Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கப்பல்காரன் வீடும் வக்சலாவும் ...

Featured Replies

கப்பல்காரன் வீடும் வக்சலாவும் ...
 

 

யாழ்பாணத்தில எங்களின் வீடுக்கு கொஞ்சம் தள்ளி, எங்கள் வீதியின் முடிவில், கப்பல்காரன் வீடு இருந்தது! அந்த வீட்டில் என்னோட மிக சிறிய வயசில், அரச மரக்காலையில் ஸ்டோர் கீப்பர் வேலை செய்த கனகசுந்தரமும் ,அவரின் மனைவி ஸ்டோர் கீப்பர் மாமியும், அவர்களின் ஒரே ஒரு அழகு மகள் வக்சலாவும்,ஊருக்கும் இடைஞ்சல் இல்லாமல் , ஒருவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் அதில வாழ்ந்ததால " ஸ்டோர் கீப்பர் " வீடு எண்டுதான் ஆரம்பத்தில் ஊருக்குள்ள சொல்லுவார்கள் !

 

                                               அது எப்படி பின்னாட்களில் " கப்பல்காரன் வீடு " எண்டு மாறியது எண்டு சொல்லுறதுக்கு காரணம் யாழ்பாணத்தில 80 களில், எங்கோ அரபிக் கடலிலும் ,அத்திலாந்திக் கடலிலும் ஓடிய கப்பல் யாழ்பாணத்தில் சமூக, பொருளாதார மாற்றத்தை உண்டுபண்ணியதுதான் காரணம் எண்டு உங்களுக்கு நல்லா தெரியும்! இந்தக் கதை கப்பல்காரன் ,வக்சலா என்ற இரு மனிதர்களைப் பற்றியதால், கப்பலைப் பற்றியோ, அது ஓடின கடல் பற்றியோ மேற்கொண்டு அதை நீட்டி முழக்கப் போறது இல்லை!

 

                                  கனகசுந்தரம் அமைதியான மனிதர், அவரின் மனைவி ஸ்டோர் கீப்பர் மாமியும் அதிகம் வெளிய வராத வீடு உண்டு, வீட்டு வேலை உண்டு என்று இருக்கும் பெண்மணி. வக்சலா ஓரளவு அட்வான்ஸ் லெவல் வரைக்கும் படித்து ,மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டிய தேவை இல்லாததாலும் , அவா வெளிய போய் உத்தியோகம் பார்க்க ஸ்டோர் கீப்பர் குடும்பம் விரும்பாததால, ஒரு ப்ரோக்கர் பேசிக் கொண்டு வந்த, காங்கேசன்துறை தனபாலசிங்கத்தின் கப்பல் கொம்பனியில வேலை செய்த கப்பல்காரன், எழும்பின ஆம்பிளையா இருந்ததை விட ,கப்பலில வேலை செய்தது கவர்ச்சியா இருக்க ,மறு பேச்சு இல்லாமல் காதும் காதும் வைச்ச மாதிரி பேசி முடித்து, பொன் உருக்கி, பந்தல் கால் போட்டு, கன்னிக்கால் முள்முருக்கு நட்டு,மெட்டி அணிந்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, நல்ல நேரதில கலியாணம் கட்டி வைக்க, நாலாஞ்ச சடங்கோட ஸ்டோர் கீப்பர் வீடு கப்பல்காரன் வீடு என்று மாறியது !

 

                                           எங்கள் அயல் அட்டையில் இருந்த ஒரே ஒரு, ரன்கூன் தேக்குமர தூண்கள் தாங்கி நிக்கும், மலையாளத்து ஓடு போட்ட, வீட்டுக்கு நடுவில திறந்த இடம் உள்ள, நடு வீட்டில ஆவெண்டு நீல வானம் தெரியும், வெயில் விழும் , மழை அடித்து ஊத்தும். ஒரே ஒரு நாட்சார் வீடு ஸ்டோர் கீப்பர் வீடுதான் , ஸ்டோர் கீப்பர் மாமி,அந்த திறந்த நடு இடத்தில மேலே வலை போட்டு காகம் குருவி உள்ளுக்க வராமல் தடுத்து,நல்ல வெயில் வாசியா எறிக்கும் நாட்களில் வேப்பம்ப்பூ வடாகம், மோர் மிளகாய், மிளகாய் வத்தல், நாரத்தங்காய் உறுகாய், புழுக் கொடியல் எல்லாம் காயப்போட அந்த இடம் கம கம எண்டு சாம்பாரு வாசம் அடிக்கும் ,

 

                                   அந்த திறந்த நடு இடத்தில ஒரு கண்ணன் சிலை இருந்தது, சிலைக்கு கீழே கோபியப் பெண்கள் குழந்தைக் கண்ணனின் பின் அழகை பார்த்து சொக்கி நிக்க, கண்ணன் அந்தப் கன்னிப் பெண்களுக்கு அந்த சின்ன வயசிலேயே மாய லீலை காட்டிக்கொண்டு இருக்க, அதை சுற்றி துளசி மரங்கள் வைத்து வக்சலா அதுக்கு தண்ணி ஊற்றி வளர்த்தா, கிருஷ்ன ஜெயந்திக்கு அதில பூசை வைச்சு எங்களுக்கு அவல் நிறையக் கிடைக்கும்.ஆனாலும் கப்பல்காரன் வந்தவுடன ,முதல் வேலையா அந்த வீட்டின் முன் பக்கத்தை மொடேர்ன் ஆக்கினார், ஸ்டோர் கீப்பர் மாமி அவாவின் பரம்பரை நாட்சார் வீட்டை உள்ளுக்கு மாற்ற விடாப்பிடியா விடவில்லை, என்றாலும் வெளியே முன்னுக்கு மொடேர்ன் ஆக மாற்ற, அந்த வீடு கொஞ்சம் அவமானம் தாங்கி அமரிக்கன் ஸ்டைலுக்கு மாறியது, பின்ன என்ன கப்பல்காரன் வீடு கட்டுமரம் போல இருந்து சரி வராதே, கப்பல் போலதானே இருக்க வேண்டும், நீங்களே சொல்லுங்க பார்ப்பாம் .

 

                                   கப்பல்காரன் கலியாணம் முடிந்து கொஞ்ச நாளிலேயே, கலியான மஞ்சள் குங்கும வாசம் அடங்க முதலே, கப்பலுக்குப் போயிட்டார், போயிட்டு ஆறு மாதம் கழித்து ஒருநாள் டாக்சியில் வந்து இறங்கினார், அவர் கொண்டுவந்த பெரிய பெரிய சூட்கேசை டக்சிகாரன் இழுக்க ஏலாமல் இழுத்து இறக்க ,கப்பல்காரன் பென்சன் அண்ட் கெட்சஸ் வெளிநாட்டு சிகரட் தங்க நிறப் பெட்டியில இருந்து எடுத்து ,அதன் பின் பக்கத்தை பெட்டியிலேயே தட்டி,கொஞ்சம் விரல்களுக்கு இடையில வைச்சு சுள்ளட்டி போட்டு , வாயில வைச்சு லைட்டரை டக் எண்டு அமத்தி , ஒரு தங்கநிற லைடரில அதைப் பத்தவைத்து கொண்டு இருக்க ,நாங்கள் எல்லாரும் வேடிக்கை பார்கப் போக எங்களுக்கு, இன்னொரு பெட்டியில இருந்து சொக்கிலட் எடுத்து தந்தார், வக்சலா முகம் முழுவதும் சிரிப்போட சந்தோசமா ரோட்டுக்கே வந்து அவரின் கையைப் பிடிச்சு,

                           " இதில நிண்டு சிகரட் குடிக்க வேண்டாம் , பரிசுகேடு ,ஆட்கள் விடுப்பு பாக்குதுகள்,உள்ளுக்கு வாங்கப்பா "

எண்டு இழுத்துக்கொண்டு போனா , அதுக்கு பிறகு வந்த முதல் கொஞ்ச நாள் கப்பல்காரன் வெளியவே வரவேயில்லை,

 

                                          சில கிழமையில் அவராவே வெளிய வந்தார் ,எங்களின் வீட்டுக்கு சில நாள் வருவார்,முக்கியமா அவர் எங்க வீராளி அம்மன் கோவிலுக்கு முன்னால இருந்த நயினாரின் பாருக்கு போக தொடங்கினார், அவர் ஏன் அங்கே போறார் எண்டு எல்லாருக்கும் தெரிந்தாலும் அவர் கப்பல்காரன் அதலா அதிகம் அதை யாரும் பெரிதா எடுக்கவில்லை. ஊருக்குள்ள கஷ்டப்பட்ட ஆட்கள் குடிச்சா " வெறிக்குட்டி " என்பார்கள் , கொஞ்சம் மத்திய தர ஆட்கள் குடிச்சா " குடிகாரர் " என்பார்கள்,அதுவே பணக்கார ஆட்கள் குடிச்சா அவர் " சாதுவா ட்ரிங்க்ஸ் பாவிப்பார் " என்பார்கள்,கப்பல்காரன் நையினாரிட்ட என்ன குடித்தாரோ தெரியலை,அவர் அந்த பார்ல இருந்து குடிச்சிட்டு எங்க வீட்டுக்கு வருவார், சேர்ட் மேல் பட்டன் திறந்து, நெஞ்சில தொங்கிற புலிப் பல்லு போட்ட இரட்டை வடம் சங்கிலி வெளிய தெரிய கப்பல் போல கொஞ்சம் ஆடிக்கொண்டு வருவார், பின்னக் கப்பல்காரன் கப்பல் போல ஆடாமல் வேற எப்படி ஆடுறது ,நீங்களே சொல்லுங்க பார்ப்பாம் .

 

  கடைசியா கப்பல்காரன் கப்பல் போறதுக்கு முதல் நாள் இரவு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்,அவர் கப்பலில் என்ன வேலை செய்தார் எண்டு எங்களுக்கு தெரியாது, நான்அவரிடம் சும்மா

  " இரும்பில செய்த கப்பல் என்னண்டு தண்ணியில மிதக்குது "  எண்டு கேட்டேன், அவர் கொஞ்சம் ஜோசிதார்,

   " நீரே சொல்லும் " எண்டார் ,நான் அப்ப சயன்சில படிச்சுக்கொண்டு இருந்த ஆக்கிமிடிஸ் தத்துவத்தில்

  " ஒரு பதார்த்தத்தின் கொள் அளவு அந்தப் பதார்த்ததின் நிறை அளவை விட,,,,,,"

 எண்டு சொல்ல தொடங்க , என்னோட அம்மா இடையில மறிச்ச  " இவனுக்கு விசர் தம்பி, நீர் சொல்லும் தம்பி ,கப்பலில வேலை செய்தா சிங்கப்பூர் செயின் கஸ்டமில டக்ஸ் கட்டாமல் கொண்டு வரலாம் எண்டு கேள்விப்பட்டேன் மெய்தானே "  எண்டு கேட்க,கப்பல்காரன் சொண்டை சுளிச்சு சுளிச்சு சிரிச்சு சிரிச்சு

   " ஓம் அன்டி ,கொஞ்சம் உண்மைதான் ,உங்களுக்கு அடுத்தமுறை ஒண்டு கொண்டுவாரன் "

    எண்டு போட்டு ,எனக்கு

     " நீர் சொல்லுறது எனக்கு விளங்கேல்ல ஆனாலும் கப்பல் தண்ணியில மிதக்கிறதாலதான்,நாங்கள் உசிரோட போட்டு உசிரோட வாறம் "

      எண்டு சொல்லி சொண்டை சுளிச்சு சிரிச்சுப்போட்டு ,

     " அன்டி இந்த முறை வேலைக்குப் போற கப்பல் ஹம்பேர்க் போகுது "

    எண்டு சொல்லி கொஞ்சம் சந்தேகமா சிரிச்சார்,

    அம்மா " அதெங்க இருக்கு " எண்டு கேட்டா

                      

    அவர் " அது அன்டி, யுரோபாவில ஜெர்மனியில இருக்காம் " எண்டுசொல்ல

   அம்மா " மெய்தானே,நீரும் எல்லா இடமும் பார்த்து எங்களுக்கும் கதைகளை பின்ன வந்து சொல்லுமன் " எண்டு சொல்ல,கப்பல்காரன் அப்பவும் கொஞ்சம் சந்தோசமா,   ..அதே நேரம் சந்தேகமா சிரிச்சார்.

 

                           அவர் போன சில வாரத்தில் இருந்து வக்சலா வீராளி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை சுமங்கலி தாலி பூசை செய்தா,செய்து முடிய அதில கொளுத்திய குத்துவிளக்கை கோவிலில் இருந்து அணையாமல் வீட்டுக்கு கொண்டுவருவா, ஸ்டோர் கீப்பர் மாமி சுளகால அந்த விளக்கு காற்று அடிச்சு அணையாமல் இருக்க பிடிச்சுக்கொண்டு வர ,வக்சலா கப்பல்காரன் கொண்டுவந்த நகை எல்லாம் ஆள்ளிப் போட்டு ,அவா குத்துவிளக்கை கொண்டு வாறது, ஒரு குத்துவிளக்கு இன்னொரு குத்துவிளக்கை தூக்கிக்கொண்டு வாற மாதிரி இருந்தது, கொஞ்சநாள் எல்லாம் வழமைபோல இருக்க, கிட்டதட்ட ஆரம்பத்தில் அவர் எப்போதும் போல டக்ஸியில் வந்து இறங்குவார் எண்டு வக்சலா வாசலைப் பார்த்து காத்து இருக்க, ஒரு கட்டத்தில் தாபால்காரனை தேடியே போய் " எங்களுக்கு கடிதம் ஏதும் இருக்கா "

 

 எண்டு கேட்டு கொஞ்சம் சந்தேகம் வர தொடங்க ,எப்படியோ அவாவுக்கு மனதளவில் ஒரு ஏக்கம் இருந்த மாதிரி இருக்க, துளசி மரங்களுக்கு தண்ணி ஊத்திரத்தை நிப்பாட்ட, அவை வாடதொடங்க, ஒரு நாளும் கோவில் குளம் பக்கம் போகாத ஸ்டோர் கீப்பர் திடீர் எண்டு திருநீறு பூசிக்கொண்டு கோயிலுக்கு போக வெளிக்கிட, ஸ்டோர் கீப்பர் மாமி அடிக்கடி தலை சுத்துது எண்டு பிரசர் செக் பன்ண தொடங்க, ஏறக்குறைய அந்த வீடில இடி விழுந்து, பழையபடி கப்பல்காரன் வீடு ஸ்டோர் கீபர் வீடுபோல மாற, கப்பல்காரன் வரவே இல்லை,

 

 எங்களின் பெரிய மாமாவின் மகனும் கப்பலில் வேலை செய்தார் ,அவரும் இந்தக் கப்பல்காரனும் பல வருடம் முன் எண்ணைக் கப்பலில் வேலை செய்த போது தெரியும், அவர் ஒரு முறை வந்த போது ,

  " சின்ன மாமி,விசியம் தெரியுமே "

 எண்டு அவர் கேள்விப்பட்ட ,, கப்பல் காரன் போன கப்பல் ஜெர்மனி போனது அங்கே அவர் ஹம்பேர்க் ஹபர்ல கப்பல் நங்கூரம் போட இறங்கி , இரவு நடன களியாட்ட விடுதிக்குப் போனது ,அங்கே ஒரு ஜெர்மன் வெள்ளை குதிரையைக் கண்டது,அவள் அவரை இழுத்துக்கொண்டு போய் ஏழு கடல் தாண்டி சொர்க்கம் காட்டியது, அவர் அங்கேயே அகதியா பதிந்தது , எல்லாம்

 " சின்ன மாமி ஒருத்தரும் சொல்லிப் போடாதயுங்கோ உங்களுக்கு மட்டும் சொல்லுறன் "

 எண்டு என்னோட அம்மாவிடம் சொல்ல,அம்மா அந்த தகவல் ரகசியமா வைச்சால் தொண்டைக் குழி க்குள்லால சோறு தண்ணி இறங்காத மாதிரி தவிச்சு, கடைசியில் ஒருநாள் அதை கீரை விக்கக் கொண்டு வாற ப்ரேகிங் நியூஸ் குஞ்சரதுக்கு சொல்ல,,குஞ்சரம் அதை வக்சலாவின் சொந்தகாரருக்கு

  " அம்மளாச்சியான ஒருத்தரும் சொல்லிப் போடாதயுங்கோ உங்களுக்கு மட்டும் சொல்லுறன் "

   எண்டு சொல்ல ,எப்படியோ கதை கசிந்து பெட்டிசம் பாலசிங்கத்துக்கு போக, திரைக் கதை வசனம் தொடங்கியது .....

 

                              அதுக்குப்பிறகு பல நாட்கள் நாட்சார் நடுவில இருந்த கண்ணன் சிலையை பார்த்தபடி, ஒருவருடனும் பேசாமல் ,கப்பல் கவுண்டதுபோல வக்சலா இருப்பதைப் பார்த்து இருக்கிறேன் ,எனக்கு அந்தக் கண்ணன் ஜெர்மன் பெண்களுடன் குத்து டான்ஸ் ஆடுற மாதிரி இருந்தது அந்த சிலையைப் பார்க்க...அதுக்கு பிறகு சண்டை நாட்டில அமோகமாக தொடங்க வீட்டுப் பிரைச்சனைகளை மேவி நாட்டுப் பிரச்சினை வர ,,நான் வேற நிழல் விசியங்களை ஈடுபடத் தொடங்க ,,ஒரு கட்டத்தில் வக்சலாவுக்கு என்ன நடந்தது எண்டு எனக்கு அதிகம் தெரியாது ,தொண்ணுற்றி ஐந்து சூரியகதிர் இராணுவ நடவடிக்கையில் இடம்பெயர்ந்த போது , நாங்களும் இடம்பெயர்ந்து ,அதன் பின் நானும் புலம் பெயர்ந்து வந்திட்டேன் ..

 

                              அந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட இருபது வருடங்களின் பின் நான் ஜெர்மனி சுற்றிப் பார்த்த போது, எங்களின் அபிமான கப்பல்காரன் கடைசியா இறங்கிய ஹம்பேர் நகரமும் போனேன், ஆனாலும் கப்பல் காரன் பெயர்த் தெரியாமல் எப்படி தேடுறது எண்டு குழப்பமா இருக்க, நிறைய தமிழ் ஆட்கள் கார்ல வந்து இறங்கி சூப்பர் மார்கெட் போறதும்,வாறதுமா இருக்க, ஜோசித்துப் போட்டு யாரிடமும் ஒண்டும் கேட்கவில்லை ,பின்னேரம் ஹம்பேர்க் ஹபருக்கு அருகில் ஒரு இரவு விடுதியில் தண்ணி அடிப்பம் எண்டு போக,அதில ஒரு வயதான தமிழர் ஜெர்மன் வெள்ளைகளுடன் இருந்து ஜெர்மன் பாசையில் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தார் ,அவர் சிரிக்கிறதைப் பார்க்க கப்பல் காரன் சொண்டை சுளிச்சு சுளிச்சு சிரிக்கிற மாதிரி இருக்க,அவருக்கு கிட்டப் போய்

                     " நீங்கள் தமிழா எண்டு " கேட்டேன்,அவர் " ஓம் " எண்டார்,

                     " நீர் எங்க இங்க ஹம்பெர்கில் இருகுர்ரீரோ, உம்மை நான் ஒரு நாளும் கண்டதில்லையே" என்றார்,

                  நான் வசிக்கும் நாட்டை சொன்னேன்,

                  அவர் " அப்ப இதில இருமன், இவங்கள் டொச்சில தான் கதைபான்கள், இவன்கள் என்னோட நண்பர்கள் ,உமக்கு டொச் தெரியுமோ " என்றார்

                நான் கொஞ்சம் தெரியும் எண்டேன்.

                 கொஞ்சம் ஜோசித்துப் போட்டு ,

                 " உங்களுக்கு வக்சலாவை தெரியுமா " எண்டு கேட்டேன்,

                  அவர் திடுக்கிட்டார், என்னை காலில் இருந்து தலை வரை பார்த்தார், நெத்தியில பெரு விரலை வைச்சு தேச்சார் , நாடிய உள்ளங்கையால தடவ,அவரோட இருந்த ஜெர்மன் காரர் என்னை ஏதோ கலகக்காரன் போல பார்த்து, அவரிடம் என்னவோ கேட்க , அவர் அவர்களுக்கு என்னவோ சொல்லிப்போட்டு,  "வெளியால வாரும் ,உம்மோட கதைக்க வேணும் , " என்றார் ,  ஒரு ஜெர்மன் பெண் அவரை சந்தேகமா என்னவோ கேட்க, அவர் கையால ஒண்டும் இல்லை என்பது போல சைகை செய்து,

                    " நீர் வெளியால வாரும் ,உம்மோட கதைக்க வேணும்,சிகரட் பத்துவீரா "

                             எண்டு ஒரு சிகரட் எனக்கு தர நான் வெளியாள வந்த வுடனே சிகரட்டை வாயில வைச்சு பத்த வெளிக்கிட அவர்

                        " இங்க எல்லா இடமும் பத்த முடியாது போலிசே கண்டால் அமத்துவான், "

                     எண்டு ஒரு பச்சை சதுரம் போட்ட இடத்துக்கு கொண்டு போனார் ,,போய் அதில நிண்டுகொண்டு சிகரெட்டை, பெட்டியின் பின்னால சரிச்சு தட்டி, கொஞ்சம் விரல்களுக்கு இடையில வைச்சு சுள்ளட்டி போட்டு , வாயில வைச்சு லைட்டரை டக் எண்டு அமத்தி ,உள்ளுக்க இழுத்து போட்டு சொல்ல தொடங்கினார்,,,,,,

               நான் கேட்டேன்,,கிடத்தட்ட ஒரு அரைமணித்தியாலம் சொன்னார், சொல்லிப்போட்டு

              " அவ்விடர் சேன் " (போட்டு வாறன் )

                     எண்டு ஜெர்மன்காரர் போல டொச்சில சொல்லிப்போட்டு போயிட்டார்,,நான் அவர் தந்த சிகரட்டை பத்தவில்லை,காலுக்கு போட்டு மிதித்து நசி நசி எண்டு நசித்தேன்,பிறகு அதுக்கு மேல காறித் துப்பினேன், அவர் அந்த பப்புக்கு வெளிய நிண்டு பார்த்துக்கொண்டு இருந்திட்டு,ஜெர்மன்காரர் போல, தோளைக் குலுக்கி ,கை இரண்டையும்

                                 .." நடந்தது நடந்து தான் " ... என்பதுபோல காற்றுக்கு சொல்லிப் போட்டு உள்ளுக்க போட்டார்..

 

நாவுக் அரசன்

ஒஸ்லோ.,முகநூல்

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.