Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமைக்கு கூட்டமைப்பே காரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமைக்கு கூட்டமைப்பே காரணம்!

முத்துக்குமார்

5a4cb9c3-b6b1-4434-ac12-43e008bae1d81.jp

மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் ஐ.நாவுடன் இணைந்து செயற்பட இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்ததனால் அதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காகவே ஒத்திவைக்கப்படுவதாக மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தாலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தாம் உருவாக்கிய அரசாங்கத்தை பாதுகாக்கவேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளது. வருகின்ற யூன் மாதம் பாராளுமன்றத் தேர்தல் எதிர்பார்க்கப்படுவதால், அறிக்கை அதனை பாதிப்பதாக இருக்கக்கூடாது என்பதே இந்த முடிவிற்கு பின்னாலுள்ள காரணம். இதற்காக கடந்த சில நாட்களாக அமெரிக்கா முயற்சித்துக்கொண்டிருந்தமை அனைவரும் அறிந்ததுதான். இலங்கையின் புதிய வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீராவும் முயற்சித்துக்கொண்டிருந்தார்.

ஆட்சிமாற்றம் ஒன்றிற்காக அமெரிக்கவும், இந்தியாவும் காய்நகர்த்திக்கொண்டிருந்தபோதே இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தமிழ்த்தேசிய சக்திகள், குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் சட்டத்தரணிகள் பேரவை என்பன இது விடயத்தில் எச்சரிக்கையை விடுத்திருந்தன. ஜனாதிபதி தேர்தலையும் புறக்கணிப்புச் செய்திருந்தன. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த எச்சரிக்கையை கொஞ்சம் கூட கணக்கெடுக்கவில்லை.

ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் என்பது தேர்தல் காலத்தில் தெளிவாகத் தெரிந்திருந்தது. யாழ் மாவட்ட வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்திருந்தால் கூட ஆட்சிமாற்றம் இடம்பெற்றிருக்காது. இந்நிலையில் ஆட்சி மாற்றத்தை விரும்பியிருந்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடனும், இந்தியாவுடனும் வலுவான பேரம் பேசலை மேற்கொண்டிருக்க முடியும். ஆட்சி மாற்றத்திற்கு நாம் தயார், ஆனால் பொறுப்புக் கூறலுக்கும், சுயநிர்ணயமுடைய அரசியல் தீர்வுக்குமான உத்தரவாதத்தினை எழுத்துமூலம் தரவேண்டும் எனக் கேட்டிருக்கலாம். இல்லையேல் தேர்தலை நாம் புறக்கணிக்கப் போகின்றோம் என எச்சரித்திருக்கலாம். ஆனால் அவை எதுவும் நடைபெறவில்லை. தமிழர்கள் வெற்றுக்காசோலையில் கையெழுத்து வைத்துக்கொடுக்க கூட்டமைப்பினர் காரணமாகினர்.

இந்த வகையில் விசாரணை அறிக்கை ஒத்திவைத்தமைக்கு முழுமையான காரணம் கூட்டமைப்பேயாகும். அவர்கள் மிகவும் பச்சைத்தனமாக தமிழ்மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு இன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். சம்பந்தன் சர்வதேச வானொலிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதில் கவலையுமில்லை, மகிழ்ச்சியுமில்லை எனக் கூறியிருக்கின்றார். மகிழ்ச்சியில்லாதிருக்கலாம், ஆனால் மக்களுக்கான நீதி மறுக்கப்படும்போது ஒரு தலைவனால் எவ்வாறு கவலை கொள்லாமல் இருக்கமுடியும்? இதுவரைகாலமும் சிங்கக்கொடியேற்றம், சுதந்திரதின விழாவில் பங்கேற்பு, தாயகம் தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படைக் கோட்பாடுகள் புறக்கணிப்பு என தனது செயற்பாடுகளினால் தமிழ்த்தேசிய அரசியலுக்கு துரோகம் இழைத்தவர் இன்று வாயினாலேயே நேரடியாகத் துரோகமிழைக்கின்றார்.

சம்பந்தனின் ஆத்மார்த்த சீடர் சுமந்திரன். இன்னும் ஒருபடி மேலே சென்று உள்ளக விசாரணைக்கு நாம் தயார் என அறைகூவல் விடுக்கின்றார். ஏற்கனவே இடம்பெற்ற உள்ளக விசாரணைகளுக்கு என்ன நடந்தது? திருக்கோணமலை மாணவர்கள் கொலை, மூதூர் தொண்டுப் பணியாளர்கள் கொலை சம்பந்தமான விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்பது சுமந்திரனுக்கு தெரியாதா? மைத்திரியின் முதுகு தடவுவதற்கும் ஓர் அளவு இருக்க வேண்டாமா?

விசாரணை அறிக்கை பிற்போடப்படுவதற்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கலாம். பிஸ்வால் கொழும்புக்கு வந்தபோது சம்பந்தனும், சுமந்திரனும் நேரடியாக அவரிடம் விசாரணை அறிக்கை பிற்போடப்படுவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை எனக் கூறியிருக்கின்றனர். அரசியல்வாதி ஒருவர் அதனை இப் பத்தியாளருக்கு உறுதிப்படுத்தியிருக்கின்றார். தமிழ் ஊடகங்களிற்கு மட்டும் தாம் அதனை எதிர்ப்பது போல ஒரு தோற்றத்தைக் காட்டியிருக்கின்றனர். சுமந்திரன் ஜெனிவா சென்று ஒத்திவைப்பதில் தமக்கு ஆட்சேபனயில்லை எனக் கூறியதாக புலம் பெயர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒத்திவைப்பு அறிக்கை வெளிவந்த பின்னர், இவர்களது கருத்துக்களைப் பார்க்கும்போது ஆட்சேபனையில்லை என அவர்கள் தெரிவித்தமை உண்மையாக இருக்கும் என்றே கருதவேண்டியுள்ளது. கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளக விசாரணை பற்றிய சுமந்திரனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே ஒழிய கூட்டமைப்பின் கருத்தல்ல எனக் கூறுகின்றார். இங்கு உண்மையில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்துத்தான் தனிப்பட்ட கருத்து. ஏனெனில் கூட்டமைப்பை இயக்குபவர்கள் சம்பந்தனும், சுமந்திரனுமே. சுதந்திரதின விழாவில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டமையை சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களது தனிப்பட்ட முடிவு எனக் கூறியிருந்தார். அவரது கருத்தினை தமிழ்ப் பத்திரிகைகள் கூட வெளியிடவில்லை. கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளின் தலைவர்களும் கண்டிக்கவில்லை.

வடமாகாண சபையின் இன அழிப்பு தீர்மானம் பற்றி இங்கு பெரிதாக பேசப்படுகின்றது. சம்பந்தன் தலைமையின் செயற்பாடுகளையும், கருத்துக்களையும் பார்க்கும்போது அத்தீர்மானத்தை ஒரு தேர்தல் நாடகமாகவே கொள்ளத் தோன்றுகின்றது. சாந்தி சச்சிதானந்தம் அதனை 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் போல ஒரு தேர்தல் குண்டு என வர்ணித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியை மீறி தனிநாட்டுக் கோரிக்கை மேல்நிலைக்கு வந்தபோது அதனை தாம் ஏற்காவிட்டால் 1977 ஆம் ஆண்டு தேர்தலில் பாதிப்பு ஏற்படும் எனக் கருதித்தான் ஏற்றிருந்தனர். 1977 ஆம் ஆண்டு தேர்தலை ''தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு'' எனவும் பிரகடனப்படுத்தி இருந்தனர்.

ஆனால் தேர்தல் முடிந்த கையுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினையும், அரசாங்கம் வழங்கிய ஜப்பான் ஜீப்பையும் ஏற்றுக்கொண்டனர். ஸ்ரீலங்கா அரச கட்டமைப்பில் தமிழ்மக்களுக்கு இடமில்லை எனக் கூறியே தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்தவர்கள், அந்த அரச கட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றது ஏன் என்பதற்கு அவர்களிடம் விடையில்லை. அக்காலத்தில் இளைஞர்கள் சிலர் ''கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்'' என்ற கோஷத்தையும் எழுப்பியிருந்தனர். தொடர்ந்து 1981இல் தமிழ் மக்களின் கூட்டிருப்பையும் கூட்டு உரிமையையும் சிதைத்த எந்தவித அதிகாரமுமில்லாத மாவட்ட அபிவிருத்திச் சபை முறைiயும் கூட்டமைப்பினர் ஏற்றிருந்தனர்.

இன்று, சம்பந்தனும், சுமந்திரனும் சுதந்திர தினத்தில் கலந்துகொண்டமை, லண்டனில் சம்பந்தனதும், சுமந்திரனதும் புகைப்படங்கள் எரிப்பு, கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள முடியாமை, தமிழரசுக் கட்சிக்குள் தேசிய சக்திகளின் போர்க்குரல், புதுக்குடியிருப்பில் மாவை சேனாதிராசாவை ''சுதந்திரதினத்தில் பங்குபெற்றவர்கள் வேண்டாம்'' எனக் கூறி மக்கள் துரத்தியமை என்கின்ற நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலை இவை பாதிக்கச் செய்யும் எனக் கருதித்தான் இன அழிப்பு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பந்தன் தலைமைக்கு விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்படப் போகின்றது என்பது முன்கூட்டியே தெரியும். இருந்தும் அதற்கு அவர்கள் பச்சைக்கொடி காட்டியிருக்கின்றனர். சர்வதேச விசாரணை என்பது ஓர் உணர்வுபூர்வமான விவகாரமாக இருக்கின்ற நிலையில் அதற்கு நாமும் உடந்தையாக இருப்பது வெளியில் தெரிந்தால் அதுவும் தேர்தலை வெகுவாகப் பாதிக்கும் என்பதும் இனஅழிப்புத் தீர்மானத்திற்கு காரணமாகியிருக்கின்றது. இன அழிப்புத் தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தால் சர்வதேச விசாரணை என்கின்ற முடிவினை மனித உரிமைகள் பேரவை எடுத்தபோது கொண்டுவந்திருக்க வேண்டும். அப்போது மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முயற்சித்தபோதும் இன அழிப்பு என்ற பதத்தை பயன்படுத்துவதற்கு விக்கினேஸ்வரன் அனுமதிக்கவில்லை. சுமந்திரன் நீண்டகாலமாவே இனஅழிப்பு என சொல்வதற்கு ஆதாரமில்லை என எதிர்த்து வந்தார். தமிழரசுக்கட்சியின் வவுனியா மாநாட்டில்கூட எதிர்ப்பைத் தெரிவித்தார். வடமாகாண சபையின் தலைவர் சிவஞானம் ''தான் இருக்கும் வரை இன எதிர்ப்புத் தீர்மானத்தை கொண்டுவர விடமாட்டேன்'' என வடமாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு கூறியிருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை சாட்சியங்கள் சமர்ப்பிக்குமாறு கூறியபோது சம்பந்தன் தலைமை அதில் பெரிய அக்கறை காட்டவில்லை. சுமந்திரன் அதிகளவில் அறிக்கை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கீழ்மட்ட உறுப்பினர்களான அனந்தி, ரவிகரன், சஜீவன் என்போரும் மாத்திரமே அக்கறை செலுத்தி மக்களைக் கொண்டு சாட்சியங்களைச் சமர்ப்பிக்கச் செய்தனர். ஜெனிவாவிலும்கூட கூட்டமைப்பின் சார்பில் வந்தவர்கள் இனப்படுகொலை பற்றி வாயே திறக்கவில்லை. வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர். சுமந்திரன் 'உள்ளடக்கம் பற்றி நாம் கவலைப்படவில்லை. தீர்மானம் வந்தால் போதும்'' என்றார்.

இன அழிப்புத் தீர்மானம் நிறைவேற்றிய அடுத்தநாளே விக்கினேஸ்வரன் ஜனாதிபதியைச் சந்தித்து 'உங்களுடைய அரசிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரவில்லை'' என நெளிந்தார். மகிந்தர் அரசில் மைத்திரி அமைச்சராக இருந்தநிலையில் அது யாருடைய அரசு? பம்மாத்துக்கும் ஓர் எல்லை வேண்டாமா?

இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கின்றபோது இனப்படுகொலைத் தீர்மானம் ஒரு தேர்தல் நாடகம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. கூட்டமைப்பின் இந்தக் காட்டிக்கொடுப்பு என்பது இப்போது மட்டும் தோன்றிய ஒன்றல்ல. அது போர் முடிவுக்கு வந்த காலம் தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட காட்டிக்கொடுப்புகளின் பரிணாம வளர்ச்சியே! அதன் உச்சநிலைதான் சுதந்திர தினத்தில் பங்கு கொண்ட நிகழ்வு. இந்தக் காட்டிக்கொடுப்புகளுக்கு தமிழ்மக்களின் இருப்பு தொடர்ந்து பலியாகிக் கொண்டுவருவது தான் மிகப்பெரிய சோகம்.

''தந்தை செல்வா தமிழ் மக்களை கடவுள் தான் காப்பற்ற வேண்டும்'' என்றார். தமிழ்மக்களை கூட்டமைப்பிடமிருந்து காப்பற்ற யாராவது கடவுள்கள் வரமாட்டார்களா?

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=5a4cb9c3-b6b1-4434-ac12-43e008bae1d8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.