலில் ஈடுபட்டார். கார்னகி ஸ்டீல் கம்பெனி அமெரிக்காவின் எஃகு உற்பத்தியில் புரட்சியை உண்டாக்கியது. நாடு முழுவதும் தொழிற்சாலைகளை நிறுவினார். எஃகு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், வழிமுறைகளைப் பயன்படுத்தினார்.
 
 கச்சாப் பொருட்கள், கப்பல்கள், பொருட்களைக் கொண்டுசெல்வதற்கான ரயில் பாதை, எரிபொருளுக்கான நிலக்கரி சுரங்கங்கள் என தொழிலுக்குத் தேவையான அனைத்தையும் சொந்தமாக்கிக் கொண்டார்.
 
 எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார். இதனால் தொழில் துறையில் ஆதிக்க சக்தியாகவும் அபரிமிதமாக சொத்துகளுக்கு அதிபதியாகவும் திகழ்ந்தார். இவரது நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் அமெரிக்காவின் பொருளாதாரமும் உயர்ந்தது. அமெரிக்காவை வடிவமைத் தவர்களில் ஒருவர் என்ற புகழ் மகுடத்தையும் சூடினார்.
 
 தன் வாழ்வின் திருப்புமுனையாகத் திகழ்ந்த ஒரு அதிரடி முடிவை 65 வயதில் எடுத்தார். நிதித் துறை ஜாம்பவானும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஸ்டீல் கார்ப்பரேஷனின் அதிபருமான ஜே.பி.மார்கனிடம் தனது அனைத்து தொழில் நிறுவனங்களையும் விற்றார். அதில் 480 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது. உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார்.
 
 நியூயார்க் பொது நூலகத்துக்கு 5 மில்லியன் டாலர் வழங்கினார். இவரது ஆதரவில் 2,800 நூலகங்கள் தொடங்கப்பட்டன. ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்கினார்.
 
 மாத்யூ அர்னால்ட், மார்க் ட்வைன், வில்லியம் கிளாட்ஸ்டோன், தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். நிறைய புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
 
 பணக்காரர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு, தங்கள் செல்வத்தால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்1900-ல் இவர் எழுதிய புத்தகம் ‘தி காஸ்பல் ஆஃப் வெல்த்’ என்ற பெயரில் வெளிவந்தது. பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி உலகத்தின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த இவர் 83 வயதில் காலமானார்.
 
  • தொடங்கியவர்

என்.எஸ்.கிருஷ்ணன் 10

Untitled_2226730h.jpg

என்.எஸ்.கிருஷ்ணன்

 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று (நவம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 
 நாகர்கோவில் ஒழுகினசேரி யில் பிறந்தவர். வறுமையால் 4-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார். காலையில் டென்னிஸ் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பகலில் மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கும் வேலை. மாலையில் நாடகக் கொட்ட கையில் சோளப்பொரி, கடலை மிட்டாய், முறுக்கு விற்பனை.
 
 நாடக மேடை அவரை ஈர்த்தது. மகனின் ஆர்வத்தைக் கண்ட தந்தை அந்த ஊரில் நாடகம் போட வந்த ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார். பல நாடக கம்பெனிகளில் பணியாற்றினார். நாடகத்தில் வில்லுப்பாட்டு போன்ற பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டவர்.
 
 பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோதும் நாடகம் மீதான ஈர்ப்பு குறையவில்லை. மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே பலமுறை நாடகம் போட்டிருக்கிறார்.
 
 இவரது திரையுலக வாழ்வைத் தொடங்கிவைத்த படம் ‘சதிலீலாவதி’. ஆனால், அதன் பிறகு இவர் நடித்த ‘மேனகா’ முதலில் வெளிவந்தது. முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை எழுதினார். நகைச்சுவைக்கு என்று தனி ட்ராக் எழுதிய முதல் படைப்பாளி.
 
 நடிகை பத்மினி, உடுமலை நாராயண கவியை அறிமுகம் செய்தது இவர்தான். பாலையாவின் நடிப்பை பாராட்டி தன் விலை உயர்ந்த காரை பரிசளித்தார். காந்தியடிகளின் தீவிர பக்தர். அவரது நினைவைப் போற்றும் வகையில் தன் ஊரில் சொந்த செலவில் நினைவுத் தூண் எழுப்பினார்.
 
 சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு, ‘சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான் ஈடாக மாட்டேன்’ என்று தன்னடக்கத்துடன் கூறினார். இவரது கிந்தனார் காலட்சேபம் மிகவும் பிரபலம்.
 
 தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை பாடல்களாகவும் அமைக்க முடியும் என்பதை நிரூபித்தவர். சொந்தக் குரலில் பல பாடல்களைப் பாடியுள்ளார். சில படங்களை இயக்கியுள்ளார். அண்ணாவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இவர், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒரு டாக்டரைப் பற்றி புகழ்ந்து பேசினார். கடைசியில், ‘இவ்வளவு நல்ல டாக்டரை சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு யார் வைத்தியம் பாப்பாங்க? அதனால் அவரை இங்கேயே வைத்துக்கொண்டு அண்ணாவுக்கு ஓட்டு போட்டு சட்டசபைக்கு அனுப்பிவையுங்கள்’ என்றார்.
 
 குறுகிய காலத்தில் சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவர். 1947-ல் சென்னை திருவல்லிக்கேணி நடராஜா கல்விக் கழகம் சார்பில் இவருக்கு ‘கலைவாணர்’ பட்டம் வழங்கப்பட்டது.
 
 கலைவாணருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஆழ்ந்த நட்பு இருந்தது. உதவி என்று கேட்டு யார் வந்தாலும் அள்ளிக் கொடுத்த வள்ளல் இவர்.
 
 நகைச்சுவையில் புரட்சியை ஏற்படுத்திய இவரது நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்துக்கு ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நகைச்சுவை மூலம் மக்களின் சிந்தனையைத் தூண்டி, இன்றும் மக்களின் மனங்களில் வாழும் என்.எஸ்.கே. 49 வயதில் காலமானார்.
 
  • தொடங்கியவர்

மோனிகா செலஸ் 10

 

monica_2230365h.jpg

 

டென்னிஸ் போட்டியில் இளம்வயதிலேயே முதலிடம் பிடித்த மோனிகா செலஸ் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 2). அவரைப்பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
 
* யுகோஸ்லேவியா நாட்டில் பிறந்தவர். கார் நிறுத்தும் இடத்தில் அப்பாவிடம் டென்னிஸ் விளையாட கற் றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 5. தன்னை விட 8 வயது மூத்தவனும் அப்போதைய ஜூனியர் லெவல் டென்னிஸ் சாம்பிய னுமான அண்ணனைத் தோற் கடிப்பதற்காக தீவிரமாக பயிற்சி செய்தாள் அந்த சிறுமி.
 
* ‘ஒரு பெண் பிள்ளை டென்னிஸ் விளையாடுவதா?’ என்று அம்மாவும் பாட்டியும் கடும் எதிர்ப்பு. அதை கண்டுகொள்ளாத இந்த அப்பா-மகள் ஜோடி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுவந்தது. 1998-ல் இறக்கும் வரை தன் பயிற்சியாளர் பணியை அப்பா நிறுத்தவே இல்லை.
 
* டென்னிஸ் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றார் மோனிகா. ஆரம்பம் முதலே அதிரடிதான். தொடர்ந்து வெற்றி பெற்று முன்னணி ஆட்டக்காரராக முன்னேறினார். 13 வயதில் ஜூனியர் நிலையில் நம்பர் ஒன் ஆட்டக்காரரானார். 1994-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.
 
* 16 வயதில் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் ஸ்டெபிகிராபை தோற்கடித்தார். குறைந்த வயதில் இப்போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை என்று புகழ் பெற்றார். 17 வயதில் உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் இடம் பெற்றவரும் இவர்தான். 178 வாரங்கள் முதலிடத்தைத் தக்கவைத்திருந்தார்.
 
* 1993-ல் புகழின் உச்சியில் இருந்த இந்த 19 வயது வீராங்கனை மகளிர் டென்னிஸ் உலகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அதுவரை 8 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்றிருந்தார்.
 
* 1993-ல் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஸ்டெபி கிராபை ஆஸ்திரேலிய ஓபன் பைனலில் தோற்கடித்தார். அதே ஆண்டில், ஜெர்மனியில் வேறொரு போட்டியில் மோனிகா விளையாடினார். ஆட்ட இடைவேளையின்போது, ஸ்டெபிகிராபின் வெறி பிடித்த ரசிகன் ஒருவன் இவரைக் கத்தியால் குத்திவிட்டான்.
 
* அந்த காயம் ஒரு மாதத்தில் ஆறிவிட்டாலும், அதன் அதிர்ச்சியில் இருந்து அவரால் எளிதில் மீளமுடியவில்லை. 2 ஆண்டு காலம் டென்னிஸ் பக்கமே வராமல் இருந்தார்.
 
* 1995-ல் மீண்டும் களமிறங்கி வெற்றியோடு அடுத்தசுற்று பயணத்தைத் தொடங்கினார். மேலும் ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வென்றார். மொத்தம் 9 கிராண்ட்ஸ்லாம், 53 ஒற்றையர் போட்டிகள், 6 இரட்டையர் போட்டிகளில் வென்றுள்ளார்.
 
* 2008-ல் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பது எப்படி என்று மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் இறங்கினார். 2009-ல் ‘கெட்டிங் எ கிரிப்: ஆன் மை பாடி, மை மைண்ட், மைசெல்ஃப்’ என்ற புத்தகத்தை எழுதினார். ‘தி அகாடமி’ என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
 
* நடனம், மாடலிங், கூடைப்பந்து, கிடார் வாசிப்பு, சுயசரிதை கள் படிப்பது, நீச்சல், பிசினஸ் என பலவற்றில் ஆர்வம் கொண்டவர். தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விலங்குகள் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
 
  • தொடங்கியவர்

ஆர்.வெங்கட்ராமன் 10

Untitled_2232320h.jpg

ஆர்.வெங்கட்ராமன்.
 

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 
 தஞ்சாவூர் மாவட்டம் ராஜா மடம் என்ற கிராமத்தில் பிறந்தவர். பட்டுக்கோட்டை யில் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். லயோலா கல்லூரியில் பொரு ளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1935ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார்.
 
சுதந்திரப் போராட்ட காலத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இணைந்து போராடியதால் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கத்தின் தொழிலாளர் பிரிவில் தீவிர பங்காற்றினார்.
 
 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1949-ல் ‘லேபர் லா ஜர்னல்’ என்னும் இதழைத் தொடங்கினார். தமிழ கத்தில் பல தொழிற்சங்கங்களின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். சென்னை மாகாண வழக்கறிஞர் கூட்டமைப்பின் செயலாளராகப் பணியாற்றினார்.
 
 1950 முதல் 1957 வரை நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாகப் பணியாற்றினார். சர்வதேச நிதித்துறையில் ஆளுநராகவும், சர்வதேச புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியிலும் பணியாற்றினார்.
 
 மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், இவரது சேவை தமிழகத்துக்கு தேவை என்பதை உணர்ந்த அப்போதைய முதல்வர் காமராஜர், இவரை தமிழக அமைச்சரவையில் பங்கேற்க வைத்தார். தொழிலாளர் நலத்துறை, மின் துறை, தொழில் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் வணிகத்துறை என பல துறைகளை இவர் நிர்வகித்தார்.
 
 அரசியல் விவகாரக் குழு, பொருளாதார விவகாரங்களுக் கான குழு உறுப்பினராகவும் பொதுக் கணக்கு குழுவின் தலைவராகவும் 1975 முதல் 1977 வரை ‘சுயராஜ்ய’ பத்திரிகையின் ஆசிரியராவும் பணியாற்றினார்.
 
 1980-ல் இந்திரா காந்தி தலைமையில் அமைந்த மத்திய அரசில் நிதி அமைச்சராகப் பதவியேற்றார். பிறகு பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அந்த நேரத்தில்தான் இந்திய ராணுவத்துக்கான ஏவுகணை திட்டப்பணிகள் தொடங்கின.
 
 1984-ல் நாட்டின் துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1987-ல் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1992 வரை அப்பதவியில் நீடித்தார். இந்த காலகட்டத்துக்குள் 4 பிரதமர்கள் மாறினர். இதில் மூன்று பிரதமர்களுக்கு இவர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
 
 இவர் குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோதுதான் மத்தியில் கூட்டணி அரசு தொடங்கியது. பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.
 
 காமராஜருடன் இவர் மேற்கொண்ட ரஷ்யப் பயணத்தின் அனுபவங்களை ‘சோவியத் நாடுகளில் காமராஜரின் பயணம்’ என்ற புத்தகமாக எழுதினார். இதற்காக இவருக்கு ‘சோவியத் லேன்ட்’ பரிசு வழங்கப்பட்டது. சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், நிர்வாகியாகவும் திகழ்ந்த ஆர்.வெங்கட்ராமன், தனது 98-வது வயதில் காலமானார்.
 
  • தொடங்கியவர்

வால்ட் டிஸ்னி 10

Untitled_2233870h.jpg

வால்ட் டிஸ்னி
 

வால்ட் டிஸ்னி டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்குப் பூங்காவை உருவாக்கிய வால்ட் டிஸ்னி பிறந்தநாள் இன்று (டிசம்பர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 
பிரம்மாண்ட அமெரிக்காவில் பிறந்தார். சிறு வயதில், படம் வரைந்து பக்கத்து வீட்டுக் குழந்தைகளிடம் விற்பார். அப்பாவுக்கு இது பிடிக்காவிட்டாலும், அம்மா உற்சாகப்படுத்தினார்.
 
 உயர்நிலைப் பள்ளியில் ஓவியம், புகைப்படக் கலை கற்றார். நுண்கலைக் கழகத்தில் சேர்ந்து கார்ட்டூன் ஓவியத் திறமையை வளர்த்துக்கொண்டார். நகைச்சுவையும் கைவந்த கலை. கரும்பலகையில் ஓவியம் வரைந்துகொண்டே கதை சொல்வார்.
 
 21 வயதில் மாமாவிடம் 500 டாலர் கடன் வாங்கி, தன் சகோதரருடன் இணைந்து லாஃப்-ஓ.கிராம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அது நொடித்துப்போனது. மனம் தளராமல், முயன்று ஆஸ்வால்ட் தி லக்கி ராபிட் என்ற புதிய கேலிச் சித்திரத்தை உருவாக்கினார். இது சிறப்பாக அமைந்தது. ஆனால், அதன் உரிமத்தை வேறொருவர் வாங்கி இவரை ஏமாற்றிவிட்டார்.
 
 வேலை கிடைக்காமல் கார் நிறுத்தும் இடத்தில் குடியிருந்தபோது, தான் வரைந்த எலி ஓவியங்கள் ஞாபகம் வந்தது. தன் அண்ணனிடம், ‘‘ஒரு எலிதான் நமக்கு கைகொடுக்கப் போகிறது’’ என்றார். முகம், 2 காதுகள் என வெறும் மூன்றே வட்டங்களுடன் அப்போது அறிமுகமான அந்த அதிசய எலிதான் கேளிக்கை உலகில் புதிய சகாப்தம் படைத்த ‘மிக்கி மவுஸ்.’
 
 இது பிறந்து ஓரிரண்டு ஆண்டுகளிலேயே உலகப் புகழ் பெற்றது. கேளிக்கை என்ற பரந்து விரிந்த வானம் அவருக்கு வசப்பட்டது. டிஸ்னியின் பக்கம் ஹாலிவுட்டின் கவனம் திரும்பியது. பெயர், புகழுடன் பணமும் குவிந்தது. அடுத்தடுத்து அவர் தயாரித்த ஸ்டீம்போட் வில்லி, தி ஸ்கெலிடன் டான்ஸ் ஆகியவற்றில் இந்த மிக்கி அடித்த லூட்டிகளை உலகமே இமைக்க மறந்து ரசித்தது.
 
 1932-ல் இவர் உருவாக்கிய ‘ஃபிளவர்ஸ் அண்ட் ட்ரீஸ்’ திரைப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. எலிக்குப் பிறகு இவர் அறிமுகம் செய்த கதாபாத்திரம் ‘டொனால்டு டக்’.
 
 ‘ஸ்னோ ஒயிட் அண்ட் தி செவன் ட்வார்ஃப்ஸ்’ என்ற கார்ட்டூன் திரைப்படத்தை 1937-ல் ஒன்றரை மில்லியன் டாலர் செலவில் உருவாக்கினார். அந்த படம் வசூலில் சாதனை படைத்தது.
 
 திரையில் மட்டுமே பார்த்த டிஸ்னி உலகை 17 மில்லியன் டாலர் செலவில் ‘டிஸ்னிலேண்ட் பார்க்’ என்ற பொழுதுபோக்கு பூங்காவாக ஓக்லேண்ட் நகரில் 1955-ல் உருவாக்கினார்.
 
 பூலோக சொர்க்கமாக மாறிய இந்த பூங்காவுக்கு ஆண்டுதோறும் 1.5 கோடி பேர் படையெடுக்கின்றனர். இவரது 26 படங்கள் ஆஸ்கார் விருது வென்றன. ஒரே ஆண்டில் நான்கு ஆஸ்கார் வென்றது ஓர் உலக சாதனை. 59 முறை இவரது படங்கள் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. 7 எம்மி விருதுகளையும் வென்றுள்ளார்.
 
 20-ம் நூற்றாண்டின் கேளிக்கை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய வால்ட் டிஸ்னி 65 வயதில் காலமானார்.
 
  • தொடங்கியவர்

நோம் சாம்ஸ்கி 10

 

noam_2235980f.jpg

நோம் சாம்ஸ்கி
 

மொழியியல் வல்லுநர், எழுத்தாளர், அரசியல் தத்துவவாதி என பன்முகத் தன்மை கொண்ட நோம் சாம்ஸ்கி பிறந்தநாள் இன்று (டிசம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 
 அமெரிக்காவில் பிறந்தவர். பிலடெல்பியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பயின்றார். மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். பல மொழியியல் அறிஞர்களிடம் பயிற்சி பெற்றார். தத்துவம், கணிதமும் பயின்றார்.
 
 புத்தகம் வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். எண்ணிலடங்கா புத்தகங்கள் படித்துள்ளார். இவர் எழுதிய சொற்றொடர் இயல் அமைப்புகள் (Syntactic Structures) என்ற புத்தகம் முக்கிய மொழியியல் புத்தகமாகக் கருதப்படுகிறது.
 
 பார்சிலோனா நகரம் வீழ்ச்சியுற்றதைக் கேள்விப்பட்டு, பாசிசக் கொள்கைகள் பரவும் ஆபத்து இருப்பதாக இவர் எழுதிய கட்டுரை பள்ளி பத்திரிகையில் வெளிவந்தது. அப்போது அவருக்கு வயது 10.
 
 மாமாவின் பொறுப்பில் இருந்த செய்தித்தாள் கடையில் மாலை நேரங்களில் வேலை பார்த்தார். பெரிதாக லாபம் இல்லை என்றாலும், பலரும் பல கருத்துகளையும் விவாதிக்கும் களமாக இருந்தது அந்த இடம். தனது அரசியல் அறிவு அங்குதான் விரிவடைந்தது என்கிறார் சாம்ஸ்கி.
 
 மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) உட்பட பல கல்வி நிறுவனங்களில் 50 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர். உலகின் மனிதவியல் வல்லுநர்களில் மிகச் சிறந்த 10 பேரில் ஒருவராக கருதப்படுகிறார்.
 
 மொழியியல் துறை பேரறிஞர்களில் ஒருவராக கருதப்படுபவர். உள்ளம், அறிவுத் திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் ஆகியவற்றைத் தொடர்புகொள்ளும் அறிதிறன் அறிவியல் (Cognitive Science) துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர்.
 
 அமெரிக்கா உட்பட பல நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள், செயல்பாடுகளைத் திறனாய்வு செய்து அவற்றின் முடிவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். அரசியல், மொழியியல் குறித்து சுமார் 90 புத்தகங்கள் எழுதியுள்ளார். கணினியியலிலும் புத்தகம் எழுதியுள்ளார்.
 
 உலகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் உரையாற்றியுள்ளார். உலக அளவில் கலை, இலக்கிய வட்டாரத்தில் அதிகம் சுட்டிக்காட்டப்படும் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்குகிறார். உலகப் புகழ்பெற்ற அரசியல் தத்துவவாதியாகப் போற்றப்படுகிறார்.
 
 எல்லா மனிதர்களும் சமூக, கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து ஒரே மொழியியல் வடிவத்தைத்தான் பகிர்ந்துகொண்டுள்ளனர் என்று கூறும் இவர், மனித மொழி மற்ற உயிரினங்களின் தகவல்தொடர்பு வடிவங்களில் இருந்து வேறுபட்டது என்கிறார்.
 
 வாழ்நாளின் பெரும்பகுதியில் இடதுசாரிக் கருத்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. நோபல் பரிசுக்கு இணையான ஜப்பான் நாட்டு கியோட்டோ விருது உட்பட ஏராளமான பரிசுகள், விருதுகள், பட்டங்கள் பெற்றுள்ளார்.
 
  • தொடங்கியவர்

நெல்லி சாஸ் 10

 

Untitled_2238938h.jpg

 

ஜெர்மானியப் பெண் கவிஞர் நெல்லி சாஸ் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
 
 ஜெர்மனியில் யூதக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை செல்வந்தர். உடல் பலவீனம் காரணமாக, வீட்டிலேயே கல்வி பயின்றார். நாட்டியத்தில் ஆர்வம் இருந்தாலும், உடல்நல பாதிப்பு காரணமாக ஈடுபட முடியவில்லை.
 
 கலகலப்பாக பேசக்கூடியவர் அல்ல. ஆனாலும், கடிதங்கள் மூலம் அதிக நட்பு வட்டாரம் கொண்டவர். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஸ்வீடன் எழுத்தாளர் செல்மா லேகர்லாவ், ஜெர்மனியின் புகழ்பெற்ற எழுத்தாளர் கவிஞர் ஹில்டி டாமின் உட்பட பலரது நட்புக்கும் அன்புக்கும் பாத்திரமானவர்.
 
 17 வயதில் கவிதை எழுதத் தொடங்கினார். 1920-களில் பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்தன. ஜெர்மனி அதிகாரத்தை நாஜிக்கள் கைப்பற்றியதும், வயதான தாயை அழைத்துக்கொண்டு 1940-ல் ஸ்வீடனுக்குத் தப்பினார்.
 
 ஒரே வாரத்தில் அந்த பகுதியில் இருந்த யூதர்கள் அனைவரும் கான்சன்ட்ரேஷன் கேம்ப்பில் (சித்ரவதை முகாம்) ஆஜராக உத்தரவிடப்பட்டது. நூலிழையில் அவர் தப்பியபோதிலும், ஜெர்மனியில் யூதர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை அறிந்து ரத்தக்கண்ணீர் வடித்தார்.
 
 ஸ்வீடன் மொழியைக் கற்றார். ஜெர்மன், ஸ்வீடன் கவிதைகளை பரஸ்பரம் மொழிபெயர்த்தார். அந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தினார். ஆதரவாக இருந்த தாய் மறைந்த பிறகு, தனிமை வாட்டியது. ஜெர்மனி கொடுமைகளால் அவரது மனநலம் பாதிக்கப்பட்டது. நரம்புத் தளர்ச்சி, பிரமை, பீதி, உருவெளித் தோற்றங்கள் போன்ற பாதிப்புகளுக்கு ஆளானார்.
 
 மனநலக் காப்பகத்தில் பல ஆண்டுகள் கழித்தார். அங்கும் எழுதுவதை நிறுத்தவில்லை. உடல்நலமும் மனநலமும் படிப்படியாக சீராகின. ஒரு கவிஞராக மறுவாழ்வை 50-வது வயதில் தொடங்கினார்.
 
 புகழ்பெற்ற பல ஜெர்மன் எழுத்தாளர்களுடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார். யூதர்களின் துயரங்களைப் பற்றிய இவரது முதல் கவிதைத் தொகுப்பு உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது. நண்பர் பால் செலனுடனான இவரது நட்பு இன்றும் பேசப்படுகிறது. காலம் காலமாக யூதர்கள் அனுபவிக்கும் துயரங்கள் பற்றிய வேதனையை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
 
 இவரது கவிதை வரிகள் மிக தீர்க்கமானவை. நாஜிக்களின் மரண முகாம்களில் இருந்து யூதர்களின் உடல்கள் ஆவியாகி புகையாக வெளியேறுவதாக ‘ஓ தி சிம்னிஸ்’ என்ற கவிதையில் சித்தரித்திருப்பார்.
 
 இவரது கவிதை நடை தனித்துவமானது. இவரது கவிதைத் தொகுப்புகள் ஏராளமாக வெளிவந்துள்ளன. நாடகங்கள், சுயசரிதையும் எழுதியுள்ளார். உயிருக்கு பயந்து எங்கிருந்து தப்பி வந்தாரோ, அதே ஜெர்மனியில் இவருக்கு அமைதிக்கான ஜெர்மன் வெளியீட்டாளர்கள் பரிசு 1965-ல் கிடைத்தது.
 
 இஸ்ரேலியர்களின் தலைவிதி பற்றி வலுவான, நேர்மையான முறையில் விவரித்து எழுதிய இவரது அசாதாரண இலக்கியப் பங்களிப்புக்காக, உக்ரைன் நாட்டின் எஸ்.ஒய்.அக்னானுடன் சேர்த்து இவருக்கு 1966-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. கவிஞர் நெல்லி சாஸ் 79 வயதில் காலமானார்.
 
  • தொடங்கியவர்

ரஜ்னீஷ் சந்திர மோகனின் (ஓஷோ) 10

 

osho_2240094h.jpg

 

ந்திய ஆன்மீக அறிஞரான ரஜ்னீஷ் சந்திர மோகனின் (ஓஷோ) பிறந்த நாள் (டிசம்பர் 11) இன்று. அவரை பற்றிய அரிய முத்துக்கள் பத்து..
 
 மத்திய பிரதேசத்தில், குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தவர். பட்டப் படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். சாகர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிறு வயது முதலே தியானத்தில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் 21-ஆம் வயதில் ஞானமடைந்தார்.
 
 ராய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். ஒன்பது வருட பணிக்குப் பிறகு, அந்த வேலையை ராஜினாமா செய்தார். மனித குலத்தின் விழிப்புணர்வு நிலையை உயர்த்தும் லட்சியத்துடன் புனே நகரில் ஆஸ்ரமம் நிறுவினார்.
 
 யோகா, ஜென், தாவோயிசம், தந்த்ரா மற்றும் சூஃபியிசம் உள்ளிட்ட அனைத்து விதமான தத்துவங்களை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விவரித்து, ஆன்மிகத்தில் உயர்நிலையை எட்டுவதில் ஆர்வம் கொண்ட சீடர்களுக்கு வழிகாட்டினார். ஏறக்குறைய 15 வருடங்கள் இவர் உரையாற்றியுள்ளார்.
 
 டைனமிக் தியான முறையை அறிமுகம் செய்தார். ஏராளமான தியான முகாம்களை நடத்தினார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இவரை நாடி சீடர்கள் குவிந்தனர்,  ரஜனீஷ் என்று போற்றப்பட்டார்.
 
 இவரது உரைகள் 600க்கும் மேற்பட்ட தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. இவை 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. காதல், பொறாமை, தியானம், ஆன்மிகம், அரசியல், மனித மனோபாவங்கள், உடல், மனம், ஆன்மா, சொர்க்கம், நரகம் ஆகியவை குறித்து இவர் விளக்கமளித்த கேள்வி-பதில் அமர்வுகள் 40 புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
 
 புத்தர், ஏசு, நபிகள் நாயகம், ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு அரிய சம்பவங்களையும் மனித குல மேம்பாட்டுக்கு வழிகாட்டும் முன்னுதாரண நிகழ்வுகளையும் தெள்ளத் தெளிவாகவும், எளிமையாகவும் விவரித்துள்ளார்.
 
 அமெரிக்காவின் ஒரேகான் என்ற இடத்தில் பாலைவனமாக இருந்த 64 ஏக்கர் நிலத்தை இவர் சீடர்கள் வாங்கினர். விவசாய கம்யூனாக அது மாற்றப்பட்டது. ரஜனீஷ்புரம் உருவானது. அங்கே 5000 பேர் வசித்தனர்.
 
 அரசியல், மதம் சம்பந்தமான புரட்சிகரமான கருத்துக்களை பரப்பியதால் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புக்கு ஆளானார். இதனால், வெகு விரைவில் இந்த கம்யூன் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆனால், சர்ச்சைக்கு இடமான ஆன்மீகக் குடியிருப்பாக மாறியது.
 
 1985ல் அமெரிக்க அரசு ஏதோ காரணம் காட்டி இவரை கைது செய்தது. சிறையில் அவருக்கு ‘தாலியம்’ என்ற மெல்லக் கொல்லும் கொடிய விஷம் செலுத்தப்பட்டதாக இவரது சீடர்கள் குற்றம்சாட்டினர். விடுதலைக்குப் பிறகு, இவர் வருவதற்கு 21 நாடுகள் தடைவிதித்தன. இறுதியாக, 1987ல் தனது பூனா ஆஸ்ரமம் திரும்பினார்.
 
 1989ல் சீடர்கள் ‘ஓஷோ’ என்று இவரை அழைக்கத் தொடங்கினர். மதம் என்ற பெயரில் தங்களது சொந்த ஆதாயத்துக்காக மூடத்தனங்களைப் பரப்புவோருக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த ஓஷோ 59-ஆவது வயதில் தன் உடலை விட்டு நீங்கினார்.
 
 

 

  • தொடங்கியவர்

ரஜினிகாந்த் 10

 

11Dec_thapm_Raj_11_2241547f.jpg

 

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 12). அவரை பற்றிய அரிய முத்துக்கள் பத்து..
 
 கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். ஐந்து வயதில் தாயை இழந்தார். பெங் களூரில் உள்ள ஆச்சாரிய பாடசாலை, விவேகானந்த பால சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக் காரராக விளங்கியவர்.
 
 சிறு வயதில் பயமே இல்லாதவ ராக, எதைப் பற்றியும் கவலைப்படாதவராக இருந்தார். பெங்களூரில் பேருந்து நடத்துநராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் மேடை நாடகங்களில் பங்கேற்ற இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் ஆசை பிறந்தது.
 
 நடிக்கும் ஆசையுடன் சென்னை வந்தார். நண்பரின் உதவியுடன் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்தார். 1975ல் கே. பால சந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இது அவரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது.
 
 அதன் பிறகு சில படங்களில் வில்லனாக, சில படங்க ளில் நல்லவனாக, வேறு சில படங்களில் அதிரடி நாயகனாக, நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என்று வேறுபட்ட வேடங்களில் முத்திரை பதித்தார். ரசிகர்கள் ‘ரஜினி ஸ்டைல்’ என்று கொண்டாடினர்.
 
 இவரது படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இடம் பெறும் ‘பஞ்ச் டயலாக்’ அனைத்துத் தரப்பினரிடமும் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த இவரது திரைப்படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் ஈர்க்கும் வண்ணம் உருவாக்கப்படுகின்றன.
 
 முத்து திரைப்படம் ஜப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அங்கும் இது மகத் தான வெற்றி பெற்று, ஏராளமானோரை இவரது ரசிகர்க ளாக மாற்றியது. அண்ணாமலை, எஜமான், வீரா, பாட்ஷா, போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதோடு, சூப்பர்ஸ்டார் அந்தஸ்தையும் பெற்றுத் தந்தன. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் என பல மொழிகளில் ஏறக்குறைய 160 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
 இவரது படங்கள் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ் தர்களுக்கும் லாபம் பெற்றுத் தருகின்றன. இந்தியா முழுவதும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
 
 ஆசியாவில் ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் இவர். 60 வயதைக் கடந்தும் கதாநாயகனாக நடித்து, சூப்பர் ஹிட் படங்களைத் தந்து வருகிறார்.
 
 பத்ம பூஷன், ஃபிலிம்ஃபேர், கலைமாமணி உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு ஜனரஞ்சக மான நடிகராக இருந்தாலும், இவர் தனிமை விரும்பி. ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் இமயமலைக்குச் சென்று, அங்குள்ள ஆசிரமத்தில் தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
 
 ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். தன்னம்பிக்கையுடனும், சாதிக்க வேண்டும் என்ற வேட்கையுடனும் கடுமையாக உழைத்தால், வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளவர் ரஜினிகாந்த்.
 
  • தொடங்கியவர்

ஆலன் புல்லக்

 

5_2242811h.jpg

ஆலன் புல்லக்
 
 

 

அரசியல் அறிஞர், வரலாற்று அறிஞர், கல்வியாளர் என்று பன்முகத் திறன் கொண்ட ஆலன் லூயிஸ் சார்லஸ் புல்லக் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 
 இங்கிலாந்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். வாசிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால், கிடைக்கும் பணத்தில் புத்தகம் வாங்க தாராளமாக செலவழித்தனர் பெற்றோர்.
 
 இவர், அப்பாவின் பிரியமான தோழர். ‘என் அப்பா அசாதாரண மன வலிமை படைத்தவர். அவரை அறிந்தவர்கள் அனைவரிடத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். பள்ளிப் படிப்பு முடித்த பிறகு, ஆக்ஸ்போர்டு, வட்ஹம் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. வரலாறு பயின்றார்.
 
 1938-ல் பட்டப்படிப்பு முடித்த பிறகு, இரண்டாம் உலகப் போர் நடந்துவந்த நேரத்தில், ராணுவத்தில் சேர ஆசைப்பட்டார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டதால் இது நிராசையானது.
 
 அப்போது ‘ஹிஸ்ட்ரி ஆஃப் தி இங்கிலீஷ் ஸ்பீக்கிங் பீப்பிள்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த வின்ஸ்டன் சர்ச்சிலிடம் துணை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். 20-ம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாறு குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
 
 பிபிசி நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார். போர் முடிந்த பிறகு வரலாற்று ஆராய்ச்சிக் கல்விக்காக ஆக்ஸ்போர்டு திரும்பினார். லண்டன் செயின்ட் கேத்தரீன் கல்லூரி நிறுவனர்களில் இவரும் ஒருவர். தனி ஆளாக பல நிறுவனங்களைத் தொடர்புகொண்டு இந்த கல்லூரி வளர்ச்சிக்காக 2 மில்லியன் டாலர் நிதி திரட்டினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முதல் முழுநேர துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
 
 கட்டுமஸ்தான உடற்கட்டுடன் கம்பீரமாக தோற்றமளித்ததால் சக பேராசிரியர்களும் மாணவர்களும் இவரை ஒரு ஹீரோபோல பார்த்தனர். விதிகளுக்குக் கட்டுப்படாமல் இருந்த பல மாணவர்களை தன் ஆளுமையால் கட்டுப்படுத்தினார்.
 
 ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை ‘ஹிட்லர்: எ ஸ்டடி இன் டைரனி’ என்ற பெயரில் புத்தகமாக எழுதி 1952-ல் வெளியிட்டார். ‘ஹிட்லர் ஒரு சந்தர்ப்பவாத சாகச விரும்பி, அவநம்பிக்கைவாதி, கொள்கை அற்றவர். வாழ்நாள் முழுவதும் இவரது செயல்பாடுகள் அனைத்தும் அதிகார வேட்கையால் தூண்டப்பட்டே அமைந்திருந்தது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் இப்புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
 
 சுமார் 40 ஆண்டுகள் கழித்து ‘ஹிட்லர் அண்ட் ஸ்டாலின்: பேரலல் லைஃப்’ என்ற புத்தகத்தை எழுதினார். ஏராளமான பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். நாஸிசம், சோவியத் கம்யூனிஸம் பற்றி உண்மையான, துல்லியமான தகவல்களுடன் பல நூல்கள் எழுதியுள்ளார்.
 
 பல்வேறு பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்தியுள்ளார். செவாலியர் விருது, சர் பட்டம் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த அரசியல் அறிஞர், வரலாற்று அறிஞர், கல்வியாளர் என்று பன்முகத் திறன் கொண்ட ஆலன் லூயிஸ் சார்லஸ் புல்லக் 89-வது வயதில் மறைந்தார்.
 
  • தொடங்கியவர்

ஆர்தர் சார்லஸ் கிளார்க் 10

 

arther_2245955h.jpg

 

இங்கிலாந்தில் பிறந்து இலங்கையில் வாழ்நாளைக் கழித்த அறிவியல் நாவல், புதின எழுத்தாளர் சர் ஆர்தர் சார்லஸ் கிளார்க் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 
* இங்கிலாந்தின் சாமர்செட் கவுன்டியில் பிறந்தவர். படிப்பில் சுட்டி. கிடைக்கும் பொருட்கள், பார்க்கும் இடங்கள் என அனைத்தையும் கற்பனைக் கண் கொண்டு பார்ப்பது சிறு வயதில் இருந்தே வழக்கம்.
 
* முதல் உலகப்போரில் அப்பாவை இழந்தபோது, இவருக்கு வயது 13. வானியலில் ஈடுபாடு கொண்டவர், பழைய அமெரிக்க அறிவியல் புதினங்களைப் படித்தார். வறுமை யால் படிப்பை நிறுத்திவிட்டு, அரசுப் பணியில் சேர்ந்தார்.
 
* 17-வது வயதில் பிரிட்டன் கோள்கள்இயல் கழகத்தில் சேர்ந்தார். அதன் பொருளாளராகவும், தலைவராகவும் உயர்ந்தார். 1941-ல் அதில் இருந்து விடுபட்டு இரண்டாம் உலகப் போரின்போது ராயல் விமானப் படையில் சேர்ந்து பணியாற்றினார்.
 
* செயற்கைக் கோள் தகவல் தொழில்நுட்பம், விண்கலம், அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர், மின்னல் வேக தகவல் தொடர்பு, மனிதன் நிலவுக்குச் செல்வது ஆகிய அனைத்தையும் அவை நிஜ வடிவம் பெறுவதற்கு முன்பாகவே கற்பனையில் கட்டுரைகள், புதினங்களாக எழுதியவர்.
 
* போர் முடிந்ததும் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இயற்பியல் - கணிதவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். ‘சயின்ஸ் அப்ஸ்ட்ராக்ட்’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி னார். 1951 முதல் முழுநேர எழுத்தாளர் ஆனார்.
 
* கோள்களுக்கு இடையேயான தொடர்புக்கு, புவிநிலை செயற்கைக் கோள் பாதைகள் (Geostationary Satellite Orbit) குறித்த தொழில்நுட்பக் குறிப்புகள் கொண்ட தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். 100 புத்தகங் களுக்கும் மேல் எழுதியுள்ளார். இவற்றின் கரு, அறிவியல் கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டவை.
 
* 1953-ல் இலங்கைக்குப் புலம்பெயர்ந்தார். தன் கற்பனை, சிந்தனை, எழுத்துக்கு ஏற்ற அமைதியான இடமாக கொழும்பு நகரைத் தேர்ந்தெடுத்தார். 1964-ல் போலியோ தாக்கியதால் நடக்க முடியாமல் போய், சக்கர நாற்காலியில் வாழ்நாளைக் கழித்தார். இறக்கும் வரை, இலங்கையிலேயே இருந்தார்.
 
* இவரது முதல் புத்தகம் ‘பிரிலூட் டு ஸ்பேஸ்’. இவரது ‘எ ஸ்பேஸ் ஒடிஸி’ என்ற நாவல் திரைப்படமாக எடுக்கப் பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. 2000-ம் ஆண்டில் இவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. ‘ஸ்ரீ லங்காபிமன்யா’ என்ற இலங்கை அரசின் மிக உயரிய விருதைப் பெற்றுள்ளார்.
 
* எந்த அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றமும் கற்பனை யில் இருந்தே தொடங்குகிறது என்பார்.
 
* எதிர்கால அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை தொலை நோக்குடன் கற்பனை செய்து எழுதி, அவை நிஜமா வதையும் பார்த்து மகிழ்ந்த இந்த அறிவியல் தீர்க்கதரிசி 90-வது வயதில் மறைந்தார். ‘‘இலங்கையில் நீடித்து நிலைக்கிற நிரந்தரமான அமைதி திரும்பவேண்டும் என்பதே என் விருப்பம்’’ இது அவரது கடைசி பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி!
 
  • தொடங்கியவர்

வில்லர்டு லிப்பி 10

lippi_2247029h.jpg

 

தொல்லியல் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய அமெரிக்க வேதியியல் விஞ்ஞானி வில்லர்டு பிராங்க் லிப்பி பிறந்தநாள் இன்று (டிசம்பர் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 
* அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் பிறந்தவர். அப்பா விவசாயி. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டமும், பிறகு வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். அங்கேயே விரிவுரையாளராகச் சேர்ந்த இவர், பின்னர் துணை பேராசிரியர் ஆனார்.
 
* 1930-களில் தொல்லியல் துறையில் புரட்சிகர மாற்றத்தை உருவாக்கிய கதிரியக்க கரிமக் காலக்கணிப்பு (ரேடியோ கார்பன்-14 டேட்டிங்) முறையின் வளர்ச்சியில் தனது பங்களிப்பு காரணமாக புகழ் பெற்றார்.
 
* கார்பன்-14 குறித்த இவரது தொழில்நுட்ப அறிவு, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், புவி விஞ்ஞானிகள், மானுடவியல் வல்லுநர்கள் மட்டுமின்றி, ஹாட் அணு வேதியியல், டிரேசர் நுட்பங்கள், ஐசோடோப் டிரேசர் துறை சார்ந்தோருக்கும் உதவியாக இருந்தது.
 
* தொல்பொருட்கள், கலைப்பொருட்களின் காலகட்டம் தொடர்பான ஆராய்ச்சி, புவி இயற்பியல் ஆராய்ச்சியில் ரேடியோ கார்பன் பயன்பாட்டை மேம்படுத்தினார்.
 
* 1952-ல் ரேடியோகார்பன் டேட்டிங் என்ற இவரது புத்தகம் வெளிவந்தது.
 
* 1941-ல் நியூஜெர்சி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் கொலம்பியா போர் ஆராய்ச்சிப் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
 
* சிகாகோ பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் அணுகுண்டு தயாரிப்புக்கான ரகசிய மன்ஹாட்டன் திட்டத்தில் பணிபுரிந்தார். யுரேனியம் ஐசோடோப்களை பிரிக்கும் நுட்பத்தை மேம்படுத்தினார். அணு ஆயுதம் உருவாக்குவதில் இது மிக முக்கியமான பணி என்பதால் பெரிதும் பாராட்டப்பட்டார்.
 
* வளிமண்டலத்தின் காஸ்மிக் கதிர்கள், ஹைட்ரஜனின் மிக கனமான ஐசோடோப்பான டிரிட்டியத்தின் தடங்களை உருவாக்குகின்றன. இதை வளிமண்டல நீர் இருப்பைக் கண்டறியும் டிரேசராகப் பயன்படுத்த முடியும் என்று 1946-ல் வெளிப்படுத்தினார். டிரிடிய செறிவை அளப்பதன்மூலம் கிணற்று நீர், ஒயின், கடல் நீர் கலப்பு ஆகியவற்றுக்கான கால அளவுகளை கணக்கிடும் முறையையும் கண்டறிந்தார்.
 
* போருக்குப் பிறகு, சிகாகோ பல்கலைக்கழக அணுக்கரு நிறுவனத்தின் வேதியியல் துறைப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். உலகம் முழுவதும் அணு ஆயுதங்களால் ஏற்படும் பாதிப்பு பற்றிய ஆராய்ச்சியை 1953-ல் மேற்கொண்டார்.
 
* ‘ப்ராஜக்ட் சன்ஷைன்’ அமைப்பை உருவாக்கி வழிநடத்தினார். அமெரிக்க அணு ஆற்றல் கமிஷன் உறுப்பினராக 1954-ல் நியமிக்கப்பட்டார். வேதியியல் துறையில் கதிரியக்க ஐசோடோப் கார்பன்-14 அடிப்படையிலான பங்களிப்புகளுக்காக 1960-ல் நோபல் பரிசு பெற்றார்.
 
* கார்பன் டேட்டிங் தொழில்நுட்பத்துக்கான விருது, வேதியியல் துறை சாதனைக்கான சான்ட்லர் பதக்கம், அணு ஆற்றல் துறைக்கான விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 71-வது வயதில் மறைந்தார்.
 
 
  • தொடங்கியவர்

ஸ்ரீநிவாச ராமானுஜன் 10

Untitled_2252897h.jpg

ஸ்ரீநிவாச ராமானுஜன்
குறுகிய காலத்தில் பல கணித உண்மைகளைக் கண்டறிந்த கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 
 ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர். கும்பகோணத்தில் படித்தார். பள்ளியில் படிக்கும்போதே கல்லூரி மாணவர்களுக்கான எஸ்.எல்.லோனியின் முக்கோணவியல் மற்றும் அடிப்படை கணித சூத்திரங்களைத் தொகுத்து வழங்கிய ஜி.எஸ்.கார் என்பவரின் புத்தகத்தை படித்து முடித்தவர்.
 
 சிக்கலான கணித உண்மைகளை மற்றவர் உதவியின்றி தானே புரிந்துகொண்டார். கணக்கில் இருந்த அதிக ஆர்வத்தால், ஆங்கிலப் பாடத்தில் 2, 3 முறை தோல்வி அடைந்தார். அதற்குள் திருமணமும் ஆனது.
 
 மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தார். பணக்காரர்களிடம் தன் கணித நோட்டுப் புத்தகங்களைக் காட்டி உதவி கேட்டார்.
 
 1912-ல் சென்னை துறைமுகத்தில் ரூ.25 சம்பளத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது. அங்கு அதிகாரிகளாக இருந்த நாராயண ஐயர், சர்.பிரான்சிஸ் இவரது திறமையைப் பார்த்து வியந்தனர். அலுவலகத்தில் வேலை பளுவைக் குறைத்து, கணித ஆராய்ச்சிக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்தனர். அப்போது, தான் கண்டறிந்த சில அரிய கணித மாதிரிகளை இங்கிலாந்து கணிதப் பேராசிரியர்களுக்கு அனுப்பினார்.
 
 இவற்றில் பல கடிதங்கள் குப்பைக் கூடைக்குப் போனது. பேராசிரியர் ஹார்டி மட்டும் இவரது திறமையைப் புரிந்துகொண்டார்.
 
 அவரது முயற்சியாலும் பலரது உதவியாலும் 1914-ல் இங்கிலாந்துக்கு புறப்பட்டார். கேம்ப்ரிட்ஜ் சென்றவுடன் ஹார்டியுடன் சேர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
 
 டாக்டர் பட்டத்துக்கு இணையான டிரினிட்டி கல்லூரியின் பி.ஏ. பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. 1917-ல் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உடல்நிலை சற்று தேறியதும், மீண்டும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
 
 இந்தப் பிறவி மேதைக்கு 1918-ல் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் என்ற கவுரவம் கிடைத்தது. அதோடு, நல்ல சம்பளமும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் 1919-ல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். படுக்கையில் கிடந்த நிலையிலும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்.
 
 1914 - 1918 இடையே 3 ஆயிரத்துக்கும் அதிகமான புது கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்; 27 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது ஆராய்ச்சிகளின் அடிப்படைகள் இன்று இயற்பியல் முதல் மின்தொடர்பு பொறியியல் வரை பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
 
 இவரது நோட்டுப் புத்தகங்கள், காகிதங்கள், எழுதிவைத்த குறிப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிடுவதில் வாட்சன், ஆண்ட்ரூஸ், ப்ரூஸ் போன்ற கணித வல்லுநர்கள் பல ஆண்டுகாலம் செலவிட்டனர். குறுகிய காலத்தில் இவர் கண்டறிந்த கணித உண்மைகளை இன்னமும் புரிந்துகொள்ள முடியாமல் உலகம் முழுவதும் பல கணித வல்லுநர்கள் திணறுகின்றனர். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 33-வது வயதில் மறைந்தார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.