Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் யார்? தமிழ் தேசியம் என்றால் என்ன? - உதயகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11425506_857667104319448_554512882556138

யார் தமிழர்கள் ? என்ற குழப்பத்திற்க்கு தெளிவான தீர்வு சொல்கிறார் இயற்கை போராளி அண்ணன் S.p. Udayakumar

பச்சைத் தமிழ் தேசியம் - @சுப. உதயகுமாரன்

ஒரு பெரியார்-அண்ணா கால தி.(மு).க.காரரின் மகனாகப் பிறந்த காரணத்தால் நான் பல நன்மைகளைப் பெற்றேன் என்று உறுதியாக நினைக்கிறேன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, மூட நம்பிக்கைக் களைதல் என பல நல்ல சிந்தனைகளை, செயல்பாடுகளைப் பெற அது எனக்கு அச்சாரமாய் அமைந்தது.

இவை எல்லாவற்றையும் விட பிரமணீய ஆதிக்கம் எனும் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்டபசை இனம் கண்டிட, எதிர்த்திட, எடுத்தெறிந்திடவும் பெரிதும் உதவியது. இந்த விழிப்புணர்வு அன்றைக்கு கிடைக்காமல் போயிருந்தால், இன்றைக்கு பிராமணர் உயர்ந்தவர், அவர் வணங்கும் தெய்வங்கள் உயர்ந்தவை, அவர் ஓதும் வேதம் உன்னதமானது என்று உளறிக்கொண்டிருந்திருப்பேன்.

காக்கி நிக்கர் போட்டுக்கொண்டு, மராட்டிய பிராமணர்களின் புகழ் பாடிக் கொண்டிருந்திருப்பேன். மனுதர்ம மடமை, சாதீய வெறி, இனவேற்றுமைச் சதி, அதிகாரத் திமிர், அடக்கியாளும் அகந்தை, முதலாளித்துவ காமம் என கட்டமைக்கப்பட்டிருந்த சமூக ஏற்பாட்டை எந்த விதமான கேள்வியும் இன்றி ஏற்றுக்கொண்டிருப்பேன்.

தீண்டாமை (untouchability), அதைவிடக் கொடுமையான காணாமை (unseeability) போன்றவை இயற்கை விதிகளாகத் தோற்றமளித்திருக்கும். இவை இரண்டையும் விட மோசமானது நம்பாமை (unbelievability) – தங்களால் மட்டுமே சிந்திக்க, செயல்பட, தீர்மானிக்க, நடத்த முடியும்; வேறு யாராலும் தங்களைப் போல் இயங்க முடியாது; மற்றவர்கள் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாது எனும் தான்தோன்றித் தத்துவத்தை தர்க்கரீதியாகப் பார்த்திருக்க மாட்டேன்.

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா அய்யா சொல்வது புரிகிறது என்றாலும், திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. காங்கிரஸ் வல்லாதிக்கத்தை எதிர்க்க, பிற்போக்கான சமுதாயத்தைக் கேள்வி கேட்க, அதன் ஏற்பாடுகளை மாற்றியமைக்க பெரியாரியம் உண்மையிலேயே உதவியது.

பெரியார் கையாண்ட சில சொற்கள், சிந்தனைகள், கருத்துக்கள், முடிவுகள், நடவடிக்கைகள், சமரசங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாக மாறி இருக்கலாம். காலமும், சூழலும், தேவையும் மாறும்போது, கருத்துக்கள் மாறுவதில் வியப்பேதும் இருக்க முடியாது. இன்னும் பழைய பெரியாரை, அவரின் பழையக் கொள்கைகளை கட்டிக்கொண்டு இழுப்பது தேவையற்றது. பெரியாரிடமிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, தேவையற்றவற்றை விட்டுவிடுவதுதான் அறிவுடைமை. முன்னாள் தலைவர்கள் இட்ட அஸ்திவாரங்களின் மீது இந்நாளையத் தேவைக்கு ஏற்றார்போல கட்டிக்கொள்வதுதான் சிறப்பு.

இந்தப் படைப்பாற்றலில், புத்தாக்கத்தில் கவனம் செலுத்தவேண்டுமே தவிர, இன்றைய நாளில் நின்று கொண்டு கழிந்த நூற்றாண்டு நிகழ்வுகளை விமர்சிப்பதும், இங்கே நின்றவாறே காலனி ஆதிக்க காலத்து அரசியலை அலசுவதும் நமது தற்போதைய தேவைக்கு பெருமளவில் உதவும் விடயங்களல்ல என்பது என் எண்ணம். வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, வீண் பேச்சு பேசிக்கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது.

பெரியார் கன்னடரா, தமிழரா எனும் விவாதம் எப்படி நமக்கு உதவும் என்பதும் எனக்குப் புரியவில்லை. தமிழரை மட்டும்தான் தலைவராய் ஏற்றுக் கொள்வோம், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றால், நாம் போற்றுகின்ற புத்தன், ஏசு, நபிகள், மார்க்ஸ், லெனின், காந்தி, அம்பேத்கர் யாருமே தமிழர் அல்லவே. இன்றையச் சூழலில் ஒரே ஒரு தமிழ் தலைவர் வருவார், அவர் ஒரே ஒரு தமிழ் புத்தகம் தருவார், ஒரே ஒரு தமிழ் கொள்கைக் கூறுகளை அருள்வார், நாம் எல்லாம் சுபிட்சத்தை நோக்கி சுகமாக நடப்போம் என்று கனவு காண்பது மடமையிலும் மடமை.

யார் தமிழர்? இப்போது யார் தமிழர் எனும் கேள்வி எழுகிறது. ‘யார் தமிழர்’ என்பது ‘சுத்தமான தமிழ் எது’ என்பது போலவே ஒரு பெரியப் பிரச்சினை. நாங்கள் நாகர்கோவில்காரர்கள் எங்கள் தமிழ்தான் உண்மையான தமிழ் மொழி என்கிறோம். வட தமிழ்நாட்டு மக்கள் “என்னய்யா, மலையாளம் போல பேசுகிறீர்களே” என முகம் சுளிக்கின்றனர். சென்னைவாசி பேசுவது தமிழா என்று கோவைக்காரர்கள் குமுறுகிறார்கள். இது போன்ற நிலைதான் தமிழர் யார் என்று வரையறுப்பதிலும் நிலவுகிறது.

தமிழ் நாட்டில் வாழ்கிறவர் எல்லோரும் தமிழரா? தமிழ் மொழி பேசுகிறவர் அனைவரும் தமிழரா? வீட்டிலே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசினாலும், வெளியே வந்து தமிழ் பேசிவிட்டால் போதுமா என்று பல கேள்விகள் எழுகின்றன. தன்னுடைய அடையாளம் பற்றிக் கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய தலைவர் அப்துல் வாலி கான் பேசும்போது, “நான் கடந்த ஐம்பது வருடங்களாக பாகிஸ்தானியாக இருக்கிறேன், ஐநூறு வருடங்களாக முஸ்லீமாக இருக்கிறேன், ஆனால் ஐயாயிரம் வருடங்களாக பட்டானாக இருக்கிறேன்” என்றார். அதுபோல நாமும் அறுபது வருடங்களாகத்தான் இந்தியராக இருக்கிறோம். ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளாக தமிழராக வாழ்கிறோம்.

இன சுத்தம் இன்றைய உலகில் சாத்தியமா என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாகரீகத்தோடு இன்னும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத பழங்குடிகளில் மட்டும்தான் இன சுத்தமான மக்களை பார்க்க முடியும். நமது தமிழ்க்குடி வந்தவன், போனவன், தங்கியவன், தயங்கி நின்றவன், கடந்து சென்றவன் எல்லாம் ஏறி மேய்ந்து கலப்படமாகிவிட்ட ஒரு சமூகமல்ல என்பது உண்மை.

அமெரிக்காவிலே, ஆஸ்திரேலியாவிலே சிலர் சொல்வது போல நான் 50 சதவீதம் ஐரிஷ், 30 சதவீதம் ஜெர்மன், 20 சதவீதம் பூர்வீகக்குடி என்றெல்லாம் நாம் சொல்வதில்லை, சொல்லத் தேவையும் இல்லை. அதே நேரம் நாமெல்லாருமே 100 சதவீதம் சுத்தமான, கலப்பே இல்லாத அக்மார்க் தமிழர்கள் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. யார் யாரோ இங்கே வந்து நம்மை ஆண்டிருக்கிறார்கள். எவரெவர் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.

இன சுத்தம் பார்க்கும்போது மாற்று மொழி பேசுகிறவர்; கிறித்தவர், இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை மதத்தவர்; வேறு இடங்களிலிருந்து குடி பெயர்ந்து வந்தவர்கள் என எல்லோரும் தள்ளப்பட்டால் வேறு யார்தான் எஞ்சி இருப்பார்கள்? இந்த இன சுத்த சித்தாந்தம் எவ்வளவு ஆபத்தானது, என்னென்ன தீங்குகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பல நாட்டு வரலாறுகளில் நாம் பார்க்கிறோம். அப்படியானால் தமிழகத்தை வடுகர்களுக்கும், மார்வாடிகளுக்கும் திறந்து விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க வேண்டுமா? இல்லை. இன சுத்த சித்தாந்தத்திற்குள் சிக்கி கொள்ளாமல் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

நமது அடையாளத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பது மிக முக்கியம். மலையாளிகள், சிங்களர் மீதான வெறுப்பின் மீது, கோபத்தின் மீது கட்டமைப்பதா? அல்லது நமது பண்டைய புராணங்களின் மீது, வரலாற்றுப் பெருமைகளின் மீது, கலாச்சார குணநலன்களின் மீது ஏற்படுத்திக் கொள்வதா? அல்லது இன்றைய யதார்த்தம், நாளையத் தேவைகளைக் கருத்திற்கொண்டு வடிவமைத்துக் கொள்வதா? இன அடையாளம் ஒரு வளையாத விறைப்பான பாசிசக் கொள்கையாக இருக்க வேண்டுமா அல்லது மென்மையான, மிருதுவான குழுக் குறியீடாகத் திகழ வேண்டுமா?

தமிழன், தமிழச்சி என்பவர் யார்? தமிழகத்தில் ஒரு சில தலைமுறைகளாக நிரந்தரமாக வாழும் குடும்பத்தில் பிறந்த, பெற்றோரில் ஒருவரையேனும் தமிழராய்க் கொண்ட, தமிழ் மொழி மேல் சராசரிக்கும் மேலான பாண்டித்தியம் பெற்ற, தன்னை தமிழ் மண்ணின் மகனாக/மகளாக, தமிழ் கூறும் நல்லுலகின் அங்கமாக உணர்வுபூர்வமாகப் பார்க்கிற, தனது தமிழ் இனத்தின் சிறப்புக்கு, உயர்வுக்கு, விடுதலைக்கு தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் உழைக்க முன்வருகிறவரே தமிழன், தமிழச்சி எனக் கொள்ளலாம் என்பது என் எண்ணம்.

எது தமிழ் தேசியம்? இன சுத்தம் இயலாத ஒன்றாகிப் போகும்போது, தமிழகத்தைச் சுற்றி இஸ்ரேல் பாணியில் சுவர் கட்ட முடியாத, கட்டக்கூடாத நிலையில், அரசியல் பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு அரிய வகைத் தமிழனை தேடுவதற்குப் பதிலாக, நமது பாரம்பரிய வரையறைக்குத்தான் போகவேண்டியிருக்கிறது: “யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” தமிழ் மண்ணை, தமிழ் வளங்களை, தமிழ் அடையாளத்தை உலகமயமாக்குவதற்கு பதிலாக, உலகை, உலக வளங்களை தமிழ்மயமாக்குவதற்கு முயற்சிப்போம். அதுதான் தமிழ் தேசியம்.

தமிழ் வித்தில் முளைத்தெழுந்து, தமிழ் மண்ணில் வேரூன்றி, தமிழ் மொழியின் சாறெடுத்து, தமிழ் அடையாளத்தை சுவாசித்து வளர்ந்து, தரணியெல்லாம் பரந்து விரிந்து, தன் தண்டமிழ் நிழலில் ஒதுங்குவோர்க்கு காய்கனியும், மாமருந்தும், குளிர்ச்சியும், வளர்ச்சியும் தருகின்ற கற்பகத்தருவே தமிழ் தேசியம்.

ஒரு குறிப்பிட்ட தமிழ் தேசிய அமைப்போ, குழுவோ, தலைவரோ தேர்ந்து வழங்குவதல்ல தமிழ் தேசிய அடையாளம். தனிப்பட்ட மனிதரை சுயமாக தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதுதான் தமிழ் தேசியம். தமிழ் தேசியம் மேலிருந்துக் கீழே திணிக்கப்படுவதல்ல. கீழிருந்து மேலாகப் பரந்து விரிவது.
மதவெறி, இனவெறி, சாதீயம், ஆணாதிக்கம், வயதானோரதிகாரம், வகுப்புவாதம், வல்லாதிக்கம், வன்கொடுமை, வன்முறை ஏதுமற்ற மாதானகரமான சமத்துவ சமுதாயத்தை நிர்மாணிக்க முயல்கிற சித்தாந்தம்.

தமிழ் தேசியம் என்பது எது, யார் உண்மையான தமிழ் தேசியவாதி என்பதல்ல பிரச்சினை. தமிழ் தேசியம் பேசுகிறவர்களாகிய நாம் எதை அடைய விரும்புகிறோம்? அதுதான் மிக முக்கியம். பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் திட்டுவதல்ல தமிழ் தேசியம்.

முக்கிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கதை முடிந்துகொண்டிருக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலை செய்யப்படும்போது, ராஜினாமா கூத்து, உண்ணாவிரத நாடகம் நடத்தியவர் இன்று டெசோ மாநாடு நடத்தி அரசியல் வாழ்வை புதுப்பித்துக்கொள்ள புலம்பித் திரிகிறார். இதுகாறும் பாராமுகமாய் சும்மா இருந்த அம்மா தமிழ் தேசிய அலை தமிழகத்தில் வீசுவதைப் புரிந்துகொண்டு, பரபரப்பான மூவர் தூக்கு, கட்சத் தீவு, மீனவர் கொலை, சிங்களருக்கு இராணுவப் பயிற்சி போன்ற பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறார். தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். செத்துக் கொண்டிருக்கும் திராவிட அரசியலை தூக்கிக் கொண்டுபோய் புதைத்து விட்டு, இனி தமிழகத்தை தமிழன்தான் ஆள்வான், தமிழச்சிதான் ஆள்வாள் என உறுதி பூணுவதுதான் தமிழ் தேசியம்.

இவன் தெலுங்கன், இவன் கன்னடன், இவன் மலையாளி என்று நாமகரணம் சூட்டுவது தமிழ் தேசியமல்ல. “தமிழ் வாழ்க” என நகராட்சிக் கழிப்பறைகளில் எழுதிவைப்பதும் தமிழ் தேசியமல்ல. எந்தக் கட்சி ஆட்சிக்கு வருவது, யாரை முதல்வராக்குவது என நமக்குள் அடித்துக் கொள்வதுமல்ல தமிழ் தேசியம். தமிழீழப் பிரச்சினை பற்றி பகட்டாகப் பேசுவதும், தலைவர் பிரபாகரன் புகழ் பாடுவதும் தமிழ் தேசியமல்ல. அப்படியானால் எது தான் தமிழ் தேசியம்? தனியொரு தமிழனக்கு உணவில்லை எனில், ஒட்டுமொத்த தமிழினமும் கேவலப்படுவதுதான், கேள்வி கேட்பதுதான், அதை மாற்றி அமைப்பதுதான் தமிழ் தேசியம்.

பிரிட்டிஷ்காரன் தேயிலைத் தோட்டத்தில் அடிமை வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கூலிக்காரனாக இல்லை இன்றையத் தமிழன் என நமது கூலி அடையாளத்தை தூக்கி எறிவதுதான் தமிழ் தேசியம்.

தமிழ் மக்கள் திரைகடல் ஓடி இனி திரவியம் தேடப் போகவேண்டாம், நம் தமிழ் மண்ணிலேயே தன் மனைவி மக்களுடன் நல்வாழ்வு நடத்தி, பொருளீட்டி, புகழோடு வாழமுடியும் எனச்செய்வதுதான் தமிழ் தேசியம்.

“மாதராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற பாரதியின் கூற்றை நிலை நிறுத்துவது போல, பெண் விடுதலை, விதவை மறுமணம், அம்மா என்றழைத்து தெய்வமாக்காமல் அருமை நண்பராகவும் பெண்ணைப் பார்க்கலாம் எனும் கலாச்சார மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் தமிழ் தேசியம்.

திரைப்படம், தொலைக்காட்சி, சினிமா நடிகர், நடிகைகளிடமிருந்து தமிழ் கலாச்சாரத்தை மீட்டெடுத்து இயல், இசை, நாடகம் எனும் பாரம்பரிய தளங்களுக்குக் கொண்டு போவதுதான் தமிழ் தேசியம். உணர்ச்சி வயப்படுவதும், ஓடிப்போய் உயிரை விடுவதுமான ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ நடவடிக்கைகளைக் கைவிட்டு, “எண்ணித் துணிக கருமம்” என நம் மக்களை மாற்றி செயல்படவைப்பதுதான் தமிழ் தேசியம். அன்பு, வீரம், கொல்லாமை, நல்லாறு எனும் பல்வேறு மாதிரி தமிழ் கோட்பாடுகளை உலகுக்கு எடுத்துச் சொல்லி அவற்றை வளர்த்தெடுப்பதுதான் தமிழ் தேசியம்.

“பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போச்சே” என்று உரக்கப் பாடி சாதி, மத குழுக்களால் யாரும் யாரையும் அடக்கமுடியாதபடி, அதட்டமுடியாதபடி புதிய சமுதாயம் ஒன்றைக் கட்டுவதுதான் தமிழ் தேசியம். தலைமுறை தலைமுறையாய் அடக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள், தலித் மக்கள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள், மீனவர்கள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினரும் தமிழராய் தலைநிமிர்ந்து வாழ வழி செய்வதுதான் தமிழ் தேசியம்.

ஈழத்தில் வதைபடும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும், உலகெங்குமுள்ள தமிழருக்கும் தோள்கொடுத்து துணை நிற்பதுதான் தமிழ் தேசியம். வரவறிந்து, திட்டமிட்டு செலவு செய்து, மக்களுக்கு இலவசம் கொடுக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்து, தொழில் வளம் பெருக்கி, விவசாயம் காத்து, வாழ்வாதாரங்கள் போற்றி, எதிர்கால சந்ததிகளுக்கு எம்மண்ணை, நீரை, காற்றை, கடலை, மலைகளை, காடுகளை, மரம் மட்டைகளை காப்பாற்றி விட்டுச் செல்வதுதான் தமிழ் தேசியம்.

விஞ்ஞானம், வளர்ச்சி என்ற பெயரில் கூடங்குளம், கல்பாக்கம், நியுட்ரினோ, சிர்கோனியம் போன்ற ஆபத்தான திட்டங்களைத் திணிப்பதை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியம். நதிநீர் பங்கீடு, தன்னிறைவுத் திட்டங்களில், இந்திய தேசியத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் தமிழருக்கு நீதி கிடைக்க, தமிழரின் உரிமை காக்கப் போராடுவதுதான் தமிழ் தேசியம்.

“எட்டுத் திக்கும் செல்வோம், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்” என்ற நிலையில் பெருந்தன்மையாக வாழ்ந்தாலும், எங்கள் மீது அந்நிய மொழியை, அரசியலை, வல்லாதிக்கத்தை, அடிமைத்தனத்தை சுமத்த வந்தால் எதிர்த்து நின்று, போராடி, விரட்டியடிப்போம் என்று வீறுகொள்வதுதான் தமிழ் தேசியம்.

பச்சைத் தமிழ் தேசியம் இன்றையப் பன்னாட்டுச் சூழலில், பாரத அரசியலில் நமக்குத் தேவைப்படுவது பச்சைத் தமிழ் தேசியம். இந்தச் சொற்றொடர் இரண்டு அர்த்தங்களைத் தருகிறது. ஒன்று, அப்பழுக்கற்ற, கலப்படமற்ற, சமரசமற்ற, உண்மையான தமிழ் தேசியம் என்பதைக் குறிக்கிறது.

இன்னொன்று ‘தமிழ்’ தேசியம், ‘தமிழர்’ தேசியம் போன்ற கொள்கைகளையும் இணைத்து கூடவே பசுமை உணர்வுகளை, விழுமங்களை, கொள்கைகளை, திட்டங்களை உள்ளடக்கியது என்றும் அர்த்தமாகிறது. இன்றைய தமிழகத்தினுடையத் தேவை தமிழ் சூழல் தேசியம்தான். சூழல் என்பது வெறும் இயற்கை சுற்றுச்சூழலை மட்டும் குறிப்பதல்ல. சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்கங்களும், தாக்கங்களும் கூட பரந்துபட்ட சூழலுக்குள் உட்படுவதால், நமது புத்தாக்கக் கொள்கையும் அகலமானதாய் ஆழமானதாய் இருத்தல் அவசியம். பசுமைக் கொள்கை என்பது வெறும் அரசியல் கொள்கையோ அல்லது பொருளாதாரத் திட்டம் மட்டுமோ அல்ல. அது ஓர் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை. இயற்கையைப் பேணுதல், சனநாயகம் காத்தல், சமூக நீதி-சமத்துவத்துக்காய் உழைத்தல், வன்முறை தவிர்த்தல், பகிர்ந்தாளுதல், உள்ளூர் பொருளாதாரம் பேணல், பெண் விடுதலை கோரல், சமூகப் பன்மை போற்றல், பொறுப்போடு வாழ்தல், வருங்காலம் கருதல், நீடித்து நிலைத்து நிற்றல் என்பவையே பசுமை விழுமங்கள்.

நாம் எடுத்தாளப்போகும் பச்சைத் தமிழ் தேசியம் என்னென்ன திண்மமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என ஒத்தக்கருத்து கொண்டோர் ஒன்றிணைந்து முடிவு செய்யலாம். ஒருசில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கேக் குறிப்பிட விரும்புகிறேன்: தமிழகம் தண்ணீர் தன்னிறைவு பெறுவது, நிலத் தரகர்களிடமிருந்து விளைநிலங்களைக் காத்துக்கொள்வது, மானாவாரிப் பயிர்களை திட்டமிட்டுப் பயிரிட்டு பரந்து கிடக்கும் தமிழ் மண்ணை அறிவுபூர்வமாக பயன்படுத்துவது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது, தமிழ் கடலை கடலுணவைக் காப்பது, நம் இயற்கை வளங்களைக் காக்கும் நீடித்த நிலைத்த வளர்ச்சி சித்தாந்தத்தைப் பேணுவது, தமிழினத்தை அச்சுறுத்தும் அணுஉலை மற்றும் மாசுபடுத்தும் பிற உலைகளைத் தடுப்பது, அணு ஆயுதங்களை விரட்டுவது, மென்முறையைப் போற்றி வளர்ப்பது, மது அரக்கனை அழிப்பது, தீண்டாமையை ஒழிப்பது இன்ன பிற.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு தேள் வந்து கொட்டுது காதினிலே – எங்கள் மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல் மண்ணும் சிரிக்குது பீச்சினிலே” என கவிஞர் கண்ணதாசன் வர்ணிக்கும் இன்றையத் தமிழகத்தை மாற்றியமைத்து, “செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என மகாகவி பாரதியார் கனவில் மிளிரும் தமிழகமாக மாற்றியமைப்பதுதான் பச்சைத் தமிழ் தேசியம்.

 

ஆதாரம்: முகநூல்

 

 

அருமையான பதிவு ... உண்மையான பேச்சு ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.