Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரம் என்பது நல்ல சொல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரம் என்பது நல்ல சொல்

ஆர். அபிலாஷ்

foucault08.jpg

வேதியலில் சில வாயு அல்லது அமிலங்களை நிறமும் குணமும் அற்றது என்பார்களே அப்படி ஒரு வஸ்து தான் அதிகாரம். இதை புரிந்து கொள்ள எனக்கு வாழ்க்கையின் கிட்டத்தட்ட பாதி தேவைப்பட்டது. இதை சரியாக அறிந்து கொள்ளாததனாலே எனக்கு அதிகாரத்தில் எனக்கு மேலேயும் கீழேயும் உள்ளவர்களோடு உறவை தக்க வைப்பதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டன. இது என்னை நிம்மதியற்றவனாக, உலகத்தை, மனிதர்களை வெறுப்பவனாக என்னை மாற்றியது.

என்னுடைய நிலைக்கு மூன்று காரணங்கள். ஒன்று என் அப்பா. அவர் எப்போதும் அதீதமான இரட்டை நிலைகளில் இருப்பார். ஒன்று அதிகாரத்தை பொழிவார். அல்லது அன்பை பொழிவார். இரண்டிலும் திக்குமுக்காட செய்வார். பன்னிரெண்டு வயதில் இருந்தே அப்பாவுடனான உறவு எனக்கு சிக்கலானதாக மாறியது. அவர் எனக்கு அதிகாரத்தின் வடிவாக இருந்தார். அவரை வெறுத்தேன். அவரை எப்படி எதிர்ப்பது, தப்பிப்பது என சதா யோசித்தேன். பின்னர் படிக்கும், வேலை பார்க்கும் இடங்களில் என்னிடம் அதிகாரம் காட்டுகிறவர்களையும் என் அப்பாவின் ரூபங்களாகத் தான் பார்த்தேன். அட, படித்து வேலை செய்ய வந்தால் கூட அப்பாவிடம் இருந்து தப்பிக்க முடியாதா என குழம்பினேன். இது எனக்கு மிகுந்த நெருக்கடியை கசப்பை ஒரு காலத்தில் ஏற்படுத்தியது.

விக்கிரமாதித்யனின் சிம்மாசனம் பற்றிய கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அச்சிம்மாசனம் அதில் உட்கார வருகிற மன்னனிடம் இவ்வாறு சொல்லும்: “நீ தாராளமனமும் நீதியுணர்வும் கொண்டவனாக இருக்கும் பட்சத்தில் என் மீது உட்காரலாம். அல்லாத பட்சத்தில் உன் தலை சுக்குநூறாக வெடித்துப் போகும்”. பிறகு அது இக்குணங்களை கொண்ட விக்கிரமாதித்யன் பற்றின கதைகளை அம்மன்னனுக்கு கூற ஆரம்பிக்கும். அதிகாரத்தை பிரயோகிப்பவர்கள் அன்பும் கருணையும் நீதியுணர்வும், குறிப்பாக தாராள மனமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது ஒரு லட்சியம். அப்படி இருக்கும் போது நாம் அதிகாரத்தை நேசிப்போம். என் அப்பா அப்படி இல்லை என்பது தான் என் குறையாக இருந்தது. ஆனால் இது ஒரு லட்சியம் மட்டுமே. மனிதர்கள் இவ்விதம் இருப்பதில்லை.

அதிகாரத்தை பிரயோகிக்கிறவர்களிடம் நாம் ஒரு எதிர்பார்ப்பை வைக்கிறோம். அவர்கள் கருணை, தாராளமனம் ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும் என்கிறோம். இந்த எதிர்பார்ப்பு தான் தவறு. அதிகாரத்துக்கும் இந்த தாராளமனப்பான்மை போன்ற மதிப்பீடுகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதிகாரம் கொண்டவரிடத்து இந்த மதிப்பீடுகள் இல்லாததால் நாம் அதிகாரத்தையே ஒட்டுமொத்தமாய் வெறுக்க ஆரம்பிக்கிறோம்.

அதிகாரத்தை கொண்ட பெற்றோர் கண்டிப்புடனும் அன்புடனும் ஒரேநேரத்தில் இருக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோரால் இது இயல்வதில்லை. ஒன்று அன்பு மட்டும் காட்டுகிறார்கள். அல்லது கண்டிப்பு மட்டும். அன்பை மட்டும் காண்கிற குழந்தை அதிகாரத்தின் கண்டிப்பான முகத்தை எப்படி கையாள்வது என வளர்ந்த பிறகு புரியாமல் தவிக்கும். கண்டிப்பை மட்டும் காணும் குழந்தை வளர்ந்த பின் அதிகாரத்தை ஒரு எதிர்மறையான விசயமாக மட்டுமே கண்டு அஞ்சும், வெறுக்கும்.

அடுத்த காரணம் நான் ஏற்கனவே சொன்னது தான். நான் சதா மதிப்பீடுகளை அடுத்தவர்கள் மீது பொருத்தி அவர்களை மதிப்பிடுகிறவனாக இருந்திருக்கிறேன். பள்ளியில், கல்லூரியில், வேலையிடங்களில் அதிகாரத்தில் உயர்ந்தவர்களிடத்து பணிவுடனும் நெகிழ்வுடனும் இருந்திருக்கிறேன். ஆனால் எப்போது அவர்கள் என் மதிப்பீட்டு தேர்வில் தோற்கிறார்களோ பிறகு அவர்களுக்கு மரியாதை அளிப்பதை நிறுத்துவேன். அவர்களை வெறுப்பேன். அவர்களிடம் பேசுவதை, உறவாடுவதை தவிர்ப்பேன். இது அன்றாட வாழ்க்கையில் நிறைய சிக்கல்களை உருவாக்கும். வேலையை வெறுக்க வைக்கும். அந்த இடத்தில் இருந்து ஓடித் தப்பிக்க நினைப்பேன். அதிகாரத்தை மதிப்பிடாமல் கவனிக்க வேண்டும். நாம் நமக்கு மேலே உள்ள ஒருவரிடத்து பணியும் போது அவரை பணிய வில்லை. அவரது அதிகாரத்தை பணிகிறோம். அதிகாரத்துக்கு முகமோ பெயரோ மொழியோ குணமோ இல்லை. இதைப் புரிந்து கொண்டால் நம்மிடம் அதிகாரம் காட்டுகிறவர் ஒரு மட்டமான, கேவலமான ஆளாக இருந்தாலும் நமக்கு சிக்கல் இராது.

இப்போது இன்னொரு கேள்வி. அதிகாரத்திடம் ஏன் பணிய வேண்டும்? எதற்கு அதை பிரயோகிக்க வேண்டும்? அதை தவிர்க்கலாமே? கைவிடலாமே? இக்கேள்விக்கு பதில் யோசிக்கும் முன் நான் மூன்றாவது காரணத்துக்கு வருகிறேன். நான் அதிகாரத்தை வெறுத்ததற்கு மூன்றாவது காரணம் தமிழில் உள்ள சிறுபத்திரிகை சூழலும் பின்நவீனத்துவ கட்டுரையாளர்களும். தொண்ணூறுகளில் இங்கு அதிகாரம் என்ற சொல் மிகுந்த புழக்கத்துக்கு உள்ளானது. பூக்கோ தொடர்ந்து துதிக்கப்பட்டார். அதிகாரம் எங்கெங்கு பல நுணுக்கமான வடிவங்களில் உள்ளது என்பதைப் பற்றி பூக்கோ சொன்ன விசயங்கள் தமிழில் பரவலான கவனம் பெற்றன. குறிப்பாக நுண் அரசியல் எனும் சொல்லை ஒரு புளிப்பு மிட்டாயாக நாவில் உருட்டி ரசித்தோம். ஆனால் அபிமன்யு சக்கரவியுகத்தை தகர்க்கும் உபாயத்தை மட்டும் கற்றுக் கொண்டு அதிலிருந்து தப்பிப்பதை கற்காதது போல் நாமும் பூக்கோவை பாதி தான் கற்றுக் கொண்டோம். விளைவாக சிறுபத்திரிகை சார்ந்தவர்கள் பெரும்பாலும் பூக்கோவின் எழுத்தை அதிகார எதிர்ப்பாக மட்டும் புரிந்து கொண்டனர். அதிகாரம் செயல்படும் இடங்களை அறிந்து அதை எதிர்ப்பது தான் பூக்கோவின் நோக்கம் என நினைத்தனர். ஆனால் இது அல்ல உண்மை. பூக்கோ அதிகாரத்தை ஏற்பதைப் பற்றியும் பேசினார்.

அதிகாரத்தை பூக்கோ ஒரு தனி வஸ்துவாக பார்க்கவில்லை. அது மனித பரிவர்த்தனையின் போது உயிர்கொள்ளும் ஒரு ஆற்றல். பணம் போல. பணத்தை நீங்கள் பயன்படுத்தாமல் குழிதோண்டி புதைத்து, பின் அந்த இடத்தையும் மறந்தால் அது எவ்வளவு கோடியாக இருந்தாலும் அது வெறும் காகிதம் தான். ஒரு நாட்டில் ஆயிரம் கோடிகள் பணம் குவிந்திருக்கும். ஆனால் மனிதர்கள் அதை வெளியே விடாமல் பதுக்கி வைத்தால் அங்கு “பணவீக்கம்” தோன்றும். வறுமை ஏற்படும். பொருளாதாரம் விழி பிதுங்கும். பணம் புழக்கத்தில் இருந்தால் மட்டுமே நம் தட்டில் சாப்பாடு இருக்கும். குடிக்க நீரும், தூங்க தலைக்கு மேல் கூரையும் இருக்கும். இது போல் அதிகாரமும் புழக்கத்தில் இருக்க வேண்டும். அதிகாரத்தில் ஈடுபடாமல் தவிர்க்கிற பட்சத்தில் புற உலகுடனான உறவு பிரேக் டவுன் ஆன பேருந்தைப் போல் இருக்கும். பயணிகள் மொத்தமாய் இறங்கி அதை தள்ள வேண்டியது தான். அதில் ஏறி பயணிக்க முடியாது. ஆனால் நாம் சில சமயம் அதிகாரத்தை எந்தளவுக்கு வெறுக்கிறோம் என்றால் அதில் ஏறி பயணிக்காமல் அதை பின்னிருந்து தள்ளி விட தயாராகிறோம். அதுவே பரவாயில்லை என நினைக்கிறோம். ஆனால் இது எவ்வளவு பெரிய தொல்லை என நாம் அறிவதில்லை. அதிகாரத்தில் ஏறிக் கொண்டால் அது நம்மை பற்றி விழுங்கி விடும் என அஞ்சுகிறோம்.

தொண்ணூறுகளில் தீவிர இலக்கியத்தில் புழங்கினவர்களுக்கு அதிகாரத்தை கையாள்வதில் சிக்கல் இருந்ததை பார்த்திருக்கிறேன். நம்பியாரை கிராம மக்கள் ஒரு காலத்தில் நிஜவில்லனாக எண்ணி வெறுத்தது போல் அவர்கள் ஒட்டுமொத்தமாய் அதிகாரத்தை வெறுத்தனர்.

படிநிலையற்ற சமூகம் என்பது ஒரு கனவு மட்டும் தான். உண்மையில் படிநிலையின்றி மனித உறவுகள், குறிப்பாய் புற உலகில், சாத்தியமில்லை. நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தாலும் அங்கும் கட்சிக்குள் அதிகார படிநிலை இருக்கும். தலைமையின் அதிகாரத்துக்கு கேள்வியின்றி அடிபணிய வேண்டும். வேறு வழியில்லை. ஆனால் அடிபணிவது ஒரு கேவலமான விசயம் அல்லவா? இது ஒரு முக்கியமான கேள்வி.

தமிழகத்தில் இடதுசாரி சித்தாந்தத்தின் தாக்கம் காரணமாய் வாசிப்பு பழக்கமும் அரசியல் அறிவும் கொண்டவர்கள் ஆண்டான் – அடிமை எனும் வடிவத்தை எல்லா உறவுநிலைகளிலும் பொருத்திப் பார்ப்பது வழக்கம். ஆனால் பூக்கோ இந்த பார்வையை தலைகீழாய் புரட்டிப் போடுகிறார். ஆண்டான் அடிமைக்கு இடையிலும் அதிகாரம் ஒரு சுழற்சியில் இருக்கிறது என்கிறார். அதாவது யாரும் அதிகாரத்தை செலவழிக்காது தன் கையில் ஒரு வங்கி இருப்புத் தொகை போல வைத்திருக்க இயலாது. நீங்கள் ஒரு அரசியல்வாதியிடம், ஒரு மேலதிகாரியிடம், ஆசிரியரிடம், அப்பாவிடம் பணிந்து போகும் போது அவர்கள் தன்னிடம் உள்ள அதிகாரத்தை சற்று எடுத்து உங்களுக்கு அளிக்கிறார். அதை நீங்கள் பெற்று உங்களுக்கு கீழ் உள்ளவர்களிடத்து அளிக்கிறீர்கள். அவர்கள் அதை அவர்களுக்கு கீழே உள்ளவர்களிடத்து அளிக்கிறார்கள். இப்படி அதிகாரம் கீழே நோக்கி பயணிக்கிறது. எப்படி உங்கள் வீட்டு மாடியில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் இருந்து நீர் உங்கள் வீட்டில் எங்கு குழாயை திறந்தாலும் கொட்டுகிறதே அப்படி. ஒரே வித்தியாசம் மனித உறவுகளைப் பொறுத்தமட்டில் அதிகாரத்துக்கு சாக்கடை எனும் இறுதி நிலை இல்லை. அது சுழன்று மீண்டும் உங்களிடத்தே வந்து சேரும்.

பணியாமல் அதிகாரம் உங்களுக்கு கிடைக்காது. உங்களுக்கு கிடைக்காவிட்டால் உங்களுக்கு கீழே உள்ளவர்களுக்கு கிடைக்காது. நீங்கள் அதிகாரத்தை மறுக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த மனித உறவு செயல்பாடுகளும் ஸ்தம்பித்துப் போகும். தண்ணீர்த் தொட்டி குழாயின் ஓரிடத்தில் அடைப்பு ஏற்படுவது போன்றது இது.

அதிகாரத்தை முழுக்க தவிர்த்து மனித உறவாடல் சாத்தியப்படாதா? ஒரு நண்பர் என்னிடத்து இக்கேள்வியை கேட்டார். அவருக்கு அலுவலக, குடும்பச் சூழல் கசப்பானதாக இருந்தது. சதா நூலகத்தில் புத்தகங்களோடு பொழுதை ஓட்டினார். அதிகாரம் அவருக்கு ஒரு கசப்பு மருந்தாக இருந்தது. அவர் என்னைப் போல் ஒழுக்க மனப்பான்மை கொண்டவராகவும் இருந்தார். அதிகாரம் நம்மை கர்வமும், குரூரமும் கொண்டவர்களாக மாற்றும், களங்கம் ஏற்படுத்தும் என்றார். நாம் அதிகாரம் அற்று களங்கமற்றவர்களாக இருப்போமே என்றார். ஏன் அப்படி இருக்க முடியாதா? இதுவும் முக்கியமான கேள்வி. முதல் கேள்விக்கு பதில் தேடி விட்டு இதற்கு வருவோம்.

அதிகாரமின்றி வாழ இயலாதா? இதற்கு பதில் மற்றொரு கேள்வியில் உள்ளது. பணமின்றி வாழ இயலாதா? கந்தலாடை உடுத்தி, காட்டில் திரிந்து கனிகளைத் தின்று, மனிதர்களையே அண்டாது வாழலாம். மற்றபடி முடியாது. உண்மையில் பணத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. அது தரும் பொருட்களுக்குத் தான் மதிப்பு. ஆனால் பொருட்களுக்கு பணத்துக்கான வசீகரம் இல்லை. ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் வேண்டுமா அல்லது அதற்கு ஈடான பணம் வேண்டுமா என்றால் பணத்தையே கேட்பீர்கள். அப்பொருட்கள் உங்களுக்கு தேவையானதாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு அதற்கு ஈடான பணம் தான் ஈர்ப்பாக தோன்றும். காரணம் பணம் கட்டற்ற, முடிவற்ற தன்மை கொண்டது என நினைக்கிறோம். பணம் நம் கையில் இருக்கும் போது அது சாத்தியப்படுத்தும் முடிவற்ற வாய்ப்புகள் நமக்கு ஒரு கிளர்ச்சியை அளிக்கின்றன. இந்த கிளர்ச்சி பொருட்களை விட நமக்கு அதிக முக்கியமானது. இதனால் தான் மனிதன் பணத்தின் பின்னால் ஓடுகிறான். பணத்தால் அவன் அடையும் பொருட்களுக்கு ஒரு வரைமுறை உண்டென்றாலும், ஒரு அளவுக்கு மேல் பணத்தால் நமக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை என்றாலும், பணம் கட்டற்ற மகிழ்ச்சியை தரக் கூடியது எனும் மன மயக்கம் நமக்கு உள்ளது.

பணத்தின் இந்த தன்மை செக்ஸை போன்றது. ஒரு ஆணோ பெண்ணோ அல்ல செக்ஸ் தான் அதிக வசீகரமான விசயம். மனித உடலைத் தாண்டி நாம் செக்ஸை ஏதோ ஒரு வடிவில் தேடிக் கொண்டோ இருப்பது போல் பணத்தைத் தாண்டி அதன் மூலம் எதையோ தேடிக் கொண்டே இருக்கிறோம். இதே மயக்கம் தான் அதிகாரத்திலும் உள்ளது. அதிகாரத்தினால் ஓரளவுக்கு மேல் நமக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் அதில் நமக்கு ஒரு கிளுகிளுப்பு, லயிப்பு, மனமயக்கம் உள்ளது. மனித உறவுகளுக்கு இடையிலான கண்ணி இது. உலகம் முழுக்க மனிதர்கள் ஒருவருக்கு மற்றொருவர் பணிந்து வேலை செய்து, வேலை வாங்கி பாடு படுவதன் சூத்திரம் இது தான்.

பணம் புழங்காத ஒரு நாட்டில் சாப்பிட சோறு இருக்கும், ஆனால் அது நம் தட்டுக்கு வராது. சோறை பார்த்துக் கொண்டே அதை சாப்பிட முடியாது. அந்நாட்டு மக்கள் பசியில் சாவார்கள். அதிகாரம் புழக்கத்தில் இல்லாது போனால் இதே போல் மனிதர்கள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள இயலாமல் திணறுவார்கள். உறவாடுவதை நிறுத்துவார்கள். அதிகாரம் இன்றி மனித குலம் ஒருநொடி கூட மூச்சு விட முடியாது.

அடுத்து அதிகாரத்துக்கு பணிவதற்கு வருகிறோம். ஏன் பணிய வேண்டும்? பணியும் போது தான் நாம் பிரயோகிப்பதற்கான அதிகாரம் நமக்கு மேலிருந்து கிடைக்கிறது எனச் சொன்னேன். ஆனால் அதிகாரம் நம் தலைமீது கால் வைத்து அழுத்தும் போது, அளவு கடந்து நம்மை கட்டுப்படுத்தும் போது நமக்கு கோபமும் எரிச்சலும் ஏற்படுகிறது. அப்போது நாம் அதிகாரத்தை எதிர்க்கிறோம். நம் எதிர்ப்பின் நோக்கம் அதிகாரத்தின் மூலத்தை தகர்ப்பது அல்ல. அதிகாரம் காட்டுபவனை அழிப்பது அல்ல. இந்த அளவுக்கு மேல் என்னிடம் அதிகாரத்தை காட்டாதே எனக் கூறுவது. நாம் எதிர்க்கும் போது அதிகாரத்துக்கு மேலே இருப்பவர் சற்றே விட்டுக் கொடுக்கிறார். தன் மிதமிஞ்சிய அதிகாரத்தின் ஒரு பகுதியை நமக்கு அளிக்கிறார். நாம் அதை வாங்கி கீழே உள்ளவர்களிடம் காட்டுகிறோம். அவர்கள் அதை ஏற்று தமக்கு கீழே உள்ளவர்களுக்கு காட்டுகிறார்கள். ஆனால் பணியாமல் எதிர்க்க முடியாது. இது பூக்கோவின் முக்கிய கண்டுபிடிப்பு.

எப்படி பணியாமல் எதிர்க்க முடியாதோ அதே போல் எதிர்க்காமல் பணியவும் முடியாது. பணிவதும் எதிர்ப்பதும் மிக நுணுக்கமாக வெளியே தெரியாத வகையில் நிகழ்கிறது. இது தான் உண்மையான அதிகார விளையாட்டு. பணிவது என்பது எப்போதும் முழுக்க பணிவது அல்ல. அது போல் எதிர்ப்பதும் முழுக்க எதிர்ப்பது அல்ல. ஒரு வில்லின் நாணை இழுப்பது எதிர்ப்பது; விடுவது பணிவது – இரண்டும் நடக்கும் போது தான் நமது ஆற்றல் எனும் அம்பு வெளியே பாயும்.

மற்றொரு உதாரணம் தருகிறேன். நீங்கள் பூமியில் நடக்கிற செயல் புவியீர்ப்பை ஒரே சமயம் எதிர்த்து பணிகிற ஒன்று தான். புவியீர்ப்பு உங்களை சதா பூமியை நோக்கி இழுத்தி விழ வைக்க முனைகிறது. ஒரு காலை பூமியில் அழுத்தும் போது நீங்கள் புவியீர்ப்புக்கு பணிகிறீர்கள். மற்றொரு காலை தூக்கும் போது புவியீர்ப்பை எதிர்க்கிறீர்கள். தூக்கின காலை கீழே வைத்து பணிந்து, பணிந்த மற்றொரு காலை தூக்கி எதிர்த்து ஒரு அடி எடுத்து வைக்கிறீர்கள். இதை பிரக்ஞையின்றி செய்யும் போது தான் களைப்பின்றி நடக்கிறோம். இதை பிரக்ஞையின்றி அதிகாரத்திடம் செயல்படுத்தும் போது தான் சமூகத்திடம் சிறப்பாக சரளமாக உறவாடுகிறீர்கள்.

அதிகாரத்தை வெறுக்கிற யாருமே முழுக்க அதை தவிர்ப்பதும் இல்லை என்பதை கவனிக்கலாம். அது எங்கெல்லாம் நமக்கு பிடிக்காதபடி இருக்கிறதோ அங்கு அதை தவிர்க்கிறோம். பிடித்தபடி இருக்கிற இடத்தில் ஏற்று பிரயோகிக்கிறோம். நீங்கள் ஒரு ஆசிரியர் என்றால் வகுப்பறையில் உள்ள அதிகாரம் உங்களுக்கு பிடிக்கும். ஆனால் பள்ளி நிர்வாகியின் அறையில் உள்ள அதிகாரத்தை வெறுப்பீர்கள். முடிந்தளவுக்கு அங்கு போவதை, இருப்பதை தவிர்ப்பீர்கள். அதிகாரம் ஒரு நல்லவரிடத்து இருக்கும் போது நல்லதாகவும், கெட்டவரிடத்து இருக்கையில் கெட்டதாகவும் தோன்றும். ஆனால் அதற்கு அந்த குணங்கள் ஏதும் இல்லை. நல்லவர்களிடத்து உள்ள அதிகாரத்தை மட்டுமே விரும்பும் போது நாம் அதிகாரத்துக்கு ஒரு செயற்கையான நிறத்தை அளிக்க நினைக்கிறோம். ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லை. ஆனால் அப்படி நம்பும் போது நாம் வாழ்க்கை பூரா அதிகாரத்தின் ஒரு முகத்திடம் இருந்து ஓடித் தப்பித்துக் கொண்டே இருப்போம். விளைவாக ஒரு கட்டத்தில் நல்ல அதிகாரத்துடனான உறவையும் நாம் இழப்போம். உதாரணமாக பள்ளி நிர்வாகியின் அதிகார பிரயோகிப்பை ஏற்று, எதிர்க்க பிடிக்காமல் நாம் ஓடிப் போனால் வகுப்பறைக்குள் மாணவர்களிடத்து நம் உறவையும் தான் இழப்போம். வேலை பிடிக்கிறது, ஆனால் வேலையிடம் பிடிக்கவில்லை எனும் நண்பர்கள் பலரை தெரியும். அதிகாரத்தை மதிப்பிட்டு ஒருமுகமாக மட்டுமே பார்ப்பது தான் இவர்களின் பிரச்சனை.

என்னுடைய உறவினர் ஒருவர் அதிகாரத்தின் வஞ்சகமும் சூதும் நிறைந்த முகத்தை காணப் பிடிக்காதவர். நேரடியான அதிகாரப் போட்டியில் இருந்து விலகி வாழ விரும்புகிறவர். அதனாலே அவர் தனக்கு கிடைக்க வேண்டிய முக்கிய பதவியை மறுத்தார். அதனால் அவரது ஜூனியர் ஒருவர் அவருக்கு உயரதிகாரியாக வந்தார். தான் அதிகாரப் போட்டியில் இருந்து வெளியேறி விட்டதால் தனக்கு எந்த சிக்கலும் இராது என நண்பர் நினைத்தார். ஆனால் நேர்மாறாக நடந்தது. உயரதிகரியான ஜூனியர் அவரை கடுமையாக அவமானப்படுத்தி ஒடுக்க ஆரம்பித்தார். ஏனென்றால் ஜூனியருக்கு இவரைப் பார்த்து பயம். என்னதான் அதிகாரத்தை விட்டு விலகினாலும் இவர் எப்போது வேண்டுமெனிலும் தனக்கு போட்டியாக வரக் கூடும் என ஜூனியர் அஞ்சினார். விளைவாக அவரை தொடர்ந்து அவமானப்படுத்தினார். ஏன்? அதன் மூலம் அவரை தன்னுடன் அதிகாரப் போட்டிக்கு வரும் படி தூண்டினார். “சத்திரியன்” படத்தில் விஜயகாந்தை மறுபடியில் போலீசாக வேலையில் சேர்வதற்கு வில்லனான திலகன் தூண்டுவது போன்ற விசயம் இது. “சத்திரியன்” மகாபாரதத்தின் நவீன சினிமா வடிவம் தான். மகாபாரதத்தில் துரியோதனன் பாண்டவர்களைக் கண்டு சதா அஞ்சுகிறான். அதனாலே அவர்களை போருக்கு வரும் படி சீண்டிக் கொண்டே இருக்கிறான். சூதில் தோற்கடிக்கிறான். இந்த சீண்டலின் உச்ச வடிவம் தான் திரௌபதியின் துகிலிரிதல். பாண்டவர்களை வனவாசத்துக்கும் அஞ்ஞாதவாசத்திற்கும் அனுப்புகிறான். அப்போதும் பாண்டவர்கள் போரைத் தவிர்க்கவே நினைக்கிறார்கள். இறுதியில் பாண்டவர்கள் அவனிடத்து ஒரு சின்ன கிராமத்தை மட்டுமே கேட்கிறார்கள். அதை கொடுத்து விட்டு துரியோதனன் நிம்மதியாக அத்தினாபுரியை ஆண்டு சுகித்திருக்கலாம். ஆனால் பாண்டவர்கள் அவ்வாறு அதிகார விளையாட்டில் இருந்து வெளியேறுவதை துரியோதனன் விரும்பவில்லை. இது வினோதமான செயல் தான். ஆனால் இதுவே இயல்பானதும் கூட. மனிதர்கள் இப்படித் தான் சிந்திப்பார்கள். பாண்டவர்கள் அனுபவிக்கும் துன்பம் அத்தனைக்கும் காரணம் அவர்கள் அதிகார விளையாட்டுக்குள் இறங்க தயங்கினது தான். அவர்கள் அதிகாரத்துக்கு அறத்தின், நீதியின் நிறத்தை அளிக்கிறார்கள். தமக்கு தகுதியுள்ள அரசதிகாரம் தானே வந்து தீரும் என நினைக்கிறார்கள். ஆனால் இறுதியில் மிகப்பெரிய போரின் மூலம் கடும் இழப்புகளை சந்திக்காமல் அவர்களுக்கு அது கிடைப்பதில்லை. அஞ்ஞாத வாசத்தின் போது அர்ஜுனனுக்கு கௌரவர்களை அழிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. கௌரவர்கள் பாண்டவர்கள் ஒளிந்திருந்த நாட்டின் மீது போர்த்தொடுக்க மாறுவேடத்தில் இருக்கும் அர்ஜுனன் அவர்களை தன் அஸ்திரம் மூலம் மயக்கமுற வைக்கிறான். அடுத்து அவன் செய்ய வேண்டியதெல்லாம் போய் அவர்கள் தலையை கொய்வது தான். ஆனால் அர்ஜுனன் அது தர்மம் அல்ல என நினைக்கிறான். அஞ்ஞாதவாசம் முடிந்ததும் போய் கேட்டால் துரியோதனன் நம் நாட்டை திரும்ப தந்து விடுவான் என நினைக்கிறான். ஆனால் துரியோதன் அவனுக்கு அதிகாரத்தின் உண்மையான முகத்தை காட்டுகிறான். கிருஷ்ணன் இறுதியில் அர்ஜுனனுக்கு அதிகாரம் என்பதில் இருந்து ஒருவன் தப்பித்து நீதியை நிலைநாட்ட முடியாது; அவ்விளையாட்டை சூதும் வாதும் பிரயோகித்து ஆடியே ஆக வேண்டும் என கற்பிக்கிறான். அதுவே கீதை.

தமிழில் அதிகாரத்தை மிகச்சிறப்பாய் புரிந்து கொண்டவர்களில் ரவிக்குமாரும் ஒருவர். “விடுதலை சிறுத்தைகள்” கட்சி தேர்தல் அரசியலில் குதிக்க வேண்டிய அவசியத்தை அவர் திருமாவுக்கு வலியுறுத்தினார். அப்போது நடந்ததாக ஒரு உரையாடலை கேள்விப்பட்டேன். தேர்தலில் செலவு செய்ய பணம் வேண்டுமே என திருமா சொல்கிறார். அதற்கு ரவிக்குமார் இப்படி பதிலளிக்கிறார்: “நீங்கள் தேர்தலை சந்திக்கப் போவதாக ஒரு அறிக்கை விடுங்கள். பணம் மின்சாரம் போல் பாயும் பாருங்கள்”. அவர் சொன்னது படி தான் நடந்தது. சரி, அந்த பிரயோகத்தை பாருங்கள். மின்சாரம் போன்றது பணம் என்கிறார். மின்சாரம் எப்போதும் ஒரு சுழற்சியில் இருக்கும். அதை நாம் வாங்கவோ கையில் எடுக்கவோ முடியாது. இணைந்து கொள்ளலாம். அதனால் தான் வீட்டுக்கு மின்சார இணைப்பு எடுக்கிறோம். அரசியலில் பணமும் இப்படித் தான் கண்மூடித்தனமாய் பாய்ந்து கொண்டிருக்கிறது. நாம் சற்றே திறந்து கொடுத்தால் அது நம் வழியாகவும் பாயும். நாம் அதை தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்தல் அரசியல் என்பது அப்படி பணம் சுழலும் ஒரு இணைப்பு வட்டம். நம் வயரை அதில் சொருகிக் கொண்டால் போதும். பணத்தை தேடி சம்பாதித்து சேர்க்க தேவையில்லை. இது உண்மையில் ஒரு மேதையின் கண்டுபிடிப்பு. இந்த வாக்கியத்தை நீங்கள் சாதாரணமாய் சொல்லி விட்டு போக முடியாது. ஒரு ரவிக்குமாரால் தான் அது முடியும். ரவிக்குமார் இந்த பார்வையை பூக்கோவிடம் இருந்து பெறுகிறார். தமிழில் அவர் அளவுக்கு பூக்கோவை ஆழமாய் புரிந்து கொண்டவரும் வாழ்க்கையில் பயன்படுத்திப் பார்த்தவரும் இல்லை.

ஆனால் ரவிக்குமாருக்கும் ஒரு குழப்பம் ஏற்பட்டது. அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆன பின்னர் ஒருமுறை சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கு ஒன்றில் ஒரு கட்டுரை வாசித்தார். அது மொழியாக்கப்பட்டு ஒரு ஆங்கில தொகுப்பில் வெளியானது. இதில் ரவிக்குமார் தன் அரசியல் வாழ்வைப் பற்றி சற்றே கசப்புடன், விரக்தியுடன் பேசுகிறார். தலித் விடுதலை சார்ந்த அவரது லட்சியங்களை நேரடி அரசியல் வாழ்வில் செயல்படுத்துவதில் நேர்ந்த சிக்கல்களை குறிப்பிடுகிறார். எந்த லட்சியத்துக்கும் அரசியல் உலகில் மதிப்பில்லையா எனும் கவலையை வெளிப்படுத்துகிறார். பல்வேறு சமரசங்களுக்கு பின் மக்களுக்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த நினைக்கையில் அதிகார மட்டத்தில் உள்ள பலரும் அதை மேலும் மேலும் பலவீனப்படுத்தி ஒரு கட்டத்தில் அது மக்களுக்கு வந்து சேரும் போது பலனற்றதாக ஆகிறது. இதே போல தன்னிடம் உதவி நாடி வரும் மக்களும் சூதும் வஞ்சமும் நிறைந்தவர்களாக இருப்பதை அவர் கவனிக்கிறார். இது அவருக்கு மேலும் விரக்தி ஏற்படுத்துகிறது. ரவிக்குமார் அதிகாரத்துக்கு ஒரு லட்சிய நிறம் அளிக்கிறார். அதனாலே அவருக்கு இந்த விரக்தி ஏற்படுகிறது. அதிகாரத்தை ஒரு நிறமோ மணமோ அற்ற வஸ்துவாக பார்ப்பது நீங்கள் ஒரு யோகியாக இருக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ஆனால் எந்த லட்சியமும் அற்ற, அதிகாரம் பற்றி பூக்கோ பேசினதையெல்லாம் அறியாத மனிதர்கள் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் அதிகாரத்தை அவ்வளவு அனாயசமாய் பயன்படுத்தி, அதிகார ஆட்டத்தில் தன்னை மறந்து ஒரு குத்து டான்ஸே போடுவார்கள். இவர்களுக்கு விரக்தியோ சுயமுரண்பாடோ ஏற்படாது. அப்படியானவர்க்ளை நான் ஒரு கூட்டத்தில் பார்த்தேன்.

எனக்கு எப்போதுமே ஒரு கேள்வி இருந்ததுண்டு. ஏன் நல்லவர்கள், நேர்மையானவர்கள், அறிவும் திறமையும் படைத்தவர்களிடத்து அதிகாரம் இருப்பதில்லை? இக்கேள்விக்கான விடை எனக்கு கேரளாவில் நடந்த அக்கூட்டத்தின் போது கிடைத்தது. கூட்ட மேடையில் கேரளாவை சேர்ந்த பல்கலை ஒன்றின் ஒரு முன்னாள் துணைவேந்தர் இருந்தார். அந்த பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் இருந்தார். துணைவேந்தரின் எடுபிடிகள், நண்பர்கள் இருந்தர்கள். அவர்கள் அந்நிகழ்ச்சியை துணைவேந்தரை துதிபாடும் ஒரு சடங்காக மாற்றினார்கள். ஒருவர் எழுந்து வந்து துணைவேந்தரை குறிப்பிட்டு அவரால் தான் எனக்கு வேலையில் உயர்வு கிடைத்தது என நன்றி தெரிவித்தார். அடுத்து துணைவேந்தர் வந்து தன் எடுபிடிகளை வணங்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர்கள் தான் தனது தூண்கள் என்றார். அவர்கள் இன்றி தன்னால் அதிகார வாழ்வில் இவ்வளவு சுலபமாக இயங்கி இருக்க முடியாது என்றார். இதை இவர்கள் இவ்வளவு அப்பட்டமாக கூச்சமின்றி நூற்றுக்கணக்கானோர் அமர்ந்திருக்கும் மேடையில் செய்து கொண்டிருந்தனர். எனக்கு இதைப் பார்க்க பைத்தியம் பிடித்த ஒருவர் நடைபாதையில் நிர்வணமாக படுத்துக் கிடப்பதை பார்ப்பது போல் அசிங்கமாக, அருவருப்பாக தோன்றியது. இவர்களுக்கு வெட்கமே இல்லையா என நினைத்தேன். முன்னாள் துணைவேந்தர் பேசும் போது பல்கலைக்கழகத்தின் பொருளாதார செல்வாக்கை குறிப்பிட்டார். நம் பல்கலைக்கழகம் கேட்டால் உலகின் பல மூலைகளில் இருந்து நூறு கோடிப் பணத்தை கொட்ட தயாராக இருக்கிறார்கள் என்றார். எனக்கு இதைக் கேட்டு வாந்தி வந்தது. ஒரு பல்கலைக்கழகம் என்பது கல்வியும், அறிவும், அறமும், கலையும் வாழும் இடம். அதை வெறும் பணத்தால் மட்டும் மதிப்பு பெறுகிற இடமாக ஒரு முன்னாள் துணைவேந்தர் மதிப்பிடுகிறாரே, அவர் மனதில் அறிவுக்கும் கலைக்கும் இடமே இல்லையா என வியந்தேன். அப்போது தான் எனக்கு சட்டென ஒரு விசயம் விளங்கியது. இவர்கள் அதிகாரத்தை வழிபடுகிறார்கள். மீன் நீரில் நீந்துவது போல் அவ்வளவு இயல்பாக அதிகாரத்தில் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு ஜால்ரா அடிப்பதோ காலில் விழுவதோ ஒரு கீழான செயல் அல்ல. அது வெறும் சடங்கு. அவர்கள் ஒரு மனிதனை ஜால்ரா அடிக்கவில்லை. ஒரு மனிதனின் காலில் விழவில்லை. அதிகாரத்தை ஜால்ரா அடிக்கிறார்கள், அதன் காலடிகளில் பணிகிறார்கள். துணைவேந்தரும் அவர்களின் பணிவை ஏற்று தன் ஏற்பை பொதுவாக வெளிப்படுத்தி அந்த அதிகாரத்தை உயிருள்ளதாக மாற்றுகிறார். அவரும் தன் முன் பணிகிறவர்களை அதிகாரத்தின் வடிவாகத் தான் பார்க்கிறார். ஏற்கும் நிலையில் நின்று அவரும் அதிகாரத்தை வழிபடுகிறார். அப்படி கூச்சமின்றி ஆடை களைந்து அதிகாரத்தில் குதித்து நீந்துபவர்கள், அதிலேயே இருப்பவர்களிடத்து தான் அதிகாரம் இருக்கும். நேர்மையும் திறமையும் கொண்டவர்கள் நீச்சலடிக்க தயங்கினால் கரையிலேயே நிற்க வேண்டியது தான்.

நேர்மையும் திறமையும் இருந்தும் அதிகாரத்தை அடையாதவர்கள் கிரேக்க தொன்மத்தில் வரும் நார்சிஸஸைப் போன்றவர்கள். நார்சிஸஸ் மிக அழகான ஒரு வாலிபன். அவனுக்கு இணை அந்த நாட்டில் யாரும் இல்லை. அதனால் அவனுக்கு ஒரு சரியான ஜோடி அமையவில்லை. ஒரு நாள் ஆற்றோரமாய் இருக்கையில் ஒரு உருவம் பார்த்தான். தனக்கு இணையாக அழகில் அவ்வுருவம் உள்ளதாய் அவனுக்கு தோன்றியது. நார்சிஸஸ் அதன் மீது காதல் கொண்டான். அந்த உருவம் நீரில் தெரிந்த அவன் பிரதிபிம்பம் என்பதை அவன் உணரவில்லை. அழகு எனும் மதிப்பீட்டை அனைத்திலும் தேடின, கொஞ்சம் அழகில் மாற்று குறைந்தவரிடத்து சமரசம் செய்து உறவு கொள்ள தயாராகாத நார்சிஸஸுக்கு தன்னையே காதலிப்பதை தவிர வேறு வழியில்லாமல் ஆகிறது. சதா நீரில் மிதக்கும் தன் பிம்பத்துடன் பேசிக் கொண்டிருந்தான். அவனை ஒரு பெண் காதலித்தாள். அவன் அவளை நிராகரிக்க அவள் ஏக்கத்தில் உருவம் தேய்ந்து காற்றில் கரைந்தாள். அவள் அவன் அருகே இருந்து அவன் பெயரை ஆசையாய் அழைப்பாள். ஆற்றோரமாய் அமர்ந்து தன் உருவத்தை பார்த்து நெக்குருகி ஏங்கி மறுகும் நார்சிஸஸ் திரும்பிப் பார்ப்பான். யாரும் இருக்க மாட்டார்கள். தன்னை யார் அழைக்கிறார்கள் என அவன் குழம்பிப் போவான். அந்த பெண் பெயர் தான் Echo. எதிரொலி. இந்த பெண் தான் அதிகாரம். அவளைப் பார்க்க நாம் மறுத்தால் பிறகு அவள் எதிரொலியாக மட்டுமே நம் வாழ்வில் எஞ்சுவாள்.

http://thiruttusavi.blogspot.in/2015/05/blog-post_14.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.