Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கத்தி படம் தொடர்பாக பொய்களைப் பரப்புவது யார்? -புகழேந்தி தங்கராஜ்

Featured Replies

கத்தி படம் தொடர்பாக பொய்களைப் பரப்புவது யார்? -புகழேந்தி தங்கராஜ்

pugazhendhi_thangaraj.jpg'இளைய தளபதி' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தம்பி விஜயின் கத்தி திரைப்பட விவகாரத்தில் நான்   வெளிப்படையாகப் பேச நேர்ந்தது, விரும்பி எதிர்கொண்ட ஒரு சூழலில் அல்ல! உண்மையைப் பேச மற்றவர்கள் தயங்கிய நிலையில், நானாவது அதைப் பேசியாக வேண்டுமே என்கிற கட்டாயத்தில், ஒரு தர்மசங்கடத்துடன்தான் அதைப் பேசினேன். என் நண்பர்கள் அனைவருக்கும் இது தெரியும்.

ராஜபக்சேவின் குடும்பத்தினருடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் லைக்கா மொபைல் நிறுவனம் கத்தி திரைப்படத்தை எடுத்திருக்கிறது என்பதுதான் பிரச்சினையின் அடிப்படை. இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் - என்று தமிழக அரசு வெளிப்படையாகவே வலியுறுத்தி வரும் நிலையில், ராஜபக்சேவுக்கு நெருக்கமான ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் தமிழ்த் திரையுலகில் காலூன்றுவதைக் குறித்து நாங்கள்  கவலைப்படாமல் இருக்க முடியுமா?

கத்தி படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது அம்பலமான நிலையில், புலிப்பார்வை படத்தில் என்ன இருக்கிறது என்பதும் அம்பலமாகிவிட, இரண்டுக்கும் எதிராகப் போராட ஒரு கூட்டமைப்பே உருவாக்கப்பட்டது. அதன்  அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஏமாற்றத்தை அளித்தபோது என்னால் பேசாதிருக்க முடியவில்லை. வெளிப்படையாகப் பேசினேன், வெளிப்படையாக எழுதினேன்.

படத்தைத் தயாரித்தவர்கள் யாராக இருந்தாலும், அதன் ஒவ்வொரு ஃபிரேமிலும் - முருகதாஸ் மற்றும் விஜயின் வியர்வையுடன் ஆயிரக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் வியர்வையும் இருக்கும் என்கிற நிதர்சனத்தை உணர்ந்தவன் நான். அதனால்தான் படம் வெளியாக ஒரு 'சேஃப் பாசேஜ்' கொடுக்கவேண்டும் என்று கூறினேன். படம் வெளிவரவே முடியாத அளவுக்கு தயாரிப்பாளர் கழுத்தில் கத்தி வைக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் வலியுறுத்தவில்லை.

இனப்படுகொலை செய்த மிருகங்களின் கூட்டாளிகள் பணத்தில் படம் எடுத்ததற்காக விஜயும் முருகதாஸும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்..........

படத்தின் முதல் மூன்று நாள் வசூலை (முதல் 3 நாள் என்பது மிகவும் முக்கியம்!) இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிவாரணப் பணிகளுக்காக வழங்கவேண்டும்.....

கத்தி திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில், படத்தைத் திரையிடும்முன், 2009ல் ஈழத் தாயகத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை அம்பலப்படுத்தும் சிறிய  ஆவணப்படமொன்றைத் திரையிடவேண்டும்.....

இதைத்தான் நான் வலியுறுத்தினேன்.

ஏற்கெனவே, தமிழகத்தின் பிரபல பத்திரிகை ஒன்றில் இதுகுறித்து எழுதியிருந்தேன் என்றாலும், லைக்கா தொடர்பாக என்னிடம் பேசும் புலம்பெயர் உறவுகளுக்காக மீண்டும் இதை குறிப்பிடுகிறேன்.

லண்டனிலிருந்தோ பாரீஸிலிருந்தோ,  லைக்காவின் பிரெஞ்ச் பிளாஷ்பேக் குறித்து என்னிடம் கதைப்பவர்கள் இருக்கிறார்கள். வேறு சிலர், லைக்காவின் வர்த்தக எதிரிகள் யார் என்று கதைக்கிறார்கள். நான், லைக்காவின் நண்பர்கள் யார் என்பது குறித்தே  கவலைப்படுகிறேன். ராஜபக்சேக்கள்தான் அவர்களது உண்மையான நண்பர்கள் என்றால், அதற்கான குறைந்தபட்ச தண்டனை ஒன்றை அவர்கள் அனுபவிப்பதுதானே முறை!

என்னுடைய கோரிக்கைகள் நியாயமானவை என்பதை உணர்ந்து அலைபேசி வாயிலாக ஆதரவு தெரிவித்தவர்கள் பலர். அதே சமயம் என் நிலையை எதிர்த்தவர்களும் இல்லாமலில்லை. தவறான புரிதல் காரணமாகவே நான் இப்படிப் பேசியிருப்பதாக புலம்பெயர் உறவுகளில் சிலர் என்னிடம் அலைபேசி வாயிலாக நேரடியாகவே குறைப்பட்டுக் கொண்டதை மூடி மறைத்துவிட நான் விரும்பவில்லை.

என்னை ஒரு உண்மையான நண்பனாகக் கருதி, கோபத்துடன் அவர்கள்  பேசியதை 'மிரட்டல்' என்று எடுத்துக் கொள்வதற்கில்லை.  உணர்ச்சி வயப்படும் நிலையில் அப்படிப் பேசுவது மிகமிக இயல்பானது. "ஈழத்தையும் ஈழ மக்களையும் மனப்பூர்வமாக நேசிக்கும் நீங்கள், பொய்யான தகவல்களின் அடிப்படையில்,  ஈழத்தைச் சேர்ந்த ஒருவரின் நிறுவனம் தயாரித்திருக்கும் படத்தைத் தடுத்து நிறுத்த முயல்வது நியாயமா" என்று என்னிடம் கேட்கிற உறவுசார் உரிமை -  அவர்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு இருக்க முடியும்?

பொய்யான தகவல்களின் அடிப்படையில் நான் பேசுவதாகச் சொல்வதற்கும், 'பொய்யன்' என்று என்மீது முத்திரை குத்துவதற்கும் ஆகப்பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஒன்று, என்மீது சுற்றிவளைத்து குற்றஞ்சாட்டுவது. மற்றது, நேரடியாகக் குற்றஞ்சாட்டுவது. அப்படிச் சொல்லும் என் அன்புக்குரிய உறவுகளுக்காகவே இதை நான் எழுதுகிறேன். 'பொய்யான தகவல்களின் அடிப்படையில் எதிர்க்கிறீர்கள்' என்று குற்றஞ்சுமத்தும் அவர்களுடன் நேருக்கு நேர் பேச விழைகிறேன்.

லைக்கா மொபைல் நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் இருக்கிற உறவுகள் ஊரறிந்த ரகசியம். அதுதொடர்பான குற்றச்சாட்டுகளில் என்ன பொய் இருக்கிறது? எங்கள் குழந்தைகள் மீது செஞ்சோலையில் குண்டுவீசிய விமானத்தில் ராஜபக்சே கொடுத்த  ராஜமரியாதையுடன் லைக்கா குழு அழைத்துச் செல்லப்பட்டதா இல்லையா? அந்த "கௌரவத்தை" லைக்கா குழு மனப்பூர்வமாக ஏற்றதா இல்லையா? இது நடந்தது, எம் ஒன்றரை லட்சம் உறவுகள் கொன்று குவிக்கப்பட்டதற்கு முன்பா, கொன்று  குவிக்கப்பட்ட பின்பா? இனப்படுகொலை செய்துமுடித்த ஒரு அரசால் 'அரசு விருந்தினர்களாக' இவர்கள் நடத்தப்பட்டார்களா இல்லையா? ரத்தவாடையுடன் உலா வருகிற ராஜபக்சேக்களுடன் கை குலுக்கினார்களா இல்லையா? லைக்காவுக்காக என்னுடன் பேசும்  நண்பர்கள் தான் விளக்க வேண்டும்.

கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு.சுபாஷ் கரண் அவர்கள் ஓர் ஈழத் தமிழர் என்கிறார்கள் சில நண்பர்கள். அவர் விஷயத்தில் இந்தப் பிறப்படையாளம் மட்டும்தான் உண்மையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் பேசுவது எதிலும் கடுகளவு கூட உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.

லைக்கா மொபைல் நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் இடையில் எந்த உறவும் இல்லை - என்று சென்னை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் சுபாஷ் கரண். இந்த  மறுப்பு ஒரு பச்சைப் பொய் என்பதை நான் விலாவாரியாக  விளக்க வேண்டிய அவசியமே இல்லை. (சென்னைப்  பத்திரிகையாளர்கள் மனசாட்சி உள்ளவர்கள்..... ஒன்றுக்கு நான்கு மொபைல் கொடுத்தாலும் உண்மையை எழுதத் தயங்க மாட்டார்கள்!)

சென்னை செய்தியாளர்களிடம் லைக்கா தரப்பில் வெளிப்படையாகப் பரப்பப்பட்ட பொய்கள் ஒருபுறம் இருக்க, மறைமுகமாக இன்னொரு பொய்யும் விதைக்கப்பட்டது.  கத்தி திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜெயா தொலைக்காட்சி வாங்கிவிட்டதாக ஒரு வதந்தி வேகமாக   பரவியது. எதிர்த்துப் போராடுவோரை மறைமுகமாக அச்சுறுத்த நடந்த முயற்சியாகவே அதைக் கருத வேண்டியிருக்கிறது.

சென்னையில் இவ்வளவு பொய்களையும் பரப்பியதோடு நின்றுவிடவில்லை  கத்தியைத்  தயாரித்தவர்கள். தன்னுடைய இரண்டு நாள் வருமானம்தான் கத்தியின் தயாரிப்புச் செலவு என்றெல்லாம் தண்டோரா போட்டுவிட்டுத்தான் ஓய்ந்தார்கள்.

லைக்கா நிறுவனத்தின் சுய பிரதாபத்தை வைத்துப் பார்க்கும்போது, படத்தின் மூன்று நாள் வசூல் எல்லாம் அவர்களுக்கு ஜுஜூபி என்பது தெளிவாகத் தெரிகிறது. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அந்தத் தொகையைக் கொடுக்க அவர்கள் மறுக்கமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். (எங்கள் மக்களுக்காக அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்றெல்லாம் மூச்சுக்கு மூச்சு பேசுகிறவர்கள், அதை நிரூபிக்கக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நழுவ விடுவார்களா என்ன!) என்றாலும், இந்த 3 நாள் வசூல் விஷயத்தை எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் நாம் வலியுறுத்த வேண்டும். மயிலே மயிலே இறகு போடு - என்றால் மயில் போட்டுவிடுமா என்ன!

3 நாள் வசூலை பாதிக்கப்பட்ட மக்களுக்காக அளிப்பது என்பது லைக்கா நிறுவனம் தொடர்பானது. அது, இனப்படுகொலை செய்தவர்களுடன் இணைந்து நின்றதற்காக அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம். அது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு, விஜயும் முருகதாஸும் மன்னிப்பு கேட்பது என்பதும்  முக்கியம்.

கத்தியைத் தயாரிப்பவர்கள் ராஜபக்சேவின் கூட்டாளிகள் என்கிற உண்மை, விஜய் - முருகதாஸுக்கு தொடக்கத்தில் தெரியாமலேயே கூட இருந்திருக்கலாம். இப்போது, அந்த உண்மை அம்பலமாகிவிட்ட நிலையில், நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழரின் ரத்தக்கறை படிந்த பணத்தைப் பெற்றதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்பதுதான் நியாயம். 'இனப்படுகொலை செய்தவர்களின் கூட்டாளிகள் பணத்தில் படமெடுத்ததற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறோம்' என்று அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான், எதிர்வரும் நாட்களில், தமிழ்த்  திரைப்பட நட்சத்திரங்கள்  ராஜபக்சேவின் வலையில் தெரிந்தோ தெரியாமலோ போய்  விழுவதைத் தடுக்க முடியும்.

'தியாகி' என்று 10 கோடி தமிழர்களில் ஒருவரேனும் இன்றுவரை  விஜயைச் சொன்னதில்லை, சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. அவர் தியாகியா துரோகியா என்றெல்லாம் இங்கே யாரும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கவில்லை. அவர் ஒரு நடிகர்..... அவ்வளவே! அந்த நடிகர் நடித்திருக்கும் படம் யாருடைய பணத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது, அவர் யாரிடம் பணம் வாங்கியிருக்கிறார் -  என்பதுதான் கேள்வி. அதற்கு பதில் சொல்லாமல், யாரோ ஒரு வசனகர்த்தா எழுதிக் கொடுத்த வசனத்தை மனப்பாடம் செய்து உளறக்கூடாது. தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் தயாரிக்கும் படத்தில் நடித்துவிட்டு, 'நான் தியாகியும் இல்லை, துரோகியும் இல்லை' என்று டயலாக் பேச எந்த செல்லுலாய்ட் பொம்மையாலாவது முடியுமா?

லைக்கா மொபைல் சுபாஷ் கரண் ஈழத்தமிழர் என்று என்னிடம் அலைபேசி வழி தெரிவித்தவர்களிடம் கேட்க ஒரு நியாயமான கேள்வி இருக்கிறது என்னிடம். அதை நான் கேட்காமல் இருந்துவிடக் கூடாது.

உலகெங்கிலும் இருக்கிற 10 கோடி தமிழர்களும் இலங்கையில்  காமன்வெல்த் மாநாடு நடத்தப்பட்டதை எதிர்த்தோம். காமன்வெல்த் என்கிற கௌரவமிக்க ஓர் அமைப்பின் தலைமைப் பொறுப்பில், ஒன்றரை லட்சம் தமிழரின் ரத்தம் குடித்த ஒரு  மனித மிருகம் உட்கார அனுமதிக்கக் கூடாது என்கிற உருக்கமான வேண்டுகோளுடன் உறுதியாகப் போராடினோம். அவ்வளவுக்குப் பிறகும், காமன்வெல்த்தின் தலைமைப் பொறுப்பில் அந்த மிருகம் அமர்ந்தது. அந்த மிருகம் அமர்ந்திருந்த நாற்காலியின் பின், பளிச்செனத் தென்பட்டது 'லைக்கா மொபைல்' இலச்சினை.  இனவெறியன்   ராஜபக்சேவுக்கு முடிசூட்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக எந்த மாநாட்டை எதிர்த்தோமோ, அந்த மாநாட்டின் 'கோல்டன் ஸ்பான்சர்' லைக்கா தான் என்பதை, சுபாஷும் மற்றவர்களும் மூடி மறைத்துவிட முடியுமா? அந்த முழுப் பூசணிக்காயை உப்புமாவுக்குள் ஒளித்துவைப்பது சாத்தியம் தானா?

கல்லம் மேக்ரே என்கிற ஆங்கிலேயரும் சுபாஷ் கரண் போலவே ஒரு படத் தயாரிப்பாளர் தான். ஆனால், விஜய் மாதிரி ஒரு நட்சத்திரத்தைப் பிடித்து கத்தியோ சுத்தியோ எடுத்து காசு பார்த்துவிட வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. ஈழத்தில் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட எம் தமிழ் உறவுகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆவணப் படங்களைத் தயாரித்தார், இயக்கினார்.  சேனல் 4ன் வாயிலாக ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொன்னார். சிங்கள மிருகங்களின் கொடூர முகத்தை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தினார். எங்கள் தங்கை இசைப்பிரியாவுக்கு என்ன நடந்தது, எங்கள் குழந்தை பாலச்சந்திரனுக்கு என்ன நடந்தது என்கிற உண்மைகளை மேக்ரே எடுத்துச் சொன்ன விதம் உலகின் மனசாட்சியை உலுக்கியது.

ராஜபக்சே நடத்திய காமன்வெல்த் மாநாட்டுக்கு கோல்டன் ஸ்பான்சராக இருந்த லைக்கா நிறுவனம், அதே மாநாட்டுக்காக கொழும்பு வந்த கல்லம் மேக்ரே இலங்கையில் எப்படி வரவேற்கப் பட்டார் என்பதை நிச்சயமாக மறந்திருக்காது. மேக்ரே பயணம் செய்த ரயிலையே பௌத்த பிக்குகள் வழிமறித்துத் திருப்பி அனுப்பும் அளவுக்கு இனவெறி தலைவிரித்தாடியது.

லைக்கா குழுவை ராணுவ விமானத்தில் ராஜமரியாதையோடு அழைத்துச் சென்ற ராஜபக்சேக்கள், கல்லம் மேக்ரேவை அடித்து விரட்டுவதிலேயே குறியாயிருந்தார்கள். லைக்கா மாதிரி இளைய தளபதியை வைத்து கமர்ஷியல் படம் எடுக்காமல், மேக்ரே ஆவணப்படம் எடுத்தார் என்பது இந்த வரவேற்பு முரணுக்குக் காரணமல்ல! லைக்கா யாருக்கு விசுவாசமாயிருக்கிறது, மேக்ரே யாருக்காக நியாயம் கேட்கிறார் - என்பதன் அடிப்படையிலேயே அந்த முரண் அமைந்தது. சுபாஷ் கரண் (ஈழ) தமிழராகவும், மேக்ரே ஆங்கிலேயராகவும் பிறந்திருக்கும் இயற்கை முரணைக் காட்டிலும் இந்த முரண் விசித்திரமானதா என்ன?

 

http://www.pathivu.com/news/34379/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.