Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதப்பூதத்தின் எந்தப் பிள்ளை ஆட்சிக்கு வருவது ஈழத் தமிழருக்கு நன்மை தரும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதப்பூதத்தின் எந்தப் பிள்ளை ஆட்சிக்கு வருவது ஈழத் தமிழருக்கு நன்மை தரும்?

தாமரை காருண்யன்

fb889abc-4d0e-4664-b44b-f324c174efe41.jp

1.

ஜனாதிபதித் தேர்தல் ஆரவாரங்கள் நன்றாகவே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டன.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அணி தாவும் ஆட்டமும் தேர்தலின் இணை பிரியா அங்கம் ஆகிவிட்டது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி, ஜனாதிபதியாகப் போவது மகிந்த இராஜபக்சவா அல்லது மைத்திரிபால சிறிசேனாவா என்பது முடிவாகப் போகிறது.

மைத்திரிபால சிறிசேன களம் இறக்கப்படும் முன்னர் மகிந்த இராஜபக்சதான் ஜனாதிபதியாக வருவார் என அடித்துக் கூறியவர்கள் பலர் தற்போது சற்று அமத்தி வாசிக்கத் தொடங்கியுள்ளார்கள். எதிர்வரும் நாட்கள் ஜனாதிபதித் தேர்தலில் மிக முக்கியமான நாட்களாகக் கருதப்படுகின்றன.

தற்போது வரும் தகவல்களின்படி போட்டி கடுமையாக இருப்பதாகத் தெரிகிறது. நகர்ப்புறங்களில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு கூடி வருகிறதாம். கிராமப்புற நிலைமை குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. இத் தடவை தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

இத்தகையதொரு சூழலில் இக் கட்டுரை எழுதப்படுவதற்கு ஒரு நோக்கம் உண்டு.

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஈழத் தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்தோ அல்லது எவர் ஜனாதிபதியாகுவது தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரித்துக்கான போராட்டத்துக்கு நன்மை தரும் என்பது குறித்தோ மக்கள் மத்தியில் தனி வெளியில் விவாதிக்கப்படும் அளவுக்குப் பொதுவெளியில் இவ் விவாதங்கள் போதிய அளவில் இடம்பெறுவதாகத் தெரியவில்லை.

fb889abc-4d0e-4664-b44b-f324c174efe44.jp

ஊடகப்பரப்பிலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்று வருகின்ற போதும் மகிந்த இராஜபக்ச அல்லது மைத்திரிபால சிறிசேன, இவர்களில் எவர் ஜனாதிபதியாவது ஈழத் தமிழர் தேசத்துக்கு நன்மை தரும் என்பது குறித்து விவாதங்கள் போதிய அளவில் எழுந்ததாகத் தெரியவில்லை.

நிலாந்தன் ஒரு கட்டுரையில் மகிந்த வெல்வதாலும் தோற்பதாலும் (எதிரணி வெல்வதாலும்) தமிழ் மக்களுக்கு கிடைக்கும் எனக் கருதக்கூடிய நன்மை தீமைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். GTN குருபரன் மகிந்தர் வெற்றி பெற்றால் வரக்கூடிய பாதிப்புக்களை ஒரு கட்டுரையில் அடையாளப்படுத்தியிருந்தார். வேறு சில கட்டுரைகளும் இவ் விடயம் தொடர்பில் வெளியாகியிருந்தன. அரசியல் கட்சிகள் மட்டத்தில் மனோ கணேசன் எதிரணிக்கூட்டில் இருந்து மகிந்தரை வீழ்த்துவதற்காகச் செயற்படுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது குறித்து மக்களுக்கு வழிகாட்டக்கூடிய நிலைப்பாடு எதனையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இது தொடர்பாக அமைதி காத்தே வருகிறது.

இத்தயைதொரு சூழலில் எவர் ஜனாதிபதியாவது ஈழத் தமிழர் தேசத்துக்கு நன்மை விளைவிக்கும் என்பது தொடர்பான விவாதத்தை பொதுவெளியில் கூர்மைப்படுத்துவதே இக் கட்டுரை எழுதப்படுவதன் நோக்கமாகும். ஈழத் தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரித்துக்கான போராட்டத்தின் நலன் என்ற நோக்குநிலையில் இருந்துதான் இக் கட்டுரை எழுதப்படுகிறது.

தமிழீழத் தேசியவாதிகளாகத் தம்மை அடையாளம் காண்போரில் ஒரு பகுதியினர், மகிந்தர் மீண்டும் ஆட்சிக்கு வருவதே தமிழர்களின் சுயநிர்ணய உரித்துக்கான பேராட்டத்தை வளர்த்துச் செல்வதற்கு நன்மையானது எனக் கருதுகிறார்கள்.

மீண்டும் வரும் மகிந்தரின் ஆட்சி குறுங்காலத்தில் தீமையாக இருந்தாலும் நீண்டகாலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மையினைத் தரும் என்பது இவர்களின் வாதம்.

மேற்குலகத்துக்கு அடிபணியாமல், இந்தியாவுக்கும் ஓர் எல்லைக்கும் மேல் வளைந்து கொடாமல் சீனாவினை அரவணைத்து வைத்திருக்கும் மகிந்தரின் வெளியுறவுக் கொள்கை தொடர்வதே தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தொடரக் கூடிய அனைத்துலகச் சூழலைப் பேணும் என இவர்கள் கருதுகிறார்கள்.

போர்க்குற்றம் இழைத்தவர் தண்டனை பெறாமல் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருப்பது அனைத்துலகத்தின் மனச்சாட்சியினைத் தட்டி எழுப்ப உதவும் என்பதும் இவர்களின் கருத்தாக உள்ளது.

இவ் வாதத்தின் தர்க்கத்தினை இக் கட்டுரை புரிந்து கொண்டாலும் அதன் முடிவை நிராகரிக்கிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று சிறிலங்காவின் ஜனாதிபதியாகுவதே ஈழத் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் ஒப்பீட்டளவில் நன்மையினைத் தரும் என்பதே இக் கட்டுரை முன்வைக்கும் வாதமாகும்.

இவ்வாதத்தின் முக்கியமான தர்க்கக்கூறுகளை இக் கட்டுரை சுருக்கமாக முன்வைக்கிறது. இது தொடர்பானதொரு விவாதத்துக்கு அனைவரையும் அழைக்கிறது. இக் கட்டுரை முன்வைக்கும் வாதத்துக்கு எதிரான வாதங்கள் முன்வைக்கப்படும்போதே அது அரசியல் விழிப்புணர்வைத் தூண்டும்.

இக் கட்டுரையின் வாதத்துக்குள் நுழைய முன்னர் வேறு சில விடயங்களைப் பற்றிப் பேச வேண்டியுள்ளது.

2.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரும் இனவாதிகள்தான் என்ற கருத்து தமிழ் மக்களிடையே பரவலாக உள்ளது.

ஆம். சந்தேகம் ஏதும் கொள்ளத் தேவையில்லை.

இவர்கள் இருவரும் இனவாதிகள்தான். சிங்கள பௌத்த இனவாதப் பூதத்தின் பிள்ளைகள்தான். மகிந்த இராஜபக்ச மூத்த பிள்ளை. மைத்திரிபால சிறிசேன இளைய பிள்ளை, அவ்வளவுதான். இவர்கள் இருவரும் சிங்கள பௌத்த இனவாதத்துக்கு சேவகம் செய்பவர்களாகவே இருப்பார்கள். இதில் இக் கட்டுரைக்குச் சந்தேகம் எதுவும் இல்லை.

ஒரு சிலர் மத்தியில் இனவாதிகளில் இருவரில் எவர் பதவிக்கு வந்தாலும் ஒன்றுதான், இதில் அக்கறைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்ற கருத்தும் உண்டு. இக் கருத்துடன் இக் கட்டுரைக்கு உடன்பாடு கிடையாது.

அரசியல் விழிப்புணர்வுள்ள சமூகம் எதுவும் தோன்றுகின்ற ஒவ்வொரு சூழலையும், கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் எவ்வாறு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும். இதனால் இரண்டும் பேயாக இருந்தாலும் கூட, எந்தப் பேய் ஆட்சியைப் பிடிப்பது எமக்கு நல்லது என அரசியற்கூர்மையுடன் நாம் விவாதிக்க வேண்டும்.

இது சிங்கள தேசத்தின் தேர்தல். இதில் தமிழர் தேசத்துக்கு அக்கறை ஏதும் இல்லை. அதனால் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றதொரு கருத்தும் சிலர் மத்தியில் காணப்படுகிறது. இக் கருத்துடனும் இக் கட்டுரைக்கு உடன்பாடு கிடையாது.

எவர் ஜனாதிபதியாவது நன்மையானது என்பது தொடர்பாக ஓர் அரசியல் முடிவை எடுத்துவிட்டு, அம் முடிவை எட்டுவதற்கு தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பது சாதகமானது என்று கருதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோருவது வேறு. கோட்பாட்டு நிலைத் தியானத்தில் இறங்காது இருந்துகொண்டு நடைமுறை அரசியல் பற்றிச் சிந்திக்காது புறக்கணிப்புப் பற்றிப் பேசுவது வேறு.

2005 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள், மகிந்தர் ஆட்சிக்கு வருவதே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு நல்லது என்றதொரு அரசியல் முடிவை எடுத்து விட்டு, அந்த முடிவை நடைமுறைச் சாத்தியமாக்க தேர்தல் புறக்கணிப்பைக் கோரினார்கள். விடுதலைப் புலிகளின் அரசியல் கணக்கு பிழைத்துப்போனது வேறுவிடயம்.ஆனால்,இன்று தேர்தல் புறக்கணிப்புப் பற்றிப் பேசுபவர்கள் அப்படியொரு அரசியல் முடிவுடன் பேசுகிறார்களா என்பது தெரியவில்லை.

எது என்னவாக இருந்தாலும் சிறிலங்காவின் ஜனாதிபதியாக எவர் வருவது என்பது தமிழ் மக்களினது அக்கறைக்குரிய விடயமாக இருக்க வேண்டும் என்பதும் எவர் ஆட்சிக்கு வருவது தமிழர்களுக்கு நன்மையானது என்பது குறித்து சிந்திக்கப்படவேண்டும் என்பதுவுமே இங்கு முக்கியமானது.

3.

அண்மையில் எதிரணியின் பொது வேட்பாளரிடம் தமிழ் வாக்காளர்கள் கேட்கக் கூடிய 10 கேள்விகள் குறித்து நிலாந்தன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வலுவான அரத்தமுள்ள கேள்விகள் இவை. இக் கேள்விகளில் இக் கட்டுரைக்கும் உடன்பாடு உண்டு. நிலாந்தனின் எந்தக் கேள்விக்கும் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து உருப்படியான பதில் ஏதும் வரப் போவதில்லை. இவரது தேர்தல் விஞ்ஞாபனமும் இக் கேள்விகளுக்கான பதிலை உள்ளடக்கப் போவதும் இல்லை.

இருந்தபோதும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதே தமிழர்களுக்கு நல்லது என்று இக் கட்டுரை கருதுவதற்கான காரணங்கள் எவை? இதற்கான தர்க்கக்கூறுகள் யாவை?

தர்க்க்கூறு 1 - தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு சிறிலங்கா அரச கட்டமைப்புதான் (State structure) பிரதான தடை என்பதனை நிறுவல்!

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படமுடியாத நிலைக்கு சிறிலங்கா அரசு இறுகிப்போன சிங்கள பௌத்த இனவாத அரசாக (இங்கு அரசும் (state) அரசாங்கமும் (government) ஒன்றல்ல என்பதனைக் கவனத்திற் கொள்க.) இருப்பதுதான் அடிப்படையான காரணம். இந்த இறுகிய அரசு எந்தவகையான அதிகாரப் பங்கீட்டுக்கோ (power sharing) அல்லது மறுசீரமைப்புக்கோ (state reform) தயாராக இல்லை. இதுவே ஈழத் தமிழ் மக்கள் தனிநாட்டுக்காகப் போராடவேண்டிய நிலையினை உருவாக்கியது. இத்தகையதொரு சிங்கள அரசிடம் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக யுத்த வெற்றியின் பின் சிறிலங்கா அரசு இனவாதத்தால் மேலும் இறுகக் கட்டுண்டுள்ளது. இத்தகையதொரு அரசிடம் இருந்து தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வேதும் கிடைக்கப் போதில்லை. இது முழுமையாக அனைத்துலக அரங்கில் இன்னமும் அம்மணமாகவில்லை.

2009 க்கு முன்னர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தார்கள் என்ற கருத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. 2009 க்குப் பின்னர் இராஜபக்ச அரசாங்கம்தான் பிரச்சினை என்பதாகவும் ஓர் ஆட்சி மாற்றம் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் போன்றதொரு தோற்றம் அனைத்துலக சமூகத்தால் வெளிப்படுத்தப்படுகிறது.

ஆட்சியாளர்கள் மாறினாலும் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பில் மாற்றம் ஏதும் ஏற்பட்டு விடப்போவதில்லை. இதனால் ஓர் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கத்தாலும் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு ஏதும் வழங்க முடியப் போவதில்லை. இது மிகவும் தெளிவாக நிறுவப்படுவது தமிழர் நலனுக்கு நல்லது.

இதனால் பிரச்சினையே சிறிலங்கா அரசுதான் என்பதும் இதன் பிடியில் இருந்து விடுபடாமல் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டுக்கு வலுக் கிடைக்கும். பண்டா - செல்வா உடன்படிக்கை மட்டுமல்ல டட்லி-செல்வா உடன்படிக்கையும்கூட சிங்கள தேசத்தால் நிராகரிக்கப்பட்டமையே தமிழர்கள் தேசிய சுயநிர்ணய உரிமை கோரிப் போராடுவதற்கான தார்மீக நியாயத்தைத் தந்தது. இன்றைய காலகட்டத்திலும் இந்தத் தார்மீக நியாயத்தை வலுவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு ஆட்சி மாற்றம் நிகழ்வதும் அங்கும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை இனவாதக் கண்ணோட்டத்தில் கையாளப்படுவதும் உதவும்.

இங்கு நாம் கவனத்திற் கொள்ளவேண்டிய விடயமொன்று உண்டு. சிறிலங்கா அரசின் இனவாதத் தன்மை அனைத்துலக அரசுகளுக்குத் தெரியாத ஒன்றல்ல. தமது நலன்களுக்காக அவர்கள் நித்திரை போல நடிக்கிறார்கள். இங்கு தமிழர்களது வேலை நித்திரை கொள்பவரை எழுப்புவது அல்ல. நித்திரை போல நடிப்பவர்களை எழுப்புவதுதான்.

தர்க்கக்கூறு 2 - மெல்ல மெல்ல அரக்கும் அனைத்துலக அழுத்தமும் மகிந்த ஆட்சியின் காலநீடிப்பின் ஆபத்தும்

மகிந்தர் 3வது தடவையாகவும் ஜனாதிபதியாக வரும் பட்சத்தில் தனது அரசியல் எதிரிகளை இல்லாதொழிப்பதுடன் சிங்கள பௌத்த கடும்கோட்பாட்டாளர்களை மனம் குளிர வைக்கக்கூடிய வகையில் தமிழர் மீது கடுமையான ஒடுக்குமுறைகளைத் தீவிரப்படுத்தும் நிலைமைகளே கண்ணுக்குத் தென்படுகின்றன.

இதில் தமிழ் மக்களின் நிலம் சூறையாடப்படல் முக்கிய இடம் பிடிக்கும். சிங்களக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்படும். நாம் எல்லாம் சிறிலங்கர் என்ற ஒரே மக்கள் என்று கூறியவாறு தமிழ் மக்களை சிங்களத்துடன் கரைத்துவிடும் இனக் கபளீகர நடவடிக்கைகள் வேகமாக நடைபெறும்.

அனைத்துலக சமூகம் சிறிலங்காவை நட்பு நாடாகவே கருதுகிறது. இதனால் தனது நடவடிக்கைகளின் ஊடாக சிறிலங்கா என்ற நாடு நெருக்கடிக்குள்ளாகக் கூடாது என்றும் கருதுகிறது. இதனால் சிறிலங்கா மீதான அனைத்துலக சமூகத்தின் அழுத்தம் மெல்ல மெல்ல அரக்கியபடித்தான் வெளிவரும். இவ்வறான அழுத்தம் ஊடாக அனைத்துலக சமூகம் அடைய முனையும் இலக்கு ஓர் ஆட்சிமாற்றத்தை கொண்டு வருவதாகவே இருக்கும்.

நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தர் வெற்றி பெறுகிறார் என வைப்போம். மீண்டும் மனம் தளராத விக்கிரமனைப் போல் 6 வருடங்களின் பின் அடுத்த தேர்தலில் மகிந்தரை வீழ்த்துவதற்கான நடவடிக்கைளைத்தான் மேற்குலகம் சார்ந்த உலக அரசுகள் மேற்கோள்ளும். அதற்கான வகையில் தமது அழுத்தங்களை மெதுவாகவே நகர்த்துவார்கள். இக் கால இடைவெளியில் மகிந்த அரசு ஈழத் தமிழர்களைத் தாயகத்தில் கணிசமாகப் பலவீனப்படுத்தி விடும்.

தர்க்கக்கூறு 3 - ஜனநாயக வெளியில் ஏற்படக்கூடிய அதிகரிப்பு சாதகமானதே!

மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கி அதன் மூலம் ஓர் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதில் மேற்குலகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றதொரு அவதானிப்பு உள்ளது. இந்த அவதானிப்பில் உண்மை இருப்பதாகவே பலராலும் உணரப்படுகிறது. இதனால் ஆட்சிமாற்றம் ஏற்படின் தாராளவாத ஜனநாயகத்தின் சில அம்சங்களாவது கடைப்பிடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. இந்த அடிப்படையில் நோக்கும் போது ஆட்சிமாற்றம் ஏற்படின் தமிழர் தாயகப் பகுதிகளில் நெருக்கடிநிலை சற்றுத் தளர்வடைந்து மக்களுக்குக் கிடைக்கக்கூடிய ஜனநாயகவெளி அதிகரிக்கலாம் என்று கருத இடமுண்டு. தற்போதய சூழலில் தமிழர்களுக்கான ஜனநாயகவெளி அதிகரிப்பதனை நாம் சாதகமாகத்தான் கொள்ள வேண்டும்.

ஜனநாயகவெளியில் அதிகரிப்பு ஏற்படின் அது மக்களுக்கு தற்காலிக நிம்மதியொன்றினைத் தந்து தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பின்னோக்கித் தள்ளிவிடும் அபாயம் உள்ளது என்ற அச்சம் சிலர் மத்தியில் உள்ளது. இதனை தர்மர்பொறி என அழைப்பாரும் உண்டு. இக் கட்டுரை இக் கருத்துடன் உடன்படவில்லை. மிகுந்த நெருக்கடி நிலை தலைமறைவு இயக்கம் தோன்ற உதவக்கூடும். ஆனால் தாயகத்தின் தற்போதய சூழலில் இதற்கு வாய்ப்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு சிலர் முயன்றாலும் அது சிங்கள அரசுக்குச் சேவகம் செய்யும் விளைவுகளையே ஏற்படுத்தும்.

மக்கள் தற்போது அச்சம் காரணமாக அரசியல் போராட்டங்களில் பங்குபற்றப் பின்னிற்கிறார்கள். மக்களின் இந்த அச்சம் தணிய வேண்டும். அரசியல் இராஜதந்திர வழிகளில் செயற்படுவதற்கு மக்களின் நேரடிப் போராட்டங்கள் மிகவும் அவசியமானவை. சிங்கள பௌத்த இனவாத ஒடுக்குமுறை ஆட்சி மாற்றம் ஏற்படினும் வெவ்வேறு வடிவங்களில் தொடரவே செய்யும். அப்போது மக்களின் நேரடிப் போராட்டங்கள் வலுப்பெறுவது நல்லது. இதற்குக் கிடைக்கக்கூடிய கூடுதல் ஜனநாயகவெளி துணைபுரியும்.

மேலும், கிடைக்கக்கூடிய ஜனநாயக வெளி புலம்பெயர் தமிழ் மக்கள் தாயக மக்களின் நலன் வாழ்வு, மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கு பற்றவதற்கு கூடுதலான வாய்ப்பைத் தரும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் தமிழர் தாயகப் பிரதேசங்களையும் மேம்படுத்தவதற்கு புலம் பெயர் தமிழ் மக்களின் பங்களிப்பு அதிகரிக்கும் வாய்ப்பைச் சாதகமாகவே நோக்க வேண்டும்.

தர்க்கக்கூறு 4 - சிங்கள இனவாதிகளிடையே முரண்பாடுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு!

மகிந்த இராஜபக்ச இத் தேர்தலில் தோல்வியடைவது சிங்கள இனவாதிகளிடையே முரண்பாடுகள் கூர்மையடைந்து தென்னிலங்ககையில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களைக் கூடுதலாகக் கொண்டுள்ளது.

மகிந்தர் தனது தோல்வியினை எற்க மறுத்து அதிகாரத்தை தக்கவைக்க முயலின் தென்னிலங்கையில் நெருக்கடி நிலை தோன்றும். மகிந்தர் அதிகாரத்தை கையளித்தாலும் இலகுவில் துவண்டு விடமாட்டார். எதிரணிக்கு சவால் விடும் வகையில்தான் தனது செயற்பாடுகளை மேற்கோள்வார். எதிரணிக்கும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தர் எனும் பொது எதிரி இருப்பதனால் ஒன்றாய் நிற்கிறார்கள். தேர்தலில் எதிரணி வெற்றி பெறின் தமக்குள் முரண்படுவதற்கான நிலைமைகளும் உண்டு. இது பலவீனமான சிறிலங்கா அரசாங்கம் அமைய வழிகோலலாம். பலவீனமான அரசாங்கம் தமிழர்களுக்கு ஒப்பீட்ளவில் நன்மையானது.

இன்னுமொரு முக்கியமான விடயம் உண்டு. இறுதிக் கட்டப் போர்க்காலத்தில் அனைத்துலக சமூகத்தின் பார்வையில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றமை இப்போது சோற்றுக்குள் மறைக்க முயலும் பூசணிக்காய் போலாகி விட்டது. புதிய ஆட்சியாளர்கள் அனைத்துலக விசாரணைகளை நிராகரித்தாலும் நம்பகமான உள்ளுர் விசாரணைகளை இலகுவில் நிராகரிக்க முடியாது. என்ன வடிவிலும் இராணுவத்தினர் மீது விசாரணை என்பது தென்னிலங்கையைக் கொந்தளிக்க வைக்கவே செய்யும்.

இப்படி வெவ்வேறான காரணங்களால் இனவாதிகள் மத்தியில் எழக்கூடிய முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு சாதகமான நிலைமையைத் தோற்றுவிக்கும் வாய்ப்புக்களைக் கொண்டவை.

தர்க்கக்கூறு 5 - அனைத்துலக உலக ஒழுங்கு செயற்படும் பாங்கு

மகிந்த இராஜபக்ச மேற்குலகத்துக்கு அடிபணியாமல், இந்தியாவுக்கும் ஓர் எல்லைக்கும் மேல் வளைந்து கொடாமல் சீனாவினை அரவணைத்து வைத்திருப்பது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துச் சாதகமானது என்ற கருத்தை அனைத்துலக உலக ஒழுங்கு செயற்படும் பாங்கை முழுமையாகக் கவனத்தில் எடுத்தவாறுதான் பரிசீலிக்க வேண்டும்.

இப்போதய உலக ஒழுங்கு பனிப் போர் காலத்துக்கு பின் - பிந்திய கால உலக ஒழுங்கு (post-post cold war world order) என்று வர்ணிக்கப்படுநிறது. இங்கு மேற்குலகுக்கு மாறான சக்தி கொண்ட நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன. இன்றைய காலகட்டத்து அனைத்துலக உலக ஒழுங்கில் நாடுகளுக்கிடையேயான உடன்பாடுகளும் முரண்பாடுகளும் இருப்பது அங்கீகரிக்கப்பட்டதொன்றாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகவும் உள்ளது. ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் உறவுகளை முறித்துக் கொள்வதில்லை. உடன்பாடுகள் உள்ள இடங்களில் இணைந்து செயற்பட்டுக்கொண்டுதான் தமது காய் நகர்த்தல்களைச் செய்வார்கள்.

சிறிலங்காவின் முன்னைய எல்லா அரசாங்கங்களையும் விட மகிந்த இராஜபக்ச அரசாங்கம் புதிய உலக ஒழுங்கை நன்கு விளங்கியவாறு செயற்பட்டு வந்திருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் உலக நாடுகள் அனைத்தையும் தனக்குச் சார்பாக வென்றெடுத்தமை இதற்கு நல்ல உதாரணம். இந்தியாவை திருப்திப்படுத்துவதில் தொடர்ந்து மகிந்த அரசு கவனம் கொடுத்தே வருகிறது. தாராளவாத ஜனநாயகம் தொடர்பாக மேற்குலகத்துடன் முரண்பாடுகள் உள்ளபோதும், பாதுகாப்புச் சார்ந்த விடயங்களில் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவினதும் இந்தியாவினதும் போருக்கு மகிந்த அரசாங்கம் ஒத்துழைப்புக் கொடுத்துத்தான் வருகிறது. சிறிலங்கா புலனாய்வு அமைப்பு மேற்குலக நாடுகள் மற்றும் இந்திய புலனாய்வு அமைப்புகளுடன் ஒத்திசைவாகவே இயங்குகிறது.

மகிந்தர் சிங்கள மக்கள் ஆதரவு கொண்ட பலமான தலைவராகத் தன்னை நிலைநிறுத்தி தன்னைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை உருவாக்கியுள்ள பின்னணியில் இவரைத் தாம் நினைத்தவாறு கையாள்வது மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் இலகுவானதாக இருக்கவில்லை. சிங்கள பௌத்த தேசியவாதத்தில் ஊறியுள்ள இந்திய எதிர்ப்பும் சீனாவுடன் உறவுகளைப் பேணுவதில் உள்ள இலகுத்தன்மையும் மகிந்தர் சீனாவுடன் உறவை வளர்க்கத் துணைசெய்தன. இதனால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின் சிறிலங்காவைக் கையாள்வது இலகு என்று இவ் அரசுகள் கருதலாம்.

இன்று ஆட்சி மாற்றத்துக்கு முயலும் வெளிநாட்டு அரசுகள் தேர்தலில் மகிந்த வெற்றி பெற்றால் அவருடன் இணைந்து செயற்படவே செய்யும். எந்தவொரு பாரிய மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. முன்னர் குறிப்பிட்டவாறு அனைத்துலக அரசுகளின் அழுத்தம் மெல்ல மெல்லவே நகரும்.

இச் சூழலில், உள்நாட்டு நிலைமைகளைப் புறம்தள்ளிவிட்டு வெளியுறவு சார்ந்த விடயங்களுக்கு மிகைமதிப்பீடு கொடுத்துச் சிந்திப்பது ஆபத்தானது. தமிழர் தாயகத்தில் தமிழர்கள் பலவீனப்பட்டுப் போனால் எம்மைப் பற்றி அனைத்துலக அரசுகள் அதிக கவனம் கொடுக்கப் போவதுமில்லை. அதற்காகக் கவலைப்படப் போவதுமில்லை.

தர்க்கக்கூறு - 6 - மானுடப் பொது நன்மை

மகிந்தர் ஆட்சி அபிவிருத்தி என்ற சுலோகத்தை முன்வைத்தவாறே மானுடத்துக்கு எதிரான ஆட்சியாக உருவெடுத்து விட்டது. அதிகார துஸ்பிரயோகம், ஊழல், குடும்ப ஆதிக்கம் போன்றவை எல்லை தாண்டி விட்டன. எதற்கும் ஓர் எல்லை உண்டல்லாவா? மானுடப் பொது நன்மை கருதி மகிந்தர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அர்த்தம் உள்ளதே.

இக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுவாறு ஆட்சி மாற்றம் ஈழத் தமிழர் தேசத்தின் தேசிய விடுதலைப் பேராட்டத்துக்குச் சாதகமான விளைவை ஏற்படுத்துவதற்கு முக்கியமானதொரு முன்நிபந்தனை உண்டு.

ஈழத் தமிழர்களின் அரசியற் பிரதிநிதிகளாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வாக 13 வது திருத்தம் திணிக்கப்படுவதை நிராகரிக்க வேண்டும். 13 வது திருத்தத்தைக் கடந்து வெளிவந்து ஆட்டத்தை இன்னொரு மேடைக்கு நகர்த்த வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் பின் வட-கிழக்கு இணைந்த வகையில், விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக் காலத்தில் முன்வைத்த இடைக்கால நிர்வாகசபையில் கோரப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதொரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இது தொடர்பாக ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தனித்தவொரு கட்டுரையில் பேசலாம்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=fb889abc-4d0e-4664-b44b-f324c174efe4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.