Jump to content

பெரியாரும் பிராமணர்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பெரியாரும் பிராமணர்களும்

ஆர். அபிலாஷ்

periyar-21.jpg

தி.கவின் தாலியறுப்பு நிகழ்வை ஒட்டி இந்துத்துவர்கள் பெரியார் சிலைக்கு மூத்திர அபிசேகம் செய்து பரபரப்பை கிளப்பினர். அன்றைய நாள் முழுக்க முகநூலில் நண்பர்கள் தொடர்ச்சியாக பெரியாரை புகழ்ந்தும் அவரது மேற்கோள்களை நினைவுகூர்ந்தும் டைம்லைனை ஒரு பக்கம் நிரப்ப இன்னொரு பக்கம் பெரியார் எதிர்ப்பாளர்களும் சின்ன அளவில் தம் கோபத்தை காட்டினர். இரண்டாவது தரப்பை சேர்ந்த என் பிராமண நண்பர் ஒருவர் மிக மோசமான வசை மொழியில் பெரியாரை தாக்கி என் முகநூல் பக்கத்தில் பின்னூட்டம் இட்டார். அவர் படித்து ஒரு உயர்பதவியில் உள்ள முதிர்ந்த மனிதர். ஏன் இவ்வளவு ஆத்திரப்பட்டு பண்பாடின்றி பேசுகிறார் என எனக்கு வியப்பேற்பட்டது. தான் வாழ்வின் பெரும்பகுதி திகவினரின் இந்து மத தூஷணைகள் மற்றும் பிராமண சமூக தூற்றல்களை கேட்டு வளர்ந்தவன் என்பதால் தன்னுடைய வலி என்பது ஆழமானது என்றார். பொறுக்க முடியாமல் அவரது கோபமும் எரிச்சலும் வெளியாகி விட்டதாய் நியாயப்படுத்தினார். பெரியார் மீதான அவமதிப்பு, தாலி அறுப்பு, பண்பாட்டு விசயங்களில் தொடர்ந்து தமிழகத்தில் இந்துத்துவர்கள் உருவாக்கு சலசலப்புகள் ஆகியவை தவிர்த்து எனக்கு மற்றொரு கேள்வி தோன்றியது. தாம் மற்றும் தமது மதம், சடங்கு ஆகியவை தொடர்ந்து குறி வைத்து அரைநூற்றாண்டுக்கு மேலாக தாக்கப்படுவது நியாயமல்ல என பிராமணர்களுக்குள் ஒரு கோபம் புகைந்து கொண்டிருக்கிறது. இது நியாயமா என்பது போகட்டும். ஆனால் அரைநூற்றாண்டாக பிராமணர்கள் மீதான கடும் கசப்பு எல்லா மக்கள் தரப்புகளிலும் எவ்வாறு உயிர்ப்புடன் உள்ளது, ஏன் பெருவாரி தமிழர்கள் பிராமணர்கள் மீதான் பெரியாரின் எதிர்ப்பரசியலை ஏற்று துணை நின்றார்கள்? தாம் பெரியாரால் தூஷிக்கப்பட்டு தாக்கப்பட்டதாய் அவர்கள் கோபப்பட்டு கோரும் முன், பெரியாரின் இந்த பண்பாட்டு தாக்குதலை எப்படி தமிழக மக்கள் ஏற்றார்கள் என்பதைப் பற்றியும் அவர்கள் சிந்திக்க வேண்டும். பிராமணர்கள் மீதுய் தமிழ் சமூகத்தின் ஆழ்மனதில் ஒரு கடுங்கோபம் தொன்றி புகைய காரணம் என்ன? அதன் வடிகாலாய் விளைந்தது தானே பெரியாரின் இயக்கமும் செயல்பாடுகளும்?

ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும், இப்போது உலகு தழுவிய இஸ்லாமிய சமூகத்தின் மத்தியிலும் யூதர்கள் மீது பெரும் கசப்பும் வெறுப்பும் உண்டு. யூதர்களும் பிராமணர்களை போலத் தான் என்றாலும் நேரடியாக இரு சாராரையும் ஒப்பிட இயலாது. யூதர்கள் அனுபவித்த வரலாற்று கொடுமைகளையும் பிராமணர்கள் அனுபவித்ததில்லை. ஆனாலும் சில ஒற்றுமைகள் உண்டு.

யூதர்களும் பிராமணர்களைப் போன்று சிறுபான்மையினர் தாம். ஆனால் எங்கு சென்றாலும் தம்மை முன்னிலையில் வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் அதற்காய் கடுமையாய் உழைக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க போவதில்லை. இதனால் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை சமூகங்களுக்கு யூதர்கள் மீது கடும் பொறாமையும் எரிச்சலும் ஏற்படும். பிராமணர்களின் ஆதிக்கம் பிற சமூகங்களுக்குக்கும் இத்தகைய மனநிலையை தான் இங்கு ஏற்படுத்துகிறது. ஆனால் பிராமண ஒவ்வாமைக்கு வயிற்றெரிச்சல் மட்டுமே காரணம் அல்ல. கடந்த இருபதாண்டுகளில் தமிழகத்தில் இடைநிலை சமூகங்கள் சிலவும் அரசியல், வணிகம், காவல்துறை, அதிகார வர்க்கம், கல்வி, சினிமா என பல துறைகளிலும் முன்னிலையை அடைந்துள்ளன. பிராமணர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதாய் நாம் இன்று புகார் கூற இயலாது. ஆனால் பிற சமூகங்கள் மீது இந்த ஒவ்வாமை ஏன் ஏற்படுவதில்லை? உதாரணமாய் பிராமணர்கள் அளவுக்கு இங்கு தேவர்களோ நாடார்களோ வெறுக்கப்படுவதோ கேலி செய்யப்படுவதோ இல்லை. இது ஏன் என யோசிக்க வேண்டும்.

அதற்கு நாம் அடுத்த முக்கியமான ஒற்றுமையை பார்க்க வேண்டும். யூதர்கள் மற்றும் பிராமணர்களிடத்து ஒருவிதமான exclusivism செயல்படுகிறது. அதாவது பிறரிடம் இருந்து தம்மை சதா வேறுபடுத்தி தனித்த அடையாளத்தை முன்னிறுத்தும் சுபாவம். உதாரணமாய் வேறெந்த சாதியின் மொழியாவது பிராமண மொழியைப் போல் தனித்துவமாய், கலப்பற்றதாய் இருக்கிறதா? வேறு ஏதாவது சாதியினரின் பேச்சை கேட்ட மறுநொடி இன்ன சமூகத்தினர் என நம்மால் எளிதில் அடையாளம் காண இயலுமா? ஆனால் இன்றும் விஜய் டிவி கிரிக்கெட் தமிழ் வர்ணனையில் “பந்து போயிண்டே இருக்கு” என்றவுடன் அவர்கள் பிராமணர்கள் என மொத்த மாநிலத்துக்குமே தெரிந்து போகிறது. இது எதேச்சையானது என கூற இயலாது. இவ்வளவு காலமாய் பிராமணர்கள் தமது கொச்சையை மிக கவனமாய் கலப்பின்றி காப்பாற்றி வந்துள்ளதுடன், பொது வெளியிலும் அதில் பேசவே பிரியப்படுகின்றன. நாமம் அணிவது, பூணூலை வெளித்தெரிய போட்டுக் கொள்வது என பல்வேறு விதங்களில் அவர்கள் தம் சாதியை பிரகடனம் பண்ணுவதில் பிரயத்தனம் எடுத்துக் கொள்கிறார்கள். இது தவறு என நான் கூறவில்லை. ஆனால் இதன் மூலமாய் தான் அவர்கள் மைய சமூகத்திடம் இருந்து துண்டிக்கப்பட்டு தனிமைப்படுகிறார்கள். அவர்களாய் துண்டிக்கப்படாமல் பிறரை துண்டித்து தனிமைப்படுத்துகிறார்கள். அப்படித் தான் பிற சமூகத்தினர் உணர்கிறார்கள். தம் சாதிய அடையாளம் பற்றிய தம் சமூக ஆதிக்கம் பற்றிய பெருமித உணர்வு தான் இந்த பிரகடங்களுக்கு காரணம்.

உணவுப்பழக்கம் மூலமாய் பிராமணர்கள் மிக எளிதாய் பொது சமூகத்தில் இருந்து விடுபட்டு நிற்கின்றனர். இன்று உலகம் பூரா பரவி விட்ட பிராமணர்கள் அசைவ உணவையும் உண்ணத் தொடங்கி உள்ளார்கள் என்றாலும் இந்த உணவு சமரசத்தை பொதுப்படையாய் என்றுமே அவர்கள் ஏற்க தயாரில்லை. உணவுப்பழக்கம் என்பது எந்த சாதிக்குமே நிரந்தரமாய் உள்ள ஒன்றல்ல. அது காலப்போக்கில் பிற சமூகங்களுடனான ஒட்டுறவில் உருவாகிற ஒன்று. உதாரணமாய் ஆதி பிராமணர்கள் புலால் உண்கிறவர்களாகவே இருந்தனர். ஆனால் பின்னர் சமண, பௌத்த மதங்களின் தாக்கம் காரணமாய் அவர்கள் சைவ பழக்கத்துக்கு மாறிக் கொண்டனர். இன்றும் வங்காள பிராமணர்கள் மீன் உண்ணுவது நமக்குத் தெரியும். ஆக உணவில் தீட்டு தீட்டு அல்லாதது என்றில்லை. வாழும் சூழல், காலம் பொறுத்து உணவின் தேர்வும் மாறுகிறது. ஆனால் பிராமணர்கள் உணவை ஒரு ஆயுதமாய் பிற சமூகங்களுக்கு எதிராய் பயன்படுத்த துவங்கினர். நான் முன்னர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது உணவு மேஜையில் சாப்பாட்டை பகிர்வது வழக்கமாய் இருந்தது. ஆனால் ஒரு பிராமண நண்பர் மட்டும் அதை செய்ய மாட்டார். ஒருமுறை நான் அவரிடம் ஸ்பூனை கடன் வாங்கி பயன்படுத்தி விட்டு அலம்பி கொடுத்தேன். அதை அவர் பயன்படுத்த மறுத்து விட்டார். இது என்னை மனதளவில் காயப்படுத்தியது. இப்படி தீவிரமாய் சுத்தம் பார்ப்பது இன்றும் அவர்களிடத்து பரவலாய் உள்ளது. நான் கலப்பு திருமணம் செய்தவன். என் நெருக்கமான பிராமண உறவினர் ஒருவர் இன்றும் என் வீட்டுக்கு வந்தால் உணவருந்த மாட்டார். ஆனால் நான் மட்டும் அவர் வீட்டுக்கு சென்றால் தாராளமாய் புழங்குவேன். ஆனால் மத்திய சாதியினர் இடையில் இப்படியான தீட்டு பண்பாடு இல்லை. ஒருவேளை தலித்துகளுக்கு மத்திய சாதியினர் மீது இப்படியான புகார்கள் இருக்கலாம்.

இன்று veganism எனும் தீவிர சைவப் பண்பாடு அல்லது இயக்கம் வேகமாய் பரவி வருகிறது. வீகன்கள் பாலுணவை கூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இதனால் தெளிவான உடல்நல பலன்கள் உள்ளதாக எந்த அறிவியல் சான்றும் இல்லை என்றாலும் வீகன்கள் இதை ஒரு அறவியல் சார்ந்த செயல்பாடாக பார்க்கிறார்கள். தம்மை அறத்தை பின்பற்றுகிறவர்க்ளாகவும் பிறரை உயிர்கள் மீது இரக்கமற்றவர்களாகவும் காட்டி ஒரு எதிரிடையை உருவாக்க இது அவர்களுக்கு பயன்படுகிறது. கணிசமான வீகன்களும் சைவர்களும் இன்று மிருக வதைக்கு எதிரான உரிமை குழுக்களில் சேர்ந்து கொண்டு அசைவர்களை கடுமையாக தூஷிப்பதை தீவிரமாய் மேற்கொண்டு வருகிறார்கள். இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் இவர்களின் ஆதிக்கம் வலுவானது. மாட்டினீர்கள் என்றால் உங்களை வெஜ் பிரியாணி போட்டு விடுவார்கள். இந்த வீகன் மற்றும் சைவ மிருக உரிமை குழுக்களில் கணிசமானோர் பிராமணர்களும் ஜெயின்களும் தாம். “உங்களால் ஏன் சைவத்துக்கு மாற முடியவில்லை?” என்ற கேள்வியை பிற சமூகத்தினர் நோக்கி திரும்ப திரும்ப கேட்கிறார்கள். ஆனால் சைவர்களாக இருப்பது அவர்களுக்கு எவ்விதத்திலும் தியாகம் அல்ல என்பதை உணர மறுக்கிறார்கள். இதன் மூலம் தமது உணவுப்பழக்கத்தை பிறர் மீது திணித்து ஒரு மறைமுக பண்பாட்டு வன்முறையை பிரயோகிக்கிறார்கள், பிற சமூகங்களின் உணவுப்பழக்கத்தை விமர்சித்து குற்றவுணர்வை தூண்டுவதன் மூலம் ஒரு வெறுப்பரசியலை முன்னெடுக்கிறார்கள் என்பதையும் உணர்வதில்லை. பிராமணர்களுக்கும் ஜெயின்களுக்கும் சைவப் பழக்கம் என்பது என்றுமே வெறுமனே ஒரு உணவுப் பழக்கம் அல்ல. அது தம் சாதிய தூய்மையை, சமூக மேலாண்மையை பறைசாற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. பிற சமூகங்கள் மீது ஒடுக்குமறை செலுத்துவதற்கான ஒரு ஆயுதம்.

சரி மிருக உரிமை குழுவினர் பாதுகாக்க முயலும் மிருகங்கள் பிற மிருகங்களை புசிப்பவை தானே? அப்படி என்றால் இந்த மிருகங்களை யார் சைவர்களாக்குவது? இந்த பணியையும் அவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்கிறார்கள். வீகன்கள் மற்றும் சைவர்கள் பலர் தம் நாய் பூனைகளையும் சைவ உணவு கொடுத்தே வளர்க்கிறார்கள். இப்பிராணிகள் அசைவம் உண்டு வாழும் விதமாகவே அவற்றின் உடலமைப்பு இயற்கையால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்க மாட்டார்கள். பூனைக்கு குறிப்பாய் மீன் உணவு இல்லாவிட்டால் உடல் நலம் இழக்கும். இதைத் தவிர்க்க சைவர்கள் தம் பூனைகளுக்கு மீனுணவில் உள்ள புரதம் மற்றும் பிற குணங்களை சப்ளிமெண்ட் மருந்து மூலம் ஈடுகட்ட நினைக்கிறார்கள். சரி, உலகு முழுவதும் உள்ள அசைவம் உண்ணும் வேட்டையாடி மிருகங்களை இவ்வாறு இவர்கள் சைவம் ஆக்கி விட்டால் இயற்கை சமநிலை இழந்து உலகமே அழிந்து விடும். ஆனால் வீகன்கள் மற்றும் சைவர்களுக்கு ஒட்டுமொத்த உண்மைகளில் ஆர்வமில்லை. உதாரணமாய், சென்னை வேளச்சேரியில் உள்ள புளூ கிராஸில் நாய், பூனை உள்ளிட்ட எந்த மிருகத்துக்கும் அசைவ உணவில்லை. காரணம் அந்நிறுவனத்துக்கு பெருமளவில் நிதியளிக்கும் ஜெயின்கள் சைவர்கள். அசைவம் கொடுத்தால் பிறகு ஜெயின்கள் புளூகிராஸுக்குள் நுழைய மாட்டார்கள். அங்கு உணவளிக்கும் வேளையில் போய் பார்த்துள்ளேன். பாலை தேசலாய் காட்டி பிசைந்த அந்த சோறை நாய்கள் சீண்டக் கூட செய்யாது. சிறுவயதில் இருந்தே புலால் உண்டு தெருவில் வளர்ந்த இந்த நாய்களை கொடையாளர்களின் உணவுப் பழக்கத்தின் காரணமாய் இப்படி வதை செய்வது மட்டும் மிருக உரிமை மீறல் இல்லையா?

இந்த exclusivism பிராமண ஒவ்வாமைக்கு ஒரு பிரதான காரணம். பிற சமூகத்தினர் தம்மை வெறுக்காமல் ஏற்க வேண்டும் என பிராமணர்கள் விரும்பினால் பொது சமூக அடையாளங்களுடன் தம்மை கரைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தளவு பொது மொழியில் பேசி, பூணூல், நாமம் போன்ற அடையாளங்களை தவிர்க்க வேண்டும். பிறரைப் போன்று தம் தோற்றம் மற்றும் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இதை பிற சமூகத்தினர் செய்ய வேண்டியதை விட பிராமணர்கள் செய்ய வேண்டியது அவசியம். ஏனென்றால் சமூக அமைதியும் ஒற்றுமையும் நிலவ ஒடுக்குகிற இடத்தில் உள்ளவர்கள் தாம் தம் ஆயுதத்தை கீழே போட வேண்டும். பண்பாட்டளவில் பிறரை ஒடுக்குகிற நிலையில் இருக்கிற பிராமணர்கள் சாதிய அடையாளம், தனித்துவம் எனும் ஆயுதத்தை கீழே போட வேண்டும். ஒரு ஒடுக்கப்படுகிற சமூகத்து ஆள் தன் சாதியை பறைசாற்றுவதில் பிரச்சனை இல்லை. ஆனால் பிராமணர்கள் அவ்வாறு செய்வது சிக்கலானது.

பிராமணர்களின் அடுத்த முக்கிய கோளாறு clannish மனோபாவம். அதாவது இறுக்கமாய் பரபஸ்பரம் பற்றிக் கிடக்கும் குழுமனோபாவம். சென்னை போன்ற நகரங்களில் கூட நவீன அக்கிரஹாரங்கள் உள்ளன. அங்கு பிராமணர்கள் சேர்ந்து வாழ்வார்கள். தம் வீட்டை பிராமணர் அல்லாதோருக்கு வாடகைக்கு அளிக்க மாட்டார்கள். பிராமணர்களின் நட்பு வட்டத்தை எடுத்துக் கொண்டால் 90 சதவீதத்துக்கு மேலாக பிராமணர்களாகவே இருப்பார்கள். விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் கணிசமான பிராமணர்கள் கல்வியிடம், வேலையிடம் என எங்கும் தம் சாதியினராக தேடிப் பார்த்து ஒட்டிக் கொள்கிறார்கள். எல்லாருக்கும் சுயசாதி பாசம் உண்டென்றால் பரவலாக அனைத்து சாதியினரிடத்தும் பழகவே தலைப்படுகிறார்கள். இவ்விசயத்தில் பெரும்பாலான பிராமணர்கள் தனித்து நிற்கிறார்கள். தம் மீதுள்ள சமூகக் கோபத்தை நீக்க அவர்கள் முதலில் பிரக்ஞைபூர்வமாய் பிற சமூகத்தினரிடம் அதிகமாய் பழகவும் நட்பு பாராட்டவும் துவங்க வேண்டும்.

இந்த இரண்டு குணங்களையும் நாம் இஸ்லாமியரிடத்தும் பார்க்கிறோம். அவர்களும் பன்றிக்கறி, நாய் போன்றவற்றை தீட்டாக நினைக்கிறார்கள். தம் மத அடையாளங்களை பிரகடனப்படுத்துகிறார்கள். சேர்ந்து ஒரே இடத்தில் வசிக்க தலைப்படுகிறார்கள். நான் ஒரு இஸ்லாமியரின் கடைக்குள் என் வளர்ப்பு நாயுடன் சென்றேன். பல கடைகளுக்கு அவ்வாறு நான் செல்வதுண்டு. இவர் என்னிடம் சொன்னார் “நாய் எங்க மேல பட்டிருச்சுண்ட்டா அசுத்தமாயிடும். திரும்ப குளிக்க வேண்டி வரும். தூரப் போங்க”. அதே போல் ஒருமுறை நான் சுகுணா சிக்கன் கடைக்கு சென்ற போது ஒரு இஸ்லாமியப் பெண் கறி வாங்கினாள். பணம் கொடுக்கும் போது அவருக்கு சந்தேகம் வந்து விட்டது “இந்த கறியை வெட்டினது இஸ்லாமியர் தானா?”. கடை முதலாளி கிறித்துவர் என்றாலும் வெட்டினவர் இஸ்லாமியரே என உறுதிப்படுத்தின பின்னர் தான் அவர் நிம்மதியாக அகன்றார். இப்படி தனிப்படுத்தி தீட்டு பார்த்து வாழ்வதால் தான் இஸ்லாமியர் மீது மைய சமூகத்துக்கும் சந்தேகமும் வெறுப்பும் தோன்றுகிறது. இதை நான் நியாயப்படுத்தவில்லை. காரணத்தை சுட்டுகிறேன்.

மூன்றாவதாய் பிராமணர்கள் சடங்கு சம்பிரதாயங்கள், மரபான நம்பிக்கைகள் ஆகியவற்றை விடாப்பிடியாய் பின்பற்றுவது. இது கிட்டத்தட்ட வேடிக்கையின் விளிம்புக்கு கொண்டு சென்று விடுகின்றனர். திராவிட இயக்க சார்புள்ளவர்கள் தாம் பிராமணர்களை கேலி செய்கிறார்கள் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. பிராமண ஒவ்வாமை சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவியுள்ள ஒன்று. சமீபமாய் ஒரு கார் ஓட்டுநர் என்னிடம் பிராமண வாடிக்கையாளர்கள் பற்றி புலம்பிக் கொண்டே வந்தார். ஒரு வாடிக்கையாளர் பூனை ரோட்டுக்கு குறுக்கே போனதனால் வீட்டுக்குள் போய் தீர்த்தம் தெளித்து மந்திரம் ஜெபித்து விட்டு மீண்டும் காரில் ஏறினாராம். இன்னொருவர் ஒற்றை பிராமணர் ஒருவர் எதிரில் வந்ததனால் காரை சற்று நேரம் நிறுத்தி வைத்தாராம். பிறகு போகிற வழியில் பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தாராம். அந்த ஓட்டுநர் அதிகம் படித்தவர் இல்லை. ஆனால் தேங்காய்க்கும் ஒற்றை பிராமணனுக்கும் எந்த சம்மந்தம் என அவர் கேட்கிறார். பிராமணர்கள் மீது கடுமையான கேலியை பெரியார் வைத்த போது இத்தரப்பு மக்கள் தான் அதை ரசித்தனர். காரணம் காலங்காலமாய் இப்படியான வேடிக்கை போக்கால் அவர்கள் சமூகத்தில் இருந்து தனித்து நின்று தம்மையே கோமாளிகள் ஆக்கிக் கொண்டனர். இந்த மூடநம்பிக்கை, பழைய சடங்குகளெல்லாம் போன தலைமுறை பிராமணர்களுடன் போயிற்று என நீங்கள் கருதலாம். நான் இரண்டு சம்பவங்களைக் கூறுகிறேன். எனக்குத் தெரிந்த ஒரு பிராமணர் சென்னையின் ஒரு பெரிய ஐடி நிறுவனத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்குகிற பதவியில் இருக்கிறார். அவருக்கு இரண்டு வயதுக்கு வந்த பெண்கள். இருவருக்கும் மாதவிலக்கு ஆனால் பூட்டி வைக்க வீட்டுக்கு வெளியே ஒரு குடிசை போன்ற அறையை கட்டியிருக்கிறார். அங்கு மாதவிலக்கு நாட்களில் யாரும் பார்க்காமல் அவர்கள் இருக்க வேண்டும். என் உறவுக்கார பையன் ஒருவன் ரொம்ப நவீனமானவன். ஆனால் அவன் அம்மாவுக்கு மாதவிலக்கு என்றால் அவள் பக்கத்தில் போக மாட்டான். அவன் தொட்ட பொருட்களை தொட மாட்டான். மற்றொரு பிராமணப் பெண் நன்கு படித்த குடும்பத்தை சேர்ந்தவள். அவள் கருவுற்றிருக்க சமீபமாய் சந்திரகிரகணம் வந்தது. அதனால் அவளை எட்டு மணிநேரம் உணவின்றி இருட்டறைக்குள் பூட்டி வைத்திருந்தனர். சூரிய ரேகைகள் பட்டால் குழந்தை குறைகளுடன் பிறக்குமாம். வேறு எந்த சமூகம் இப்படியான மூடநம்பிக்கைகளை கெட்டியாக பிடித்துள்ளது சொல்லுங்கள்?

பிராமணர்களுக்கு மரபின் மீதுள்ள களிம்பு படிந்த பற்றுதல் அவர்களில் கணிசமானோரை வலதுசாரிகளாக, இந்துத்துவர்களாக வைத்துள்ளது. பிராமணர்களில் ஒன்று கடுமையான ஆத்திகர்களையோ அல்லது ஞாநி, பி.ஏ கிருஷ்ணன் போன்ற கடுமையான நாத்திகர்களையோ காண்கிறோம். இரண்டுமே மரபை கைவிட முடியாத மனநிலையின் இரு பக்கங்கள் தாம். மரபின் மீது பெரும்பாலான பிற சமூகங்களுக்கு உள்ள ஒரு இளகலான பிடிப்பு பிராமணர்களிடம் பார்க்க முடியாது. ஒன்று மரபை கட்டிப்பிடித்து நெருக்குவார்கள். அல்லது கழுத்தை நெரிப்பார்கள். பேஸ்புக்கில் என் பக்கத்தில் பெரியார் மீது கடுமையான வெறுப்பை பொழிந்த நண்பரின் குற்றச்சாட்டு பெரியார் இந்து மதக்கடவுள்களை அவமதித்தார், நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரியடித்தார் என்பது. ஆனால் பெரியார் இதன் மூலம் இந்து மதத்துக்கு பெரும் நன்மை செய்துள்ளார் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறித்துவத்தை புனரமைத்த பெருமை தஸ்தாவஸ்கி, தல்ஸ்தாய் எனும் இரு மத எதிர்ப்பாளர்களையே சேரும். நீட்சே அளவுக்கு கர்த்தரை கடுமையாய் சாடி அவமதித்த மற்றொரு சிந்தனையாளன் இல்லை. அவர் கர்த்தரை பேடி என்றும், அடிமை மனப்பான்மையை மக்களிடம் வளர்த்தவர் என்றும் விமர்சித்தார். ஆனால் நீட்சே கர்த்தரை வெறுத்த அதேவேளை மிக உக்கிரமாய் நேசிக்கவும் செய்தார். அவர் ஜாருதிஷ்ரனின் வடிவில் கர்த்தரை மறுகட்டமைப்பு செய்தார். கர்த்தர் பற்றின தனது புதுவிதமான புரிதலைத் தான் நீட்சே எனும் நாத்திகவாதி மீண்டும் மீண்டும் எழுதினார். பெரியாரும் ஒருவிதத்தில் நீட்சேயை போன்றவர் தான். இறுகிப் போயிருந்த இந்து மத நம்பிக்கைகள், சாதிய எண்ணங்களை கடுமையாய் சாடியதன் வழி அவர் இந்து மதத்தை புனரமைக்க உதவினார். புத்துணர்வு அளித்தார். பெரியார் இவ்வளவு கடுமையாய் எதிர்த்தும் ஏன் இந்துமதம் தமிழகத்தில் உயிர்ப்புடன் உள்ளது என ஜெயமோகன் ஒருமுறை கேட்டார். ஆனால் பெரியாரின் நோக்கம் இந்துமதத்தை அழிப்பது அல்ல. தன் மனதின் ஆழத்தில் அவர் இந்துமதத்தை நேசித்தவர், அதை மாற்றியமைக்க விரும்பியவர் என்பதே என் நம்பிக்கை. பெரியார் ஒரு மத சீர்திருத்தவாதி, மதவிரோதி அல்ல. இந்து மதத்தின் மீது பெரும் காதல் கொண்ட என் பிராமண நண்பர் உண்மையில் தான் பெரியார் மீது கடன்பட்டுள்ளோம் என்பதை உணரவில்லை என்பதே உண்மை. அதேவேளை, மதத்துக்கு புத்துணர்வூட்ட அதை கடுமையாய் தாக்க வேண்டும். சிலைகளை உடைத்து, நம்பிக்கைகளை பொதுப்படையாய் தூஷிக்க வேண்டும். அதைத் தான் பெரியார் செய்தார். ஆனால் மதத்தை தம் குளிர்பதனப்பெட்டியை உறைய வைத்து காப்பாற்றியதன் மூலம் பிராமணர்கள் தாம் அதற்கு மிகப்பெரிய அளவில் ஆபத்து விளைவித்தனர். தொடர்ந்து பூஜை புனஸ்காரங்களை வழமைகள் ஆகியவற்றை கராறாய் பின்பற்றுவது ஒரு பிணத்தை குளிப்பாட்டி மாலையணிவித்து கிடத்துவது போன்ற செயலாகும். பிராமணர்கள் இந்துமதத்தை ஆரோக்கியமாய் வைத்திருக்கவும், தம்மை பொதுசமூகத்துடன் ஒன்றிணைக்கவும் மதத்தை ஒரு கண்ணாடி கோப்பையை போல் பற்ற கற்க வேண்டும். இறுகப் பற்றினால் அது உடைந்து விடும், நெகிழ்வாய் பற்றினால் விழுந்து உடைந்து விடும். இந்து மதத்தை தம் சொத்தாய் சொந்தம் கொண்டாடாமல் கோயிலுக்குள் பூஜைகள் செய்வதற்கு, பிற சடங்குகளை பின்பற்றுவதற்கு பிற சமூகத்தினரை ஊக்குவிக்க வேண்டும். இந்துத்துவா அரசியலை கைவிட வேண்டும். இந்து மதம் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கபடும் போது அதை பாதுகாக்க பாயாமல் திறந்த விவாதத்தையும், மதத்தின் மறுகட்டமைப்பையும் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். ஒரு சுத்தியால் தத்துவ விவாதம் செய்ய வேண்டும் என்றார் நீட்சே “Twilight of the Idols” நூலில். பழங்காலத்தில் பொத்தலான சிற்பங்களை கண்டுபிடிக்க நிபுணர்கள் ஒரு சின்ன சுத்தியால் அதை தட்டிப் பார்ப்பார்களாம். உடைந்தால் அது நல்ல சிற்பமில்லை. சுத்தி எடுத்தி தட்டுவது என்றால் உடைக்க அல்ல. இந்து மதத்தில் உடையக் கூடிய போலி சிற்பங்களை எல்லாம் பெரியார் உடைத்துப் பார்த்தார். அவர் நோக்கம் மொத்த சிற்பங்களையும் அழிப்பது அல்ல. அதனால் தான் தமிழ் சமூகம் பெரியாரை கொண்டாடியது. அடித்து உடைக்காமல் ஒன்றை வளர்க்க முடியாது.

தி.கவை எதிர்க்கும் பிராமணர்கள் இரு கேள்விகளை கேட்கிறார்கள். ஒன்று முற்போக்காளர்கள் ஏன் கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களிடத்து மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள்? இதற்கான பதில் மதத்தைக் கடந்த ஒரு முற்போக்காளன் கிடையாது என்பது. ஒருவர் இந்து முற்போக்காளராகவோ, கிறுத்துவ முற்போக்காளராகவோ, இஸ்லாமிய முற்போக்காளராகவோ இருக்கலாம். எந்த சமூகமும் மதவயபட்டது. அதனுள் மதத்தின் வெளியில் நின்று ஒருவன் புழங்குவது சாத்தியமே அல்ல. நம் மன அமைப்பு, மொழி, மொழியில் உள்ள குறியீடுகள், செண்டிமெண்டுகள் ஆகியவை மதத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆக பெரியார் ஒரு இந்துமத முற்போக்காளர். அவர் இந்து மதத்தை தான் பழிக்கவும் கேலி செய்யவும் முடியும். அவர் ஏன் பிற மதங்களை தாக்கவில்லை எனக் கேட்பது அபத்தமானது.

அடுத்து, ஏன் தலித்துகளை ஒடுக்கும் மத்திய சாதியினரை தி.கவினர் எதிர்ப்பதில்லை என்கிறார்கள். இது முக்கியமான கேள்வி. நான் ஐஸ்ஹவுஸில் வாழ்ந்த போது தி.கவினர் ஒரு வேனில் வந்து ஒலிபெருக்கியில் பிராமணர்களை கடுமையாய் தாக்கி பிரச்சாரம் செய்வதை கேட்டிருக்கிறேன். நான்கு மணிநேரங்களுக்கு மேல் தூற்றுதல் தொடரும். அதை ஏன் பிராமணர்கள் வாழும் பகுதிக்கே வந்து செய்ய வேண்டும் என எனக்கு புரிந்ததில்லை. இப்படி நாற்பது வருடங்களுக்கு மேலாக ஒரு இயக்கம் ஒரு சாதியினரை குறிவைத்து தாக்கும் போது அச்சாதியினருக்கு ஏற்படும் நெருக்கடியும் கசப்புணர்வும் புரிந்து கொள்ள முடிவது தான். இதற்கு பதில் தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதியினர் வாழும் பகுதிகளில் உள்ள கோயில் தேரிழுக்கும் உரிமையை தாழ்த்தப்பட்டவர்களுக்கு மீட்டெடுக்கும் போராட்டம், பொதுவழியில் அவர்கள் பிணத்தை தூக்கிச் செல்லும் உரிமைக்கான போராட்டம் ஆகியவற்றை தி.க நடத்தலாம். சமீபமாய் நடந்த தாலி அகற்றும் நிகழ்ச்சி கூட தி.கவினர் சுத்தமாய் இந்திய உளவியலை புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டியது. தமிழர்களின் தாலி செண்டிமெண்ட் இறுக்கமானது அல்ல. இங்கு பல நகர்வாழ் பெண்கள் வெளியே போகும் போது தேவைப்பட்டால் மட்டுமே தாலி அணிகிறார்கள். சிலர் வீட்டில் அணியாமல் வெளியே மட்டும் அணிகிறார்கள். சிலர் தமது ஆடைகளூக்கு பொருந்தினால் மட்டும் அணிகிறார்கள். இன்னும் சிலர் உறவுக்காரர்களின் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் அணிகிறார்கள். தொடர்ந்து அணிகிறவர்களும் மற்றொரு நகையாகத் தான் கருதுகிறார்கள். அடிக்கடி தாலியை எடுத்து கண்ணில் ஒத்திக் கொள்கிற பெண்கள் இப்போது சினிமாவில் கூட வருவதில்லை. இப்படி தமிழ் சமூகமே பெரிதும் பொருட்படுத்தாத தாலியை பொருட்படுத்தி அதை ஒரு விவாதப்பொருளாக்கி உயிர்ப்பளித்திருக்கிறார் கி.வீரமணி. பொதுவாக ஐரோப்பியர்கள் தாம் எதையும் புரட்சி மூலம் உடைத்து அகற்றி மாற்றத்தை கொண்டு வருவார்கள். அவர்கள் வாழ்க்கையை நன்மை தீமை, சரி தவறு என எதிரிடையாக பார்ப்பவர்கள். ஆனால் இந்தியாவில் அத்தகைய திடுதிப்பெனும் புரட்சிகள் நிகழ்வதில்லை. இங்கு மிக மிக நுணுக்கமாய் கண்ணுக்கு தெரியாதபடி மாற்றங்கள் நிகழ்ந்து “புரட்சி” உண்டாகும். தாலி முன்பு புனிதமாய் இருந்து, இன்று புனிதம் குறைந்து, வெறும் நகையாக, சந்தர்ப்பவசமாய் பயன்படுத்தபடுகிற சம்பிரதாய் பொருளாக மாறி வந்துள்ளது. இனி எதிர்காலத்தில் தாலிக்கு மற்றொரு பதிலீடு வந்து தாலி காணாமல் ஆவதும் நடக்கும். இங்குள்ள பெண்களிடம் சென்று வாங்க தாலியை அறுப்போம் என கேட்பது போல் ஒரு அபத்தம் வேறிருக்க முடியாது. இதன் மூலம் இந்துத்துவா சக்திகளுக்கு தீனி போடுவது தான் நடந்திருக்கிறது. தமிழக பா.ஜ.கவினர் போல் தி.கவுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள் வேறு இருக்க முடியாது.

http://thiruttusavi.blogspot.in/2015/05/blog-post_24.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரியாரைப் பற்றி எள்ளளவும்... நல்ல அப்பிபிராயமோ.... நல்ல எண்ணமோ என்னிடம் கிடையாது.
ஆனால்... பெரியார், தமிழ் நாட்டு பிராமணர்களை தூற்றியதற்கு.. என் ஆதரவு இன்றும் உண்டு.

 

இந்த.... சுப்பிரமணிய சாமி, சோ வரை... எல்லாம் பிராமணக் கூட்டம்
இவர்கள் தமிழனுக்கு சார்பாக.. என்றுமே கருத்துக் கூறியதில்லை. எப்போதும்.... என்ன விடயத்திலும்.... சிங்களவனுக்கு ஆதரவாகவே... நிற்பார்கள். 

 

இதுகளாவது பரவாயில்லை....
இந்த.... வெருளி எஸ். வி. சேகர். என்பவன்....
அண்மையில்... ஈழத்தமிழர் சார்பாக, தயாரிக்கப் பட்ட படம் ஒன்றை....
இந்தியாவில் திரையிடப் படாது என்று சொல்லி, தடை பண்ணை விட்டானாம்.

 

இப்படியான.... அலுவோசுகள் இருக்கும் வரை.....
பிராமண எதிர்ப்பு.... தமிழ் நாட்டில் இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.