Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வருகை

கே.ஜே.அசோக்குமார்

Tigers_Clips_Hang_Dress_Skin_Nude_Captiv

புலியை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் கிலி எப்படிப்பட்டதாக‌ இருக்குமென்று அப்போதுதான் உணர்ந்தான் சசி. அதுவும் புலியை ஒரு அறையில் சந்திப்பது என்பதை அவன் நினைத்துகூட பார்த்தது இல்லை. இதுவரை அது எப்படிப்பட்ட அதிர்ச்சியாக இருக்கும் அதிலிருந்து எப்படி தப்பிக்க முடியும் என்று சிந்தித்ததும் இல்லை. இரவு விளக்கு மட்டும் எரியும் அந்த மெல்லிய இருட்டில் பலமாக மூச்சுவிடக்கூட பயமாக இருந்தது அவனுக்கு. தும்மலோ இருமலோ வந்துவிடக்கூடாது என்று மிக கவனமாக கடவுளை வேண்டிக் கொண்டான். ஒரு குழந்தை போன்று எந்த கவலையும் இன்றி தூங்கும் அதனிடம் மெல்லிய குறட்டைஒலி வருவது போலிருந்து. தான் குறட்டை விட்டிருந்தால் அது அறிந்திருக்க வாய்ப்பிருக்குமோ என்ற சந்தேகமும் பயமாகவும் இருந்தது.

ஐந்தரை மணிக்கு எழுந்து சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் உறங்குவது அவன் வழக்கம். அன்று ஒரு மிருகத்தின் வாசனையை எழுந்ததுமே உணர்ந்தான். அதன் உடலில் இருக்கும் வெப்பமும், வாயில் கோழையினால் உண்டான ஒரு வாடை அது. அது என்ன வாடை என்ற யோசனையில் கட்டிலிருந்து காலை கீழே வைக்கப் போனவனுக்கு தூக்கிவாரிப்போட்டு கால்களை மேலே தூக்கிக்கொண்டான். அந்த இருட்டில் அதை எப்படி கவனித்தான் என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்த அவசரத்தில் கட்டிலின் அசைவினால் அது கீரிச் என்று ஒலி எழுப்பியது. அந்த ஒலியை இவ்வளவு நாராசமாக இதுவரை கேட்டதில்லை. கட்டிலை சுக்குநூறாக உடைக்க வேண்டும் போல் இருந்தது. நல்லவேளையாக கண்களைத் திறக்காமல் லேசான முனகலுடன் வாயை சப்புக் கொண்டிக்கொண்டு மீண்டும் தூங்கியது. அறை நண்பர்க‌ள் இல்லாத அன்றைய தேதி மிகமுக்கியமான நாளாக இருக்கப்போகிறது என பதைபதைத்தான்.

எப்படி இந்த மிருகம் உள்ளே வந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை வழிதவறி வந்துவிட்டதா? அல்லது யாருக்காவது பயந்து இங்கு ஓளிந்திருக்கிறதா? அதன் அசைவுகளிலும், நிதானத்திலும், அதன் உப்பிய வயிறும் நன்கு உணவு உண்டுவிட்டுதான் வந்திருக்கிறது என தெரிகிறது. இன்னும் எவ்வளவு நேரம் இப்படி அமர்ந்திருக்க போகிறேன் என்கிற கவலை தன் முடிவை எதிர்நோக்கி மேலும் கவலைக் கொண்டான். மெல்ல ஜன்னலிலிருந்து பரவிய சூரிய ஓளியில் அதன் உடலின் நிறம் துலக்கமாகியது. செம்மைநிற வெல்வெட் போன்ற ரோமங்கள் கொண்ட உடலில் க‌ருமை கோடுகள் அழகான‌ தீற்றலாக ஓடின. தாடையிலும் கழுத்து பகுதியிலும் முன் நெற்றியிலும் வெண்மை நிறம் கொஞ்சம் இருந்தது. முன் நீட்டிய கால்களில் மாறிமாறி தலைவைத்து தூங்கியது. திடீரென கால்களை ஒருபக்கமாக கொண்டு தலையை கீழே வைத்து அக்கடா எனத் தூங்கியது. கால்மணி நேரமாக அதைத்தான் கவனித்துவருகிறான். லேசாகப் பிளந்த கரிய உதட்டில் மூச்சு வெளியேறுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தது. பேன் காற்றில் அதன் உடல் ரோமங்கள் அசைந்தபோது கண்களை இடுக்கிக் கொண்டது.

படுக்கைஅறை வாசலில் படுத்திருப்பதால் கூடம், அடுப்படிக்கு செல்லமுடியாமல் அதனிடமிருந்து எப்படி தப்பிப்பது எனத் தெரியவில்லை அவனுக்கு. சின்ன காலடி ஓசையில்கூட எழுந்து தாக்கக்கூட என்ற அச்சம் ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டிருந்தது. அமர்ந்தபடி போர்வையை தலை வரை மூடி கண்கள் மட்டும் திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அதனுடன் நேரடியாக மோதுவது, போர்வையை அதன்மீது போட்டு தப்பித்துவிடுவது, ஜன்னலில் இருக்கும் கண்ணாடியை எடுத்து குத்தி அதைக் கொல்வது என பல யோசனைகள் செய்து ஒவ்வொரு முடிவும் ஒரு தவறு இருப்பதாகவும் அதை அது எளிதாக சமாளித்து தன்னை கொன்று விடும் என நினைத்து ஒவ்வொன்றாக‌ கைவிட்டான். அவன் ஊரில் உள்ள அம்மா அப்பாவிடம் அவனது இன்றைய இறப்பை தெரிவிக்க ஆள்கூட இல்லை. அது தன்னை தின்றால் எழும்புகள்கூட மிஞ்சாது என்றுதான் தோன்றியது. ஏனெனில் அதன் உருவமும் எடையும் நான்கு மனிதர்களை தின்னக்கூடியது போலிருந்தது.

அசைந்து கொடுத்து மெதுவாக எழுந்து நின்ற புலி உடலை முறுக்கிக் கொண்டது. அந்த அறை முழுவதும் அதுவே நிறைந்திருந்தது. அவனை திரும்பி பார்த்தபோது எதையோ மறந்துவிட்டு அவனைப் பார்ப்பது போலிருந்தது. அதன் கண்களில் தெரிந்தது கோபமோ, நிதானமோ, ஆனால் யோசிக்கிறது என தோன்றியது. இவனை தாக்கலாமா வேண்டாமா என்றும் யோசித்திருக்கலாம். நிதானமாக குனிந்து தன் முன்னங்கால்களை நக்கியது. நிறுத்தி பின் ஏதோ ஒன்றுவிடுபட்டதுபோல மீண்டும் நக்கியது. அவனை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு திரும்பி எதிர்புறமிருந்த பால்கனிபோன்ற சிட்டவுட்டிற்கு கதவை காலால் தள்ளி சென்று சற்று அகன்றிருந்த ஒரு கிரில் கம்பிவழியாக குனிந்து லாவகமாக வெளியேறிச் சென்றது.

அப்போதுதான் அந்தக்கதவு தாழ்ப்பாள் இல்லாமல் லேசாக திறந்திருப்பது தெரிந்தது. வேகமாகச் சென்று அந்தக் கதவை முதலில் தாள் போட்டான். முன்னால் இருக்கும் அடுக்களைக்கு வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அது சாலையோரமாக சென்றுக் கொண்டிருப்பது தெரிந்தது. அபார்ட்மெண்டுகள் நிறைந்த அந்த பகுதிக்கு புலி ஒன்று வரமுடியும் என்பதே ஆச்சரியமாக இருந்தது. யாரும் கவனிக்கவில்லையா? அது சென்ற திசையிலிருந்து பேப்பர்கார சிறுவனும், பால்வாங்க வரும் ஒரு பெண்மணியும் சற்று இடைவெளியில் கடந்து போனார்கள். முழுமையாக வெளிச்சம் பரவாததால் கவனித்திருக்க முடியாது என தோன்றியது.

வேகமாக பேண்ட் சட்டை அணிந்து வெளியே வந்து வாசலில் இருந்த காவலாளியிடம் ஓடினான். அப்போதுதான் தூங்கி எழுந்து ப்ரஷை வாயில் வைத்திருந்த அவரிடம் நடந்ததை கூறினான்.. முதலில் அவர் நம்பவே யில்லை. சந்தேகமாக அவனைப்பார்த்து வாயில் இருந்த பேஸ்ட் எச்சியை துப்பிவிட்டு சும்மா சொல்கிறீர்கள் என்றார். இல்லை என்றதும், பின் பலமாக யோசித்துவிட்டு அடுத்த முறை வரும்போது பிடித்துவிடலாம் என்றார். ஆனாலும் இன்னும் முழுமையாக அவர் நம்பவில்லை.

வீடு வந்த அவனுக்கு அன்றைய பொழுது முழுவதும் அதைப் பற்றிய நினைவாக இருந்தது. இதில் புரிந்த விஷயம் என்னவெனில் அது தன்னை தாக்கவரவில்லை என்பதுதான். அதனுடைய நோக்கம் என்னவாக இருக்கும் என நாளெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தான்.

வீட்டை மாற்றவேண்டும் அல்லது வேறு ஊருக்கு செல்லவேண்டும் என்கிற நினைப்பு நாள்முழுவதும் நினைத்துக்கொண்டான். தினப்படி வேலைகளை செய்யவிடாமல் அலைக்கழித்தது அந்த நினைவுகள். எப்போதும் இல்லாத‌ அன்றைய அலுவலக தினம் வேலைகள் இல்லா பெரும் யோசனைகளோடு முடிந்தது. மாலை வீட்டிற்கு வந்ததும் எல்லாக் கதவுகளையும் மூடினான். இரவுவரை புத்தகங்கள் படிப்பதும், துணிகளைத் துவைப்பதும், அடுக்கிவைப்பதும் என்று உடலுக்கும் மனதுக்கும் வேலைக் கொடுத்துக் கொண்டிருந்தான். தாழ்பாள் போடப்பட்டிருப்பதை உறுதிப் படுத்திக்கொண்டு விளக்குகளை அணைக்காமல் படுத்துறங்க ஆரம்பித்தான். ஆனால் உறக்கமில்லாமல் நெளிந்தபடி கிடந்தான். கடைசியாக‌ லேசான உறக்கத்தில் வந்த கனவில் புலி உள்ளே வந்துவிட்டது தெரிந்தது. அறையில் இருபக்கமும் நடந்தது. சின்ன உறுமல்கள் செய்தது. அதன் கீழ் தாடையை நீளமாக விரித்து கொட்டாவியை விட்டது. மெல்ல முகத்தை நீட்டி அவனை முகர்ந்தது. கனவில் இருந்த துல்லியம் பயமாக இருந்தது. இந்தக் கனவே வேண்டாம் என எழுந்தமர்ந்தபோது ஹாலுக்கு போகும் அதே வாசலில் புலி மீண்டும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தது. அதற்குப்பின் அவனுக்கு தூக்கம் வரவில்லை.

அன்றைய காலையில் புலி அதேபோல அவனைப் பார்த்துவிட்டு விடியற்காலை இருளில் ஜன்னல் கதவை காலால் திறந்து எகிறிகுதித்து வெளியேறியது. கதவை நகர்த்தியவிதம் முன்பே அதற்கு தெரிந்திருந்து போலிருந்தது.

இப்போது அது நிரந்தர பயமாக மாறிவிட்டிருந்தது. சொல்லமுடியாத அவமானமாக, வாழ்வின் மாறாத சங்கடமாக‌ அது மாறிவிட்டிருந்தது இப்போது எதையாவது செய்தாக வேண்டும். தொலைபேசியில் இரு அறை நண்பர்களையும் அழைத்தான். அவர்கள் எப்போதும் அவனைப் பார்க்கும் ஒரு வேடிக்கையாக இதையும் நினைத்துக் கொண்டார்கள். கொஞ்சம் அழுத்திக் கூறியதில் ஒருவன் மட்டும் வந்து சேர்ந்தான். அவனால் நம்பமுடியவில்லை. செய்வினையாக இருக்கலாமென்றான். கிராமத்தில் பிறந்தவன் அப்படிதான் யோசிப்பான் என தோன்றியது. இன்று என்ன செய்கிறது என்று பார்த்துவிடலாம் என்று கொஞ்சம் பாதுகாப்பாக கூடத்திலேயே இருந்து கொண்டான். அன்றிரவு வந்த புலி, கூடத்தில் அவனைக் கண்டதால் கண்களும் உடல்மொழியும் மாறுபட்டன. ரத்தம் படித்த தன் உதடுகளால் இளித்து உறுமியது. முன்னங்கால்களை வேகமாக அடிப்பதுபோல் அசைத்து தன் கோபத்தைக் காட்டிய வேகத்தில் நண்பனுக்கு உடலெல்லாம் நடுக்கம் க‌ண்டுவிட்டது. சும்மா சொல்வதாக நினைத்து வந்த அவனுக்கு அன்றிரவே சாமான்களுடன் வெளியே போய்விட்டான். இரண்டாவது நண்பன் வரவே இல்லை. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அதைப் பற்றி சொன்னதும் அவனிடம் பேசுவதை நிறுத்தி கொண்டார்கள். வனத்துறையினரிடம் சொல்லலாம் என சொன்னபோது மட்டும் மறுப்பு தெரிவித்தார்கள்.

கொஞ்ச நாளில் சசி புலியை மெல்ல புரிந்துகொள்ள ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் நெருங்கி பழக ஆரம்பித்தான். அதன் உடலை தடவிக் கொடுத்தபோது உடல்சிலிர்க்க கண்கள் சொருக படுத்துறங்கியது. அதன் காதுமடல்களின் பக்கத்தில் சொறிந்தபோது தலைசாய்த்து மேலும் அதை தொடர விருப்பம் தெரிவித்தது. உணவு அல்லது படுத்துறங்கவென்று தனி வசதிகள் வேறு எதுவும் அது கேட்கவில்லை. அந்த வீட்டில் இருந்து உறங்கமட்டுமே விரும்பியது. அதில் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் நண்பர்கள்தான் காணாமல் போனார்கள். இதனால் வாடகையை பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் மாதாந்திர செலவுகள் அதிகமாகியது சுற்றியிருந்தவர்கள் அவனுடன் பேச பயந்தார்கள் அவனை அதுவே கவலைக் கொள்ளவைத்தது. சனி, ஞாயிறுகளில் அவன் தேடிச்செல்லும், அவனைத் தேடிவரும் நண்பர்களை இழந்தான். அவர்களுடனான இரவு நேர அரட்டைகள், அப்போதைய மது, இரவு நேர சினிமா, தொலைக்காட்சி எல்லாம் இல்லாமல் ஆயின.

ஆனால் புதிய நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். ஒரு புலிவிரும்பி, ஒரு காட்டை நேசிப்பவன், ஒரு எழுத்தாளன், அந்த ஊர் செல்வந்தர் என்று புதிய மனிதர்கள் அவனைத் தேடி வந்து பேசினார்கள். அவனின் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள். அத்தோடு அவர்களுக்கும் இதற்குமுன்பு சந்தித்திருந்த‌ புலியும் அதனால் ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டார்கள். புலியை எப்படிக் கையாள்வது என்பதை பற்றிய அறிவுரைகளை அவன் கேட்காமலே கூறினார்கள். ஒரு கட்டத்தில் சலிப்பாக இருந்தது. ஆனால் அதில் இருந்த தன் மேலான அவர்களின் அன்பு பிடித்திருந்தது.

புலிப்பிரியர்கள் என நிறைய நண்பர்கள் அவனைத் தேடி வரதொடங்கினார்கள். கொஞ்ச நாளில் அவன் மேலிருந்த பயம் மதிப்பாக கூடியது.. அப்பகுதியில் அவனுக்கென்று ஒரு ஆளுமை உருவாகிவந்தது. புலியை வளர்ப்பவன், புலியுடன் இருப்பவன், புலியுடன் வாழ்பவன், பெரிய பலசாலி, சாகசவிரும்பி என்று பலவாறு அவனைப்பற்றிய பேச்சுகள் வந்தன. வேட்டைக்காரன் போல் உடையணிந்து தொப்பி, தூப்பாக்கியுடன் அலைவதாக அவனைப்பற்றி வதந்திகள் அவனுக்கே வந்தன. அவனே அறியாத அவன் திறமைகளாக சிலவற்றைப் பற்றி பேச ஆரம்பித்திருந்தார்கள். புலி இரவு நேரத்தை கழிக்க தன்னைச் சார்ந்து இருக்கிறது. வேறு ஒருவராக இருந்தாலும் அதைத் தான் செய்யப்போகிறது, இதில் தனக்கு தனிப்பட்ட திறமைகள் இருப்பதாக அவன் நினைக்கவில்லை. ஆனாலும் தலைநிமிர்ந்து கொஞ்சம் கர்வம் கொண்டுதான் வெளியிடங்களில் திரிந்தான்.

பிழைவரமால் புலி மிகச்சரியாக அதன் நேரத்தை கடைபிடித்தது. இரவு பத்துமணிக்கு வந்து காலை ஆறுக்கு வெளியேறியது. அதன் காரணமாக அவனும் நேரத்தை கடைபிடிக்க வேண்டியிருந்தது. மிகச்சரியாக படுக்கைக்கும் வர வேண்டியிருந்தது. வந்ததும் அதைத் தடவிக் கொடுப்பதும் கால்களின் விரல்களை நீவிவிடுவதையும் செய்தான். அது அந்த இரண்டையும் மிக விரும்பியது. இயல்பாக ஆரம்பித்த ஒன்று அவன் தினப்படி வேலைபோல் ஆனது. சரியான நேரத்தில் வராமலோ முன்பே விளக்குகளை அணைத்துவிட்டு உறங்கச் செல்வதையோ அது விரும்பவில்லை. தன் உறுமல்களாலும் நகங்கள் நீண்ட விரல்களை காட்டி அவனை குலைநடுங்க வைத்தது.

சிலநாட்களில் புலியினுடான விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக‌ அதிகமாயின. அதன் காதுகளைப் பிடித்து இழுத்து, கழுத்துத் தோளைப் பற்றித் தள்ளி, கால்களைப் பிடித்து இழுத்து என்று அவன் செய்த சேட்டைகள் ஒரு கவனமின்மையுடன் கூடிய ஒரு அமைதியுடன் ரசித்தது. அவன் மேல் பாய்ந்து நகங்கள் உள்ளிழுத்த கையால் அறைந்து பற்களால் மென்மையாக் கடித்து அவனுடன் விளையாடியது. சில சமயம் நாக்கால் அவனை நக்கி குஷிப்படுத்தும். சொரசொரப்பான அதன் நாக்கால் நக்கும்போது ரத்தம் வரக்கூடும் என பயந்திருக்கிறான். ஆனால் அப்படி நடந்ததில்லை. அவன் மேல் மென்மையாகத்தான் எப்போதும் நடந்து கொண்டது புலி. ஒரு கட்டத்தில் புலியை இனிப் பிரியமுடியாது எனத் தோன்றியது.

மிகக் குறைந்த நாளிலேயே அது நட்பாகிவிட்டது அவனுக்கு வியப்பாக இருந்தது. புலிகளைப் பற்றி அவன் நினைத்திருந்த அனைத்தும் பொய்யாகிப் போயின. பொதுவாக வனவிலங்குகளில் தெரியும் வன்மமும் கோபமும் ஏதுமில்லாமல் இருப்பதும் அதன் உற்சாக உடல்மொழியில் தினம் ரசிப்பதுமாக இருந்தான். அவன் வாசிப்புகள், தொலைகாட்சி பார்க்கும் நேரங்கள் எல்லாம் மாறின. அலுவலகம் முடிந்து வந்த கொஞ்ச நேரத்தில் புலி வந்துவிடும். அதனுடன் விளையாட்டு பின் உறக்கம் என்று கழிந்தன நாட்கள். அது யாரையும் துன்புறுத்தாததால் அது வரும் பாதையில் மக்கள் தேவையில்லாத நட‌மாட்டத்தை வைத்துக் கொள்வதில்லை. காலை அது போகும்போது அப்படியே நடந்தது.

சில காலங்களுக்குப்பின் அறைநண்பன் இதைப்பற்றி சொல்லியதும் அம்மாவும் அப்பாவும் பதறியடித்து வந்து இதை பார்த்து ஆச்சரியப்பட்டு போனார்கள். உனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றார்கள். புலியை இதுவரை அவர்கள் ஜூ-வில் கூட பார்த்தது கிடையாது. அவர்கள் பார்க்காத நினைக்காதது எப்படி நடந்தது என்று அவர்களுக்குப் புரியவில்லை. புலி வந்துபோன ம‌றுநாள் முழுவதும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

புலியுடன் தங்கள் மகன் நட்பாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. இப்படியே அவன் வாழ்க்கை சென்றுவிடும் என பயந்தார்கள். ஏனெனில் அவர்கள் அவனுக்கு அமைக்க விரும்பிய வாழ்க்கையில் புலி இல்லை. புலியின் மேல் பயமிருந்து அவர்களுக்கு அது வரும் சமயத்தில் பக்கத்துவீட்டிற்கு சென்றுவிட்டார்கள். அவர்கள் காலடி ஓசை கேட்டாலே புலி கோபம் கொண்டது.

இருநாட்களுக்குபின் மகனை தன்னுடன் அழைத்து செல்ல முடிவெடுத்தார்கள். அவர்கள் நினைத்திருந்த‌ வேலை, புதியவீடு, திருமணம், குழந்தை என்று அவர்கள் நினைக்கும் சாதாரண வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க‌ நினைத்தார்கள். மூவரும் பேசியபின் கடைசியாக ஒத்துக்கொண்டான் சசி. ஆனால் ஏதோ தவறு செய்வது போன்ற எண்ணம் ஆழ்மனதில் இருந்துகொண்டிருந்தது. புலிக்குத் தெரியாமல் வீட்டை காலிசெய்து செல்ல ஒப்புக்கொண்டான்.

அன்று எப்போதும்போல விளையாடிவிட்டு தூங்கிய புலி மறுநாள் வாசலில் இறந்துகிடந்தது. ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. முதல்நாள் உண்ட ஏதோ ஒரு உணவு அதற்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம் அல்லது பாம்பு போன்ற விஷஜந்துக்கள் தீண்டியிருக்கலாம் என தோன்றியது. திடீரென அது இறந்தது அவனுக்கு மட்டுமல்ல அவன் அப்பா அம்மாவிற்கு கவலையாக இருந்தது. சுற்று வட்ட மக்கள் அந்த புலி தற்கொலை செய்து கொண்டதாக பேசிக்கொண்டார்கள். அவன் செல்லப்போகிறான் என்று புலி உணர்ந்து அப்படி செய்திருக்கலாம் என்று அவன் நினைத்தாலும் அது இல்லை என நினைத்து மனதை தேற்றிக் கொள்வான்.

வீட்டை காலி செய்ய வேண்டிய தேவை இல்லாமல் போனது. பலநாள் தனிமையிலேயே இருந்தான். புலிப்பிரியர்கள் வருவதைக் கொஞ்சம் கொஞ்சமாக‌ நிறுத்திக்கொண்டார்கள். இதுவரை அவனுக்கிருந்த மரியாதை, அந்த‌ஸ்து எல்லாம் மெதுவாகக் காணாமல் போனது.

http://solvanam.com/?p=38392

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.