Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதிரை சுகமும் குருதிக்கறையும் - நவாலித் தேவாலையப் படுகொலை நினைவாக - தேவஅபிரா:

Featured Replies

கதிரை சுகமும் குருதிக்கறையும் - நவாலித் தேவாலையப் படுகொலை நினைவாக -


இலங்கையிற் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தற் கால மயக்கங்களையும் கிறக்கங்களையும் மக்களுக்கு ஊட்டுவதற்கு அரசியற்கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

ஒரு நாட்டின் அதிகாரமையம் பாரளுமன்றம். அதனுள் நுளைவதற்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன.( மக்களின் வாக்குச்சீட்டுக்களை அபகரித்துத் தமக்கே அவற்றைப் போட்டுக்கொள்கிற அரசியல்வாதிகள் இதில் சேர்த்தி இல்லை) மக்களின் வாக்குளைப்பெறுவதற்காக அரசியல்வாதிகள் செய்யும் வேலைகளையும் பேசும் பேச்சுக்களையும் பார்க்கும் போதும் கேட்கும் போதும் தோன்றுகிற உணர்வை என்னவென்று விபரிக்க முடிவதில்லை. கோபம் எரிச்சல் கவலை அருவருப்பு என யாவும் கலந்த ஒரு உணர்வுக்கு அனேகமானவர்கள் ஆளாவார்கள்.


தற்போதைய ஜனநாயகச் சூழலில் தமிழர்கள் தமது பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்துவதன் ஊடாகவே நிரந்தர அரசியற் தீர்வை பெறமுடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் தமிழ்த்தேசியம் சுய நிர்ணய உரிமை போன்ற பெரிய வார்த்தைகளையும் பயன்படுத்தி இருக்கிறார். நல்ல காலம் அவர் இம்முறை பிரபாகாரன் அவர்களைத் துணைக்கழைக்கவில்லை. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் அருகில் இருந்திருந்தால் ஞாபகப்படுத்தியிருப்பார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121722/categoryId/2/language/ta-IN/-----.aspx

இலங்கை வரலாற்றிலேயே தமிழர்கள் பேரம்பேசும் வலுவுடன் இருந்த காலம் விடுதலைப் போராட்டம் உச்சமடைந்து ஈழத்தின் பெருமளவு நிலப்பகுதிகள் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம்தான். விடுதலைப்புலிகள் பல இராணுவ முகாம்களைத் தகர்த்து இராணுவச் சமவலுத்தோற்றத்தை ஏற்படுத்தியிருந்த காலம்தான் பேரம் பேசக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. அக்காலத்தைப் போராட்டத்தின் தலைமை தூரநோக்குடன் கையாளவில்லை.


சுதந்திரத்தின் பின்னான இலங்கையிற் தமிழ் அரசியல்வாதிகளின் பேரம் பேசல் எவ்வாறு இருந்து வந்துள்ளது என்பதை யாவரும் அறிவர். இப்பேரம் பேசல்களில் தனிப்பட்ட நலன்களும் குறித்த அரசியல்வாதி சார்ந்த வர்க்க நலன்களும் மட்டுமே முக்கியம் அடைந்திருந்திருந்தமையை யாவரும் அறிவர்.


உண்மையான சனநாயகம் வளர்ச்சி அடையாத நாடுகளிற் பாராளுமன்ற அரசியலூடாக ஒடுக்கப்படும் சமூகங்கள் தமக்கான முழுமையான அதிகாரங்களைப் பெறுவது சாத்தியமில்லை. அதிலும் பல்லினங்கள் வாழும் நாடுகளிற் சிறுபான்மை இனங்கள் தமது உரிமைகளையும் அதிகாரங்களையும் பெற்றுக்கொள்வதென்பது கல்லில் நார் உரிப்பது போன்றது.


இவ்வுண்மையை முதலில் மக்களுக்குச் சொல்லும் நேர்மையும் துணிவும் ஒரு அரசியல்வாதிக்குத்தேவை. மறுபுறத்தில் நாட்டை இயக்கும் அதிகார அலகுகளைக் கண்காணிப்பதற்கும் சாத்தியமிருப்பின் இயக்குவதற்கும் பாராளுமன்றத்தில் பங்கு கொள்ள வேண்டிய தேவை அனைத்துச் சமூகங்களுக்கும் இருக்கிறது. ஆனால் உன்னதமான நோக்கங்களை நிறைவேற்றவே நாங்கள் பாராளுமன்றம் போகிறோம்; அதிகாரத்தைப் பெறுவதற்காகப் பாடுபடப்போகிறோம் எனத் தேர்தற்காலங்களில் மட்டுமே நீங்கள் முழங்குவது மக்களை அவர்கள் முட்டாள்கள் என நீங்கள் நினைப்பதாலாகும்.


நீங்கள் எதற்கு ஏன் எவ்வளவுக்கு எதனை எந்த வீட்டில் அல்லது எந்த நாட்டில் எந்த சனநாயகச்சூழலில் வைத்துப்பேரம் பேசுவீர்கள்; பேசினீர்கள் என்று கேட்டால் பதில் கிடைக்காது. பதில் தருவதற்கான சனநாயகச் சூழல் இல்லையா ஐயா?


இதனை வாசித்துக் கோபித்துக் கொள்ளுவீர்கள். அதனாலென்ன?

தற்போதுள்ள உலக மற்றும் உள்நாட்டுச் சூழ்நிலையிற் இலங்கையின் பெரும்பான்மை இனக்கட்சிகளை நியாயமான நிரந்தரமானஅரசியற் தீர்வை நோக்கி நிர்ப்பந்திக்கக் கூடிய வலு தமிழர்களிடம் இல்லை. இலங்கைக்கு வெளியில் இருக்கும் எகாதிபத்திய சக்திகளிடம் மட்டுமே அவ்வலு உள்ளது. ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகளின் நோக்கமோ அதுவல்ல.


இந்தத் தேர்தலில் மட்டுமல்ல எந்தத் தேர்தலிலும் தமிழர்கள் உள்ளடங்கலான அனைத்துச்சிறுபான்மை இனங்களும் வெளிக்காட்ட வேண்டிய வலு என்று ஒன்றிருக்கிறது. இன மற்றும் சமூக பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு நாங்கள் பணிய மாட்டோம் என்கிற ஒருமித்த செய்தியை வழங்கும் சமூக மனவலுவேயது. இதனை ஏற்படுத்த ஒரு அரசியல்வாதி விரும்பினால் அவர் தனது பிரச்சார வாகனத்தையும் சொகுசு வாகனத்தையும் விட்டுக் கீழ் இறங்கி வரவேண்டியிருக்கும். அவர் தன்னை அரசியற் செயற்பாட்டாளனாக மாற்ற வேண்டியிருக்கும்.


அப்பொழுது தேர்தல்களை மக்கள் கவனித்துக் கொள்வார்கள். உண்மையான சனநாயகத்தின் தளத்தில் ஏற்படும் மாற்றங்களை வரவேற்கிற அதேவேளை விடுதலை பேரம் பேசிப்பெறுவதல்ல என்கிற தெளிவை மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு ஒரு அரசியற் செயற்பாட்டாளனுக்கு உண்டு. அதிகாரங்களைப் பெறுவது கூட விடுதலை அல்ல. அவ்வதிகாரங்கள் யார் கையில் இருந்து யாருக்காகத் தொழிற்படுகின்றன என்பதில் இருந்துதான் விடுதலை என்னும் பெரும் குறிக்கோள் முளை விடத் தொடங்கும். இதைத்தான் இளைய தலைமுறைக்குச் சொல்லவேண்டும்.

அண்மையிற் சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள் தேர்தற் கூட்டம் ஒன்றில் பேசும்பொழுது எனது கைகளிற் குருதிக் கறைகள் எதுவுமில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121758/categoryId/2/language/ta-IN/---.aspx


உண்மையிலும் நாடுகளின் தலைவர்களாக இருக்கின்றவர்களுள் மற்றும் இருந்தவர்களுள் தமது கைகளில் குருதிக்கறைகள் இல்லை எனச் சொல்லக் கூடியவர்கள் அதிகமில்லை எனச் சொல்லலாம்.


சந்திரிக்கா சொல்வது, டொனி பிளேயர் தனது கைகளிற் குருதிக்கறைகள் இல்லை எனச் சொல்வதற்குச் சமமானது; ஜோச் புஸ் தனது கைகளில் குருதிக்கறைகள் இல்லை எனச்சொல்வதற்குச் சமமானது. பல தலைவர்கள் தங்கள் சொந்தக்கைகளாலேயே கொலைகளைப் புரிந்திருப்பதையும் வரலாறு சொல்கிறது. சந்திரிக்கா சிலவேளை தனது சொந்தக்கையால் எவரையும் கொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரது ஆட்சிகாலத்தில் நிகழ்ந்த படுகொலைகளில் வெளிவந்து உலகத்தின் கண்களில் தெறித்த குருதித்துளிகள் அவரில் மட்டும்படவில்லை என அவரால் எப்படிக் கூற முடிகிறது. மக்களின் மறதியில் நம்பிக்கை வைப்பவர்கள் அரசியல்வாதிகளை என்பது பொய்யல்ல.


இன்றைக்கு சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு (9-07-1995 ) இலங்கை இராணுவத்தின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையின் போது மக்கள் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த நவாலித்தேவாலையத்தின் மீது இலங்கை இராணுவத்தின் புக்காரா விமானம் குண்டுகளை வீசியது. சமர் ஒய்ந்திருந்த நேரத்தில் களமுனையில் இருந்து தூரத்தில் இருந்த நவாலித்தேவாலையத்தின்மீது இலங்கை இராணுவம் தேவையற்று 7 குண்டுகளை ஒரேயடியாக வீசியது. 150 க்கும் மேற்பட்டவர்களைப் பலி எடுத்த குண்டுவீச்சது. அங்கு தெறித்த குருதி உங்களின் கைகளிலோ கண்களிலோ படவில்லையா அம்மையே?

இலங்கை அதிபரின் கைகள்தானே இராணுவம்?

இராணுவம், காவல்துறை மற்று நீதித்துறை என்பன அதிகாரத்தின் கைகள். ஆட்சியில் இருப்பவர்களின் கைகள். அவை அத்துமீறும் போது உருவாகும் குறைகளும் கறைகளும் அவர்களின் மனங்களிலும் கரங்களிலும் படியாமல் வேறெங்கு படியும். கறைகள் உங்கள் கைகளில் கவலைகள் எங்கள் மனங்களில்.

நிற்கச் சம்பந்தரே சந்திரிக்கா அம்மையார் தனது கரங்களில் குருதி இல்லை எனத்துணிந்து கூறியது போல் நீங்களும் கதிரை சுகத்திற்காக நாங்கள் பாராளுமன்றத்திற்கு செல்லவில்லை எனக் கூறிவிடுங்கள். உங்கள் பேரம் பேசும் சக்திக்கு அது வலுசேர்க்கும்.

குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தேவஅபிரா:-
09-07-2015


நவாலித் தேவாலையப்படுகொலை நினைவுநாள்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121781/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.