Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னாவும், ஸோபியாவும், நம் வாசிப்புக்களும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாவும், ஸோபியாவும், நம் வாசிப்புக்களும்...

இளங்கோ-டிசே

1.

தஸ்தயேவ்ஸ்கியின் அன்னாவையும், டால்ஸ்டாயின் ஸோபியாவையும் புரிந்துகொள்வது என்பது மிகவும் சிக்கலானது. அதேபோன்று தஸதயேவ்ஸ்கியும், டால்ஸ்டாயும் மதிப்பிடும்போது அவர்கள் வாழ்ந்த காலத்தையும், அதன் பின்னணிகளையும் விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். படைப்பாளிகளைப் போல, அவர்களின் துணைகளினூடாக வரும் 'கதைகளும்' வாசகர்களைச் சலனமடையச் செய்கின்றன. இவற்றில் பல படைப்பாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் 'திருவுரு'க்களை மேலும் செதுக்குகின்றன. சில அவர்கள் மேல் ஏற்றப்பட்ட விம்பங்களைச் சிதைக்கவும் செய்கின்றன.

10313123_10152686925748186_1241280572868

படைப்பாளிகள் நமது அகவுலகத்தில் தத்தம் படைப்புக்களினூடாக நெருக்கம் கொள்கின்றனர். அதேவேளை இந்த நெருக்கமானது, படைப்பின் உச்சத்தினூடாக நிகழ்த்திக்காட்டப்படுகின்றதே தவிர, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்துகொள்வதனால் உண்டானதல்ல என்பதைப் பலர் மறந்தே போய்விடுகின்றனர். படைப்பாளி என்பவர் கூட, படைப்பின்போது வேறொரு மனிதராக மாறிவிடக்கூடியவராகவும், பின்னர் நம்மைப் போன்ற சாதாரண மனிதராக வந்துவிடக்கூடிய ஒருவரே. ஆகவே அந்தப் படைப்பாளி சாதாரண மனிதர் செய்யக்கூடிய எல்லாத் தவறுகளையும் செய்யும்போதோ, தனது பிழைகளை அவர் திருத்தத்தெரியாது திகைக்கும்போதோ, நாம் வேறொருவிதமான விம்பத்தை அவருக்குக் கொடுக்கக்கூடியவராக ஆகிவிடுகின்றோம்.

எவ்வகைக் கலையானாலும், படைப்பு மனம் ஒருவரை குழந்தையாகவோ, மனம் சிதறச்செய்கின்றதாகவோ அல்லது நாம் கற்பனை செய்து பார்க்கமுடியாத நிலைகளுக்கோ உருமாற்றம் செய்யவும்கூடும். ஆனால் படைப்பினூடாகத் தரிசிக்கும் அந்த நிலையிலேயே, நாம் படைப்பாளிகளைச் சந்திக்கும்போதோ அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அறியும்போதோ இருக்கவேண்டும் என்றெதிர்ப்பார்ப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

2.

'படைப்பை பார், படைப்பாளியைப் பாராதே' என்பது எவ்வளவு முக்கியம் வாய்ந்த சொல்லாடல். ஆனால் நம் தமிழ்ச்சூழலில் அதை கேலிக்குரியதாக்கிய பெருமை, இதன் உண்மையான அர்த்தத்தை விளங்காதவர்களால் மட்டுமில்லை, இதை முன்னிலைப்படுத்திய சிலராலும் நிகழ்ந்திருக்கின்றது என்பதே அவலமானது. 'படைபைப் பார், படைப்பாளியைப் பாராதே' என்பது எழுதியவர் மற்றும் வாசிப்பவருக்கு ஒரு படைப்பை முன்வைத்து எத்தகைய பெரும் சுதந்திரத்தைத் தருகின்றது என அநேகர் எண்ணிப் பார்ப்பதேயில்லை. படைப்பை எழுதியபின்னர், அது படைப்பாளிக்குச் சொந்தமில்லை. அதை முன்வைத்து எவ்வகையான வாசிப்பையும் வாசகர் செய்வதற்கான ஒரு வெளி திறந்துவிடப்படுகின்றது. வாசகர், தனக்குரிய வாசிப்பில் அந்தப் பிரதியை எவ்வகையாகவும் புரிந்துகொள்ளமுடியும். அதை படைப்பாளி, இது நானெழுதிய படைப்பு இப்படித்தான் விளங்கிக்கொள்ளவேண்டும் என்று எந்தவகையிலும் கட்டாயப்படுத்தமுடியாது. அவ்வாறு ஒரு படைப்பாளி தன் படைப்புக் குறித்து விளக்கந் தந்தாலும், அந்தப்படைப்பை எழுதியவர் என்றவகையில் உரிமைகோரி எதையும் கூறமுடியாது. அவரும் இன்னொரு வாசகராகவே கருத்துச் சொல்லமுடியும்.

உதாரணத்திற்கு ஜெயமோகன் 'அறம்' வரிசைக் கதைகள் எழுதியபோது, அழகாய் வளர்த்தெடுக்கப்படும் 'சோற்றுக்கணக்கு' கதையில் வரும் முஸ்லிம் பாத்திரத்திற்கு சாதியைத் திணித்திருக்கத் தேவையில்லை என என் வாசிப்பை முன்வைத்திருந்தேன். அதற்கு ஜெயமோகன் 'ஈழ எழுத்தாளருக்கு...' என்ற தலைப்பில் ஏன் சாதியை அங்கே தான் கொண்டுவருகின்றேன் என்பதற்கான விளக்கங்களோடு, வழமையாய் விரித்தெழுதும் அவரின் பழக்கத்தினால் 'சிங்களவர்களையே புரிந்துகொள்ளமுடியாத காழ்ப்புணர்வு கண்டவன்' என்பதுவரை என்னை இழுத்திருப்பார். இலக்கியம் சார்ந்து வரும் சர்ச்சைகளில் பிறரைச் சீண்டிப் பார்ப்பதும் ஒருவகை 'அறமே' என்பதால் அவை குறித்துக் குறையேதுமில்லை.

ஆனால் நான் ஜெயமோகன் தன் படைப்புக்குறித்துச் சொல்வதை அவரும் இந்தக்கதைகளின் ஒரு வாசகர் என்றவகையிலேயே பார்ப்பேனே தவிர, அவர் அந்தக் கதைகளை எழுதியவர் என்றவகையில் எந்த உரிமையும் அவருக்குக் கொடுக்கப்போவதில்லை. அதாவது அவர் இந்தக்கதையை எழுதியவர் என்பதால், அவர் கூறும் பார்வையில்தான் இந்தக் கதையை வாசிக்கவேண்டும் என்கின்ற எந்த உரிமையும் அவருக்கு இல்லை என்பதையே மீண்டும் வலியுறுத்துகின்றேன்..

ஒரு புனைவை வாசிப்பதன் மூலம் ஒருவர் தனக்கான சொந்தப் பிரதியை உருவாக்கிக்கொள்ள முடியும். அந்தச் சுதந்திரத்தன்மையை படைப்பாளியால் கூட மறுக்க முடியாது. அந்தவகையிலேயே திரைப்படங்களையும் நமக்கான பார்வையில் புரிந்துகொள்ள முடியும். ஒரு இயக்குநர் அறிந்தோ/அறியாமலே வைக்கும் காட்சிகளைக் கொண்டே, நாம் நம் பார்வையினால் வேறுபட்ட ஒரு படமாய் அதை வளர்த்தெடுக்க முடியும். இது ஜிகர்தண்டாவிற்கு எம்டிஎம் எழுதிய பார்வையிலும் பார்க்கலாம். ராஜன்குறையின் 'கதாநாயகனின் மரணம்' திரைப்படஞ் சம்பந்தமான தொகுப்பில் இன்னும் ஆழமாய் அவதானிக்கலாம்.

அது மட்டுமின்றி, 'நான் நீங்கள் நினைக்கும் அர்த்தங்களில் இவற்றையெல்லாம் எழுதவில்லை' என அண்மையில் காலச்சுவடில் வெளிவந்த அசோகமித்திரனின் குரலைத் தவிர்த்துவிட்டு, 'தண்ணீர்' நமது வாசிப்பில் ஒரு குறியீட்டு நாவலாய்த் தெரிந்தால் அப்படியே நாம் வாசித்தும்/வரித்தும் கொள்ளலாம். எம்.ஜி.சுரேஷ் பல்வேறு வகைமையான நாவல்களை எழுதுகின்றேன் என ஒவ்வொரு நாவல்களுக்கும் பின்னட்டைக் குறிப்பு எழுதி விளம்பரப்படுத்தியது எவ்வளவு அபத்தமோ, அவ்வாறே அசோகமிததிரன் தனது படைப்புக்களில் நீங்கள் நினைக்கும் வகையில் தான் எழுதவில்லை என்றவுடன் எமது வாசிப்புக்களைக் கைவிடுவதும் என்க.

ஆக தமிழ்ச்சூழலில் 'படைப்பைப் பார், படைப்பாளியைப் பார்க்காதே' என்பதோடு மேலதிகமாய் 'உங்களுக்கான பார்வையை உருவாக்கும்போது அதில் படைப்பாளி குறுக்கீடு செய்தால் கூட, உங்களுக்கான வாசிப்பை எந்தவகையிலும் கைவிடத்தேவையில்லை' என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறவேண்டியிருக்கின்றது.

சர்ச்சைகளும் சமாதானமும் இலக்கியத்தில் மூக்கும் சளியும் என்பதால், பின்னாளில் ஜெயமோகன் நானெழுதிய கதையிற்கு ஒரு குறிப்பு எழுதியிருப்பார். 'கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?' என்ற தலைப்பை, 'விளையாட்டுக் கண்ணன் மீது பித்தான கோபிகை என்ற பொருளில் போடப்பட்டிருக்கும் தலைப்பும் அழகு' எனக் குறிப்பிடுவார். நான் கதையின் பாத்திரத்திற்கு 'கோபிகா' எனத் தெரிவு செய்ததற்கு என்னளவில் ஒரு காரணம் இருந்தாலும், அது ஜெயமோகன் கூறும் அர்த்தத்தில் அல்ல. ஆனால் நான் அதைக் குறிப்பிட்டு ஜெயமோகனின் வாசிப்பில் குறுக்கீடு செய்யமுடியாது. அவர் வாசிப்பில் உருவாக்கிய பிரதியிற்கு அப்படியொரு அர்த்தம் இருக்கும்போது அதில் நான் இடையீடு செய்து, இப்படித்தான் வாசிக்கவேண்டுமென கோருதல் ஒருவகை வன்முறை. படைப்பு எழுதி முடிந்தகணத்திலேயே 'படைப்பாளி இறந்துவிட்டார்'. இனி இருப்பது வாசிப்பவர்களின் பிரதி மட்டுமே.

3.

10670079_10152686923543186_3019314566643

மீண்டும் படைப்பாளிகளின் துணைகளுக்கு வருகின்றேன். அன்னாவினதும், சோபியாவாவினதும் சுய அனுபவங்களினூடாக வரும் கதைகள் தஸ்தயேவ்ஸ்கியினதும், டால்ஸ்டாயினதும் திருவுருக்களை அசைத்துப் பார்க்கின்றன. ஆனால், நாம் மறந்தது என்னவெனில், நமக்குத் தெரிந்த தஸதயேவ்ஸ்கியும்,டால்ஸ்டாயும், கரம்ஸோவ் சகோதரர்கள், புத்துயிர்ப்பு, அன்னா கரினீனா, போரும் சமாதானமும், குற்றமும் தண்டனையும் போன்றவற்றினால் அறிமுகமானவர்களே தவிர, சாதாரண தனிப்பட்ட வாழ்வினால் அறிமுகமானவர்கள் அல்ல. உயர உயரப் பறந்தாலும், பறவைகள் நிலத்திற்கு என்றேனும் வந்தாக வேண்டும் என்பதுபோல, படைப்பு வெளியில் எங்கெங்கோ சுதந்திரமான அலைந்த மனிதர்களின் கால்கள் நிலத்தில் பாவும்போது நாம் கட்டிவைத்த விம்பங்கள் உடைதலும் இயல்பே.

கலைஞர்கள் பெரும்பாலானோர் வாழ்வு அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருப்பதுமில்லை. துயரங்களும், தத்தளிப்புக்களும் இவற்றின் நீட்சியில் தம் சுயமழித்தலும் அநேகரின் வாழ்வில் இயல்பாயிருந்திருக்கின்றது. தஸ்தயேவ்ஸ்கியினதும், டால்ஸ்டாயினதும் மட்டுமில்லை, வேர்ஜீனியா வூல்ப்விலிருந்து சில்வியா பிளாத் என நீண்டு நம் தமிழ்ச்சூழலில் ஜி.நாகராஜன், ஆத்மநாம், சிவரமணி எனக் குறிப்பிடுவதற்கு நிறைய உதாரணங்களிருக்கின்றன.

2.jpg

நாம் தஸ்தயேவ்ஸ்கியினதும், டால்ஸ்டாயினதும் தனிப்பட்ட வாழ்வை அவதானிப்பதாயின் அவர்களுக்குக் கிடைத்த துணைகளான சோபியாவும், அன்னாவும் இவர்கள் இருவரினதும் படைப்புக்களால் ஈர்க்கப்பட்டோ அல்லது இந்தப் படைப்புக்கள் மீது மதிப்பு வைத்தோ துணைகளானவர்கள். அவர்களினாலேயே இவ்வாறு ஒருவகையான விமர்சனம் வைக்கப்படுகின்றதென்றால், சிலவேளைகளில் சாதாரண 'லெளதீக' விடயங்களில் ஆசைப்படுகின்ற துணைகள் இவர்களுக்குக் கிடைத்திருந்தால் எவ்வாறிருந்திருக்கும் என யோசித்துப் பார்க்கவும் வேண்டியிருக்கின்றது. அவ்வாறு கிடைக்கும் துணைகளோடு போராடிப் போராடியே சிலவேளைகளில் தஸ்தயேவ்ஸ்கியினதோ, டால்ஸ்டாயினதோ சிறந்த படைப்புக்கள் எழுதப்படாது, நாம் இவற்றை இழந்திருக்கவும் கூடும்.

ஜெயமோகன் இப்போது வாஸந்தியிற்கு எழுதிய எதிர்வினையிலும் நான் ஜெயமோகனோடு உடன்படுகின்ற புள்ளிகளே அதிகம் இருக்கின்றன. வாஸந்தியின் கட்டுரை மிக எளிமையாக ஒருவரை அடித்துத் துவைக்கவேண்டுமென்பதற்காய் எழுதியது என்பதை உடனேயே வாசித்துப் புரிந்துகொள்ளமுடியும். டால்ஸ்டாய் ஆன்மீகத்தைத் தேடியவர் எனினும் 80வயதிலும் உடலுறவு வைத்துக்கொண்டவர் என வாஸந்தி குறிப்பிடும்போதே 'ஆன்மீகத்தின்' எளிய புரிதலுக்கு அப்பால் வாஸந்தியால் நகரவே முடியவில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

ஆனால் ஜெயமோகனோடு பெரும்பாலும் உடன்படுகின்ற எனக்கும் கேள்விகளுண்டு. சோபியாவின் குரலும் கேட்கப்படவேண்டும் என்பதற்காய் வாஸந்தி டால்ஸ்டாயை கீழிறக்குவது போல, ஏன் ஜெயமோகனும் டால்ஸ்டாயை மேன்நிலையாக்கம் செய்வதற்காய் சோபியாவைக் கீழிறக்கவேண்டும் என்பதே. டால்ஸ்டாய் தன்னளவில் தனித்து நிற்கமுடிவதுபோல, வெவ்வேறு தளங்களாய் இருந்தாலும், சோபியாவும் தன்னளவில் தனித்து நிற்கக்கூடிய ஒருவரே என்பதை ஏன் மறுதலிக்கவேண்டும். சிலவேளை ஒரு பெண்ணுக்குரிய/தாய்க்குரிய 'கடமை'களைச் செய்ய வேண்டிய அவசியமோ, டால்ஸ்டாயோடு வாழவோ வேண்டியிராத சந்தர்ப்பத்திலோ, சோபியா ஒரு தனிப்பட்ட ஆளுமையாக உயர்ந்திருக்கலாம் என்பதை ஏன் நாம் மறுக்கவேண்டும்?

நாம் ஒருபோதும் டால்ஸ்டாயினதோ, தஸ்தயேவ்ஸ்கியினதோ படைப்புக்களையோ (படைப்புக்கள் என்ற சமதளத்தில் இருந்தபோது கூட) ஒப்பிட்டு ஒன்றையொன்று கீழிறக்குவதில்லை. அவையவை தம்மளவில் தனித்துவமானவை என்று எடுத்துக்கொண்டே, விமர்சனங்கள் இருந்தாலும் அந்தப் பிரதியிற்குள் நின்றே கருத்துக்களை முன்வைக்கின்றோம். அதேபோன்று டால்ஸ்டாயையும், சோபியாவையும் ஒரே தராசில் வைத்து நாம் ஒப்பிடத்தேவையில்லை அல்லது ஒருவரைத் தாழ்த்துவதன் மூலம் இன்னொருவரை உயர்த்தத் தேவையில்லை.

இப்படியும் யோசித்துப் பார்க்கலாம். காலங்காலமாய் சோபியா, அன்னா என படைப்பாளிகளுக்கு உரிய துணைகளாக எத்தனையோ பெண்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் இவ்வாறு டால்ஸ்டாய் போலவோ, தஸ்தயேவ்ஸ்கி போலவோ, எழுத விரும்பும் பெண்களுக்கு எத்தனை ஆண்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றோம் என எண்ணிப் பார்த்திருக்கின்றோமா? இத்தனைக்கும் பெண் படைப்பாளிகள் சமூகம் 'பெண்'ணிற்கு எனக் கூறப்படும் 'கடமை'களைச் செய்யவேண்டிய் அழுத்தத்தின் மேல் நின்றே எழுதுகின்றார்கள். மேலும், குடும்பமாகி குழந்தைகள் பெறும்போது தாய்மை எனும் பெருஞ்சுமையை விரும்பியோ/விரும்பாமலோ ஏற்றுக்கொண்டே எழுதவும் வேண்டியிருக்கின்றது. அதுவும் சில நூற்றாண்டுகள் முந்திய காலத்தில் நிறையக் குழந்தைகளைப் பெற்றும், அவை இடைநடுவில் இறக்கவும் பார்த்துக்கொண்டிருந்த சோபியாவினதும், அன்னாவினதும் அகவுலகங்களையும் விளங்கிக்கொண்டே, அவர்கள் தஸ்தயேவ்ஸ்கி மீதோ, டால்ஸ்டாய் மீதோ வைக்கும் விமர்சனங்களையும் பார்க்கவேண்டியிருக்கின்றது.

எங்களுக்கு தாஸ்தயேவ்ஸ்கி மீதும் டால்ஸ்டாய் மீதும் அளப்பரிய காதல் இருக்கலாம். ஆனால் அதற்காய் சோபியாவினதும் அன்னாவினதும் குரல்களை முற்றாக உதறித்தள்ளிவிட்டுத்தான் இவர்களை நேசிக்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை.

இந்த வாழ்வையும் மனிதர்களையும் ஆழமாய் நேசிக்கக் கற்றுத்தரும் டால்ஸ்டாயையும், தஸ்தயேவ்ஸ்கியும், தமது துணைகளின் குரல்கள் -அவர்களை மதிப்பிறக்கும் தொனியாக இருந்தாலும் கூட- அதையும் நிதானமாய்க் கேட்க வேண்டும் என்பதையுந்தானே சொல்லித்தரப் பிரியப்பட்டிருப்பார்கள்.

................

(படங்கள்: நன்றி: கூகிள் தேடலினூடு )

http://djthamilan.blogspot.co.uk/2014/09/blog-post_23.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.