Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“என்னை ‘தற்கொலை’ செய்துவிடுங்கள் ப்ளீஸ் !”

Featured Replies

 

 

2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி. இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விழா மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. உயர்தர விருந்துக்குத் தேவையான அனைத்து உணவு வகைகளும் தயார் நிலையில் இருந்தன. ஷாம்பெய்ன் பாட்டில்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. விருந்தை ஏற்பாடு செய்தவர், பதற்றத்துடன் காத்திருந்தார். விருந்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால், விருந்தினர் ஒருவர்கூட வரவில்லை. அழைப்பிதழே கொடுக்காத விருந்துக்கு யார் வருவார்?

விருந்தை அவ்வளவு தடபுடலாக ஏற்பாடு செய்துவிட்டு, அழைப்பிதழ் கொடுக்காமல்விட்டது ஏன்? ஏனென்றால், அந்த விருந்து மனிதர்களுக்கானது அல்ல; எதிர்காலத்தில் வசிப்பவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பூமியில் வாழப்போகும் நம் எதிர்காலச் சந்ததியினர், ‘காலப் பயணம்’ (Time Travel)  மூலமாக இறந்த காலத்துக்கு வந்து, இந்த விருந்தில் கலந்துகொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

‘காலப் பயணிகளை வரவேற்கிறோம்!’ (Welcome Time Travellers)  என்ற பேனர்கூட வாசலில் வைக்கப்பட்டிருந்தது. இந்த விருந்தை ஏற்பாடு செய்தவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டினுக்குப் பிறகு உலகின் அதிமுக்கிய அறிவுஜீவியாக அறியப்படும் விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங். புரிந்துகொள்ள சற்றுச் சிரமமாகவும், நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாகவும் இருக்கிறதா? அதுதான் ஸ்டீபன் ஹாக்கிங்!

இந்தப் பேரண்டத்தின் புரியாத பல ரகசியங்களை, தன் பேரறிவால் மனிதகுலத்துக்குத் திறந்து காட்டிய மாமேதை அவர். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரபஞ்சத்தின் இயக்கத்தையும், காலத்தின் இதயத் துடிப்பையும் அளந்து சொல்லும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் குறித்து, நம்மில் பலருக்கும் மேலோட்டமாகத் தெரிந்திருக்கும். தன் உடலின் எந்தப் பாகத்தையும் அவரால் அசைக்க முடியாது. தன் 21-வது வயதில் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ‘Amyotrophic Lateral Sclerosis’ (ALS)   எனப்படும் ஒருவித பக்கவாத நோயின் தாக்குதலுக்கு உள்ளானார். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயல் இழக்கத் தொடங்க, ‘இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவர் இறந்துவிடுவார்’ என்றனர் மருத்துவர்கள். ஆனால், மருத்துவ அறிவியலுக்குச் சவால்விட்டு, பிரபஞ்ச அறிவியலின் புதிர்களை தன் 73-வது வயதிலும் அவிழ்த்துக்கொண்டிருக்கிறார் ஹாக்கிங்.

பல ஆண்டுகளாக இவரது உடலில் அசையும் பாகங்கள் இமைகளும் புருவங்களும் மட்டுமே. மற்றபடி பேசவும் எழுதவும் உண்ணவும் உடுக்கவும்… அவருக்கு இன்னொருவரின் உதவி தேவை. அப்படியெனில், எப்படி தன் ஆய்வு முடிவுகளை வெளியிடுகிறார்? அவர் சிந்திப்பதையும் கண்டுபிடிப்பதையும் நம்முடன் பகிர்ந்துகொள்ள, பிரத்யேகமான ஒரு கணினி உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்டீபன் ஹாக்கிங்கின் கண், புருவ அசைவுகளைக்கொண்டு அவர் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை ஒலி வடிவமாகவே வெளிக்கொண்டுவரும்.

இப்படி நம்ப முடியாத மனிதராக நம்மிடையே நடமாடும் ஹாக்கிங், ‘நவீன அறிவியலின் மாபெரும் கொடை’ என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆனால் அவரோ, ‘மற்றவர்களுக்கு நான் தொந்தரவாக இருக்கும் நாள் வந்தால், தற்கொலை செய்துகொள்வேன். அதற்கான உதவி எனக்குத் தேவை’ எனச் சொல்லி அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார்.  பி.பி.சி தொலைக்காட்சிக்கு ஹாக்கிங் அளித்த பேட்டி, விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அதன் முன்னோட்டத்தில்தான் ஹாக்கிங்கின் தற்கொலை எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது.

உலகமே கொண்டாடும் ஓர் அறிவியலாளர் ஏன் தற்கொலையைப் பற்றி சிந்திக்க வேண்டும்? காரணம், எளிமையானது. தன் உடல் சவால்களை வென்று அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடிந்த அவரால், சொந்த வாழ்வின் துன்பங்களை எதிர்கொள்ள முடியவில்லை.

பக்கவாத நோய் இருக்கிறது எனத் தெரிந்தும், கல்லூரிக் காலத்திலேயே ஹாக்கிங்கைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் ஜேன். மூன்று குழந்தைகளுடன் இவர்களின் மண வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், மனைவி ஜேன் இன்னோர் ஆணுடன் தொடர்பில் இருக்கிறார் எனத் தெரியவந்தபோது, அதை ஹாக்கிங்கால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தன் உடல் இயலாமை குறித்த கழிவிரக்கம் அவரை வதைத்தது. மேலும் மேலும் இறுக்கமான நபராக மாறினார்.

1985-ம் ஆண்டு, அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த சமயத்தில் மயக்கம் அடைந்து விழுந்தார். ‘அவரைக் காப்பாற்ற செய்யவிருக்கும் அறுவைசிகிச்சைக்காக தொண்டையில் நிரந்தரமாக ஒரு துளையிட வேண்டும். அதன் பிறகு ஹாக்கிங்கால் பேசவே முடியாது’ என்றனர் மருத்துவர்கள். அதுவரை சிரமப்பட்டாவது பேசிவந்த ஹாக்கிங்குக்கு, இது இரண்டாவது பெரிய இடி. விரக்தியின் உச்சிக்கே சென்றார். அப்போதுதான் தன் வாழ்வின் முதலாவது தற்கொலை முயற்சியை மேற்கொண்டார்.

கைகளையும் கால்களையும் உடலையும் அசைக்க முடியாத ஒருவரால், எப்படித் தற்கொலை செய்துகொள்ள முடியும்? அவரால் செய்ய முடிந்ததெல்லாம் தன் மூச்சை அடக்கி உயிரைவிட முயற்சிப்பது மட்டுமே. மூச்சை இழுத்துப்பிடித்து அடக்கிக்கொண்டு அப்படியே இருந்தார். ஆனால், அவரது இதயம் அதற்கு இடம்கொடுக்கவில்லை. அவரையும் மீறி உடைத்துக்கொண்டு வெளிவந்தது மூச்சுக்காற்று. தன்னால் சுயமாகத் தற்கொலைகூடச் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், தனிமைத் தீவிலேயே தன்னை இருத்திக்கொண்டார்.

1990-ம் ஆண்டு, மனைவி ஜேன் அவரைவிட்டுப் பிரிய, அப்போது ஹாக்கிங்குக்கு செவிலியராகப் பணிபுரிய வந்திருந்த எலைன் என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் ஹாக்கிங். நீண்ட காலத்துக்குப் பிறகு மன இறுக்கம் தளர்ந்து சற்றே இயல்புநிலைக்குத் திரும்பினார். எலைனுடன்             11 ஆண்டுகள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார் ஹாக்கிங். ஆனால், அந்தச் சந்தோஷ பந்தமும் 2006-ம் ஆண்டு முறிந்தது. அதன் பின்னர் இன்று வரை தனிமையிலேயே தன் வாழ்க்கையைத் தொடரும் ஹாக்கிங், இப்போது மறுபடியும் தற்கொலை பற்றி பேசியிருப்பதுதான் அனைவரையும் அதிர்ச்சியடையவைத்திருக்கிறது!

‘என் இளமைப் பருவத்தில் நீச்சலடித்து மகிழ்ந்ததைப்போல, மறுபடியும் நீந்துவதற்கு மனம் ஏங்குகிறது. என் குழந்தைகள், சிறுவர்களாக இருந்தபோது, அவர்களுடன் இணைந்து விளையாட விரும்பியிருக்கிறேன். ஆனால், என்னை விரும்புவோரிடம்கூட, என் எண்ணங்களை வெளிப்படுத்த இயலாத உடல்நிலையுடன் இருப்பதற்காக வருந்துகிறேன். என்னுடன் பேசுவதற்கு பலரும் அச்சப்படுகின்றனர். அவர்களின் உரையாடல் என்னை மேலும் வருத்திவிடக் கூடாது என ஒதுங்கிச் செல்கின்றனர். அந்த ஒதுக்குதல், என்னை மோசமாகத் துன்புறுத்துகிறது. என்னால் இதற்கு மேல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலை வரும்போது, அடுத்தவருக்குப் பாரமாக இருக்க நேர்ந்தால், அவர்களின் உதவியுடனே தற்கொலை செய்துகொள்ள விரும்புவேன். ஒருவரை, அவரது விருப்பத்துக்கு மாறாக உயிர்வாழ நிர்பந்திப்பது அபத்தம்!’ என்றெல்லாம் புலம்பித் தவிக்கிறார் ஹாக்கிங்.

பால்வீதியில் உள்ள ஒரு நட்சத்திரத்தை ஆராய்வதைப்போல, பெருவெடிப்பின் ரகசியத்தை எழுதுவதைப்போல, பேரண்டத்தின் புதிர்களை அவிழ்ப்பதைப்போல… தன் உடலையும் உயிரையும் புறப்பொருளாக நிறுத்தி ஆய்வுசெய்கிறார் ஹாக்கிங். வாழ்நாள் எல்லாம் மனிதகுலத்துக்கு அதிசயங்களை மட்டுமே பரிசளித்துக்கொண்டிருக்கும் இந்த விஞ்ஞானி, தன் மரணம்குறித்த எண்ணத்தையும் உலகின் அறிவார்ந்த தளத்தின் முன்பு ஆய்வுக்காகக் கிடத்தியிருக்கிறார்!

கோள் முதல் கருந்துளை வரை…

இயற்பியலிலும் வானியலிலும் நம்பவே முடியாத முடிவுகளை முன்னிறுத்தி, பல புத்தகங்களை எழுதியிருக்கிறார் ஹாக்கிங். அவற்றில் ‘பெரும் வடிவமைப்பு’ (The Grand Design), ‘காலத்தின் வரலாற்றுச் சுருக்கம்’  (A Brief History of Time) ஆகிய இரண்டும் முக்கியமானவை. 1988-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘காலத்தின் வரலாற்றுச் சுருக்கம்’ புத்தகம், இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமாக விற்றிருக்கிறது. இங்கிலாந்தில் வெளியாகும் ‘சண்டே டைம்ஸ்’ இதழின் சிறந்த புத்தக வரிசையில், தொடர்ச்சியாக 237 வாரங்கள் முதல் இடத்தில் இருந்து சாதனை படைத்த புத்தகம் இது.

எல்லையில்லா பிரபஞ்சவெளியில் இயங்கிக்கொண்டிருக்கும் கோள்கள், நட்சத்திரங்கள், கேலக்ஸிகள், கருந்துளைகள் அனைத்துமே நான்கு அடிப்படை விசைகளால் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பிரபஞ்சம் உருவாகக் காரணமாக இருந்த ஆதிப் பெருவெடிப்பின்போது (Big bang) இந்த நான்கு விசைகளும் ஒன்றாகி, ஒரு புள்ளியில் அமைதியாக ஒடுங்கியிருந்தன என ஐன்ஸ்டீன் நம்பினார். அதன் அடிப்படையில், இந்த நான்கு விசைகளையும் ஒரே கணிதச் சமன்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்றும் அவர் நம்பியிருந்தார். ஆனால், அந்தச் சமன்பாட்டைக் கண்டுபிடிக்கும் முன்னரே இறந்து விட்டார். ‘ஜிலீமீஷீக்ஷீஹ் ஷீயீ மீஸ்மீக்ஷீஹ்tலீவீஸீரீ’ எனப்படும் அந்தச் சமன்பாட்டைக் கண்டுபிடிக்க பல விஞ்ஞானிகள் முயன்றார்கள். அதில் முக்கியமானவர் ஸ்டீபன் ஹாக்கிங். அதனாலேயே சமீபத்தில் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படத்துக்கு ‘Theory of everything’  எனப் பெயரிட்டார்கள்.

கருந்துளை என்றாலே, தன் அருகில் செல்லும் அனைத்தையும் தன்னை நோக்கி ஈர்த்துக்கொள்ளும் என்றுதான் அதுவரை பலரும் நம்பியிருந்தார்கள். ஒளிகூட அதன் ஈர்ப்பில் இருந்து தப்ப முடியாது. ஆகவேதான் அது கருமையான நிறத்துடன் காணப்படுகிறது என்றும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் ஹாக்கிங், ‘கருந்துளை தன்னருகே செல்லும் அனைத்தையும் உள்ளே இழுக்கும்போது, அவை அணுத்துகள்களாகச் சிதைகின்றன. அதனால் ஏற்படும் பெருவெப்பத்தால் கதிர்வீச்சு உருவாகி, கருந்துளையில் இருந்து வெளிப்படுகிறது’ என வேறுபட்ட கருத்தைச் சொன்னார். ஆரம்பத்தில் பல விஞ்ஞானிகளால் மறுக்கப்பட்டு, பிறகு படிப்படியாக அனைவரும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டனர்.

p54a p54b p54c

- See more at: http://www.canadamirror.com/canada/44909.html#sthash.oZCW0DKk.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.