Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரி ஆதரவு சரியா? தவறா? – தேர்தல் தொடர்பான கேள்வி பதில்கள்!

Featured Replies

எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி சிறிலங்கா அரசஅதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்தலில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய கேள்விகள் தொடர்பாக எமது பார்வையை இங்கு பதிவுசெய்கின்றோம். இவை தமிழ்த்தேசிய சிந்தனை வெளியில் தமிழ்மக்களுக்கு இருக்கக்கூடிய கடந்த கால நிகழ்கால எதிர்கால செல்வழிகளை மையப்படுத்திய பார்வையாகவே முன்வைக்கப்படுகின்றன.

 

1. தற்போது நடைபெறவுள்ள சிறிலங்கா அரச அதிபருக்கான தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டுமா?

 

ஆம். இலங்கைத்தீவில் தமிழர் தேசம் சிங்களவர் தேசம் என இருவேறு தாயகப்பகுதிகள் கொண்ட இரு நிர்வாக அலகுகள் கொண்ட அரசியல் தீர்வே இலங்கைவாழ் அனைவருக்கும் பொருத்தமானதாகும். அதற்கான கோரிக்கைகள் இன்னும் வலுப்பெறவேண்டும்.

 

அதனால் ஒற்றையாட்சி அமைப்பைக்‌ கொண்ட தேர்தலில் பங்குபற்றக்கூடாது என்ற வாதம் ஏற்புடையதல்ல. அத்தகைய வாதத்தை ஏற்றுக்கொண்டால் எமக்கான உரிய அரசியல் உரிமை கிடைக்கும்வரை நாடாளுமன்ற மாகாணசபை ஏன் பிரதேசசபை தேர்தல்களில் கூட தமிழர்தரப்பு போட்டியிடாமல் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

தற்போதுள்ள ஆட்சியாளர் தொடர்ந்தும் ஆட்சியிலிருப்பதும் இல்லாமல் போவதற்கும் தமிழர் தரப்பால் ஏதும் செய்யமுடிந்தால் அவற்றை செய்வதே பொருத்தமானதாகும்.

 

அந்தவகையில் தமிழர் தரப்பால் எதிரணி வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகள் மகிந்தவை வீட்டுக்கு அனுப்பும் வாக்குகளாக இருப்பதால் அதனைச் செய்யவேண்டும்.

 

இந்த வேளையில் இந்திய தந்தி தொலைகாட்சிக்கு நேர்காணல் அளித்த மகிந்த ராஜபக்ச தாம் இம்முறை எப்படியேனும் 35 விழுக்காடு வாக்குகளை தமிழர் பகுதிகளில் பெறுவேன் என கூறுகின்றார். எனவே மகிந்த 50 விழுக்காடு வாக்குகளை கூட தமிழர் பகுதிகளிலிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதும் அவர் நினைக்கின்ற 35 விழுக்காடு வாக்குகளளை கூட அவருக்கு செல்லக்கூடாது என்பது முக்கியமல்லவா?

 

2. சிங்கள தேசத்தின் இன்னொரு பேரினவாதியான மைத்திரி – ரணில் – சந்திரிகா என்ற கூட்டை எப்படி நம்பமுடியும்?

 

கடந்த கால நிகழ்வுகளையும் நிகழ்கால நடப்புகளையும் ஒப்பிட்டு ரீதியால் கவனித்தால் மகிந்த என்ற கொடுங்கோலனையும் அதன் பரிவாரங்களையும் நீக்குவது முக்கியமானது.இவற்றோடு ஒப்பிடும்போது எதிரணியின் கூட்டு ஆனது கடும்போக்கு நிலைப்பாடுகளை எடுத்தாலும் அதனை சர்வதேச ரீதியாக ஒரு பதில் அளிக்கவேண்டிய அணியாகவே அமையக்கூடிய சாத்தியங்கள் உண்டு.அத்தகைய நிலையானது பேரினவாதத்தின் கொடியவீச்சில் ஒரு தேக்கநிலையை உருவாக்கும். அதனை சாதகமாக்கி எமது உரிமைக்கான குரலை விரிவாக்கம் செய்யமுடியும்.

 

3. விடுதலைப்புலிகளின் காலத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்பது அவர்களின் விடுதலைப்போராட்டத்தின் அச்சாணியை மையப்படுத்தியதாக இருந்தது. தற்போது உத்தியை மாற்றிக்கொள்வது பொருத்தமா?

 

விடுதலைப்புலிகளின் காலத்தோடு சமகாலத்தை ஒப்பிடுவது பொருத்தமற்றது. விடுதலைப்புலிகள் இப்போதும் முன்னைய நிலையில் இருந்திருந்தால் அதே புறக்கணிப்பு நிலை எடுப்பதே சரியான உத்தியாக இருந்திருக்கும். எனவே மாறிய களநிலையில் உத்திகள் மாற்றமடைவது தவிர்க்கமுடியாததே.

 

4. எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் சார்பாக எந்தவித நம்பிக்கையளிப்புகளும் முன்வைக்கப்படவில்லையே?

 

தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன சொல்லப்படுகின்றன என்பது இலங்கை தேர்தல் வரலாற்றில் முக்கியமானது அல்ல. தேர்தல் விஞ்ஞாபனங்கள் காலங்காலமாக ஒரு பிரச்சாரஉத்தியாகத்தான் பயன்படுத்தப்படுகின்றதே தவிர உண்மையில் ஆட்சிபீடம் ஏறுபவர்கள் தமது அரசியலுக்கு ஏற்றவகையில் தமது ஆட்சியை முன்னகர்த்துகின்றார்கள் என்பதுதான் உண்மை.

 

அதனை விட தற்போதைய நிலையில் தமிழருக்கு தேவையானது சுதந்திரமாக தமது அடிப்படையான சுதந்திரத்தை உறுதிசெய்வதே. பயம் சூழ்ந்த வாழ்வை அகற்றினாலே தமிழர்கள் தமது உண்மையான சுதந்திரமான வாழ்வு பற்றி சிந்திக்கமுற்படுவார்கள். அந்தக் சூழ்நிலையை உருவாக்குதல் முக்கியமானது. அந்த விடயம் எதிரணியின் விஞ்ஞாபனத்தில் உள்ளது.

 

தமிழர்கள் பயமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குதல் மிகமுக்கியமானது.

 

5. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நேரடியாக எதிரணிக்கு ஆதரவளித்ததன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த மீதான ஆதரவை மறைமுகமாக அதிகரித்துவிட்டார்களே?

 

மக்களின் மனச்சாட்சிப்படி வாக்களிக்க விட்டிருக்கலாம் என்பதுதான் எமது நிலைப்பாடாக இருந்தது. தற்போது நடைபெறும் தேர்தல் பற்றிய பொதுவான விளக்கத்தை அளித்து தமிழ்மக்களை தனிப்பட்ட முடிவுகளை எடுக்குமாறு கோரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தவறு செய்துவிட்டதாகவே கருதுகின்றோம்.

 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெளிப்படையாக ஆதரவை அறிவித்தநிலையில் அதன் சாதக தன்மைகளை ஆராய்வது தற்போதைய நிலையில் பொருத்தமானது என கருதுகின்றோம்.

 

1. நேரடியாக ஒரு நிலைப்பாடு எடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுசென்று வாக்களிக்கும் வீதத்தை அதிகரிக்கமுடியும்.

 

2. மனிதாபிமானத்திற்கு எதிரான போர் எனக்காட்டிய மகிந்தவை இரண்டாவது தடவையாகவும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை கூடிய வாக்குவீதத்தில் அனைவருக்கும் எடுத்துக்காட்டமுடியும்.

 

3. எதிரணி வெற்றியடையும் போது தமது வாக்குப்பலத்தை முன்வைத்து தமிழர் அரசியல் தொடர்பான விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லமுடியும். அல்லாதுவிடின் மீண்டும் எங்களுக்குதானே மக்கள் வாக்குப்போட்டார்கள் என எதிரணியும் அவரோடிணைந்து நிற்கும் சில தமிழரும் நாளை இன்னொரு டக்ளஸ் கூட்டத்தை உருவாக்கலாம். அதனை தவிர்ப்பதற்கு இந்நிலை உதவகூடும்.

 

6. முன்னர் சரத் பொன்சேகாவையும் தற்போது மைத்திரியையும் ஆதரிப்பதன் மூலம் தமிழ்மக்களின் அழிவிற்கு துணைநின்றவர்களுக்கே ஆதரவளிக்கின்றோம் என்ற கருத்துப்பற்றி?

 

இத்தகைய நிலைப்பாட்டின் மூலம் சிங்கள தேசத்திற்கு தமிழர் தரப்பின் நியாயமான அரசியல் அபிலாசைகள் பற்றி சொல்லமுடியும். தமிழர்கள் கடும்போக்குவாதிகள் என்ற பெரும்பான்மை சிங்கள தேசத்தின் நிலைப்பாட்டை இத்தகைய முடிவு கேள்விக்குட்படுத்தும்.

 

விரும்பியோ விரும்பாமலோ சிங்கள தேசத்தின் மனமாற்றமே இலங்‌கைத்தீவின் நிம்மதியான நீண்ட கௌரவமான சுதந்திரத்தை இரு தேசிய இனங்களுக்கும் பெற்றுக்கொடுக்கும். சரத் பொன்சேகா மற்றும் மைத்திரி ஆகியோர் பேரினவாதத்தின் கருவிகளே தவிர உண்மையான பேரினவாதம் என்பது சிங்களதேசமே என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

 

மேலும் இத்தேர்தலின்போது மகிந்தவுக்கு எதிரான வாக்குகளாகவே மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கேட்கின்றோம். இதன்மூலம் மறைமுகமான அழுத்தம்கொடுக்கும் வாக்குகளாகவே இவை கொள்ளப்படலாமே அன்றி நேரடியாக மைத்திரியை எமது அரசதலைவராக ஏற்று வாக்களிப்பதல்ல.

 

7. சிங்கள தேசத்தின் பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பதற்கு மாற்றாக தமிழர் தரப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தி அவருக்கு முதலாவது வாக்கை அளிக்குமாறு கேட்பதன் மூலம் தமிழரின் அரசியல் அபிலாசைகளை சர்வதேச அரங்கில் வலியுறுத்த முடியுமல்லவா?

 

தமிழர் சார்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது என்பது ஒரு தெரிவாக இருந்தபோதும் அதற்கான பொருத்தமான காலப்பகுதி இன்னும் உருவாகவில்லை. அத்தகைய பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர் குறிப்பிடத்தக்களவில் வாக்குகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.

 

தற்போதைய பயம் கலந்த சூழலில் அத்தகைய வேட்பாளரை நிறுத்தி தமிழர் தரப்பு பரப்புரைகளை செய்யக்கூடிய களநிலைமை இல்லை. எனவேதான் பயம் கலந்த வாழ்வை முதலில் நீக்கவேண்டும். அதன் பின்னர் எதிர்வரும் காலத்தில் வரும் தேர்தலில் அத்தகைய முடிவுகளை எடுப்பதுபற்றி பரிசீலனை செய்யவேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

 

8. மகிந்தவை மீளஆட்சிக்கு கொண்டுவருவதன் மூலம் போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச விசாரணை போன்ற முனைப்புகள் வலுவடையும் என்றும் எதிரணி வந்தால் தமிழருடைய பிரச்சனைகள் தந்திரமாக நீர்த்துப்போகச்செய்யப்பட்டுவிடும் என்ற கருத்துப்பற்றி?

 

மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் -சர்வதேச ரீதியாக கடும்போக்கு நிலை அவருக்கு எதிராக வரும் என்ற எதிர்கூறல் சரியாக இருந்தாலும் அதுவொரு முழுமையான நெருக்கடியை அவருக்கு கொண்டுவரும் சூழ்நிலை உள்ளது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

 

சர்வதேச உறவுநிலைகள் மாறிக்கொண்டே இருக்கும். இம்முறை மகிந்த வெற்றியீட்டினால் – வெற்றியீட்டிய பின்னர் – சர்வதேச அழுத்தங்களுக்கு மென்போக்கான நிலையை எடுத்தால் தமிழர் தரப்பின் நிலை என்னவாகும்? அதற்கான சாத்தியங்களை மறுக்கமுடியுமா?

 

எனவே மகிந்த தொடர்ச்சியாக ஆட்சிசெய்தால் சர்வதேச நெருக்கடி வருமென எதிர்பார்த்து இன்னும் எமது உறவுகள் அதியுச்ச நெருக்கடிக்குள் வாழ்ந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வருவது பொருத்தமானதாக இருக்குமா?

 

அதேவேளை வீதிகள் போட்டாலும் கட்டிடங்கள் கட்டினாலும் மின்சாரம் வந்தாலும் உரிமைக்கான குரல் எப்படி ஓயாதோ அதுபோலவே தமிழரின் அதியுச்ச உரிமைக்கான குரல்கள் மறந்துபோகும் என எண்ணுவது சரியானதல்ல.மேலும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள் சமாந்தரமாக யார் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முன்‌கொண்டுசெல்லப்படும் அல்லது அழுத்தம்கொடுக்கும் ஆயுதமாக தொடர்ந்து நிலைத்திருக்கும்.

 

அந்தவேளையில் எமது மக்களின் அரசியலுக்கான வெளி விசாலமடையும். அது நீதிக்கான குரல்களை இன்னும் உயர்த்தும். அந்த அரசியல்வெளி உண்மையான அரசியல் தலைவர்களை தமிழர்களுக்கு இனங்காட்டும் அல்லது இருப்பவர்களை செம்மைப்படுத்தும்.

 

- தமிழ்லீடர் ஆசிரியர்பீடம் -

http://tamilleader.com/?p=45875

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.