Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் குலத்தின் இணையற்ற தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை உலகெங்கும் கொண்டாடுவோம்! வைகோ அழைப்பு

Featured Replies

தமிழ்க் குலத்தின் இணையற்ற தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை உலகெங்கும் கொண்டாடுவோம்! வைகோ அழைப்பு

vaiko%20news.jpgதமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் தமிழனின் முகவரியை தரணி அறியச் செய்த தமிழ்த்தாயின் தவப்புதல்வன் நான் நெஞ்சால் போற்றும் பிரபாகரன் அவர்களின் 60-ஆவது பிறந்த நாளை 2014 நவம்பர் 26ஆம் தினத்தன்று நெஞ்சமெலாம் பொங்கிப் பிரவகிக்கும் உவகை உணர்வோடு, உன்னதத் திருநாளகக் கொண்டாடுவோம்.

வீரமும் மானமும் தமிழர் குருதி ஓட்டத்தோடு கலந்த மரபு வழி அடையாளமாகும். உலக வரைபடத்தில் இரத்தக்கண்ணீர்த் துளியாகக் காட்சி அளிக்கும் இலங்கைத் தீவில் ஈழத் தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்கு மாகாணத்தில் வல்வெட்டித் துறையில் கார்மேகங்கள் மழைபொழியும் கார்த்திகைத் திங்களில் 1954 நவம்பர் 26 ஆம் தேதி அன்று முன்னிரவுப் பொழுதில் சரியாக 7 மணி 18 ஆவது நிமிடத்தில் வேலுப்பிள்ளை-பார்வதியம்மாள் எனும் இலட்சியத் தம்பதிக்கு பிறந்த வீரத் திருமகன்தான் பிரபாகரன் ஆவார்.

ஈழத் தமிழ் இனம் சிங்களக் கொடியோரால் தாக்கப்படுவதும், வதைக்கப்படுவதும் கண்டு கண்டு இதயம் கொதித்து, சிங்களவனின் ஆதிக்கக் கொட்டத்தை ஒடுக்க தமிழ் இனம் தலைநிமிர்ந்து வாழ தனது 15 ஆவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, ஆயுதம் ஏந்தினார். வீர இளைஞர்களை ஒருங்கிணைத்தார். 70களின் தொடக்கத்தில் புதிய புலிகள் எனும் ஈழ விடுதலை அமைப்பைத் தொடங்கினார்.

1976 மே 5 ஆம் தேதி அன்று, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்றுவித்தார். மண்ணின் மானம் காக்க மரணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கும் நஞ்சுக் குப்பிகளை கழுத்தில் கட்டிக் கொண்டனர் விடுதலைப் புலிகள். உலகத்தில் இதுவரை தோன்றிய எந்த விடுதலை இயக்கத்திலும் காணமுடியாத ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், அர்ப்பணிப்புத் தியாக உணர்வையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்படுத்தினார்.

எத்தனையோ கொடிய துரோகங்களையும், பகைவரின் நயவஞ்சகத் தாக்குதல்களையும் எதிர்கொண்டு விடுதலைப்புலிகள் கட்டமைப்பை எஃகு அரணாக மாற்றினார்.

கிரேக்கத்தில், ஸ்பார்ட்டாவில் தெர்மாபிளோ கணவாய் போர்க்களத்தில் மன்னர் லியோனிடாஸ்  தலைமையில் 300 ஸ்பார்ட்டா வீரர்கள் நிலைநாட்டிய வீரத்தையும், தியாகத்தையும் விடுதலைப் புலிகள் அமைப்பு முழுவதிலும் ஏற்படுத்தினார்.

தங்கள் படையைவிட நூறு மடங்கு ஆள் பலமும், ஆயுத பலமும் கொண்ட சிங்கள இராணுவத்தையும், அமைதிப் படை என்னும் போர்வையில் போர் நடத்திய இந்திய இராணுவத்தையும் எதிர்கொண்டு திணறடித்து மெய்சிலிர்க்க வைக்கும் வீர சாகசங்களை யுத்த களங்களில் நடத்திக் காட்டி பிரமிக்கச் செய்தார்.

உலகத்தில் நடைபெற்ற போர்க்களங்களின் வரலாற்றில் இலங்கையில் யானையிறவு களத்தில் சிங்களவர்களின் 30 ஆயிரம் சிப்பாய்களைக் கொண்ட இராணுவத்தை விடுதலைப்புலிகள் அதிரடி முற்றுகை நடத்தி தோற்கடித்த களமுனை அதிசயம் அனைத்து நாடுகளையும் திகைக்க வைத்தது.

ஓயாத அலைகளில், அக்னி அலைகளில் பிரபாகரனின் படை தாக்குதலால் சிங்களப் படை பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடியது. கொரில்லா படையணிகளை வார்ப்பித்த பிரபாகரன், நேரடி யுத்தத்திலும் சிங்களப் படைகளை பல களங்களில் வீழ்த்தி வெற்றி கண்டார்.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அரசு நிர்வாகத்தை அமைத்தார். கல்வித்துறை, நீதித்துறை, காவல்துறை, வேளாண்மைத்துறை, அறிவியல் ஆராய்ச்சித் துறை, வங்கிகளை இயக்கும் நிதித்துறை, பிணி தீர்க்கும் மருத்துவமனைகளை இயக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ் ஆராய்ச்சித்துறை, கணினித்துறை என பல கட்டமைப்புகளை உருவாக்கினார்.

பிரபாகரன் அரசாங்கத்தின் போது தமிழ் ஈழத்தில் குற்றங்கள் இல்லை. மதுக் கொடுமை இல்லை. பாலியல் வன்முறை இல்லை. விபச்சாரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அறம் தழைத்தது; மறம் ஓங்கியது. தமிழர்களின் அறநூல்கள் காட்டிய நாகரிகமும், பண்பாடும் செழித்தது. பலமான தரைப்படை, நவீன கடற்படை, விண்ணில் பாய்ந்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் விமானப் படை என முப்படைகளையும் அமைத்தார்.

தனிமனித ஒழுக்கத்தின் சிகரமாகத் திகழ்ந்து தன்னலமற்ற எளிய வாழ்வை அவரும், அவரது பாசத் துணைவியார் மதிவதனியும், மாணிக்கக் கட்டிகளான அவர்களது பிள்ளைகளும் பொது வாழ்வுக்கு இலக்கணமாக வாழ்ந்தனர்.

போர் முனையில் களம் கண்டு அஞ்சாத அவரது வீர மகன் சார்லÞ அந்தோணி மரண பயங்கரத்துக்கு மத்தியில் போர் நடத்தி உயிரைத் தந்தான்.

இந்திய அரசும், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான், இÞரேல் அரசுகளும் சிங்களவனுக்கு வழங்கிய ஆயுதங்களும், இந்தியத் தளபதிகள், மிக நவீன போர்க் கருவிகளை, மின்னணுச் சாதனங்களைச் சிங்களப் படைகளுக்குப் பக்கபலமாக நிறுத்தி யுத்தத்தை நடத்தியதாலும், உலகம் தடை செய்த குண்டுகளைப் பயன்படுத்தியதாலும் விடுதலைப்புலிகளுக்கு உணவும், மருந்தும், ஆயுதங்களும் எந்த நாட்டிலிருந்தும் கிடைக்கப் பெறாததாலும் யுத்தத்தில் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொடியவன் ராஜபக்சேயின் சிங்கள இராணுவம் படுகொலை செய்தது.

நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை கருப்பின மக்கள் கொண்டாடுவது போல், லெனின் பிறந்த நாளை பொதுவுடமைவாதிகள் கொண்டாடுவதுபோல், கோசிமின் பிறந்தநாளை வியட்நாமியர்கள் கொண்டாடுவதுபோல், ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்தநாளை அமெரிக்கர்கள் கொண்டாடுவதுபோல், மாவோவின் பிறந்தநாளை சீனர்கள் கொண்டாடுவதுபோல், நேதாஜியின் பிறந்தநாளை விடுதலை வேட்கையுற்றோர் கொண்டாடுவதுபோல், தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையும் நாம் கொண்டாடுவதுபோல், டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை ஒடுக்கப்பட்டோர் கொண்டாடுவதுபோல், தமிழர்களின் வரலாற்றில் பேரொளி வெளிச்சம் தரும் பிரபாகரன் பிறந்தநாளையும் தாய்த் தமிழகத்திலும், உலகமெங்கிலும் நாம் கொண்டாடுவோம்.

அகிலத்தின் பல நாடுகளில் வாழும் தமிழர்களே, புலம்பெயர்வாழ் ஈழ உறவுகளே!

வரும் நவம்பர் 26 ஆம் தேதி அன்று முன்னிரவு நேரம் 7 மணி 18 நிமிடம் அளவில், தமிழகத்தில் கொண்டாடுவோம்.

அந்தந்த நாடுகளிலும், நேர வித்தியாசம் உள்ள நாடுகளிலும் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அவர்களின் நேரப்படி முன்னிரவு 7 மணி 18 நிமிடத்துக்கு விழா எடுப்போம். வான வெளியில் வாண வேடிக்கைகள் நடக்கட்டும்; பட்டாசு வெடிகள் முழங்கட்டும்; சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படட்டும்; ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்கின்றவர்கள் பூசை நடத்தட்டும்.

பிரபாகரன் என்ற பெயரை உச்சரித்தாலே மானத் தமிழனின் நாடி நரம்புகளில் மின்சாரம் பாயுமல்லவா? தலைவர் பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் விழாவில் தமிழர்கள் எழுப்பும் வாழ்த்து முழக்கம் விண்ணை முட்டட்டும். சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்குக் கட்டியம் கூறும் விதத்தில் தாய்த் தமிழகத்திலும், உலம் எங்கிலும் தமிழர்கள் தமிழ்க்குலத் தலைவனின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் என இருகரம் கூப்பி அன்புடன் வேண்டுகிறேன்.

‘தாயகம்’    வைகோ

சென்னை - 8    பொதுச் செயலாளர்,

19.11.2014    மறுமலர்ச்சி தி.மு.க

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.