Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலாதி

எஸ். றஞ்சகுமார்

thee.jpg

தீ

(நாவல்)

எஸ். பொன்னுத்துரை

வெளியீடு:

காலச்சுவடு பதிப்பகம்

669, கே.பி. சாலை

நாகர்கோவில்.

பக்கம்: 136

விலை: ரூ. 120

தீக்குள் விரலை வைத்தால் தீண்டும் இன்பம் தோன்றும்’ என்று ரைக்கப்பட்ட பொதுப்புத்தியில் உழல்வதே சராசரித் தமிழ்மனம். ஒரு தளத்தில் மட்டிட்டு நோக்குகையில் இது மகா வாக்கியம் ஒன்றே. தீண்டும் இன்பத்தை இவ்வாறு அழகுறப் பிரசித்தப்படுத்தியவனும் இலேசுப்பட்டவனல்லன்.

தீண்டும் இன்பத்தைப் பற்றியதொரு விசாரமாக ‘தீ’ வெளியாகியபோது, கலையும் இலக்கியமும் தீண்டாமை, தீட்டு என்பன பற்றியதாக இருத்தலே சாலச் சிறந்ததும், காலப் பொருத்தமும் என்ற ஆக்ஞைகளுடனும் ஆய்க்கினைகளுடனும் ஈழத்து இலக்கியப் பரப்பு ‘கலாதி’யாக இயங்கிக் கொண்டிருந்தது. (கலாதி என்னும் ஈழத்துப் பேச்சுவழக்குக்கு ‘சண்டை’ என்றும் ‘திறமான சாமான்’ என்றும் பொருள் கொள்ளலாம்). ‘தீ’யைக் கண்டு வெருண்டடித்தவர்களில் இவர்களே பெரும்பான்மையினர். பழம் பண்டித மரபை தமது வெள்ளை வேட்டி சால்வையின் தலைப்பில் முடிந்து வைத்திருந்தவர்கள் மறுதிறத்தார். பெரிய கலாதி நடந்தது என்பது வரலாறு.

தீ முதற்பதிப்பாகப் பிரசுரமாகி ஐம்பத்தைந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஈழத்து இலக்கியப் பரப்பும் ஒட்டுமொத்த தமிழ் இலக்கியப்பரப்பும் இந்திய இலக்கியப்பரப்பும் வெகுவாக மாறிவிட்டன. புதிய போக்குகளினூடாகப் புதிய பரிமாணங்கள் தோன்றியிருக்கின்றன.

அன்றிருந்த வாசகனும் இன்றில்லை. தீயைத் தொடுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதில் இன்றுள்ள வாசகனுக்கு ஒப்பீட்டளவில் ஓரளவேனும் நெகிழ்வுப் போக்கு காட்டப்படுவதுண்டு. உலக மயமாக்கலின் உடனடிச் சாத்தியப்பாடு களில் இந்நெகிழ்வு முக்கியமானதொன்று. தவிர அண்மையில் ஈழத்தில் நிகழ்த்தப் பட்ட இனசங்காரத்தின் நீடித்த வடுக்களாய் அமைகின்ற நீட்சி ஒட்டுமொத்த ஈழத்தின் வாழ்வனுபவத்தையும் படைப்புந்தல் மனோநிலையையும் படைப்பை நுகரும் வழிமுறைகளையும் கற்பனை செய்யச் சிரமமான அளவுக்குத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கின்றன.

இவ்வனுபவங்களில் முக்கியமானது ஈழத்தின் ஒரு பெருந்தொகுதி மக்கள்திரள் மீது நடாத்தப்பட்ட பலாத்காரமான தீத்தொடல்.

“மனித இனத்தின் பின்னமற்ற அடிப்படை உணர்ச்சி பாலுணர்ச்சியே. இவ் வுணர்ச்சியில் வித்தூன்றிக் கருவாகி, ஜனித்து, வளர்ந்து, அந்த நுகர்ச்சியில் எழும் குரோதம் - பாசம் ஆகிய மன நெகிழ்ச்சிகளுக்கு மசிந்து, சிருஷ்டித்தொழிலில் ஈடுபட்டே வாழ்கிறான் மனிதன்” என்று தீயின் முதற்பதிப்பின் முன்னீட்டில் குறித்துச் செல்லும் எஸ்.பொ.வின் வார்த்தைகளை இவ்விடத்தில் ஒருதரம் மீட்டிப் பார்த்தால், ஈழத்தின் படைப்பனுபவமும் வாசக அனுபவமும் அண்மைய கொடுங்கனவேயன்ன அனுபவங்களால் எவ்வாறானதொரு தீவிர மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கின்றதென்பது தெளிவாகும். இந்நிலையில் தீ மீண்டும் காலச்சுவடு பதிப்பகத்தினால் ‘கிளாசிக்’ வரிசையில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. அதற்கான வலுவான காரணங்கள் உண்டா?

தீக்குள் விரலை வைத்தால் இன்பம் தோன்றுமா என்பதே, தீயின் அடிப்படையான உசாவல்.

“தூரத்துப் பார்வைக்கு ஒளியாய், வெளிச்சமாய், அருகி வர அருகி வர வெப்பமாய், வெப்பம் அதிகரித்துச் சூடாகப் பரவும் நியதி” என முந்தைய பதிப்பின் முன்னுரையில் இதை அழகாக விட்டல்ராவ் விபரிக்கின்றார். வாசகன் இவ்வாசகங்களுடன் ‘தீயாக எரிக்கும் நியதி’ எனவும் சேர்த்து வாசித்துக் கொள்கிறான். தீண்டும் அனுபவம் மிக இளங்குருத்துப் பருவத்திலேயே (தீ நாயகனான ‘அவனை’) மிகவும் சுடுகின்றது. கமலாவுடனான அவனது தீண்டல் ‘கல்யாண விளையாட்டு’. அதன் விளைவாக நண்பர்களிடத்தும், வீட்டிலும் ஏற்படும் கலாதி. வீட்டின் இதமான சூழலிலிருந்து மகாஅக்கிரமியான அப்பா, அவனை போர்டிங்கிற்குப் பிரஷ்டம் செய்து விடுகிறார்.

போர்டிங், யோசேப் சுவாமியாரின் ஆளு கைக்கு உட்பட்ட பிரதேசம். சுவாமியாரின் ‘போதனை’ அவனுக்கு அவனுள்ளேயே பெருங் கலாதியை ஏற்படுத்திவிடுகின்றது.

அந்தக் கலாதியின் வெம்மையைக் குளிர்விக்கும் எத்தனத்தில் எழுந்த தேடுகை வளையத்துக்குள் வந்து அகப்பட்டுக் கொள்பவள் அவனது ‘கலாதியான முதற்குருத்தினி’ பாக்கியம். பாக்கியத்திடம் கற்ற தீண்டும் வித்தையை, சமூகம் ஒப்பும் சட்ட வரம்புகளுக்குள் தொடர்ந்து பயில அவன் ஒவ்வொரு கட்டத்திலும் தேடிக் கண்டடையும் பெண்களே சாந்தியும் லில்லியும் புனிதாவும். சுவாமியாரிடம் பெற்ற வலியை வாழ்நாள் முழுவதும் சுமந்து, இறுதியில் மலர்ந்தும் மலராத பாதிமலரான திலகாவிடம் இறக்கிவைத்து, விசித்திரமான தொரு பழிவாங்கலில் அவன் இறங்க முற்படுகையில், சரசு வந்து தடுத்துவிடுகிறாள். சரசுவிடம் அவன் பெறுவது, இந்தியமனம் வாழ்வனுபவ இறுதியில் பெற்றுக் கொள்ளும் விரக்தி. அதன் பக்கவிளைவான தத்துவ விசாரத்தின் தவிர்க்கமுடியாத நீட்சியான ‘ஞானம்’.

கதையாக நோக்கும்போது கவர்ச்சி எதுவுமற்றதொரு பிண்டமே ‘தீ’. பாலுணர்வை மையப்படுத்தி நகரும் ஒரு நாவலாக ‘தீ’ இருப்பினும், லிங்க உறுப்புகளை அருட்ட உன்னும் மலினமான நோக்கமும் அதற்கான முயற்சிகளும் அறவே கிடையாது. நாவலின் பாத்திரங்கள் வளர்த்தெடுக்கப்பட்டவையாக இல்லை. அவை ஏற்கெனவே வார்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான தனித்துவப் பண்புகளோ, அப்பாத்திரங்களுக்கான வேறு உபகதைகளோ தீயில் இல்லை. அவன் தனித்து அடையாளம் காணப்பட முடியாத ஒரு ஆண், அவர்களும் அவ்வாறேயான பெண்கள், அவ்வளவே. நாயகனுக்கு வேறு வேலைகள் எதுவுமே இல்லையோ என்ற ஐயம் எழும் வண்ணம் அவனது தீண்டல் தேவையையும் அதற்கான அவனது எத்தனங்களையும் அவற்றின் விளைவுகளையும் மட்டுமே சுட்டிக்காட்டி மிக விரைவாக நகர்ந்து சென்று முடிவடைகிறது இந்த நாவல். நாவல் முடிவடையும்போது அவனும், அவன் தீண்டிய பெண்களும் நாவலின் பக்கங்களிலிருந்து பறந்து சென்று மாயமாய் மறைந்துவிட, அங்கே வாசகன் மட்டும் ‘தனது’ தீண்டல் அனுபவங்களை மீட்டி, அலைமோதும் மனதுடன் ‘ச்சே’ எனச் சலித்துத் துவள்கிறான். அவ்விடத்தில் ‘தீ’யை அடியொற்றிய வேறு ஒரு நாவல் வேறு பாத்திரங்களுடனும் கதைக்களனுடனும் மீண்டும் உயிர்க்கிறது. இவ்வம்சமே ‘தீ’யின் மிகப் பெரிய வெற்றி.

இதைக் குறிப்பாக முன்னுணர்ந்து ‘தீ’யின் முதற்பதிப்புக் கான தனது முன்னீட்டில் “இதன்கண் வரும் பாத்திரங்கள் அத்தனையும் கற்பனையே. இவர்களில் யாராவது நம் மத்தியில் வாழுகின்றனர் என்ற மயக்கம் யாருக்காவது ஏற்படின், அதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன்.. இங்கே சித்திரிக்கப்பட்டுள்ள கட்டங்கள் பலவோ, சிலவோ அல்லது ஒன்றோ, இங்கு விஸ்தரிக்கப்பட்டுள்ள வகையிலோ, அல்லது சற்று வேறுபட்ட விதத்திலேயோ அநேகருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்கலாம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்” எனச் சமாத்கார மாகக் கூறியிருக்கிறார் எஸ்.பொ.

‘தீ’ முதன்முதலில் வெளியாகியபோது இக்கூற்று வலுவுடையதாக விளங்கியிருக்கலாம். ஆனால் ‘வரலாற்றில் வாழ்தல்’ எனும் எஸ். பொவின் சுயவரலாறு வெளியாகிய பின்னர், அதனையும் ‘தீ’யையும் ஒப்பு நோக்கும் ஒருவனால் யோசேப் சுவாமியார், பாக்கியம், சாந்தி, லில்லி, லில்லியின் தாத்தா, புனிதம், சரசு ஆகிய அனைவரையும் மிகச் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். இவ்வடையாளம் காணல் ஒரு கலாதியான அனுபவம். திலகாவை அடையாளம் காண்பது மிகக் கடினம். அதற்கான சுவடுகள் எதுவும் வரலாற்றில் வாழவில்லை. அடையாளம் காண முற்படின் அதுவும் ஒரு கலாதியை உருவாக்கலாம். ஆயினும் எஸ். பொ கலாதிக்கு அஞ்சுபவர் அல்லர். கலாதியேயானது அவரது வாழ்க்கை. சத்தியத்தை ஒப்புக்கொடுக்கும் ‘கெட்ட பழக்கம்’ அவரிடமும் உண்டு. இல்லாவிடில் அவரால் ஒரு எழுத்தாளனாகத் தொடங்கவோ, அதைத் தொடரவோ முடியாது போயிருக்கும்.

மேலைத்தேய மொழிகளில் எழுந்த பல நாவல்களும் திரைப்படங்களும் பாலுணர்வை மிக அற்புதமாகக் கையாண்டு உன்னதங்களைத் தொட்டிருக்கின்றன. சுட்டிக்காட்டிப் பட்டியலிடமுடியாத அளவுக்கு அவை எண்ணிக்கையிலும் தரத்திலும் மேம்பட்டவை. அதிகம் ஏன், சிங்களத் திரையுலகின் இளம் இயக்குநர்கள் பாலுணர்வுச் சிக்கல்களை மையப்படுத்தி அற்புதமான திரைப்படங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். இந்திய மொழிகளில் எனது சிற்றறிவுக்கு எட்டியவரையில் கன்னட இலக்கியம் பாலுணர்வு தொட்டுப் பல அரிய பொக்கிசங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘நவ்ய’ கன்னட இலக்கியப் போக்கை ஆற்றியவர்களும், குறிப்பாக யு.ஆர். அனந்தமூர்த்தியும் பல அபூர்வ புனைவுகளைத் தந்திருக்கிறார்கள். ஆனால் தமிழில் பாலுணர்வு பற்றி எழுந்த புனைகதைகள் ஒப்பீட்டளவில் குறைவானவை. வீரியம் குன்றியவை. தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிச் சொல்லவே நாக்கூசுகிறது. பாலுணர்வையும் மையமாகக் கொண்டு இலக்கியம் படைத்தவர்களாக சிதம்பர ரகுநாதன், லா.ச.ரா, தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, அ. மாதவன், நீல. பத்மநாதன், சாரு நிவேதிதா, எஸ்.பொ, மு. தளையசிங்கம், உமா வரதராஜன், தமிழ்நதி, உமா மகேஸ்வரி, சல்மா போன்றதொரு சிறுவரிசை ஒன்றையே நாம் கொண்டுள்ளோம். ஏனைய படைப்பாளிகள் போகிற போக்கில் பாலுணர்வை அல்லது அதன் நுகர்ச்சி அனுபவத்தைத் தொட்டுச் செல்வார்களேயொழிய முழு அளவிலான விஸ்தீரணமானதாகவோ, பாலுணர்வின் மீது கட்டமைக்கப்பட்ட விசாரமாகவோ தமது படைப்புகளைத் தர முயலவில்லை. எஸ்.பொவும் கரிச்சான் குஞ்சுவும் ஏனையவர்களிடமிருந்து குறிப்பிடத்தகுந்த அளவில் வேறுபடுபவர்கள். ‘பசித்த மானிடம்’ என்னும் தனது அற்புத சிருஷ்டியில் மனிதனது வயிற்றிலும் அடிவயிற்றிலும் எழும், என்றும் அடங்காத இரு பசிகளையும், அவற்றைத் தீர்க்கும் அவனது முனைப்புகளையும், அதன் விளைவாக அவனது ஆன்மா கொள்ளும் வறுமையையும், அவ்வறுமையிலிருந்து அவன் பெறும் ஆன்ம ஈடேற்றத்தையும் அற்புதமாக விபரித்தார் கரிச்சான் குஞ்சு.

எஸ்.பொ தனது தீயில் வயிற்றுப் பசியை மிகச் சாதுரியமாகத் தவிர்த்து, அடிவயிற்றின் பசியை மட்டுமே முன்னிறுத்தி, தன்னைத்தானே சவுக்கால் விளாசி, மனம் ஏங்கிச் சலித்துச் சாம்பும் ஒருவனைக் காண்பிக்கின்றார். “தீயின் கங்குகள் நீறுவிடும் உள்ளத்துடன் (நீறில் மறைந்திருக்கும் நெருப்புப் பொறி தீயை ஜனிக்காதா?) மாட்டுத் தொழுவ விஸ்தீரணமுள்ள வீட்டை நோக்கி நடக்கின்றேன்.” என முடிய எத்தனிக்கும் தீ. அவ்வரி களுக்குள்ளேயே மடிந்து முடிந்துவிடாமல், மீண்டும் ஒரு சுவாலைக்காக ஏங்கித் தொடர்கின்றது.... அத்‘தீ’.

இப்பகைப்புலத்தில் நின்று நோக்குகையில் தீயின் மறுபிரசுரமும் ‘கிளாசிக்’ என அதனை மகிமைப்படுத்தலும் முக்கியமானவை, காலப் பொருத்தமானவை என்பதே எனது துணிபு.

‘தீ’க்கும் எனக்கும் ஏறத்தாழ ஒரே வயது. இந்த முன்னுரைக்காக வாசித்ததுடன் சேர்த்து நான்கு தடவைகள் தீயை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் தீயின் சுவாலைப் பளபளப்பும் வெம்மையும் குன்றாதிருப்பதையே உணர்கிறேன்.

“அடிவயிற்றின் அகம் - புறத்துச் சங்கதி; அன்னையிட்ட தீயும்கூட - அதுவே”. இதைச் சொன்னது நானல்ல. முந்தையப் பதிப்பின் முன்னுரையின் முதல் வாக்கியமாக விட்டல்ராவ் சொல்லியிருக்கிறார்.

அன்னையிட்ட தீயல்லவா? ஆகவே, அது அப்படித் தானிருக்கும்!

என்றும் நித்தியமாய்!

ஒரு கலாதியாய்....! தீ....!

குறிப்பு:

எஸ்.பொ என அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரை சிட்னியில் காலமானார். ஈழத்து இலக்கியச் சூழலின் மூத்த படைப்பாளியாகத் தன்னை நிறுவிக்கொண்டவர். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்புகள், விமர்சனம், நாடகம் எனத் தன் எழுத்துப் பணியை மேற்கொண்டவர். ஜூன் 4, 1932 இல் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த எஸ்.பொ, அவரின் இறுதிக் காலம்வரை தமிழகத்திலும் சிட்னியிலும் வசித்து வந்தார். சென்னையில் மித்ர பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார்.

ஈழத்து இலக்கியத்தில் எஸ்.பொவின் பங்கு முக்கியமானது. ஈழத்து முற்போக்கு முகாமில் இயங்கிய எஸ்.பொ, அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அங்கிருந்து பிரிந்து, நற்போக்கு இலக்கியம் என்கிற வகையறாவைத் முன்மொழிந்தார். எஸ்.பொவின் எழுத்து இலங்கை, தமிழகம், அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா எனப் பல்வேறு நிலப்பகுதிகள் சார்ந்து விஸ்தரிப்பு பெற்றிருந்தது. எஸ்.பொ வின் இலக்கியப் பணி அளப்பரியது. அவரது மொழிபெயர்ப்புகளில் முக்கியமானது மகாவம்ச நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. தீ-, சடங்கு-மாயினி-, வரலாற்றில் வாழ்தல் (சரிதம்)-, ஆப்பிரிக்க மொழிபெயர்ப்புகள்-, ? (கேள்விக்குறி), -வீ, -முறுவல், ஆண்மை,- காந்தி தரிசனம், நற்போக்கு இலக்கியம் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

ஈழத்து எழுத்துச் சூழலில் தன்னை எழுத்துப் போராளியாகவே நிறுவினார். அவரின் இலக்கிய வாழ்வைக் கௌரவிக்கும் நோக்கில் 2010ஆம் ஆண்டிற்கான கனேடிய இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது வழங்கப்பட்டது. ஈழத்து இலக்கியச் சூழலின், அரசியலின் பக்கங்களுக்கு அவரால் ஆற்றப்பட்ட தொண்டுகளை காலச்சுவடு நினைவுகூர்கிறது.

காலச்சுவடு நவீன தமிழ் கிளாசிக் வரிசையில் வெளிவர இருக்கும் எஸ்.பொன்னுத்துரையின் ‘தீ’ நாவலுக்கு றஞ்சகுமார் எழுதிய முன்னுரை இங்கே வெளியிடப்படுகிறது.

http://www.kalachuvadu.com/issue-181/page36.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.