Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வில்லியம் வாலஸும் மெல் கிப்சனும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வில்லியம் வாலஸும் மெல் கிப்சனும்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 11:03.04 AM GMT ]
braveherat_001.jpg
தமிழினத்தின் புனித மண்ணாக அறிவிக்கப்பட வேண்டிய முள்ளிவாய்க்கால் மண் ரத்தத்தால் நனைந்த நாளை நினைவுகூரும் விதத்தில், 2010ல், கோயம்பேடு அங்காடியில் ஓர் உருக்கமான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பெருவணிகரும் தயாரிப்பாளருமான நண்பர் மணிவண்ணன்.

சுமார் ஆயிரம்பேர் திரண்டனர். கொல்லப்பட்ட உறவுகளின் நினைவாக மெழுகுவர்த்திகளை ஏற்றினர்.

அந்த நிகழ்வில் முதல் மெழுகுவர்த்தியை ஏற்றியவர், மறைந்த இயக்குநர் ஆர்.சி.சக்தி.  மறுநாள் சக்தி சாரைச் சந்தித்து நன்றி தெரிவித்தபோது, கண்கலங்க அவர் என்ன சொன்னார் என்பதை சக்தியின் சகோதரன் கமல் தெரிந்துகொள்ள வேண்டும்.

"அந்த மக்களை சர்வதேசம் காப்பாற்றியிருக்க வேண்டும்....அவர்கள் காப்பாற்றவில்லை. இந்தியா காப்பாற்றியிருக்க வேண்டும்.... இந்தியாவும் காப்பாற்றவில்லை.

கடவுளாவது காப்பாற்றியிருக்க வேண்டும்.... கடவுளும் காப்பாற்றவில்லை. 26 மைலில் இருக்கிற நாமாவது அவர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா?"

சக்தி சார் கண்ணீருடன் கேட்ட அந்தக் கேள்வி இன்னும் எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

2009ல், எம் ஒன்றரை லட்சம் உறவுகள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டதற்கு முழுமுதற் காரணம், இந்தியாவோ இலங்கையோ சர்வதேசமோ இல்லை கமல்!

கடலுக்கு அந்தப் புறம் அடித்த ரத்த வாடையை உணர முடிகிற தொலைவில் நெட்டை மரங்களென நின்ற நம் 8 கோடி பேரின் கோழைத்தனமும் பொறுப்பின்மையும்தான் கொன்றது அவர்களை!

இந்த ஆதங்கத்தில்தான், அரசியல்வாதிகளைக் குறை சொன்ன உங்களிடம், 'நாம் மட்டும் என்ன கிழித்தோம் கமல்' - என்று கேட்டிருந்தேன். உண்மையில் அந்தக் கேள்வி, எங்களுக்கும் சேர்த்தே எழுப்பப்பட்ட கேள்வி.

2009ன் தொடக்கத்தில், ஒரே ஒரு நாள் எட்டு கோடித் தமிழனும் தெருவுக்கு வந்து நின்றிருந்தால் இனப்படுகொலை தொடர்ந்திருக்குமா? உலகில் வேறெந்த இனமாவது கூப்பிடு தொலைவில் தன் சொந்தங்கள் கொன்று குவிக்கப்பட்டபோது இப்படி எட்ட இருந்து வேடிக்கை பார்த்திருக்குமா?

நாம் ஒரு மிகப் பெரிய மக்கள் சமூகம் கமல்! இனப்படுகொலை செய்த இலங்கையின் சனத்தொகையைப் போல நாம் நான்கு மடங்கு! 2009ல் நாம் என்ன செய்தோம்? செயல்படாத அரசியல்வாதிகளைப் பார்த்து சுட்டுவிரலை நீட்டும் போது, மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்கித்தானே நீள்கிறது கமல்!

8 கோடி பேர் கூட எதற்கு? ஒரு கோடிபேர் வீதியில் இறங்கியிருந்தாலே நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். அதுதானே யதார்த்தம்!

ஒருகோடி பேர் வீதிக்கு வந்திருந்தால், 'கொன்று குவி' என்று ஆயுதம் கொடுத்து கொலைகாரனுக்குத் துணை போயிருக்குமா இந்தியா?

தெரிந்தும் தெரியாததைப் போல கண்ணை மூடிக் கொண்டிருந்திருக்குமா சர்வதேசம்?  26வது மைலில் நடப்பது இன அழிப்பு தான் என்பதை இங்கேயிருக்கிற ஊடகங்கள் மூடி மறைத்திருக்குமா?

இன அழிப்பு பற்றிய கவலையின்றி, ரம்பா, மேனகா, ஊர்வசிகளின் நாட்டியங்களைப் பார்த்து ரசிக்கிற துணிவு இருந்திருக்குமா ரோமாபுரி பாண்டியர்களுக்கு?

இடைத் தேர்தலில் வாக்களிக்க பக்கத்துத் தெருவில் தலைக்கு ஐந்தாயிரம்.... எங்களுக்கு மட்டும் இரண்டாயிரமா' - என்று தெருவில் இறங்கி போராடுகிற ஒரு திருவோட்டுச் சமூகத்தில் பிறந்து தொலைத்திருக்கிறோம் கமல்..... இந்த இனம் பொது நீதி கேட்க வீதிக்கு வருமா?

கோடானு கோடி பேர் வீதிக்கு வருவதில் பிரச்சினைகள் இருக்கலாம்...

மக்களைத் திரட்டும் சக்தி படைத்த நான்கு பிரபலங்கள்.... நான்கே நான்கு பிரபலங்களாவது 2009ல் வீதிக்கு வந்திருக்கலாமே... வந்தார்களா?

எம்.ஜி.ஆர். மட்டும் 2009ல் இருந்திருந்தால், 5 லட்சம் உயிர்களைக் காப்பாற்ற வீதிக்கு வந்து போராடியிருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன் கமல்! நிச்சயமாக, கோடானு கோடிப் பேர் அவருடன் சேர்ந்து வீதிக்கு வந்திருப்பார்கள். அடுத்த கணம் இனப்படுகொலை நின்றிருக்குமா நின்றிருக்காதா?

இனப்படுகொலையைத் தடுக்கவும் நாம் முயலவில்லை. நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்பதிலும் முன்நிற்கவில்லை. கலம் மேக்ரே என்கிற பிரிட்டிஷ் இயக்குநர், 'நடந்தது இனப்படுகொலைதான்' என்பதை அழுத்தந்திருத்தமாக நிறுவுகிற ஆவணப் படங்களை வெளியிட்டு இலங்கையை அதிரவைக்கிறான். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட சமயத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களுக்கு திரைக்கதை வடிவம் கொடுத்தால், பார்க்கிறவர்களின் இதயத்தைப் பிழிந்துவிட முடியும் கமல்! அதன்மூலம், உலகின் மனசாட்சியைத் தட்ட இயலும். அதற்கான முயற்சிகளில் முன்னணிக் கலைஞர்கள் ஏன் இறங்கவில்லை?

கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேரில் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது கமல்....

சீரழிக்கப்பட்ட எங்கள் சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது....

திரைக்கதையை அமைக்கத் தேவையான இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

மேட் மேக்ஸ் - என்கிற ஒரு அதிரடி மசாலாப் படத் தொடரின் கதாநாயகன் மெல் கிப்சனை நாம் மறந்துவிட முடியுமா? கிப்சன் நடித்த லெதல் வெபான் உலக அளவில் வசூலைக் குவித்தது. (அதைத் தழுவித்தான் சூர சம்ஹாரம் எடுக்கப்பட்டது என்கிறார்களே... மெய்யாலுமா?)

கிப்ஸனை நாம் நினைவில் வைத்திருப்பது அவனது மசாலா படங்களுக்காக அல்ல! அந்தக் கலைஞன் நடித்து இயக்கிய 'பிரேவ் ஹார்ட்' என்கிற திரைக்காவியம்தான் அவனை நம் நெஞ்சில் நிறுத்தியது. 1995ல் வெளியான பிரேவ் ஹார்ட், சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 5 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது.

பிரேவ் ஹார்ட் - ஸ்காட்லாந்து சுதந்திரப் போராட்ட வீரன் வில்லியம் வாலஸின் வாழ்க்கைக் கதை. படத்தைத் தயாரிக்க போதிய நிதியுதவி கிடைக்கவில்லை கிப்சனுக்கு! 'வார்னர் பிரதர்ஸ்' கிப்சனுக்கு உதவ முன்வந்தது.

அதற்குக் கைமாறாக, லெதல் வெபான் படத்தின் இன்னொரு பாகத்தில் கிப்சன் நடித்துத்தரவேண்டும் என்பது நிபந்தனை. வாலஸுக்கு இருந்த 'பிரேவ் ஹார்ட்' கிப்சனுக்கும் இருந்தது. வார்னர் பிரதர்ஸின் நிபந்தனையை ஏற்க மறுத்தான் கிப்சன்.

பிரேவ் ஹார்ட் - என்கிற அந்தத் திரைக்காவியத்தால், ஸ்காட்லாந்தின் விடுதலைப் போர் குறித்த புரிதல் உலக அளவில் ஏற்பட்டது. வாலஸின் மன உறுதியும், இனப் பற்றும் போற்றப்பட்டன.

பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து வில்லியம் வாலஸ் போரிட்ட இடமெல்லாம் சுற்றுலாத் தலமாக மாறியது. கிப்சனுக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது இதுதான்!

சிறுவயது வில்லியம் வாலஸிடம் அவனது தந்தை பேசுவதாக பிரேவ் ஹார்ட் படத்தில் ஒரு காட்சி. அந்தக் காட்சியின் வசனத்தை, கமல் போன்ற கலைஞர்கள் மறந்திருக்க முடியாது.

"வரலாறுகள் அனைத்தும் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டவை, வாலஸ். அவர்கள் எழுதுகிற ஒவ்வொரு வரலாறும், உரிமை கேட்டுப் போராடுகிறவர்களின் உயிரைப் பறித்தபிறகே எழுதப்படுகிறது"......

இந்த வசனத்தின் எதிர்விளைவுதான், மெல் கிப்சனின் படைப்பு. பொய்யான வரலாற்றைக் குழிதோண்டிப் புதைத்தது, கிப்சன் படைத்த வில்லியம் வாலஸின் உண்மையான வரலாறு.

ஸ்காட்டிஷ் மக்களின் அடிமனத்தில், அடுப்பில் கிடக்கிற தணலாகக் கிடந்தது விடுதலை உணர்வு. வாலஸின் துணிவும் உறுதியும் அதைக் கிண்டிவிட்டது. அவன் பின்னால் அவர்கள் திரண்டார்கள். முறையாகப் பயிற்சிபெற்ற பிரிட்டிஷ் ராணுவத்தை, மிகக் குறைந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி அடித்து விரட்டினார்கள்.

பிரிட்டிஷாரிடம் பேசுவோம் - என்கிற பம்மாத்தெல்லாம் அவனிடம் செல்லுபடியாகவில்லை. கடைசி கடைசியாக, துரோகிகளைவைத்துத்தான் வாலஸை வீழ்த்தியது பிரிட்டன். 

வாலஸின் இந்த வீர வரலாறு, பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து விடுதலைப் போர் வீரர்களுக்கும் பொருந்தும். அவர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கவும், போரில் வீழ்த்த முடியாத அவர்களைத் துரோகத்தால் வீழ்த்துவதும் தானே நபும்சகக் கோழைகளின் வழக்கமாக இருக்கிறது.

ராஜதுரோகக் குற்றச்சாட்டின் கீழ் வாலஸ் மீது லண்டனில் விசாரணை நடக்கிறது. அவன்மீது அழுகிய முட்டைகளை வீசி தங்கள் ராஜபக்தியை வெளிப்படுத்துகிறார்கள் ஆங்கிலேயக் கோழைகள்.

மரண தண்டனை நிச்சயம் என்கிற நிலையிலும் வாலஸ் காட்டும் மன உறுதி, அவர்களைக்கூட அடியோடு மாற்றிவிடுகிறது. வாலஸின் தலையைத் துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிடும்போது, அவனுக்குக் கருணை காட்டும்படி அதே கூட்டம் குரல் கொடுக்கிறது.

"கருணை காட்டும்படி (மெர்ஸி) நீ கேட்டுக்கொண்டால், உன்னைச் சித்திரவதை செய்யாமல் கொல்ல உத்தரவிடுகிறேன்" என்று மாஜிஸ்திரேட் கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்க, ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும் வாலஸையே பார்க்க, உறுதி குலையாமல் "ஃபிரீடம்" என்று குரல்கொடுக்கிறான் வில்லியம் வாலஸ். அந்தக் காட்சியை நினைத்துப் பார்க்கும்போதே மெய்சிலிர்க்கிறது, கமல்! அது படம்!

ஆஸ்திரேலியத் தந்தைக்கும் ஐரிஷ் தாய்க்கும் பிறந்த மெல் கிப்சன், தாய் வழியாக ஸ்காட்டிஷ் விடுதலைப் போர் வரலாற்றைத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவில் பிறந்த கிப்சன், ஒரு வெற்றிகரமான நடிகராக உருவெடுத்தது ஆஸ்திரேலியாவில்! என்றாலும் அவனது மனத்தை ஸ்காட்லாந்தைத் தலைநிமிரச் செய்த வாலஸ் தான் ஆக்கிரமித்திருக்கிறான். அதனால்தான், வாலஸாகவே கிப்சனால் மாற முடிந்தது.

பிரேவ் ஹார்ட் - படப்பிடிப்பு, வாலஸுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே போர் நடந்த ஸ்காட்லாந்து பகுதிகளிலும், கிப்சன் தாயார் பிறந்த அயர்லாந்து பகுதிகளிலும் நடந்தது.

கூரிய ஈட்டிகளுடன் குதிரைகளில் பாய்ந்துவரும் பிரிட்டிஷ் படையை, முனை சீவப்பட்ட கட்டைகளை மட்டுமே ஆயுதமாக வைத்திருக்கும் வாலஸின் படைகள் வீழ்த்துகிற காட்சி, பார்க்கிற எவரையும் சிலிர்க்க வைப்பது.

பிரமாண்டமான போர்க்களத்தில், கிப்சன் பயன்படுத்தியது வெறும் 1600 பேரை! சீருடையையும் உடையையும் மாற்றி, பிரிட்டிஷ் வீரர்களாகவும் வாலஸின் தோழர்களாகவும் அவர்களையே பயன்படுத்தியிருப்பது படம் பார்க்கிற எவருக்காவது தெரிந்ததா என்ன! அதுதானே சினிமா!

கிப்சன் பற்றிப் பேசுவதன் மூலம் கமலிடம் நாம் கேட்பது ஒன்றே ஒன்றைத்தான்! திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கை, அதை மூடி மறைக்கப் பார்க்கிறது.

நடந்தது 'உள்நாட்டுப் போர்' தான் - என்கிற பச்சைப் பொய்யை உலகெங்கும் பரப்பப் பார்க்கிறது. கல்லம் மேக்ரேவின் ஆவணப்படங்கள் மட்டும் இல்லையென்றால், இலங்கையின் பொய் தான் மெய்யென்று எப்போதோ சான்றிதழ் கொடுத்திருக்கும் - பத்து நயாபைசாவுக்குக் கூட பயனற்ற ஐ.நா.!

இந்த நிலையில், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட அந்த இனப்படுகொலையின் கொடூரத்தை ரத்தமும் சதையுமாக செல்லுலாய்டில் பதிவுசெய்யும் விதத்தில் கமல் ஒரு திரைப்படம் எடுத்தால், சர்வநிச்சயமாக உலகின் மனசாட்சியை அது உலுக்கும். நடந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றவும் அது வழிவகுக்கும். 

கமல் போன்ற ஒரு கலைஞனைத் தவிர வேறு எவரால் இதைச் செய்ய முடியும்?

ஒன்றரை லட்சம் உறவுகளைக் காக்கத் தவறிவிட்டோம் கமல்....

அவர்களுக்கு நீதி கிடைப்பதற்குப் போடப்படும் முட்டுக்கட்டைகளை நீக்கத் தவறலாமா?

மருதநாயகம் - என்கிற உங்களது கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறவேண்டும்! அந்தக் கனவு நிறைவேறுவதற்கு, இந்த முயற்சி கூட அடிப்படையாகிவிடலாம்! எங்களைப் பொறுத்தவரை, கமல் என்கிற கலைஞனால், மருதநாயகத்தின் வரலாற்றைப் போலவே, தான் வாழும் காலத்தில் நடந்த இனப்படுகொலை வரலாற்றையும் துல்லியமாகப் பதிவு செய்ய முடியும் என்று நம்புகிறோம்....

என்ன செய்யப் போகிறீர்கள் கமல்?

சக்தி சார் சொன்னதைப்போல், "நமக்கெதற்கு வம்பு" என்று (அதுதானே நமது உண்மையான தேசியகீதம்) இதையெல்லாம் காதிலேயே வாங்காமல் போய்க்கொண்டேயிருக்கப் போகிறீர்களா? அல்லது, கல்லம் மேக்ரே போன்ற மானுடர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் வரலாற்றுக் கடமையை நீங்களும் நிறைவேற்றப் போகிறீர்களா?

போர் என்கிற போர்வையில் எம் இனம் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டதைத் திரைப்படம் மூலம் அம்பலப்படுத்த பணம் ஒரு பொருட்டல்ல கமல்! உங்களைப் போன்ற உன்னதமான கலைஞர்கள் அப்படியொரு முயற்சியில் இறங்கினால், இந்த இனம் தானாகவே முன்வந்து உங்களுக்கு உதவும்.

எம் இனத்தை இழிவுபடுத்த, ராஜபக்சேவின் பணத்தில் ஜான் ஆபிரகாம் படமெடுக்கலாம். எம் இனத்துக்கு நீதிகேட்க, எம் மக்களின் பணத்தில் நீங்கள் படமெடுக்கக் கூடாதா? 

சர் வில்லியம் வாலஸ் / கதை / கேட்ட கதைபோல் இருக்கிறதா? 

மெர்ஸி / விடுதலை அப்படியொரு படம் எடுங்கள் கமல்!  நான் மதிக்கும் இயக்குநர் ஒருவரிடம் போராடினேன்.அவர் எடுத்திருந்தால் ஜெனோ நடந்திருக்காது.

பணம் தேடி வரும் கமல். மகிந்த பணத்தில் ஜான் ஆபிரகாம் படமெடுக்கலாம்.. மக்கள் பணத்தில் நீங்கள் எடுக்கக் கூடாதா?

நல்ல சிங்களவர் இல்லவே இல்லையா? காசி ஆனந்தன் பதில்.

அவன் பணத்தில் ஆதாரம் தரும் கல்லம் மேக்ரே நீங்கள் படம் எடுங்கள்.... சர்வதேச விசா. நிச்சயம்!  சக்தி சொன்ன தேசியகீதம்

புகழேந்தி தங்கராஜ்

mythrn@yahoo.com

tamilwin

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.