Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலும் தமிழ் மக்களின் அணுகுமுறையும்

Featured Replies

நாட்டின் அதியுயர் நிறைவேற்றதிகாரமுள்ள பதவியான ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடைந்து விடும். நாட்டு மக்கள் அனைவரது கவனமும் குறித்த தேர்தலில் ஈர்க்கப்பட்டுள்ளமை தெரிகின்றது.

 

பொதுவாக சகல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளும் இதில் கூடிய கவனம் செலுத்தியுள்ளன. நிறைவேற்று அதிகாரமுறைமையை நீக்குவோம், அரசியல் அமைப்பை மாற்றுவோம் , தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவோம் என்றெல்லாம் எதிரணியினர் வாக்குறுதிகளை வழங்குகின்றனர். ஆளும் தரப்பு இன்று நாட்டில் நிலவும் நிலையைத் தொடர்ந்து பேண மக்கள் வாக்கை எதிர்பார்க்கின்றது.

 

இவ்வாறு தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில் நாட்டில்  கூடியஅளவு தமிழர் தரப்பைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர் கூட்டமைப்பு இதுவரை நேரடியாக எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. தமிழர் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்று பல தரப்பினர் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இது  தமிழர் தரப்பு ஆதரவைப் பெறுவதற்காக அல்ல. தேர்தலின் போது வழமை போன்று இனவாதத்தை, தமிழர் விரோத  , குரோத எண்ணத்தை பெரும்பான்மை இனத்தவர் மத்தியில் பரப்பி அதன் மூலம் அவர்களின் வாக்குகளை  வாரிச் சுருட்டிக் கொள்வதற்காகவேயாகும்.

 

கடந்த காலவரலாறு இவற்றையே தெளிவுறுத்தியுள்ளது.  ஒரு தரப்பு தமிழ்க் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தத்தை  மறுதரப்பு செய்துள்ளதாக அவலக்குரல் எழுப்புகின்றது. அதன் மூலம் நாட்டைப் பிரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்றும், நாட்டைப் பிரிக்கும் சதிமேற் கொள்ளப்படுகின்றது என்றும்  வாயிலும், வயிற்றிலும்  அடித்து ஒப்பாரி வைக்கப்படுகின்றது. மறு தரப்போ தமிழர் கூட்டமைப்புடன் எந்த இரகசிய  ஒப்பந்தங்களும் செய்யப்படவில்லை,எங்கள் கூற்றை நம்புங்கள் என்று பெரும்பான்மை மக்களிடம் மன்றாடுகின்றது.

 

  இவற்றை நோக்கும் போது இரு தரப்பும் தமிழர்கள் இந் நாட்டின் குடி மக்கள் , தமிழர்களும் இந்நாட்டில் சமத்துவத்துடனும் உரிமைகளுடனும் நிம்மதியாக வாழும் உரிமை கொண்டவர்கள் என்பதை ஏற்கக் காட்டும் தயக்கம் வெளிப்படுகின்றது. தமிழர்கள் அந்நியர்களாக, தேவையற்றவர்களாக , உரிமைகளை அனுபவிக்கும் உரித்தற்றவர்களாக நம்பும், உறுதிப்படுத்தும் தரப்புக்கே பெரும்பான்மை மக்களின் ஆதரவு கிட்டும் என்ற நம்பிக்கை நமது நாட்டின் பேரினவாத அரசியல் அரங்காடிகள் மத்தியிலே ஆழப்பதிந்துள்ளமை பகிரங்கமாகின்றது.தமிழர் விரோதப் போக்கு வெற்றிக்கு வழிவகுக்கத் தேவையான ஒன்றென்பதை இந் நாட்டின் கடந்த கால தேர்தல் வரலாறுகளும் துல்லியமாகப் பதிவேற்றியுள்ளன.

 

 டீ.எஸ். சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமைகளைப் பறித்து சிங்கள மக்கள் மத்தியிலே செல்வாக்குப் பெற முனைந்தது. தமிழ் மொழியின் உரிமையைப் பறித்து தமிழ் மக்களை இந் நாட்டில் அடிப்படை உரிமையான மொழியுரிமை அற்றவர்களாக, நடைப்பிணங்களாக ஆக்குவோம் என்று தேர்தல் களமிறங்கிய சுதந்திரக் கட்சியையும் அதன் தலைவர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவையும் மறக்க முடியாது.  

 

அதேபோல் பண்டாரநாயக்கவுக்கு தாமும்  சளைத்தவர்களல்ல என்று  மார்தட்டி சிங்களம் மட்டும் திட்டத்தை களனியில் நடைபெற்ற கட்சி மகாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய ஐக்கிய தேசியக் கட்சியும் தீர்மானம் கொண்டு வந்த ஜே.ஆர். ஜயவர்தனவும் நினைவு கூரத்தக்கவர்கள். அதேபோன்று வடக்கு , கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கான வழிமுறை அடங்கிய பண்டா  செல்வா ஒப்பந்தம் கருணையுள்ளம்  கொண்டதாக வர்ணிக்கப்படும் புத்த தேரர்களதும் ஜே.ஆர். போன்றவர்களதும் தீவிர எதிர்ப்பாலும் கிழித்தெறியப்பட்டதும் தெளிவான வரலாறு.

 

 பின்னாளில் மனித குலம் வெட்கப்பட வேண்டிய இந்திய வம்சவாளித் தமிழர்களில் கணிசமான பகுதியினரை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் இனவாத, மிலேச்சத்தனமான ஒப்பந்தம் ஸ்ரீமாவோ அம்மையார் இந்தியப் பிரதமர்  லால் பகதூர் சாஸ்திரியுடன் மேற்கொண்டமையும் ஒன்றாகும். பெண்ணைக் கண்டால் பேயும் இரங்கும் என்பது போல பெண் பிரதமரைக் கண்டு இந்தியாவின் குள்ளப் பிரதமரும் மனந்தடுமாறி மனித குல அவமான ஒப்பந்ததில் கையொப்பமிட்டு விட்டார் என்றால் அதில் தவறு காணமுடியாது.  

 

எதிர்காலத்தை , நடைபெறப் போவதைத் தீர்க்கதரிசனமாக உணர்ந்து சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்த போது ஒரு மொழி என்றால் இரு நாடுகள், இரு மொழிகள் என்றால் ஒரு நாடு என்று பாராளுமன்றத்தில் முழங்கிய கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா பின்னாளில் சிங்கள மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற முற்பட்டு  1972  ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் தமிழ் மொழிக்கு உரிமை வழங்கவில்லை.

 

தான் கண்ட தவறைத் திருத்தவில்லை. வாக்குகளில் கவனம் செலுத்தினார்களேயன்றி நாட்டின் நிம்மதியைப் புறந்தள்ளினர்.  1965 இல் தமிழரசுக் கட்சி , தமிழ்க் காங்கிரஸ்  மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தமிழர் தரப்பு அரசியல் அரங்காடி அமைப்புக்களுடன் ஆட்சி பீடமேறிய டட்லி சேனாநாயக்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் காலத்தில் சிங்கள மொழியில் தேர்ச்சியடையாத பல அரச அலுவலர்கள் எதுவித இழப்புமின்றி சேவையிலிருந்து வெளியேற்றப்பட்டதும், அதே ஆட்சியாளர் காலத்தில்  1966 ஜனவரி 8 ஆம் திகதி  தமிழ்  மொழி மசோதா கொண்டு வரப்பட்ட போது சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியுட்பட்ட அணி இனவாதம் கக்கி ஊர்வலம் நடத்திய போது ஏற்பட்ட தாக்கத்தால் காவியுடை தரித்த ஒருவர் மரணமடைந்தமையும் அதற்கு நினைவுத் தூபி  அமைத்தமையும் வரலாறு.

 

நாட்டைக்காக்க,  இறைமையைக் காக்க உ ள்ள ஒரே வழி தமிழர் எதிர்ப்பைக் கட்டிக்காப்பது. தமிழரது உரிமைகளை மறுப்பது, தடுப்பது , பறிப்பது என்பதுவே எழுதப்படாத  ஆனால் நிலைபெற்ற சித்தாந்தமாக உள்ளது எனலாம். குறித்த காவியுடை தாரியின் நினைவுத் தூபி இன்றும் கொள்ளுப்பிட்டியில்  காலி வீதியின் மருங்கிலிருந்து இந் நாட்டின் தமிழர் விரோதப் போக்கின் சின்னமாக விளங்குகின்றது.   1978 இல் உருவான, இன்று நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பில் கூட தமிழ் மொழிக்கு ஆரம்பத்தில் உரிய இடம் வழங்காத நிலையில் இந்தியாவின் தலையீட்டால் உருவான ஒப்பந்தத்தின் மூலம் அரசியல் அமைப்பில் தமிழ் மொழிக்கு உரிமை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

 

13  மற்றும்  16 ஆம் திருத்தங்கள் மூலம் அது மேற்கொள்ளப்பட்டது.  ஆனால், அவை நடைமுறைப்படுத்தப்படுவதாயில்லை.   அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டுமென்று கூறுவோர்   குறித்த   இரு திருத்தங்களை அகற்ற வேண்டுமென்ற நோக்கம் கொண்டவர்களாயிருப்பதும் புரியாமல்  இல்லை.  13 ஆம் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்தியத் தலையீட்டால் உருவாக்கப்பட்ட மாகாண சபை மூலம் தமிழர்கள் அரசியல் பலம் பெற்றுவிடுவார்கள். அதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்ற கீழ்த்தரச் சிந்தனை கொண்டவர்கள் இரு தரப்பிலும் உள்ளனர்.   யுத்த வெற்றி பற்றி பேசப்படுகின்றது.  

 

தமிழர் தரப்பில் ஆயுதமெடுத்தமை வன்முறையாக , பயங்கரவாதமாக நோக்கப்படுகின்றது. பேச்சுவார்த்தை, இணக்கப்பாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டியதற்கு ஆயுதம் அவசியமற்றது. தமிழர்கள்  கல்லொன்றை எடுத்து மற்றவர்கள் மீது எறியச் சிந்திக்காத காலத்தில் அதாவது  1960 களின் பிற்பகுதி மற்றும்  1970 களின் முற்பகுதியில் பெரும்பான்மை அரசியல் அரங்காடிகளும் சிங்களப் பத்திரிகைகளும் தமிழர்கள் நாட்டைப் பிரிக்கப் பார்க்கின்றார்கள், காடுகளில் யுத்தப் பயிற்சி மேற்கொள்கின்றார்கள் என அவலக்குரல் எழுப்பி சிங்கள மக்களை அச்சமூட்டினர்.

 

திராவிட முன்னேற்றக் கழகம் இந் நாட்டில் ஊடுருவப் போகின்றது என்று சிங்கள மக்களுக்கு கிலியேற்படுத்தினர். அந்தக் கிலி பின்னாளில் புலியானது.    1971 ஆம் ஆண்டு நாலாம் மாதம், ஐந்தாம் திகதி நடுநிசியில் நாட்டில் நிகழ்ந்த நிகழ்வுகள் உலகுக்கு யார் ஆயுதப் பயிற்சி பெற்றனர். யார் ஆட்சியாளருக்கு எதிராக ஆயுதமேந்தினர் என்பதை வெளிப்படுத்தின.

 

நாய்க்கு எங்கே அ டிவிழுந்தாலும் காலை காலைத் தூக்கும் என்பர். அதுபோல நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் யாவற்றுக்கும் தமிழரைக் காட்டுவது வழமையாகிவிட்டது.  1959  இல் அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யு. ஆர்.டீ. பண்டாரநாயக்க புத்தமத பிக்குகளால் ( சோமாராம தேரர் மற்றும் புத்தரகித்த தேரர்)  சுடப்பட்ட  போது  தமிழர்கள் பிரதமரைச் சுட்டுவிட்டார்கள் என்று வதந்தி பரப்பப்பட்டு தமிழர் அச்சுறுத்தப்பட்டமையை அனுபவத்தில் கண்டவர்களில் நானும் ஒருவன்.

 

  தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமிழர்களின் மொழியுரிமை, கல்வியுரிமை , தொழில் உரிமை, நிம்மதியான வாழ்வுரிமைகளுக்கு  இடையூறு செய்வதைச் சிங்கள மக்கள் விரும்புகிறார்கள், ஏற்கின்றார்கள் என்று நம்பி அவற்றைத் தமது கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ளன போல் தெரிகின்றது. சிங்கள மக்கள் மத்தியிலே இனவாத நஞ்சு ஊட்டப்படுகின்றது. அதன் பலன் தமிழர் தரப்பும் அதையே செய்கின்றது. இரு தரப்புக்குமிடையே இன்னுமொரு தரப்பு சுயலாப நோக்கில் பிளவை வளர்க்கத் தன்னாலானதைத் தப்பாமல் செய்து வருகின்றன.

 

ஆடுகள் இரண்டு முட்டி மோதும்போது கொட்டும் குருதியை ருசிபார்க்கும் நரிபோன்ற கூட்டமும் இந்நாட்டில் உள்ளது.   எது எவ்வாறிருப்பினும் எந்த வழிலும் இலங்கையின் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ தமிழர் ஒருவர் வரமுடியாது என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொண்ட தமிழர் தரப்பில் சில அரசியலரங்காடிகள் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் சிங்கள  அரங்காடிகளுடன் ஒப்பந்தம் செய்யலாம். அது அமைச்சர், பிரதி அமைச்சர் போன்ற சில சலுகைகளுக்காகவே அமையும்.

 

முஸ்லிம் தரப்பு இதை நிரந்தர  வியாபாரமாகவே செய்து வருகின்றது. பொது மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒப்பந்தங்களாயிவை  அமைவதில்லை. ஆட்சியில் பங்குபோடும் ஒப்பந்தங்களே அவை.   இந்நிலையில் தமிழர் தரப்பு அதாவது தமிழர் கூட்டமைப்பு ஆட்சியில் பங்குகேட்கப் போவதில்லை.

 

அரசியல் அமைப்பில் தற்போது கூறப்பட்டுள்ள தமிழருக்குரிய மொழியுரிமை உட்பட சகல உரிமைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். வட மாகாண சபைக்குரிய அதிகாரங்கள், நிதி என்பன வழங்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு பேணப்பட வேண்டும். தமிழர் விரோதச் செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும். தமிழர்களும் இந் நாட்டின் சகல உரிமைகளும் கொண்ட குடி மக்கள் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பவையே தமிழர் தரப்பின் தமிழர் கூட்டமைப்பின் நோக்கம் என்பது வெளிப்படையானது.  

 

இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று சுட்டிக்காட்டி வழிநடத்த வேண்டிய அரசியல் அறிவற்றவர்களல்ல தமிழர்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது மனச்சாட்சியின் படி சிந்தித்து வாக்களிப்பர். கடந்த காலங்களில் தமிழ் அரசியலரங்காடிகள் விட்ட தவறும் அதன் தாக்கமும் புரிந்தவர்கள் தமிழர்கள்.  இன்றைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சுயமாகச் சிந்தித்து வாக்களிக்க வழிவிட்டு ஒதுங்கி நிற்பதே தமிழர் கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டிய கடமையாகும்.

 

தமிழரை, தமிழர்  கூட்டமைப்பைக் காட்டி வாக்குகளை அள்ளிக்கொள்ள அலைந்து திரியும் இன வெறிப் பயங்கரவாத அரசியலரங்காடிகளின் முகத்தில் கரிபூச ஏற்ற சந்தர்ப்பம் இது.

 

அண்மையில் வட மாகாணசபையில் கடந்த கால நிகழ்வு தொடர்பாக முன்மொழியப்பட்டு பின் தள்ளப்பட்ட முன்மொழிவு நிறைவேற்றப்பட வேண்டும்,பட்டிருக்க வேண்டும் என்று அங்கலாய்க்கும் அரசியல் அரங்காடிகளையும் காண முடிகின்றது. குறித்த முன்மொழிவு வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தால் நடைபெறவுள்ள தேர்தலில் அது ஒன்றே போதும் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற என்போர் அநேகர்.  

 

அரசியல் என்பது சாக்கடை என்பர். அதில் மூழ்கி எழும் பன்றிகளாக இருந்து விடக்கூடாது என்பதே பொறுப்புள்ள சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. நல்லதுக்குக் காலமில்லை. நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு சொல்லப் போனால் வெட்கக் கேடு என்பது இது தானோ ?  -

 

http://www.thinakkural.lk/article.php?article/br1mucxolc122343cca4b3de2994pltsc2097b9558efefd0ecc3588bowzr#sthash.DYt83Qmt.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.